மலை அரசன் ஹம்பாபா கில்காமேஷிடிடம் தோல்வியுற்று தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். தாய் அன்பைப் பற்றிக் கூறி அவன் மனதில் தன்மீது பாசம் ஏற்படச் செய்தான் ஹம்பாபா.
கில்காமேஷின் மனம் கொஞ்சம் இளகித்தான் இருந்ததது. ஆனால் எங்கிடு தயவு தாட்சணியம் இன்றி ஹம்பாபாவைக் கொல்வதுதான் உசிதம் என்று ஆணித்தரமாகக் கூறினான்.
முடிவில் கில்காமேஷ் தனது கோடாலியை எடுத்துக்கொண்டு செயலாற்று நின்ற ஹம் பாபாவை வெட்டினான். இரண்டாவது வீச்சு எங்கிடுவினுடையது. மூன்றாவது வீச்சு விழும் முன்னர் ஹம்பாபா அடியற்ற மரம் போல வீழ்ந்தான்.
காட்டின் தலைவன் ஹம்பாபா விழுந்தவுடன் காடே ஸ்தம்பித்துப் போய்விட்டது. செடார் மரங்கள் எல்லாம் ஒரு பேயாட்டம் ஆடி நிலைத்தன. மலைகளும் ஒரு ஆட்டம் ஆடி நின்றன. கில்காமேஷ் அனைத்து செடார் மரங்களையும் தன் கோடாலியால் வெட்டி வீழ்த்தினான். எங்கிடு அவன் வெட்டிய மரங்களின் வேர்களில் தீயை வைத்தான். ஹம்பாபாவின் ஏழு மாயங்களும் அழிந்து போயின. ஹம்பாபாவுக்குப் பாதுகாப்பாக இருந்த காட்டரண் முழுவதுமாக அழிக்கப்பட்டது. கொடூரத்தின் வடிவாக இருந்த ஹம்பாபாவின் ஏழு ஜோதிகளையும் நரகம், பாபம், சாபம், தீ, சிங்கம் போன்றவற்றிற்குக் கொடையாக அளித்தான் கில்காமேஷ்.
பின்னர் அவர்கள் இருவரும் ஹம் பாபாவின் உடலை என்விலின் பலி பீடத்தில் கிடத்தினார்கள். அவன் முகத்தையம் உடலையும் துணியால் போர்த்தி அவனைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தார்கள். ஹம்பாபாவின் தலையைக் கொய்தெடுத்து கடவுளுக்குப் படைத்தார்கள்.
மாபெரும் வெற்றி பெற்ற கில்காமேஷ் பேரழகனாகக் காட்சி அளித்தான். அவன் அழகைக் கண்டு மயங்கிய இஷ்டார் என்ற என்ற காதல் தேவதையே அவன் மீது காதல் கொண்டாள்.
” அழகும் வீரமும் கொண்ட கில் காமேஷ்! என்னைத் திருமணம் செய்துகொண்டு எனக்குப் பிள்ளை வரம் கொடு. ! உன்னை என் நாட்டின் மன்னனாக்கின்றேன்” என்று துடிதுடித்தாள்.
ஆனால் கில்காமேஷ் அவளின் காதல் லீலைகள் அனைத்தையும் அறிந்தவன். அவளது பழைய காதலர்கள் எல்லாரும் அவளைத் தகிக்கும் நெருப்பு என்று கூறுவதையும் அறிந்திருந்தான். காதல் என்ற பெயரில் பல வீரர்களின் வாழ்வை அழித்தவள் அவள். அதனால் அவளிடம் தைரியமாக,
” இஷ்டார்! உன் காதலர்களின் கணக்கும் கதியும் எனக்கு நன்றாகவே தெரியும்! நீ எத்தனை பேரைக் காதலித்துக் கைவிட்டிருக்கிறாய் என்பதையும் நான் நன்றாக அறிவேன். பறவை அரசனைக் காதலித்தாய். அவன் சிறகுகளையெல்லாம் வெட்டி எறிந்த கொடுமைக்காரி நீ! அதன்பின் சிங்கத்தைக் காதலித்தாய்! அதையும் உன் தேவை முடிந்தபிறகு பெரிய குழிக்குள் விழுந்து மாளச் செய்தாய்! பின் யுத்தக் குதிரையை உன் காதல் வலையில் விழ வைத்தாய்! அவன் தாகத்திற்குத் தண்ணீர் தராமல் ஓட ஓட விரட்டினாய் ! அடுத்தவன் ஆட்டு மைந்தக்காரன்! அவன் உனக்காக எத்தனை ஆடுகளைப் பலி கொடுத்திருக்கிறான்? உன் காதல் பசி தீர்ந்த பிறகு அவனை ஓநாயாக மாற்றி அவன் ஆட்களே அடித்துக் கொல்லும் படிச் செய்தாய்! பிறகு அந்த தோட்டக்காரன்! உனக்காகக் கூடை கூடையாகப் பேரீச்சை கொடுத்து வந்தான். நீ அவனை அனுபவித்துவிட்டுப் பின்னர் அவனை வண்டாக மாற்றிப் பறக்க வைத்தாய் ! இப்படிப்பட்ட நீ என்னைக் காதலிப்பதாகக் கூறுகிறாய்! இவர்கள் கதி எனக்கும் நேராது என்பது என்ன நிச்சயம்?
கில்காமேஷ் சிரித்துக் கொண்டே கூறித் தன்னை நிராகரித்ததைக் கேட்ட இஷ்டாருக்குக் கெட்ட கோபம் வந்தது.
நேராகத் தன் தந்தையிடம் சென்றாள்.
அவள் தந்தை அனைத்துத் தேவர்களின் தந்தை என்று அழைக்கப் படும் ‘அணு’ என்பவர். உலகத்தைப் படைத்தவர் அவர் என்பதால் அவரை அனைவரும் மரியாதையுடன் போற்றி வணங்குவர்.
“தந்தையே! என்னை கில்காமேஷ் கேவலப்படுத்தி விட்டான். நான் செய்த பழைய காட்சிகளை என்னிடமே சொல்கிறான்! அவன் அழிய வேண்டும். ” என்று கோபத்தோடு மொழிந்தாள்.
” அவன் ஏன் உன் பழைய கதைகளைக் கிளறினான்? ” மகளைப் பற்றி நன்கு அறிந்த தந்தை வினவினார்.
” அது அப்படியோ போகட்டும். சொர்க்கத்திலிருந்து அந்த கொலைவெறி எருதினை உடனே அனுப்பி கில் காமேஷுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் நான் மேல் உலகத்தாரையும் கீழ் உலகத்தாரையும் கலக்கச் செய்து குழப்பம் விளைவிப்பேன். செத்தவர்களை எழுப்பி உணவுப் பாண்டங்களைத் தின்று தீர்த்திடச் செய்வேன்” என்று தந்தையையே மிரட்டினாள் இஷ்டார்.
இதைக்கேட்ட அணு சுவர்க்கத்திலிருந்த பயங்கர எருதினை சேணம் போட்டு மகளிடம் கொடுத்து ஊருக் நகருக்கு எடுத்துச் செல்லும்படி கூறினான்.
அவளும் வெகு ஜாக்கிரதையாக நகருக்குள் அதை அனுப்பினாள். எருதின் முதல் மூச்சு ஊருக் நகரின் சுவர்களில் விரிசலை ஏற்படுத்தியது. இரண்டாவது மூச்சு விட்டபோது நகருக்குள் நூறு வாலிபர்கள் செத்து மடிந்தனர். எருதின் மூன்றாவது மூச்சு நேரடியாக எங்கிடுவைத் தாக்கியது. எங்கிடு அதன் தாக்கத்தைச் சமாளித்துக் கொண்டு ஒரே தாவாகத் தாவி அதன் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டான். எருது எங்கிடுவை வாலால் அடித்து அவனைக் கீழே தள்ளிவிட முயன்றது. எங்கிடு தைரியமாக கில்காமேஷை அழைத்து , ” நண்பா! நாம் புகழின் ஏணியில் உயரே செல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம். நீ உன் வாளை எருதின் தோளில் சொருகு. என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது” என்று கூறினான்.
கில்காமேஷ் உடனே பாய்ந்துவந்து ஒரு கையால் எருதின் வாலைப் பிடித்திழுத்துத் தன் வாளால் அதன் கழுத்தில் குத்தினான். சொர்க்கத்தின் சிறப்பு வாய்ந்த அந்த எருது செத்து விழுந்தது. அதன் இதயத்தை வெட்டி எடுத்து சூரியக் கடவுளான காமேஷுக்குப் படையல் செய்தனர்.
சுவர்க்கத்தின் எருது மடிந்ததைக் கண்ட இஷ்டார் மிகக் கோபமடைந்து கில்காமேஷை சபிக்க வந்தாள். அப்போது எங்கிடு எருதின் வலது தொடையை வெட்டி அவள் மீது எறிந்தான். ‘ஊருக் நகரின் உள்ளே வந்தால் எருதின் குடலை உன் உடம்பில் கட்டிவிடுவேன்’ என்றும் எங்கிடு முழங்கினான். ஊரெல்லாம் கேட்கும்படி அழுகுரலில் ஒப்பாரி வைத்த வண்ணம் இஷ்டார் ஊருக் நகரைவிட்டு வெளியேறினாள்.
கில்காமேஷூம் எங்கிடுவும் மகிழ்ச்சிப் பெருக்கத்தில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
ஊருக் நகர மக்கள் அனைவரும் ” உலகில் சிறந்த வீரன் கில்காமேஷ்தான் ” என்று பாடல்கள் பாடினார்கள்.
ஆனால் அந்த சுவர்க்க எருதைக் கொன்றதனால் எங்கிடுவின் உயிருக்கு ஆபத்து வந்தது!
(தொடரும்)
இஷ்டார் என்ற காதல் தேவதையின் அழகான ஓவியத்தை வெளியிட்டு இருக்க கூடாதா?
LikeLike
என்ன விறுவிறுப்பு! என்ன பரபரப்பு! என்ன கதைகதைப்பு! குவிகம் வெளியாகும் நாளில், முதலில் படிக்கத் தேடுவது ‘கில் காமேஷ்’ தான்!
LikeLike