புவனா சந்திரசேகரன் அவர்கள்  இந்த வருடம் வானதி பதிப்பகத்தின் ஆதரவுடன்    “பராந்தகப் பாண்டியன்”, “தென்னவன் பிரம்மராயன் ”  என்ற இரண்டு வரலாற்று நாவல்களையும்   பாரதி பதிப்பகம் வாயிலாக “சங்கரபதிக் கோட்டை”  என்ற  வரலாற்று நாவலையும் வெளியிட்டிருக்கிறார். 

வாழ்த்துகள் ! 

குவிகம் குறும் புதினம் , பிரபா  ராஜன் சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றவர் 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவர் எழுதிய பாரந்தக பாண்டியன் சரித்திர நாவலின் முன்னுரையை படித்தால் அவரது உழைப்பின் பெருமை தெரியவரும்:

எழுத்துலகில் காலடி எடுத்து வைத்த நாளில் இருந்தே, வரலாற்று நாவல் எழுதும் ஆசை, அடிமனதில் அக்கினிக் குஞ்சாகக் கனன்று கொண்டே இருந்தது. மதுரையில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ என்னுடைய முதல் வரலாற்றுப் புதினம் நிச்சயமாகப் பாண்டிய நாட்டைப் பற்றியதாகத் தான் அமையவேண்டும் என்ற ஆசையும் துளிர் விட்டது.

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழக்கியவர்கள் பாண்டியர்கள். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததும் இந்தப் பாண்டிய மண்ணில் தான். வரைய சந்தனம் நிறைய விளைந்த பாண்டிய மண்ணில் திரைய முத்துகளும் தென்பாண்டிக் கடலில் கொழித்தன.

ஆதாரங்களைத் தேடிப் பயணித்த போது உக்கிரன் கோட்டை அகழ்வாய்வு, பேச்சிப்பள்ளம் சமணர் பள்ளி, ஆனை மலைப் பகுதியில் உள்ள சமணப் பள்ளிகள், சேரன்மாதேவி என்கிற ஊர் பற்றிய தகவல், பெண்ணாகடம் நகரம் அழிக்கப்பட்ட தகவல் என்று ஒவ்வொன்றாகக் கண்ணில் பட ஆரம்பித்ததும் தெய்வச் செயல் என்று தான் தோன்றுகிறது. அனைத்துத் தகவல்களிலும் பொதுவாகக் கிடைத்த பெயர் பராந்தகப் பாண்டியனுடையது. மேலும் விவரங்களை சேகரிக்கத் தொடங்கினேன். சின்னமனூர் செப்பேடுகள் பற்றி அடுத்ததாகத் தெரியவந்தது. பராந்தகப் பாண்டியனைப் பற்றிய தகவல்கள் சேகரிக்க, நிறைய வரலாற்றுப் புத்தகங்களின் துணையை நாடினேன். கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு எனது கற்பனையில் சில கதாபாத்திரங்களை உருவாக்கி இந்தக் கதையில் சேர்த்தேன்.

பராந்தகப் பாண்டியனின் ஆட்சி மதுரையில் கி. பி. 880 முதல் தொடங்கி கி. பி. 900 வரை நீடித்தது . இவருடைய தந்தை சீமாறன் சீவல்லபன். இவர் வைணவ பக்தர். இவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் இரண்டாம் வரகுண பாண்டியர். சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் இவருடைய அமைச்சராகப் பணியாற்றிய தகவலும் கிடைத்தது. வரகுண வர்மன் என்றும் அழைக்கப்படும் இவருக்கு சடையவர்மன் என்கிற பட்டப் பெயரும் உள்ளது. இவர் சீமாறன் சீவல்லபனின் முதல் மகன் ஆவார். இவர் தந்தையைப் போல அல்லாமல் சைவத்தைப் போற்றியவர்.

வரகுணவர்மனின் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய சகம் 792 இல் வரையப்பெற்ற கல்வெட்டு ஒன்று மதுரை மாவட்டத்தில் ஐவர் மலையில் உள்ளது. இவர் அநேகமாக கி. பி. 862 இல் முடிசூட்டப் பட்டிருக்க வேண்டும். “குரை கழற்காலரை சிறைஞ்ச குவலயதலந்தனதாக்கின வரைபுரையுமணி நெடுந்தோள் மன்னர் கோன் வரகுணவர்மன்” என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் இவரைப் பற்றிப் புகழ்ந்து கூறுகின்றன. வரகுணபாண்டியனது பதின்மூன்றாம் ஆட்சியில் வரையப்பட்ட கருங்கற் பாறைச் செய்தி ஒன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் கிடைத்துள்ளது.

வரகுண பாண்டியனின் மறைவிற்குப் பிறகு அவருக்கு வாரிசு இல்லாததால் அவருடைய தம்பியான பராந்தகருக்கு முடி சூட்டப்பட்டது. இவரும், வரகுண பாண்டியரும் வெவ்வேறு தாய் மக்கள். பராந்தகப் பாண்டியன் தனது தந்தையைப் போல வைணவத்தை ஆதரித்தார். அதனால் தானோ என்னவோ பராந்தக வீர நாராயணன் என்று அழைக்கப்பட்டார். இவருடைய அன்னை அக்களநிம்மடியார் கங்க நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ பொத்தப்பி சோழரின் மகள் ஆவார்.

வரகுண பாண்டியனின் படைத்தலைவரான நக்கன் புள்ளன் பற்றிய தகவல் கிடைத்தது. சீமாறன் சீவல்லபனின் படைத் தலைவராகப் பணியாற்றிய நக்கன் என்பவரின் மகன் என்ற பொருளில் நக்கன் புள்ளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இவர் திண்டுக்கல்லுக்கு அண்மையில் இராமநாதபுரம் என்ற ஊரில் குளம் வெட்டியதாகக் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

இந்தக் கதையை இளம்பரிதி என்கிற இளைஞனின் கண்ணோட்டத்தில் கொண்டு சென்றிருக்கிறேன். கல்வி முடித்தபின் தந்தையின் கட்டளைப்படி, பாண்டிய மன்னருக்கு சேவை புரியப் பயணம் செய்வதில் இருந்து கதை தொடங்கி, அவனுடைய திருமணம் வரை செல்கிறது.

பாண்டிய மன்னர்கள் சீமாறன் சீவல்லபன், இரண்டாம் வரகுணப் பாண்டியன், பராந்தகப் பாண்டியன், பட்டத்தரசி வானவன் மாதேவி, அரசரின் அன்ன அக்களநிம்மடியார், படைத்தலைவர் நக்கன்புள்ளன், மாணிக்கவாசகர், கரவந்தபுரக் கோட்டைத் தலைவன் உக்கிரமவழுதி இவர்கள் அனைவரும் வரலாற்றுக் கதாபாத்திரங்கள்.

இளம்பரிதி, எழினி, சதாசிவ பிரம்மராயர், நுவலி, ருத்ரன், பைரவன், மகிழ்மாறன், யாழினி தேவி, வழுதி மாறன், பூங்கோதை தேவி, கபிலன் ஆசான் இவர்கள் அனைவரும் என்னுடைய கற்பனையில் உருவான கதாபாத்திரங்கள்.

கரவந்தபுரம், பெண்ணாகடம், திருப்புறம்பியம் பகுதிகளில் நடந்த போர்கள் உண்மையில் நிகழ்ந்தவை. களிற்றுப்படை பற்றிய தகவலும் உண்மை தான்.

பாண்டிய வரலாற்றைப் பற்றிய ஆதாரங்களையும், எனது கற்பனையையும் சேர்த்து இந்தக் கதையை இறைவன் அருளுடன் என்னால் புனையமுடிந்தது. அதுவும் மதுரை வந்து குடி புகுந்த முதல் ஆண்டில் மதுரையைக் களமாகக் கொண்ட கதையை நான் எழுதியது, மதுரை அரசி மீனாட்சியின் அருளால் தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

கதையை எழுதி முடிப்பதற்குள் என்னுடைய ஒவ்வொரு அடியிலும் என்னுடன் துணையாக நின்றவர் எனது கணவர் டாக்டர். சந்திரசேகரன்.

இந்தக் கதையை எழுதச் சொல்லி என்னை ஊக்குவிக்க ஆரம்பித்தில் இருந்து கதை முடியும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஆலோசனை தந்து வழிநடத்தியது எனது அன்பு சகோதரர் திரு. ஜெயக்குமார் சுந்தரம் அவர்கள் தான். அவருடைய உதவி இன்றி இந்தக் கதை அணுவளவு கூட உருவாகி இருக்காது. அவருக்கு என்னுடைய முதற்கண் நன்றி.

அடுத்ததாகத் தனது கருத்துகளை அளித்து எனக்கு நம்பிக்கை ஊட்டிய திரு. சுந்தர் கிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய நண்பர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

எனது கதையை ஏற்று, வானதி பதிப்பகம் வாயிலாக அச்சில் கொண்டு வர அனுமதி அளித்த வானதி பதிப்பக உரிமையாளர் மதிப்பிற்குரிய திரு. இராமநாதன் அவர்களுக்கு மனதார நன்றி கூறுகிறேன்.

நன்றி,

புவனா சந்திரசேகரன்.

இந்தப் புதினத்தை எழுதுவதற்காக நான் வாசித்த நூல்கள் மற்றும் இணைய உதவி

1.பாண்டியர் வரலாறு-
ஆசிரியர் T. V. சதாசிவ பண்டாரத்தார்

2.சங்ககால அரசர் வரிசை

புலவர் கா. கோவிந்தன்

3.பாண்டியர் வரலாறு

டாக்டர். கே. வி. இராமன்

4.சிலப்பதிகாரம்

5.மதுரைக் காஞ்சி

மற்றும் திருக்குறள், அகநானூறு, புறநானூறு

Google wikipedia

 

— புவனா சந்திரசேகரன்