Daily Archives: July 15, 2020
சரித்திரம் பேசுகிறது – யாரோ
ஆதி சங்கரர்
நாம் காலப்பிரமானவாரியாகக் கதை சொல்லி வரும் பொழுது..
ஒரு சில உலக நாயகர்களுடைய காலம் எந்தக் காலம் என்று குழம்புகிறோம்!
அவர்களை எந்தக் காலக் கட்டத்தில் சேர்ப்பது?
அந்தக் குழப்பத்தால்.. அவர்களைப் பற்றி எழுதாமல் போக நேரிடுமோ?
இந்த அச்சம் நம்மைத் தாக்குவதால்..
இந்த நாயகரைப் பற்றி எழுதுவோம்.
இன்றே!
இப்பொழுதே..
அது சரி..
யாரவர்?
ஞான சூரியன்..
தத்துவ ஞானி..
வேதாந்த வித்தகர்..
ஹிந்து மதத்தின் மாபெரும் சிற்பி..
சொல்லிக்கொண்டே போகலாம்..
ஆதி சங்கரர்..
நமது நாயகர்.
இவரைப் பற்றி எழுத..
இவரைப் பற்றி மிகவும் ஆராய்ந்திருக்கும் இலக்கியவாதி
‘அசோக் சுப்பிரமணியம்’ இந்த இதழை எழுதிச் சிறப்பித்துள்ளார்:
அவர் இன்று – ஆதி சங்கரரது காலத்தை நிர்ணயம் சொல்வது குறித்து எழுதுகிறார்.
இனி அசோக்கின் வார்த்தைகள்:
—————————————————————————————————————————————————–
ஆதி சங்கரர் எந்தக் காலம்?
கி.மு.வா? கி.பி.யா?
சரித்திரத்தில் சாதித்தவர்களை விடவும், சரித்திரமே இதுதான் என்று சாதிப்பவர்களைத்தான் இப்போது உலகம் நம்பிக்கொண்டிருக்கிறது.
நம் சரித்திர முன்னோர்கள், கல்வெட்டுக்களைச் செதுக்கியபோதும்..
தாமிரப் பட்டயங்களை எழுதியபோதும், பெரிய பெரிய கோவில்களைக் கட்டியபோதும், முதுமக்கட் தாழிகளைப் புதைத்துவைத்தபோதும்..
பின்னால் அகழ்வாராய்ச்சி செய்து நம்மைப் பற்றிக் கதைகள் புனைவார்கள்…(புருடா என்றாலும் சரியே) – சரித்திரத்தின் பக்கங்களில் நம்பெயர்களை உலவ விடுவார்கள் என்றோ, அல்லது இதையே ஒரு தொழிலாகச் செய்வார்கள் என்றோ நினைத்திருக்க மாட்டார்கள்..
அட..கதை எழுதுபவர்களாவது பரவாயில்லை.. தொலையட்டும்.. ஆனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் என்று ஒரு இனம் இருக்கிறதே.. இவர்களைப் பற்றி எந்த சரித்திரத்தில் எழுத.! பலரும் புருடாவிலேயே முனைவர் பட்டம் பெற்றவர்கள்..
மூளைச் சலவையிலும் முனைவர் பட்டம் வேறு (இலவச இணைப்பாக)..
அது கிடக்கட்டும் விடுங்கள்.
அத்வைதம் என்ற சொல்லுக்கான பொருள் தெரியுமா..?
நானே சொல்லிவிடுகிறேன்..
”இரண்டில்லாது”
அதாவது ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டும் மாயையால்தான் இரண்டாகத் தோன்றுகின்றன என்பதே அது!
வாஸ்தவத்தில் இரண்டுமே ஒன்றுதான்..
இந்த மனுசனாகிய ஜீவாத்மாவுக்குத்தான் கடவுளாகிய பரமாத்மாவும், தானும் வேறு வேறு என்கிற நினைப்பு.. அதுவே ஒரு பெரிய கனவாகிய மாயைதான்..
என்ன க்ரிஸ்டோபார் நோலனுடைய “இன்ஸெப்ஷன்” பட லெவலுக்கு இருக்கிறதே என்று நினைப்பீர்கள்..
ஆனால் பாருங்க!
கற்பனையே கற்பனைக்கு இடம் தரும் என்று சொல்வது போல..
இதனால் விசிஷ்டாத்வைதம், த்வைதம் அப்படீன்னு மேலும் சித்தாந்தங்கள்…
( தலை கிறுகிறுத்தால்.. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. மேலே தொடரவும்).
அத்வைதம் என்னும், இன்னுங்கூட பலராலும் முழுவதுமாக விளங்கிக்கொள்ள முடியாதத் தத்துவச் சிகரத்தைக் கொடுத்தவர்தான்..
ஆதி சங்கரர்..
திருவிளையாடல் பட தருமி கணக்காக, சுரத்தே இல்லாமல்…
“ஆமா. அதுக்கென்ன, இப்போ..?” என்று கேட்காமல் மேலே படிக்கவும்.
இந்தியத் தத்துவ மரபின் தந்தை அப்படிஎன்று எங்கே பெருமை வந்துவிடுமோ என்று பயந்து. அவரை சரித்திரத்தின் பின்பங்கங்களுக்குத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள் – மேலை நாட்டு, குறிப்பாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள்..
அதுல அவங்களுக்கென்னய்யா ஆதாயம்னு நீங்க நினைக்கலாம்.. கேட்கலாம்..
இருக்கே.!
மதத்தை ஒரு கட்சியைப் போல் வளர்ப்பவர்களுக்கு, பாரதத்தில் அநாதிகாலமாக இருந்துவருவதாகக் கூறப்படும் ஸனாதன மதமும், இதிகாச, புராணங்களும் அவற்றின் தொன்மையும் இடைஞ்சல்தானே?
வியாபாரத்திற்குக் குந்தகம்தானே ?.
அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்.
அவர்களின் ஆராய்ச்சி உள்நோக்கமுடையது என்பது அதிகபட்சமாக வைத்துக்கொண்டாலும். குறைந்தபட்சம் தங்களை உயர்ந்த இனமாகவும்,
ஏற்கனவே நாகரீகமில்லாத காட்டுமிராண்டிகள் என்று நம்மை அடிமைப் படுத்தியதை.. நியாயப்படுத்துவதற்காகவது அது பயனாகுமல்லவா?
சரி.. ஆதி சங்கரர் பிறந்த காலத்துக்கு வருவோம்.
பொதுவாக மேற்கத்தியர்களின் ஆராய்ச்சிபடி கி.பி 788-820 என்பதை அவரது காலமாகக் கணிக்கிறார்கள்.
அதற்குச் சான்றாக அவர்கள் நமது சரித்திர நேரக்கோட்டையே நேர்கோடாக இல்லாமல் கோணல் கோடாக்கியது வேறுகதை.
கல்ஹணர் என்னும் காஷ்மீரக் கவி எழுதிய “ராஜ தரங்கிணி” என்கிற நூலிலும்..
நேபாள ராஜவமிசாவளி நூலிலும், இலங்கையில் தொகுக்கப்பட்ட பௌத்த “மஹாவம்ஸ”, நூலிலும் ஜைன நூல்களின் கொடுக்கப்பட்டிருக்கும் சில மேற்கோள்களிலும்படி.. மஹாபாரதக் காலத்திற்குப் பின் வந்த ராஜ வமிசத் தகவல்கள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.
ஆனால் பொதுவாக எல்லா சங்கர மடங்களிலும், உள்ள குருபரம்பரை வரிசைகள்படி..
அவர் பிறந்தது கலியில் 2593-லிருந்து 2625 வரை என்று தெரிகிறது..
அதாவது கி.மு. 509-477.
இது புத்தர் காலமாகிய கி.மு. 563-483க்கு அருகிலேயே வந்துவிடுகிறது.
அதாவது புத்தரின் 54 வயதிலே சங்கரர் பிறந்து புத்தர் மஹாபரி நிர்வாணம் அடைந்து 5 ஆண்டுகளுக்குப் பின் மறைந்ததாகக் கணக்கு வருகிறது.
இன்னொரு கணக்குப்படி புத்தரே சங்கரரின் மறைவுக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே பிறந்து ( கி.மு. 480), கி.மு 400-களில் மறைந்ததாக சொல்லப்படுகிறது.
மகாவீரரோ கி.மு. 599-527 அல்லது கி.மு. 540- 468 என்கிறது சரித்திர ஆராய்ச்சி!
இவர் 72 ஆண்டுகள் வாழ்ந்ததாக கணக்கு.
ஆக புத்தர் , மஹாவீரர் மறைந்து 18 வருடங்களுக்கு அப்புறமோ அல்லது சங்கரர் வாழ்ந்த காலத்திலோ வாழ்ந்திருக்க வேண்டும்..
சங்கரர் சமண மதக்கொள்கைகளையும், புத்தமதக் கொள்கைகளையும் கண்டனம் செய்திருந்தால். அது அவர்களுடைய மறைவுக்குப் பிறகே இருந்திருக்க முடியும்.
இல்லையென்றால் மண்டனமிசிரரோடு வாதம் புரிந்தார்போல், அவர்களோடேயே அவர் வாதம் புரிந்திருக்கமுடியுமே!
இதையெல்லாம் வைத்து சங்கரரை ரொம்பவும் பின்னாடி (ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பின்னால்) கொண்டுவந்துவிட்டால் ஆராய்ச்சி முடிவுற்றதாக ஆகிவிடுமா?
அங்கும் பல ஓட்டைகள்!
கேட்கவேண்டிய.. ஆனால் கேட்கப்படாத கேள்விகள் இருக்கின்றனவே?
மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களும், ஓரியண்டலிஸ்டுகளும் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அவர்கள் காட்டும் சந்திரகுப்த மௌரியனின் தொடங்கி மேலும், கீழுமாக அரச வமிசங்களை நிர்ணயித்து.. பல கேள்விகளுக்கு பதில் தேடாமலேயே, சொல்லாமலேயே அரைகுறையாக ஆராய்ச்சி செய்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அவர்கள் லிஸ்ட் – செல்யூகஸ் நிகேடரை மையமாக வைத்து..
புத்த/ஜீனர்களின் சரித்திரங்களை ஒட்டி சந்திரகுப்த மௌரியன், பாஹ்யான், ஹுவான் சுவாங், காளிதாஸர் காலம், பூர்ணவர்மன் என்று ஏதோ ஊர் பேர் தெரியாத மன்னன் என்று எல்லாவற்றையும் அவர்கள் வசதிக்கேற்ப பின்னும் முன்னும் தள்ளி ..
நம்பத்தகுந்தமாதிரியான கதைப்புனைவை சரித்திர ஆராய்ச்சி என்னும் பெயரில் முன்வைக்கிறது..
அவர்களே சொல்லும் 788-820 காலக் கட்டத்தில்..
காஞ்சியிலே பல்லவ நந்திவர்மன் 2க்குப் பிறகு வந்த தந்திவர்மன் ஆண்டிருக்கிறான்.
அதே காலகட்டத்தில் சோழர்களின் மறுமலர்ச்சி விஜயாலய சோழனிலிருந்து (848-891) தொடங்குமுன். பாண்டிய நெடுஞ்சடையன்/வரகுணவர்மன் (765-815) ஆண்டிருக்கிறான்.
சேர நாட்டின் சரித்திரமே ஏறக்குறைய 6-8 நூற்றாண்டுகளில் காணப்படவில்லை.
குலசேகர வர்மாக்கள் எட்டாவது நூற்றாண்டிலிருந்து வரும்வரை. சோழர்கள், பாண்டியர்கள் என்று இவர்கள் வசம்தான் கேரளா/சேரநாடு இருந்திருக்கிறது.
தென்னிந்தியாவில் ஒரு இளந்துறவி பிறந்து. புயலாகப் புறப்பட்டு,
பத்ரிநாத், கேதாரநாத், காஷ்மீர், துவாரகா, பூரி, காஞ்சி, திருச்செந்தூர், கன்னியாகுமரிவரைக்கும். பாதயாத்திரையாகவே சென்று, பலரை வாதங்களில் தோற்கடித்தார் என்றால்..அவரைப் பற்றிய சமகால மன்னர்களோடு தொடர்புடைய சரித்திரங்கள் எங்குமே காணாமல் போய்விடுமா?
அவரே கூட அதே காலத்தவராக அவருக்குச் சிறிது காலத்துக்கு முன்பே இருந்திருக்கக் கூடிய.. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பரஞ்சோதியார் போன்றோரைப் பற்றிகூட சிறிதளவும் கேள்விப்படாமலா இருந்திருப்பார்?
குறிப்பிடாமல் இருந்திருப்பாரா? அவருக்குப் பின்வந்த கியாதி பெற்ற சோழ, பாண்டியர்கள் கூடவா அவற்றைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்?
அது சரி! எத்தனையோ பேர் தெரியாத மதங்களையெல்லாம் கண்டனம் பண்ணிய ஆதிசங்கரர்..கிறிஸ்து பிறந்து முதலாம் நூற்றாண்டிலேயே அவரது சொந்த நாட்டிலேயே வேறூன்றத் தொடங்கிவிட்ட கிறிஸ்துவ மதத்தை ..
விட்டுவைத்திருப்பாரா?
620 களிலேயே கேரளாவிலேயே சேரமான் பெருமாள் அரசர் ஒருவர் மெக்காவுக்கே சென்று .நபிகள் நாயகத்தைப் பார்த்து, மதம் மாறி, பின்பு கேரளாவுக்குத் திரும்பி..
சேரமான் ஜும்மா மசூதியைக் கட்டி இஸ்லாத்தை கேரளாவுக்குக்கொண்டு வந்துவிட்டாரே. அவருக்குப் பின்னாளில் வந்த சங்கரர், அதைக் கேள்விப்பட்டு, கை கட்டிக் கொண்டிருந்திருப்பாரா?
வாதுக்கு அழைத்து ஒரு கை பார்த்திருக்கமாட்டார்?
அதுவும் அந்த அரசர் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கா நல்லூர் தாலுக்காவிலே இருந்துகொண்டு ஆண்டவர்! காலடிக்கு வெகு சமீபம்!
காஞ்சிப்பெரியவர் “சங்கரரின் கால நிர்ணயம்” என்கிற தலைப்பிலே 26 அத்தியாயங்களில் அடுக்கடுக்காக வைத்திருக்கிற கேள்விகளும், வாதங்களும் பல முக்கியமான கேள்விகளை வைக்கின்றனவே!
ஏன் அவற்றையெல்லாம் இந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை?
வட இந்திய சரித்திரங்களை வக்கணையாக எழுதியவர்கள்..
தென்னகச் சரித்திரங்களுக்கு அவ்வளவாக மெனக்கெடாததேன்.. ?
ஏன்.. ஏன்.. ஏன் என்று கேட்க எத்தனையோ கேள்விகள் இருந்தாலும்..
அத்வதைக் கட்சிக்காரர்களே, இதில் த்வைதிகளாகப் பிளவுபட்டு..
தாங்கள் சார்ந்த மடமே உயர்ந்தது என்று நிற்கிறார்களே..
அதை எங்கே போய் முட்டிக்கொள்வது?
இந்திய சரித்திரத்தை சமகால வட இந்திய தென்னிந்திய ஆட்சியாளர்கள், சமய நெறியாளர்கள்.. இலக்கிய, நீதிநெறி, பக்தி இலக்கியங்கள் இவற்றின் துணைக்கொண்டு, நடுநிலை நோக்கோடு யார் ஆராயப்போகிறார்கள்?
அயோத்தியில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களே இல்லையென்று சொன்னவர்கலல்லவா அவர்கள் .
என்னப்பா! ஏதோ பெரிசாக ஆரம்பித்துவிட்டு, கடைசியில் ஆராச்சிக்கான சான்றுகளைக் கூறாமால் நீயும் ஒரு புதுக்கதையைச் சொல்லிவிட்டுப் போகிறாயே!
பொசுக்கென்று மங்களம் பாடிவிட்டாயே என்று கேட்பவர்களுக்கு.:
ஐயா! இது போன்ற பலவிஷயங்களை கிரகித்துக்கொண்டு.. எல்லாவற்றையும் ஒப்பு நோக்கி.. இப்படி இருந்திருக்கலாமா, அப்படி இருந்திருக்கலாமா என்று அலசிவிட்டு..
இப்படியும் இருந்திருக்கலாம் என்று ஒரு அதிவினய ஹேஷ்யமாகவே முடிக்கவேண்டும்..
உறுதியாகச் சொல்ல.. எனக்குத்தான் சரித்திர ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டம் உள்ளதா?
கேள்விகளைக் கேளுங்கள்..
பதில்களைத் தேடுங்கள்..
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு முடிவு செய்யுங்கள்!
அல்லது முழித்துக்கொண்டே இருங்கள்!
*************************************************************************************************************************************
அசோக்கின் வரிகள் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’. இல்லை (அவர் கோவித்துக்கொள்ளப் போகிறார்.
(அத்வைதத்தின் படி .. ‘துண்டு’ ஒன்று தானோ)
ஜோக்ஸ் அபார்ட்!
அவரது வார்த்தைகள் பட்டவர்த்தனமாக .. பல கேள்விகளை எழுப்புகிறது..
கேள்விகளால் ஓரு வேள்வியை செய்கிறார்!
‘கேள்வி பிறந்தது இன்று .. நல்ல பதில் கிடைப்பது என்று? – என்று தோன்றுகிறது.
அசோக்கின் எழுத்துக்கு நன்றி.
இந்தப் பீடிகைக்குப் பிறகு , சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி இன்னும் எழுதத் துடிக்கிறது..
அரசியின் ஜனநாயகம் – வளவ. துரையன்
ஆடோட்டிப் போகின்றாள்
அத்துவானக் காட்டிலே
அழகான பெண்ணொருத்தி
கையில் உள்ள செங்கோலே
அவளுடைய வாழ்வோடு
ஆடுகளையும் வழி நடத்தும்.
கலைந்த தலைமுடி
காற்றில் கரகரப்ரியா பாட
காலின் கொலுசெல்லாம்
ஜதி தாளம் போட
வண்ணப் புடவையது
வாய்திறந்து சிரிக்கிறது.
அந்தி சாயும் வரை
அங்கே அவளது ராஜ்ஜியம்தான்
அரசியின் பேச்சை
ஆடுகள் கேட்டு நடக்கும்
அருமையான ஜனநாயகம் அது.
திரைக்கவிதை – கண்ணதாசன் -வசந்த கால நதிகளிலே
படம்: மூன்று முடிச்சு
பாடல்: கண்ணதாசன்
இசை எம் எஸ் விஸ்வநாதன்
இயக்கம் ; கே பாலச்சந்தர்
பாடலைக் கேட்டுக்கொண்டே வரிகளைப் படியுங்கள் :
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்
மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்!
யூ டியூப் சானல் – குவிகம் இலக்கியவாசல்
குவிகம் மின் அளவளாவல்கள் நிகழ்வுகளை தற்போது யூ டியூப் சானலில் காணலாம் !
அவற்றை இங்கே பார்க்கலாம்
1. மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நாடகம்
2. கண்ணு படும் பாடு – காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் நாடகம்
3. புத்தக மறு அறிமுகம் – ஈஸ்வரின் பாஸ்டனில் ஒரு தேரடி -பிரியா ஸ்ரீராம்
4. குழந்தை இலக்கியம் எஸ் ஆர் ஜி சுந்தரம் அவர்களின் உரை & புத்தக மறு அறிமுகம் – சுரேஷின் ‘நான் என்னைத்
தேடுகிறேன் “
5. படித்தால் பிழை தீரும் – என் சொக்கன் உரை
6.” மொழிபெயர்ப்பு” கௌரி கிருபாநந்தன் உரை
7. ‘கதை உருவான கதை’ – பத்மினி பட்டபிராமன் உரை
8. கதை ஓசை – தீபிகா அருண் உரை & புத்தக மறு அறிமுகம் – எஸ் கே என் ‘ சில படைப்பாளிகள் ‘
அழகின் வெளிப்பாடுகள் ! கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
மலரின் அழகை
வட்டமிட்டு
வண்டு !
ஆதவனின் அழகை
சுட்டெரித்துக் காட்டும்
ஒளிக்கதிர்கள் !
மழையின் அழகை
வெளிப்படுத்துவது
சாரல் துளிகள் !
உண்மையின் அழகை
உணர்த்திக் காட்டுவது
உன்னத உயர்வு !
உழைப்பின் அழகை
வெளிக்காட்டுவது
வியர்வைத் துளிகள்!
எண்ணங்களின் அழகை
எடுத்துக் காட்டுவது
மனிதனின் செயல்கள்!
அன்பின் அழகை
இயல்பாக காட்டுவது
குழந்தையின் மழலை !
இசையின் அழகை
இசைத்துக் காட்டுவது
ஏழு சுரங்கள் !
ஆண்டவனின் அழகை
அள்ளி வழங்குவது
அன்னை தந்தை உறவு!
குமார சம்பவம் – மூன்றாம் சர்க்கம் – எஸ் எஸ்
மூன்றாவது சர்க்கம்
மன்மதனைக் கண்ட இந்திரனும் மனமகிழ்ந்து அருகில் அழைத்தனன்
தனக்கு நிகராய் ஆசனம் அளித்து அருகிலே அமரச் செய்தனன்
மன்மதனும் இந்திரனைத் தலைவணங்கி பெருமையுடன் பேசலுற்றான்
“ தேவதேவரே! தங்களுக்குப் பணிபுரிய எனக்கு ஆணையிடுங்கள்!
இந்திர பதவி நாடி தவம்செய்பவரைக் காமத்தில் வீழ்த்த வேண்டுமா ?
மோட்சத்தை நாடி ஓடிவரும் பகைவரை மோகத்தில் ஆழ்த்த வேண்டுமா?
அர்த்த தர்மங்கள் அறிந்த அரக்கரை காமநதியில் மூழ்கடிக்க வேண்டுமா?
விரும்பியவ பெண் பதிவிரதை ஆயினும் தானேதழுவி நாடிவர வேண்டுமா?
ஊடல்புரியும் காதல் பெண் மீண்டும் கொஞ்சி வர வேண்டுமா?
வஜ்ராயுதம் ஓய்வு பெறட்டும் என் மலராயுதம் சேவை புரியட்டும்!
சிவனையும் மயக்கிவிடும் என்அம்பிற்குமுன் வேறெவர் நிற்க இயலும்? “
மன்மதன் வீரியம் நன்கறிந்த இந்திரன் உளம் மகிழ்ந்து உரைக்கலானான்
“சிவபிரானையும் மயக்க முடியும் என்ற உனது சொல் நனவாக வேண்டும்
குமரன் பிறந்து அசுரவதம்புரிய சிவபிரான் தவக்கோலம் நீங்கிடல் வேண்டும்
தேவர்கள் தவிப்பை ஆற்றும் மலர்க்கணை உன்னிடத்தில் மட்டுமே உள்ளது
மனத்தை அடக்கிய பார்வதி புலன்களை அடக்கிய சிவனுக்காகப் பிறந்தவள்
இமயத்தில் தவம்புரியும் பிரானுக்குப் பார்வதி பணிவிடை செய்கின்றனள்
பார்வதி பேரழகு சிவனை வசீகரிக்க விதைக்கு நீர் போல நீ உதவவேண்டும்
தேவரும் செயஇயலா இச்செயல் நின் பெருமையின் புகழை அதிகரிக்கும்
தேவர்கள் யாசிக்கும் இதனை நீ முடித்தால் மூவுலகிற்கும் நன்மை கிட்டும்
இந்திரன் ஆணையை சிரமேற்ற மன்மதன் அதை நிறைவேற்ற விரைந்தனன்
மதனின் தோழன் வசந்தனும் சிவவனத்தில் வசந்தருதுவை வரவழைத்தனன்
சூரியன் வடதிசை ஏக தென்திசை நாயகி பெருமூச்சுடன் தென்றல் வீசிட
பெண்களின் பாதம் பட்டால் துளிர்க்கும் அசோக மரமும் பூத்துக் குலுங்கிட
வண்டுகள் அமர்ந்த மாம்பூவும் தளிரும் மன்மதபாணமென உருவெடுக்க
காதலர் மனங்கவரும் பொன்னிறக் கொன்றை மலரும் பூத்துத் திளைக்க
வனதேவதை உடம்பில் காதல் நகக்குறிபோல் சிவந்த மொக்குகள் துடிக்க
வசந்தஅழகியின் திலகமென திலகப்பூ பூக்க இதழென மாந்தளிர் மின்னிட
பூக்களின் மகரந்தம் துள்ளியோடும் மான்களின் கண்பட்டு ஓட்டம் தடைபட
மாந்தளிர் சுவைத்த குயிலின் கூவலை மன்மத அழைப்பென காதலி மயங்கிட
நெய்மறந்த இதழ் சாந்துபடா கன்னம் கொண்ட இயற்கைஅழகிகள் கெஞ்ச
சிவன் உறை வனத்தில் வசந்தகாலம் திடீரென வந்திட மக்கள் மயங்கினர்
ரதியுடன் மன்மதன் பவனி வந்திட உயிரினம் அனைத்தும் காதலில் கலந்தன
இணைவண்டுகள் சேர்ந்து தேனருந்தின இணைமான்கள் தடவிச் சுகித்தன
பெண்யானை துதிக்கையால் ஆண் யானைக்கு வாசநீரை ஊட்டின
சக்கரவாகமும் தான் ருசித்த தாமரைத்தண்டை பேடை இதழில் தந்தன
பூந்தேன் அருந்திய காதல் பெண்கள் பாடியாடிட வியர்வை துளிர்த்தன
காதலரும் ஒவ்வொரு பாடல் துவங்கையில் நெகிழ்ந்து முத்தமிட
பூங்கொத்து முலையாக தளிர்கள் இதழாக கிளைகள் கைகளாக அமைந்த
கொடிக் காதலி காதலன்மரங்களுடன் பின்னிப் பிணைந்து சுகம் பெற்றன
காதலில் கானகமே களிக்கையில் கலையாத மனத்துடன் சிவனும் இருந்தார்
கொடிவாயில் நந்தியும் உதட்டில் விரல் வைத்து மற்றவற்றை அடக்கி நிற்க
கானகத்து உயிர்களெல்லாம் சித்திரமாய் சமைந்து அடங்கி ஒடுங்கின
நந்தியின் பார்வை விலக்கிய மன்மதனும் கொடிவீட்டின்கண் சென்றான்.
புலனை அடக்கிப் புலித்தோலில் அமர்ந்த பிரானைக் கண்ணாரக் கண்டான்
சலனமற்ற கால்கள் , நிமிர்ந்த மார்பு, குவிந்த கரம் அவர் அமர்ந்தகோலம்
பாம்புச் சடை, காதில் ஜபமாலை , மான்தோல் உடை அவர் அணிந்தகோலம்
அச்சுறுத்தும் விழிகள், நுனிமூக்கு நோக்கும்பார்வை அவர் இருந்தகோலம்
காற்றினை அடக்கி சலனமற்ற மேகமாய் கடலாய் தீபமாய் அமைந்தகோலம்
நெற்றிக்கண் ஒளிவீசி சந்திரனைப் பழிக்கும்வண்ணம் ஒளிர்ந்த கோலம்
மனத்தை நிலைநிறுத்தி தியானக் கண்ணால் ஆத்மனைக் கண்டகோலம்
கோலங்கள் கண்ணுற்ற மன்மதன் வில்லம்பு கரம் நழுவ சோர்ந்து நின்றான்
பார்வதிதேவி பணிவிடைக்கு வரக்கண்டு அழிந்த பலம் திரும்பப் பெற்றான்
பொன்னகை ஏதுமின்றி மலரையே அணியாய் அணிந்த பேரழகி அவள்
தனத்தின் கனத்தால் துவண்ட இடைகொண்டு கொடியென வந்தவள் அவள்
மகிழம்பூமேகலை அடிக்கடி இடைநழுவ பிடித்த வண்ணமே வந்தவள் அவள்
முகமலர் நாடி செவ்விதழ் தேடும் வண்டைச் செண்டால் விரட்டியவள் அவள்
பார்வதியின் பேரழகு சிவனை வெல்லுமென மன்மதன் உறுதி கொண்டான்
அவள் வருகையும் சிவனின் தவமுடிவும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன
மூச்சைஅடக்கி யோகத்தில் இருந்த சிவன் மெதுவாக அதனைக் கலைத்தார்
சிவன் அனுமதிபெற்ற நந்திதேவர் பார்வதியை பணிசெயப் பணித்தார்
பார்வதியின் தோழிகள் இருவர் சிவனின் பாதங்களை மலரால் அர்ச்சிக்க
தலையில் சூடிய நறுமலர் தளர தேவியும் சிவனை விழுந்து வணங்கினாள்
‘பிறிதொரு பெண்ணைத் தேடாத கணவனை அடைவாய்’ என வாழ்த்தினார்
அதுசமயம், சிவன்மேல் அம்பு எய்ய மன்மதனும் தருணம் பார்த்திருந்தான்
வணங்கியபார்வதி தாமரைமாலையை தன்கரத்தால் சிவனிடம் அளித்தாள்
மாலையை சிவன் ஏற்கும் அத்தருணம் மதனும் அம்பைத் தொடுத்தான்
உடனே காதல் துளிர்க்க பார்வதி முகத்தை சிவனும் ஆவலுடன் பார்த்தார்
பார்வதியும் மெய்சிலிர்த்து நாணிக் கடைக்கண்ணால் சிவனைநோக்கினாள்
புலன்களை அடக்கி ஆண்ட சிவபிரான் சலனத்தின் காரணம் தேடினார்
மலரம்பால் தாக்க விழையும் மன்மதனைக் கணத்தில் கண்டு கொண்டார்
கோபத்தில் வெகுண்ட சிவபிரான் நெற்றிக்கண்ணில் தீப்பொறி பிறந்தது
மறைந்த தேவர்கள் இறைஞ்சுமுன் சிவனார் நெருப்பு மதனை எரித்தது
சாம்பலான கணவனைக் காண இயலா ரதியும் அதே கணத்தில் மயங்கினள்
கோபாக்னி தெறிக்க சிவபிரானும் இடத்தைவிடுத்து சேவகருடன் அகன்றார்
இமவானின் எண்ணம் அழிந்தது பார்வதியின் அழகு அவமதிக்கப்பட்டது
மயங்கி விழுந்த பார்வதியை இமவான் கையிலேந்தி இல்லம் சென்றான்
( நான்காம் சர்க்கம் அடுத்த இதழில் )
குவிகம் மின் அளவளாவல்
இன்னும் சில படைப்பாளிகள் – நா பார்த்தசாரதி – எஸ் கே என்
தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களைத் தவிர, இயற்பெயரிலும் பல படைப்புகளைப் படைத்தவர். சிறுகதை, நெடுங்கதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனங்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல தளங்களில் எழுதியவர். தினமணிக் கதிர், வார இதழ், கதைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் ‘தீபம்’ என்னும் இலக்கிய இதழைச் சிறப்பாக நடத்தி ‘தீபம்’ பார்த்தசாரதி என்றும் அறியப்பட்டவர்.
தனது கருத்துகளைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் அச்சமின்றியும் எழுதவும் மேடையில் பேசவும் தயங்காதவர். ‘பொய் முகங்கள்’, ‘முள்வேலிகள்’, ‘சுதந்திரக் கனவுகள்’, ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’, ‘துளசி மாடம்’, ‘மணிபல்லவம்’, ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’, ‘ராணி மங்கம்மாள்’ முதலிய புதினங்கள் உள்ளிட்ட கிட்டத்தட்ட நூறு நூல்கள் வெளிவந்துள்ளன.
சாகித்ய அகடமியின் விருதினைப் பெற்றவர். அகடமியின் தமிழ்ப் பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டுக் குறிப்பிடத்தக்கப் பணிகளை ஆற்றியவர்.
********
இவரது பின்னக் கணக்கில் தகராறு என்னும் கதை இப்படித் தொடங்குகிறது
எனக்குச் சந்தேகமாயிருந்தது. நேருக்கு நேர் கேட்டு விடலாம் போலவும் தோன்றியது. அப்படிக் கேட்பது நாகரிகமாகவும் நாசூக்காகவும் இருக்காதோ என்று தயக்கமாகவும் இருந்தது. மனசு குழம்பியது. இரண்டு மூன்று ஆபரேஷனுக்குப் பின் இப்போது எனக்குக் கண் பார்வை மங்கி விட்டது. அந்த இடமோ புதுடில்லியின் ராஷ்டிரபதி பவன் அசோகா ஹால்.
என்று தொடங்குகிறது..
அசோகா ஹாலில் சமஸ்கிருத பண்டிதர்களைக் கௌரவித்து விருதுவழங்கும் விழாவில் விருது பெற இருந்த பண்டிதர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மனிதரைப் பற்றிய சந்தேகம் கதைசொல்லிக்கு. இவருக்கு முன்னமே தெரிந்தவரும் தற்சமயம் பல ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லாத ராம்மோகன் ராவ் என்பவர்தான் அந்த மனிதர் என்று இவருக்குச் சந்தேகம் வருகிறது. விருதாளர்கள் பட்டியலில் ராம்மோகன் ராவ் என்னும் பெயரும் இருப்பது என்னவோ உண்மை. இந்த ராம்மோகன் ராவ் வேறொருவராகவும் இருக்கலாம். அல்லது முகமும் தோற்றமும் முதுமையால் மாறுதல் அடைந்திருக்கலாம்.
இருவரும் தஞ்சை உயர்நிலைப்பள்ளியில் சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்துப் படித்தவர்கள். அதிலும் ராம்மோகனின் தந்தை ஒரு சமஸ்கிருத விற்பன்னர். வீட்டிலேயே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து ராம்மோகனை ஒரு சம்ஸ்கிருத மேதையாகவே ஆக்கியிருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்து இருவரும் கும்பகோணம் கல்லூரியிலும் ஒன்றாகப் படித்தவர்கள்.
ராம்மோகனுக்கு கணக்கு வராது. பின்னக்கணக்கு என்றாலோ வரவே வராது.
பின்னப்படுத்திப் பார்ப்பதே அவனுக்குப் பிடிக்காது.பள்ளிக்கூடத்தில் வாங்கித் தின்பதற்கு அல்லது வேறு எதற்காவது முழு ரூபாயோ முழு அணாவோ எதைக் கொண்டு வந்தாலும் அதை அவன் மாற்றவே மாட்டான். அதை அப்படியே வைத்துக் கொண்டு என்னிடமாவதோ வேறு யாரிடமாவதோ கடன் கேட்பான். முழுசை மாற்ற அவனுக்குத் தெரியாது. பிடிக்காது. காரணம் பின்னக் கணக்கில் அவனுக்கு எப்போதுமே குழப்பம்.
ஒரு ரூபாயிலிருந்து கால் ரூபாயை மாற்றி விட்டால் மீதம் என்ன?’ என்று அந்த நாளில் ராம்மனோகரனைக் கேட்டால் மீதத்தைச் சொல்வதற்குப் பதில், “ஒரு முழு ரூபாயை ஏன் மாற்ற வேண்டும்? அது அப்படியே ஒரு முழு ரூபாயாகவே இருந்து தொலைத்து விட்டுப் போகட்டுமே” என்று தான் பதில் சொல்வான்.
ஜனாதிபதி வந்துவிட்டார். நிகழ்ச்சியில் தேசியகீதம் இசைக்கப்படுகிறது. விருது மற்றும் இதர சன்மானங்களுடன் பேழைகள் தயாராக இருக்கின்றன. இவரோ நண்பனின் நினைவுகளில் மூழ்குகிறார்
முழுமையைப் பின்னப் படுத்துவது அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. கும்பகோணம் கல்லூரியில் படிக்கிற காலத்தில் காவேரியைக் கடந்து அக்கரைக்குப் போக என்று காலேஜில் சேர்ந்த முதல் நாள் ஒரு முழு வெள்ளி ரூபாய் கொண்டு வந்தான் அவன். எனக்குத் தெரிந்தவரை அந்த முழு வெள்ளி ரூபாயைக் காலேஜ் படிப்பு முடிந்து வெளியேறி டி.ஸி. வாங்கிக் கொண்டு போகிற வரை ராம் மனோகரன் மாற்றவே இல்லை. நானோ வேறு சிநேகிதர்களோதான் ‘போட்டுக்கு அவனுக்காகச் சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தோம்.
இன்டர்மீடியட் முடிந்து ராம்மோகனின் பட்டப்படிப்பு திருச்சியில் தொடர்கிறது. கதை சொல்லி வைகுண்ட ஏகாதசிக்காக ஸ்ரீரங்கம் போயிருந்தபோது மீண்டும் சந்திக்கிறார்கள்.
நான் அங்கே அவனுடைய விருந்தாளி என்று பேர். ஆனால் டவுன் பஸ் ஏறும்போது, ஹோட்டலில் டிபனுக்குப் பில் கொடுக்கும் போது எல்லாச் சமயங்களிலும், “டேய் எங்கிட்ட முழு அஞ்சு ரூபா நோட்டா இருக்குடா… சில்லறையா இல்லே… நீயே கொடுத்திடு” என்று வழக்கம் போல் ராம் மனோகர் செலவையெல்லாம் என் தலையில் கட்டிவிட்டான்.
அவனுடைய முழு நோட்டை மாற்றவேயில்லை. முழுசை மாற்றக் கூடாது என்னும் ! அவனுடைய வாழ்க்கைத் தத்துவம் திருச்சிக்குப் போன பின்னும் கூட மாறியதாகத் தெரியவில்லை.
ராம்மோகனின் முன்னோர்கள் மன்னர் சரபோஜி காலத்தில் புனா நகரிலிருந்து தஞ்சையில் குடியேறிய புகழ்பெற்ற ‘சித்பவன்’ என்கிற வம்சாவளியினர். முழுசைக் குறைத்தால் புரியாது என்று பின்னக் கணக்கை ஆசாரக் குறைவாகவே கருதி விட்டார்களோ என்றும் சந்தேகம் வருகிறது கதைசொல்லிக்கு.
ஜனாதிபதியின் உரை தொடங்குகிறது. இவருக்கு மீண்டும் நண்பனின் நினைவுகள் வட்டமிடுகின்றன. வைகுண்ட ஏகாதசி அனுபவத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இருவரும் திருப்பதியில் சந்திக்கிறார்கள். தற்செயலாக ஒரே சமயத்தில் குடும்பத்தோடு தரிசனத்திற்கு வந்திருக்கிறார்கள். சென்னைக்குப் போகவேண்டிய இரு குடும்பங்களும் ரேணிகுண்டாவில் சென்னை செல்ல இரயில் ஏறுகிறார்கள்.
“என்னிடம் முழு நூறு ரூபாய் நோட்டா இருக்கு! அதைப் போயி மாத்த வேண்டாம்னு பார்க்கறேன். நீயே எனக்கும் என் ஒய்ஃபுக்கும் சேர்த்து டிக்கட் எடுத்திடு” என்றார்.
எக்காரணம் கொண்டும் முழுசை மாத்தக் கூடாது என்னும் கொள்கை புரொபஸராகி சம்பாதிக்கும் இன்றும் ராம் மனோகர் ராவை விட்டுப் போகவில்லை என்று தெரிந்தது.அது ஒரு ரூபாயோ, ஐந்து ரூபாயோ, நூறு ரூபாயோ, எதுவானாலும் மாற்றிப் பின்னமாக்கிச் செலவழித்து விடக் கூடாது என்பதில் ராவ் அப்படியேதான் இருந்தார்.
விருது வழங்குதல் நடக்கிறது. மீண்டும் தேசியகீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி முடிவடிகிறது. டீயும் பிஸ்கட்டும் வழங்கப்படுகிறது. ராம்மோகனை குறிவைத்துப் போகிறார். அவர் அருகிலிருந்தவரிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்.
“சாஸ்திரிகளே! நான் கரோல் பாக் போயாகணும். எங்கிட்ட நூறு ரூபாய் நோட்டாக இருக்கு. அதை மாத்த வேண்டாம்னு பார்க்கறேன்… சில்லறையாக ஒரு ரெண்டு ரூபா இருந்தாக் கொடுங்க… மெட்ராஸ் போறப்போ ரயில்லே திரும்பத் தந்துடறேன். ”நான் விசாரிக்க வேண்டிய அவசியமே நேரவில்லை . அது சத்தியமாக என் பால்ய சிநேகிதன் ராம் மனோகர் ராவ்தான். நிச்சயமாக வேறு யாரும் இல்லை. வேறு யாராகவும் இருக்க முடியாது. எழுபத்தேழு வயதான பின்பும் இன்றும் பின்னக் கணக்கில் அவருக்குத் தகராறு இருந்தது. முழுசை மாற்றினால் குழப்பம் என்ற அவருடைய நிரந்தர வாழ்க்கைத் தத்துவமும் அப்படியேதான் இருந்தது.
பாண்டித்யமும் கஞ்சத்தனமும் உடன் பிறந்தவையோ அல்லது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘ஷைலாக்’கும் ‘மைதாசு’ம் மறைந்திருக்கிறார்களோ என்றெல்லாம் யோசிக்கிறார் கதைசொல்லி.
நான் ராவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரையும் என்னோடு அழைத்துச் செல்வதாக இருந்தால் முழுசாக இருக்கும் பத்து ரூபாயைக் கண்டிப்பாக மாற்ற வேண்டி நேரிடலாம். அது மட்டுமில்லை. அவரைக் கூட அழைத்துக் கொண்டு என் வீட்டுக்குப் போன பின் நான் மேலும் பல முழு பத்து ரூபாய்களை மாற்றும்படி ஆனாலும் ஆகிவிடக்கூடும். அதற்கு நான் தயாராக இல்லை . முதல் முதலாக எனக்கும் உடனே பின்னக் கணக்குப் பிடிக்காமல் போய் முழுமையை மாற்றாமல் அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற ஆசை தவிர்க்க முடியாமல் திடீரென்று ஏற்பட்டு விட்டது. அந்தத் தத்துவத்தின் குருநாதருக்கு முன்னிலையிலேயே அந்த வாசனா ஞானம் என்னுள் பிறந்ததுதான் ஆச்சர்யம்.
என்று கதை முடிகிறது.
* * * * *
‘தீபம்’ பார்த்தசாரதி அழகுத் தமிழ் நடைக்கும், ஆணித்தரமான கருத்துகளுக்கும், சமுதாயத்தின் தவறுகள் குறித்த சாடலுக்கும் அறியப்பட்டவர். மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த சரித்திர நவீனங்களும் மிகப் பரவலான ரசிகர்கூட்டத்தைப் பெற்றவை. இந்தக் கதையில் மெலிதான நகைச்சுவை மிளிர்கிறது.
‘அனுதாபக் கூட்டம்’ என்னும் இன்னொரு கதையும் நினைவுவிற்கு வருகிறது மறைந்த தியாகியின் வறுமையில் வாடும் குடும்பத்திற்காக நிதி திரட்டுகிறார்கள், ஆனால் அந்தப் பணத்தைக் கொண்டு அவருக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்கிறார்கள். மணிமண்டபம் நிறுவ அமைக்கப்பட்ட குழுவிற்கு தியாகியின் மனைவி எழுதம் கடிதம் இது:-
‘தாங்கள் என் கணவர் பெயரில் கட்ட இருக்கும் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் தோண்டியதும் எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் நானும் என்னுடைய மணமாகாத இரு பெண்களும் அங்கு வருகிறோம். எங்களை உள்ளே தள்ளி மூடிவிட்டு அதன்மேல் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் போடுவதுதான் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். தயவு செய்து அப்படியே செய்யக் கோருகிறேன்.’
மகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி
தோட்டா : முதல் வினாடி அது காந்தி! உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முற்றுப் பெற்று விட்டது. மார்புக்கூட்டை போர்த்தியிருக்கும் தோலில் வலி ஏற்படுத்தாமல், மிருதுவாக நுழையக் கூடிய ஒரு மெல்லிய இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரைதேடிக் கொண்டிருப்பேன். நான் இதமாகத்தானே நுழைகிறேன் காந்தி?
காந்தி : நீ மிகவும் இதமாகத்தான் நுழைகிறாய், என் அருமை தோட்டாவே!
தோட்டா : உனக்கு அளிக்கப்பட்டு இன்னும் எஞ்சியிருக்கும் அடுத்து வரும் நான்கு வினாடிகாலத்திலும் நான் அப்படித்தான் இருப்பேன்.
பூமி : இன்னும் நான்கே வினாடிகாலம்தான் உனக்கு இருக்கிறது. உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முடிந்து விட்டது.
நதி : உன் விலைமதிக்க முடியாத வாழ்வில் ஐந்தில் நான்கு பாகம் இன்னும் உள்ளது, காந்தி
காற்று : ஆனந்தமயமான உன் வாழ்க்கையின் ஐந்தில் நான்கு பகுதிகள்.
காந்தி :நீங்கள் என்னைவிட புத்திசாலிகள் அல்ல என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த சிறிய வாழ்க்கையைத் தொடர்ந்து, பெரிய, அமைதியான நித்யம் ஒன்று தொடர்ந்து வரப்போகிறது என்று உங்களுக்குத் தெரியாது.
காற்று : நேசத்துக்குரிய காந்தி, நீ பிறர் கூறும் புளுகுகளை நம்பி ஏமாந்து விடாதே! மரணம் என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் நாங்கள்.
பூமி : நித்யம், நிரந்தரம் என்பதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதே. உனக்கு இருப்பதெல்லாம் இந்த ஒரு ஜென்மம்தான். புனர்ஜென்மம் என்று ஏதும் இல்லை .
காந்தி : எதையும் செய்வதற்குச் சக்தியற்று ஆடாமல் அசையாமல் படுத்திருக்கும் நிலையில், மேலே இருக்கும் . வானத்தைத் தவிர ஒன்றையும் காண இயலாத நிலையில் நீங்கள் புகழும் இந்த ஜென்மத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள், என் இனிய நண்பர்களே!
பூமி : எண்ணங்களுக்கு உண்டு ஆயிரம் கண்கள். நீங்கள் சிவன் என்று பெயரிட்டு உங்களில் பலரால் கோயில்களில் ஆராதிக்கப்படும் கடவுளுக்கு இருப்பதுபோல் எண்ணங்களுக்கும் ஆயிரம் கைகள் உண்டு!
காற்று : அவற்றைப் பயன்படுத்திக் கொள் காந்தி!
பூமி : உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.
காற்று (அருகில் வந்து, மிக்க கெஞ்சிக் கேட்கும் குரலில்) உன் வாழ்க்கை எவ்வளவு உன்னதமாக இருந்தது என்பதெல்லாம் உனக்கு நினைவில் இல்லையா, காந்தி?
காந்தி : நண்பர்களே, வாழ்க்கையைப் பற்றி என்னிடம் ஏதும் பேச வேண்டாம். விருந்தாளி ஒருவன் எப்படிப் பயணிகள் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறுகிறானோ அவ்வாறே நான் மிக்க மகிழ்ச்சியுடன் மீண்டும் வெளியேற விரும்புகிறேன்.
நண்பர்களே, போய்விடுங்கள் இங்கிருந்து! நான் அமைதியாக இருந்த சில மணி நேரங்கள், ஆழமான தியானத்தில் வாழ்ந்த காலங்கள், இவற்றைத் தவிர என் வாழ்க்கையில் வேறு எவ்விதமான நல்லவையும் நடக்கவில்லை . நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விடுங்கள். அப்போதுதான் நான் தியானத்தில் ஆழமுடியும்.
(குரல்கள் காந்திக்கு மிக பக்கத்தில்)
பூமி : உன் வாழ்க்கை எப்படி பெருமைக்குரியதாக இருந்தது என்பதெல்லாம் மறந்து விட்டாயா?
நதி கோடிக்கணக்கான இந்தியர்கள் உன் இடது சிறுவிரல் அசைவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார்களே, மறந்து விட்டதா உனக்கு? |
காற்று : நீ வந்த ஒவ்வொரு முறையும் “காந்தி”, “காந்தி” என்று இந்துக்களும், முஸ்லிம்களும் உரக்கக் கூவி உன்னை வரவேற்றது எல்லாம் மறந்து போய்விட்டதா உனக்கு?
பூமி : “நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் வக்கீல் காந்தி அவர்களே!” என்று கண்களைச் சிமிட்டியவாறே ஜெனரல் ஸ்மட்ஸ் பிரிடோரிய நகரில் கூறினாரே அதையும் மறந்து விட்டீர்களா?
காற்று : பிரிட்டிஷ் முடி ஆட்சியின் நீதிபதிகள் உங்களுக்கு மரியாதை புரிந்தது கூட ஞாபகம் இல்லையா?
நதி : நீ உன் இடது சிறுவிரல் அசைவினால் மட்டுமே உத்தரவு இட்டபோது 10,000 இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களே, அது கூடவா ஞாபகம் இல்லை உனக்கு?
பூமி மந்திரிகளும், அந்தணர்களும், பெண்களுடனும், பிச்சைக்காரர் களுடனும் ராட்டையில் நூல் நூற்றார்களே காந்தி, ‘ அவ்வாறு செய்’ என்று நீ கூறியதால், இதுவும் ஞாபகம் இல்லையா?
பூமி : இந்தியா சுதந்திரம் அடைந்ததாவது உன் நிலைவில் இருக்க வேண்டுமே! காந்தி! முஸ்லிம்களும் இந்துக்களும் பார்ஸி இனத்தவரும் சீக்கியரும் உன் ஆணைப்படி எப்படி ஒரே இனமாக ஒன்றுசேர்ந்து நின்றார்கள் !
நதி : மகாத்மா!
காற்று : மகாத்மா காந்தி!
காந்தி மீண்டும் வந்து விட்டீர்களா, குழம்பிப் போயிருக்கும் குரல்களே! ஆசாபாசங்களுக்கும் மாயைகளுக்கும் அடிமைகளாக, உள்ளத்தையும் உடலையும் பற்றிக் கொண்டு இருக்கும் குரல்களே, உங்களை நான் மாய்த்து விடவில்லையா?! என் வாழ்நாள் முழுதும் வேண்டிய அளவிற்கு உடலைவாட்டி உள்ளத்தின் ஆசைகளை அடக்கியது போதாதா? ஓ! தெய்வமே! நான் எவ்வளவு பலஹீனமானவன் என்று நீ பார்ப்பதற்காக பிரார்த்தனையில் நான் என் ஆன்மாவை மறைக்காமல் உன் முன்னால் விரித்து வைக்க வில்லையா? ஆசாபாசங்களிலும், காம இச்சைகளிலும் முழுமையாக ஆழ்ந்து கிடக்கும் என் ஆன்மா எவ்வளவு திமிர் பிடித்தது, எவ்வளவு சாமானியமானது என்று உன் கண்களுக்கு எதிரிலேயே நான் ஒப்புக் கொண்டேனே!
பூமி : உன் ஆன்மா பலஹீனமானதா, சாமானியமானதா என்பதைப் பற்றியல்ல இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது. உன் மக்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவைப் பற்றி நீ உன் மக்களுக்கு செய்தது எல்லாம் என்ன என்பதைப் பற்றியே, காந்தி!
நதி : உன் மக்களிடம் உன் புகழ் எப்படி பரவிக் கிடக்கிறது என்பதைப் பற்றி.
காற்று : உன் மக்களில் மிக உன்னதமான மனிதனைப் பற்றி, மகாத்மா காந்தி.
பூமி : நீ இந்தியாவை அடிமைத் தளையிலிருந்து விடுவித்திருக்கிறாய்.
காற்று : காந்தி, பிரம்மாண்டமான அமைதியினுள் நீ ஓடிப் போனால் நீ எழுப்பிய கட்டடம் தூள்தூளாக சிதறிப் போய்விடும் என்று உன்னால் தெரிந்து கொள்ள முடியவில்லையா?
நதி : புலிகளின் கண்களைப் போன்ற கண்களினால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் உன் பூத உடலின் மேல் ஒருவரை ஒருவர் வெறித்துக் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ!
காற்று உயிரை விட்டுக் கொண்டிருக்கும் பசுவைச் சுற்றி வட்டமிடும் பிணம் தின்னிக் கழுகுகளைப் போன்று அவர்கள் உன் உடலைச் சுற்றி உட்கார்ந்து இருக்கிறார்களே?
பூமி : காந்தி, ஓடிப்போய்விட விரும்புகிறாயே அமைதியினுள்?
நதி : ஆதோ அந்தத் தீண்டத் தகாதவர்களைப் பார்! ஓநாய் வரும்போது துடிக்கும் ஆட்டுமந்தையைப் போன்று நடுங்குகிறார்களே!
காற்று : தங்களை இதுவரை பாதுகாத்து வந்த தந்தை இறந்தவுடன் இனி என்ன ஆகுமோ என்ற பயத்தில் ஒருவரோடு ஒருவராக நெருக்கியடித்துக் கொண்டு ஒன்று சேர்கிறார்களே!
நதி : நீ நிர்மாணித்த கட்டடத்தை விட்டு வெளியேறப் போகிறாயா, காந்தி?
காந்தி : பயங்கர குரல்களே! என்னை என்ன செய்து விட்டீர்கள்? என் ஆன்மா எழுச்சி அடைகிறது! ஏன் என் மனது மீண்டும் எழுச்சி பெறுகிறது! விதி எனக்கு அளித்திருக்கும் முடிவை ஏன் நான் இப்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்? என் மார்பில் ஏன் துப்பாக்கியின் தோட்டா வலியைக் கொடுக்கிறது?
(இசையை மெலியதாக உட்புகுத்தவும்)
ஓ! என் குரலே! என்னை ஏன் கைவிட்டு விட்டாய்? நான் ஏன் என் குரலை, பொன்வண்டின் மெல்லிய ரீங்காரத்தை போன்ற என் குரலை ஏன் நான் கேட்க முடியவில்லை? இரும்பைப்போன்ற உறுதியான என்குரலை ஏன் கேட்க முடிவதில்லை? என் வாழ்நாள் முழுவதும் என்னை நல்ல முறையில் அழைத்துச் சென்ற அந்தக் குரல் எங்கே? என் குரலே, ஏன் நான் உன்னைக் கேட்கமுடிவதில்லை?
(மணி ஓசை)
தோட்டா : இரண்டாவது வினாடி முடிந்து விட்டது காந்தி! எலும்புத் தசையில் நுழைகிறேன் நான் இந்தக் கணத்தில். என் நுனி உன் இதயத்தைத் தொடுகிறது! வலிக்கிறதா?
குவிகம் அளவளாவலில் ஒரு சிறு கதை படித்தல் 26 ஜூலை அன்று
குவிகம் இணையவழி அளவளாவலில் என் ‘சிறு’கதை நிகழ்வு – ஒரு விளக்கம்
குவிகம் இணையவழி அளவளாவல் ஒவ்வொரு ஞாயிறன்றும் மாலை 6.30 மணிக்கு நடைபெற்று வருகிறது. சிறுகதைகள் வாசிக்கும் நிகழ்வினை 26.07.2020 அன்று நடத்த உள்ளோம். சில விஷயங்கள் தெளிவுபடுத்துவது அவசியம் என எண்ணுகிறோம்
1. கதைகள் 300 சொற்களுக்குள் இருக்கவேண்டும்.
நீண்ட கதைகள் படிக்கப்பட்டால் அவை பார்வையாளர்களைச் சென்றடைவதில்லை என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் இந்த விதிமுறை அவசியமாகிறது.
நிகழ்வு ஒரு மணிநேரம்தான் அதில் கதைகள் படிக்க 40 நிமிடங்கள்தான் கிடைக்கும். அதில் பலருக்கு வாய்ப்பளிக்க எண்ணம்.
2. கதைகள் முன்னதாக WORDஅல்லது PDF வடிவில் அனுப்பிவைக்க வேண்டும்.
குறிப்பிட்ட அளவிற்குள் கதைகள் உள்ளனவா, கதைகளில் அரசியல், சமயம், கொரானா தவிர்க்கப்பட்டுள்ளனவா ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ள இது அவசியமாகிறது. மேலும் நிகழ்வினை ஒருங்கிணைக்கவும் வசதியாக இருக்கும்.
3. நிகழ்வில் கதையினை கதாசிரியர்கள் நிகழ்வில் நேரடியாகப் படிக்கவேண்டும்.
சிலர் தங்கள் குரலில் பதிவு செய்து அனுப்பி உள்ளார்கள். கதைகளை ஒலிபரப்பும் எண்ணம் இல்லை. நிகழ்வில் இணையம் மூலம் பங்குகொண்டு கதாசிரியர் கதைகளைப் படிக்கவேண்டும். கதைகளை ஒலிவடிவில் அனுப்பியவர்கள் மீண்டும் PDF / word கோப்பாக அனுப்பிவைக்கவும்.
4. தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தலாம்.
இதுவரை கிடைக்கப்பெற்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட கதைகளுக்கே இரண்டு நிகழ்வுகள் தேவைப்படும். மற்றும் 18.07.2020 தேதிக்குள் வரவிருக்கும் கதைகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேலும் நிகழ்வுகள் தேவைப்படலாம்
முதல் நிகழ்வு 26 ஜூலை என்பது முடிவாகிவிட்டது. அந்த நிகழ்வில் கதையினை வாசிக்கவேண்டிய நண்பர்களுக்கு தனியாக செய்தி நாளை அனுப்பப்படும். தொடர்நிகழ்வுகள் தேதிகளும் உங்கள் கதை என்று வாசிக்கப்படவேண்டும் என்பதும் முன்கூட்டியே தெரியப்படுத்துவோம்
5. சந்தேகங்களும் தொடர்பும்
8939604745 எண் whatsApp மட்டுமே.சந்தேகங்களை அலைபேசி மூலம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 9442525191 (சுந்தரராஜன்) எண்ணைத் தொடர்புகொள்ளலாம்./ ilakkiyavaasal@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உங்கள் அலைபேசி எண்ணை மின்னஞ்சலில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
பெண்மையின் நவரசங்கள் -காப்பிய நாயகிகள்
கோமல் தியேட்டர்ஸின் அருமையான குறும்படங்கள் :
காப்பிய நாயகிகள் வரிசையில் —- ஆண்டாள் & சிகண்டி
காப்பிய நாயகிகள் வரிசையில் —- திரௌபதி
காப்பிய நாயகிகள் வரிசையில் —- சீதை
நடுப்பக்கம் – சந்திரமோகன் – புத்தக வெளியீடு
புத்தக வெளியீட்டு விழா
சந்திரமோகன் எழுதிய புத்தகம் ” சில நினைவுகள், சில கதைகள், சில கட்டுரைகள் ” .
அதன் வெளியீட்டு விழா, இனிதே நடந்தேறியது.
விழாவுக்கு தலைமை தாங்கி முதல் பிரதியை திரு. கேசவ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
அவர் படித்து பெரியவனாகி இந்த நூலைப்பற்றி பேசுவதாக கூறி பலத்த கை தட்டல்களுக்கிடையே அமர்ந்தார்.
விழாவிற்கு ஶ்ரீராம், ராஜி, அதிதி ஆகியோர் திரளாக வந்திருந்து நூலாசிரியரை வாழ்த்தினர்.
சந்திரமோகன் நன்றி கூற விழா இனிதே முடிந்தது
இது ஒரு குவிகம் வெளியீடு !
இந்தப் புத்தக்கத்தைப் பற்றிய முதல் கருத்து:
நினைவுகளுக்கென்று தனி அலைவரிசை உண்டு. அவை எப்போதும் தனி மனிதனுக்குச் சொந்தமானவை.
ஆனால் எப்போது அவற்றை வார்த்தைகளில் வடிக்கிறோமோ அப்போது அவை உலகிற்கே சொந்தமாகிவிடுகின்றன.
அதுதான் சந்திரமோகனின் இந்தப் புத்தகத்திலும் நிகழ்ந்திருக்கிறது.
அவர் கற்றதையும் பெற்றதையும் நினைவுகளாக, கதைகளாக, கட்டுரைகளாக அள்ளித் தெளித்திருக்கிறார் – விவசாயி நிலத்தில் விதைகளை விதைப்பதுபோல. சாரல்போல எளிய நடையில் நீர் வார்க்கிறார்.
சந்திரமோகனுக்கு அனுபவ அறிவு ஏராளம்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பல நிறுவனங்களில் நிதித்துறைத் தலைவராக இருந்து தற்போது சொந்த நிறுவனம் அமைத்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு வருகிறார்.
நல்ல மகனாக , நல்ல நண்பனாக , நல்ல உறவினராக , நல்ல கணவராக, நல்ல தந்தையாக , நல்ல அதிகாரியாக, நல்ல நிர்வாகியாக, நல்ல மனிதராக சந்திரமோகன் இருந்து வருகிறார் என்பது அவருடன் பழகியவர்களுக்கு மட்டும் தெரியும்.
இந்தப் புத்தகத்தைப் படித்தபின் அனைவருக்கும் அந்த உண்மை புலப்படும்.
ஆனால் இந்தப் புத்தகத்தின் நோக்கம் அது அல்ல.
படிப்பவர் மனதில் புதிய நெற்கதிர் விளைய வேண்டும்.
கண்டிப்பாக விளையும்! அதில் சந்தேகமில்லை!!
ஒரு குச்சி மிட்டாயும் இரண்டு கோபிகோ மிட்டாய்களும்.- செவல்குளம் செல்வராசு
ஒரு குச்சி மிட்டாயும்
இரண்டு கோபிகோ மிட்டாய்களும்

வண்டி விட்டு இறங்கி
இருவது நாளாச்சு…
நாலு நாள்ல கூப்டுறேன்னான்
குரங்கு மூஞ்சி மேனஜர்.
ஒரு வாரம் ஆனா நல்லதுனு
மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.
கழுகுமலைக்கு பஸ் ஏறும்போதே
மனசெல்லாம் மணந்தா மல்லிகா.
நல்லாத்தான் போச்சு
பத்து பகல்பொழுதும்
பதினஞ்சு ராப்பொழுதும்.
போன வாரம்
பாப்பாவைக் கூப்பிட்டுட்டு
பழங்கோட்டை திருவிழாவுக்குப் போய்
துளசி மதினி வீட்டுல
கறிக் கொழம்பு சாப்பிட்டு,
பாசமாக் கொடுத்தாகன்னு
அவளுக்கும் வாங்கிட்டுவந்தேன்
தூக்கு வாளில.
அன்னைக்கு ஆரம்பிச்சது சடவு
அவளுக்கும் எனக்கும்.
அப்பனுக்கு சுகர் கட்டுப் போட
தர்மாஸ்பத்திரில ரெண்டு நாளும்
அந்தோணி வாத்தியார்
மருந்தக் குடிச்சப்ப
கலாராணி ஆஸ்பத்திரில
ரெண்டு ராத்திரியுமாக
கழிஞ்சுபோச்சு இருவது நாட்கள்.
கைக்காசும் கரைஞ்சுபோச்சு
கடனும் கொஞ்சம் வாங்கியாச்சு
கழுத கோவமும் பெருகிப்போச்சு
ராத்திரி கூட கசந்துபோச்சு
சடவு சண்டையாகி
ரெண்டு நாளாப் பேச்சில்ல.
“மைப்பாறை அண்ணாச்சிக்குப் பதிலு
வண்டி மாத்திவிட வரச்சொல்லி
போன் போட்டாரு புள்ள”
சண்டையெல்லாம் மறந்திட்டு
கிட்டவந்து கேட்டா
“எப்பவாம்”
“இன்னைக்கு மத்தியானம் ஒரு மணிக்கு
இப்பக் கிளம்புனாத்தான் சரியா இருக்கும்”
கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்து
கண் கலங்கிச் சொன்னா
“சாரி (அ)த்தான்”
வெள்ளென தூத்துக்குடி போய்
கைலிய இறக்கிவிட்டு
“வணக்கம் சார்”னு நின்னேன்
ஆபிஸ் வாசல்ல.
“அடடா சொல்ல மறந்துட்டனேப்பா
ஏதோ லோடு மேன் பிரச்சனையாம்
லோடு நாளைக்குதான் ரெடியாகும்
நீ வேணா போயிட்டு நாளைக்கு வாரியா”
சமயம் பாத்துக் கழுத்தறுத்தான் மேனேஜர்.
என்னக் கண்டாலே பிடிக்காது அவனுக்கு
போன தீவாளிக்கு
அவன் ஒன்னுவிட்ட மச்சானுக்கு
வண்டி மாத்தி விடச் சொன்னப்ப
மாட்டேன்னுட்டேன்.
அதுலருந்தே இப்படித்தான்.
இயலாமையும் ஆற்றாமையும் பொங்க
ஊருக்குப் பஸ் ஏறினேன்
பிள்ளையார் கோவில்ல இறங்கி
வீட்டப் பாத்து நடந்தேன்.
ஏங்கி நிக்கும் பாப்பா முகம்
நினவு வர…
மிச்சமிருந்த சில்லற குடுத்து
பாட்டயா கடையில வாங்குனேன்
‘ஒரு குச்சி மிட்டாயும்
இரண்டு கோபிகோ மிட்டாய்களும்’
ஆன்ம வளர்ச்சி!- தில்லைவேந்தன்
ஆன்ம வளர்ச்சி!
மாலைக் கதிரோன் மேலைக் கடலை
மருவ மயங்கி வருகிறான்
காலை தொடங்கி உலகைச் சுற்றிக்
களைத்துக் காட்சி தருகிறான்
சேலை மடிப்பாய் அலைகள் நெளியச்
சிலிர்த்து மகிழ்ச்சி உறுகிறான்
வேலை முடிந்து வீடு திரும்ப
விழைந்து நுழைந்து மறைகிறான்!
மறையும் அழகோ மகிழ்வின் வடிவு
மகிழ்ச்சிக் குண்டோ முடிவு?
நிறையும் அமைதி வாழ்வின் முகிழ்ச்சி
நெஞ்சில் தெரியும் நெகிழ்ச்சி.
குறையும் இல்லை, கறையும் இல்லை
கொள்ளை இன்பக் கிளர்ச்சி
இறையின் தண்மை இயற்கைத் தன்மை
இதுவே ஆன்ம வளர்ச்சி!