நாயன்மார் வெண்பா-4 – தில்லை வேந்தன்

(ஓர் அடியார்- ஒரு வெண்பா)

 

18)திருக்குறிப்புத் தொண்ட நாயனார்!

ஓம் நமசிவாய நமக - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் -... | Facebook

திருக்குறிப்புத் தொண்ட நாயனார், தொண்டை நாட்டைச் சேர்ந்த காஞ்சி மாநகரத்தில், துணி துவைக்கும் வண்ணார் மரபில் தோன்றியவர், சிவனடியார்களின் உள்ளக் குறிப்பை அறிந்து தொண்டு செய்ததால், அவரை அனைவரும் ‘திருக்குறிப்புத் தொண்ட நாயனார்’ என்று வழங்கி வந்தனர்.

சிவனடியார்களின் துணியை மிகுந்த விருப்பத்துடன் அவர் வெளுத்துத் தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு குளிர் காலத்தில், அழுக்கடைந்த கந்தை அணிந்த அடியவர் வேடத்தில் சிவபெருமான் அவர் முன்னே வந்தார்.

அவரிடம் நாயனார், “தங்கள் ஆடையைத் துவைத்து, வெளுத்துத் தருகின்றேன்” என்று கூறினார். அதற்கு அந்த அடியவர், ‘அழுக்கடைந்து இருந்தாலும், குளிருக்கு அஞ்சி இதனை உடுத்தியுள்ளேன்.. மாலைப்பொழுது ஆவதற்குள் தருவீராயின் எடுத்துக்கொண்டு விரைவில் துவைத்து தருவீராக” என்று கூறினார்.

அதற்கு ஒப்புக் கொண்ட நாயனார், அடியாரின் கந்தையை அழுக்கு நீங்கத் துவைத்து வெளுத்தார். பின் அதனைக் காய வைக்கும் முன் ‘திசை மயங்க வெளி அடைத்து’ மழை கொட்டத் தொடங்கியது.

மழை இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. இரவும் வந்தது.

குளிரால் வருந்தும் அடியவருக்குத் தான் விரும்பிச் செய்வதாகக் கூறிய திருத்தொண்டு தவறிப் போய் விட்டதே என்று சோர்ந்து கீழே விழுந்தார் நாயனார். ‘வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுக்கத் தெரியாமல் போயிற்றே!’ என்று உள்ளம் நொந்தார். துணி துவைக்கும் கற்பாறையில், தனது தலை சிதறும்படி மோதி உயிரை விடத் துணிந்தார். பாறையின் மீது அவர் தலையை மோதி முட்டும்போது, ஏகம்ப நாதரின் திருக்கை அவரது தலையைப் பிடித்துக் கொண்டது

வானிலிருந்து நீர் மழை நின்று மலர் மழை பெய்யத் தொடங்கியது.

உமையம்மையாரோடு வானத்தில் வெளிப்பட்ட சிவபெருமான், “உன் அன்பை மூவுலகமும் அறியவே இவ்வாறு செய்தேன். நீ, இனி என்றும் என் உலகில் என்னைப் பிரியாது இருப்பாயாக” என்று திருவருள் செய்தார்.

திருக்குறிப்பு நாயனார் வெண்பா

தொண்டரின் ஆடை துவைத்துப்பின் காயும்முன்
மண்டும் மழையால் மனமுடைந்தார்- கொண்டதுணி
எற்றும்கல் மோதுதலை ஏகம்பன் செங்கையால்
பற்றியருள் செய்ததவர் பாங்கு

(மண்டும் மழை- அதிகமாகும் மழை)
(துணி எற்றும் கல்,- துணியை அடித்துத் துவைக்கும் கல்
(பாங்கு– நாயனாரின் தகுதி)

***************

19)சண்டேசுர நாயனார்!

தமிழ்த்துளி Tamil Drops: சண்டேசுர நாயனார் புராணம்சோழ நாட்டில் மண்ணியாற்றின் தென்கரையில் உள்ள சேய்ஞலூர், மறைவழி ஒழுகும் அந்தணர்கள் வாழும் பழமையான ஊராகும்.

அவ்வூரில் வாழ்ந்த எச்சதத்தன் என்பவனுக்கும் பவித்திரை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் விசார சருமன். அவருக்கு ஏழு வயதில் உபநயனம் செய்யப்பட்டது.
வேதங்களிலும், கலைகளிலும் அவருக்கு இருந்த அறிவைக் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்
ஒரு சமயம், அவ்வூர் இடையன், பசு ஒன்றை அடிப்பதைப் பார்த்து வருந்திய விசார சருமன், தாமே பசுக்களை மேய்ப்பதாகச் சொன்னார். அவர் பசுக்களை அன்புடனும் திறமையுடனும் மேய்த்ததால் பசுக்கள் அவரிடம் அன்பு காட்டின. அன்பின் மிகுதியால் பசுக்கள் மடி சுரந்து கறக்காமலேயே பாலைப் பொழிந்தன.

மண்ணியாற்றின் மணல் திட்டில், ஓர் ஆத்தி மரத்தின் அடியில், விசார சருமன், மணலால் ஒரு சிவலிங்கத்தையும், கோபுரத்தையும், கோவிலையும் அமைத்தார். பசுக்கள் சொரிந்த பாலைக் குடங்களில் கொண்டு, மணலால் ஆன சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்து வந்தார். அவரது வழிபாட்டை இறைவனும் அன்புடன் ஏற்றுக் கொண்டான். இந்த வழிபாடு பல நாள் சிறப்பாக நடைபெற்று வந்தது.

இதைப் பார்த்த ஒருவன், இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல் ஊரில் வாழ்ந்த அந்தணர்களுக்கு அறிவித்தான்.

அவர்கள், விசார சருமனின் தந்தையாகிய எச்சதத்தனை அழைத்து, அவன் மகன் பசுக்களின் பாலைக் கறந்து மணலில் ஊற்றி வீணாக்குவதாகக் கூறினர். தன்மகன் இனி அவ்வாறு செய்ய மாட்டான் என்று உறுதி கூறிய எச்சதத்தன், மறுநாள் மண்ணியாற்றங்கரைக்குச் சென்று மறைவில் நின்று நடப்பவற்றைக் கவனித்தான்.

குடங்களில் இருந்த பாலை மணல் மீது மகன் ஊற்றுவதைக் கண்ட எச்சதத்தன் சினமுற்று, அவனை ஒரு கோல் கொண்டு அடித்தான். திருமஞ்சனத்தில் மெய்ம்மறந்து இருந்த விசார சருமன், தந்தை கோலால் அடிப்பதைச் சற்றும் உணரவில்லை. மிகுந்த சினம் கொண்ட எச்சதத்தன் அங்கு இருந்த பாற்குடத்தைக் காலால் உதைத்து உருட்டினான். தந்தையின் செயலைக் கண்ட விசார சருமன் அங்கே அருகில் கிடந்த கோலை எடுத்தார் அந்தக் கோல் அப்போது மழு ஆயுதமாக மாறியது. அந்த மழுவை வீசிக் குடத்தை உதைத்த தந்தையின் காலை அவர் வெட்டவும் எச்சதத்தன் கீழே விழுந்தான். இதன்பிறகு விசார தருமன் தம் சிவ வழிபாட்டைத் தொடர்ந்து செய்யலானார்.

அப்போது, உமையம்மையோடு சிவபெருமான் காட்சி தரவும், அவர் அம்மையப்பன் அடிகளில் விழுந்தார். அவரைத் தழுவிக் கொண்ட இறைவன், ,”என் பொருட்டு உன் தந்தையின் காலை வெட்டினாய். இனி நானே உனக்குத் தந்தை. உனக்குச் சண்டீசர் என்ற பதவியும் தந்தேன்” என்று கூறினான். தான் அணிந்திருந்த கொன்றை மாலையை அவருக்குச் சூட்டினான். சண்டீசர் பதவி பெற்ற விசார சருமன் ‘சண்டேசுவர நாயனார்’ ஆனார். அவரால் தண்டிக்கப்பட்டுக் குற்றம் நீங்கிய தந்தையும் சிவலோகத்தை அடைந்தான்.

சண்டேசுர நாயனார் வெண்பா!

ஆவளித்த பாலை, அமைத்தமணல் மேனிமேல்
மேவவிட்டு மஞ்சனத்தில் மெய்ம்மறந்தார் – தாவிக்
குடமுதைத்த தாதைதாள் கோல்மழுவால் வெட்டி
இடம்பெற்றார் சண்டீசர் என்று

பொருள்:

பசுக்கள் சுரந்தளித்த பாலைத் தாம் மணலால் அமைத்த சிவனின் மேனியில் விட்டுத் திருமஞ்சனம் செய்து மெய்ம்மறந்த நிலையில் இருந்தார்., தந்தையார் சினம் மிகுந்து பால் குடத்தை உதைத்தவுடன், அங்குக் கிடந்த கோல் மழுவாக மாற, அதைக் கொண்டு அவர் கால்களை வெட்டினார்.காட்சி கொடுத்த சிவன் அவருக்குச் “சண்டீசர்” பதத்தை அருளினார்.

**************

20) திருநாவுக்கரசர்!

சிவத்தொண்டர்கள்-41(திருநாவுக்கரசர் நாயனார்) – Pg Novels“என் கடன் பணி செய்து கிடப்பதே!” என்ற அமுத மொழியைக் கூறிய திருநாவுக்கரசரின் வரலாறு பக்திச் சுவையும் அருட்செறிவும் கொண்டது.

இவரை அப்பர், வாகீசர், நாவரசர், தாண்டக வேந்தர் எனப் பல பெயர்களில் குறிப்பிடுவர். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தார். இவருடைய தந்தையார் புகழனார், தாயார் மாதினியார்,தமக்கையார் திலகவதியார். இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும். தமக்கை திலகவதியார் மணப்பதாக இருந்த கலிப்பகையார் என்பவர் போர்க்களத்தில் உயிர் துறக்க,இவர் கைம்மை நோன்பை மேற்கொண்டு தம்பிக்காகவே உயிர் வாழ்ந்தார்..

மருள் நீக்கியார் பல கலைகளையும் நன்றாகக் கற்று உணர்ந்தார் ஆயினும் இறை அருள் இன்மையால் சமண சமயத்தைச் சார்ந்து அதன் தலைமைப் பொறுப்பில் விளங்கினார்.
தம்பியின் போக்கை உணர்ந்து வருந்திய திலகவதியார், இறைவனிடம் முறையிட, இறைவன் அவருக்குச் சூலை நோய் தந்து ஆட்கொண்டான். திருவதிகை வீரட்டானேஸ்வரரை வணங்கிக் “கூற்றாயின வாறு விலக்ககிலிர்” என்ற பதிகத்தைப் பாடிச் சூலை நோயிலிருந்து விடுபட்டார். அரிய பதிகத்தை பாடியதால் அவருக்கு ‘நாவுக்கரசர்’ என்ற பெயர் வழங்கும் என்று இறைவன் அருளினான்.

சமண சமயத்தை விட்டுச் சைவ சமயம் வந்ததற்காக மன்னனாகிய மகேந்திர பல்லவன் அவரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) அடைத்து வைத்தான். அப்போது அவர் “மாசில் வீணையும் மாலை மதியமும்” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி நலத்துடன் வெளியே வந்தார். பிறகு அவரை நஞ்சு கலந்த அன்னத்தை உண்ணுமாறு செய்தனர். எந்தவிதத் துன்பமும் இல்லாமல் அவர் இருப்பதைக் கண்ட சமணர்கள், யானையை விட்டு அவரை மிதிக்கச் செய்யுமாறு அரசனை வற்புறுத்தினர். அப்போது அவர் “அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” என்ற பதிகம் பாட, யானையும் பணிந்து திரும்பிச் சென்றது. அதன் பிறகு அவரைக் கல்லோடு கட்டிக் கடலில் இட்டனர். “சொற்றுணை வேதியன்” என்ற திருப்பதிகத்தைப் பாடக் கல்லும் கடலில் மிதக்க, நாவுக்கரசரும் கரை சேர்ந்தார். இவற்றைக் கண்டு மனம் மாறிய மன்னன் சைவ சமயத்தில் சேர்ந்தான்

அவர், தேவாரப் பாடல்கள் பாடியும், உழவாரப் பணிகள் செய்தும், பல தலங்களையும் சென்று இறைவனை வழிபட்டுச் சைவ சமயத்தையும், பக்தி நெறியையும் பரப்பினார். சீர்காழிப் பதியில் சம்பந்தரைக் கண்டபோது சம்பந்தர் அவரை “அப்பரே” என்று அழைத்தார்.அன்று முதல், திருநாவுக்கரசர் ‘அப்பர்’ என்றும் வழங்கப்பெற்றார்.

திங்களூரில் அப்பூதி அடிகளார் என்ற தொண்டரின் இல்லத்தில் பாம்பு தீண்டிய அவரது மகனை “ஒன்று கொலாம்” என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தார் பல தலங்களில் பல திருச்செயல்களையும், அற்புதங்களையும் செய்தார்.

கயிலை சென்று இறைவனைக் காண விரும்பிய திருநாவுக்கரசருக்குத் திருவையாற்றில் இருந்தவாறே , கயிலைக் காட்சியைக் காணும் பேற்றை அளித்தான் இறைவன்.. அப்போது அவர் பாடிய பாடல்,“மாதர் பிறை கண்ணியானை” மிகவும் புகழ்பெற்ற பாடலாகும்.
பல தலங்களுக்கும் சென்று வணங்கிப் பதிகம் பாடிய நாவுக்கரசர், திருப்பூம்புகலூரில் இறைவனடி சேர்ந்தார்.

அவரது ஆன்மீக வரலாற்றைப் பயிலப் பயிலப் பக்திச் சுவையும் அருட் பயனும் பெருகும் என்பது திண்ணம்.

திருநாவுக்கரசர் வெண்பா!

பணியே கடனாய்ப் பகர்ந்தார், தாம் கொண்ட
துணிவால் இடர்வென்றார் தூயர் – அணியார்
கயிலையை ஐயாற்றில் கண்டார், அவரைப்
பயிலப் பெருகும் பயன்.

“என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்று சொன்னவர். சமண சமயத்தைச் சார்ந்த அரசன் கொடுத்த இன்னல்களைத் துணிவால் வென்றவர்.திருவையாற்றில் இருந்து கொண்டே இறைவனின் கயிலைக் காட்சியைக் காணும் பேறு பெற்றவர்.இப்படிப் பல பெருமைகளை உடைய அவர் வரலாற்றைப் பயில்வதால் நாம் பெரும் பயன் அடையலாம்

********************

21) குலச்சிறை நாயனார்!

குலச்சிறை நா‌யனார் குருபூஜை! | Dinamalarமணமேற்குடி என்பது பாண்டிய நாட்டில் உள்ள வளம் நிறைந்த ஊராகும். அவ்வூரில் தோன்றியவர் குலச்சிறை நாயனார். அவர், சிவனடியார்களைப் போற்றி வழிபட்டு, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அன்புடன் அளித்து வந்தார். குலச்சிறையார், பாண்டிய அரசனான நின்ற சீர் நெடுமாறனின் அமைச்சர்களுள் மேலான சிறந்த அமைச்சராக விளங்கி வந்தார். பாண்டிய மன்னன் சமண சமயத்தவனாக இருந்த போதும், குலச்சிறையார் சைவத்தின் வழி நின்று அதைப் பேணிக் காத்தார். பாண்டிய மன்னனின்
மனைவியாரான மங்கையர்க்கரசி அம்மையாரின் சிவத்தொண்டுக்கு உறுதுணையாகவும் விளங்கினார்.

சமணரகளின் பொய்மையை நீக்கவும், பாண்டியநாடு சைவ நெறியைப் போற்றவும், திருஞானசம்பந்தரின் திருவடிகளைத் தம் தலை மேல் கொண்டு பணியாற்றினார். பாண்டிய நாட்டில் சைவ நெறி தழைக்கக் குலச்சிறையார் ஆற்றிய பங்கு அளப்பரியது. இவர் பெருமையை உணர்ந்த சுந்தரர் இவரைப் “பெருநம்பி” என்று பாராட்டி உள்ளார்.

குலச்சிறையார் வெண்பா!

வல்லவர், பேரமைச்சர் வண்பாண்டி மன்னற்கு,
நல்லடியார் வேண்டுவன நல்குவார், -அல்லவை.
செய்சமணம் தேயத் திருஞான சம்பந்தர்
மெய்யடி கொண்டார்தன் மேல்!

 

***********”””

 

22) பெருமிழலைக் குறும்ப நாயனார்!

நாயன்மார்கள் – திரு பெருமிழலைக் குறும்ப நாயனார் – natarajanprabakaran.comமாமரமும், தென்னையும், பலாவும், கமுகுகளும் சூழ்ந்திருக்கும் வளம் நிறைந்த பெருமிழலை என்னும் ஊர் மிழலை நாட்டின் தொன்மையான பதியாகும். இவ்வூரின் தலைவராக விளங்கியவர் பெருமிிழலைக் குறும்பனார். இவர் சிவனடியார்களுக்கு ஏற்ற பணிவிடைகளை எல்லாம் குறிப்பால் உணர்ந்து தாமாகவே செய்யும் இயல்புடையவர். சிவனடியார்களுக்கு உணவு படைத்து, அவர்களுக்குச் செல்வங்களை அள்ளிக் கொடுப்பவர். சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளைத் தம் நெஞ்சத்தில் வைத்து எப்பொழுதும் போற்றுபவர்.

“திருத்தொண்டத் தொகை” என்ற பதிகத்தைப் பாடிய சுந்தரரை வணங்கிச் சிவனருள் பெற்றவர்.

சுந்தரரின் திருவடிகளைக் கையால் வணங்கி, வாயினால் துதித்து, மனத்தால் சிந்தித்து அன்பு செலுத்தியவர். நாள்தோறும் சுந்தரரின் திருநாமங்களைக் கூறி அதன் பயனாக ‘அணிமா’ முதலான எட்டு வகைச் சித்திகளும் கைவரப் பெற்றார். திருவஞ்சைக்களம் என்ற தலத்தில் சுந்தரர் கைலாயம் செல்லப் போகின்றார் என்பதை இவர் அறிந்தார். “சுந்தரரைப் பிரிந்து நான் வாழேன்” என்று கூறி, மனத்தில் எண்ணி, யோக நெறியின் மூலம் பிரம்ம நாடிகளின் வழியே கருத்தைச் செலுத்திப் பிரம்மரந்திர வாயிலைத் திறந்து அதன் வழியே உயிர் பிரிந்து கைலாயத்தை நம்பியாரூரர் சென்று சேர்வதற்கு முன்னே அடைந்தார்.

யோகப் பயிற்சியாலும், கடும் முயற்சியாலும் சுந்தரரின் திருவடிகளைப் பிரியாமல் பொருந்தி இருப்பதற்குக் கயிலை மலையானின் திருவடியை அடைந்த பெருமை உடைய மிழலைக் குறும்பரின் குரு பக்தி தனிச் சிறப்புடையது.

பெருமிழலையார்வெண்பா!

ஆரூரர் நாமத்தால் ஆயபல சித்திபெற்றுச்
சீரார் சிவத்தொண்டு செய்துவந்தார் – ஏரார்
கயிலையவர் செல்லுமுன் கண்டறிந்தே ,யோகச்
செயலால்முன் தாளணைந்தார் சேர்ந்து!

(ஏரார்- அழகு மிகுந்த)

****************

23) காரைக்கால் அம்மையார்!

புனிதவதி காரைக்கால் அம்மையார் குருபூஜை! | Dinamalarகடற்கரைப் பட்டினமான காரைக்காலில், தனதத்தன் என்னும் பெரு வணிகனின் மகள் புனிதவதியார். அவர் சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.
தகுந்த பருவம் வந்தவுடன், புனிதவதியாருக்கும் நாகைப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி என்னும் வணிகனின் மகனான பரமதத்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. பரமதத்தனும், புனிதவதியாரும் இல்லறத்தை அன்புடன் இனிது நடத்தி வந்தனர்.

புனிதவதியார், இல்லறத்துக்குரிய நற்பண்புகள் கொண்டவராய்த் திகழ்ந்தார். சிவனடியார்களை உபசரிப்பது அவரது இயல்பாக இருந்தது. பரமதத்தன், மனையின் வளத்தைப் பெருக்கும் வணிகத்தில் மேன்மையான நிலையை அடைந்திருந்தான்.
ஒரு நாள், அவனைக் காண வந்த ஒருவர் அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுக்க, அவன் அவற்றை வீட்டில் கொண்டு கொடுக்கச் செய்தான். பழங்களைப் பெற்றுக்கொண்ட புனிதவதியார், அவற்றை இல்லத்தில் வைத்தார். அச்சமயத்தில் அங்கு ஒரு சிவனடியார் வந்தார். அவருடைய பசித்த நிலையைக் கண்டு உணவு படைத்த அம்மையார், அப்போது கறியமுது சமைத்து முடிக்காததால், அடியாருக்கு ஒரு மாங்கனியை உணவுடன் உண்பதற்குப் படைத்தார். பசியாறிய அடியாரும் மகிழ்ச்சியுடன் சென்றார்.

அதன்பின் பரமதத்தன் தன் வீட்டுக்கு உணவு கொள்ள வந்தான். அவனது இலையில் , அம்மையார் மாங்கனியை வைத்தார். அது மிகவும் சுவையுடையதாக இருந்ததால், அவன், ‘மற்றொரு மாங்கனியையும் கொண்டு வா!’ என்றான். என்ன செய்வது என்று தெரியாமல் மயங்கிய அம்மையார் இறைவனைத் துதித்தார். இறைவன் அருளால் அவர் கையில் ஒரு கனி வந்தது. அதை அவர் அளிக்க அவன் உண்டான். அதன் சுவை அமுதத்தை விட மேலானதாக இருப்பதாக உணர்ந்த பரமதத்தன்,”இக்கனியை நீ வேறு எங்குப் பெற்றாய்?” என்று கேட்டான்.முதலில் தயங்கினாலும், புனிதவதியார் உண்மையை மறைக்காமல் உரைத்தார். அதைக் கேட்ட பரமதத்தன், “அப்படி ஆயின் இன்னொரு மாங்கனியைத் தருவித்துத் தா” என்றான். அம்மையார் இறைவனிடம் மீண்டும் ஒரு கனியை வேண்ட இறைவனும் அதனை அளித்தான். கனியைக் கணவன் கையில் கொடுத்தவுடன் அது மறைந்துவிட்டது. வியப்பும், திகைப்பும் அடைந்த பரமதத்தன், ‘இவள் பெண் அல்லள், தெய்வம். எனவே இவளை விட்டு நீங்க வேண்டும்’என்று முடிவு செய்தான். வேற்றுநாட்டுக்குச் சென்று வாணிகம் செய்யப்போவதாகச் சொல்லிச் சென்றான். வேற்றுநாட்டில் வாணிபத்தில் சிறந்து விளங்கியவன், பாண்டிய நாட்டின் ஓர் ஊருக்குச் சென்று , அங்கு வணிகன் ஒருவன் மகளை மணந்து வாழ்ந்து வந்தான். அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்குப் ‘புனிதவதி’ என்று பெயர் சூட்டினான்
அவன் பாண்டிய நாட்டில் இருப்பதை அறிந்த புனிதவதியின் சுற்றத்தார், இருவரும் ஒன்று சேர்வதே முறை என்று அழைத்துச் சென்றனர்.

பரமதத்தன், தன் மனைவியுடனும், குழந்தையுடனும் வந்து புனிதவதியாரின் அடிகளில் விழுந்து வணங்கி,,’உன்னைத் தெய்வமாக மதிக்கின்றேன். என் குழந்தைக்கு உன் பெயரைச் சூட்டி உள்ளேன்’ என்றான். கணவனின் நிலையை உணர்ந்த புனிதவதியார், இறைவனிடம், ‘இனி இவனுக்காகத் தாங்கிய வனப்புமிக்க தசைப் பொதி தேவையில்லை. எனக்குப் பேய் வடிவத்தைத் தந்தருள வேண்டும்’ என்று துதித்து நின்றார். அவர் வேண்டிய வடிவத்தை இறைவன் அளித்தவுடன், மலர் மாரி பொழிந்தது. இறைவனின் அருளால் ஞானம் பெற்ற அவர், ‘அற்புதத் திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ என்ற இரண்டு நூல்களைப் பாடினார்.
பின்னர்க் கைலாயத்துக்குத் தலையால் நடந்து சென்றார்.பார்த்து வியந்த உமையம்மையார், “தலைகீழாக நடந்து வரும் இதன் அன்பு தான் என்னே!” என்றார். அதற்கு இறைவன், “இவர் இவ்வடிவத்தை வேண்டிப் பெற்றார். இவர் நம் அம்மை” என்றான்..

பின்னர் அவரை “அம்மையே!” என்று அழைத்தான். “அப்பா!” என்று அவனது அடிகளில் விழுந்தார் அம்மையார்.

“வேண்டுவது யாது?” என்று கேட்டான் இறைவன். “இனிப் பிறவாது இருக்க வேண்டும், அப்படிப் பிறந்தால் உன்னை மறவாதிருக்க வேண்டும்.நீ ஆடும் போது உன் அடியில் இருக்கும் பேறு எனக்குக் கிட்ட வேண்டும்” என்று கேட்டார்.

திருவாலங்காட்டில் நான் ஆடும் நடனத்தைக் கண்டு , பாடிய வண்ணம் என் திருவடியில் இரு,” என்று அருள் செய்தான் இறைவன். திருவாலங்காட்டைத் தலையால் நடந்து சென்று அடைந்த அம்மையார், அங்கு “மூத்த திருப்பதிகம்” பதிகத்தைப் பாடினார். இறைவனின் திருவடியில் என்றும் இருக்கும் பெரும் பேற்றைப் பெற்ற புனிதவதியார் காரைக்கால் அம்மையார் என்று போற்றப்பட்டார்.

காரைக்காலம்மையார் வெண்பா!

மாங்கனிசெய் மாயத்தால் மங்கை மணவாளன்
பூங்கொடியை விட்டுத்தான் போய்விடவும் – ஆங்கவளோர்
பேயாகி மாகயிலைப் பித்தனவன் அம்மையெனத்
தாயாகிச் சேர்ந்திருப்பள் தாள்!

 

(தொடரும்)

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.