நான் பணிபுரிந்து கொண்டிருந்த சிண்டிகேட் வங்கியில் நூதனமான வைப்பு நிதித் திட்டம் ஒன்று பல வருடங்களாக இருந்து வந்தது. வாடிக்கையாளர்களின் கடை அல்லது இல்லத்திற்கே சென்று தினசரி வசூல் செய்து சிறு சேமிப்பை ஊக்குவிப்பது அதன் நோக்கம். அந்த டெபாசிட்டுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதே நடைமுறையை வேறு சில பொதுத்துறை வங்கிகளும் பின்பற்றத் தொடங்கியிருந்தன.
வீடுகளுக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் தினமும் போய் பணம் பெறுவதெற்கென்றே அதிகாரபூர்வமான முகவர்கள் இருந்தனர்.
இந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் நான் சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெரிய கிளையில் அத்தகைய ஏஜென்ட்ஸ் ஆறு பேர் இருந்தனர். அனைவருமே முந்தின நாள் வசூல் செய்த தொகையை மறுதினம் காலையிலேயே வங்கியில் செலுத்திவிட்டுப் போய் விடுவார்கள்.
ஒரு நாள் மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு வாடிக்கையாளர் ஒருவர் தயங்கித் தயங்கி என்னிடம் வந்தார்.
“சார்.. அவரு இல்லீங்களா..” என்று மொட்டையாகக் கேட்டார், தலை நிறைய முடியுடன்.
“பிராஞ்ச்லே இவ்ளோ பேரு இருக்கோமே… இதுல யாருன்னு சொல்லுங்க… “ .
“இல்லை… தினமும் கடைக்கு வந்து வசூல் பண்ணுவாரே… அவரு…”
“டெய்லி டெபாசிட் ஏஜென்ட்டா… அவங்க மொத்தம் ஆறு பேர்.. எல்லாரும் கார்த்தாலையே பணத்தை கட்டிட்டு போயிட்டாங்க.. அதுல யாரைத் தேடி வந்திருக்கீங்க…”
“அவருக்கு நகம் நீளமா இருக்கும்..”
நான் சிரமப்பட்டு முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு “ஏன் சார்.. இதெல்லாம் ஒரு அடையாளமா.. மனுசங்க எல்லாருக்கும் அது இருக்கத்தானே செய்யும்..“ என்றேன்.
“இல்லிங்க.. அவருக்கு பத்து விரல்லயும் நகம் நீட்டம் நீட்டமா இருக்கும்…”
எங்கள் வங்கியின் எந்தச் சுற்றறிக்கையிலும் அந்த முகவர்களின் நகங்களைக் கூர்ந்து கவனிக்கும்படி எந்தவொரு அறிவுறுத்தலும் இல்லை. “ஏங்க.. ஒருவேளை அவரு நகத்தை வெட்டிட்டார்னா என்ன பண்ணுவீங்க.. அவரோட பேரை சொல்லுங்க சார்…” என்றேன்.
“அந்தத் தப்பை மட்டும் அவர் பண்ணவே மாட்டாருங்க… எத்தனையோ வருஷமா நான் அவரை பார்த்துட்டே இருக்கேன்..”
வீணை வாசிப்பவர்கள் தந்திக் கம்பிகளை மீட்டுவதற்கு ஏதுவாக நீளமான நகங்கள் வளர்ப்பதுண்டு. எங்கள் ஏஜென்ட்டுகளில் யாரும் எனக்குத் தெரிந்து வாத்திய வித்வான் இல்லை.
“வருஷக்கணக்கா அவர் கிட்ட பணம் கட்டறேன்னு சொல்றீங்க.. அவர் பேரைக் கேட்டு வெச்சுக்கலையா…”
“பேர்ல என்னங்க இருக்கு..” என்று ஷேக்ஸ்பியர்தனமாகக் கேட்டார் அந்த வாடிக்கையாளர். “ரொம்ப நம்பகமான ஆளு அவரு..” என்று அவர் சொன்னது ‘ரொம்ப நகமான ஆளு’ என்று என் காதில் விழுந்தது.
“வேற எதாவது அங்க அடையாளம் சொல்ல முடியுமா..”
“ஒரேயொரு நகத்துல மட்டும் ‘நெயில் பாலிஷ்’ போட்டிருப்பாருங்க..“
‘நாசமாப்போச்சு.. இந்த மனுஷன் நகத்தை விட்டு நகர மாட்டார் போலிருக்கே’ என்று நினைத்துக் கொண்டே “இல்ல சார்… அந்த ஏஜென்ட் எப்படி இருப்பார்.. குள்ளமா.. உயரமா.. அந்த மாதிரி ஏதாவது சொல்லுங்க…”
“தினமும் ‘டிவிஎஸ் சாம்ப்’ வண்டியில வருவாருங்க…”
அடுத்தத் துப்பு கிடைத்தும், அது துப்புக் கெட்டதாக இருந்தது. ஏனென்றால், ஆறு முகவர்களில் ஐந்து பேர் அந்த வாகனம் ஓட்டுபவர்கள்தான். இப்பொழுது பஞ்ச பாண்டவர்களில் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
“சரி.. அவரு தினமும் பணம் வசூல் பண்ணிட்டு.. சின்னதா பஸ் டிக்கெட் மாதிரி ரசீது குடுப்பாரே.. அதை வெச்சிருக்கீங்களா.. அதுல இருந்து உங்க அக்கவுன்ட் நம்பர் மூலமா அவரைக் கண்டுபிடிச்சுடலாம்…”
“அந்தக் குப்பையெல்லாம் கடையில இருக்குங்க.. கொண்டு வரலை..” என்றவர் தொடர்ந்து பேசினார். “அவரோட ‘மொபெட்ல’ முருகன் படம் ஒட்டியிருக்கும்.. அதுதான் அடையாளம்..”
இந்தப் பதிலால் ஐந்து பேரை நால்வராகக் குறைக்க முடிந்தது. காரணம், ஒரு முகவர் வேற்று மதத்தைச் சார்ந்தவர்.
“ரொம்ப நல்லது.. இப்ப.. அவரோட உடல்வாகு எப்படினு சொல்லுங்க.. குண்டா.. ஒல்லியா.. குள்ளமா.. உயரமா..”
“வளர்த்தியான ஆளு.. உடம்பை நல்லா கிண்ணுனு வெச்சிருப்பாருங்க..”
நான்கு முகவர்களையும் நான் மனக்கண்ணால் நினைத்துப் பார்த்தேன். ஒருவர் தும்மல் போட்டாலே பறந்து விடுவார் போல அவ்வளவு மெல்லினம். மற்றொருவர் சற்றே குட்டையாக இருப்பவர். அவர்களைப் பட்டியலில் இருந்து உடனே நீக்கினேன். மீதி இருவர் மட்டுமே. ‘இரண்டில் ஒன்று பார்த்து விடலாம்’ என்ற தீர்மானத்துடன் கஸ்டமரை அணுகினேன்.
“நாம நெருங்கி வந்துட்டோம்.. ரெண்டு பேர் தான் பாக்கி.. இதுல ஒருத்தர்தான் நீங்க தேடி வந்த ஆளு… இன்னும் ஏதாவது ‘க்ளூ’ குடுங்க.. கண்டுபிடிச்சுடலாம்..“
வாடிக்கையாளர் சுற்றுமுற்றும் பார்த்தார். ‘கோன் பனேகா க்ரோர்பதி’யில் கோடி ரூபாய்க்கான கடைசிக் கேள்வியின் விடைக்குக் காத்திருப்பதைப் போல உணர்ந்தேன். அந்தப் பின்னணி இசையும் எனக்கு மானசீகமாகக் கேட்டது. அவர் துாரத்தில் இருந்த வங்கியின் அறிவிப்புப் பலகையையும் எங்கள் சின்னத்தையும் கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தார்.
“நான் இதுவரைக்கும் நம்ம பேங்க் பக்கமே வந்ததில்லீங்க.. தினமும் அவர்கிட்ட பணம் கட்டறதோட சரி.. “
“அதனால என்ன.. அவரைப் பத்தி வேற ஏதாவது சொல்லுங்க.. கண்டுபிடிச்சுடலாம்… இறுதிக் கட்டத்துல இருக்கோம்..“ என்றேன் உற்சாகமாக.
“அவர் ‘உங்களுக்கு கடன் ஏதாவது வேணும்னாலும் கேளுங்க.. மேனேஜர் கிட்ட பேசி வாங்கிக் குடுக்கறேன்’னு சொன்னாருங்க… அந்த விஷயமாதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்….”
“அது சரி.. அவர் அடிக்கடி பயன்படுத்தற வார்த்தைகள் ஏதாவது ஞாபகமிருக்கா..”
“நம்ம கெனரா பேங்க் மாதிரி சீக்கிரமா லோன் வேற எங்கயும் கிடைக்காதுன்னு அப்பப்போ பெருமையா சொல்வாருங்க…”
நான் கெளதம புத்தர் போலச் சலனமற்ற தத்துவார்த்த நிலைக்கு என்னைத் தயார் செய்து கொண்டேன்.
“நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க… இது சிண்டிகேட் வங்கி…”
“அப்படிங்களா..” என்று மாயமாய் மறைந்து போனார் அவர்.

ஹா..ஹா…ஹா.. நல்ல நகைச்சுவை. சித்ரூபன் எனும் பெயருள் இருப்பவர் யார்!
LikeLike
பாராட்டுக்கு மிக்க நன்றி. என்னுடைய இயற்பெயர் ராமன். 1984 முதல் ‘சித்ரூபன்’ என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறேன். தமிழில் அனைத்து பிரபலமான வார, மாத இதழ்களிலும் எனது 43 கதைகளும், பயணக்கட்டுரையும், குறுநாவலும், நகைச்சுவைக் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. என் முதல் சிறுகதைத் தொகுப்பு “கடவுளைக் கொன்றவன்” சென்ற ஆண்டு வெளியாயிற்று. இந்த ‘குவிகம்’ மின்னிதழில் நான் எழுதிய “கைக்கிளை” என்ற கதை மார்ச் 2024 மாதம் வெளிவந்துள்ளது. நன்றி.
LikeLike
நகைச்சுவையுடன் கூடிய அருமையான கதை. நாட்டில் இப்படி நிறைய மனிதர்கள் குறிப்பாக கிராமங்களில் ,வெகுளித்தனமாக , இன்னமும் இருக்கிறார்கள் . எழுத்து நடை கண்முன்னே அந்த மனிதரை நிறுத்துகிறது. பொது மக்களுக்கு சேவை புரியும் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நிறைய பேர் இப்படி வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளை அடிக்கடி எழுதி வாசகர்களை மகிழ்விக்கவேண்டுகிறேன்.
LikeLike
பாராட்டுடன் கூடிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இதை நான் கதையாக எழுதவில்லை. நான்காண்டுகளுக்கு முன்பு என் முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவின் திருத்தப்பட்ட வடிவம் தான் இந்த நகைச்சுவைக் கட்டுரை.
LikeLike