கெத்து – கிரிஜா ராகவன்

புது வேலைக்காரி'பொழுது இன்னும் முழுதாக விடியவில்லை. காலை 5:30 மணி. சுற்றி எல்லா வீடுகளின் வாசல்களும் ஜன்னல்களும் மூடிக் கிடந்தன. தெருவில் விர், விர் என்று போகும் கார் ஆட்டோ சப்தம் மட்டும்தான்! மனிதர்கள் தான் தூங்கிக் கொண்டிருந்தார்களே தவிர, மரங்களில் பறவைகள் கீச் கீச் என்று கொண்டாடிக் குதூகலித்துக் கொண்டிருந்தன.

இந்த அணில்களுக்கு யார் ஓட்டப்பந்தயம் வைத்தார்களோ ? ஒன்றன்பின் ஒன்றாக வேப்ப மரக் கிளைகளில் மாற்றி மாற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. கவிதாவின் “வரட்… வரட்” என்ற பெருக்கும் சப்தம் தான் பெரிதாக ஒலித்தது.

அந்த பங்களாவைச் சுற்றி நிறைய மரங்கள். இலைகளும் பூக்களும் பிஞ்சுகளும் தினப்படி இறைந்து கொண்டே தான் இருக்கும். காலையில் தினமும் வந்து அதையெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்துவது தான் கவிதாவின் வேலை. ஒன்றாம் தேதி சம்பளம் வாங்க 10 மணி வாக்கில் வரும்போது அந்த பங்களா வீட்டம்மாவைப் பார்ப்பதோடு சரி. மற்றபடி இவ்வளவு சீக்கிரம் அந்த பங்களாவில் யாரும் எழுந்து வெளியே வர மாட்டார்கள்.

அடுத்தது ஆறு மணிக்கு பால் போட போக வேண்டும். கவிதாவுக்கு தூக்கம் கலையாதது போலவே கண் இமைகள் ஒட்டின. சூடா ஒரு கப் காபி குடித்தால் தேவலை போல இருந்தது

வழக்கமாய் ஐந்து மணிக்கு எழுந்து பிள்ளைகளுக்கு ஒரு ஏடு இட்லி வைத்துவிட்டு தானும் ஒரு காபி குடித்துவிட்டுத் தான் கிளம்புவாள்.

பிள்ளைகள் டீ குடிக்கும். வேலை செய்யும் வீடுகளில் குடித்துக் குடித்து கவிதாவுக்கு காபி பழக்கம் வந்து விட்டது.

இன்று கொஞ்சம் அதிக நேரம் தூங்கி விட்டாள்.

அவசர அவசரமாக இட்லி மட்டும் தான் வைக்க முடிந்தது. முகத்தை அலம்பி பொட்டை அப்படியே ஒட்டிக்கொண்டு படி இறங்கினாள். கண்ணாடி கூட பார்க்கவில்லை.

வேலை முடிந்தது. துடைப்பத்தை மாடிப் படிக்கட்டு அடியில் வைத்துவிட்டு சைக்கிள் ஸ்டாண்டைத் தள்ளிக் கொண்டு கிளம்பினாள். நேராக பால் பூத்துக்குப் போய், பால் டப்பில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான். 50 வீடுகளுக்கு மேல் கவர் பால் போடும் வேலை. அது ஒரு வருமானம். புருஷன் ஆக்சிடென்டில் இறந்துவிட, இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்துக்கொண்டு கடன் இல்லாமல் வாழ இந்த ஓட்டமும் சம்பாத்தியமும் தேவையாக இருக்கிறது.

பால் கவரை எடுக்கும் போது பூத்தில் வேலை செய்யும் செல்வா கேட்டான், “உடம்பு சுகம் இல்லையா என்ன? சொங்கி போயிருக்கே …..”

தலையை ஆட்டிக் கொண்டே சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கிளம்பினாள். “ஒரு காபி குடிக்கலீன்னா மூஞ்சில அத்தனை தெரியுதான்ன…” மனதில் நினைத்துக் கொண்டாள்.

வழியில் முருகன் கடையில் நிறுத்தி ஒரு காபி குடிக்கலாம் தான். அவ்வளவு சூப்பரா டிகிரி காபி போடுவான். ஆனா 15 ரூபாய் ஆச்சே! கவிதாவுக்கு அந்த செலவு பண்ண மனசு இல்லை.

இதோ 7 மணிக்கு ஆராதனா பிளாட் வேலைக்கு போயிட்டா, மொத வீடு அனிதாம்ம வூடு. உள்ளே நுழையும் போதே காபி வாசனை தூக்கும். “கவிதா காபி குடிச்சிட்டு வேலை ஆரம்பி” ன்னுதான் சொல்லும் அந்தம்மா. இள வயசு. கல்யாணம் ஆகியே ரெண்டு வருஷம் தான் ஆச்சு. புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் எட்டு மணிக்கு கிளம்பிடுவாங்க. கம்ப்யூட்டர் கம்பெனில வேலை. அனிதாம்மா ரொம்ப நல்ல பொண்ணு. நல்லா சமைக்கும். கைல ரெண்டு பேருக்கும் சாப்பாடு கட்டிக்கும். விதவிதமா காலிபிளவர் புலாவ், கொத்தமல்லி ரைஸ், வாங்கி பாத்துன்னு என்னெல்லாமோ செய்யும். அவங்க எடுத்துக்கிற மாதிரியே சூடா ஒரு டப்பால கவிதாவுக்கும் கைல கொடுத்துடும்.

பால் கவர் வேலை முடிந்து காபி குடிச்சா தான் ஆச்சுன்னு அடம் பிடிக்கிற மனசோட அனிதாம்மா வீட்டுக் காலிங் பெல்லை அடித்தாள் கவிதா.

அனிதாவின் புருஷன் முகேஷ் கதவைத் திறந்தான். சமையல் அறையில் வேலையாய் இருந்த அனிதாவிடம் “குட் மார்னிங்க்கா” என்று சொல்லியபடி நுழைந்தாள் கவிதா, காபி கப் ரெடியாக கண்ணில் படுகிறதா என்று ஆராய்ந்தபடி. “வா வா கவிதா. சாரிப்பா, இன்னிக்கு பால் திரிஞ்சு போச்சு. நாங்களே ஒண்ணும் சாப்பிடல.” அனிதா காயை அரிந்தபடியே சாதாரணமாக சொல்ல நொந்து போனாள் கவிதா.

“ அட கிரகமே இங்கயும் நம்ம காப்பில மண்ணா” என்று நினைத்துக் கொண்டு பரபரவென்று வேலையை ஆரம்பித்தாள்.

காபி காபி என்று குதிக்கும் மனதை ஒரு அதட்டல் போட்டாள்.

இருக்கவே இருக்கு அதே பிளாட்டில் அடுத்த வேலை. நாயுடம்ம வீடு. அவங்க காப்பி கொஞ்சம் தண்ணி தான். அந்த அம்மாவுக்கு ஐயருங்க மாதிரி காபி போடத் தெரியாது. இருந்தாலும் இன்னிக்கு இருக்கிற வெறுப்புல அந்த அம்மா காபியையாவது வாங்கி ஊத்திக்கணும்னு முடிவு பண்ணினாள் கவிதா. அனிதா சுடச்சுட கொடுத்த புளி சாதத்துடன் கவிதா படி இறங்கிய போது மணி 8:50.

சைக்கிளை ஒரு மிதி மிதித்தால் அவளுடைய வீட்டிற்குப் போய்விடலாம். சுடச் சுட சாத டப்பாவையும் குழந்தைகள் சாப்பிடக் கொடுக்கலாம். கீழே கவிதாவின் சைக்கிள் பெல் சத்தம் கேட்டு மூத்த மகள் பிரீத்தி மாடியில் இருந்து இறங்கி வந்து கவிதாவின் கையில் இருந்த புளி சாத டப்பாவை வாங்கிக் கொண்டாள். பத்தாவது படிக்கிறாள். அப்பனை மாதிரி உயரம். ஒல்லிப்பிச்சான். ஆனால் படிப்பில் சுட்டி. “தங்கச்சிக்கும் டப்பா கட்டிடு” என்று சொல்லிவிட்டு  பரபரப்புடன் மீண்டும் ஆராதனா பிளாட்டுக்கு சைக்கிளை மிதித்தாள் கவிதா.

பிரீத்தியும் சின்னவள் சுமதியும் ஒரே பள்ளி. அரசு பெண்கள் பள்ளியில் படிக்கிறார்கள். சின்னவள் எட்டாவது. பள்ளியில் மதிய உணவு கொடுத்தாலும் இவர்கள் இருவருக்கும் அது பிடிப்பதில்லை. “வாசனை வருது, பூச்சி இருந்திச்சி” என்று மாற்றி மாற்றி ஏதாவது சொல்வார்கள். கவிதாவுக்கு பிள்ளைகள் விருப்பம் தான் முக்கியம்.அதற்காகவே கையில் சாப்பாடு கொடுத்து விடுவாள். இரண்டு பேரையும் வளர்த்து படிக்க வைத்து அரசாங்க வேலையில் அமர்த்த வேண்டும் என்பதுதான் அவளுடைய பெரிய கனவு. ஓடி ஓடித் தேய்வதும் அவர்களுடைய எதிர்காலத்திற்காகத்தான்.

நாயுடு அம்மா வீட்டில் காலிங் பெல்லை அடிக்கும் போது கவிதாவின் மனதில் காபி மணியும் அடித்தது. ‘உள்ளார போனதும் சொல்லிடணும். முதல்ல ஒரு வாய் காபி குடுங்கம்மா’ ன்னு மனதில் நினைக்கும் போதே, நாயுடு அம்மாவின் கணவர் கதவைத் திறந்தார். பின்னால் அந்த அம்மாவைத் தேடிய கவிதாவின் பார்வையைப் புரிந்து கொண்ட அவர், “அம்மா வீட்ல இல்லம்மா. காலையிலேயே ஒரு சாவுக்கு போயிட்டாங்க. உன்ன பாத்திரம் மட்டும் வெளக்கிட்டு, துணி துவைச்சுட்டு போகச் சொன்னாங்க”, என்றபடி அவருடைய அறைக்குச் சென்று விட்டார்.

“போச்சா…. இங்கிட்டும் காபி போச்சா ? என்னடா இன்னைக்கு சோதனை” என்று அலுத்தபடி வேலையை ஆரம்பித்தாள் கவிதா. நாயுடம்மா வீட்டுல தினமும் கவிதாவுக்காக வைத்திருக்கும் தண்ணீர் ஊத்திய சோறும் புளிக் குழம்பும் வழக்கம் போல் காத்திருந்தது. அதையும் வீட்டுக்குத் தான் எடுத்துப் போவாள் கவிதா. சாயங்காலம் ஸ்கூல்லேர்ந்து வர பிள்ளைகளுக்கு சுடுற சோத்தோட காய் புளிக்குழம்பு எல்லாம் வச்சிட்டு தான் மட்டும் பழைய சோத்தைத் தான் சாப்பிடுவாள். ஒவ்வொரு சோறும் ஒவ்வொரு பைசாவும் பார்த்து பார்த்து செலவழித்தால் தான் அவள் வண்டி ஓடும்.

அடுத்து அதே பிளாட்டுல ஐயரம்மா வீடு. அப்புறம் பார்லர் மெடிக்கல் ஷாப் பெருக்க, ஜிம்முக்குப் போய் தூசி பெருக்கி கண்ணாடி எல்லாம் தொடச்சின்னு ரெண்டு மணி வரைக்கும் வேலை. சில சமயம் மூணு கூட ஆயிடும். எல்லா சம்பளத்தையும் திரட்டிப் போட்டாலே பதினைந்தாயிரம் ரூபாய் வந்தால் ஜாஸ்தி. அதுல வாடகை கரண்ட் பில் தண்ணிக் காசு எல்லாம் சுளையா ஏழாயிரம் ரூபாய். அப்புறம் குழுக் கடன், சீட்டுப் பணம், கேஸ், மளிகை சாமான், பசங்க கேக்குற சார்ட், பேனா, ப்ராஜெக்ட் செலவு அப்படி இப்படின்னு இழுத்துப் பிடித்து ஓட்டறது சர்க்கஸ் வேலை மாதிரிதான். இதுக்கு நடுவுல பிள்ளைங்களுக்கு காய்ச்சல் இருமல் வரும். சொந்தக்காரர் கல்யாணம் கருமாதி வரும். எல்லாமே சமாளிச்சுகிட்டு தான் இருக்கிறாள். இருக்க வேண்டும். வைராக்கியம், வெறிதான். வேறென்ன!!

ஐயரம்மா வூட்டுல காபி கிடையாது. தெனமும் அங்க போகவே 10 மணி ஆயிடும். சாப்பாடுன்னு தர வழக்கம் இல்ல. ஆனா பசங்க செலவுலேர்ந்து என்னன்னாலும், ஐயாயிரம் பத்தாயிரம்னு  கடன் தர்ரது அவங்கதான். கோயில் குளம்னு போகும் போது கார்ல எல்லாம் கூட்டிட்டு போவாங்க. நல்ல மனசு. நல்லவங்க தான். ஆனா நைசா பேசிகிட்டே நிறைய வேலை வாங்கிடும் அந்த அம்மா. முடிச்சுட்டு ஓடுறதிலேயே குறியா இருப்பா கவிதா. அவங்கள ஒரு வாய் காபி கேட்கலாம் தான். ஆனால் அதுக்கு அலமாரிய தொட,பித்தளப் பாத்திரத்த தேய்னு வேல வெச்சிடும் அந்தம்மா. நினைத்துக் கொண்டே அந்த வீட்டில் நுழைந்தாள் கவிதா.

“வாடீம்மா கவிதா. எனக்கு முக்கியமா நீ ஒரு வேல செய்யணும். வேலைய முடிச்சுட்டு சைக்கிள்ல போய் சுந்தர் காப்பில ஒரு அரைக் கிலோ காபி பொடி வாங்கிண்டு வந்துடு. காப்பி பொடி சுத்தமா தீந்து போச்சு. நான் கவனிக்கவே இல்ல. மாமாக்கு மீந்த டிகாஷன்ல காப்பி கொடுத்தேன். சகிக்கலன்னு மூஞ்சிய தூக்கிண்டு இருக்காரு பாரு.”

காபி இல்லாத கடுப்பை முகத்தில் காட்டாமல் பாத்திரம் தேய்க்கப் போனாள் கவிதா.

மாமி வீட்டு வேலை முடித்துக் கொண்டு வெளியே வரும்போது உடம்பு சோர்வில் தள்ளாடியது கவிதாவுக்கு. சைக்கிளைத் தள்ளக் கூடத் தெம்பில்லை. மெதுவாக சைக்கிளோடு நடந்து வந்தவள் முருகனின் டீக்கடை அருகே ஒரு நிமிடம் நின்றாள்

“என்னக்கா…..” என்றான் முருகன். சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். டீக்கடை வாசல் பெஞ்சில் உட்கார்ந்தாள். ஒரு நாளும் இப்படிக் கடை வாசலில் வந்து உட்காராத கவிதாவை அதிசயமாய் பார்த்தான் முருகன்.

“என்ன பாக்குற…? ஷ்ட்ராங்கா ஒரு காபி போடு. கூட ரெண்டு பட்டர் பிஸ்கட்டும்…..”

கெத்தாக சொன்ன கவிதாவை அவளுக்கே பிடித்திருந்தது.

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.