விதி அனைவருக்கும் பொதுவானது. விதியை மதியால் வெல்லலாம் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இந்த விதி மதியால் வெல்லக்கூடியது என்ற ஒரு விதி இருந்தால்தான் அதை வெல்ல முடியும். சூரியன் உதிப்பது விதி . அந்தச் சூரியனையே பார்த்து நீ தோன்றாமல் போகக்கடவாய் என்று ஒருபெண் உத்தரவு பிறப்பிக்கமுடியும் என்றால் அது விதிக்கு உட்பட்ட செயலா? விதியை மீறிய செயலா?
சந்தியா சூரியனின் வெப்பத்தில் துடிக்கவேண்டும் என்பது விதியானால் அதை மாற்ற விஷ்வகர்மா என்ன மும்மூர்த்திகளாலும் முடியாது. ஆனாலும் மதியின் செயலே தனி. விதிக்கு உட்பட்டும் நடக்கும். விதியை மீறியும் நடக்கும். மதிக்கு பெரும்பாலும் விதியை மீறவேண்டும் என்ற தீராத ஆசை உண்டு.
விஷ்வகர்மா மாமதி படைத்தவர். புத்தியே சகல சக்தி என்பதை முழுதும் நம்புகின்றவர். அதைப் பல இடங்களில் நிரூபிக்கவும் செய்தவர். அதனால்தான் தான் மதியை நம்பி எப்படியாவது தன்மகளுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைக்கவேண்டும் என்பதில் துடியாக இருப்பவர்.
சூரியதேவனின் வெப்பம் தரும் ஒளியை விலக்கி அதன் மூலம் ஆயுதங்கள் செய்தால் அவனுடைய ஒளி குறையும். அதனால் வெப்பத்தைத் தணிக்க ஒரு நுண்ணறிவுடன் கூடிய ஊடகத்தை அவரால் படைக்க முடிந்தது. எல்லாவற்றிற்கும் ஒரு வரம்பு இருக்குமல்லவா? பூஜ்யம் முதல் எல்லையற்றதுவரை செயல்படும் கருவி இந்தப் பிரபஞ்சத்தில் யாராலும் படைக்கமுடியாது.
சூரியனை ராகு விழுங்கும்போது அவனுடைய ஒளிக்கதிரின் வீச்சு குறையும். ஆனால் ராகு தன்னைபிடிக்கும்படி ஒரு விதியை பிரும்மர் படைத்துவிட்டாரே என்பதில் அவனுக்குத் தாங்கமுடியாத கோபம் வரும். ராகுவின் பிடியில் சிக்கி மூன்றே முக்கால் நாழிகை கழித்து வெளியே வரும் சூரியனின் வெப்பம் வெகு அதிகமாக இருக்கும். அது தேவர்களை அதிகம் பாதிப்பதில்லை. மனிதர்கள் அதன் கொடுமையில் துடிப்பதுண்டு. பிறக்கும்போதே குறைபாட்டுடன் பிறந்த சந்தியாவால் அதைத் தாங்கும் சக்தி கொஞ்சமும் கிடையாது. சென்ற முறை செய்த காந்த சிகிச்சையின் போது ராகு பீடித்தாலும் அதன்பிறகு செய்த சாந்துக்குளியல் போன்றவற்றால் அவனுடைய அதீத வெப்பம் கட்டுக்குள் இறந்தது. சந்தியாவிற்கும் அதனால் அதிக பாதிப்பில்லை. அதனால்தான் அவள் அவனைத் தொடர்ந்து வரமுடிந்தது. அவனுடன் சூரியமண்டலத்திலிருந்து அவனுடன் உறவு கொள்ளவும் முடிந்தது. அதன் விளைவாக மூன்று குழந்தைகளுக்கும் தாயாக முடிந்தது.
ஆனால் குழந்தை பிறந்தபிறகு அவளுடைய சக்தி மேலும் குறைந்துவிட்டது.
தற்சமயம் சூரியனுடைய ஓளியிலிருந்து ஆயுதங்கள் செய்தபிறகு அதுவும் அந்த ஊடகம் படைத்த பிறகு சந்தியாவும் சூரியனும் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்றனர்.
தினமும் சூரியதேவன் தான் அரண்மனைக்கு வரும்போது ஒளி வடிவம் கொண்டு அந்தக் கதவின் வழி வருவான். அவனுடைய அழகும் ஆற்றலும் குறையாமல் வெப்பம் மட்டும் குறைந்திருப்பதைக் கண்டு சந்தியா மகிழ்ச்சியில் திளைத்தாள்.
ஒரு மாத காலம்தான் இந்த மகிழ்ச்சி நீடித்தது.
சூரியனை ராகு பிடிக்கும் அந்த நாள் வந்தது.
அன்றைக்குத்தான் சூரியன் உலாவிற்குச் சென்றிருக்கும்போது பிரும்மரின் ஆணைப்படி சூரியமண்டலத்திலிருந்து திரிசூல ஆயுதத்தை எடுத்துச் செல்ல நந்தி தேவர் வந்தார்.
சந்தியா சூரியதேவன் இன்னும் சற்றுநேரத்தில் வந்து தனக்கு அளிக்கப்போகும் இன்பக்களிப்பை எண்ணி தன்னை மறந்து இருந்தாள். நந்தி தேவருக்குத் தர வேண்டிய மரியாதையைத் தரவில்லை. சற்று அலட்சியமாகவே திரிசூல ஆயுதத்தை எடுத்துச் செல்லும் படியும் கூறினாள் .
நந்திதேவர் ஓரளவு இதை எதிர்பார்த்திருந்தார். பிரும்மர் உத்தரவுப்படி திரிசூல ஆயுதத்தை எடுத்துச் செல்லும் போது அங்கிருந்த மாயா ஊடகத்தைக் கவனித்தார். அதில் திரிசூலத்தின் மூன்று முனைகளும் பதியுமாறு அழுத்தி எடுத்தார். ஊடகத்தில் கண்ணீர்க்குத் தெரியாத மூன்று நுண்ணிய துவாரங்கள் ஏற்பட்டன. அதன் நுண்ணறிவும் செயல் இழந்தது.
அன்றுதான் சூரியதேவன் ராகுவின் பிடியிலிருந்து மீண்டு அதிக கோபத்துடனும் தாபத்துடனும் சந்தியாவின் அறைக்குள் நுழைந்தான்.
சந்தியாவும் குழந்தைகளையெல்லாம் உறங்க வைத்து விட்டு காதல் தாபத்தில் அவனுடன் இறுக்கக் கலந்தாள் .
அடுத்தநாள் வரை அவர்களது இன்பக்காதல் தொடர்ந்தது.
சூரிய தேவன் புறப்பட்டுச் சென்று போன பிறகுதான் அவளுக்கு ஏதோ தவறு நடந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள்.
அவள் உடல் வெப்பத்தில் எரிந்து உருகி வழிவதை உணர்ந்தாள்.
ஊடகத்தில் இருக்கும் நுண்ணிய துவாரங்களையும் கண்டாள்.
கதவிற்குக் கேடு வந்தால் அதைச் சரிப்படுத்தவே முடியாது என்ற தன் தந்தை கூறியது அவள் காதில் நாராசமாக ஒலித்தது.
சூரியதேவனுடன் தான் வாழும் வாழ்க்கைக்கு இறுதி மணி அடிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட அவளது கண்களில் கண்ணீர் பெருகியது. அதுவும் ஆவியாவதை உணர்ந்தாள்.
தன் விதி வேறு மாதிரி எழுதப்பட்டுவிட்டது என்பதை அவளின் மதி அறிந்து கொண்டது.
தன் தந்தையாலும் எதுவும் செய்யமுடியாது என்ற உண்மை அவளுக்கு நிதர்சனமாகத் தெரிந்தது.
இனி சூரியதேவனுடன் தான் இருக்க முடியாது என்ற எண்ணம் உடல் வெப்பத்தைவிட அதிகமாகச் சுட்டது.
தான் முழுதும் உருக்கிக் கரைந்து விடுவோமோ என்று பயந்தாள்.
அதற்கு ஒரே வழி இருந்தது.
அவளுக்கென்று விஷ்வகர்மாவால் அமைக்கப்பட்ட காட்டிற்குச் செல்லவேண்டும். சூரியனின் கிரணங்களே படாத கானகம் அது.
அங்கே உள்ள பொற்றாமறைக் குளத்தில் முழுகி இருக்கவேண்டும். ஆயிரம் ஆண்டுகள் அதிலிருந்தால்தான் அவளது உருக்கத் தொடங்கிய அவளது உடல் உருகுவதை நிறுத்தும் !
தனக்கு வேறு வழியில்லை. உடனே புறப்படவேண்டும்.
புறப்பட்டாள்.
குழந்தைகள் மூன்றும் ஒரே சமயத்தில் அழும் குரல் கேட்டது .
குழந்தைகளை அங்கு அழைத்தும் செல்லமுடியாது . சூரிய ஒளியின்றி அவை மாண்டு விடும்.
என்னசெய்வது என்று புரியாமல் பாசத்தினாலும் உருகித் தவித்தாள் சந்த்யா!
(தொடரும்)
இரண்டாம் பகுதி
நான்முகன் நான்கு முகங்கள் மூலமாக ஒரேசமயத்தில் பேசியது கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு வித்தியாசமாக இருந்தது. சரஸ்வதிதேவி மட்டும் தான் ஒன்று சொன்னால் இவர் ஒன்று சொல்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருந்தார். சத்தியலோகம் போன பிறகு தகறாறு வரத்தான் செய்யும் என்றும் எண்ணிக்கொண்டார். அதற்காக அவர் வருந்தவில்லை. தான் கல்விக்குஅதிபதி. தனக்குச் சரி என்று தோன்றும் கருத்தை சொல்லவேண்டும். மாற்றிச் சொல்லுதல் படித்தவருக்கு அழகல்ல என்பதில் உறுதியாக இருப்பவர்.
படித்தவன் பொய் சொன்னால் ஐயோன்னு போவான் என்று பாரதியை எழுத வைத்ததே அவர்தானே!
அடுத்து லக்ஷ்மிதேவி பேச எழுந்தார். பயங்கர கைதட்டல் பேச ஆரம்பிக்க முன்னாடியே. செல்வத்திற்கு அதிபதி அல்லவா? ஜால்ரா சத்தம் அதிகமாகவே கேட்டது.
எனக்கு சரஸ்வதிதேவி மாதிரி புள்ளி வைத்துப் பேசத்தெரியாது. பிரும்மர் மாதிரி பொடி வைத்தும் பேச வராது. என் கருத்து என்னவென்று தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். சொல்லவேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
என் கணவர் எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொன்றிலும் சிலவற்றைப் படைத்திருக்கிறார். சிலவற்றைக் காத்திருக்கிறார். சிலவற்றை அழித்தும் இருக்கிறார். எது எப்படியிருந்தாலும் அவரது முக்கியப் பணி காத்தல் தான்.
அதுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்பது என் கருத்து.
வாழ்க்கை என்கிற வியாபாரத்தில் ஜனனம் என்பது வரவாகும். மரணம் என்பது செலவாகும். ஜனன மரண தத்துவத்தில் உடல் ஆக்கப்படுகிறது. உடல் அழிக்கப்படுகிறது. இந்த ஜனனம் மரணம் இரண்டுக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கை. அதில் வாழ உடலைப் பாதுகாத்தல் அவசியம்.
இன்னொன்று சொல்வேன். ஒரு காசு மாலையை எடுத்துக் கொள்ளுங்கள் ! எந்த இடத்தில் அதன் மதிப்பு தெரியவருகிறது? தங்கத்தை உருக்கி அந்த மாலையை ஆக்கும் போதா? அல்லது அது பழசாகிவிட்டது என்று அதனை உருக்கி மீண்டும் தங்கக் கட்டியாக மாற்றும் இடத்திலா? அல்லது கழுத்தில் அணிந்து அழகு பார்க்கும் இடத்திலா? அழகை வெளியே கொண்டுவருவது- அழகை அதிகரிப்பது இன்னும் சொல்லப்போனால் அழகைக் காப்பது அந்த காசு மாலை. அந்த வகையில் அழகுக்கு அழகு சேர்ப்பது காத்தல்தான்.
ஒரு குட்டி கதை சொல்றேன். ஒரு ராஜா தனக்குப் பின்னாடி தன் மூன்று பிள்ளைகளிலே பட்டத்து அடுத்த வாரிசு யார் என்பதைக் கண்டுகொள்ள ஒரு யோசனை செய்தாராம். தன் நாட்டுக்கு ஒரு நல்ல தலை நகரை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தயாரிக்கும்படி மூன்று பேரிடமும் கூறினாராம்.
முதல் மைந்தன் அமராபதி போன்ற புதிய நகரை புது இடத்தில் உருவாக்கும் திட்டத்தைக் கூறினான்.
இரண்டாம் மைந்தன் இருக்கும் தலை நகரை அழித்துவிட்டு புதிதாக மூன்று தலை நகர்களை உருவாக்கும் திட்டத்தைத் தீட்டினான்.
மூன்றாம் மைந்தனோ , ” தந்தையே ! தற்போது இருக்கும் தலை நகரையே நன்கு பராமரித்தால் அதுவே போதுமே ! எதற்காக புதிய நகரை நிர்மாணிக்கும் செலவை மக்கள் தலையில் போடவேண்டும்? ” என்று வினவினான்.
மூன்றாம் மைந்தன் அடுத்த வாரிசானான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இதற்கு மேலும் காத்தல்தான் சிறந்தது என்பதை நான் சொல்ல வேண்டுமா? நீங்களே சொல்வீர்கள்! சொல்வீர்களா? ” என்று கூட்டத்தைப் பார்த்து இலட்சுமி தேவி இரு விரலைக் காட்டவும் , மக்களில் சிலர் ‘காக்கக் காக்க’ என்றும் சிலர் காக்கா காக்கா என்றும் கத்தினர்.
அந்தக் கத்தலுக்கு நடுவே புன்னகையுடன் மகாவிஷ்ணு பேச ஆரம்பித்தார்.
(தொடரும்)