இலக்கியத்தில் நகைச்சுவை

Ilakkiyathil Nagaichuvai - Album by Thirumuruga Kirubananda Variyar Swamigal - Apple Music

ஒருவர் மத்தளம் வாசித்ததை ஒரு புலவர் பாடிக் கிண்டலடிக்கிறார். திடீரென்று தெருவில் பெண்கள் பட்டாளமே காலிக் கூடைகள் தூக்கிக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்தாராம். என்ன என்று கேட்டதில் யாரோ சாணி தட்டுகிற ஓசை கேட்கிறது; வரட்டி வாங்கி வரலாம் என்று பெண்கள் எல்லாம் கூடையுடன் படையெடுத்து வந்தார்களாம்! அவர்களைத் தொடர்ந்து போய் பார்த்தால் கடைசியில் ஒருவர் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தாராம்!

என்ன கிண்டல் பாருங்கள்! பாடல் இதோ:

எங்கமுத்து சாமிமன்னா இங்கே ஒருவன்ம்ரு
தங்கமதை ஓயாமல் தட்டினான் – அங்கங்கே
கூடிநின்ற பெண்கள்எருக் கொள்வதற்குக் கூடைஎடுத்து
ஓடிவந்தார் நீபார்த்தா யோ!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இது நந்திக் கலம்பகத்தில் வருகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தை வீட்டில் தங்கி விடுகிறான். தலைவியின் நினைவு வந்து மனம் திருந்துகிறான். தலைவிக்குத் தூது விட ஒரு பாணனை அனுப்புகிறான். அவன் தலைவியின் வீட்டிற்கு முன் நின்று இரவெல்லாம் பாடி தூதுச் செய்தியை இசையால் தெரிவித்தான்.

காலையில் எழுந்து வந்து பார்த்த தலைவி சொன்னாளாம்:

“ஓ! பாணனே ! நீ யார் அனுப்பி வந்து இரவெல்லாம் என் வீட்டருகில் வந்து பாடினாய் என்று நானறிவேன். ஆனால் யார் பாடுவது என்று எம் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. சத்தம் கேட்டு எழுந்த என்னை, “படு! காட்டில் ஏதோ ஓர் பேய் கூக்குரல் இட்டு அழுகிறது என்றாள் அன்னை! என் தோழி இல்லையம்மா! ஏதோ நரி ஊளை இடுகிறது என்று என்னை சமாதானப் படுத்தினாள். இல்லை, இல்லை! இது ஏதோ ஒரு நாய் தான்! என்றாள் இன்னொரு தோழி. நான் தான் சரியாகக் கண்டுபிடித்தேன், அவையெல்லாம் அல்ல, அது நீ என்று! காலையில் பார்த்தால் நீ நிற்கிறாய் என்றாளாம் தலைவி!

எப்படிஇருக்கிறது அவள் கிண்டல்?

ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நகைச்சுவையில் காளமேகம் முதல் இடம் வகிக்கிறார். சிலேடை, கிண்டல் எல்லாம் அவருக்கு கைவந்த கலை.
ஒரு முறை அவர் ஒரு ஆயர் பெண்ணிடம் மோர் கேட்டார். அந்த மோரில், மோரை விட தண்ணீர் அதிகம் இருந்தது. அந்தக் காலத்திலேயே கலப்படம் அவ்வளவு இருந்திருக்கிறது !
அந்த மோரை பார்த்து பாடுகிறார்…
“வானத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பெற்றாய்,
மண்ணில் வந்த பின் நீர் என்று பேர் பெற்றாய்,
ஆய்ச்சியர் கையில் வந்த பின், மோர் என்று பெயர் பெற்றாய்
இப்படி மூன்று பெயர் உனக்கு”
என்று தண்ணியான அந்த மோரை பற்றிப் பாடுகிறார்.
கார் என்று பேர் பெற்றாய் ககனத்தே உறும்போது
நீர் என்று பேர் பெற்றாய்! நீணிலத்தில் வந்ததன் பின்
வார் என்றும் மென் கொங்கை ஆய்ச்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் பெற்றாய்! முப்பேரும் பெற்றாயே!

ஒளவையார் பாடலில் பழிகரப்பு அங்கதம்: கம்பருக்கும் ஔவைக்கும் இடையே போட்டி மனப்பான்மையும், தங்கள் புலமையின் மீது பெருமிதமும் இருந்தது.  ஒளவையாரை இழிவுபடுத்த எண்ணிய கம்பர் சான்றோர் பலர் குழுமியிருந்த அவையில் தன் விளையாட்டைத் துவக்கினார். ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும் ஆரைக்கீரை குறித்துப் பாடுவது போல பாடலைத்  தொடங்கி, ஒளவையாரை நோக்கி இருபொருள் பட, சிலேடையாக, ‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ’ என்ற தொடரை முன்வைத்து எஞ்சிய பாடலை பாடி முடிக்குமாறு ஒளவையாரைக் கேட்டுக் கொண்டார். கம்பரின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு பதிலுக்குத் தானும் அதே பாணியில் பாடலில் பதில் அளித்தார் ஒளவையார்.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா? (பாடல் – 18)

“அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே! முழுவதும் மேற்கூரை இல்லாது போன வீடாகிய குட்டிச்சுவரே! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயாடா!” என்பது பாடலின் பொருள். மரியாதைக் குறைவான அடி என்பதைக் கவனித்த ஒளவையார் அடா போட்டு ‘யாரையடா சொன்னாய்?’ என்பது போல பதில் தாக்குதல் செய்தார்.  அத்துடன் அவலட்சணமே, எருமையே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே என்றெல்லாம் கூட குறிப்பாக அறியக் கூடிய வசைகள்  நிறைந்துள்ளது  இப்பாடலில்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.