முழவு எனும் மத்தள ஒலி, ‘தம்,தம்,’ என ஒரு தாளகதிக்கேற்ப முழங்குகிறது. கரிகால் பெருவளத்தானின் சோழநாடு! புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடும் காவேரியின் கரையில் ‘கழார்’ எனும் நீர்த்துறையில் மக்கள் ஆவலாகக் கூடியுள்ளனர். சேரர்குலச் செம்மல், யானையின் கம்பீரத்துடனும், சிங்கத்தின் செருக்குடனும் சேரமன்னன் ஆட்டன் அத்தி, மாமன்னன் கரிகாலன் உடன்வர, கரிகாலன் மகளும் தன் மனையாளுமான ஆதிமந்தி பல்லக்கில் வர, யானைமீது வந்து நீர்த்துறையில் இறங்குகிறான். மக்களின் ஆரவாரம் விண்ணைப்பிளந்தது. புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடும் காவேரியில் நீர்விளையாட்டுகளை கரிகாலன் ஆண்டுதோறும் நிகழ்த்திக்களிப்பது வழக்கமாகும். இது மிகப்பெரிய விழாவுமாகும். இவ்வாண்டு மகளும் மருமகனும் இருப்பதால் இன்னும் களைகட்டி விட்டது. ஏன் தெரியுமா? அரசன் ஆட்டனத்தி, வாளேந்தி நாட்டைக்காப்பது மட்டுமின்றி, நடனத்திலும் வல்லவன். நீர்மேல் ஆடும் நீச்சல் நடனத்தில் வல்லவன். ஆடலைப் பயில்விப்பதிலும் அவனுக்கு நிகர் அவனே! அதனாலேயே ‘ஆட்டன் அத்தி’ என்றழைக்கப்பட்டான்.
நீர்நடனம் தாளகதிக்கேற்பத் துவங்கிவிட்டது. ஆட்டனத்தி நீரில் மூழ்கியும் எழுந்தும் புரண்டும் பல சாகசங்களைச் செய்துகாட்ட மக்கள் கண்டுகளித்தனர். தன் சிவந்த அடியிலணிந்த வீரக்கழல் புரள, நீரில் நடனமாடிக்கொண்டே மூழ்கிக் கால்கழலைப்புரட்டி ஒலிக்கச்செய்தான். எங்கும் ஒரே ஆரவாரம்!
அதுமட்டுமா? இடைக்கச்சு நழுவாதிருக்க வயிற்றின்மேல் ‘பொலம்பாண்டில்’ எனும் பொன்னாலான அணிகலனை அணிந்திருந்தான். அதில் கோர்த்த மணிகள் மட்டும் ஒலிக்கும்வண்ணம் வயிறுமட்டுமே மேலே தெரியும் விதத்தில் புரண்டு உருண்டு ஆடிக்காட்டினான். இப்போது வாழ்த்தொலி விண்ணைப்பிளந்தது!!
‘ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண
தண் பதம் கொண்டு தவிர்த்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடி புரள
………..
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து….’ என்னும் புலவர் பரணரின் அகநானூற்றுப் பாடல் இந்த அற்புதமான அதிசய நடனத்தைப் பதிவாக்கிய சரித்திரச்சான்று.
(பின் என்னாவாயிற்று என்பவர்களுக்காகச் சுருக்கமாக:
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட ஆற்றுவெள்ளத்தில் ஆட்டனத்தி காவேரியாற்றால் கவர்ந்து இழுத்துச் செல்லப்பட்டான். ஆதிமந்தி தன்கணவன் இறக்கவில்லை என நம்பினாள்; ஆற்றங்கரையோர ஊர்களுக்கெல்லாம் சென்றலைந்து அவனைத் தேடி, காணாமல் வாடினாள். ஒருபுறம் கரைஒதுங்கிய ஆட்டனத்தியை மருதி என்னும் மற்றொரு நடனமாது காப்பாற்றி அவனுடன் வாழ்ந்துவந்தாள். சிலநாட்களின் பின்பு காதல்கணவனைத் தேடிவந்த ஆதிமந்தியிடம் அவனை ஒப்படைத்துவிட்டு மருதி ஒலிக்கும் கடலில் புகுந்து தன்னை மாய்த்துக் கொண்டாள் என்பது இக்கதையின் முடிவு).
*****
பழங்காலத்தில் இத்தகைய நீர்விளையாட்டுகள் காவேரியில் புதுவெள்ளப்பெருக்கின்போது நடைபெற்றன. இந்த வெள்ளப்பெருக்கு விழாவினை இக்காலத்தில் நாம் கொண்டாடும் ஆடிப்பெருக்கு எனக்கூற வாய்ப்புள்ளது.
ஆம், இந்த வழக்கம் நகரங்களில் அருகி விட்டது; சமையல், வீட்டிலேயே பூஜை என ஆகி விட்டது. என் சிறுமிப் பருவத்தில் நாங்கள் ஈரோட்டில் சில ஆண்டுகள் வாழ்ந்தோம். ஓராண்டு, பக்கத்து வீட்டாருடன் பதினெட்டாம் பெருக்கு எனப்படும் ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரைக்குச் சென்றோம்.
முதிர்ந்த பெண்களும் மணமான பெண்களும், ஆகாத கன்னியரும் ஓலைக்கூடைகளில் சிறிய அகல்களை ஏற்றிவைத்து, உடன், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம், மஞ்சள் குங்குமம், காதோலை, கருகுமணி வைத்து ஆற்றுநீரில் மிதக்கவிட்டுக் காவேரி அன்னையை வணங்குவார்கள். இவை அடுக்கடுக்காக ஆடியசைந்து நீரில் மிதந்து செல்வது கண்கொள்ளக் காட்சியாக இருந்தது.
பின்பு கையோடு கொண்டு வந்திருந்த சித்திரான்னங்களை உண்டுவிட்டு, நாங்கள் ஆற்றங்கரை மணலில் விளையாடினோம். சிறுவர்களும் ஆண்களுமாக புதுநீரில் குதித்து விளையாடினதை அச்சத்துடனும் ஆவலுடனும் கண்டு களித்தோம். பசுமையாக நினைவிலிருக்கிறது.
வைகையாற்றிலும் பண்டை நாட்களில் இந்தப் புனல்விளையாட்டுகள் நடைபெற்றன எனப் பரிபாடல் மூலமாக அறிந்து கொள்கிறோம். மதுரை மக்கள் அதனைக் கொண்டாடிய விதம் எவ்வாறு?
*****
மழைபெய்து மலையில் அருவிநீர் பெருகியோடுகிறது. வைகை ஆற்றில் புதுவெள்ளமாகப் பெருக்கெடுத்தது. மக்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது.
“மனோன்மணி, வாடி, அன்னையுடன் ஆற்றுக்குப்போய் பூசைசெய்து நீராடிவிட்டும் வருவோம்,” என்றாள் செந்தாமரை. பொங்கிவரும் புதுவெள்ளத்தில் நீராட இளையோர் அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். பூசைக்கு வேண்டிய வெற்றிலை, பாக்கு, பூ பழங்களுடன் தூபம், தீபம் எல்லாவற்றையும் கூடையில் சேகரித்தாள் செந்தாமரை. காதோலை, கருகுமணி, கைவளையல் ஆகியவற்றையும் அவற்றுடன் சேர்த்தாள் மனோன்மணி.
“இந்தா, இந்தப் பொன்மீன்களை மறந்துவிடாதே!” எனப் பொன்னால் செய்யப்பட்ட சில சிறிய மீன்வடிவங்களைப் பாட்டிக்கிழவி அவர்களின் சேலைத்தலைப்பில் முடிந்துவிட்டாள். மலர் முதலான பூசைப்பொருள்களுடன் பொன்மீன்களையும் நீரில்தூவி வழிபடுவது அவர்களது வழக்கம்.
“தூபத்துக்கான சாம்பிராணியும் தீபத்துக்கு நெருப்புக்கனலும் வேண்டாமோ? அப்படி என்ன அவசரமோ உங்களுக்கு?” எனச் செல்லமாகக் கடிந்துகொண்ட அவர்கள் தாய் அவற்றையும் எடுத்துக்கொடுத்தாள்.
“பூசைமுடிந்ததும் நீரில்துளைய ஓடிவிடுவீர்களே! ஈரணியை (நீராடுவதற்கான உடை) அணிந்துகொண்டீர்களா? மாற்று உடைகளையும் எடுத்துக்கொண்டீர்களோ?” எனக்கேட்டவாறு வாசனைப்பொடிகளையும், எண்ணெய்ப் பாத்திரத்தையும் கொடுக்கிறாள்.
“ஆயிற்றம்மா!” கண்களில் அவசரமாக மைதீற்றியவாறு மனோன்மணி விடைகூறுகிறாள். ஈரணியின் கச்சையை இறுக்கிக் கட்டியவாறே அம்மையின் கண்களில் படாதவாறு செந்தாமரை வண்ணநீர்ப்பீச்சாங்குழலையும் சிவிறியையும் (நீரை வீசி விளையாடும் ஒரு கருவி) எடுத்துக்கொள்கிறாள்: கூடைக்கு அடியில் இவற்றை ஒளிப்பவளைக் கண்ட தாய் காணாததுபோல் இருந்துவிடுகிறாள். அவளும் ஒருகாலத்தில் இளம்பெண்ணாக இருந்து, களவில் ஈடுபட்டுக் கடிமணம் செய்தவள்தானே? உள்ளுக்குள் புன்னகைத்துக்கொள்கிறாள்.
இளைஞர்கள், இளநங்கைகளின் முன்பு நீர் விளையாட்டுகளில் தம் திறமையைக்காட்ட எண்ணி குதிரைகள்மீது ஆரவாரித்தபடிச்செல்கின்றனர். எங்கும் உற்சாகக்குரல்கள்; களிப்பின் ஆரவாரத்துடன் நீரின் ஆரவாரமும் சேர்ந்தொலிக்கிறது.
வையைப்புனலில் காதலர் மனமொன்றி நீர்விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்; உள்ளங்கள் புதுவெள்ளமாய் காதலில், ஆடலில், பாடலில் பொங்கியெழுகின்றன; இப்புதுவெள்ளம் இளங்காதலரின் ‘ஒழுக்கம் நிறைந்த கட்டுப்பாடு’ எனும் அணையைத் தகர்த்துவிடுகின்றது! நீர்விளையாட்டுகளில் ஈடுபடும் காதலர்களின் தழுவுதலில் அவர்களது ஆபரணங்கள் கலக்கின்றன; ஒலிக்கின்றன. பெண்கள் கன்னங்களிலும் மார்பிலும் பூசிக்கொண்ட செம்பஞ்சுக்குழம்பும், சந்தனமும் அழிந்து நீரில் கரைந்தோடுகின்றது. மாலைகளும் கோதைகளும் மணம்வீசியபடி வைகையாற்று நீரில் மிதந்து செல்கின்றன. வைகையின் நீரும் அணைகளையெல்லாம் உடைத்துப் பெருகிற்று. வெள்ளம் இருகரைகளையும் மோத, அதன் அலைகளாகிய சிறகுகள் கரையை உடைத்தன; கரை உடைப்பெடுத்ததைப் பறைஅறைந்து மக்களுக்கு அறிவிக்கிறார்கள்.
‘முலையும் மார்பும் முயங்கணி மயங்க
விருப்பு ஒன்று பட்டவர் உளம் நிறை உடைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை; வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைகெனும்
உரைச்சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று,’ என வைகையின் புகழ்பாடுகின்றது பரிபாடல்! இதனைப் பாடி வைத்தவர் புலவர் நல்லந்துவனார். பாலையாழ் (தற்காலத்து ஹரிகாம்போதி!) எனும் பண்ணில் பண் வகுத்தவர் (இசையமைத்தவர்) மருத்துவன் தாமோதரனார்.
உயரமான மரக்கிளைகளிலிருந்து ‘தொப்’பெனத் தாவி நீரில் பாய்கின்றனர் வீர இளைஞர்கள். ஒரு இளமங்கை தனது முத்துவளையலை நீர் கொண்டோடி விட்டதெனப் பொய்யாகக் கூக்குரலிடுகிறாள்; அதனை மீட்டுத்தர வேண்டி சில இளைஞர்கள் நீரினுள் பாய்கின்றனர். ஆழமான சுழலின் அடியில் ஒருவன் விரைவதைப் படபடக்கும் உள்ளத்துடன் பார்த்தபடி அவள் நிற்கிறாள்: “இதோ, உன் வளை,” என அவளுக்காக முன்கூட்டியே வாங்கிவந்து தன் அரைக்கச்சையில் செருகிவைத்திருந்ததை அவளிடம் நீட்டுகிறான் அந்த ஆணழகன்; அவளுடைய கள்ளத்தையும் அவனுடைய உள்ளத்தையும் அவர்கள் இருவர் மட்டுமே அறிய, அவள் கன்னம் நாணத்தில் சிவக்கிறது; அவன் நெஞ்சம் உவகையில் பூரிக்கிறது.
தம்மை மறந்து நிற்கும் இக்காதலர் மீது புனுகுநீரைப் பீய்ச்சியடிக்கிறாள் அவளுடைய தோழி!
வழியெல்லாம் சிறுசிறு ஓலைக்கூடைகளில் தெப்பம்போலச் சிலதீபங்கள் மின்னி மிதந்தபடி தெய்வீகமாக அசைந்தாடி வருகின்றன. சில, புனலின் வேகத்தில் ஓடோடியும் செல்கின்றன. தன்னருகில் மிதந்த தீபத்தை பயபக்தியுடன் கண்ணில் ஒற்றிக்கொள்கிறாள் ஒரு இளமங்கை. இது வையைக்காட்சி!
இத்தகைய நீர்விளையாட்டுக் காட்சிகளை கவிதைக்கண் கொண்டுபார்க்கும் நாம் சிலபாடல்களையாவது காதால் கேட்கமாட்டோமோ என ஏங்குகிறோம். அதற்குத்தான் சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்) நமக்குத் துணைநிற்கிறதே! திரும்பக் காவேரிக்கரைக்குப் போகலாமா?
‘புகழ்வாய்ந்த சோழமன்னனின் துணைவியான காவேரி, அவன் தனது செங்கோலைச் செலுத்தி கங்கை என்பவளைக் கூடினாலும் அவன்மீது சினம்கொள்ள மாட்டாள். அவளுடைய இந்த குணம் உயர்வான கற்பின் தன்மையால் வந்தது,’ எனத்தலைவன் பாடிக் காவேரியை வாழ்த்துகிறான்.
‘திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
………….
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி,’ எனும் அழகான ஆற்றுவரிப்பாடல் இது! சிலப்பதிகாரத்தில் காணும் இப்பாடல் கோவலன் பாடுவதாக அமைக்கப்பட்டது.
(சலீல் சௌதுரி எனும் வங்காள இசையமைப்பாளரின் இசையில் யேசுதாஸ் அவர்கள் தம் காந்தர்வக் குரலில் இதனைப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள். தமிழன், இந்தியன் எனும் பெருமிதத்தில், இசையின் இனிமையில், பாடல் வரிகளின் கவித்துவத்தில், கண்முன் விரியும் சோகமான ஒரு காதல் சித்திரத்தில், பொங்கிப் பாய்ந்தோடி வரும் காவேரியின் புதுநீர் அழகில், கலவையான உணர்ச்சிகளின் ஆரவாரச் சங்கமத்தில் கண்களில் நீர் வந்துவிடும்.)
‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துகிறாள்.
‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
……………..
ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.’
மாதவி கூற்றாக அமைந்த பாடல்!
தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ எனச் சும்மாவா சொன்னார்கள்? குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றிடும் இந்தியப்பண்பாடும் மரபும் உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகள் எனும்போது உள்ளம் பெருமிதம்கொள்கின்றதல்லவா?
புலர்ந்தும் புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது வேண்டுதலுக்காக ஏற்பட்டது. ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! ஆண்டுமுழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடுவதும், துன்பங்களும் இன்பங்களும் நிறைந்த வாழ்வினைப் பல பொழுதுபோக்குகளும் நிறைந்ததொரு இனிய பயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது!
காதலர் சந்திக்குமிடங்கள் இந்த ஆற்றங்கரைகள்தான்; ஊர்க்கதைகளின் பரிமாற்றமும் இங்கேதான்! மனிதவாழ்வுடன் பிரிக்கமுடியாதபடி இணைந்துவிட்ட உறவல்லவோ இது!
நதிகளைப் பெண்மைக்குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். பல தலைமுறைகளாக நீீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?
‘கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு’.
‘நான் இந்த நீரில் கங்கை, யமுனை, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய புனித நீர்களை அழைத்து ஆவாஹனம் செய்கிறேன்,’ என்பது பொருள். இவ்வாறே பூஜை செய்யும்போதும் நீரில் மற்ற நதிகளை அழைக்கும் பெரியவர்களைக் கண்டிருப்போம். புண்ணிய நதி நீரினால் தெய்வ விக்கிரகங்களை நீராட்டித் தூய்மை செய்து வழிபடுவது நமது வழக்கம். இப்பெரிய நதிகளைப் புனிதம் வாய்ந்தனவாகக் கருதி, நம் முன்னோர்கள் பொருள்செறிந்த இவ்வழிபாட்டை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர்.
மானிட சமுதாயத்தின் சரித்திரத்தை நோக்கினால், உலகின் முதன்மையான பழம்பெரும் சிந்துவெளி நாகரிகம் முதல் அத்தனை உயர்ந்த நாகரிகங்களும் ஏதேனும் ஒரு மாபெரும் நதியின் கரையில்தான் வளர்ந்து செழித்திருப்பதனைக் காணலாம்.
கங்கை, யமுனை, காவேரி போன்ற நதிகளின் உற்பத்தியும், அவற்றைப் பற்றிய பல கதைகளும் நமது இதிகாசங்களிலும் புராணங்களிலும் நிரம்ப அமைந்து உள்ளத்தை நிறைவிக்கின்றன. ஆதிசங்கரரின் கங்காஸ்தோத்திரம் கங்கையின் உற்பத்தியையும் அவள் வாலைக்குமரியாகக் குதித்தோடி மலைகளிலிருந்து பாய்ந்து இறங்குதலையும், பின் ஹரித்வாரில் அமைதியாக நடைபயிலுவதையும் அழகுற விவரிக்கின்றது.
இதேபோன்றதொரு நீண்ட பாடல் ‘காவேரி ஓடம்’ எனச் சென்ற தலைமுறைகளில் நமது வீட்டுப் பெண்மணிகளால் பாடப்பட்டு வந்தது. இதன் ஆசிரியர் பெயர் திருநயம் கிருஷ்ண பாரதிகள்; பாடலின் மூலப்பெயர் ‘திருவையாற்றுக் கப்பல்,’ என்பதாகும். காவேரியின் உற்பத்தியையும், பெருமையையும் அழகையும் அவள் ஓடிச்செல்லும் பாதையையும் பாடிப் போற்றும் அழகானதொரு வீட்டுப்பாடல் எனலாமா இதனை?
அகத்திய மஹாமுனி கடத்தினில் உதித்து
…………………………………………….
ஸ்ரீரங்கப் பட்டிணத் திருபால் நிகழ்ந்து
……………………. கல்லணையிற் பொருந்தி
……………………………………………………
அன்புடன் திருவையாற் றப்பனைக் கண்டு
அறம்வளர்த்தாள் உத்தரவு பெற்றுக்கொண்டு
……………………………………………………..
சங்கமும் வந்து கடல் கூடியது வெள்ளம்.
ஏலேலோ!!!
00000000000