தெலுங்கு இலக்கியத்தளத்தில் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக நன்கு பரிச்சயமான கவிதை உருவாக்கம் “நானிலு” பற்றிய அறிமுகத்தையும் அவற்றிற்கான இலக்கணத்துடன் “நானிலு” பிரம்மா தெலுங்குப் பல்கலைக்கழக முன்னாள் துணேவேந்தரும் “சாகித்திய அகாடமி” விருதாளருமான டாக்டர் கோபி அவர்களின் கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து எழுத்தாளர் “சாந்தாதத்” அவர்களால் எழுதப்பட்டக் கட்டுரையானது கவிஞர் “வதிலைபிரபா” அவர்களால் நடத்தப்படும் “மகாகவி” இதழில் அக்டோபர் 2017 ல் வெளியானது. அவ்விதழ் திரு. “கவிச்சுடர் கல்யாணசுந்தரம்” ஐயாவின் கரங்களில் கிடைத்தது தமிழன்னையின் மகுடத்தில் மற்றுமொரு இலக்கியச்சிறகு முளைப்பதற்கான நல்ல நேரமாக அமைந்தது ..
தெலுங்கில் இருபதிலிருந்து இருபத்தைந்து எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்நாலடிக் கவிதைகளினால் ஈர்க்கப்பட்ட ஐயா அவர்களால் 13.11.2017 அன்று தெலுங்கு நானிலு தழுவிய தமிழுக்கேற்ப சிறு மாற்றங்களுடன் புதிய வடிவத்தில் தமிழில் “தன்முனைக்கவிதை” (Self _Assertive Verses) எனப் பெயரிடப்பட்டு க. நா கல்யாணசுந்தரம் ஐயா தலைமையில் அன்புச்செல்வி சுப்புராஜூ,அனுராஜ்,சாரதா க சந்தோஷ்,ஜென்ஸி செல்வராஜ்,இளவல் ஹரிஹரன் ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு தனிக்குழுமம் முகநூலில் துவங்கப்பட்டது.
தன்முனைக் கவிதை என்பது ஒரு தவம் .வாசித்தவுடன் ஒருநொடி வாசிப்பவரை சிந்திக்கச் செய்யும் வண்ணம் இருப்பின் அதுவே ஆகச்சிறந்த கவிதை.
* உணர்வு மிகு வரிகளுக்குள் நாமும் பயணித்து உள்வாங்கி சொல்ல வரக் கூடிய கருத்துக்களை சிதையாமல் சுருக்கமாகச் சொல்லவேண்டும்.
* வரிக்கு இரண்டு அல்லது மூன்று எளிய சொற்கள் கொண்டு நான்கு வரிகளில் எழுதவேண்டும். கூடுமான வரையில் கூட்டுச்சொற்களை தவிர்ப்பது நன்று.
*முதலிரண்டு வரிகளில் ஒரு செயல் அல்லது செய்தி குறியீடாக வரவேண்டும் .. அடுத்த இரண்டு வரிகள் அதைச் சார்ந்தோ முரணாகவோ அமையுமாறு இருப்பின் சிறப்பு .
* 8-12 சொற்கள் என்பதால் தோன்றியதும் பதிவிடாமல் சிறு தெறிப்பு வருமாறு உருவாக்கம் செய்து பதிவிட்டால் ஆகச் சிறந்த கவிதையாக மிளிரும் .
*தன்முனைக் கவிதைக்கு தலைப்பிடல் வேண்டாம்.முக்காலங்களிலும் எழுதலாம். வேற்றுமொழிக் கலப்பின்றி எழுதவேண்டும்.கவிதையில் குறியீடுகள் அவசியமில்லை(punctuation)ஒற்றுப்பிழை இருக்கக் கூடாது.
மண் சார்ந்த மரபு,வாழ்வியல், இயற்கை, அறிவியல், அனுபவங்கள், உறவுகள், உணர்வுகள் இப்படி அனைத்து பாடுபொருள்களிலும் பொருள்செறிவுடன் எழுதவேண்டும்.
உதாரணமாக நான் வாசித்த ஒரு கவிதை பாருங்கள்.
அரிசி மணியில்
சித்திரம் அழகு!
சோறாகும் போது
இன்னும் அழகு!
(மூலம் : எஸ். ஆர். பல்லம்)
இக்கவிதையில் என்னவொரு ஆழம் பாருங்கள்… அரிசிமணியில் சித்திரம் வரைதல் அவ்வளவு எளிதல்ல.. மிகவும் கவனமும் நுணுக்கமும் தேவை… அவ்வாறு வரைதல் என்பது மாபெரும் கலை…
ஆனால் அந்த அரிசியை விளையச் செய்வது அதனினும் கடினம்… அர்ப்பணிப்பு உணர்வுடனே ஒவ்வொரு விவசாயியும் பாடுபடுகிறார் .. அவ்வாறான அரிசியின் உண்மையான பயனான ஒருவரின் வயிறு நிறைவடையச் செய்தல் மிகவும் சிறப்பு.
“அரிசி மணியில்
சித்திரம் அழகு”
இங்கு நிறுத்தி இந்த இரு வரிகளை உள்வாங்குங்கள்.சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்..காட்சி விரிவடையும்… மனம் மகிழும்.நிதானித்தப் பின் அடுத்த இரு வரிகளை வாசியுங்கள்…
“சோறாகும் போது
மனசு நிறையும்.”
ஆகா… உண்மையாகவே மனசு நிறைகிறதல்லவா? அரிசி எதற்காக உருவாக்கப் பட்டதோ அதன் பயனை அடைந்தது … உயிரின் பசி தீர்த்தலே உன்னதமாகும் என்பதினை அழகுற உணர்த்துகிறது… இதுவே தன்முனைக் கவிதையின் சூட்சுமம்.
முகநூல் தாண்டி திரு.வதிலைபிரபா நடத்தும் “மகாகவி”இதழ் தொடர்ந்து தன்முனைக் கவிதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முகநூலிலும் கவிஞர்கள் ஆர்வமுடன் எழுத முதன்முதலில் 01/07/2018 அன்று “நான்…நீ… இந்த உலகம்” என்ற தொகுப்பு நூல் தொகுப்பாசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் 31 கவிஞர்கள் எழுதிய 465 கவிதைகளுடன் “ஓவியா பதிப்பகம்” வெளியீடாக வந்தது. அதனைத் தொடர்ந்து “இனிய உதயம்” மகாகவி, காணிநிலம்,கவிஓவியா,மின்னல்,தமிழ்ப்பணி, அருவி,ஏழைதாசன்,இனிய நந்தவனம்,பொதிகை மின்னல் போன்ற இலக்கியத் திங்களிதழ்கள் மற்றும் தமிழ் நெஞ்சம், கொலுசு, கவிதைப் பெட்டகம்,காற்றுவெளி, போன்ற மின்னிதழ்களும் கவிதைகளை வெளியிட்டு வருகின்றன.
பல முகநூல் குழுமங்களிலும் பன்னாட்டு கவிஞர்களும் தன்முனைக் கவிதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகின்றனர்.
தன்முனைக் கவிதைகளுக்கென கவியரங்கங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
தன்முனைக்கவிதைக்கான பன்னாட்டு அங்கீகாரமாக “அங்கோர் வாட், கம்போடியா” நாட்டில் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கின் ஒரு அங்கமாக “வானம் தொடும் வண்ணத்துப்பூச்சி”என்ற 52 கவிஞர்களின் தொகுப்புநூல் 21/09/2019 அன்று வெளியிடப்பட்டு தமிழார்வலர்களின் பாராட்டினைப் பெற்றது. இந்நூலின் தொகுப்பாசிரியர். க.நா.கல்யாணசுந்தரம்.இணையாசிரியர்கள்.அன்புச்செல்வி சுப்புராஜூ,சாரதா க சந்தோஷ்,அனுராஜ்,இளவல் ஹரிஹரன் மற்றும் ஜென்ஸி ஆகியோர்கள்.
தன்முனைக் கவிதைகளின் தனிமனிதர் நூல் வரிசையில் கவிஞர்.இளவல் ஹரிஹரன் அவர்களின் “குழந்தை வரைந்த காகிதம்” முதல் நூலாக அக்டோபர் 2018ல் வெளிவந்தது.
ஏப்ரல்_2019ல் பேராசிரியை காரை மேகலா அவர்களின்”சுவரோரச் செம்பருத்தி”, முதல் பெண் கவிஞரின் நூலாக வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து மேலும் பல நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.அன்புச்செல்வி சுப்புராஜூ தொகுப்பாசிரியராக 25 பன்னாட்டு பெண் கவிஞர்களின் தன்முனைக்கவிதைகள் கொண்டு “மகரந்தம் தூவும் மலர்கள்” என்ற தலைப்பில் பெண் கவிஞர்களுக்கான முதல் தொகுப்பு நூலாக வெளிவரவிருக்கிறது.
மேலும் தனிமனிதராக கவிஞர்.ஜென்ஸி அவர்கள் இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தன்முனைக் கவிதைகளை எழுதியுள்ளது பாராட்டுக்குரியது.தொடர்ந்து எழுதிக்கொண்டுள்ளார்.
தளிர்நடையிட்ட தன்முனைக் கவிதைகளின் தளம் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே போவதில் தமிழ் இலக்கிய உலகம் பெருமகிழ்வு கொள்கிறது என்றால் மிகையில்லை.
அருமை
LikeLike
நன்றி
LikeLike
நானிலு கட்டுரை அருமை
கன்னிக்கோவில் இராஜா
சென்னை
LikeLike
தன்முனைக் கவிதைகளை சிகரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் எப்போதும் கவிதாயினி அன்புச்செல்வி சுப்புராஜூ மற்றும் சாரதா சந்தோஷ் அவர்கள் சிறப்பான பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். குவிகம் மின்னிதழுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.
LikeLike
இரண்டு சகோதரிகளுக்கும்
அன்பு தம்பியின் வாழ்த்துகள்
LikeLike
நல்வாழ்த்துகள் .சகோதரி..
LikeLike
அருமையாய் உள்ளது அம்மா
எனக்கு இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்… எப்படி தொடர்பு கொள்வது அம்மா
LikeLike