Daily Archives: February 17, 2018
நெடுங்காலக் காதல் கவிதைகள் சில – ( ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு) வைதீஸ்வரன்

நமது கவிதைகள் நெடுங்கால மரபு உடையது. இன்று கவிதைகள் எழுதுபவர்கள் இத்தகைய கவிதைச் சுரங்கத்தின் காலடி தூரம் சென்றுவந்தாலும் அவர்களுக்குள் சேரும் அனுபவச் செழுமை அவர்களுடைய படைப்புகளுக்கு வலிவான ஆதாரமாக இருக்கும்.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நாம் வாசிக்கிற பல தனிப் பாடல்கள் காலத்தை மீறியதாக எந்தக் காலத்துக்கும் அர்த்தமுள்ளதாக நவீனமாக தொனிக்கிறது.
இன்று நாம் வாசிக்கிற பல காதல் கவிதைகள் நுண்ணுர்வில்லாத கவிநயமில்லாத தட்டையான வார்த்தைகளாக ஒலிப்பதைப் பார்க்கிறோம்.
ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிற சில சமஸ்க்ருதக் காதல் கவிதைகள் எவ்வளவு நயத்துடன் வெளிப்படுகிறதென்று அறியும்போது நமக்கு அந்த உன்னதக் கவிஞர்கள் மீது பிரமிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றன.
இந்த வகையில் அநேக கவிதைகள் பர்த்ருஹரி அமரு ஹர்ஷா என்ற கவிஞர்களின் பெயரிலேயே காணக் கிடைக்கின்றன.
* * * * *
அவள் ”போதும் போதும் ”
என்று சொல்லியும்
முத்தத்துக்குள் சத்தம்
புதைந்து போய்……..
”ம்…ம்….ம்…ம்…ம்…ம்…ம்….
என்று கேட்டது அவனுக்கு
” இன்னும் இன்னும் ”
என்று அவன்
தப்பர்த்தம் செய்து கொண்டான்;
ஆசையுடன்..
– பர்த்ருஹரி
********
மதியே! எனது நண்பனே!
நிம்மதியிழந்து நீயும் தான்
இரவில் தூக்கமற்று அலைகிறாய்
பகலில் பசலையாகிப் போகிறாய்..
ஒரு வேளை எனைப் போல்
நீயும் அவளைத் தான் எண்ணிக்
கொண்டிருக்கிறாயா?
– பர்த்ரு ஹரி
***************
அந்த நிலவு
ஒவ்வொரு மாதமும்
உன் முகத்தைத் தான்
உருவாக்க நினைத்து
தோற்றுப் போகிறது…போலும்1
– பர்த்ரு ஹரி
****************
மஞ்சத்தில் சேர்ந்து படுத்துக்
கொண்ட போதும்.. இடையில்
மௌனம் இறுக்கமாக ஈரமற்றதாக…..
ஒரு வார்த்தை பேசவில்லை அவன்
அவளும் பேச மறுத்தாள்…..சில வினாடிகள்….
தவிர்த்தாலும் கடைக்கண்பார்வை
தன்வசமின்றி பின்னலிட்டுக் கொண்டன
ஊடல் பறந்தது ஒரு கணத்தில்
மூழ்கிக் கரைந்தது அவர்களின் தழுவல்
சிரிப்பின் பேரொலியில்.
– அமரு
***************
புது மலையாளம் காதல் வைரல் வீடியோ
“இந்த முகம் தானே ஆயிரக்கணக்கான கப்பல்களை ஓடவிட்டது?” என்று ஹோமரின் ஹெலன் பற்றி எழுதியதைப்போல
இந்தக் கண்ணசைவு மலையாள வீடியோ பிரியா பிரகாஷை உலக அளவு கொண்டுபோயிருக்கிறது.
எமபுரிப்பட்டணம் – (எஸ் எஸ் )
ராகுவாக மாறிய ஸ்வர்ண பானு மெல்லக் கண்விழித்துப்பார்த்தான். சூரியன் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் கண்களில் சூரியதேவனை விழுங்கும் வெறி தாண்டவமாடியது. வருடத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ கிடைக்கும் அபூர்வமான சந்தர்ப்பம். அந்த நாளுக்காகத்தான் அவன் காத்துக் கொண்டிருந்தான். அடுத்த ஆறு மாதத்திற்குத் தேவையான சக்தியை சூரியனிடமிருந்து கிரகித்துக் கொண்டுவிடுவான். மற்ற நாட்களில் அவனால் சூரியனை நெருங்கக்கூட முடியாது.
சூரியனை சில சமயங்களில்தான் அவனால் முழுவதும் விழுங்க இயலும். அப்போது அவனுக்குக் கிடைக்கும் சக்தி மிகவும் அபரிதமாக இருக்கும். சந்திரன் சூரியதேவனின் அருகாமையில் இருக்கும்போது அவனும் சூரியதேவனைப்போல பெரியவனாகக் காட்சி அளிப்பான். அப்போது பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் சூரியதேவனுக்குக் கொடுக்கும் சக்தியின் வீரியம் குறைந்து போகும். சந்திரனுக்கு எதிர்த் திசையில் இருக்கும் மற்ற தேவர்களுக்கு சூரியதேவனைக் காணவே முடியாது. ராகு கொண்டாட்டத்துடன் சூரியனை விழுங்குவான். மூன்றே முக்கால் நாழிகைக்குள் சூரியனை விழுங்கி அவன் சக்தியைக் கிரகித்துக்கொண்டு அவனை வெளியே விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் சூரியதேவன் விஸ்வரூபம் எடுத்து ராகுவை சுடு நெருப்பில் போட்டு வதைத்து விடுவான்.
பல சமயம் ராகுவிற்கு சூரியனை முழுவதும் விழுங்க முடியாது. அப்போதெல்லாம் சந்திரன் சற்று தூரத்தில் இருப்பான். அப்போது சூரியதேவனின் கைகளில் உள்ள கங்கணம் வரைதான் எட்டும். சில சமயங்களில் கால் வளையம் மட்டும்தான் கிடைக்கும். எப்படிக் கிடைத்தாலும் ராகு தனக்கு வேண்டிய சக்தியை முடிந்த அளவு எடுத்துக் கொள்வான்.
இன்று சந்திரன் சூரியதேவனுக்கு மிக அருகாமையில் இருக்கிறான். ராகு சூரிய தேவனை முழுவதாக விழுங்கலாம் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தான். ஆனால் சந்திரனுக்குப் பின்னால் ஒரு உருவம் நிற்பதை உணர்ந்தான். அது ஒரு பெண் என்றும் அவள்தான் சந்திரனைப் பிடித்துக்கொண்டு நிற்கிறாள் என்பதும் ராகுவிற்குப் புலனாயிற்று. ஆனால் அவள் முகத்தையோ உடம்பையோ பார்க்க முடியாத அளவிற்கு சூரியனின் கிரணங்கள் சந்திரனின் மீது பட்டுப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அந்த எதிரொளி மட்டும் இல்லாதிருந்தால் ஆடையில்லாமல் இருக்கும் ஸந்த்யாவை ராகு பார்த்துவிட்டான் என்றால் அவன் சூரியனை மறந்துவிட்டு அவளை விழுங்கச் சென்றிருப்பான்.
கண்ணைக் கூசும் அந்த ஒளி சற்று நேரத்தில் மறைந்துவிடும் என்பது ராகுவிற்குத் தெரியும்.அந்த நேரம் வரும்வரை தான் மறைவிடத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து சூரிய கிரணம் வராத ஒரு பொந்தின் உள்ளே சென்று தன்னை மறைத்துக் கொண்டான்.
ஸந்த்யா தன் கையில் உள்ள சந்திரக் கல்லை சூரியதேவனுக்கு நேராகப் பிடித்து அவன் தலையிலிருந்து கால்வரை சந்திரகாந்தச் சிகித்சை செய்யத்தொடங்கினாள். முதலில் ஒருவித வாசனைக் குழம்பை எடுத்து அவன் முகத்திலிருந்து கால்வரை மெதுவாக ஒத்திவிடுவது போலப் பூசினாள் . அவனுடைய அழகிய உடம்பைக் கைகளினால் தடவும்போது அவள் அடைந்த இன்ப வேதனைக்கு அளவே இல்லை. கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் சூரிய தேவனுக்கும் ஸந்த்யாவின் ஸ்பரிசம் ஆசை அலைகளை எழுப்பியது. காதல் வெள்ளம் பிரவாகமாகப் பொங்கி வரும்போல் இருந்தது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் தவித்தனர்.
இருப்பினும் இப்போது ஆசைக்குப் பலியாகிவிட்டால் ஸந்த்யா முழுதும் அழிந்து விடுவாள் என்ற எண்ணம் சூரியதேவனின் உணர்ச்சி வெள்ளத்துக்கு அணைபோட்டது. கண்களை இறுக்க மூடிக்கொண்டு நிஷ்டையில் ஆழ்ந்தான். ஸந்த்யா சந்திரகாந்தத்தைக்கொண்டு அவன் உடம்பு முழுவதும் சாணை பிடிப்பதுபோலத் தேய்க்க ஆரம்பித்தாள். சூரியதேவனுக்கு உடல் எல்லாம் எரிவதுபோல் இருந்தது. சில நாழிகைகள் அந்த சிகித்சை நீடித்தது. பல யுகம் கடப்பதுபோல் இருந்தது.
ஸந்த்யா காந்தச் சாணைக்குப் பிறகு மீண்டும் அவனுக்கு உடம்பு முழுவதும் சந்தன எண்ணையைத் தடவினாள். அதன் குளிர்ச்சி சூரியதேவனுக்குப் புதிய சுகானுபவத்தைக் கொடுத்தது. இனிமேல் தன்னால் ஸந்த்யாவிற்கு சுகமான காதல் தரமுடியும் என்பதை உணர்ந்து கொண்டான். ஸந்த்யாவிற்கும் அது நன்றாகப் புரிந்தது. அந்த ஆசையில் கையில் இருந்த சந்திரனைத் தவறவிட்டாள். சந்திரன் உருண்டுபோய் ராகு ஒளிந்து கொண்டிருந்த பொந்தை மூடினான். அந்த அதிர்ச்சியில் சூரியதேவன் கண்களில் கட்டியிருந்த திரைச் சீலையை உதறிவிட்டுக் கண்விழித்துப் பார்த்தான்.
அழகுத் தேவதையாக ஸந்த்யா அவன் அருகில் நின்று கொண்டிருந்தாள். தடாகத்தில் அவளுடன் கொண்ட காந்தர்வ காதல் நினைவுக்கு வந்தது. ஸந்த்யாவை நோக்கித் தன் கைகளை நீட்டினான். பூமாலை போல அவளும் அவன்மீது விழுந்தாள். அந்த காந்தப் படுக்கையில் இருவரும் இரும்பும் காந்தமும்போல ஒட்டிக் கொண்டனர். ஆசை அணை உடைந்தது. காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ராகுவிற்கும் சூரியனை விழுங்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
எமபுரிப்பட்டணம் பிராஜக்டுக்கு ஆதாரமானவன் சித்ரகுப்தன். எப்படியாவது இதை வெற்றிகரமாக முடித்தால் தனக்கு மட்டுமல்ல எம உலகத்துக்கே நல்லது என்று எண்ணினான். சிவபெருமானிடம் உத்தவு வாங்கி பிரும்மர் அறிவுரையால் நாரதா கம்யூனிகேஷன்ஸ் மூலமாக இந்த திட்டத்தைச் செயலாற்ற முனைந்தான்.
நாரதா கம்யூனிகேஷன்ஸ் தலைவர் நாரதர். சகலமும் அறிந்தவர். அவர் செல்லாத இடமே கிடையாது. அவர் அறிவுரைப்படிதான் இந்தத் திட்டமே நிறைவேறப்போகிறது. ஆனாலும் அவர் சுபாவம் வித்தியாசமானது. அவரால் வரும் அனர்த்தங்கள் சமாளிக்க முடியாதவைகளாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க அவரைவிட்டால் வேற ஆளே கிடையாது. அவருக்கு வைகுந்தம், கைலாசம் இரண்டு இடத்திலும் செல்வாக்கு உண்டு. பிரும்மாவின் பிள்ளை என்பதால் பிரும்ம லோகத்தில் அவர் வைத்ததுதான் சட்டம்.
அவர்தான் சிவா கன்சல்டிங்க் சர்வீசுக்கும், ராம் டெக்கிற்கும் சேர்த்து இந்த பிராஜக்டை வழங்கும்படி செய்தார்.
முதலில் தேவ உலகத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களைச் சேர்த்து ஒரு மீட்டிங் போட்டார். அதில் பிரும்மா, விஷ்ணு, சிவன், பிள்ளையார், முருகன், பார்வதி, சரஸ்வதி, லக்ஷ்மி, எமன், சித்ரகுப்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சித்ரகுப்தன் மனது திக் திக் என்று அடித்துக் கொள்ள நாரதர் கலகத்துடன் அந்த மீட்டிங்கைத் துவக்கினார்.
“இந்தப் பிரஜாக்டை முடிக்க தேவ உலகில் யாருமே இல்லை. அதனால் பூலோகத்திலிருந்து ஆட்களைக் கொண்டுவரவேண்டும் ” என்ற அவரது முதல் சொல் சபையில் பெரும் களேபரத்தை உண்டுபண்ணியது.
பிள்ளையார் எழுந்து ” மகாபாரதத்தையே எழுதியவன் நான். என்னால் இது முடியாதா என்ன? ” என்று கேட்டார்.
உடனே முருகனும் எழுந்து ” மன்னிக்கணும், நான் சிறுவன்தான். இருந்தாலும் அப்பாவிற்கே அறிவுரை கூறியவன். நான் இதை முடித்துத் தருகிறேன்” என்றார்.
பார்வதி ‘என்னடா இது, இந்த நாரதன் மாம்பழத்துக்குப் பதிலா புதுசா பிராஜக்டை வைத்துக் கலகத்தைத் துவக்கியிருக்கானே’ என்று கையைப் பிசைந்தாள்.
( தொடரும்)
படக்கவிதை
இந்தப் படத்துக்கு ஒருவரியில் ஒரு கவிதை எழுதி அனுப்புங்கள்! (editor@kuvikam.com)
சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிதை வரிக்கு Rs 100 / பரிசு அளிக்கப்படும்!!
இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல – ஈஸ்வர்
|
|
|
இன்டென்சிவ் கேர் யூனிட்டின் சாத்தப்பட்டிருந்த கதவையே , கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ரமணன். பக்கத்திலிருந்த அவன் தங்கை சுமி, தொணதொணத்துக்கொண்டிருந்தது அவன் கவலையை இன்னும் அதிகரித்தது.
“ஏன் அண்ணா? அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடாதில்லே?”
“ஆயிடக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கோ, சுமி. வேற என்ன செய்யறது இப்போ?”
“எனக்கு ஒண்ணும் புரியமாட்டேங்குறது அண்ணா..! எஸ்.டி.டி. போட்டுச் சொன்னவுடனே ப்ளேன்ல பறந்து வந்திருக்கே.”
“எமர்ஜென்சின்னு வந்தப்புறம் ரயிலுக்கு நிக்கமுடியுமா சுமி? ஷார்ட் பீர்யட்ல, பம்பாய் டு மெட்ராஸ் டிக்கெட் கெடைக்கறது, குதிரைக் கொம்பு .”
“இல்லேண்ணா .. இந்த ஆறு மாசத்துல அக்காவோட கல்யாணத்துக்குன்னே நீ கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபா பக்கம் டிராப்ட் எடுத்து அனுப்பிச்சிருக்கே.”
“இப்போ எதுக்கு அதெல்லாம்?”
“வர்ற சம்பளம் வாய்க்கும் கைக்குமே போறாம இருக்குப்பா. பம்பாய்ல எப்படித்தான் சமாளிக்கப் போறேனோன்னு தெரியலைன்னு , நீ அங்கே வேலைல சேர்ந்துட்டு, மொதல் மொறையா இங்க வந்தப்போ சொன்னே.”
“ ஆமா . . அது, அப்போ, பல வருஷத்துக்கு முன்னாடி.”
“ இப்போ, உன்கிட்டே எப்படி திடீர்னு இவ்வளவு பணம்?”
“ பம்பாய்க்குப் போனா , பிச்சைக்காரன்கூட , பணக்காரன் ஆயிடலாம். உழைக்கணும். வழிகளைத் தெரிஞ்சிக்கணும். அவ்வளவுதான். பம்பாய்ல , பணம் பண்ண எவ்வளவோ வழிங்க இருக்கு.”.
“இல்லேண்ணா..”
“இதோ பாரு..தொண தொணக்காதே . நீ சின்னப் பொண்ணு. ஐ.சி.யு. நர்ஸ் வரா பாரு. அப்பா எப்படி இருக்கார்னு, கேளு..”
மற்றவர்களுக்கு இல்லாத கவலை இவளுக்கு. ரமணனுக்கு அடிவயிறு இலேசாகக் கலங்கியது.
“மிஸ்டர் மேனன் …உங்க காஷியர் வர்றதுக்கு முன்னாடி, ஒரு சின்ன ஹெல்ப். கொலையான இந்த ரெண்டு கஸ்டமருங்களுடைய தற்போதைய பாங்க் பாலன்ஸ் நிலவரம், கடைசியா அவங்க கணக்குலேர்ந்து எப்பப்போ, எப்படி எப்படி பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கு, இந்த விவரங்கள் உடனடியா எங்களுக்கு வேணும்.”
“இது சட்டப்படி குற்றம் சார்…கோர்ட் கேட்டா மாத்திரமே ..”
“மிஸ்டர் மேனன். .கோர்ட்டும் கேக்கப்போறது.. ரெண்டு மர்டர். இது போலீஸ் என்கொயரி. . ஒத்துழைக்கலேன்னா..”
“ஓகே..” கொஞ்சம் எரிச்சலுடன் தன் மேஜை மேல் தயாராக இருக்கும் கம்ப்யூட்டரைத் தட்டினார் மேனன்.
கணிப்பொறிதான் இதற்கெல்லாம் தயாராக இருக்கிறதே. அதனிடம் யாராவது ஏதாவது கேட்கவேண்டும். அவ்வளவுதான். சரியாகக் கேட்டால், பதிலும் சரியாக இருக்கும். இப்பொழுது, அதனிடம் கேட்டது, மேனன்.
‘கேரள அம்மா கேஸ்ல , இப்போ பாலன்ஸ் ரூபா அஞ்சாயிரம்தான் இருக்கு. .அந்த பார்சி அம்மா கணக்குல இருபதாயிரம் இருக்கு..”
“எடுக்கப்பட்டது எப்போ ?”
“இதோ சொல்றேன். .” மேனன் இறந்து போன அந்தப் பெண்மணிகளின் கணக்கு வழக்குகளில் நுழைந்ததும் திடுக்கிட்டார்.
‘ சார், மொதல் நாள் ரெண்டு லட்சம். அடுத்த நாளே மூணு லட்சம்.அதாவது ரெண்டே நாட்கள்ல அஞ்சு லட்சம், கேரள அம்மா ஸெல்ப் செக் மூலமா எடுத்திருக்காங்க. போன மாசம் அந்தப் பார்சி அம்மா அடுத்தடுத்து ரெண்டே நாள்ல மூணு லட்சம், நாலு லட்சம் , ஏழு லட்சம் எடுத்திருக்காங்க.. அது ரெண்டும்கூட ஸெல்ஃப் செக் மூலமாத்தான்.”
“ அதாவது, அவங்களே அவங்க தேவைகளுக்கு பணம் எடுக்குறாப்போல. அப்படித்தானே ?”
“ஆமாம்”
“சரி, எடுக்கப்பட்ட தேதிகளைச் சொல்லுங்க.”
மேனன் கம்ப்யூட்டரைப் பார்த்துச் சொல்ல, அந்த நான்கு தேதிகளும் குறித்துக்கொள்ளப்படுகின்றன.
“இந்த ரெண்டுபேரும் பணம் எடுத்த அந்த நான்கு காசோலைகளையும் நாங்க உடனடியாப் பார்க்கணுமே ..”
“இல்லே..” … மேனன் தயங்கினார். டி.எஸ்.பி. மல்ஹோத்ரா பின்னால் இருக்கும் காவல்துறை ஆணையரைப்பார்த்தார். அவர் உடனடியாகத் தன் கையில் உள்ள கோப்பிலிருந்து, அரசாங்க முத்திரையுடன் கூடிய ஒரு கடிதத்தை, கூடவே போலீஸ் துறையின் ஓர் உத்தரவை அவரிடம் கொடுத்தார். அவை மேனனிடம் வந்தன.
“சீஷர் ஆர்டர். .. போலீஸ் என்கொயரிக்காகத் தேவைப்படும் எந்த ஆவணங்களையும், சட்டப்படி போலீஸ் பெற்றுக்கொள்ளும் உத்தரவு.”
விவரம் தெரிந்தவராக இருந்தாலும், வியர்த்தது மேனனுக்கு. உடனடியாக மணி அடித்து, தனக்கு அடுத்த நிலை மேலாளரை வரவழைத்தார் மேனன்.
நிலைமை விளக்கப்பட, அடுத்த சில நிமிடங்களில் அந்த நான்கு தேதி காசோலைகள், பெரிய பெரிய தின வவுச்சர்கள் கட்டுகளுடன் வந்தன. அந்தக் குறிப்பிட்ட , நான்கு, வெவ்வேறு தேதி காசோலைகள், தேடிக் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர், அவற்றை ஆராய்ந்தனர், மணியும், மல்ஹோத்ராவும்.
‘ Pay self.. ‘
முறையான காசோலைகள். எந்தவித அடித்தல் திருத்தல்களும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் முன்னும் பின்னும், முறைப்படி கைஎழுத்து இட்டிருக்க , பணம் வழங்கப்பட்டு இருந்தது. பார்சி பெண்மணி பணம் எடுத்த இரண்டு காசோலைகளின் பின்னால் அந்த அம்மையாரின் கையெழுத்துக்குப் பின்னால் ராம்லகன் சிங் எனக் கையெழுத்து இடப்பட்டு, C/O விலாசமாக அந்தக் காசோலைகளை விநியோகித்த பார்சிப் பெண்மணியின் விலாசமே இருந்தது.
அவ்வாறே, அந்தப் பாலக்காட்டுப் பேமண்டை எடுத்த இரண்டு காசோலைகளிலும், பின்புறம், முறையாக, அந்த அம்மையாரின் கையெழுத்துக்குக் கீழே, நாணா என்று கையொப்பம் இடப்பட்டு, C/O –விலாசமாக அந்தப் பாலக்காட்டுப் பெண்மணியின் மகாலட்சுமி அபார்ட்மென்ட் விலாசமே குறிக்கப்பட்டு இருந்தது.
மல்ஹோத்ரா, மணியைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். பணம் பெற்றுக்கொண்டவர்களாகக் கையெழுத்து இட்டிருக்கும் இந்த ராம்லகான் சிங் யார்? யார் இந்த நாணா? மும்பையில் இவர்கள் எங்கிருக்கிறார்கள்..? இவர்கள் முறையாகப் பெற்ற அன்று, முறையே, இந்த இரு பெண்மணிகளும் கொலையானதன் காரணம்தான் என்ன..?
போலீசின் இந்தக் கேட்கப்படாத கேள்வியைப் பார்வையாலேயே புரிந்து கொண்ட சீனியர் மானேஜர் மேனனுக்கு ஏனோ நடுக்கம் வந்தது.
கேஷியர் சிவாஜிராவ் உள்ளே வந்தான். நடுத்தர உயரம். இலேசான தொந்தி. நெற்றியில் வட்டமான சின்ன குங்குமப் பொட்டு. நல்ல முறைப்பான முகம். முதலில் அறிமுகங்கள். விவரங்கள். மல்ஹோத்ரா அந்த நான்கு காசோலைகளையும் சிவாஜிராவிடம் காண்பித்தார்.
“இந்த நாலு செக்குகளுக்கும் நீங்கதான் பணம் கொடுத்திருக்கீங்க, .. இல்லையா?”
ராவ் ஒரு கேள்விக்குறியுடன் அந்த நான்கு காசோலைகளையும் ஆராய்ந்தான்.
பணம் கொடுத்ததற்கான முத்திரைகள், கொடுக்கப்பட்ட டோக்கன்கள் , பணம் பட்டுவாடா விவரம், தன் கையொப்பம் இவற்றை, முறையே சரி பார்த்துக் கொண்டான்.
“ஆமாம். நான்தான் கொடுத்திருக்கேன்.”
“யாருக்குக் கொடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?”
“கஷ்டம். ஒரு நாளைக்கு நூறு இருநூறு பேருக்குக் கேஷ் குடுக்கிறேன். ஒவ்வொரு முகமும் நியாபகம் இருக்காது.”
“இது போலீஸ் என்கொயரி…!”
“சோ வாட்? . உண்மையைச் சொல்லித்தானே ஆகணும்?”
“என்ன மிஸ்டர் ராவ்,.? இவ்வளவு ஹ்யூஜ் கேஷ் கொடுத்து இருக்கீங்க. . யாருக்குக் கொடுத்தோம்னு நியாபகம் இருக்காதா?”
“சார், இப்பல்லாம் ரெண்டு லட்சம் , மூணு லட்சம்னு சர்வ சாதாரணமா செக் மூலமா கஸ்டமர்ஸ் எடுக்கிறாங்க. பேரர் செக்கா வேற கொடுத்து அனுப்புறாங்க. பாங்கு கேஷியரை எல்லாம் என்ன செய்யச் சொல்றீங்க? ஒரு மாசத்துல நூறு பேமென்ட்டாவது இதுமாதிரி நாங்க பண்றோம்”, பேசிக்கொண்டே வந்த சிவாஜிராவ் சற்றே நிறுத்தினான். பாலக்காட்டுப் பெண்மணி கொடுத்த காசோலையை மறுமுறை பார்த்தான்.
“சார், இந்த நாணா .. கொஞ்சம் நினைவுக்கு வருது சார். முழுக்கையெழுத்தும் போடுன்னு சொன்னேன். முழுப் பெயரும் இதுதான்னு சொல்லி, கையெழுத்து மறுபடியும் போட்டான். ஆளும் கொஞ்சம் குள்ளமா, லேசா குண்டா, நெத்திலே ஒரு சந்தனப் பொட்டோட….’
‘அடையாளம் காட்டமுடியுமா?”
ராவ் யோசித்தான். . “சார் , எதுக்கும் எங்க யூனியன் லீடருங்களைக் கன்சல்ட் பண்ணிட்டுச் சொல்றேன் சார்.”
“கேஷியர், .. இது கொலைக் கேசு.. போலீஸ் என்கொயரி…ஒத்துழைக்க மறுக்காதீங்கன்னு….”
“சார், பயமுறுத்தாதீங்க..எனக்கும் தெரியும். நான் ஒத்துழைக்க மறுக்கலியே.. எங்க யூனியன் லீடர்சைக் கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொன்னேன்.”
இதற்குமேல் இவனிடம் எவ்வளவு கேட்டாலும் இதே பாட்டைத்தான் பாடுவான். பயந்தவன் அல்ல. இவன் பின்னால் சக்தி வாய்ந்த ஒரு தொழிற்சங்கம் இருக்கும். … எம்.பி அமைச்சர் என்று சங்கம் மூலம் போவான். ஒத்துழைப்புத்தர மறுத்தால்தான் போலீஸ் பாய முடியும்.
அவனைப் போக அனுமதிக்குமாறு மல்ஹோத்ராவுக்கு , மணி கண்ணசைவால் காட்டினான்.
“கேஷியரை இப்பொழுது விட்ருவோம். மாட்டேன்னு சொல்லலை. .அதுவரை ஓகே… இப்போ நாம் இன்னமும் நமக்குத் தேவையான, ஆனா தெரியாத சில விவரங்களைத் தேடுவோம்..”
மணியின் குரல் இப்பொழுது தீர்மானமாக இருந்தது.
“மிஸ்டர் மேனன்.. உங்க பாங்குல இப்போ எல்லா வேலையுமே கம்ப்யூட்டர் மயமாயிடிச்சு இல்லே?”
95% ஆயிருச்சுன்னே சொல்லலாம்..இன்னும் சில வேலையெல்லாம் மேனுவலாத்தான் செய்யறோம்.”
“ஒகே…! உங்க பாங்குல என்.ஆர்.ஐ கணக்குங்க அதிகமா இருக்கு, இல்லே?”
மேனன் முகத்தில் பெருமிதம்.. “ஆமாம் சார், ..குளோபல் லெவல்ல எங்க பாங்கை யாரும் இதுல பீட் பண்ணமுடியாது. கிழக்கு, மேற்குன்னு எல்லா கன்ட்ரிலயும் எங்க கிளைகள் உண்டு.”
“சோ, வெளி நாட்டுப் பணம் நிறையவே வரும், இல்லியா?”
“எக்கச்சக்கமா .. சராசரியா, மாசம், ரெண்டு, மூணு கோடி ரூபா..”
“அதுல உங்க கிளைக்கு மாத்திரம் ஆவரேஜா எவ்வளவு வரும்?”
“சராசரியா, மாசம் நாற்பது, ஐம்பது லட்சம்”.
“யார்கிட்டேர்ந்து, யாருக்கு, வரும்?”
“வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள், அவங்களுக்கு இங்கே இருக்கிற கணக்குக்கு அனுப்புவாங்க. அத்தோட மாத்திரம் இல்லாம, இங்கே இருக்கிற அவங்க அப்பா, அம்மா, அண்ணன், தங்கைன்னு யாருக்காவது அனுப்புவாங்க.”.
“மிஸ்டர் மேனன், எங்களுக்குத் தெரியவேண்டியது எல்லாம் இதுதான், மாசா மாசம், யாருக்கு, எவ்வளவு பணம் வருதுன்னு தனியா உங்களால ஒரு லிஸ்ட் எடுத்துக் கொடுக்க முடியுமா?’
“என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க டி.எஸ்.பி. சார், இது இன்பர்மேஷன் டெக்னாலஜி யுகம். என்ன மாதிரி லிஸ்ட் வேணும்னாலும் கிடைக்கும். கமாண்ட்ஸ்தான் தெரியணும். ஆனா அதெல்லாம் எனக்குத் தெரியாது.”
“அப்படின்னா?”
“ஒவ்வொரு லெவல்ல எங்களுக்கு வேண்டிய ஆப்பரேஷன் மாத்திரம்தான் எங்களுக்குத் தெரியும். மத்தப்படி இதுக்கெல்லாம் மண்டை முழுக்க கம்ப்யூட்டர் சிந்தனையாவே இருக்கிற சில யங்ஸ்டர்ஸ்ஸ வச்சிருக்கோம்.”
மணி அடித்தார். வந்த ப்யூனிடம் விவரம் சொல்ல,
அடுத்த சில வினாடிகளில் முகம் மாத்திரம் இன்னமும் கம்பயூட்டர் திரையாக மாறாத , ஆனால் யோசித்துக்கொண்டே இருக்கும் முகத்துடன் ஓர் இளைஞன் வந்தான்,
“சார், இது ரமேஷ். கம்யூட்டர் இன் சார்ஜ். ரமேஷ், இது, போலீஸ் என்கொயரி. நீதான் சொல்ல முடியும்.”
“ ரமேஷ், வெளி நாட்டிலேர்ந்து யார் யாருக்கு எப்பப்போ, எவ்வளவு பணம் வருதுன்னு எப்ப வேணும்னாலும் உங்களாலே லிஸ்ட் கொடுக்க முடியுமா?”
“முடியும்.”
“சரி, உங்களைத்தவிர வேற யாராவது ஸ்டாஃபுங்க அந்த மாதிரி லிஸ்ட் எடுக்கமுடியுமா?”
“இந்த மாதிரி ஜெனரல் ஸ்டேட்மென்ட் லிஸ்ட் எடுக்கறதெல்லாம் சாதாரண லெவல் ஃபங்ஷன். அதனால, பொதுவா எந்த கம்யூட்டர்லேர்ந்து யார் வேணும்னாலும் எடுக்கறமாதிரிதான் வச்சிருக்கோம்…”
“இந்த மாதிரி லிஸ்டைக் கடந்த ஒரு வருஷத்துல யாரு, எப்போ எடுத்திருக்காங்கன்னு சொல்ல முடியுமா?”
ரமேஷ், மேனன் அருகே உள்ள கணிப்பொறியிடம் போனான். ஏதோ பட்டன்களைக் கொஞ்ச நேரம் தட்டினான்.
கணிப்பொறி ஒரு பெயரைக் காட்டியது. மேனன் வெலவெலத்துப் போனார்.!
( சஸ்பென்ஸ் தொடரும் )
ஒரு கோப்பையிலே என் குடி இறப்பு
ஒருவரிக் கவிதை !
ஒரு கோப்பையிலே என் குடி இறப்பு
தலைப்பு : சாக்ரடிஸ்
முகநூலில் வந்த முத்துச் செய்தி!

‘யார் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்க எடுத்துக் கொள்ளலாம். படித்து முடித்தவுடன், அங்கேயே வைத்துவிடவும். சென்னை வந்தவுடன் நாங்கள் சேகரித்துக் கொள்கிறோம்’ என்றார்கள்.
ஆச்சர்யமாக இருந்தது. 32 மணி நேரப் பயணத்தில் பயணிகள் தாங்கள் விரும்பிய புத்தகங்களைத் தேர்வு செய்து படித்துக்கொண்டு வந்தார்கள். சிலர் படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகங்களைப் பெற்றுவந்தார்கள்.
சென்னையை நெருங்கும்போது நான் அந்த இளைஞர்களிடம் சென்று பாராட்டுத் தெரிவித்தபடியே, ‘இந்த யோசனை எப்படி உருவானது?’ எனக் கேட்டேன்.
‘பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சோம். அதுல ஒருத்தர் இப்படி எழுதியிருந்தார். அதை நாங்க ட்ரை பண்றோம்’ என்றார்கள்.
‘என்ன எழுதியிருந்தார்?’ எனக் கேட்டேன்.
“ராஜஸ்தான்ல ஒட்டகத்துல கொண்டு போய் புக்ஸ் தர்ற மொபைல் லைப்ரரி இருக்கு. தாய்லாந்துல குக்கிராமங்களுக்கு யானையில கொண்டுபோய் புக்ஸ் கொடுக்கிறாங்க. நம்ம ஊர்ல லாங் ஜர்னி போற ட்ரெயின்ல தனியா ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏன் லைப்ரரி வைக்கக் கூடாதுனு எழுதியிருந்தார். அதைத்தான் நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தோம்” என்றார்கள்.
‘அந்தக் கட்டுரையை நான்தான் எழுதினேன்’ என அவர்களிடம் சொன்னேன்.
சந்தோஷத்தில் சிரித்தபடியே, ‘சாரி சார், உங்க பெயரை மறந்துட்டோம்’ என்றார்கள்.
எழுத்தில் உருவான ஒரு பொறி என் கண் முன்னே செயலாக மாறியிருந்தது சந்தோஷம் அளித்தது.
– எஸ்.ரா அவர்களின் “இந்திய வானம்” என்னும் புத்தகத்திலிருந்து
*
சரித்திரம் பேசுகிறது (18) – யாரோ
காளிதாசன்
காளிதாசன் என்ற தேன் பாண்டத்தைத் தொட்டுவிட்டோம்!
அதில் – காவியங்களென்ற தேன் கொட்டிக்கிடக்கிறது.
தேனை நக்காமல் விடலாமா?
காளிதாசன் கவிதையால் தீட்டிய சித்திரத்தை நாம் வசனப்படுத்திக் குறுக்கிக் கூற உள்ளோம்.
அந்தக் கவிதை நயத்தை நாம் கூற இயலாது. கதையையாவது கூறுவோமே!
காளிதாசன் எழுதியதை சிறு குறிப்புகளாக எழுதுவதுகூட காளிதாசனுக்கு நாம் செய்யும் சிறு காணிக்கைதானே!
சரி… கதைக்குப் போவோம்..
சாகுந்தலம்:
விசுவாமித்திரர்-சக்தி வாய்ந்த முனிவர்- ஆழ் தியானத்தில் இருந்தார்.
தேவர் தலைவன் இந்திரன்!
பயந்தான்.
’இந்த முனியின் பெருந்தவம் இவருக்குப் பெரும் பலத்தைக் கொடுத்தால் … ஐயோ .. அப்புறம் நம் கதி?’.
தேவ மங்கை மேனகாவிடம் சென்றான்.
“மேனகா! நீதான் சென்று முனிவருடைய தவத்தைக் கலைக்க வேண்டும்”
அவள் பயந்தாள்! ஆனால் தலைவன் சொல்லைத் தட்டலாகாதே! ஆனால் காமன் பாணங்களின் உதவி அவளுக்குத் தேவைப்படவில்லை. அவளது அழகு மட்டுமே போதுமாகவிருந்தது. பெண்ணழகு எப்பேர்ப்பட்ட சக்தி கொண்டது! மாமுனிவனும் பெண்ணுடன் இணைந்தான்! ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தனது தவம் கலைந்தது கண்டு கோபித்த முனிவன் தாய்-சேய் இருவரையும் மறுக்களித்தான்.
எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது!
மேனகை குழந்தையுடன் தான் இந்திர சபை செல்ல இயலாது என்பதை உணர்ந்தாள்.
கடமையா பாசமா!
கடமை வென்றது.
குழந்தையைக் கானகத்தில் விட்டுவிட்டு வானகம் சென்றாள். கண்வ மகரிஷி அங்கு வந்தார். சாகுந்தலப் பறவைகள் அந்த அழகிய குழந்தையைச் சுற்றி அமர்ந்து-தத்தித்தத்தி- உணவு ஊட்டும் விந்தைக்காட்சியைக் கண்டு அதிசயப்பட்டார். குழந்தைக்கு சாகுந்தலா என்று பெயரிட்டு – தானே வளர்த்தார். தாயைப்போல பிள்ளை! அவள் அழகு வளர்ந்தது- மிளிர்ந்தது!
அஸ்தினாபுர மன்னன் துஷ்யந்தன் மான் வேட்டைக்கு அந்தக் காட்டுக்கு வந்தான். சாகுந்தலையைக் கண்டான்! தோழிகளுடன் கிண்டலும் கும்மாளமுமாக ஆடித்திரிந்த சாகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டான்.
அவளும் அவனிடம் மனதைப் பறிகொடுத்தாள். காந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். இயற்கை அன்னை சாட்சியாக!
நாட்கள் இன்பகரமாகத் தொடர்ந்தது!
வசந்த காலம் அவர்கள் இன்பத்துக்குத் துணை நின்றது!
தென்றல் அவர்களுக்கிடையே புக முடியாமல் திணறி நின்றது!
சாகுந்தப் பறவைகள் பனியைச் சிறகில் தாங்கி சிலிர்த்தது.
காதலர்கள் மீது அந்தப் பனி – மலர் இதழ் போல் – பரவியது.
தேகங்கள் சிலிர்த்தன!
நாட்கள் அப்படியே உறைந்து போய்விடக்கூடாதா என்று இரு உள்ளங்கள் ஏங்கின!
(காளிதாசனை எண்ணும்போது நமக்கே இப்படி சில சில்லறைக் கற்பனைகள் தோன்றுகின்றனவே!)
காலச்சக்கரம் சுழலும்போது இன்பம் துன்பம் எல்லாமே முடிவுக்கு வருகிறது.
இன்பமும் துன்பமும் மீண்டும் தொடங்குகிறது.
அஸ்தினாபுர வீரர்கள் மன்னனைத் தேடிக் காட்டுக்கு வந்தனர். நாட்டில் அமைதி குலைந்திருப்பதைக் கூறி – மன்னன் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர். வேறு வழியில்லாமல்- துஷ்யந்தன் புறப்படத் துணிந்தான். “சாகுந்தலை! விரைவில் வந்து உன்னை அழைத்துச் செல்வேன்.எனது முத்திரை மோதிரம் உனது விரல்களில் இருக்கட்டும்”.
உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்!
கனத்த இதயங்கள் இரண்டு.. மீண்டும் ஒன்று சேரும் நாளுக்காக ஏங்கித்தவித்தது.
ஒரு நாள்..சாகுந்தலா ஆசிரம வாயிலில் பூ மேடையில் அமர்ந்திருந்தாள். மனதோ அலை மோதியது. துஷ்யந்தனுடன் ஆடிப்பாடித் திரிந்த நாட்கள் நெஞ்சில் தென்றலாக வீசியது..கண்கள் சொருகி..ஒரு மோன நிலையில் இருந்தாள். அப்போது அங்கு துர்வாசர் என்ற முனிவர் வந்திருந்தார். முன் கோபத்தில் முதல்வர்! அவளது பணிவிடை வேண்டி அவர் வந்திருந்தார். சாகுந்தலா தன்னிலை மறந்து.. துர்வாசரைக் கவனிக்கத் தவறினாள்.
முனிவர் முனிந்துவிட்டார்.
“நீ யாரை எண்ணி என்னை உதாசீனம் செய்தாயோ அவன் உன்னை மறந்து போகக் கடவது” – சபித்தார்.
சாகுந்தலா தன்னினைவு பெற்று முனிவரிடம் தன் கதையைக் கூறி மன்னிப்பு வேண்டினாள்.
கோபம் தணிந்த முனிவர் “சாகுந்தலை! அவன் உனக்குக் கொடுத்த கணையாழியைக் காணும்போது இழந்த நினைவுகளைத் திரும்பப்பெறுவான்” – என்றார்.
மாதங்கள் பல சென்றது..
வசந்தம் சென்றது… அவள் வாழ்விலிருந்தும் வசந்தம் சென்றது.
மன்னனையும் காணவில்லை.
கோடை வந்தது…
சாகுந்தலை சோகத்தில் இளைத்தாள்.
கண்வ மகரிஷி மகளைத் தேற்றினார்!
“நாளையே உன்னை நான் அஸ்தினாபுரத்து அரண்மனைக்கு அனுப்பிவைக்கிறேன்”
சாகுந்தலா அரண்மனை செல்லும் வழியில்.. தாகம் தாளாமல் .. ஓர் ஏரி ஒன்றில் நீர் எடுத்து அருந்தும் போது – முத்திரை மோதிரம் வழுக்கி விழுந்தது. அதை மீனொன்று விழுங்கியது. மோதிரம் தொலைந்ததை அறியாத சாகுந்தலா அரண்மனை சென்று துஷ்யந்தனைச் சந்திக்கிறாள்.
“யாரம்மா நீ?” – மன்னனின் இந்த சொற்கள் சாகுந்தலாவைத் தாக்கியது.
சாகுந்தலா தங்கள் இருவரது கதையைச் சொல்ல-மன்னனுக்கு ஒன்றும் நினைவு இல்லாமையால் அவளை மறுக்கிறான்.
சாகுந்தலா தன் மோதிரத்தைக் காட்டினால் மன்னனின் நினைவு திரும்பும் என்று எண்ணினாள்.
ஆனால் மோதிரத்தைக் காணவில்லை.
அவளுக்கு..மோதிரம் மட்டுமல்ல -வாழ்வின் அர்த்தத்தையே தொலைத்து விட்டது போலிருந்தது.
ஆம்.. மீண்டும் மீண்டும்…எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அநீதி நடந்தவண்ணமே உள்ளது.
வெறும் உடலுடன் காட்டிற்குத் திரும்பினாள்.
ஒரு நாள்.. ஒரு மீனவன் வலையில் சிக்கியது அந்த மீன்.
அதன் வயிற்றில் அரச மோதிரம்!
மீனவன் மோதிரத்தை மன்னனிடம் சேர்ப்பித்தான்.
துஷ்யந்தன் அந்த மோதிரத்தைக் கண்டான்.
நினைவலைகள் சூறாவளியாகத் தாக்கியது.
சாகுந்தலை… சாகுந்தலை…மனம் அனைத்தையும் அறிந்தது.
எங்கே அவள்… என்றே மனம்- ஆவலால் துடித்தது!
உடனே காட்டுக்குப் புறப்பட்டான்.
பிரிந்தவர் சேர்ந்தால் – பேசவும் வேண்டுமோ?
சாகுந்தலையுடன் இணைந்தான்.
மகன் பிறந்தான்.
பரதன் என்று பெயரிட்டான்.
வளர்ந்தபின் உலகை ஆள வந்தவன்.
அவனே பாரத நாட்டின் பெயருக்குக் காரணமானான்.
அடுத்து நாம் என்ன சித்திரங்களைக் காணப்போகிறோம்?
விரைவில் சந்திப்போம்!
காதலர் தினம்
பிப்ரவரி 14 – வாலன்டைன் தினம் என்று சொல்லப்படும் உலகக் காதலர் தினம்.
இது மாற்றுக் கலாசாரத்தின் திணிப்பு.. நமது கலாச்சாரத்துக்கு ஒத்துவராது என்றெல்லாம் கருத்துக் கணிப்புகள்.. கருத்துத் திணிப்புகள்..
காதல் இந்திய மண்ணின் பாரம்பரியம்.
காமசூத்ராவும், கஜுராவும், காளிதாசனும், காமத்துப்பாலும் இருக்கும் இந்தியாவில் காதலை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.
சிலப்பதிகாரத்தின் இந்திரவிழாதான் இன்றைய காதல் தினம்.
கொண்டாட விரும்புவர்கள் கொண்டாடுங்கள்!
மற்றவர்கள், சினிமாவில் டூயட் காட்சி வரும்போது தம் அடிக்கப் போவதுபோலப் போய் விடுங்கள்!
துடி துடிக்க வைக்கும் குறும் படம்
சமீப காலங்களில் வாட்ஸ் அப்பில் பிரபலமான குறும்படம்..
மனதைத் துடிக்க வைக்கும் காவியம்
பாருங்கள்
ராஜநட்பு (8) – ஜெய் சீதாராமன்
கோவிலில் ஒரு சம்பவம்
‘அதெப்படி மேற்கண்ட வரலாற்றை ராஜநட்பு மூலம் உலகிற்கு நேரிலேயே பார்த்ததுபோல் எழுதியிருக்கிறிர்கள்?’ என்ற வினா உங்கள் மனதில் எழும்பலாம். அதற்கான விளக்கத்தைக் கொடுப்பது என் கடமையாகிறது.
நான் பிறந்து, வளர்ந்து, படித்து, பெரிய குடும்பத்தில் வசித்து வேலைக்காக மும்பாய் செல்லும்வரை இருந்தது தஞ்சையில்தான். உறவினர்களும் மற்றோரும் எங்கள் வீட்டிற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் தஞ்சை பெரியகோவிலுக்கும், அரண்மனைக்கும் கொண்டுபோய் காண்பிக்கும் பொறுப்பை நான்தான் ஏற்றிருந்தேன். கோவிலை சுற்றும் சமயம் அந்த விவரமில்லா தொப்பி அணிந்தவரின் மர்மத்தைப்பற்றி சுமார் ஆயிரம் தடவையாவது அவர்களிடம் விவரித்திருப்பேன். இப்படியாகத் தொப்பி அணிந்தவர் என் ஆழ் மனதில் நிரந்தரமாகத் தங்கி விட்டார்.
வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியை வெளிநாட்டில் கழித்துவிட்டுத் தாய்நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டேன். வந்தபின் அடிக்கடி நான் பிறந்து வளர்ந்த தஞ்சைக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். முக்கியமாகப் பெரியகோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் நேரம் தெரியாமல் அமர்ந்து என் மனதில் ஆழமாய் பதிந்திருந்த அந்த மர்மநபரை உற்றுப்பார்த்தபடியே அதன் உண்மையை மனதில் ஆராய முயலுவேன். நாளுக்கு நாள் அந்த ஆர்வம் தீவிரமடைந்தது.
அன்றொருநாள், கோவிலின் முன் இருக்கும் சாலையின் கிழக்குப்பக்கத்திலிருந்து மேற்குபக்கத்திற்குக் கடந்து கோவிலைச் சென்றடையக் காத்திருந்தேன். அன்றோ வழக்கத்தைவிட எக்கச்சக்கமான ட்ராபிஃக். வெகுநேரம் காத்திருக்க நேர்ந்துவிட்டது. பக்கத்தில் ஒரு பெண்மணி கையில் ஒரு கைக்குழந்தையுடனும் ஒரு துறுதுறுப்பான சுமார் 3 வயதான பையயுடனும் என்னைப்போலவே காத்திருந்தாள். ஒரு கை பையனுடைய கரத்தைப் பற்றியிருந்தது. அழும் கைக்குழந்தையைக் கவனிக்கப் பையனின் கரத்தை ஒரு கணம் விடுவித்தாள்.
அய்யோ! இது என்ன? பையன் விர்ரென்று ரோடில் இறங்கி ரோட்டின் மறுபக்கத்திற்குப் போகத்தொடங்கிவிட்டானே! முக்கால்வாசி கடந்து விட்டான். ஒரு லாரி வேகமாக வந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். மின்னல் வேகத்தில் பறந்து சென்று பையனைக் கைப்பற்றி அணைத்தவாறே சாலையின் மறுபக்கத்தில் மல்லாக்க சாய்ந்தேன். லாரி பயங்கரமாய் லாக்கான டயரின் கிரீச் சத்தத்தோடு சிறிது தள்ளிப்போய் நின்றது. ட்ரைவர் கீழே குதித்து ஓடிவந்தான். ஒரு கூட்டமே கூடிவிட்டது. பையனின் தாய் அலறிக்கொண்டே ஓடிவந்தாள். படுத்தவாறே பையனை அவளிடம் நீட்டினேன். பையனைப்பற்றிய தாய் அவன் முழுமையாகக் காப்பாற்றப்பட்டதை அறிந்தாள். ‘அய்யா, உங்கள் உயிரைப் பணயம் வைத்து என் மகனைக் காப்பாற்றினீர்களே, உங்களுக்கு எவ்வாறு கைமாறு செய்யப்போகிறேன்?’ என்று உணர்ச்சிவசப்பட்டு மிகவும் பணிவுடன் என்னை நோக்கியவாறே கூறினாள். எல்லோரும் என் துணிச்சலைப் பாராட்டினர்.
எனக்கோ எவ்வாறு இதை சாதித்தோம் என்று புரியவில்லை. ட்ரைவர், “ஸார் உங்களுக்கு ஏதேனும் அடி பட்டிருக்கிறதா?” என்று கேட்டார். எழுந்து உட்கார்ந்து கையிலும் முதுகிலும் ஏற்பட்ட சிராய்ப்புகளைக் காண்பித்தேன். அவர் ஓடிச்சென்று லாரியிலிருந்து ஃபர்ஸ்ட் ஐட் பாக்ஸை எடுத்துவந்து போரிக் பௌடரில் தண்ணீர்விட்டு க்ளீன் செய்து டிங்க்சர் போட்டு இரு இடத்திலும் ப்ளாஸ்டர் போட்டார். கூட்டம் லாரி ட்ரைவர் உள்பட கலைந்தது. தாயும் குழந்தைகளுடன் கோவிலுள் சென்றாள்.
(அடுத்த இதழில் முடியும்)
சுஜாதாவின் சிறுகதை குறும்படம் வடிவில்
நல்லா இருக்கா?
கலாஷேத்ராவின் கண்ணப்பர் குறவஞ்சி
குறவஞ்சியைப் பற்றி நண்பர் நடராஜன் எழுதியதைப் படித்ததும் பார்த்த நாட்டிய நாடகம் கண்ணப்பர் குறவஞ்சி
குவிகம் இலக்கிய இல்லம்
எமது நெடுநாள் கனவு ஒன்று நனவாகியது!
இணையாசிரியர் கிருபாநந்தன் அவர்களின் கருணையால்!
“குவிகம் இலக்கிய இல்லம்”
சென்னை தி நகர் தணிகாசலம் சாலையில் சில்வர் பார்க் என்ற குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் ஆறாம் இலக்கம் கொண்ட இல்லத்தில் பிப்ரவ்ரி 11 ஞாயிறு அன்று துவக்கப்பட்டது.
வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் ஏராளம்!
இதன் நோக்கம் செயல்பாடுகள் குறித்து நாங்கள் தயாரித்த வெள்ளை அறிக்கையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு: (உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்)