(தேவகியிடம் இருந்த பெண் குழந்தையான மாயையின் கால்களைப் பற்றி ஓங்கி அடித்துக் கொல்ல கம்சன் முயன்றான்.
அக்குழந்தை அவனிடம் இருந்து நழுவி மேலே சென்று துர்க்கையாகக் காட்சி தந்தது…..)
கம்சன் அஞ்சி நிற்றல்
தூண்டிற்பொன் மீனைப் போலும்,
சுடரெரிகொள் மெழுகைப் போலும்,
மூண்டபெரும் இடியைக் கேட்டு
முடங்கிடுமோர் அரவம் போலும்,
கூண்டுக்குள் மாட்டிக் கொண்ட
கொடியவரிப் புலியைப் போலும்,
மீண்டெழுந்த மாயை கண்டு
மெய்முழுதும் நடுங்க நின்றான்
(தூண்டிற்பொன்- தூண்டிலில் உள்ள இரும்பு முள்)
மாயை கம்சனிடம் கூறுவது
“மோதியே கொல்ல எண்ணி
மூடனே, நீயும் என்றன்
பாதமே பிடித்த தாலே
பரிவுடன் பிழைபொ றுத்தேன்;
ஆதியும் வேறி டத்தில்,
ஆற்றலாய் வளரு கின்றான்,
சாதலும் அவனால் என்றே
சற்றுநீ அறிந்து கொள்வாய்!”
(ஆதி- திருமால்)
மாயை மறைந்து, மண்ணில் பல இடங்களில் பல வடிவம் எடுத்தல்
மறைந்தனள் மாயை, இந்த
மண்ணிலே வேறு, வேறு,
சிறந்தநல் இடங்கள் தோறும்
திகழ்ந்தனள் பெயர்கள் மாறி;
அறந்தனைக் காக்க வேண்டி,
அவள்பல வடிவம் தாங்கிச்
செறிந்திடும் கோவில் கொண்ட
திருக்கதை சிலிர்க்கச் செய்யும்.
குறிப்பு:
விஷ்ணு துர்க்கை, பத்திரகாளி, விஜயா,வைஷ்ணவி,குமுதா,
சண்டிகை, கிருஷ்ணை, மாதவி, கன்னிகை, நாராயணி, சாரதா, அம்பிகா போன்ற பல பெயர்களில் மாயையைப் பல இடங்களில் அடியார்கள் வழிபடுவதை இன்றும் காணலாம்
தேவியைப் போற்றி வேண்டுதல்
( கவிக்கூற்று)
இம்மையும், மறுமை மற்றும்
இனிவரும் பிறவி எல்லாம்
செம்மையாய் வாழ்வ தற்குத்
திருவருள் புரிவோய் போற்றி!
வெம்மையாம் வினைகள் நீங்க
விதவித வடிவம் கொள்ளும்
அம்மையே, அன்பே, போற்றி!
ஆட்கொளும் தேவி போற்றி!
சேயெலாம் முகத்தைப் பார்க்கத்
தேம்பிடும் வேளை இங்குத்
தாயென இடங்கள் தோறும்
தந்தனை காட்சி அம்மா!
தீயெனத் தீமை யாவும்
தீர்த்திட வேண்டும் அம்மா!
ஈயென வரங்கள் கேட்டோம்
இரங்கிட வேண்டும் அம்மா!
தன் தவற்றை உணர்ந்து வருந்திய கம்சன் தேவகியிடம் கூறுவது
கடுஞ்சொல்லால் காயங்கள் தந்தேன் தங்காய்,
கனிவின்றிக் குழந்தைகளைக் கொன்றேன் தங்காய்,
கொடுஞ்செயல்கள்,கொலைச்செயல்கள் பலவும் செய்தேன்,
குற்றமென உணர்ந்துவிட்டேன், பொறுப்பாய் தங்காய்,
அடுஞ்செயலைப் புரிகின்ற அம்பாய் ஆனேன்,
ஆர்க்கின்ற வினைப்பயன்தான் எய்த வில்லாம்.
படுந்துன்பம் முடிந்தினிமேல் விடுத லைதான்
பதியுடனே அரண்மனைக்குச் சென்று வாழ்வாய்!
மாயை சொன்னதை எண்ணிக் கம்சன் தவித்தல்
பாங்காக வளர்கின்றான் வேறி டத்தில்,
பரந்தாமன் என்றவுண்மை அறிந்த தாலே,
பூங்காற்றும் புயல்போல வீசு கின்ற
போராண்மைப் பெருநாட்டின் மன்னன் கம்சன்,
தூங்காமல் அச்சத்தால் கலங்கி உள்ளம்
துடிதடித்தான், தன்னைக்கொன்(று) உயிரை இங்கு
வாங்காமல் விடமாட்டான், அதைத்த டுக்கும்
வழியறிய வேண்டுமென எண்ணம் கொண்டான்
பத்து நாள்களுக்குள் பிறந்த குழந்தைகளைக் கொல்ல அமைச்சர்கள் வலியுறுத்தல்
முத்தணிசெய் முடிசூடும் மன்னன் கம்சன்
மூண்டவற்றை அமைச்சரிடம் விளக்கிக் கூற,
அத்தனையும் கேட்டவரும் அதிர்ச்சி கொண்டார்,
ஆத்திரத்தால் அறிவிழந்தார், உடனே சொன்னார்,
“பத்தென்ற நாள்களுக்குள் பிறந்து வாழும்,
பால்மணமே மாறாத குழந்தை எல்லாம்
இத்தரையில் இங்குள்ள ஊர்கள் தேடி,
இகலரக்கர் சென்றுடனே கொல்ல வேண்டும்!”
(இகலரக்கர் – பகையுணர்ச்சி/ போர்க்குணம் உடைய அரக்கர்)
( தொடரும்)
அருமை வார்த்தை ஜாலங்கள் எளிமை
தின்ன தெகிட்டாத இனிய படைப்பு
LikeLike
Aduthu varum kaviamuthai padikka miga aarvam konden. Arumai kavithai, azagukkavithai, nanbar natarasare annu Vanakkam.. Vazhga vazhga. N nagarajan c j porur.
LikeLike
அருமையான வார்த்தை ஜாலங்கள். எல்லாம் ஆதி மாயையின் அருள்.
LikeLike
அ.ருமையான படைப்பு.மிகவும் ரசித்துப்படித்தேன்.
LikeLike