குவிகம்

தமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்

இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல – ஈஸ்வர்

Police Control Room

 

 இன்டென்சிவ் கேர் யூனிட்டின் சாத்தப்பட்டிருந்த கதவையே , கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ரமணன். பக்கத்திலிருந்த அவன் தங்கை சுமி, தொணதொணத்துக்கொண்டிருந்தது அவன் கவலையை இன்னும் அதிகரித்தது.

“ஏன் அண்ணா? அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதில்லே?”

“ஆயிடக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கோ, சுமி. வேற என்ன செய்யறது இப்போ?”

“எனக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குறது அண்ணா..! எஸ்.டி.டி. போட்டுச் சொன்னவுடனே ப்ளேன்ல பறந்து வந்திருக்கே.”

“எமர்ஜென்சின்னு வந்தப்புறம் ரயிலுக்கு நிக்கமுடியுமா சுமி? ஷார்ட் பீர்யட்ல, பம்பாய் டு மெட்ராஸ் டிக்கெட் கெடைக்கறது, குதிரைக் கொம்பு .”

“இல்லேண்ணா .. இந்த ஆறு மாசத்துல அக்காவோட கல்யாணத்துக்குன்னே நீ கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபா பக்கம் டிராப்ட் எடுத்து அனுப்பிச்சிருக்கே.”

“இப்போ எதுக்கு அதெல்லாம்?”

“வர்ற சம்பளம் வாய்க்கும் கைக்குமே போறாம இருக்குப்பா. பம்பாய்ல எப்படித்தான் சமாளிக்கப் போறேனோன்னு தெரியலைன்னு , நீ அங்கே வேலைல சேர்ந்துட்டு, மொதல் மொறையா இங்க வந்தப்போ சொன்னே.”

“ ஆமா . . அது, அப்போ, பல வருஷத்துக்கு முன்னாடி.”

“ இப்போ, உன்கிட்டே எப்படி திடீர்னு இவ்வளவு பணம்?”

“ பம்பாய்க்குப் போனா , பிச்சைக்காரன்கூட , பணக்காரன் ஆயிடலாம். உழைக்கணும். வழிகளைத் தெரிஞ்சிக்கணும். அவ்வளவுதான். பம்பாய்ல , பணம் பண்ண எவ்வளவோ வழிங்க இருக்கு.”.

“இல்லேண்ணா..”

“இதோ பாரு..தொண தொணக்காதே . நீ சின்னப் பொண்ணு. ஐ.சி.யு. நர்ஸ் வரா பாரு. அப்பா எப்படி இருக்கார்னு, கேளு..”

மற்றவர்களுக்கு இல்லாத கவலை இவளுக்கு. ரமணனுக்கு அடிவயிறு இலேசாகக் கலங்கியது.

“மிஸ்டர் மேனன் …உங்க காஷியர் வர்றதுக்கு முன்னாடி, ஒரு சின்ன ஹெல்ப். கொலையான இந்த ரெண்டு கஸ்டமருங்களுடைய தற்போதைய பாங்க் பாலன்ஸ் நிலவரம், கடைசியா அவங்க கணக்குலேர்ந்து எப்பப்போ, எப்படி எப்படி பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கு, இந்த விவரங்கள் உடனடியா எங்களுக்கு வேணும்.”

“இது சட்டப்படி குற்றம் சார்…கோர்ட் கேட்டா மாத்திரமே ..”

“மிஸ்டர் மேனன். .கோர்ட்டும் கேக்கப்போறது.. ரெண்டு மர்டர். இது போலீஸ் என்கொயரி. . ஒத்துழைக்கலேன்னா..”

“ஓகே..” கொஞ்சம் எரிச்சலுடன் தன் மேஜை மேல் தயாராக இருக்கும் கம்ப்யூட்டரைத் தட்டினார் மேனன்.

கணிப்பொறிதான் இதற்கெல்லாம் தயாராக இருக்கிறதே. அதனிடம் யாராவது ஏதாவது கேட்கவேண்டும். அவ்வளவுதான். சரியாகக் கேட்டால், பதிலும் சரியாக இருக்கும். இப்பொழுது, அதனிடம் கேட்டது, மேனன்.

‘கேரள அம்மா கேஸ்ல , இப்போ பாலன்ஸ் ரூபா அஞ்சாயிரம்தான் இருக்கு. .அந்த பார்சி அம்மா கணக்குல இருபதாயிரம் இருக்கு..”

“எடுக்கப்பட்டது எப்போ ?”

“இதோ சொல்றேன். .” மேனன் இறந்து போன அந்தப் பெண்மணிகளின் கணக்கு வழக்குகளில் நுழைந்ததும் திடுக்கிட்டார்.

‘ சார், மொதல் நாள் ரெண்டு லட்சம். அடுத்த நாளே மூணு லட்சம்.அதாவது ரெண்டே நாட்கள்ல அஞ்சு லட்சம், கேரள அம்மா ஸெல்ப் செக் மூலமா எடுத்திருக்காங்க. போன மாசம் அந்தப் பார்சி அம்மா அடுத்தடுத்து ரெண்டே நாள்ல மூணு லட்சம், நாலு லட்சம் , ஏழு லட்சம் எடுத்திருக்காங்க.. அது ரெண்டும்கூட ஸெல்ஃப் செக் மூலமாத்தான்.”

“ அதாவது, அவங்களே அவங்க தேவைகளுக்கு பணம் எடுக்குறாப்போல. அப்படித்தானே ?”

“ஆமாம்”

“சரி, எடுக்கப்பட்ட தேதிகளைச் சொல்லுங்க.”

மேனன் கம்ப்யூட்டரைப் பார்த்துச் சொல்ல, அந்த நான்கு தேதிகளும் குறித்துக்கொள்ளப்படுகின்றன.

“இந்த ரெண்டுபேரும் பணம் எடுத்த அந்த நான்கு காசோலைகளையும் நாங்க உடனடியாப் பார்க்கணுமே ..”

“இல்லே..” … மேனன் தயங்கினார். டி.எஸ்.பி. மல்ஹோத்ரா பின்னால் இருக்கும் காவல்துறை ஆணையரைப்பார்த்தார். அவர் உடனடியாகத் தன் கையில் உள்ள கோப்பிலிருந்து, அரசாங்க முத்திரையுடன் கூடிய ஒரு கடிதத்தை, கூடவே போலீஸ் துறையின் ஓர் உத்தரவை அவரிடம் கொடுத்தார். அவை மேனனிடம் வந்தன.

“சீஷர் ஆர்டர். .. போலீஸ் என்கொயரிக்காகத் தேவைப்படும் எந்த ஆவணங்களையும், சட்டப்படி போலீஸ் பெற்றுக்கொள்ளும் உத்தரவு.”

விவரம் தெரிந்தவராக இருந்தாலும், வியர்த்தது மேனனுக்கு. உடனடியாக மணி அடித்து, தனக்கு அடுத்த நிலை மேலாளரை வரவழைத்தார் மேனன்.

நிலைமை விளக்கப்பட, அடுத்த சில நிமிடங்களில் அந்த நான்கு தேதி காசோலைகள், பெரிய பெரிய தின வவுச்சர்கள் கட்டுகளுடன் வந்தன. அந்தக் குறிப்பிட்ட , நான்கு, வெவ்வேறு தேதி காசோலைகள், தேடிக் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர், அவற்றை ஆராய்ந்தனர், மணியும், மல்ஹோத்ராவும்.

‘ Pay self.. ‘

முறையான காசோலைகள். எந்தவித அடித்தல் திருத்தல்களும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் முன்னும் பின்னும், முறைப்படி கைஎழுத்து இட்டிருக்க , பணம் வழங்கப்பட்டு இருந்தது. பார்சி பெண்மணி பணம் எடுத்த இரண்டு காசோலைகளின் பின்னால் அந்த அம்மையாரின் கையெழுத்துக்குப் பின்னால் ராம்லகன் சிங் எனக் கையெழுத்து இடப்பட்டு, C/O விலாசமாக அந்தக் காசோலைகளை விநியோகித்த பார்சிப் பெண்மணியின் விலாசமே இருந்தது.

அவ்வாறே, அந்தப் பாலக்காட்டுப்  பேமண்டை எடுத்த இரண்டு காசோலைகளிலும், பின்புறம், முறையாக, அந்த அம்மையாரின் கையெழுத்துக்குக் கீழே, நாணா என்று கையொப்பம் இடப்பட்டு, C/O –விலாசமாக அந்தப் பாலக்காட்டுப் பெண்மணியின் மகாலட்சுமி அபார்ட்மென்ட் விலாசமே குறிக்கப்பட்டு இருந்தது.

மல்ஹோத்ரா, மணியைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். பணம் பெற்றுக்கொண்டவர்களாகக் கையெழுத்து இட்டிருக்கும் இந்த ராம்லகான் சிங் யார்? யார் இந்த நாணா? மும்பையில் இவர்கள் எங்கிருக்கிறார்கள்..? இவர்கள் முறையாகப் பெற்ற அன்று, முறையே, இந்த இரு பெண்மணிகளும் கொலையானதன் காரணம்தான் என்ன..?

போலீசின் இந்தக் கேட்கப்படாத கேள்வியைப் பார்வையாலேயே புரிந்து கொண்ட சீனியர் மானேஜர் மேனனுக்கு ஏனோ நடுக்கம் வந்தது.

கேஷியர் சிவாஜிராவ் உள்ளே வந்தான். நடுத்தர உயரம். இலேசான தொந்தி. நெற்றியில் வட்டமான சின்ன குங்குமப் பொட்டு. நல்ல முறைப்பான முகம். முதலில் அறிமுகங்கள். விவரங்கள். மல்ஹோத்ரா அந்த நான்கு காசோலைகளையும் சிவாஜிராவிடம்  காண்பித்தார்.

“இந்த நாலு செக்குகளுக்கும் நீங்கதான் பணம் கொடுத்திருக்கீங்க, .. இல்லையா?”

ராவ் ஒரு கேள்விக்குறியுடன் அந்த நான்கு காசோலைகளையும் ஆராய்ந்தான்.

பணம் கொடுத்ததற்கான முத்திரைகள், கொடுக்கப்பட்ட டோக்கன்கள் , பணம் பட்டுவாடா விவரம், தன் கையொப்பம் இவற்றை, முறையே சரி பார்த்துக் கொண்டான்.

“ஆமாம். நான்தான் கொடுத்திருக்கேன்.”

“யாருக்குக் கொடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

“கஷ்டம். ஒரு நாளைக்கு நூறு இருநூறு பேருக்குக் கேஷ் குடுக்கிறேன். ஒவ்வொரு முகமும் நியாபகம் இருக்காது.”

“இது போலீஸ் என்கொயரி…!”

“சோ வாட்? . உண்மையைச் சொல்லித்தானே ஆகணும்?”

“என்ன மிஸ்டர் ராவ்,.? இவ்வளவு   ஹ்யூஜ் கேஷ் கொடுத்து இருக்கீங்க. . யாருக்குக் கொடுத்தோம்னு நியாபகம் இருக்காதா?”

“சார், இப்பல்லாம் ரெண்டு லட்சம் , மூணு லட்சம்னு சர்வ சாதாரணமா செக் மூலமா கஸ்டமர்ஸ் எடுக்கிறாங்க. பேரர் செக்கா வேற கொடுத்து அனுப்புறாங்க. பாங்கு கேஷியரை எல்லாம் என்ன செய்யச் சொல்றீங்க? ஒரு மாசத்துல நூறு பேமென்ட்டாவது இதுமாதிரி நாங்க பண்றோம்”, பேசிக்கொண்டே வந்த சிவாஜிராவ் சற்றே நிறுத்தினான். பாலக்காட்டுப் பெண்மணி கொடுத்த காசோலையை மறுமுறை பார்த்தான்.

“சார், இந்த நாணா .. கொஞ்சம் நினைவுக்கு வருது சார். முழுக்கையெழுத்தும் போடுன்னு சொன்னேன். முழுப் பெயரும் இதுதான்னு சொல்லி, கையெழுத்து மறுபடியும் போட்டான். ஆளும் கொஞ்சம் குள்ளமா, லேசா குண்டா, நெத்திலே ஒரு சந்தனப் பொட்டோட….’

‘அடையாளம் காட்டமுடியுமா?”

ராவ் யோசித்தான். . “சார் , எதுக்கும் எங்க யூனியன் லீடருங்களைக் கன்சல்ட் பண்ணிட்டுச் சொல்றேன் சார்.”

“கேஷியர், .. இது கொலைக் கேசு.. போலீஸ் என்கொயரி…ஒத்துழைக்க மறுக்காதீங்கன்னு….”

 “சார், பயமுறுத்தாதீங்க..எனக்கும் தெரியும். நான் ஒத்துழைக்க மறுக்கலியே.. எங்க யூனியன் லீடர்சைக் கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னேன்.”

இதற்குமேல் இவனிடம் எவ்வளவு கேட்டாலும் இதே பாட்டைத்தான் பாடுவான். பயந்தவன் அல்ல. இவன் பின்னால் சக்தி வாய்ந்த ஒரு தொழிற்சங்கம் இருக்கும். … எம்.பி அமைச்சர் என்று சங்கம் மூலம் போவான். ஒத்துழைப்புத்தர மறுத்தால்தான் போலீஸ் பாய முடியும்.

அவனைப் போக அனுமதிக்குமாறு மல்ஹோத்ராவுக்கு , மணி கண்ணசைவால் காட்டினான்.

 

“கேஷியரை இப்பொழுது விட்ருவோம். மாட்டேன்னு சொல்லலை. .அதுவரை ஓகே… இப்போ நாம் இன்னமும் நமக்குத் தேவையான, ஆனா தெரியாத சில விவரங்களைத் தேடுவோம்..”

மணியின் குரல் இப்பொழுது தீர்மானமாக இருந்தது.

“மிஸ்டர் மேனன்.. உங்க பாங்குல இப்போ எல்லா வேலையுமே கம்ப்யூட்டர் மயமாயிடிச்சு இல்லே?”

95% ஆயிருச்சுன்னே சொல்லலாம்..இன்னும் சில வேலையெல்லாம் மேனுவலாத்தான் செய்யறோம்.”

“ஒகே…! உங்க பாங்குல என்.ஆர்.ஐ கணக்குங்க அதிகமா இருக்கு, இல்லே?”

மேனன் முகத்தில் பெருமிதம்.. “ஆமாம் சார், ..குளோபல் லெவல்ல எங்க பாங்கை யாரும் இதுல பீட் பண்ணமுடியாது. கிழக்கு, மேற்குன்னு எல்லா கன்ட்ரிலயும் எங்க கிளைகள் உண்டு.”

“சோ, வெளி நாட்டுப் பணம் நிறையவே வரும், இல்லியா?”

“எக்கச்சக்கமா .. சராசரியா, மாசம், ரெண்டு, மூணு கோடி ரூபா..”

“அதுல உங்க கிளைக்கு மாத்திரம் ஆவரேஜா எவ்வளவு வரும்?”

“சராசரியா, மாசம் நாற்பது, ஐம்பது லட்சம்”.

“யார்கிட்டேர்ந்து, யாருக்கு, வரும்?”

“வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள், அவங்களுக்கு இங்கே இருக்கிற கணக்குக்கு அனுப்புவாங்க.  அத்தோட மாத்திரம் இல்லாம, இங்கே இருக்கிற அவங்க அப்பா, அம்மா, அண்ணன், தங்கைன்னு யாருக்காவது அனுப்புவாங்க.”.

“மிஸ்டர் மேனன், எங்களுக்குத் தெரியவேண்டியது எல்லாம் இதுதான், மாசா மாசம், யாருக்கு, எவ்வளவு பணம் வருதுன்னு தனியா உங்களால ஒரு லிஸ்ட் எடுத்துக் கொடுக்க முடியுமா?’

“என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க டி.எஸ்.பி. சார், இது இன்பர்மேஷன்  டெக்னாலஜி யுகம். என்ன மாதிரி லிஸ்ட் வேணும்னாலும் கிடைக்கும்.  கமாண்ட்ஸ்தான் தெரியணும். ஆனா அதெல்லாம் எனக்குத் தெரியாது.”

“அப்படின்னா?”

“ஒவ்வொரு லெவல்ல எங்களுக்கு வேண்டிய ஆப்பரேஷன் மாத்திரம்தான் எங்களுக்குத் தெரியும். மத்தப்படி இதுக்கெல்லாம் மண்டை முழுக்க கம்ப்யூட்டர்  சிந்தனையாவே இருக்கிற சில யங்ஸ்டர்ஸ்ஸ வச்சிருக்கோம்.”

மணி அடித்தார். வந்த ப்யூனிடம் விவரம் சொல்ல,

அடுத்த சில வினாடிகளில் முகம் மாத்திரம் இன்னமும் கம்பயூட்டர் திரையாக மாறாத , ஆனால் யோசித்துக்கொண்டே இருக்கும் முகத்துடன் ஓர் இளைஞன் வந்தான்,

“சார், இது ரமேஷ். கம்யூட்டர் இன் சார்ஜ். ரமேஷ், இது, போலீஸ் என்கொயரி.  நீதான் சொல்ல முடியும்.”

“ ரமேஷ், வெளி நாட்டிலேர்ந்து யார் யாருக்கு எப்பப்போ, எவ்வளவு பணம் வருதுன்னு எப்ப வேணும்னாலும் உங்களாலே லிஸ்ட் கொடுக்க முடியுமா?”

“முடியும்.”

“சரி, உங்களைத்தவிர வேற யாராவது ஸ்டாஃபுங்க அந்த மாதிரி லிஸ்ட் எடுக்கமுடியுமா?”

“இந்த மாதிரி ஜெனரல் ஸ்டேட்மென்ட் லிஸ்ட் எடுக்கறதெல்லாம் சாதாரண லெவல் ஃபங்ஷன். அதனால, பொதுவா எந்த கம்யூட்டர்லேர்ந்து யார் வேணும்னாலும் எடுக்கறமாதிரிதான் வச்சிருக்கோம்…”

“இந்த மாதிரி லிஸ்டைக் கடந்த ஒரு வருஷத்துல யாரு, எப்போ எடுத்திருக்காங்கன்னு சொல்ல முடியுமா?”

ரமேஷ், மேனன் அருகே உள்ள கணிப்பொறியிடம் போனான். ஏதோ பட்டன்களைக் கொஞ்ச நேரம் தட்டினான்.

கணிப்பொறி ஒரு பெயரைக் காட்டியது. மேனன் வெலவெலத்துப் போனார்.!

( சஸ்பென்ஸ் தொடரும் )

 
 
 
 
 
 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: