மாருதிய காப்பாத்தின கபாலி – எஸ் எல் நாணு

( நாணு அவர்கள் நான் வைத்திருந்த  20 வருட பழைய  காரைப் பற்றி  நான் சொல்லாமலேயே எழுதியிருக்கிறாரே ..என் ஆஸ்தான டிரைவர் கூட அதைக்  குழந்தை மாதிரி என்றுதான் சொல்வார் . என்ன,  என்னுடையது ஆல்டோ . இதில மாருதி 800 –  குவிகம் சுந்தரராஜன் )  

Maruti 800 AC - Type III - 20 Years Old But Still Mint | Faisal Khan -  YouTube

காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு,,

அதே மாதிரி பாச்சாவுக்கு அவனோட மாருதி 800 தான் உலகத்திலேயே மிகச் சிறந்த கார்..

பாச்சாவோட அப்பா ஆராவமுது ஏ.ஜி.எஸ் ஆபீசுலேர்ந்து ரிடையரான போது கையில வந்த கணிசமான செட்டில்மெண்ட் பணத்துல ஒரு அல்வாத்துண்டு பகுதியை பாச்சா ஆசைப் பட்டானேன்னு கார் வாங்க ஒதுக்கினார்.. ஆனா அந்த கொசுரு பட்ஜெட் ஒதுக்கீட்டுல இரண்டாவது கை (அதான் சார் செகண்ட்-ஹாண்ட்) காரைத் தான் பாச்சாவால குறி வெக்க முடிஞ்சுது..

ஆபீஸ் தோழன் கார்மேகத்துக்கு கார் விஷயத்துல நல்ல அனுபவம்..

“கார் வாங்க.. விக்க.. எங்கிட்ட வாங்க” அப்படின்னு பழைய ரமேஷ் கார் விளம்பரம் போல எப்பவும் கையை விரிச்சிண்டு காத்திண்டிருப்பான்.. சொல்லப் போனா கார் வியாபாரம்தான் அவனுக்கு பிரதான தொழில்.. பேங்க் வேலை உப தொழில்.. அவன் கார் வாங்கி விக்கற வேகத்தைப் பார்த்து எல்லாரும் அவனை கார்மேகத்துக்குப் பதிலா கார்வேகம்னுதான் கூப்பிடுவா..

“கவலைப் படாதே மச்சான்.. யார் யாருக்கோப் பண்ணறேன்.. உனக்குப் பண்ண மாட்டேனா?”

சொன்ன மாதிரியே ஒரே வாரத்துல ஒரு மாருதி 800 காரை பாச்சா கண்ணு முன்னால நிறுத்தினான் கார்மேகம்..

கார் பார்க்க ஓரளவு நன்னாத்தான் இருந்தது.. எட்டு வருஷ பழசு.. இருபதாயிரம் கிலோமீட்டர்தான் ஓட்டம்.. புதுசுல இல்லைன்னாலும் அப்புறம் சேர்க்கப்பட்ட ஏ.ஸி.. அந்தக் காலத்து அஹூஜா ஸ்டிரியோ சிஸ்டம்..

பாச்சாவுக்குப் பிடிச்சுதோ இல்லையோ.. காரைப் பார்த்த உடனே அவப்பா ஆராவமுதுவுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.. அதுக்குக் காரணம் காரோட கரு நீல கலர்..

“அந்த கிருஷ்ணனே நம்மாத்துக்கு வந்த மாதிரி இருக்குடா”

அது மட்டுமில்லை.. காரோட டேஷ் போர்டுல சின்னதா திருப்பதி பெருமாள் விக்ரஹம்..

“டேய்.. பெருமாள் ஆசிர்வாதத்தோட வந்திருக்கு.. பத்து இருபது அதிகமானாலும் இந்தக் காரை வாங்கிடு”

ஆராவமுதுவோட இந்த ஆர்வக் கோளாரை கார்மேகம் நன்னாவே உபயோகப் படுத்திண்டான்..

“நீங்க சொல்றது ரொம்ப சரி.. இதோட ஓனர் கிட்டப் பேசிட்டிருந்த போது சொன்னார்.. இந்தக் கார் கிட்டத்தட்ட ஏழு தடவை திருப்பதி போயிட்டு வந்திருக்காம்.. மூணு தடவை ஸ்ரீரங்கம் போயிட்டு வந்திருக்காம்.. கணக்கில்லாம காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வந்திருக்காம்..”

கார்மேகம் வேகமா அடுக்கிண்டே போக ஆராவமுது கண்ணுலேர்ந்து தாரை தாரையா கண்ணீர்.. கொஞ்சம் விட்டா தெருன்னு கூடப் பார்க்காம  சாஷ்டாங்கமா விழுந்து அந்தக் காரை நமஸ்காரம் பண்ணியிருவாரோன்னு பாச்சாவுக்கு பயம் பிடிச்சுருத்து.. ஆனா நல்லவேளையா அப்படிப் பண்ணாம பயபக்தியோட தன் கையால காரைத் தொட்டு கண்ணுல வெச்சுண்டு சேவிச்சுண்டார்..

ஆக.. அந்த கார்வண்ணன் மாருதி800ஐ ஆராவமுது குடும்பத்துல பாச்சாவுக்குத் தம்பியா சேர்ந்து இதோட ஏழு வருஷங்களாச்சு..

பாச்சா குடும்பம் இருந்த அந்த நடுத் தெரு வீட்டுல கார் நிறுத்த கராஜ்லாம் கிடையாது.. வீட்டுக்கு முன்னால தெருவுல நிறுத்த வேண்டியதுதான்.. இதனாலயே அந்தத் தெருவுல நிறையபேர் வசதி இருந்தும் கார் வாங்கத் தயங்கினா..

ஆனா பாச்சாவுக்கு நிஜமாவே ரொம்ப அதிருஷ்டம்.. ஏன்னா மாருதி 800 அவன் வீட்டு வாசல்ல கச்சிதமா அடங்கிருத்து.. ஒரு இஞ்ச் கூட பக்கத்து வீட்டு எல்லையைத் தொடலை.. அது இந்தியா பாகிஸ்தான்.. (இப்ப சைனா) எல்லை மாதிரி.. ஒரு இஞ்ச் தாண்டினாக் கூட பக்கத்து வீட்டு சொந்தக் காரன் எதிராஜுலு தன் சொத்தையே அபகரிச்ச மாதிரி ஊரைக் கூட்டிக் கலாட்டா பண்ணிருவான்..

தினம் காலைல எழுந்து சந்தியாவந்தனம் பண்ணி காப்பி குடிச்ச கையோட பாச்சா மாடிலேர்ந்து கீழ வந்துருவான்.. ஏதோ புதுசாப் பொறந்த குழந்தையைப் பார்க்கிற மாதிரி தினம் அவனோட மாருதியை வெவ்வேறு ஆங்கிள்ளேர்ந்து பார்த்துப் பார்த்து ரசிப்பான்.. அப்புறம் குழந்தைக்கு வலிக்காம அழுக்கு துடைச்சு விடற மாதிரி பழைய பனியன் துணியால காரைத் துடைப்பான் (மத்த துணியெல்லாம் கரடு முரடா இருக்கும்.. காருக்கு வலிக்கும்..). அப்புறம் ஒரு தாய் குழந்தை தலைல மெதுவா தண்ணி விட்டுக் குளிப்பாட்டற மாதிரி பக்கெட் தண்ணியை மெதுவா மொண்டு விடுவான்.. மறுபடியும் பனியன் துணியால ஒத்தி ஒத்தி ஈரத்தை எடுப்பான்..

டேஷ் போர்டுல மூலாதாரமா வெங்கடேசப் பெருமாள் இருந்தாலும் பாச்சா அவனுக்குப் பிடிச்ச கபாலீஸ்வரரையும் கூடவே பிரதிஷ்டை பண்ணிட்டான்.. அதனால தினம்  வீட்டுக்கு முன்னால படர்ந்திருந்த செடிலேர்ந்து கணிப்பூ மாதிரி இருக்கற மஞ்சள் பூவையும்.. செம்பருத்தியையும் பறிச்சு பெருமாளுக்கும் கபாலீஸ்வரருக்கும் சாத்துவான்.. இப்படிப் பண்ணினா கோவில் கர்பக்கிரகத்துல இருக்கிற கபாலீஸ்வரருக்கே ஆராதனை பண்ணற திருப்தி அவனுக்கு..

ராமன் ஏக பத்தினி விரதன்.. அதே மாதிரி அந்தக் காரைப் பொறுத்தவரை பாச்சா ஏக பார்த்தன் (ஓட்டுநர்) விரதன்.. வேற யாரையும் ஸ்டியரிங்கைத் தொட அனுமக்திக்க மாட்டான்.. (கார் சர்வீஸ் பண்ணற ஆளுங்களைத் தவிற). எங்க போறதா இருந்தாலும் அவனே தான் ஓட்டிண்டு போவான்.. அவன் கியர் மாத்தற அழகே தனி.. ஏதோ குழந்தையோட கன்னத்தை செல்லமாத் தொட்டுக் கொஞ்சற மாதிரி இருக்கும்.. ஹார்ன் கூட யாருக்கும் கேட்காத மாதிரி அமைதியா அடிப்பான்.. ரொம்ப அழுத்தினா காருக்கு தொண்டை கட்டிக்கும்..

என்னிக்குமே பாச்சா நாற்பதைத் தாண்டி வேகமா(?) போக மாட்டான்.. நாம அதிகமா உடம்பை வருத்திண்டு வேலை பண்ணினா உடம்பு விண் விண்ணுன்னு வலிக்குமே.. அதே மாதிரி காரை ரொம்ப வேகமா ஓட்டினா அதை வருத்தர மாதிரி.. அதுக்கும் உடம்பு வலிக்குங்கறது அவனோட சித்தாந்தம்..

குழந்தை கைல ஒரே பொம்மை இருந்தா கொஞ்ச நாளுல அதுக்கு போர் அடிச்சுப் போய் அதைத் தூக்கிப் போட்டுரும்.. புதுசா வேற பொம்மையைத் தேட ஆரம்பிச்சுரும்.. அதே மாதிரி தான்.. அப்பப்ப புதுசு புதுசா பொம்மையை வாங்கி காருக்குள்ள தொங்க விடுவான் பாச்சா.. பழைய பொம்மையைத் தூக்கிப் போட்டுருவான்.. அப்பத்தான் காருக்கு போர் அடிக்காதாம்..

சில நாள் கனவுல பாச்சா முகம் தெரியாத ஹீரோயினோட அவனோட காரை ஓட்டிண்டே டூயட் பாடுவான்.. ஒரு நாள் “மேரே சப்புனோ கி ராணி கப் ஆயே கீ தூ” அப்படின்னு ராஜேஷ்கன்னா ஜீப்புலேர்ந்து ஷர்மிலா டாகூரைப் பார்த்துப்  பாடினதை பாச்சா அவனோட மாருதிலேர்ந்து முகம் தெரியாத ஹீரோயினைப் பார்த்துண்டே பாடினான்..

இப்படி நாளுக்கொரு கனவும்.. பொழுத்துக்கொரு கற்பனையுமா ஓடிண்டிருக்கிற போதுதான் ஆராவமுது அந்தக் குண்டைத் தூக்கிப் போட்டார்..

“பாச்சா.. நம்ம காருக்கு வயசு பதினஞ்சு.. இந்த ஜூலை மாசத்துக்குள்ள பிட்னஸ் சர்ட்டிபிகேட் வாங்கணும்.. இல்லைன்னா காரை எடுக்க முடியாது”

பிட்னஸ் சர்ட்டிபிகேட் வாங்கணம்னா காரைப் பக்காவா தயார் பண்ணணும்னு தெரிஞ்சுண்ட பாச்சா உடனே காரை சர்வீஸ் செண்டருக்கு எடுத்துண்டு போனான்.. வழக்கமா அவன் சர்வீஸ் செண்டர்ல தான் காரை சர்வீசுக்குக் கொடுப்பான்.. சாதாரண மெக்கானிக் கிட்டலாம் அவனுக்கு நம்பிக்கை கிடையாது..

“சாதாரண சர்வீஸ்னா மூவாயிரம் நாலாயிரத்துல முடிச்சுரலாம்.. பிட்னஸ் சர்ட்டிபிகேட் சர்வீஸ்னா.. ம்.. பம்பர்லேர்ந்து எல்லாம் மாத்தணும்.. கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால்லேர்ந்து ரெண்டு லட்சம் வரை ஆகும்.. பழைய மாடல்.. இதுக்குப் பேசாம நீங்க இதைக் கொடுத்துட்டு புது கார் வாங்கிரலாம்.. இதை ஒரு இருபதாயிரத்துக்கு பை பேக் எடுத்துப்பாங்க”

சர்வீஸ் செண்டரில் சொன்னதை பாச்சாவால ஜீரணிக்க முடியலை..

“காரை மாத்தறதா? உகும்.. இது என் செல்லக் குழந்தை.. இதை எப்படிக் கொடுக்க முடியும்? அதுவும் இருபதாயிரம் ரூபாய் தான் இதுக்கு மதிப்பா? சே.. எப்படி நாக்குல நரம்பில்லாமச் சொல்றான் அந்த ஆளு”

வீட்டுல இதை வெச்சு ஒரு மாநாடே நடந்தது.

ஆராவமுது தீர்மானமா சொன்னார்..

“அவா சொல்றது நியாயம் தானே.. பழைய காருக்கு இவ்வளவு செலவு பண்றதுக்கு பதிலா புது காரே வாங்கிடலாமே”

ஜானகி பாட்டியும் ஆர்வமா குரல் கொடுத்தா..

“ஆமாண்டா பாச்சா. காரை மாத்திடு.. இந்தக் காருல பின்னாடி உட்கார்ந்தா காலை இடிக்கறது.. வாங்கறதுதான் வாங்கறே.. இப்ப ஏதோ வந்திருக்காமே.. ஆண்டி கார்.. அதையே வாங்கிடு”

“ஐயோ பாட்டி.. அது ஆண்டி கார் இல்லை.. ஆடி கார்”

“அது ஆடியோ ஆவணியோ.. பேரா முக்கியம்.. அது ரொம்ப வசதியா இருக்குமாம்.. விஸ்தாரமா கால் நீட்டிக்கலாம்னு நாலாம் நம்பர் ஜெயஸ்ரீ பொண்ணு சொல்லித்து..”

இந்த விஷயம்லாம் பாட்டி எப்போ டிஸ்கஸ் பண்ணறான்னு பாச்சாவுக்கு ஆச்சர்யமா இருந்தது.. ஆடி காரைப் பத்திச் சொன்ன நாலாம் நம்பர் ஜெயஸ்ரீ அதோட விலையை பாட்டி கிட்டச் சொல்லியிருந்தா பாட்டி ஆடிப் போயிருப்பாங்கறது வேற விஷயம்..

ஒரு வாரம் இந்தக் குழப்பத்துலயே ஓடித்து.. இந்தக் காரைக் கொடுக்கறதுல பாச்சாவுக்கு இஷ்டம் இல்லை.. அதே சமயத்துல ரெண்டு லட்சம் செலவு பண்ணவும் தயக்கமா இருந்தது..

என்ன பண்ணலாம்னு யோசிச்சிண்டிருக்கிற போது போன் அடிச்சுது..

“கோதை டார்லிங் காலிங்”

பாச்சா கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு. திருச்சில இருக்கா.

உடனே போனை எடுத்து “ஹலோ” அப்படின்னான்..

கோதை தெளிவாப் பேசினா..

“இப்பத்தான் பாட்டியோட பேசிண்டிருந்தேன்.. புது கார் வாங்கப் போறேளாமே.. வாங்கறது தான் வாங்கறேள். எஸ்.யு.வி. மாதிரி கொஞ்சம் பெரிய காராவே வாங்கிடுங்கோ.. அப்பத் தான் கல்யாணத்துக்கு அப்புறம் நாம அடிக்கடி சென்னைலேர்ந்து திருச்சி போயிட்டு வர வசதியா இருக்கும்”

பாச்சாவுக்கு சிரிக்கறதா இல்லை அழறதான்னு தெரியலை.. தினம் காலம்பர காரைப் பார்த்து சுத்தம் செய்யற போதுலாம் அவன் மனசு கிடந்து அடிச்சிண்டது..

“ஐயோ.. என்னை விட்டுப் போயிடப் போறயா? வேண்டாமே.. நீயே இருந்துறேன்.. எனக்கு நீ போறுமே.. பெரிய கார்லாம் வேண்டாம்.. எனக்கு நீ தான் பாந்தமா இருக்கே..”

இப்படி நினைக்கிறவனுக்கு திடீர்னு கோபம் வரும்.

“உனக்கு சரியாத்தான் பேர் வெச்சிருக்கா.. மாருதின்னு.. மொதல்ல யார் கிட்டயோ இருந்தே.. அங்கேர்ந்து எங்கிட்டத் தாவி வந்தே.. இப்ப எங்கிட்டேர்ந்து வேற எங்கயோ தாவப் போறயா.. மொதல்ல உன் பேரை மாத்தணும்”

கோவில்ல கபாலீஸ்வரர் முன்னால நின்னுண்டு தன்னோட டிரேட் மார்க் “ஓம் நம: ஷிவாய” மந்திரத்தைச் சொல்லிட்டு மனசார வேண்டிண்டான் பாச்சா..

“கபாலீஸ்வரரே.. நான் என்ன உங்க கிட்ட அது வேணும் இது வேணும்னா கேட்கறேன்.. இருக்கறதை எடுத்துக்காதேங்கோன்னு சொல்றேன்.. இருக்கறதை தக்க வெக்க ஏதாவது வழி சொல்லுங்கோன்னு சொல்றேன்.. இப்படிக் காதுலயே போட்டுக்காம கம்னு இருந்தா எப்படி? இதப் பாருங்கோ.. உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன்.. அதுக்குள்ள இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது வழி சொல்லணும்.. இல்லை.. எனக்கு வேற வழி தெரியலை.. உங்க கோவில் முன்னால உட்கார்ந்து சத்தியாகிரகம் பண்ணப் போறேன்”

பேங்க்குல சீரியஸா வௌச்சர் பார்த்திண்டிருந்தான் பாச்சா..

“மச்சான் எப்படி இருக்கே?”

குரல் கேட்டு நிமிர்ந்தான்..

கார்மேகம்.. இப்ப தொண்டையார் பேட்டை பிராஞ்சுல இருக்கான்..

“மச்சான்.. இந்தப் பக்கமா ஒரு வேலையா வந்தேன்.. அப்படியே உன்னையும் பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்..”

உடனே பாச்சா கார்மேகத்தை வெளில கூட்டிண்டு வந்து ஒரு டீ வாங்கிக் கொடுத்து மாருதி விவகாரத்தைச் சொன்னான்.

“ஃப்பூ.. இவ்வளவு தானே? இதுக்கா டென்ஷன் படறே? நான் பார்த்துக்கறேன்.. உனக்கு வாட்ஸ் ஆப்புல ஒரு அட்ரஸ் அனுப்பறேன்.. வீனஸ் ஆட்டோ ரிப்பேர்ஸ்.. நான் சொல்லிடறேன்.. நாளைக்குக் காரை எடுத்திட்டு அங்க போ.. எல்லாம் அவன் பார்த்துப்பான்”

இதைக் கேட்ட உடனே சந்தோஷத்துல பாச்சாவுக்கு கார்மேகத்தைக் கட்டிப் பிடிச்சிக்கணும் போல இருந்தது.. ஆனா இப்ப ஊர்ல நிலமை சரியில்லை.. பார்க்கறவா “ஓ அவனா இவன்” அப்படின்னு நினைச்சுடக் கூடாதேங்கற தயக்கம்.. அதனால வாய் நிறைய திரும்பத் திரும்ப “தேங்ஸ்” சொன்னான்..

மறுநாளைக்கு ஆபீசுக்கு லீவு சொல்லிட்டு காரை எடுத்துண்டு கார்மேகம் சொன்ன வீனஸ் ஆட்டோ ரிப்பேர்ஸ் கடைக்குப் போனான் பாச்சா.. சேத்துப்பட்டுல ஒரு சின்ன சந்துக்குள்ள பெட்ரோல்/க்ரீஸ் வாடையோட இருந்தது..

வீனஸ் ஆட்டோ ரிப்பேர்ஸ் முதலாளி காரை ஸ்டார்ட் பண்ணிப் பார்த்தான்.. உள்ளயும் வெளிலயும் தட்டிக் கொட்டிப் பார்த்தான்.. ஏதோ வேண்டுதல் மாதிரி ரெண்டு மூணு தடவை காரை பிரதட்சணம் வந்தான்..

“ம்.. எஞ்சின், பாடிலாம் நல்லாதான் கீது.. அங்க இங்க டிங்கரிங் பண்ணி பெயிண்ட் பூசிட்டாப் போதும்.. கவலைப் படாதேம்மா.. காரை ஷோ ரூம் பீஸ் கணக்கா ஆக்கிடறேன்.. இத்தக் கண்ட உடனே இன்ஸ்பெக்டரு எப்.சி. கொடுத்துருவாரு”

பாச்சாவுக்கு ஒரே சந்தோஷம்..

“ரொம்ப தேங்ஸ்.. ஆமா இதுக்கு எவ்வளவு செலவு ஆகும்?”

“என்னா பெரீசா ஆவப் போவுது? அல்லாம் சேர்த்து ஒரு பத்து ரூபாக்குள்ள தான்..”

“பத்து ரூபான்னா?”

பாச்சா புரியாமக் கேட்டான்.

“பத்தாயிரம்பா..”

இதைக் கேட்டு பாச்சாவுக்கு அவனுக்குப் பிடிச்ச பாதுஷாவை டப்பாவோட விழுங்கின மாதிரி சந்தோஷம்..

“ரொம்ப தேங்ஸ்.. ரொம்ப தேங்க்ஸ்”

“வண்டிய விட்டுட்டுப் போ.. ஒரு வாரத்துல கூப்பிடறேன்.. வந்து எடுத்துக்கினு போவலாம்.. இப்ப அட்வான்சா ஒரு அஞ்சு ரூபா கொடுத்திட்டுப் போ.. அஞ்சுன்னா.. அஞ்சாயிரம்”

பணத்தை எண்ணிக் கொடுத்துட்டுக் கிளம்பின பாச்சா திடீர்னு ஞாபகம் வந்து கேட்டான்..

“ஆமா.. உங்க பேர் என்ன?”

அவன் சிரிச்சிண்டே சொன்னான்..

“கபாலி”

 

 

2 responses to “மாருதிய காப்பாத்தின கபாலி – எஸ் எல் நாணு

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.