குவிகம் குறுக்கெழுத்துப் போட்டி -சாய்நாத் கோவிந்தன்

 

Tamil Crossword Game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

 ஆகஸ்ட் மாதத்திற்கான குறுக்கெழுத்து இங்கே ! 

சரியான விடை எழுதும் அதிர்ஷ்டசாலி நண்பருக்கு குலுக்கல் முறையில் ரூபாய் 100 பரிசு! 

பதில் ஆகஸ்ட் 17  தேதிக்குள் வரவேண்டும்!

புதிர் காண இங்கே சொடுக்கவும்! 

http://beta.puthirmayam.com/crossword/C6C1ACE181

YOUR TIME STARTS NOW…….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இனி ஜூலை  மாத புதிருக்கான விடையைப் பார்ப்போம் : 

சரியான விடை இதோ: 

 

1
ழு
2
கு
3
தே
4
ன்
மு
5
6
மு
சு
பி
ம்
ம்
சு
7
சா
வி
பை
8
சி
சு
9
தி
10
பா
க்
11
கு
வி
ம்
12
யா
ரோ

சரியான விடை எழுதிய நண்பர்கள்: 
1. ஆர் கே  ராமநாதன்,
2. நாகேந்திர பாரதி 
3. ராய செல்லப்பா 
4. உஷா ராமசுந்தர் 
5. ராமமூர்த்தி 
6. லதா ரகுநாதன் 
7. தாமோதரன் 
8 . மனோகர்
9. ரேவதி பாலு   
இதில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி நண்பர் 
தாமோதரன் அவர்கள்! 
வாழ்த்துக்கள் தாமோதரன்!!
இவருக்கான ரூபாய் 100 விரைவில் அனுப்பி வைக்கப்படும்.  
8. 

வ வே சு வைக் கேளுங்கள் – ஆகஸ்ட் 2022

 

Jalamma Kids - kelvi-pathil

 

பாரதியார் தமிழ் மற்றும் ஆங்கிலமல்லாத அவரறிந்த பிற மொழிகளில் கட்டுரை அல்லது கவிதைகள்எழுதியுள்ளாரா? சந்திரசேகரன் பாஸ்டன் 

நானறிந்தவரை சமஸ்கிருதத்தில் ஓரிரு கீர்த்தனை வடிவப் பாடல்களை பாரதி எழுதியுள்ளார் . உஜ்ஜயினி நித்யகல்யாணி ; பூலோக குமாரி ஹே அம்ருதநாரி  போன்றவை. அவற்றை பேராசிரியர் எஸ் . ராமநாதன் இசையமைத்துப்  பாடியுள்ளார்.  மற்றபடி அவரது படைப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளன.

Jalamma Kids - kelvi-pathil2. தமிழ் உலகின் மிகப் பழைய மொழி என்று சொல்வதற்கு புறச் சான்று இல்லை என்கிறார்களே! இதை யார்எப்படி நிறுவ முடியும் ?  சந்திர மோகன் சென்னை 

பேரா.எஸ். வையாபுரிப்பிள்ளை கருத்துப்படி புறச்  சான்றுகள்  ,ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்படவேண்டும் தற்போது நிகழ்ந்துவரும் கீழடி அகழ்வாய்வுகள் போன்றவை இதற்குத் துணைசெய்யும் என நம்பலாம் .  இப்போதுள்ள சான்றுகள் தமிழ் இந்தியாவின் மொழிகளுக்குள் மிகப் பழையது என நிரூபிக்கப் போதுமானது . ஆனால் உலக அளவில் இக்கருத்தை நிறுவ இன்னும் பல புராதன கல்வெட்டுகள் . அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் என பல தகவல்களை சேகரிக்க வேண்டும் .

.Jalamma Kids - kelvi-pathil3. .  நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் ஐயா, ஐயனார், ஐயப்பன், ஔவை போன்ற சொற்களை, அய்யா, அய்யனார், அய்யப்பன், அவ்வை என்று குறிப்பிடுகின்றனரே! இதில் எது சரி? (அன்னபூரணி , சென்னை)  

ஐ , ஒள  என்ற எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவதே சரியானது. . அவற்றைப் பயன் படுத்தாவிடின் 12 உயிரெழுத்துகளில் இரண்டினை இழந்துவிடுவோம் .

Jalamma Kids - kelvi-pathil4.  இந்தியாவின் தேசிய விலங்கு “புலி” ஏப்ரல் 1973 முதல் , அதற்கு முன்பு சிங்கம். ஏன் இந்த மாற்றம்வந்தது? (சுரேஷ் ராஜகோபால், சென்னை) 

முதல் காரணம் ஆசிய சிங்கம் எனப்படும் (Asiatic Lion    ) இந்தியாவில் “கிர் காடுகளில் “ மட்டுமே வாழ்ந்து வருகின்றது. “புலி” இனம் இந்திய முழுவதிலும் மொத்தம் 16 மாநிலங்களில் காணப்படுகின்றது. எதோ ஒரு மாநிலத்தில் மட்டுமே காணப்படும் விலங்கைவிட  நாட்டின் பல மாநிலங்களில் காணப்படும் விலங்குதானே தேசிய விலங்காய் இருக்கமுடியும் ! 

இரண்டாவது காரணம் , 1973-ல் தான் புலிகளை பாதுகாக்க ப்ரொஜெக்ட் டைகர் ( Project Tiger ) என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

Jalamma Kids - kelvi-pathil5. . “மேஜிக்கல் ரியலிசம்” என்ற வார்த்தை இப்போது பிரபலமாகியுள்ளது. பாரதியின் குயில் பாட்டில் குயிலை மற்ற மிருகங்களும் பாரதி என்கிற மனிதனும் காதலிப்பதாக வருகிறதே,  இதுவல்லவோ தமிழின் முதல்மேஜிக்கல் ரியலிசக் காவியம்? (ராய செல்லப்பா நியூ ஜெர்ஸி) 

இது நிசசயமாக மேஜிக்கல் ரியலிசம்” தான். ஆனால் தமிழில்  நாட்டார் வழக்குகளில் பஞ்சசதந்திரக் கதைகள் பண்டைக்காலம் தொட்டு இருக்கின்றன என அறிகிறோம்.

நமது புராணங்களில் மிருகங்கள் பேசுவதும், கால இடைவெளிகளைக் கடந்து செல்கின்ற கதாபாத்திரங்கள் இருப்பதும் நாமறிந்ததுதானே !

தமிழின் தலைக்காப்பியமான சிலம்பில் இல்லாத மாய யதார்த்தமா ?

பத்தொன்பதாம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த வித்வான் தாண்டவராய முதலியார் மகாராஷ்டிரத்தில் வழங்கும் பஞ்சதந்திரக் கதையை மொழிமாற்றம் செய்து 1826-ல் பதிப்பித்தார்.

எனவே மாய யதார்த்த அணுகுமுறை தமிழில் பண்டைக்காலம் தொட்டே இருப்பதை அறியலாம்.

ஆனால் குயில் பாட்டு போன்ற  ஓசை நலமும், கருத்துச் செறிவும் , கற்பனைப் பொலிவும் கொண்ட  இதுதான் தமிழின் முதல் மேஜிக்கல் ரியலிசக் காவியம் என்று நிச்சயம் சொல்லலாம். காலத்தால் மட்டுமன்றி தகுதியாலும் இதுவே முதல். என்றும் முதல் .

Jalamma Kids - kelvi-pathil6. ஐம்பெரும் காப்பியங்களின் ஒன்றான குண்டலகேசி. குண்டலகேசி் என்றால் அதன் பொருள் என்ன? (ஹரிஹரன், அமெரிக்கா)  

குண்டலகேசி என்பது ஒரு புத்த சமயக் காப்பியம் . காப்பியத் தலைவியின் பெயர் குண்டலகேசி . அவள் முதலில் சமண மதத்தில் இருந்து, பிறகு வாதிலே ,கவுதம புத்தரின் சீடரான ,சாரிபுத்தர் என்ற பிக்குவிடம் தோற்று புத்த மதத்தைத் தழுவுகிறாள் .அவள் இயற்பெயர் பத்திரை. அவள் சமண மதத்தில் இருக்கும் போது அவளது கேசம் மழிக்கப்பட்டது .அது மறுபடியும் வளரும் போது சுருண்டு வளர்ந்ததால் அவளுக்கு குண்டலகேசி எனும் பெயர் வந்தது. அதுவே காப்பியப் பெயரும் ஆனது .

Jalamma Kids - kelvi-pathil7.    தொல்காப்பியம் படிக்கும் ஆர்வத்தில், நச்சினார்க்கினியர், இளம்பூரணார் ஆகியோரின் உரைநூல்களைப் படித்துப் பார்த்தேன். அவர்களின் உரையைப் புரிந்து கொள்ளவே வேறு உரைநூல்கள் தேட வேண்டியதாகி விட்டது. எந்த ஆசிரியர்களின் உரைநூல்கள் எளிமையாகவும், முழுமையாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்.  (துரை. தனபாலன் , சென்னை)

முதலில், தொல்காப்பியம் படிக்க முயற்சி செய்யும் தங்கள் ஆர்வத்தை மெச்சுகிறேன் . கொஞ்சமும்  தளராமல் தொடர்ந்து படியுங்கள் . பயிற்சி பலன்தரும். முதல் ஐந்து பக்கங்கள் கடினமாக இருக்கும். பிறகு தொடர்ந்து படிக்கும் போது எளிதாகிவிடும். தமிழ் அகராதி வைத்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் சரி வரவில்லை என்றால் பேராசிரியர் முனைவர் சி .இலக்குவனாரின் “தொல்காப்பிய விளக்கம் “ நூலை வாங்கிப் படியுங்கள்.

Jalamma Kids - kelvi-pathil8.  அருணகிரியின் கந்தர் அனுபூதி யில் வரும் , குறியைக் குறியாது குறித்தருளும் பாடலின் விளக்கம் வேண்டும் ( தென்காசி கணேசன் , சென்னை) 

குறியைக் குறியாது குறித்து அறியும்

நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்

செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42)

கந்தர் அனுபூதியின் மிக அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் தொடக்கத்திலேயே மூன்று “குறி “ வருகின்றது முதல் குறி , இறைவனைக் குறிக்கிறது. இரண்டாவது அதனைப் புரிந்து கொள்ளாது ,குறியாது இருக்கின்ற நம்மைக் குறிப்பது . மூன்றாவது அக்குறிப்பைக் குறிப்பால் அறிவுறுத்தும் நெறியை நிகழ்த்தும் தனிவேலைக் குறிக்கிறது . அது நிகழ்ந்த உடன் செறிவாகிய ஆணவம் அற்றுப் போகிறது; உலகப் புற வாழ்க்கையில் ஈடுபடும் சிந்தையும் அற்று வீழ்கிறது . தேடித் தேடித் திரிந்த அறிவும்  இற்று வீழ்கிறது;  அறியாமையும் வீழ்ந்து படுகிறது.

அவனை அறிந்த அறிவு தவிர வேறேதும் இல்லாத நிலை ஏற்படுகிறது  “அவனருளாலே அவன் தாள் வணங்கி “ எனும் நுட்பம் புரிகின்றது. அதுதான் செல்வம்; அதுதான் இனிமை; அதுதான் சுகம். இதைத்தான் கந்தர் அனுபூதியில் “ எல்லாம் அற என்னை இழந்த நலம்” என்று  அருணகிரியார் பாடுகின்றார் .

Jalamma Kids - kelvi-pathil9. இந்திய கணித வரலாற்றில் ஆரியபட்டர், பாஸ்கரர், வராக மீகிரர் போன்ற வட இந்தியர்களும், மாதவன் என்ற கேரள அறிஞரும் வெகுவாக சுட்டப்படுகிறார்கள். ஆனால் தமிழ் கணித இயலாளர்கள் அவர்களைப் பற்றி சிறப்பான செய்தி எதையும் நான் அறிந்ததில்லை. தமிழர்கள் கணிதத்தில் நல்ல பங்களிப்பு செய்யவில்லையா? ராமானுஜன் போன்ற சமீபத்திய கணித மேதைகளை இதில் எடுத்துக் கொள்ள வேண்டாம்  (பானுமதி, சென்னை)

சங்ககாலம் கணித அறிவு கொண்டவர்களை பற்றிப் பேசுகிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்ற பாடலை வடித்த பூங்குன்றனார், கணியன் எனக் குறிப்பிடப்படுகிறார் . தமிழில் கணியன் என்பது கணிதத்தில் பெரும் சிறப்புப் பெற்றவரைக் குறிப்பதாகும் .”கணிமேதை” என்றும் அவரைக் குறிப்பிடுவார்கள்; பல்லவர் காலத்தில் காஞ்சியில் இருந்த கடிகையில் பல கணித மேதைகள் இருந்தார்கள் என்பதை தொல்லியல் ஆய்வாளர் பேரா நாகசாமி குறிப்பிட்டுள்ளார் .ஆனால் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழர்கள் கணிதத்தில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளனர் என்று பொதுவாகத் தெரிந்தாலும் , குறிப்பிடப்படும் பெயர்களை எவரும் ஆவணப்படுத்தவில்லை.

ஆர்யபட்டா பிறந்த இடம் பாடலிபுத்ரா , வராஹமிஹிரர் பிறந்த இடம் உஜ்ஜைன் ஆனால் பாஸ்கரா பிறந்த இடம் கர்நாடகாவைச் சேர்ந்த விஜயபுரி எனவே அவர் வட இந்தியர் அல்லர், எனினும் இதுபோன்ற எல்லைகளுக்கு அவர்கள் உட்படாதவர்கள் . அவர்கள் அகண்ட பாரதத்தின் அற்புதத் தவப்புதல்வர்கள்.

Jalamma Kids - kelvi-pathil10.  விதியை மதியால் வெல்லலாம், விதி வலியது, எல்லாம் விதிப்படி தான் நடக்கும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு இதை விளக்க முடியுமா ? (ரேவதி ராமச்சந்திரன், ஜோத்பூர்) 

இதில் முரண் ஏதுமில்லை.விதி என்பது விதிக்கப்பட்டது, அது எதைச் சார்ந்து விதிக்கப்படுகிறது என்று புரிந்து கொண்டால் இந்த சொற்றொடரின் பொருள் விளங்கிவிடும்.

கர்மா அல்லது வினைப்பயன் என்பது ஒருவரின் விதியைத் தீர்மானிக்கிறது கர்மா மூன்று வகைப்படும். சஞ்சித கர்மம் என்பது நாம் சேமித்து வைத்துள்ள வினைப்பயன்கள் ; பிராரப்தம் என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வினைகள் ; இவற்றின் வழி நடக்கும் விதியை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மூன்றாவதாக உள்ள இனி வர இருக்கின்ற “ஆகாமிய “ கர்மாவை நாம் நல்வினைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம் . இதுதான் விதியை மதியால் வெல்வது. ஆக , வந்த விதியை வெல்லமுடியாது .ஆனால் வரப்போகும் விதியை மதியால் வெல்லலாம்.

 

விநாயகர் நான்மணி மாலை பாரதி – வ வே சு – குவிகம் – தொடர் சொற்பொழிவு

சந்த வசந்தம் சந்திப்பு

பேராசிரியர் வ. வே. சு அவர்கள்

வழங்கிய

விநாயகர் நான்மணிமாலை

தொடருரையின் நிறைவு நாளன்று

(20-07-2022) அப்பெருமகனாருக்கு

நன்றி பாராட்டி எழுதிய   

பாடல்கள் :

 

துரை.தனபாலன் அவர்களின் கவிதை: 

வவேசு எனும் வற்றா மேகம்
வெண்பா கலித்துறை விருத்தம் அகவல்
என்றே நான்மணி எடுப்புடன் கோர்த்து
பொன்னால் செய்த மாலையை மிஞ்ச
பண்ணால் செய்த மாலை ஆக்கி
மின்னார் சொற்சிலம் பாடும் பாரதி
மீட்டிய நான்மணி மாலையைப் போற்றி

ஒன்றா இரண்டா ஒருநூ றாயிரம்
உன்னத மான சான்றுகள் காட்டி
வண்ணத் தமிழின் வளந்தனை ஊட்டிய
வவே சுஎனும் வற்றா மேகம்

இத்தனை நாளும் பொழிந்ததில் நனைந்தோம்
இன்பத் தமிழின் பொலிவினில் திளைந்தோம்!
அத்தன் அவரை அன்புடன் போற்றுவோம்
ஆண்டுகள் நூறு வாழ்ந்திட வாழ்த்துவோம்!

 

சாய் கணேசன் அவர்களின்  நான் மணிக் கண்ணி

வெண்பா

வாரம் புதனன்று வாவேசு நல்லுரைக்க
பார்புகழ் பாடல்கள் பாடிய பாரதி
நான்மறை போற்றும்வி நாயகன்மேல் சூட்டினான்
நான்மணி மாலை தொடுத்து.

கட்டளைக் கலித்துறை

தொட்ட விடயம் துலங்கும் இடர்தீர் விநாயகர்கண்
பட்ட உடனே பயங்கள் விலகும் மனதினிலே
பட்டம் விருது பதவிகள் பெற்றுப் பயனடைவாய்
எட்டை புரத்தோன் எழுமாலை சொல்லிட நாவினாலே.

விருத்தம்

நாவே இனித்திடும் பாரதியின்
நான்மணி மாலை நவில்கயிலே
ஊவே சாதான் உரமிட்ட
உன்னதத் தமிழில தன்பொருள்சொல்
வாவே சூவின் தொடருரையில்
வந்திடும் புதிதாய்ப் பலசொற்கள்
பாவே பாடி நானுமதைப்
பயன்படுத் தியதென் பாக்கியமே.

அகவல்

பாக்கியம் மனிதப் பிறவியில் சான்றோர்
வாக்கினைக் கேட்டல் அதனின் நன்றாம்!
பாரதம் ஏறிய பாரதப் புலவன்
பாரதி பாடிய பைந்தமிழ் நூலாம்
காக்கும் கணபதி நான்மணி மாலை
கேட்கும் வாய்ப்போ அதைவிடப் பெரிதே!
எல்லா வாரமும் நாள்புதன் மாலை
எங்கள் வீட்டினுள் விருந்தாய் வந்தே
எப்பவும் வையகம் அன்பை ஊற்றென
எமக்குரை செய்த ஏந்தலே! உமக்கு
எப்படிச் சொல்வேன்? எத்தனை நன்றி!
என்சிற் றரிவிற் கெட்டிய விதத்தில்
கவிதை பாடிநான் வணங்குகயிலே
குவிகத்தாரும் சேர்ந்திடு வாரே!

 

Excerpts  from a communication of 

DR C P Vasudevan, West Virginia, USA 
 
 
VVS (வ வே சு அவர்கள்)made  several beautiful remarks about music. He also said in passing that Bharathi wanted to publish  all his songs with colorful pictures and music but could not do it during his lifetime. All those things are being done by posterity.
This got me thinking.  Bharathi, as we all know was a huge multifaceted personality and naturally he had many unfulfilled dreams during his short life that he had. He packed everything that he wanted others to carry out in his songs. Many of you know that I am a strong believer in rebirths.
But What Bharathi packed in his songs, he needs 10 lives or more to execute all of it. Instead, he had sent a part of him in many that were born subsequently to carry out those things.
Our VVS, in my opinion, is one such educating us. He is a good size Bharathi reborn. Do I have any instance that I can mention to substantiate my theory? I have heard  Seshadri Swamigal appearing in many different persons, many years after his death  at different places. Ramana Maharshi states that Adhi Sankara himself was in him and wrote Viveka Chudamani in Tamil. 

 

உலக இதிகாசங்கள் – இலியட் – எஸ் எஸ்

HD wallpaper: Greek heroes from the Iliad, Menelaus Paris Diomedes Odysseus Nestor Achilles Agamemnon | Wallpaper Flare

பிரீஸஸ்  தந்த முத்தத்தை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு மந்திர  ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்றான் அக்கிலீஸ்.  அங்கே குழுமியிருந்த கிரேக்க வீரர்கள் அத்தனைபேரும் எழுந்து நின்று ஆரவாரத்தோடு வரவேற்றார்கள்.

நடுநாயகமாக அமர்ந்திருந்த அகெம்னனுக்கு இது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்தது. அவன் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் புயற் காற்றில் எழும்பும்  பேரலைபோல  பொங்கின!

‘நான் மன்னன் மரபைச் சார்ந்தவன். இவன் வெறும் சேனைத் தலைவன் ! இவனுக்கு இத்தனை பேர் ஆதரவா? இவன் இல்லாமல் டிராய் போரை வெற்றிகரமாக முடிக்கமுடியாது என்று இவனும் இந்தக் கிரேக்க மக்களும் நம்புவதுதான்  அதற்குக் காரணம் நம் கடவுள்கள் இவனுக்கு ஆதரவாகப் பேசுவதனால்தான் இவன் இவ்வளவு திமிர் பிடித்து அலைகிறான். எனக்கும் கடவுள் துணை உண்டு. இவன் எனக்குப் புத்தி கூறுகிறான். நான் பிடித்து வந்த  அடிமை அழகியை விடுதலை செய்யவேண்டுமாம். இவன்தான் அப்பல்லோவிடம் திரித்துக் கூறி  கொடிய தொற்று நோயை நம் வீரர்கள் மீது ஏவி விட்டிருக்கிறான். இன்று இந்த கர்வம் பிடித்த ஆக்கிலீஸை அடக்கி வைக்காவிட்டால் நான் மன்னன் என்று சொல்லிக் கொள்ளத்  தகுதியற்றவன் ஆவேன். ‘ என்று மனதுக்குள் குமுறினான்  அகெம்னன்.

அகெம்னனது எண்ணம் எந்த திசையில் செல்கிறது என்பதை நன்கு  புரிந்துகொண்ட அக்கிலீஸ் தன்னுடைய முடிவைத் தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தான்.

” இதோ பார்! அகெம்னா! டிராய்  நகர  அரசன் எனக்கோ என மக்களுக்கோ  எந்த விதத்  தீங்கையும் இழைக்கவில்லை. நம் மன்னர் மேனிலியசுக்கு உதவுவதற்காக நானும் என் வீரர்களும் வந்துள்ளோம். ஆனால் எங்களை  அவமானப் படுத்தும் உரிமை உனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது என்பதை நீ உணர்ந்துகொள்! உழைத்துப் போரிட நாங்கள்! வெற்றி பெற்றபின் அதன் சுகத்தை அனுபவிக்கத் துடிப்பது இன்னொருவனா?  அதை நான் என்றைக்கும் அனுமதிக்க மாட்டேன்! நான் சொல்வதைக் கேள்! அப்பல்லோ தெய்வம் நம் மீது கோபமாக இருக்கிறார். அவரது பூசாரியின் மகள்  கிரியசை நீ அடிமையாக இழுத்து வந்தது மட்டுமல்லாமல் பிணையப் பயணம் கொண்டுவந்த அவர் தந்தையை அவமானப் படுத்தியும் அனுப்பினாய்! அதனால் கோபம் கொண்ட அப்பல்லோ கடவுள்   தொற்று நோயை ஏவி நம் வீரர்களைக் கடந்த பத்து நாட்களாக அழித்து வருகிறார். இதற்கு முடிவு கட்ட நீ அந்தப் பெண்ணை இப்போதே திருப்பி அனுப்பி விடு! அத்துடன்   அப்பல்லோவைச் சாந்தப்படுத்தப்  பலிப் பொருட்களும் அனுப்பிவிடு! இல்லையென்றால் நம் வீரர்கள் அனைவரும்  தொற்று நோயால் அழிந்துவிடுவார்கள்”என்று கூறி அக்கிலீஸ்  சுற்றிலும் இருந்த வீரர்களை உற்று நோக்கினான்.

அவனது கருத்தை ஏற்றுக்கொள்ளவே அனைவரும் தயாராக இருக்கிறார்கள் என்பதை அவர்களது பார்வையே சொல்லியது. ஆனால்  அகெம்னனும் அவனைச்சேர்ந்த சிலரும் அதை ஏற்கத் தயாராயில்லை என்பதும்  அவர்களின் பார்வைக் குறிப்பு பறை சாற்றியது.

கொஞ்சமும் தயங்காமல் அகெம்னன் அக்கிலிஸை மறுதலித்துப் பேச ஆரம்பித்தான். ” அக்கிலிஸ் !  இதுவரை நடந்த போர் வெற்றியில் என பங்காகக் கிடைத்த பணயப் பொருள்  கிரீஸஸ். அந்தக்  கருநிற அழகி எனக்குக் கிடைத்த பரிசு!  அவளை  விட்டுவிட  வேண்டும் என்று எனக்கு உத்தரவிட நீ யார்? இருந்தாலும்  அப்பல்லோ தேவனின்  கோபத்தினால் நம் வீரர்களுக்கு ஏற்படும் அழிவை நிறுத்த நானும் விரும்புகிறேன்.   நான் நேசிக்கும் அந்தக் கருநிற அழகியையும் விட்டுவிடச்  சம்மதிக்கிறேன். ஒரு சிறந்த படைத் தலைவன் மூலமாக அவளையும் அப்பல்லோவைச் சாந்தப் படுத்தும் பலிப் பொருள்களையும் அனுப்ப ஏற்பாடு  செய்கிறேன்.  ஆனால்..” 

பேசுவதை சற்று நிறுத்திவிட்டு   அக்கிலீசை உற்று நோக்கி, “அதற்கு ஈடாக உன் காதலி  பிரிஸிஸை எனக்குத் தரவேண்டும். தருவது என்ன? நானே எடுத்துக் கொள்வேன்”  என்று சிரித்துக் கொண்டே கூறினான். 

அகெம்னனின்  வீரர்கள் அக்கிலிசை வளைத்துத் தாக்குதல் நடத்தவும் தயாராக இருந்தார்கள்.

இந்த அவமானத்தைத் தாங்க முடியாத  அக்கிலீஸ் தன்னை நோக்கி வரும் வீரர்களை லட்சியம் செய்யாமல் தன் மகா வாளை உருவிக் கொண்டு  அகெம்னனைக் கொல்லப் பாய்ந்தான்.   

ஆனால் அப்போது யாரோ பின்புறமாக வந்து வாள்  பிடித்த அவன் வலக் கரத்தைப் பற்றி இழுத்துத் தடைசெய்கிறார்கள் என்பதை உணர்ந்து கோபாவேசமாகத் திரும்பினான். அவன் உயிருக்கு உயிராக மதிக்கும் அதீனி தேவதைதான் யார் கண்ணுக்கும் புலப்படாமல் அங்கே நின்று கொண்டு அவனைத் தடுத்துக் கொண்டிருந்தாள்.

Achilles' Quarrel with Agamemnon - a photo on Flickriver

” தேவி! தாங்கள் ஏன்  என்னைத் தடுக்கிறீர்கள்?  மரியாதை  கெட்டதனமாகப் பேசிய அகெம்னன் இன்று என் கையால் மடியப் போகிறான். என்னைத் தடுக்காதீர்கள்! ” என்று சிறகு கொண்ட வார்த்தைகளால் கூறினான் அக்கிலீஸ்

” அக்கிலிஸ் ! உன்னுடைய வீரம் எனக்கு நன்றாகத் தெரியும். கிரேக்க மக்கள் மீது நானும் ஹீரா தேவியும்  அதிக அக்கறை வைத்திருக்கிறோம். இந்த நேரத்தில் நீ அவனைக் கொல்வது சரியல்ல. அதைத் தடுக்கவே நான் வந்தேன். நாம் பேசுவது யாருக்கும் கேட்காது. நீ அடங்கிப் போவதனால் அது வீரத்திற்கு இழுக்கு அல்ல. அதுதான் விவேகம். நீ இல்லாமல் கிரேக்கப் படை வெற்றி கொள்ள  முடியாது. உன் காலடியில் ஒருநாள் அனைவரும்  விழுந்து  இந்தப் போரை முடித்துத் தருமாறு கெஞ்சுவார்கள்! அதுவரையில் நீ என்ன நடந்தாலும் அமைதி காக்கவேண்டும்” என்று உத்தரவிட்டு மறைந்து போனாள் அதீனி.

அதீனியின் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள  அக்கிலீஸினால் அவளது வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. தன் மகா வாளை உறையில் போட்டுவிட்டு ,

” குள்ள நரித்தந்திரம் படைத்த அகெம்னா !  கூட இருக்கும் ஒருவனின் சொத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் நீயெல்லாம் ஒரு தலைவனா? கடவுளர் அருளால் இன்று நீ என் கையிலிருந்து தப்பிவிட்டாய்! அது உன் நல்ல நேரம் என்று எண்ணிக்கொள்! என கையில் இருக்கும் புனிதமான வாளின் மீது ஆணையிட்டுக் கூறிகிறேன். டிராய் நகரத்தின் கொடுமையின்  அவதாரமான  ஹெக்டர் உங்களைக் கொன்று குவிக்கும்போது நீ மனமுடைந்து  நிற்பாய் ! உங்களைக் காக்க வந்த  கிரேக்க நாட்டின் உண்மையான வீரனை அவமானப் படுத்தியதற்கு அன்று நீ மனம் வருந்தித் துடிப்பாய் ! இன்று நீ ஜெயித்தாக இருக்கட்டும்! உண்மையான வெற்றி எனதே!” என்று கூறிவிட்டுப் புறப்பட எத்தனித்தான்.

அகெம்னனும் அவனுக்குப் பதில் சொல்ல ஆவேசத்தோடு எழுந்தபோது, மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய  முதியவர் – மூன்று தலைமுறை கண்டவர்  நெஸ்டர் எழுந்து இருவருக்கும் ஆலோசனை கூறினார்.  அகெம்னனிடம் ‘ நீ அக்கிலிசை மதிக்கவேண்டும்’  என்றும், அக்கிலீஸிடம் ‘ நீ உலகத்திலேயே சிறந்த வீரனாக  இருந்தாலும் இந்தப் போரில்  அகெம்னன் உன் தலைவன். அவனை எதித்து வாள்  பிடிப்பது தவறு. கிரேக்கர்  இன்று இருக்கும் நிலையில் இருவரும் ஒத்துப்போக வேண்டும் ‘ என்றும்  வேண்டினார்.

நெஸ்டர் அவர்களுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு ‘ கிரேக்கச் சேனை தனக்குள் போரிடும் நிலையை நான் தரமாட்டேன் ‘ என்று உறுதி கூறித்  தன் மனப் போராட்டத்தைக் காட்டிக்கொள்ளாமல் வெளியேறினான் அக்கிலீஸ். 

ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி அகெம்னன் தனது ஆட்களை அனுப்பி அக்கிலிஸின்  கப்பலை முற்றுகையிட்டு  பிரிஸிஸைக் கொண்டுவர  ஏற்பாடு செய்திருந்தான்.

Achilles and Briseis Relief Engraving

அகெம்னனின் அத்தனை வீரர்களையும் அழிப்பது அக்கிலிஸூக்கு முடியாத காரியமில்லை. ஒரு நொடியில் அவர்களைக் கொன்று குவிக்கும் திறமையும் தைரியமும் அவனுக்கு உண்டு. இருப்பினும் அதீனி மற்றும் நெஸ்டருக்குக் கொடுத்த வாக்கை மனதில் கொண்டு தன் நண்பனை அழைத்து தன் ஆருயிர்க் காதலி  பிரிஸிஸை எதிரிகளிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு  தன் அறைக்குச்  சென்றான்.

பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து  தன்   தாயை மனம் உருக வேண்டி அழைத்தான்.

திட்டீஸ் என்ற அதிதேவதை  மகனின் குரல் கேட்டு ஓடோடி வந்தாள். தாயின்  மடியில் முகம் புதைத்து தன் மனக்  குமுறலைக்  கொட்டினான்  அக்கிலீஸ்! “எனக்கு ஏன் இந்த அவமானம் ஏற்படவேண்டும்? நான் நீதிக்குத் தலை வணங்குவதால் இவர்கள் அதைச் சிறுமை செய்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் அழிக்கும் ஆற்றல் இருந்தாலும் தேவதைகளும் கடவுளர்களும் ஏன் கையைக் கட்டிப் போடுகிறார்களே ” என்று பொறுமினான். 

மகனின் துயரம்  ததும்பும் முகத்தைக் கண்ட தாய் துடித்தாள். அவன் துயரைத் தீர்க்க முடிவு கட்டினாள். தன் மீது மோகம் கொண்ட  கடவுளர் தலைவருமான  ஜீயஸிடம் சென்று   முறையிட்டாள். 

நடந்துவரும் டிரோஜன் யுத்தத்தில் டிராய் நாட்டு வீரர்கள் கை  ஓங்கவேண்டும் என்றும் கிரேக்க வீரர்கள்  தோற்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள். 

ஜீயஸ் திகைத்தார். 

 

(தொடரும்)

 

 

 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ராஜராஜன் – சிற்பி

Brihadeeswara Temple, Thanjai Periya Kovil: தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள் - rajaraja cholan built thanjavur brihadeeswara temple: periya kovil ...

1010 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ராஜராஜேஸ்வரம்... படையெடுத்து வந்தவர்கள் பட்டபாடு | Ponniyin Selvan The king of Raja Raja Chozhan Family - Tamil Oneindiaராஜராஜன் வரலாற்றை நிறைவு செய்ய உள்ளோம்.

வீரத்தைக் காட்டி, ரத்தத்தைக் கொட்டி, வெற்றியை ஈட்டி, நாட்டை வளர்த்த ராஜராஜன், இந்திய வரலாற்றில் காலத்தில் அழியாது செய்த ஒரு மாபெரும் செயல் பற்றிப் பேசுவோம். அது, கலை, பக்தி, செல்வம், தொழில் நுட்பம், அனைத்தும் சேர்த்துச் செய்யப்பட்ட தஞ்சைப்பெரிய கோவில் எனும் அழியாத ஆலயம்.

1860-க்கு முன்னர் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது யாரென்று கேட்டால், பள்ளி மாணவர்கள் ‘ஞே’ என்று விழிப்பார்கள். ஏன், ஆசிரியர்களே ‘ஞே’ என்று தான் விழித்திருப்பார்கள். கோவிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது. 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளர் தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய முனைந்தார். அவர் பெரிய கோவிலின் பூர்வீகத்தை, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டினார். சரித்திரத்தின் முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!

முன்கதையொன்று சொல்வோம:.

பொன்னியின் செல்வன், சுந்தர சோழன் ஆண்ட காலத்தில் இலங்கையில் படைத்தலைவனாக இருந்தான். அப்பொழுது ஓரிரவு அவனுக்கு ஒரு தெய்வீக கனவு வந்தது. அதில் ஒரு மாபெரும் ஆலயத்தைக் கட்டுவதாக இருந்தது.
பிறகு, உத்தம சோழன் ஆட்சிக்கு வந்தவுடன், சில காலம் காஞ்சியில் தந்தையுடன் பொன்மாளிகையில் இருந்தான். காலை, மாலை இருவேளையும் கைலாசநாதர் ஆலயத்துக்குச் சென்று சிவனைத் தொழுவான். காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட அந்த கைலாசநாதர் கோவில் அவனை மிகவும் கவர்ந்தது. அதன் அமைப்பும், கட்டட நுணுக்கங்களும், சிற்பவேலைப்பாடுகளும், எழிலும் அவன் நெஞ்சைக் கொள்ளை கொண்டது. அங்கு அவன் பார்த்த விக்கிரமாதித்த சாளுக்கியனின் கல்வெட்டு ஒன்று அவனை உலுக்கியது.

“இந்த காஞ்சியும் இந்தக் கைலாசநாதர் கோவிலும், தெய்வத்தின் உறைவிடமாக திவ்யமாக இருக்கிறது. இதிலிருந்து ஒரு குண்டுமணியையும் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. காஞ்சி மக்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது” – இந்த விக்ரமாதித்யனின் நல்ல எண்ணங்கள் கைலாசநாதர் கோவிலிலேயே கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்ததைக் கண்டான். பல்லவனின் பரம வைரியாக இருந்தும், அவனையும் மயக்கிய அந்த தெய்வீகமான கைலாசநாதர் ஆலயம் பொன்னியின் செல்வனையும் மயக்கியது.
ஒரு சிவன் கோவிலுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் நிறைந்த அந்தக் கோவில் போல ஒன்றை தஞ்சையிலும் கட்ட வேண்டும் என்ற கனவு அவனுள் புதைந்தது.

பிறகு பல காரியங்கள் நடந்தேறின.
உத்தம சோழன் ஆட்சி முடிய, ராஜராஜன் அரசு முடி அணிந்து, எண் திசையும் வென்றபோது – கிடைத்தது பெரும் பொன்னும் பொருளும். அத்துடன் கிடைத்த போர்க்கைதிகளோ ஒரு நூராயிரம்।

வெற்றிகள் அனைத்தையும் அடைந்து – எதிரிகள் எவருமில்லை என்றான பிறகு, தனது நெடுங்கனவை நனவாக்கத் திட்டமிட்டான்.

கி பி: 1003;
மந்திராலோசனை.
அமைச்சர்கள், ராணிகள், படைத்தலைவர்கள், குந்தவி, வந்தியத்தேவன், செம்பியன் மாதேவி, மற்றும் சிற்பிகள் அனைவரும் அரச மண்டபத்தில் கூடியிருந்தனர். சோழ நாட்டின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன், மதுராந்தகனான நித்திவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகிய மூவரும் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.

ராஜராஜன், தனது பெரும் கோவிலின் எண்ணத்தைக் கூறி அது ஏழு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்படவேண்டும் என்றான்.
தலைமைச் சிற்பி: “இதற்குத் தேவையான பொருள்?”
“அனைத்துக்கும் ஏற்பாடு செய்து தரப்படும்” என்றான் ராஜராஜன்.
“லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்”- சிற்பி.
“போர்க்கைதிகள் நூறாயிரம் பேர் உள்ளனர். அவர்கள் கட்டிடத்தொழில் செய்வர்” என்றான் ராஜராஜன்.
‘கைதிகள் கட்டிடக் கலை செய்வாரா?” என்று அனைவரது முகத்திலும் சந்தேகம் பரவியது கண்டு ராஜராஜன் புன்னகை புரிந்தான்.
“அவர்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்வர். அது எனது பொறுப்பு “என்றான் ராஜராஜன்.

கைதிகளை அழைத்து சொன்னான் மன்னன்:
“உங்கள் அனைவருக்கும் ஒரு புனிதப் பயணத்தில் பங்கு பெறும் பாக்கியம் கிடைத்துள்ளது.
உலகத்திலேயே உயர்ந்த சிவாலாயத்தை வடித்துப் புனரமைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியிருக்கிறது.
கடினமான செயல் தான்.
ஏழு வருடங்கள் உங்கள் உழைப்பையும், எண்ணத்தையும், ஆற்றலையும் இந்தத் திருப்பணிக்குக் காணிக்கையாக்குங்கள்.
ஏழு வருட முடிவில் – உங்களுக்குப் பெரும் பொருள் தருகிறேன்.
நான் போர்களில் ஈட்டிய பெரும் பொருள் அனைத்தும் தருகிறேன்.
அதன் பிறகு நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்குச் சென்று வளமோடு வாழலாம்.
இது என் வாக்கு” என்றான்.

அனைவரும் ‘சக்கரவர்த்தி ராஜராஜன் வாழ்க! “ என்று ஆமோதித்து முழங்கினார்கள்.

தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பினான்.

பெரிய கோவில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னன் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தான். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது.

முதலாம் இராசராசன் கோயிலைக் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்த காலத்து, ஆவுடையாருடன் மூர்த்தியைச் சேர்த்து அஷ்டபந்தன மருந்து சார்த்தியபோது அம்மருந்து கெட்டியாகாமல் இளகிய நிலையிலேயே இருக்கக்கண்ட மன்னவன் வருத்தமுற்றான். கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தான். கருவூர்த்தேவர் தஞ்சை வந்து கோயிலுக்குள் சென்று தம்வாயிலுள்ள தாம்பூலத்தை மருந்தாக உமிழ்ந்து கெட்டியாக்கினார் என்பது ஒரு கதை. எப்படி இந்தக் கதை!

8வது உலக அதிசயமாகுமா தஞ்சை பெரியகோவில்? | Dinamalar Tamil News

கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டவை.

சிற்பக்கலை, கட்டிடக் கலை ஓவியக் கலை என ஆலயம் சார்ந்த அத்தனை கலைகளையும் சிறப்பாக பறை சாற்றும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள கோவில் தஞ்சை பெரிய கோவில். இக்கோயில் துவக்கக் காலத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

கல்வெட்டு கூறுவது:
“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க….”

தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்தியதே வியத்தகு ஒன்று. இங்கே மன்னர் தனக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்தை அக்கன் — தன் மூத்த சகோதரியான குந்தவை தேவிக்கு அளிக்கிறார். தன்னை வளர்த்து, கனவுகளை கொடுத்தவருக்கு அவர் செய்யும் சிறப்பாகும் இது. அடுத்து பெண்கள் என்னும் சொல்லின் மூலம் அவரது பட்டத்தரசியான தந்தி சக்தி விடங்கி மற்றும் மனைவியர் கொடுத்த கொடைகளும், கொடுப்பார் கொடுத்தனவும் என்பதின் மூலம் மற்றவர் எல்லோரும் கொடுத்த கொடைகளும் பட்டியலிடப்படுகின்றன.

அதன் பிறகு, 800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை. 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. தஞ்சை, 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. தில்லி சுல்தான் படையெடுப்பு.. 1350 முதல் 1532வரை விஜயநகரின் ஆதிக்கம்… 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி.. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.. 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி..

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஓர் புகைப்பட சுற்றுலா | Photo tour to thanjavur big temple - Tamil Nativeplanet

இப்படி காலத்தால் புரட்டிப்போடப்பட்ட தஞ்சை தரணியில் இன்றும் உயர்ந்து நிற்கிறது பெரிய கோவில்! அதை எழுதி, ராஜராஜன் புகழ் பாடி, சரித்திரத்தை நகர்த்துவோம்.

ஒரு புலிக்குப் பிறந்தது புலியாகத் தானே இருக்க முடியும். அதை விரைவில் காண்போம்.

 

திரை ரசனை வாழ்க்கை 18 – எஸ் வி வேணுகோபாலன் 

கார்(க்)கி  (சமூகத்திற்கான அதிர்ச்சி கேள்விகள்) 
Saipallavi movie update:

பல ஆண்டுகளுக்குமுன் குமுதத்தில் வாசித்த ஒரு சிறுகதை (எழுதியது யார் என்று மனத்தில் குறித்துக் கொள்ளாமல் போனேன்), சற்று மனநிலை பிறழ்ந்த சிறுமி அவள். கிராமத்துப் பெண். பருவமடைந்திருப்பாள், பாவம். எப்போதும் தாயின் பாதுகாப்புக் கவசம் உண்டு, அந்த ஏழைச் சிறுமிக்கு. ஆனாலும், அவளை நோட்டமிடும் ஒரு வாலிபன் அவள் குடிசைக்குப் புறத்தே தனித்திருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் நைச்சியமாகப் பேசி அடர்த்தியான செடி கொடிகள் மரங்கள் நிறைந்த சூழலுக்கு அழைத்துச் செல்வான். கள்ளம் கபடம் அறியாத அந்த பேதைப் பெண் அவன் தரும் தின்பண்டங்கள் ருசித்து குதியாட்டம் போட்டபடி செல்வாள்.  ஒதுக்குப்புற இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் அத்துமீறத் தொடங்கும் ஒரு கட்டத்தில், அவன் திடீர் என்று வீறிட்டு அலறுவான், அந்தக் குழந்தை அவனிடம், மன்னிச்சுக்கப்பா….எங்கம்மா எப்பவும் சொல்லி இருக்காங்க, அதனால் தான் அப்படி செஞ்சேன்…எவனாவது உன் பாவாடை நாடாவைத் தொட்டான்னா உடனே இந்த மிளகாய்ப் பொடியை எடுத்துக் கண்ணில் தூவுன்னு அம்மா சொல்லியிருக்காங்க என்று அவள் சொல்லவும், அவன் தலைதெறிக்க ஓடுமிடத்தில் கதை முடியும்.

ஆனால், அந்தக் கடைசி இடம் வரும் வரையில் நெஞ்சு பதறிக் கொண்டிருக்கும். அந்தக் குழந்தைக்கு ஒன்றும் நடந்துவிடக் கூடாதே , யாரேனும் வந்து காப்பாற்றிவிடக் கூடாதா என்று கிடந்து அலறும் மனம். எத்தனை வக்கிரம் பிடித்த மாபாவி என்று அந்தக் கயவன் மீது அத்தனை கோபம் எழும்.  அந்த மிளகாய்ப் பொடியில் உறைந்து கிடக்கும் பெற்ற வயிற்றின் பரிதவிப்பு நெடு நாட்கள் ஆகியும் மறக்கவிடவில்லை கதையை. 

அது வெறும் கதை. ஆனால், நிஜத்தில் அதைக் காட்டிலும் பன்மடங்கு புரட்டிப்போடும் கொடுமைகள்…. பிஞ்சு மொக்குகளையே நாசப்படுத்தும் வெறியில் வயது வித்தியாசம் இன்றி நடந்துகொள்ளும் மிகக் கேவலமான செய்திகள் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறோம்… வெளியே சொல்லப்பட்டவை ஐந்தில் ஒரு பங்கு கூட இராது. ஆபத்து வெளியே இருந்து மட்டுமல்ல, குடும்பத்திற்குள் நடக்கும் வன்முறைகள் பற்றி அண்மையில் கூட பொதுவுடைமை இயக்கத்தில் முக்கியமான மாநாடு நடத்தி மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கார்கி, ஒரு திரைப்படம் அல்ல. அதிர வைக்கும் ஓர் உண்மையான நிகழ்வை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை, பாலின வேறுபாடுகள், அவமதிப்புகள், அத்து மீறல்கள் பற்றிய நுட்பமான விவாதங்களை சமூகத்தில் கிளர்த்தும் முக்கியமான வேலையைச் செய்கிறது. அடுக்குமனை குடியிருப்பில் ஒரு சிறுமியைச் சிலர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கொடுமை காவல் துறையிடம் புகார் செய்யப்படுகிறது. ஏற்கெனவே சிக்கிய குற்றவாளிகளன்றி வேறொருவரும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற விசாரணையில் அருகமை ஆள் ஒருவர் சிக்குகிறார் என்கிற தலைப்புச் செய்தியில் தொடங்குகிறது படம். 

ஒரு பள்ளி ஆசிரியை, தேர்வு நடக்கும் அறையில் தனது வருங்காலக் கணவனின் அலைபேசி அழைப்பைப் பக்குவமாக விரைந்து பேசி முடித்து, விடைத்தாள்கள் எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்து எந்திர கதியில் மதிய உணவு எடுத்துக் கொள்ளும்போது அந்த அறையின் தொலைக்காட்சிப் பெட்டியில் ஓடும் இந்தச் செய்தி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. அவள் வீடு திரும்பியும் திரும்பாத தந்தை, ஏன் அலைபேசி அழைப்பைக் கூட ஏற்பது இல்லை என்று அவர் வாட்ச்மேன் ஆக இருக்கும் அபார்ட்மெண்ட் தேடிப் போகும்போது காத்திருக்கிறது அதிர்ச்சி, பிடிபட்டிருப்பவர் அவர் தான் என்று.   

அந்த இரவு பேயிரவு. காவல் நிலையத்தைக் கண்டடைந்தாலும், அவளால் தந்தையைக் கண்டடைய முடிவதில்லை.  அவர் எங்கே என்று தனக்கே தெரியாது என்று சாதித்து, அவளைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அதிகாரி, உன் தந்தையை யாரும் காப்பாற்ற முடியாது, நீங்கள் குடும்பத்தோடு வேறிடத்திற்குப் பாதுகாப்பாக ஓடிவிடுங்கள் என்று மிரட்டியே சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால், அவள் விடாப்பிடியாகச் சுற்றிச் சுற்றி வந்து, அந்த காராகிருகத்தின் உள்ளே அவர் எங்கே அடைத்துவைக்கப்பட்டு இருக்கிறார் என்பதைப் பார்த்து விடுகிறாள்.

தீர்மானமாக நம்புகிறாள், அந்தக் கீழ்த்தரமான செய்கையைத் தன்னுடைய தந்தை செய்திருக்க மாட்டார் என்று. அவளது போராட்டம் தான் கதை. அவள் தந்தையை விடுவிக்க நடத்தும் போராட்டத்தில் உண்மையையும் கண்டடைந்து விடுகிறாள். அது தான் கார்கியின் மிக நுட்பமான திரைக்கதை. ஒரு பெண்ணாக அவள் நடத்தும் போராட்டம், ஒரு தனி மனுஷியின் போராட்டமாகத் தான் இருக்குமென்றாலும் விரிந்த தளத்தில் சமூகக் காரணிகளையும் அலசும் போராட்டமாக அமைந்து விடுவது தான் கார்கியை அண்மைக்காலத்தில் வித்தியாசமான பார்வை அனுபவம் வழங்கும் படமாகவும் நிறுத்துகிறது. 

சிறுமி சீரழிக்கப்பட்டது அவளது அடுக்குமனை வளாகத்தில் யாரும் அதிகம் பயன்படுத்தாத படிக்கட்டுகள் பக்கம் என்பதால், வாட்ச்மேன் இயல்பாக சிக்குகிறார். தவிரவும், இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவளை அவர் தான் சுமந்து சென்று அவளது வீட்டில் ஒப்படைக்கிறார், அப்போது தனது பணி நேரத்திற்கும் மேலான அரை மணி நேரம் கடந்திருப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் எங்கே இருந்தார், ஏன் இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என்கிற கேள்விகளுக்கு அவரிடம் காத்திரமான பதில்கள் இல்லை. இது திறந்து மூடும் வழக்கு, அவர் தான் அந்தக் குற்றத்தில் தேடப்பட்ட கடைசி குற்றவாளி என்று பப்ளிக் பிராசிகியூட்டர் இலகுவாக வாதங்களை முடித்துவிடுகிறார். 

தனது தந்தைக்காக வாதாடக் குடும்ப நண்பர் மறுத்துவிடுகிறார், பார் கவுன்சில் முடிவு அது. ஆனால், அனுபவங்கள் அற்ற இளம் வழக்கறிஞரான அவரது ஜுனியர் இந்த வழக்கை ஏற்று நடத்த முன் வருகிறார். இதுவும் கார்கியின் முக்கியமான இடம். அவர் எதையும் தடாலடியாக சாதித்து விடுவதில்லை. அவரிடம் மாய மந்திரங்கள் இருப்பதில்லை. சறுக்கி விழுந்து அடிபட்டு எழுந்து தனக்கு இருக்கும் திக்குவாய் பிரச்சனைக்காக இழிவுகள் மென்று தின்று மீண்டும் தொடர்ந்து முதல் கட்ட வெற்றியாக பெயிலில் வெளியே கொண்டு வந்துவிடுகிறார் நாயகியின் தந்தையை. கதை அங்கே முடிவதில்லை.  ஆனால், அடுத்த சில நிமிடங்களில் வேறு தினுசாகச் சென்று திரை விழுகிறது. கார்கியின் இன்னும் ஆக முக்கியமான இடம் அது. 

தந்தை சிறைப்பிடிக்கப்பட்டதும் வீட்டின் மீது கண்ணடி  மட்டுமல்ல கல்லடிகளும் வந்து விழுகிறது.  நாயகிக்கு அவளது வேலை பறிபோய்விடுகிறது. அந்தக் குடும்பத்தின் மீது அவமானச் சூறாவளி பல மைல் வேகத்தில் வந்து தாக்குகிறது. ஊடகக் காமிராக்கள் 24X 7 துரத்திக் கொண்டே இருக்கின்றன. வழக்கை அவர்கள் விவாத மேடைகளில் வேகமாக நடத்தி முடித்துத் தீர்ப்பும் வழங்கி விட முடிகிறது. ஒரு குடும்பத்தின் அப்பாவி உறுப்பினர்கள் மீது இவை ஏற்படுத்தும் தாக்கம் கார்கியின் மற்றுமொரு முக்கிய இடம். 

வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு திருநங்கை. சாடையாகப் பாலின இழிவை அவர் மீது இறைக்கும் பப்ளிக் பிராசிகியூட்டரை அவர் கண்டிக்கும் விதம் இன்னும் முக்கியமான இடம், அவர் சொல்கிறார், ‘எனக்கு விசாரிக்கத் தகுதி இல்லையா, ஒரு பெண்ணின் வலியும் எனக்குத் தெரியும், ஓர் ஆணின் திமிரும் எனக்குத் தெரியும்’ என்று!

தந்தை தவறு செய்திருக்க மாட்டார் என்று நாயகி நம்புவதற்கு முக்கியமான காரணம், தான் சிறுமியாக இருக்கையில் தன்னிடம் அத்து மீற நினைத்த டியூஷன் ஆசிரியரைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றியவர் அவர். தங்கள் அரவணைப்பு அவர். தனது வாழ்க்கையில் தான் நேர்கொண்ட அந்தப் பாலினத் தொல்லையின் நினைப்பில் அடுக்குமனை குடியிருப்பில் கொடுமைக்குள்ளான சிறுமியின் மீது அக்கறை கொண்டபடியே வழக்கை அணுகுகிறார் நாயகி.   தனது தந்தையை வெட்டிப்போடத் துடிக்கும் அந்தச் சிறுமியின் தந்தையை நேர்கொண்டு சந்தித்துப் பேசுமளவு நெஞ்சுரம் இருக்கிறது அவருக்கு. அதே நேரத்தில், ஓர் ஆண்மகவு இல்லையே என்று மனத்தில் நினைக்கும் தனது தாயையும் கேள்விக்கு உட்படுத்துகிறார் கார்கி.  ஊடக மனிதர்களையும் நேரடிப் பார்வையில் பதில் சொல்ல முடியாதபடி வளைத்துக் கேட்டு சங்கடப்படுத்துகிறார்.  இப்படி எத்தனையோ இடங்கள் முக்கியமானவை. 

சாய் பல்லவி அபாரமாக இந்தப் பாத்திரத்தைச் செய்திருக்கிறார். விவரிப்புக்கு அப்பாற்பட்டது அவரது நடிப்பு.  கடந்த ஆண்டுகளில் இத்தனை  நேர்த்தியான ஒரு கதாநாயகி வேடம் செய்யத்தக்கவரைப்  பார்த்ததில்லை என்று எழுதுகிறது தி இந்து. இளம் வழக்கறிஞர் பாத்திரத்தில் அருமையாகச் செய்திருக்கும் காளி வெங்கட் தனக்கு இதுவரை கிடைக்காத வாய்ப்புகளை யோசிக்க வைக்கிறார். தந்தை பாத்திரத்தில் சிவாஜி, நண்பராக லிவிங்ஸ்டன் மிக பாந்தமான நடிப்பு. மற்றவர்களும் அத்தனை இயல்பான நடிப்பு.  மிக சீரியசான கதையில் கூட இயல்பான முறையில் நகைச்சுவைக் காட்சிகள்  வாழ்க்கையின் அபத்த தருணங்களை ஒட்டி அமைந்துவிடுவது குறிப்பிட வேண்டியது.

கௌதம் ராமச்சந்திரன் ஹரிஹரன் ராஜோடு சேர்ந்து எழுதியுள்ள திரைக்கதை மற்றும் அவரது இயக்கம் பாராட்டத் தக்கது, சில கேள்விகள் எழாமலில்லை. ஆனால், படம் அவற்றுக்கு அப்பால் நின்று பேசுகிறது. கோவிந்த் வசந்தா  பின்னணி இசை மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஸ்ரயந்தி, பிரேம்கிருஷ்ணா ஒளிப்பதிவு சிறப்பு. ஷபிக் முகமது அலி அவர்களது படத்தொகுப்பு பாராட்டத் தக்கது.  

சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்வி, பாலின சமத்துவக் கல்வியைப் பள்ளியில் தொடங்குவதில், வீட்டில் வளர்ப்பதில், குறிப்பாக ஆண் குழந்தைகளை வளர்ப்பதில், பொதுவெளியில் நியதி ஆக்குவதில் தான் விடை தேட முடியும். இந்தப் படம் ஒரு பெரிய சலனத்தை இந்த விஷயத்தில் ஏற்படுத்தி உள்ளது. அதனாலும் கார்கி தொடர்ந்து பேசப்படுவதாகிறது. 

 

 

திரைக் கவிஞர்கள் – கவிஞர் கு மா பாலசுப்ரமணியம் – முனைவர் தென்காசி கணேசன்

பிளாஷ்பேக்: கு.மா.பாலசுப்பிரமணியம் நூற்றாண்டு இன்று | Dinamalar

குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடைய கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள், கு மா பா என்ற அழைக்கப்பட்டவர் . இவர் , நிலவுக் கவிஞர் என்றே அழைக்கப் படுகிறார். இவரின் பெரும்பான்மையான பாடல்கள நிலவைப் பொருள் கொண்டதாக இருக்கும்.

*அமுதை பொழியும் நிலவே…. – தங்கமலை ரகசியம்

*இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே – வீரபாண்டிய கட்டபொம்மன்

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு நானிலம் கொண்டாடுதே… -அம்பிகாபதி

*மலரும்… வான் நிலவும்… சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே… – மகாகவி காளிதாஸ், என பல நிலவுப் பாடல்கள்.

இது தவிர,

சிங்கார வேலனே தேவா,

வெற்றி வடிவேலனே சக்தி உமை பாலனே

மனம் கனிந்து அருள்வாய் வேல் முருகா

நெஞ்சினிலே நினைவு முகம்,

ஆடாத மனமும் ஆடுதே,

சித்திரம் பேசுதடி,

கனவெனும் மாயா லோகத்திலே ,

காணா இன்பம் கனிந்ததேனோ,

உன்னைக் கண் தேடுதே, என இவரின் சொற்கட்டு , அபார சுகம் அளிப்பவை.

மெல்லிசைப் பாடல்கள் மட்டுமின்றி துள்ளலான நடையை உடைய பாடல்களையும் எழுதி…தனது முத்திரையை பதித்தவர், கு மா பா.

*யாரடி நீ மோகினி – உத்தம புத்திரன்

*குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே – மரகதம்

*ஆடவாங்க அண்ணாத்தே… – சக்கரவர்த்தி திருமகள்

அஞ்சாத சிங்கம் என் காளை… – வீரபாண்டிய கட்டபொம்மன், எனப் பல.

தந்தையை 5 வயதில இழந்த இவருக்கு தாய் பாடிய தேவாரம் மற்றும் பக்திப்பாடலில் மனம் இசைந்தது. பள்ளிப் படிப்பை விட்டு, மளிகைக்கடை, விவசாயம் என வேலை பார்த்தபோது, தி ஜா, கு ப ரா கதைகளை படிக்க, தமிழ் மீது ஆசை வந்தது. அப்புறம் தனியாக இலக்கணம் கற்றுக்கொண்டார்.

இவரது முதற்பாடல் , ஓர் இரவு படத்தில் இடம் பெற்றது. அன்றைய நாயகர்களாக விளங்கிய, எம் கே டி, பி யூ சின்னப்பா, என் எஸ் கிருஷ்ணன், பாரதி தாசன், ஜி டி நாயுடு இவர்களைப் பேட்டி கண்டு எழுதியவர்.

ஜி.ராமநாதன்,

எஸ்.எம்.சுப்பையா நாயுடு,

சுதர்சனம்,

கே.வி.மஹாதேவன்,

வேதா

என்று நிறைய இசையமைப்பாளர்களிடம் பாடல் எழுதி இருந்தாலும்,

ஒரு கால கட்டத்தில் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்!

வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா போன்ற பல படங்களுக்கு எல்லா பாடல்களையும் எழுதியவர் இவர் தான்!

மஹாகவி காளிதாஸ்,

கொஞ்சும் சலங்கை , வேலைக்காரன், கோமதியின் காதலன் என பல படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி இருந்தார்!

“சாந்தா… ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே… பாடு சாந்தா..பாடு!”

புகழ்பெற்ற இந்த வசனம் கு.மா.பா.வின் வரிகளே!

காருகுறிச்சி அருணாசலத்தோடு சேர்ந்து எஸ்.ஜானகி இசைத்த…”சிங்காரவேலனே தேவா…” பாடலை எழுதியதும் இவர் தான்! இந்தப் பாடல் அபார வெற்றி பெற்றதுடன், இசைத் தட்டு விற்பனையிலும சாதனை படைத்தது.

ஆரம்பத்தில் தமிழ் என்ற ஒன்றினால், அந்தக் கால கவிஞர்கள் போலவே இவரும் , திமுக மற்றும் கருணாநிதி உடன் இருந்தவர், அப்புறம், அவர்களிடமிருந்து விலகி, ம பொ சி யின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து, அதன் துணை பொதுச் செயலாளர என் அவருடன் இருந்தார், பின்னாட்களில, ம பொ சி, மேலவை தலைவர் ஆனபின், இவரும் மேலவை உறுப்பினர் என 6 வருடங்கள் இருந்தார்,

வேலோடு விளையாடும் முருகையா

என் வாழ்வோடு விளையாட வந்தனையா என்றும்,

வெற்றி வடி வேலனே

சக்தி உமை பாலனே

வீரம் விளைத்த குகனே என்றும்,

மனம் கனிந்து அருள் வேல்முருகா

புள்ளி மயில் ஏறும் மால் மருகா என்றும் திரையில் தெய்வீகப் பாடல்கள் எழுதினார்.

அதேபோல, காதல் பாடலில், என் மனம் நீ அறிவாய்

உந்தன் எண்ணமும் நான் அறிவேன்

இன்னமும் ஊமையைப் போல

மௌனம் ஏனடி தேன்மொழியே என்றும்

இக லோகமே இநிதாகமே

இசையோடு காவியம் போல – உள்ளம்

இணைந்தாடும் பேரன்பினாலே

என்றும் பாடி இருப்பார்.

கனவில் தோன்றி சிரித்துச் சிரித்து – நான்

காணும் இடம் எங்கும் இருக்கின்றாய்

கனியின் சுவையாய் இனித்து இனித்து – என்கையில் கிடைக்காமல் மறைகின்றாய் ,

என்றும்,

இதயம் மேவிய காதலினாலே

ஏங்கிடும் அல்லியைப் பாராய்

புதுமலர் வீணே வாடி விடாமல்

புன்னகை வீசி ஆறுதல் கூற

அருகில் வராததேனோ

என்றும், இலக்கிய லட்சணங்களோடு பாடல்களை எழுதியவர் கு.மா.பா… தமிழின் இலக்கண விதி மாறாது எழுதினார்!

யாப்பிலக்கணம் முதல் அணியிலக்கணம் வரை அவரிடம் விளையாடின‌.

இவ்வளவுக்கும் அவர் படித்தது வெறும் 6ம் வகுப்பு மட்டுமே!

யாப்பு பிற்ழாது அவர் எழுதிய…மகாகவி காளிதாஸ் பட பாடல் இதோ! இது இன்னிசை வெண்பா என்பார்கள்.

சின்னையா என்றழைத்த செங்கனிவாய் மூடியதோ

உண்ணைய்யா என்றெடுத்து ஊட்டிய கை வாடியதோ

அன்னையாள் கொண்ட அவலமிதைக் காண்பதற்கோ

கண்ணை யான் பெற்றுள்ளேன் காளி?

இது நேரிசை வெண்பா

பூவில் இடம்கொள்ளப் போதாமல் என்னுடைய நாவில் இடம்கொண்ட நாயகியே – நோவில்

முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்து நடக்கத் தருவாய் நலம்!

இது தான் யாப்பிலக்கிய வெண்பா

அப்படத்தில் ‘கட்டளைக் கலித்துறையில்’ அழகாக பாடியிருபபார் கவிஞர் –

தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க,

குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க

பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்

பொங்கியே பூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே…

நீண்ட இடைவெளிக்கு பிறகு 1980 களின் தொடக்கத்தில் கு.மா.பா,

“தூரத்து இடிமுழக்கம்” என்ற படத்திற்கு, சலீல் சௌத்ரி இசையில மற்றும் கங்கை அமரன இசையில் கனவுகள் கற்பனைகள என்ற படத்திலும் பாடல் எழுதினார்.

பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர, மேல் சபை உறுப்பிநர், சிலம்புசெல்வர் ம பொ சி அவர்களின் தமிழரசு கழக செயலாளர என பல பரிமாணங்களில் இயங்கியவர்.

காலத்தால் அழியாத பாடல்களை எழுதியதுடன்,

தமிழ் அறிந்த, இலக்கணம் அறிந்த, ஒவ்வொரு வரியிலும் யாப்பும் அணியும் காத்து நின்று, தங்கத் தமிழ் வரிகளை தரமாக தந்த கவிஞன், 1994ஆம் ஆண்டு மறைந்தார்.

 

 

 

கள்ளன் – பானுமதி ந

தனியார் நகை அடகுக்கடை வைத்திருப்பவர்கள்.. அதிகாரிகள் சிக்குகிறார்கள்.. பாயப்போகும் கிரிமினல் வழக்கு | tn govt to register a criminal case against jewelery loan ...

ஏதோ முணுமுணுத்துக் கொண்டு கல்யாணம் முற்றத்தைத் தாண்டி தன்னை நோக்கி வருவதை நடேசன் பார்த்தான் கீழ்க் கண்ணால். காலை வேளையில் வராந்தா தாண்டி இன்னமும் வெயில் விழாத இந்த நேரத்தில் இவனுக்கு என்ன அப்படி அவசர வேலை என்று நினைத்தாலும், அவன்  கை கல்யாணியின் கழுத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. வைக்கோலை அதி வேகமாகப் பதம் பார்த்துக் கொண்டிருந்த அது தென்னை மரத்தைச் சுற்றி வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணியின் அடர்த்தியை பார்த்துக் கொண்டே மணி ஆட ஆட மனதால் அந்தப் பசுமையைச் சப்புக் கொட்டிக் கொண்டே காய்ந்த இந்த வைக்கோலைத் தின்பதாக அவனுக்குத் தோன்றியதும் சிரிப்பு வந்தது. மனிதர்களைப் போல மாட்டிற்கும் சிந்தனைகள் உண்டா? ‘திருட்டுக் கல்யாணி, வைக்கல் இருக்கறச்சே கீரைக்குப் பாயறயே, திருடி, திருடி.’ என்றான்.

‘என்ன நடேசா, நான் கள்ளன் கள்ளன்னு சொல்லிண்டு வரேன். நீயானா, திருடி, திருடின்னு செல்லம் கொஞ்சற?’

“கள்ளனா? உன் வீட்டுக்கா? எப்ப? ஏதாவது பெரிசா காணமா? போலீசுக்குப் போணுமா?”

‘அட, எம் வீட்டுக்கு ஏன் திருடன் வரான்?’

“அது சரிதான். நீயே உள்ளுக்குள்ள ஆட்டயப் போட்றவன். உங்கிட்ட எவனாவது திருட வருவானா என்ன?”

அவர்கள் இருவருக்குமிடையில் நட்பு என்றோ, பகை என்றோ இனம் காண முடியாத ஒன்று எப்போதும் நிலவி வந்துள்ளது. நடேசன் பெரிய தொழில் நிறுவனத்தில் உதவித் தலைமை நிர்வாகியாக இருக்கிறான். அவனை அண்டி அவன் வீட்டிலேயே தங்கியிருப்பவர்களே ஏழெட்டுப் பேர்கள் இருக்கும். அவனுக்கும் மூன்று குழந்தைகள். அவன் வீட்டில் இருக்கும் சுற்றத்தாரைப் பற்றி அவன் மனைவி ருக்மணி அலுத்துக் கொண்டதில்லை. தங்கியிருக்கும் குடும்பத்தாருக்கும் தலா ஒரு குழந்தை. அவர்களும் குடும்பத்திற்குத் தகுந்தாற் போலத்தான் நடந்து கொண்டனர். சின்னச் சின்ன வேலைகள் செய்வார்கள், கடை கண்ணிக்குப் போய் வருவார்கள். பள்ளிக்கூடத்தில் அவர்களில் மூவர் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நடேசனின் இரு பிள்ளைகள் கான்வென்ட்டில் படிப்பதில் மனக் குறை ஏதுமில்லை. ‘துணிமணி, சாப்பாடு, தங்கற இடம், புக்கு, நோட்டு, அந்தச் செலவு இந்தச் செலவுன்னு நாங்க வைக்கறது போறாதா? கான்வென்ட்டெல்லாம் வேணாம், மாமா’ என்று வெளிப்படையாகச் சொன்ன குழந்தைகள் அவர்கள். புரியாததை ஒன்றுக்கொன்று அந்தக் குழந்தைகளும் இவன் பிள்ளைகளும் தமக்குள்ளேயே பேசிப் பேசி புரிந்து கொண்டு விடுவதைப் பார்க்கும் போது, நடேசனுக்கு நிறைவாக இருக்கும்.

‘கல்யாணம் மாமாவா? காஃபி குடிக்கிறேளா?’ என்று கேட்டவாறு வந்த ருக்மணி ‘உங்களுக்கும் இன்னொரு டோஸ் வேணுமா?’ என்றாள்.

நடேசன் பதில் சொல்லும் முன்னே “காஃபி குடிச்சே கடனாளியாயிட்டான் அவன். அவனுக்கும் கொடுத்துடுங்கோ மாமி” என்ற கல்யாணத்தை சற்று விழித்துப் பார்த்துவிட்டு அவள் சமையலறைக்குப் போனாள்.

மனைவியின் முன்னால் இந்தத் தாக்குதலை நடேசன் எதிர்பார்க்கவில்லை. காலங்கார்த்தால வீட்டுத் தொழுவம் வரைக்கும் வந்து இங்கிதமில்லாமல் பேசும் இவன் எதற்காக வந்திருக்கிறான்?

‘கல்யாணம் மாமா, சூடு அதிகமா இருக்காம்; அப்டியே குடிச்சா பொசுக்கிடும்னு உங்ககிட்ட அக்கா சொல்லச் சொன்னா.’

சரியான பதிலடி அவனுக்கு என்று நடேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“மூன்றரை க்ரவுண்ட்ல கோட்டையாட்டம் வீடு. இன்னிக்குத்தான் ஹாலெல்லாம் பாத்தேன். ஆத்தங்குடி கல்லால இழச்சிருக்கே. ஆஃபீஸ் கூட இங்கயும் ஒண்ணு வச்சிண்ட்ருக்கப் போலருக்கு. அங்க பாத்தா ஃபுல்லா மாடர்ன், ஹால்ல வந்தா ஃபுல்லா ட்ரெடிஷனும், மாடர்னும்; பின்னாடி வந்தா தொழுவம்.”

‘சரி, என்ன விஷயம்? ஏதோ கள்ளன், கள்ளன்னு சொன்ன, பேச்சு தெச மாறிடுத்து.’

“ஆமாம் நடேசா, வர வழில சேவுகனைப் பாத்தேன். கண்டுக்காமப் போனான்.”

‘அவர் ஏதோ சிந்தனல போயிருப்பார், கல்யாணம். அவர் தொழில்ல கள்ளமில்லாம எப்படி?’

“அவனுக்கு நீ எதுக்கு சப்பக்கட்டுக் கட்டற. ஊர அடிச்சு உலைல போட்றான். அடகு புடிச்சே அத்தன சொத்து சேத்துருக்கான்.”

‘அவர் வழி அது. ரிஸ்க் எடுத்துண்டு பணம் கொடுக்கறார். நல்ல இலாபமில்லாம செய்ய மாட்டார்; குலத் தொழில், அதுல அவங்க வியாபார முறையே வேறதான. எனக்கும் இதெல்லாம் பிடிக்கத்தானில்ல; ஆனா, ஆத்திரம், அவசரத்துக்கு அவர் தானே அடைக்கலம்.’ என்று சிரித்தான் நடேசன்.

‘நடேசா, நா வந்ததே வேற விஷயத்துக்காக. நீ அசலும், வட்டியும் சரியாத்தான் கொடுத்துண்டு வர. ஆனா, மூணு மாசம் முன்னாடி அசல மொத்தமாத் திருப்பப் போறேன்னு சொன்ன; அத மனசுல வச்சுண்டு நா வேற திட்டம் போட்டேன். ஆனா, உன்னால முடியல.’

“அப்பவே சொன்னேனே, எதிர்பாரம ருக்மணியோட அண்ணாவுக்கு ஆஸ்பத்திரில செலவாயிடுத்து. அதனால, தவணையும், வட்டியும் கொடுக்கறேன், இன்னும் நாலு மாசத்ல மொத்தமா தரேன்னு சொன்னேனே.”

கல்யாணம் சற்று மௌனமாக இருந்தான். இவன்  ஏன் இன்னமும் உக்காந்திருக்கான் என்று மனதில் நினைத்த நடேசன், ‘சரி, கொஞ்சம் வேலயிருக்கு’ என்றவாறே எழுந்தான்.

“இருப்பா, சொல்ல வந்ததை நா இன்னமும் சொல்லல.”

‘சொல்லு’

“தப்பா நெனக்காத. உன் வீட்ல கூட்டம் அதிகமாயிண்டே போறது. ஒத்தன் சம்பாத்யம்; எல்லாம் உக்காந்து திங்கறதுகள். தர்ம சத்ரமாயிடுத்து உன் வீடு.”

‘கல்யாணம். இதப் பத்தி நீ பேச வேண்டாம்.’

“இல்லப்பா, பேசல. என் வியாபாரத்த இங்க மாத்திக்கலாம்னு யோசன. உன் வீடு சரியா இருக்கும்.”

நடேசன் அதிர்ந்தான். இவன் என்ன சொல்ல வருகிறான்? நம் வீட்டில் இவனுடைய கடையைக் கொண்டு வைக்கக் கேக்கிறானா? இதென்ன வினோதம்?

“நடேசா, வீட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அத்தோட உனக்கும் கைல பணம் வந்ததுன்னா இத்தனாம் பெரிய சம்சாரத்த கட்டிக் காப்பாத்தலாம். என்ன சொல்ற?”

‘நீ சொல்றது சுத்தமா புரியல. இந்த வீட்ல உன் வியாபாரத்தக் கொண்டு வரணும்னு ஆசப்பட்ற. எனக்கு பணம் கைல வரும்கற. நான் வாடகைக்கெல்லாம் என் வீட்ட விடமாட்டேன்.’

“வாடகைக்கு இல்ல நடேசா. கிரயம் பண்ணிக் கொடுத்துடு. உன் கடனும் அடையும்; கைல நல்ல காசும் வரும்.”

நடேசனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் மதிப்புள்ள மனைக்கும் வீட்டிற்கும் வெறும் இருபத்தியைந்து இலட்ச ரூபாய் கடன் ஈடா? மனிதனுக்கு இத்தனை பேராசையா? வைக்கோலைத் தின்று கொண்டே கீரைப் பாத்தியை ஆசையுடன் பார்த்த மாட்டிற்கும் இவனுக்கும் என்ன வித்யாசம்? அது கூட கட்டறுத்துக் கொண்டு கீரைப் பாத்தியை நோக்கி ஓடவில்லை.

நடேசன் நாற்காலியிலிருந்து எழுந்தான். ‘நாளைக் காலல பாப்போம்’ என்றான்.

“என்னவோப்பா, உன் பணப் பிரச்சனை தீர வழி சொன்னேன். என்னத் தப்பா நெனக்காதே. நாளைக்கு நல்ல பதிலா சொல்லு.” என்றவாறே சென்று விட்டான் கல்யாணம்.

இவனுக்குத் தகுந்த பதில் சொல்ல வேண்டும், அதுவும் நாளைக்குள் ரூபாய் 25 இலட்சம் வேண்டும். அதைக் கொடுத்து விட்டு அவன் சங்காத்தமே வேண்டாமென விட்டு விட வேண்டும். அதுதான் சரி, ஆனால்..ஆனால் எப்படி?

‘மாணிக்கம் இடை கட்டி வைர மணி கட்டி ஆனிப் பொன் ஊஞ்சலால்..’ பாடியே எத்தனை குழந்தைகளை அம்மா இங்கே வளர்த்திருக்கிறாள்?  தமிழ்ப் பதிகங்களும், வடமொழி சுலோகங்களும் முழங்கிய பூஜையறை. ‘ஆகி வந்த கட்டில்’ என்று அந்த ரோஸ்வுட் கட்டிலில் அவனுக்கு நடந்த சாந்தி கல்யாணம். குழந்தைகளின் குதூகலமும், சிறு சண்டைகளும், பண்டிகைகளும், அப்பா, அம்மா மரணமும், இந்த வீட்டில் தான். மருதாணி மரமும், கொடி சம்பங்கியும், செம்பருத்தியும், வரவேற்கும் முன் வாசல். தென்னையும், வாதா மரமும், கீரைப் பாத்தியும், வைக்கோல் பரணுமுள்ள கொல்லை. அங்குலம் அங்குலமாக ஜீவ களை ததும்பும் ஒரு குடில். வாழும் வீடு. இதைக் கேட்க ஒரு மனிதனுக்கு எப்படி நா எழுந்தது?

அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையில் ருக்மணி கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். ‘வைர ஹாரம், வைர ஒட்டியாணம், வைர வளையல்கள், ஒரு ஜோடி ப்ளு ஜாகர் வைரத் தோடு, முத்து மூக்குத்தி, 30 பவுன் காசு மாலை, ஐம்பது தங்க வளையல்கள், இரட்டைச் சர சங்கிலிகள் நாலு, டாலர் செயின் ஐந்து இதெல்லாத்தையும் சேவுகனிடம் வச்சு 25 இலட்சத்தை வாங்குங்கோ. மீட்டுக்கலாம். இனி கல்யாணம் இந்த வீட்டுப் படி ஏறக்கூடாது, ஆமா.’

“இல்ல ருக்கு, நான் வேற ஏதாவது செய்யறேன்”

‘ஒரு நாள்ல என்ன செய்ய முடியும்? சொல்றதக் கேளுங்கோ.’

நடேசன் அரை மனதுடன் தான் சென்றான். தெருவில் வண்ண பலூன்களை மேலும் மேலும் ஊதிய சில சிறுவர்கள் அது வெடித்தவுடன்

திடுக்கிட்டனர். பச்சைக் குதிரை தாண்டி பலர் கீழே விழ ஒரு சிறுவன் அனாயாசமாகத் தாண்டினான்.

‘வாங்க சார், அதிசயமா வந்திருக்கீங்க. சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன். நான் வெளில கிளம்பிக்கிட்டிருக்கேன். உங்களுக்காக கொஞ்சம் தாமசம் செய்யலாம்.’

“அப்றமா வரட்டுமா? வெளில போறச்சே நா வேற இடஞ்சலா வந்துட்டேன்.”

‘அட, அதெல்லாம் ஒண்ணுமிலீங்க. வந்த விஷயம் என்னதுன்னு சொல்லுங்க’

நடேசன் தன் பண நெருக்கடியைச் சொன்னான்.

‘இதுக்கா இம்புட்டுத் தயங்கினீங்க? செக் தரேன்.  உடனே பணம் கெடச்சுடும்.’

“இந்த நகை ஜாபிதா உங்ககிட்ட இருக்கில்ல. நாளைக்கு நான் பட்டியல சரி பாத்துட்டு அடமானம் வச்சிருக்கீங்கன்னு எளுதித் தரேன். இன்னிக்கி ஏற்கெனவே லேட் ஆயிடுச்சு. மச்சினன் வீட்டு விசேஷங்க. ஆச்சி கோபத்ல இருக்கு.”

மாலை பணத்தைக் கல்யாணத்திடம் கொடுத்தாகிவிட்டது.  இரவு பத்து மணி வாக்கில் இடியென ஒரு செய்தி வந்தது. விருந்து முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சேவுகன் திடீர் மாரடைப்பால் காலமானார்.

துக்கம் கேட்க விசனத்துடனும், கவலையுடனும் அங்கே போன நடேசன் கைகளில் ஆச்சி நகைகளை அடகு பிடித்த இரசீதும், நகைகளின் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் கொடுத்த போது நடேசன் தன் வயதை மறந்து, தன் பதவியை மறந்து அழுதான்.

கண்ணன் கதை அமுதம் – தில்லை வேந்தன்

. கண்ணன் கதையமுது -10

 

பாலை விஷமாக்கியவள் ... பூதகி

( கம்சனின் ஆணையை ஏற்ற பூதனை, பத்து நாள்களுக்குள் பிறந்த குழந்தைகளைக் கொல்லப் பல இடங்கள் செல்கிறாள்.
பின்னர், அழகிய பெண் வடிவம் கொண்டு கோகுலம் வருகிறாள்….)

பூதனையின் அழகிய வடிவம் கண்டு அனைவரும் மயங்குதல்

உருவை மாற்றியே உலவி வந்தனள்
பருவ மங்கையாய்ப் பார்த்தோர் எண்ணவும்
திருவைப் போலவே திகழ்ந்த பூதனை
வரவில் யாவரும் மயங்கிப் போயினர்.

அனைவரும் ஒருவித மயக்கத்தில் செயலற்று இருக்க நந்தனின் மாளிகை நுழைதல்

மயக்கம் என்பதோ, மந்திரம் என்பதோ,
இயக்கம் இன்றியே யாவரும் காண்கையில்,
தயக்கம் இன்றியத் தந்திரத் தையலாள்
வியக்கும் நந்தனின் வெல்மனை மேவினாள்.
(தையலாள் – பெண்)
(இயக்கம் இன்றி – செயலற்று)

தம்மை மறந்த நிலையில் தாயர் இருவர்

தாயர் இருவர் அருகிருந்தும்
தம்மை மறந்த நிலையானார்.
ஆயும் திறனும் இலையானார்
அங்கே பொம்மைச் சிலையானார்.
சேயும் சிரித்துப் படுத்திருந்தான்
செயல்கள் யாவும் அறிந்திருந்தான்
பேயும் அஞ்சும் பூதனையாள்
பிள்ளை நோக்கி நகர்ந்துவந்தாள்.

(தாயர் இருவர்– யசோதை, ரோகிணி)

பூதனை குழந்தையைத் தூக்கிச் செல்லுதல்

அழகிய உறையி னுள்ளே
அடங்கிய கூர்வாள் போன்றாள்
பழகிய பெண்ணைப் போலப்
பக்குவ மாக வந்தாள்
குழவியைக் கொஞ்சித் தூக்கிக்
கொண்டதும் தனியே சென்றாள்
தழலினைத் தழுவும் விட்டில்
தானென அறியாள் அந்தோ!

பாம்பினைப் பழுதை என்று
பாய்ந்திடும் தேரை போன்றும்
சாம்பலுள் கனலைக் காணாத்
தகவிலாப் பேதை போன்றும்
தீம்பியும் குழந்தைக் குள்ளே
செறிந்திடும் இறைமை காணாள்.
வீம்பினால் வெறியால் கொன்று
வீசவே எண்ணிச் சென்றாள்

( பழுதை – கயிறு, வைக்கோலை முறுக்கிய திரி)
( தீம்பி – தீயவள்)
(செறிந்திடும் – அடங்கிடும், பொருந்திடும்,மறைந்திடும்)

 

குழந்தைக்கு நச்சுப்பால் கொடுத்தல்

பசியினால் அழுவ தைப்போல்
பாலனும் மாயம் செய்யக்
கசிந்திடும் நச்சுப் பாலைக்
கனிவுடன் தருதல் போல
ஒசியிடை மீதி ருத்தி
உண்ணவே செய்ய, அந்த
நிசிநிற மதலை, பேய்ச்சி
நெடுமுலை உறிஞ்ச லானான்.

(ஒசியிடை- வளையும் இடை,)
( நிசிநிற மதலை – இருள் நிறத்துக் குழந்தை))

கண்ணன், பாலுடன் பூதனை உயிரையும் உறிஞ்சுதல்

அச்சுதன், ஆயர் செல்வன்,
அரக்கியின் நச்சுப் பாலை
மிச்சமோர் துளியு மின்றி,
விசையுடன் விரைந்து றிஞ்ச,
அச்சமும் வலியும் சேர
அலறினாள், ‘விடுவாய்’ என்றாள்.
பிச்சியைப் போலே முன்னும்
பின்னுமாய் ஓடி னாளே

(பிச்சி – பித்துப் பிடித்தவள், பைத்தியம்)

நீட்டியகை மடக்கிப்பின் மீண்டும் நீட்டி,
நீள்விரல்கள் மதலையின்மேல் அழுந்தப் பூட்டி
ஆட்டியவன் உடல்பிரிக்க வலிமை காட்டி
அவள்முயன்றும் வினைப்பயன்போல் பிரியாப் பிள்ளை,
ஊட்டியபால் உடனுயிரும் சேர்த்து றிஞ்ச
ஓலமிட்டுக் கண்விரியத் தரையில் சாய்ந்தாள்
கூட்டமொடு விண்ணுலவும் கோள்கள் மற்றும்
கோடுயர்ந்த பெருமலைகள் அதிர மாய்ந்தாள்.

(கோடுயர்ந்த – உயர்ந்த உச்சியைக் கொண்ட)

கீழே கிடந்த பூதனையின் தோற்றம்

அளியார்செந் தாமரைபோல் முகத்தாள் ஆங்கே
அரக்கியுருக் கொண்டாளே வீழும் போது.
வளையெயிறு கொழுவினைப்போல் கூர்மை காட்ட,
வளமரங்கள் நொறுங்கினவே ஆயி ரங்கள்.
துளைமூக்கு மலைக்குகையாய் ஆழ்ந்தி ருக்கத்
சுருள்செப்புக் கம்பிகளை ஒக்கும் கூந்தல்
கிளைத்தெழுந்த பெருமரம்தான் கைகள் கால்கள்
கிடந்தவளின் வயிறதுவோ வறண்ட ஏரி

( அளியார் – வண்டு மொய்க்கும்)
( வளையெயிறு– வளைந்த வெளிப்புறப் பல்)
( கொழு– ஏர்க் கலப்பையின் நுனி)

விளக்கம்:
இறந்து கீழே விழும் போது, பூதனை எடுத்திருந்த அழகிய தோற்றம் மாறி அரக்கி உருவம் மீண்டும் உண்டானது..
அவளுடைய வளைந்த பற்கள் கலப்பை நுனி போல் கூர்மையாக இருந்தன.ஆயிரக் கணக்கான மரங்கள் மீது அவள் விழுந்ததால் அவை நொறுங்கிப் போயின.அவளுடைய மூக்குத் துளைகள் மலையின் குகைகள் போல் ஆழமாக இருந்தன.
அவள் முடி செப்புக் கம்பிகளைப் போல் தோற்றம் தந்தது; கைகளும்,கால்களும் பெரிய மரத்தின் கிளைகளைப் போல் விளங்கின.பெரிய வயிறோ வறண்ட ஏரியை ஒத்திருந்தது.

வைகுந்தப் பேறு

(கவிக்கூற்று)

வீழ்ந்தவுடல் துண்டுகளாய் வெட்டிப் போட்டு
விறகடுக்கிக் கொளுத்துகையில் மேலெ ழுந்து
சூழ்ந்தபுகை நறுமணமே வீசக் கண்டார்
சூதுமகள் நஞ்செல்லாம் போன தாலே.
தாழ்ந்தசெயல் புரிந்திருந்தும் கண்ண னுக்குத்
தாய்போலப் பால்தந்த அரிய பேற்றால்
வாழ்ந்திடுவாள் வைகுந்த இறைவன் பாதம்
மாலவனின் மலர்க்கருணை வாழி! வாழி!

. கண்ணனுக்குக் கண்ணூறு கழித்தல்

( முதிய பெண்டிர் செய்கை)

பெண்ணூறு செய்வதற்குப் பேய்ச்சியென வந்தனளே
விண்ணூரும் கோள்காக்க, வேதங்கள் காக்கவென
மண்ணெடுத்துப் பூசியபின் மந்திரங்கள் பலசொல்லிக்
கண்ணூறு போவதற்குக் கருநிறத்துப் பொட்டுவைத்தார்

(தொடரும்)

“குழந்தைக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லாவிட்டால்”   மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

 

Behavior kids bad angry boys teasing children cartoon set illustration angry child behavior bad uncontrollable 3728658 Vector Art at Vecteezy

பல வருடங்களாக மேகா எனக்குப் பழக்கம். சிறுவர்களின் வகுப்பில் பிரபலமானவள், குழந்தைகளின் பிரியமான ஆசிரியை. தளர்ந்த, கவலை கலந்த முகத்தோடு என்னை அணுகினாள். குழந்தைகள் துவக்கப் பள்ளி மாணவியான சூசன் பிரச்சினைகள் பல செய்திருந்ததால் ஆலோசிக்க வந்தாள்.

சூசனை பள்ளியில் சேர்க்கும் போது அவளுடைய அம்மா வழியான பாட்டனார்கள் அவளை வளர்ப்பவர்களாகச் சொல்லிச் சேர்த்தார்கள். பள்ளியும் ஏற்றுக் கொண்டது.

சூசன் வகுப்பில் சொன்னதைச் செய்ய மறுத்து, மற்றவர்கள் செய்வதைக் அழிப்பதில் குறியாக இருந்தாள். மேகா பொறுமை காத்தாள். பல முயற்சிகளைச் செய்த பிறகே தாத்தா-பாட்டியைப் பேச அழைத்தாள். வரவில்லை. பல முறை எழுதி அனுப்பியதற்கும் பதில் அளிக்கவில்லை.

என்ன சொல்லிச் செய்த பின்னரும், சூசனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆரம்ப வகுப்புகளுக்குப் பிரத்தியேகமாகப் பிள்ளைகள் உணவு உண்ண, மற்றும் கழிப்பறைகளில் உதவும் சுஷிலா, அமுதாவும் சூசனின் இன்னல்களை விவரித்தார்கள். வகுப்பில் மட்டும் அல்லாமல் கழிப்பறையிலும் பிரச்சினைகள் செய்வதைக் கேட்டதும், தாத்தா-பாட்டி, தங்களுடன் சூசன் பெற்றோர் இருப்பதாக, அவர்களே வருவதாகச் சொன்னார்கள். ஆக, ஏமாற்றி சூசனை பள்ளியில் சேர்க்கச் செய்திருந்தார்கள்.

மேகா, அவளுடைய உதவி ஆசிரியை நிர்மலா, பள்ளி அதிகாரி பிரபாகர் மற்றும் நான் சந்திக்கக் காத்திருந்தோம்.

தலை கலைந்து, கசங்கிய உடையில் தந்தை ஆல்வினுடன் சூசன் பள்ளிக்குள் நுழைவதைக் கவனித்தோம். ஐந்து வாட்டசாட்டமான துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவனுடன் வருவதைப் பார்த்ததுமே காவல்நிலையத்திற்குத் தெரிவித்தோம்.

முப்பது வருடங்களுக்கு முன்னால் மேகா, பிரபாகர், நான், சூசனின் தந்தை ஆல்வினுடன் இதே சாயலுள்ள பிரச்சினைகளைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது. ஏமாற்றி பள்ளியில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அதனால் தான்!

எல்லா குழந்தைகளைப் போல ஆல்வின் மூன்றாவது வயதில் சிறுவர்களுக்கான ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தான். சேர்ந்த புதிதில் ஐந்து நிமிடம் கூட ஒரு இடத்தில் இருக்க மாட்டான். அந்த வயதில் குழந்தைகள் இப்படித் துடிதுடிப்பாக இருப்பது சகஜம். நாளடைவில் அமைதியாவான் என மேகா காத்திருந்தாள். மாறவில்லை. சுட்டிக் குழந்தை என நினைத்துக் காத்திருந்தாள்.

இரு மாதங்களில் வகுப்பில் மற்ற பிள்ளைகளின் நடத்தையில் கவனம் திரும்பியது. ஆல்வின் பள்ளிக்கு வரும்போது தலையைச் சீவியிருக்க மாட்டான், குளிக்காத வாடையினால் மற்ற பிள்ளைகள் அவன் வந்ததும் மூக்கை மூடிக்கொண்டு ஓடி மேகாவிடம் வந்து விடுவார்கள். அவனுடைய பெற்றோர், அப்பா மார்க், அம்மா ஐவியை அழைத்து ஆல்வின் இவ்வாறு வருவதை மாற்றிக்கொள்ள மேகா பரிந்துரை செய்தாள்.

மார்க் கோபம் பொங்கச் சத்தம் போட்டு ஆல்வினை வற்புறுத்த மாட்டோம் என மறுத்து விட்டான். ஐவீ, ஆல்வினை அணைத்தவாறு அழுது கொண்டே வெளியே ஓடினாள். மார்க் அவளைத் தொடர, வீட்டிற்குப் போய் விட்டார்கள்.

மறுநாளும் ஆல்வின் அவ்வாறே வந்தான். எப்போதும் போலப் பள்ளிக்குள் தமதமயென ஓடி வந்து, பையைத் தூக்கி எறிந்து, உதவிக்கு இருப்பவர் அவ்வாறு செய்யக் கூடாது எனச் சொல்லி முடிப்பதற்குள் அவர்களைத் தள்ளி விட்டு விளையாட்டு இடத்திற்கு ஓடினான். திரும்ப அழைத்து வர முயலும் போதெல்லாம் அவர்கள் மீது மணலை வாரி அடித்து, நெருங்கும் போது தகாத வார்த்தைகளைச் சொன்னான்.

நிர்மலாவோ மேகாவோ ஆல்வினை வகுப்பிற்கு அழைத்து வர முயன்றாலும் அவர்கள் மீதும் எச்சில் துப்பினான். அப்படிச் செய்யக் கூடாது எனச் சொல்வதற்கு ஏளனம் முகபாவம் காட்டினான். இதை மற்ற பிள்ளைகள் பார்த்து, சிலர் செய்ய ஆரம்பித்தனர். புகார்கள் குவிந்தது. பள்ளி மேலாசிரியர் என்னை அழைத்து இதைக் கையாளுவதற்கு முறையைக் கேட்க, மேகா மற்றும் அந்த வகுப்பு ஆசிரியைகளுடன் வர்க்ஷாப்பில் கலந்துரையாடி வழிகளை அமைத்தோம். வளரும் பருவத்தில் குழந்தைகள் ,கவனத்தை இழுக்க இதுபோன்ற நடத்தையைச் செய்ய முயல்வார்கள். அவை, ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை என புரிய வைத்ததும், பிறகு  செய்ய மாட்டார்கள். 

பள்ளிக்கு வருவது அறிவு பெறுவதற்கு மட்டும் அல்ல. உணர்வுகளை மதிக்க, மற்றவர்களுடன் இருக்க, ஒழுக்கம், ஒத்துழைப்பைக் கற்றுக்கொள்வதும் அடங்கும். ஆசிரியை ஆல்வினைத் துப்பக்கூடாது, பிடிக்கவில்லை என்றால் எப்படிச் சொல்வது என்பதற்கு உதாரணங்களைத் தந்தார்கள். மூன்று வயது, இளம் துளிர் காலத்தில் கற்பதால் செய்து பழகுவார்கள், “ஐந்தில் விளையாதது ஐம்பதில் விளையாது”!

சொல்லிப் புரிய வைப்பது கற்றலின் அங்கம். கடைப்பிடித்ததால் பிள்ளைகளிடம் நல் விளைவைக் கண்டார்கள்!

இதில் ஆல்வின் அடங்கவில்லை. தகாத வார்த்தைகளை உபயோகிப்பதும், அடித்து விட்டு ஓடுவதையும் வருத்தத்துடன் ஆசிரியர்கள் வெளிப்படித்தினார்.

மேலதிகாரிகளுடன் ஆலோசித்து ஆல்வினுடன் பள்ளி வளாகத்தில் ஸெஷன்களை ஆரம்பித்தேன். வண்ணங்கள் நிறைந்திருந்தால் சில நிமிடங்களுக்குக் கவனம் காட்டினான். கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தான். பொருட்களைத் தூக்கி எறிவதைக் குறும்பு என வகைப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு பழகிவிட்டதாலோ எனத் தோன்றியது. வீட்டில் கடைப்பிடிக்கும் வழிமுறையை அறிய மார்க், ஐவீயைச் சந்திக்க முடிவெடுத்தேன்.‌

அதே சமயத்தில் ஐவி காரியதரிசியாக இங்கேயே வேலைக்குச் சேர்ந்தாள். இது உதவும் என நம்பினேன்.

ஐவீயைச் சந்தித்ததும் மார்க்கையும் சந்திக்கப் பரிந்துரைத்தேன். சரி என்றாள். ஆனால் நேரம் குறிக்கும்போது ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட நாளன்று சாக்குப்போக்குச் சொல்லி விடுவார்கள்.

ஐவீயின் வளர்ப்பு முறைகளின் சிறுதுளியைப் பள்ளியில் பார்த்தேன். ஆல்வின் ஸெஷன்களிலிருந்து அவ்வப்போது ஐவீயிடம் ஓடிவிடுவான். உடனே பையிலிருந்து சாக்லேட் தருவாள். குழந்தையைப் பொருத்தவரை, இப்படிச் செய்வது தன் செய்கையைச் சரியென்று ஆமோதிப்பதாகும். ஆல்வின் உதைக்கும் போதும் பாவனை காட்டும் போதெல்லாம் ஐவீ கலகலவென்று சிரிப்பாள். தான் செய்வது டபுள் ஓகே என எடுத்துக் கொண்டதில் பழக்கமாகியது. பிரபாகர் கவனித்து எடுத்துச் சொன்னாலும் ஐவீ குழந்தையை ஸெஷனுக்கு அனுப்பவில்லை. ஐவீயை வேலைக்கு வைத்தோமே என்று அவர் வருத்தப்பட்டார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு ஆல்வினின் பெற்றோர்கள் என்னைச் சந்தித்தார்கள். ஆல்வின் செல்லக் குழந்தை என்றதாலேயே முழு சுதந்திரம் கொடுத்தார்களாம். கட்டுப்பாட்டை இந்த வயதில் ஆரம்பிக்கத் தேவை என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். குழந்தைகளைச் சுதந்திரமாக விடவேண்டியதை உறுதியாக நம்புகிறோம் என்றார்கள்.

ஆல்வினின் நலனுக்காக என்றதால், சில எளிதான குறிப்புகளைச் செய்ய ஒத்துழைப்பு உறுதி என்றார்கள். உடல்மொழியோ வேறு சொன்னது. மேற்கொண்டு ஸெஷன்கள் தேவை என்றதும், அவற்றை நான் ஆலோசிக்கும் மருத்துவமனையில் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார்கள்.

ஆல்வின் பெற்றோருடன் வந்தான். பிரத்யேகமாகக் குழந்தைகளின் பிரிவான சீ ஜீ சீ (CGC, Child Guidance Clinic) பிரிவுக்கு அழைத்துச் சென்றேன். பெற்றோரை உட்கார வைத்து ஆல்வினிடம் திரும்புவதற்குள் அவன் அங்கிருந்த பல பொருட்களைத் தாறுமாறாகப் போட்டிருந்தான். மார்க், ஐவீயை பார்த்து நகைக்க ஆல்வின் பலமாகச் சிரித்தான். இதையே உதாரணமாக எடுத்துக் கொண்டேன்.

மார்க்கும் ஐவீயும் இந்த வயதில் செய்யக்கூடியது, கூடாத முறைகளைச் சொல்லித் தரவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆல்வினிடம் செய்யாதே எனப் புரியவைத்ததும், அமைதியாகச் செய்தான். இது சுதந்திரம் பறிக்கப்பட்டதாகச் சொல்லி, பெற்றோர் இருவரும் ஆல்வினை அழைத்து, அவன் மறுக்க தரதர என இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

அடுத்த இருமுறை ஸெஷனில் மௌனம் சாய்த்து வேலை இருப்பதாகச் சொல்லிச் சென்று விட்டார்கள்.‌ ஆல்வின் பள்ளியில் சொல்வது எதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தான். ஐவீயிடம் மேகா பேச முயன்ற போதெல்லாம் கண்ணீர் பதிலாக வந்தது.

இரு வாரங்களுக்கு வெளியூர் செல்வதாகக் கூறினார்கள். பிறகு என்னுடன் ஸெஷனுக்கு வந்தபோது ஆல்வினை விட்டு விட்டுத் திரும்பி வருவதாகச் சொல்லி மார்க் சென்றான். அடுத்த நிமிடமே ஆல்வின் தத்தினதின் எனக் குதித்தான். சிறுநீர் கழிக்க அங்கேயே உட்கார்ந்தான். ஐவீ தள்ளி நின்று ஆயம்மாவை செய்கையால் சுத்தம் செய்யச் சொன்னாள். ஓடி வந்த ஆயம்மாவை நிறுத்தி ஐவீயைச் செய்யச் சொன்னேன். முறைத்து விட்டுச் செய்தாள். ஆயம்மாவுக்குத் தெரியும், குழந்தைக்குச் சரியான வழிமுறை சொல்லித்தராமல் பலத்தைத் தவறாக உபயோகிப்பவர்களிடம் இவ்வாறு செய்வேன் என்று. 

மறு முறை வந்த மார்க், ஐவீ வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டுச் சென்று விட்டார்கள்.

நான் பள்ளி மேல் அதிகாரியுடன் பேசி, என்னைவிட மேலும் அனுபவம் உள்ளவரை அணுகப் பரிந்துரை செய்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர் திறமை உள்ளவர். அவரிடம் விவரத்தைச் சொல்லி நேரத்தைக் குறித்துத் தந்தேன். அவர் மார்க், ஐவீயிடம் எடுத்துச் சொல்ல, அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இரு மாதங்களுக்குப் பின்பு அவருடனும் ஸெஷன்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்கள்.

பள்ளியிலிருந்து ஆல்வினை நீக்கி விட்டார்கள்.

அன்றிலிருந்து ஆல்வினைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டது, வகுப்பில் உட்காராமல் ஓடுவது, கல்லால் வகுப்புப் பலகையைக் கீறி விடுவது, சகமாணவரின் சட்டைகளைக் கிழித்து, கழிப்பறையில் வன்முறைச் சம்பவங்கள் செய்கிறான் என்று. பல பள்ளி சேர்ந்தும், இரண்டு-மூன்று மாதத்தில் வெளியேறி விடுவான். ஆல்வினைக் கௌன்ஸெலிங் செல்ல வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மறுத்து, நடத்தையைப் பற்றிக் கூறுவதைப் பெற்றோர் நிராகரித்ததால் ஒரு பள்ளியை விட்டு இன்னொன்று எனத் தாவுவது. மூன்றாவது வகுப்புடன் நின்றது.

பிறகு ஆல்வினைப் பற்றிய தகவல்கள் எதுவும் நல்ல செய்தி அல்ல. சண்டை, வன்முறையில் ஈடுபடுவதாக. மார்க் தொழில் ஆரம்பித்து அதில் காலம் ஓடியது.

ஆல்வினின் பள்ளி நாட்கள் ஒரு பக்கம். மார்க், ஐவீ ஆல்வினுக்கு எந்த விதிமுறைகளையும் கற்றுத் தராததில் இப்போது சூசனும் இன்னொரு ஆல்வின்!

ஆல்வின் துப்பாக்கி துணைக் கொண்டு வந்ததை நேரில் பார்க்க வருத்தமாக இருந்தது. இவ்வாறு எங்கள் உளவியல் புத்தகத்தில் படித்திருந்தேன், வளர்ப்பில் கண்டிப்பின் எந்த எல்லைக் கோடும் பெற்றோர் அளிக்காமல் இருந்தால் பிற்காலத்தில் வன்முறை, ரௌடித்தனத்தில் ஈடுபடுபவர்களாக அமைந்து விடக் கூடும் என்று.  மேலும் படிக்காதவராக இருந்ததால், தன்நலக்காரர்கள் இவர்களைத் தவறான காரியங்களுக்கு உபயோகிக்கக் கூடும் என்று. இவை அனைத்தையும் ஆல்வினிடம் நான் நேர்முறையாகக் கண்டேன். பரிந்துரைகளை ஏற்ற மறுத்தார்கள்.

சூசனுக்கு இன்னொரு வாய்ப்பு தர முன் வந்தோம். இதைக் கேட்ட ஆல்வின் என்னிடம் வருத்தப் பட்டுக் கொண்டான், “அன்று மட்டும் யாரேனும் என்னைத் திருத்தி இருந்தால், இன்று என் வாழ்க்கையில் நடப்பதே வேறு!”. எனினும் ஆல்வின், வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து சூசனை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டான்.

******************************************************************

 

எங்கோ தப்பு நடந்திருக்கு…! — நித்யா சங்கர்

‘நோ… ஸம்திங் ஈஸ் டெர்ரிப்ளி ராங்.. மூணு நாளா எனக்கு எல்லாமே தப்புத் தப்பா நடந்திட்டிருக்கு… நான் தூங்கி எழுந்ததும் முழிச்ச மூஞ்சி சரியில்லையா.. இல்லே வெளியே போகும்போது வந்த சகுனம் சரியில்லையா..? எங்கோ தப்பு நடந்திட்டிருக்கு.. ஒண்ணுமே புரியலே..’ மனைவி பூமாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் மணியன்.

டின்னருக்காக பரிமாறப்பட்ட உணவு தொடப் படாமல் அப்படியே இருந்தது. இங்கே பாருங்க.. தயவு செய்து இந்தக் குழப்பத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அமைதியா சாப்பிடுங்க.. ஏதோ நம்ம போதாத வேளை.. கடந்த மூணு நாளா சில சம்பவங்கள் நடந்து இருக்கலாம். அமைதியா இருங்க.. நாளைக்கு நல்லபடியா இருக்கும். சாப்பிடுங்க..’ என்றாள் பூமா.

‘இல்லே பூமா…எப்போதும் மாதிரி காலையில் எழுந்ததும் நம்ம ரூமிலே உள்ள அம்பாள் படத்தைப் பார்த்து கண்ணில் ஒத்திக் கொண்டு ஒரு நிமிடம் அவளிடம் வேண்டிக் கொண்டுதானே நாளையே ஆரம்பிச்சேன்.. அதே போலே வெளியே கிளம்பும் போதும் நல்ல சகுனம் வரதா என்று பார்த்துத்தானே கிளம்பினேன்.. பின்னே எங்கே தப்பு நடந்தது..? எப்படி நடந்தது..? ‘ஐயோ நாளை நல்லா விடியும்.. நல்லபடியா இருக்கும். இப்போ சாப்பிடுங்க..’ என்று அவனிடம் போராடி ஒரு மாதிரி சாப்பிடச் செய்தாள் பூமா.

‘சாப்பிட்டாச்சு’ என்று பெயர் பண்ணி விட்டு, அதே நினைவோடு வந்து படுத்தான் மணியன்.

அடுத்த நாள் காலை. கண் விழித்து அப்படியே உட்கார்ந்தான். கால் மாட்டில் வைக்கப் பட்டிருந்த நிலைக் கண்ணாடியில் பார்த்து கலைந்திருந்த தன் சிகையைச் சரி செய்து கொண்டான்.
திடீரென்று மூளையில் ஒரு பொறி தட்டியது.’பூமா.. சீக்கிரம் இங்கே வா…’ என்று கத்தினான்.

என்னவோ ஏதோ என்று அலறிக் கொண்டு சமையலறையில் இருந்து ஓடி வந்தாள் பூமா.

‘என்னங்க… என்னாச்சு..?’

‘அந்த கல்ப்ரிட் கெடச்சுட்டான்..இந்த மூணு நாளா எனக்கு ப்ராப்ளம் கொடுத்த அந்தக் குற்றவாளியைக் கண்டு பிடிச்சிட்டேன். நீயே பார்..இந்த ப்ளடி மூஞ்சியிலே முழிச்சதனாலேதான் எனக்கு இந்தக் குழப்பமெல்லாம்.. நீயே பார்… ‘ என்று எதிரே இருந்த நிலைக் கண்ணாடியைக் காட்டினான். அதில் அவனுடைய முகம் அதைப் பார்த்து விட்டு பெரிதாகச் சிரித்தாள் பூமா.

Create meme "mirror meme, a person looks in the mirror, the man in the mirror meme" - Pictures - Meme-arsenal.com

‘அது உங்க முகம்ங்க…’

‘ஆமா.. என்னுடைய முகம்தான்.. இந்த நிலைக் கண்ணாடியை இங்கே எப்போ வெச்சோம்.  லாஸ்ட் ஸன்டே. .  அதாவது மூணு நாள் முன்பு இதிலே என் முகத்தைப் பார்த்து விட்டு அப்புறம்தான் எனது வலது புறம் மாட்டப் பட்டுள்ள அம்பாளின் படத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனாலேதான் இந்தக் குழப்பம்..’

‘அட, நீங்க போங்க… ஒருத்தர் அவர் முகத்திலே முழிச்சு நாளைத் தொடங்கினா அப்படி ஒண்ணும் கெட்டது வந்துடாது.. சில பேர் எழுந்ததும் கைகளால் முகத்தைத் துடைத்துக் கொண்டு கை ரேகைகளைப் பார்ப்பாங்க தெரியுமா..?’

‘அப்படி ஒண்ணும் சொல்ல முடியாது.. எனக்கு என் முகமே சத்ருவா இருக்கு.. இதுதான் காரணம்.. இதற்கு உடனடியா ஏதாவது செய்யணும்.. ‘ என்றபடியே ஒரு சின்ன நிம்மதியோடு எழுந்து தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான் மணியன்.

அடுத்த நாள் காலை. மணியன் கண் விழித்து எதிரில் பார்த்தான்.  அவன் முகம் தெரியவில்லை.

கால்மாட்டில் இருந்த நிலைக் கண்ணாடி தலைமாட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தது.

தன் வலது புறமாக இருந்த அம்பாளின் படத்தைப் பார்த்துக் கும்பிட்டு வேண்டிக் கொண்டு தன் நாளைத் துவங்கினான்.

 

குட்டீஸ் லூட்டீஸ்:

அல்லா செய்த ஜாலம்

என் நண்பன் மோகனின் குடும்பம் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புலம் பெயர்ந்த குடும்பம். அன்று அவனைப் பார்க்க அவன் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
நானும் அவனும் ஹாலில் உட்கார்ந்து பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். அவன் மனைவி ‘லலிதாஸகஸ்ரநாமத்தை’ச் சொல்லிக் கொண்டே பூஜை அறைக்கும், சமையலறைக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மிதிலா எங்களுக்கு ஒரு காதும், மோகன் மனைவிக்கு ஒரு காதும் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.

‘அப்பா.. அந்த ஆன்டி டெ·பனிட்டா ஹிந்துதான். அங்கிள் என்ன முஸ்லீமா… ‘ என்றாள் மிதிலா திடீரென்று. திடுக்கிட்டு ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்த நாங்கள், ‘எதை வெச்சம்மா அப்படிச் சொல்றே..?’ என்றோம் கோரஸாக ‘இல்லேப்பா.. ஆன்டி லலிதா ஸகஸரநாமம் சொல்றாங்க. ஸோ அவங்க கண்டிப்பா ஹிந்து தான். ஆனா, அங்கிள், நீங்க பேசிட்டிருந்த இந்த பதினஞ்சு நிமிஷங்கள்லே ஒரு ஐம்பது தடவையாவது ‘அல்லா.அல்லா..’ என்று அல்லாவைக் கூப்பிட்டிருப்பார். அதனாலேதான்கேட்டேன்..’ என்றாள்.
சில விநாடிகள் அயர்ந்து உட்கார்ந்திருந்த நாங்கள், சிறிது யோசித்து நிலைமையைப் புரிந்துகொண்டு பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தோம். மிதிலா மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள்.

‘மிதிலா.. நாம இப்போ ஜெனரலா வாக்குவாதம் பண்ணும்போது ‘அது அப்படி இல்லே’… ‘இது அப்படி இல்லே’ என்று சொல்ல மாட்டோமா அதை அங்கிள் மலையாளம் கலந்த தமிழிலே ‘அப்படி அல்லா’,

‘இப்படிஅல்லா’..என்று சொல்லிக் கொண்டிருந்தார். ‘ என்று அவளுக்குப் புரிய வைத்தேன்.

ஒரு நிமிடம் சங்கடத்தோடு சிரித்து விட்டு, ‘ஆன்டி கும்பிடறஅந்தப் பிள்ளையாரும், அம்பிகையும் அவங்களுக்கு அருள் புரியறாங்களோ இல்லையோ அங்கிளுக்கு அந்த ‘அல்லா’ இறங்கி வந்து அருள் புரிவார்.. அவர் அத்தனை தடவை அல்லாவைக் கூப்பிட்டு விட்டார்’ என்றாள் மிதிலா முத்தாய்ப்பாக.

நாங்கள் இரண்டாவது ரவுண்ட் சிரிக்க ஆரம்பித்தோம். இம்முறை மிதிலாவும் எங்களுடன் சேர்ந்து கொண்டாள்.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம் 

பௌத்த சமய நூல்கள் முனைவர் மு.பழனியப்பன் Dec 3, 2016ஆசீவகம் அறிவோம்12 Tallest Statues of Jain Tirthankara in India in tamil - Tamil Nativeplanet

PROUD HINDU DHARMA: பல தெய்வங்கள் பெயரை சொல்லி வழிப்படுகிறது - ஹிந்து மதம்

பொறுப்புத் துறப்பு:

தலைப்பில் உள்ள மதங்கள் பற்றி அறிய சற்றேனும் அக்கறை இல்லை யெனில் மேலே தொடர்வது மனதிற்கு ஊறு விளைவித்து நேரத்தை கொன்று விடும். கீழே உள்ள தகவல்கள் நான் கற்றறிந்த கடுகளவு ஞானத்தின் பிரதிபலிப்பே. எனது சொந்தக் கருத்து எதையும் திணிக்க வில்லை.

புத்தருக்கு அரச மரத்தடியில் ஞானம் கிடைத்தது. மஹாவீரருக்கு அசோக மரத்தடியில் ஞானம் கிடைத்தது.

நாம் பார்க்கில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்தால் ஞானம் கிட்டாவிடினும், புத்தி சற்றேனும் தெளிவடையும் என்ற நம்பிக்கையில் அமர்வது வழக்கம். கண்களை மூடி வாய் பொத்தி அமர்ந்தாலும், காதுகளுக்கு ஷட்டர் இல்லாத காரணத்தால் சுற்றி நடப்பவை அனைத்தும் காதுகள் வாங்கி உடன் மனதிற்குள் தினித்து விடும்.

அன்றும் அப்படித்தான் நான் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில், (தூக்கத்தில் அல்ல)இருந்த பொழுது, என்னை கடந்து சென்ற இருவர் விஜய் TV யின் தமிழ்க் கடவுள் முருகன் தொடர் பற்றி பேசிச் சென்றனர். அதை வழக்கம் போல் காதுகள் வாங்கி உள்ளே அனுப்பியது.  என் மனது ஒரே தாவலில் எங்கோ சென்றது. தமிழுக்கு கடவுள் முருகன் என்றால் மற்ற மொழிகளுக்கெலாம் தனிக் கடவுள்கள் உள்ளார்களா?

அல்லது மற்ற கடவுளருக்கு தனி மொழிகள் உள்ளனவா?

பண்டை மதங்களெனில் பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் வைதீகம் என்ற பிராமண மதம். இதில் எவையும் பண்டைத் தமிழனின் மதமாகாது.

மலையிலும் காடுகளிலும் வேட்டையாடித் திரிந்த தமிழன் தனக்கு மொழியாக தமிழை உருவாக்கி தன் கடவுளாக முருகனையும் திருமாலையும் வழி பட்டான்.

“ கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது மூத்த குடி மட்டுமல்ல, தமிழ் மொழியும்தான். அதெப்படி மண் தோன்றுவதற்கு முன்னரே குடியும் மொழியும் தோன்ற முடியும். 
(கல் தோன்றி = மலை தோன்றி
மண் தோன்றா = வயல் தோன்றா
முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..). முடியும்தானே.

குறிஞ்சிக்கு சீயோன் என்ற முருகன் என்றால், முல்லைக்கு மால் என்ற திருமால். முக்கண்ணன், ஆதிரையான் என்ற சிவனுக்கு பிரபஞ்சத்தை காக்கும் கடமையிருந்ததால் தமிழ் நாட்டின் பொறுப்பை தன் மகனுக்கும் மைத்துனருக்கும் கொடுத்து விட்டார் போலும்.

தொல்காப்பியம் முதலான சங்க கால நூல்களே நம் முன்னோரின் தெய்வ வழிபாட்டை நமக்கு கூறிச்சென்றுள்ளன.

அதற்கு முன்னர் நம் பாட்டன் என்ன கூறி வழி பட்டான், எப்படியெலாம் ஆடிப் பாடி வழி பட்டான் என நாம் அறியோம்.

ஆதிரையான், முக்கண்ணன் என்றழைக்கப்பட்ட சிவனின் மகனான சீயோன் என்ற முருகனும், கரியோன் என்றழைக்கப்பட்ட மாலும், தமிழரின் வழிபாட்டு தெய்வங்களாய் இருந்தனர்.

முக்கண்ணன்( சிவன்) உமையோடு வசித்த இடமோ கயிலாயம், எனவே தமிழருக்கு அவன் ஒரு எட்டாத தெய்வம்.

கி்மு 5-3 நூற்றாண்டுகளில் வடநாட்டில் தோன்றிய பௌத்தம், சமணம், ஆசீவகம் மற்றும் வைதீக மதம் என்ற பிராமண மதங்களின் தொடற்பற்ற புராதான மதமாகவே தமிழர் மதம் இருந்தது.

சுமார் கி மு 5-3 நூற்றாண்டுகளில்தான் மெல்ல மெல்ல தேவ பாஷை என்றழைக்கப் பட்ட சமஸ்கிருத மொழி தமிழ் நாட்டை எட்டிப் பார்த்தது. இறைவனால் ஓதப்பட்டு காற்றில் கரைந்து செவி வழியாக தலைமுறைகள் கடந்து வந்த வேதம் நம்மை அடைந்தது. அதை கால் நடையாக கை பிடித்து அழைத்து வந்தவர்கள் உடன் அழைத்து வந்ததுதான் வைதீக மதம் என்றழைக்கப்பட்ட பிராமண மதம்.

புதிதாக வரும் எதையும் அணைத்துக் கொள்ளும் பக்குவம் நம் மரபணுவில் அன்றே ஊறியிருந்தது.

கடவுளை வணங்க தேவ பாஷையை சுவீகரித்துக் கொண்டோம்.
அதைக் கற்கவும் ஓதவும் உரிமையை ஒரு குறிப்பிட்டவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தோம்.

வேதத்தை இறைவனாகப் பார்க்கத் துவங்கினோம்.

மொழி தடையில்லை. படிக்கச் சொன்னால்தானே கவலை.
வேதம் அனைவரும் ஓதுவதற்கில்லை- மகிழ்வுடன் ஒத்துக் கொண்டோம். இறைவனை நெருங்கி வழி பட அனைவர்க்கும் அனுமதியில்லை என்ற கட்டுப்பாட்டை தலை மேற் கொண்டோம்.

தீண்டாமையை வேதமாகக் கொண்டோம்.
வேள்வியில் ஆடு, மாடு, குதிரை பலியிடுவதை பயத்துடன் வணங்கினோம்.
வேள்வித் தீயை சிவனாகப் பார்த்தோம்.

சிவத்தை கொண்டாடினோம். இந்திரனுக்கு விழா எடுத்தோம்.
முனிகளும், வேதியரும் புலால் உண்ணல் இறைவனை அடையும் வழி எனக் கொண்டோம்.

நால் வகை சாதிப்பிரிவு அனைவரின் நலத்திற்கானதுதானே என ஏற்றுக் கொண்டு வாழ்ந்தோம்.

சூரியன், இந்திரன், வர்ணன் ஆகியோர்கள வழி படத் துவங்கினோம்.
அதே சமயம் முருகன், மால், கொற்றவை வழிபாட்டையும் தொடர்ந்தோம்.

இறைப்பணியை வேதியர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
வேதியரை மற்ற பிரிவினர் பார்த்துக் கொண்டனர்.

ஒவ்வொரு பணிக்கும் ஒரு பிரிவு. ஒருவரோடு ஒருவர் பரஸ்பர அன்பு, சிநேகிதம்.

அதே சமயம் பண்டை வழிபாடும் தொடர்ந்தன.

ஒழுங்காகத்தானே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

பின்னர் எப்படி வட நாட்டிலிருந்து பௌத்தம், சமணம், ஆசீவகம் மதங்கள் உள்ளே நுழைந்தன?. பார்ப்போம்.

(தொடரும்)

 

பொன்னியின் செல்வன் – ஒரு பார்வை   – எஸ். கௌரிசங்கர்

பொன்னியின் செல்வன் – எனக்கு அறிமுகம்:

சித்திரக்கதை: பொன்னியின் செல்வன் சித்திரங்கள் - புது வெள்ளம் (Ponniyin selvan art work)மாதவிப் பந்தல்: புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!Ponniyin Selvan Shelfபொன்னியின் செல்வன், மணியனின் ஓவியங்களுடன் (ஐந்து பாகங்கள்) [Ponniyin Selvan with Maniam Drawings (Parts 5)] - Kalki • BookLikes

அது 1968 ம் வருஷம்.  நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் ‘கல்கி’ வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு வாரம் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியானது. “ஆயிரம் ஆயிரம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மீண்டும் தொடராக கல்கியில் வெளியாகிறது” என்பதுதான் அந்த அறிவிப்பு. எங்கள் வீட்டில் என் மூத்த சகோதரர் ஒரு புத்தகப் பிரியர். நிறைய படிப்பார். நூலகத்திலிருந்து வாங்கி வந்து நாவல்களும் மற்ற பலவகையான புத்தகங்களும் படிப்பது அவர் வழக்கம். என் இரு மூத்த சகோதரிகளும் நிறைய தமிழ் புத்தகங்கள் படிப்பார்கள். என் மூத்தவர் பலமுறை பொன்னியின் செல்வனைப் பற்றித் தன் சகோதரிகளுடன் விவாதிப்பதை நான் கேட்டிருக்கிறேன். கல்கியின் எழுத்துத் திறமை, பாத்திரப் படைப்பு, கதை சொல்லும் விதம், கதையின் முடிவு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பேசிக் கொள்வார்கள். பொன்னியின் செல்வனை எப்படியாவது படித்து விட வேண்டும் என்கிற ஆசையை என் மனத்தில் தூண்டி விட்டவர்கள் அவர்கள்தான். அதனால் கல்கியில் இந்த புதிய அறிவிப்பு வந்தவுடன் நான் பரவசமானேன்.

கல்கியில் முதல் பாகம் (புது வெள்ளம்) முதல் அத்தியாயத்தில் “ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில்….” என்று ஆரம்பித்ததைப் படித்துவிட்டு இதுவரை இல்லாத ஒரு புது உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். வினுவின் வண்ணப் படங்களும் வீர நாராயண ஏரி வர்ணனையும் ஆடிப்பெருக்கும் வந்தியத்தேவன் அறிமுகமும் – கல்கியே எழுதியது போல – எங்கோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் என்னைக் கொண்டு சென்றன. சித்திரத் தொடர்கதைகளும், வாண்டுமாமா கதைகளும் படித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு புதிய வகை எழுத்துலகு அறிமுகமானது. அன்று முதல் கல்கி வெளிவரும் வியாழக் கிழமைகளில் வாசலிலேயே காத்திருந்து பத்திரிகை வந்தவுடன் எடுத்துக் கொண்டு ஓடி ஒளிந்து, அந்த வார அத்தியாயங்களை படித்து முடித்த பின்னால்தான் குளியல், சாப்பாடு, பள்ளிக்குக் கிளம்புவது வழக்கமாயிற்று. அதற்காக பலமுறை அப்பாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.

இரண்டாம் பாகம் பாதி வெளிவந்த நிலையில், என் பள்ளித் தோழன் ஒருவன் மூன்றாம் பாகம் தன் வீட்டில் இருப்பதாகச் சொல்லி, கொண்டு வந்து கொடுத்தான். இரண்டு நாளில் படித்து முடித்து திருப்பிக் கொடுத்து விட்டேன். இனி கதையை வாராவாரம் படித்துக் கொண்டு வர பொறுமையில்லாமல் போனது. ஒருநாள் எங்கள் பள்ளியில் இருந்த நூலகத்திற்குப் போய், அங்கிருந்த ஆசிரியரிடம், “பொன்னியின் செல்வன்” நான்காம் பாகம் வேண்டுமென்றேன். அவர் என்னை ஆச்சர்யத்துடன் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “நீ அதெல்லாம் படிக்க முடியாது. சின்னப் பசங்க புத்தகம் தரேன். கொண்டு போய் படி” என்றார். நான் உடனே, “சார்! நான் ஏற்கனவே மூன்று பாகம் படித்து முடித்து விட்டேன்” என்றேன். மீண்டும் ஆச்சரியப்பட்ட அவர், “சரி! நான்காம் பாகம் தரேன். ஒரு வாரத்தில் பத்திரமாய் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று சொல்லி புத்தகத்தைக் கொடுத்தார். மூன்று நாளில் படித்துவிட்டு திருப்பிக் கொடுத்து விட்டு, ”ஐந்தாம் பாகம் வேண்டும்” என்றேன். “ஏய்! நீ ஸ்கூல் பாடமே படிப்பதில்லையா?சரி, தரேன். சீக்கிரம் திருப்பி விடு” என்று புன்னகையோடு சொன்னார். அதையும் ஐந்து நாளில் படித்து முடித்து விட்டு திருப்பிக் கொடுத்து விட்டேன். அவருக்குப் பெரிய ஆச்சரியமும் சந்தோஷமும். “சாண்டில்யன் நாவல் இருக்குமா?” என்று கேட்டேன். அவர் சிரித்துவிட்டு, “அது இப்போ இந்த வயசிலே வேண்டாம். காலேஜ் போனவுடன் படி” என்று சொல்லி முதுகில் தட்டித் திருப்பி அனுப்பி வைத்தார்.

தீவிரமான நல்ல தமிழ் எழுத்துக்கு நான் அறிமுகமானது கல்கியுடந்தான். அவரும்  என்னைப் போல மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் என்பதால் சொந்த ஊர் அபிமானமும் சேர்ந்து கொண்டது. என் பதின்மூன்றாம் வயதில் ஆரம்பித்து இன்று வரை சுமார் நாற்பது முறை முழு நாவலையும் படித்துவிட்டேன். இன்னும் அந்த தாகம் குறையவில்லை. இப்பொழுதும், படிப்பதற்கு வேறு புத்தகம் இல்லையென்றால், பொன்னியின் செல்வனை எடுத்து வைத்துக் கொண்டு எனக்குப் பிடித்த அத்தியாயங்களை மீண்டும் படிக்க ஆரம்பித்து விடுகிறேன். அலுக்கவேயில்லை. என்னைப் போலவே பொன்னியின் செல்வனின் மீது காதல் கொண்டு அதை திரும்பத் திரும்பப் படிப்பவர்கள் ஏராளம். ஒரு காலத்தில் எல்லோர் வீடுகளிலும், புத்தக அலமாரி ஒன்று இருந்தால் அதில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் இல்லாமல் இருக்காது. அந்தக் காலத்தில் வாரப் பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை வாராவாரம் பிரித்தெடுத்து பின்னர் அதை “பைண்ட்” செய்து வைத்திருப்பார்கள். என்னிடம் இருக்கும் பொ.செ. அப்படித்தான். இப்போது பல்வேறு பதிப்பாளர்களும் பலவித அளவுகளில் பொ.செ. புத்தகத்தை வெளியிடுகிறார்கள். ஆனால், பழைய வார இதழ்களில் இருந்த மணியன், பின்னால் அவரைப் பின்பற்றி வினு ஆகியோர் வரைந்த சித்திரங்களுடன் கூடிய அந்தப் புத்தகங்களே படிக்கப் பிடிக்கிறது.

பொன்னியின் செல்வன்-வாசகர் காதல்:

பொன்னியின் செல்வன் இப்போதும் புத்தகக் கண்காட்சிகளில் மிக அதிகமாக விற்கும் தமிழ் நாவல். இன்று எழுபது வருடங்கள் ஆகியும் அதன் வீச்சு குறையவேயில்லை. சித்திரத் தொடர்கதை,  இயங்கும் நிழலுருவ தொடர் (Animation serial) என்று பல்வேறு வடிவங்களையும் கூட பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த நாவல். இப்போது ஒரு முழு நீளத் திரைப்படமாக (இரண்டு பாகங்களாக) வெளிவர இருக்கும் நிலையில், கதையைப் பற்றி அறிந்து கொள்ள பொ.செ. புத்தக விற்பனை இன்னும் சூடு பிடித்திருப்பதாகத் தகவல். பொன்னியின் செல்வன் இப்படி தமிழ் வாசகர்களைக் கவர்ந்து கட்டிப் போட்டிருப்பதற்கு என்ன காரணம்? எனக்குத் தோன்றிய சில காரணங்கள்:

  1. கல்கிதான் தமிழில் வரலாற்றுப் புதினங்களின் பிதாமகர். அவருக்கு முன்னால் தமிழில் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொ.செ. நாவலும் “பார்த்திபன் கனவு”,”சிவகாமியின் சபதம்” இரண்டையும் அடுத்து கல்கியின் மூன்றாவது சரித்திர நாவல்தான். ஆனாலும், மற்ற இரண்டையும் விட பொ.செ. புகழ் பெற்றதற்குக் காரணம், சோழ வரலாற்றின் மீது தமிழருக்கு இருந்த பெருமையும் பற்றுதலும்தான் என்பது என் முடிவு.
  2. இரண்டாவதாக, கல்கியின் பாத்திரப் படைப்பு. சோழப் பேரரசின் நாயகனாக, நாவலுக்குப் பெயர் கொடுத்தவனாக, பின்னாளில் “இராஜராஜ சோழனாக” பெயர் பெறப் போகும் அருள்மொழியை விடுத்து, யாரும் அறியாத வாணர் குல வீரனான வந்தியத்தேவனை கதாநாயகனாக அவர் படைத்த விதம் ஆச்சர்யப்பட வைத்தது. உண்மையில் பொ.செ. நாவல் வந்திராவிட்டால் வந்தியத்தேவன் என்றொரு இளவரசன் சரித்திரத்தில் இருந்ததாக தெரிய வந்திருக்குமா என்பது சந்தேகமே. மேலும் கதாநாயகன் வீரனாக இருந்தாலும் மற்ற சாதாரண மனிதரைப் போல அவசரக் குடுக்கையாகவும், எதையும் ஆராய்ந்து பார்த்து செயல் படாதவனாகவும் சித்தரித்தது அனைவரையும் கவர்ந்தது. அடுத்து, குந்தவை, நந்தினி பாத்திரங்கள். அழகிலும் குணத்திலும் இருவரையும் வேறுபடுத்திக் காட்டிய விதம், நந்தினியின் சூழ்ச்சிகள், அதை நிறைவேற்ற அவள் செய்த செயல்கள் போன்றவை கல்கியின் அற்புத எழுத்தோவியங்கள். வானதி, அநிருத்தர், பழுவேட்டரையர், சுந்தர சோழர், செம்பியன் மாதேவி போன்ற சரித்திரத்தில் கண்டுள்ள பாத்திரங்களோடு, ஆழ்வார்கடியான், பூங்குழலி, மணிமேகலை, மந்தாகினி, கந்தமாறன் போன்ற கற்பனைப் பாத்திரங்களும் கதைக்கு வலுவூட்டும் மறக்க முடியாத பாத்திரங்கள். ஈழத்து மந்தாகினியை சிங்கள நாச்சியாராக ஆக்கி, தஞ்சையில் உள்ள சிதிலமடைந்த “சிங்காச்சியார் கோவில்” தெய்வமாக்கியது அவரது படைப்பின் உச்ச கட்டம்.
  3. மூன்றாவது கல்கியின் கதை சொல்லும் விதம். ஒரு குழந்தையை உட்கார வைத்து கதை சொல்வது போல எளிய நடையில் அவர் கதை சொல்லிய விதம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இன்றைக்கு திரைப்படங்களில் அதிகம் பேசப்படுகிற “திரைக் கதை” (Screen play) அமைக்கும் வித்தையை அன்றே நாவலில் செய்து காட்டியவர் கல்கி. கதையை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு இன்னொரு இடத்திற்குத் தாவி, அங்கிருந்து கதையைத் தொடர்ந்து கொண்டு சென்று, மீண்டும் அதை முதலில் சொல்லிய இடத்தோட சேர்க்கும் கலை அவருக்கே கை வந்த கலை.
  4. நான்காவது கல்கியின் கற்பனைத் திறன். பொ.செ. ஆங்கில நாவல்கள் போல ஒரே மூச்சில் முழுவதுமாக எழுதப்பட்ட நாவல் அல்ல. சுமார் ஐந்து வருடங்கள், வாராவாரம் அத்தியாயம் அத்தியாயமாக எழுதப்பட்ட கதை. அப்படி எழுதிய கதையில் முதல் பாகம் ஒன்பதாம் அத்தியாயத்தில் ஒரு வரியில் கந்தமாறன் தங்கையின் பெயர் ”மணிமேகலை” என்று சொல்லியிருப்பார். அந்தப் பாத்திரம் சுமார் மூன்று வருடம் கழித்து நான்காம் பாகத்தில் வந்துதான் நேரில் தோன்றுவாள். அதே போல, இரண்டாம் பாகத்தில் சிறையில் இருக்கும் ”பைத்தியக்காரன்” என்றொரு பாத்திரத்தை அறிமுகப் படுத்திவிட்டு, பின்னர் ஐந்தாம் பாகத்தில்தான் அவன் பெயர் கருத்திருமன் என்று காட்டி அவனைக் கதையின் ஒரு முக்கிய மனிதனாக ஆக்குவார் கல்கி. ஆகவே, ஐந்து வருடத் தொடரில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தையும் முன்கூட்டியே நிச்சயித்துவிட்டு, கதைப் போக்கை முழுவதுமாகத் தீர்மானித்து விட்டே கதையை எழுதத் தொடங்கியிருக்கிறார் என்பது கல்கியின் அபார கற்பனைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
  5. ஐந்தாவது கல்கியின் விரசமில்லாத எளிய தமிழ் நடை. எழுத்தில் கதை நடந்த காலத்துக்குப் பொருத்தமான சொற்களை மட்டுமே அவர் பயன்படுத்தினார் (நாரீமணி, அம்மணி, பிராயம் போன்றவை). மற்ற நாவல்களைப் போலவே பொன்னியின் செல்வன் நாவலிலும் எத்தனையோ பெண் பாத்திரங்கள் உண்டு. அவர்களின் அழகை அவர் எழுத்தில் வர்ணித்த விதம் கொஞ்சமும் விரசமில்லாதது. “கல்கி பெண்களை அவர்களது கழுத்துக்குக் கீழே வர்ணித்ததே இல்லை” என்று சொல்லும் விதமாக விரசமும் சிருங்கார ரசமும் ததும்பும் எழுத்துக்களை அவர் எழுதியதே இல்லை.

பொன்னியின் செல்வன்-சரித்திரச் சான்றுகள்:

திரு. நீலகண்ட சாஸ்திரியார், திரு. சதாசிவ பண்டாரத்தார் ஆகிய ஆசிரியர்களின் பிற்கால சோழர்களின் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளை அடியொற்றியே கல்கி தன் கதையைப் படைத்தார் என்று அறியப்படுகிறது. அவரே எழுதியது போல, “வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்” என்ற திருவாலங்காட்டு செப்பேடுகளின் குறிப்பை ஒட்டி, ஆதித்த கரிகாலன் துர்மரணம் அடைந்ததும், அருள்மொழி வர்மன் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அரசப் பதவியை தன் சிற்றப்பனுக்கு தியாகம் செய்தான் என்பதும்தான் பொன்னியின் செல்வன் நாவலின் அடிப்படை. அதை ஒட்டியே கல்கி சரித்திர பாத்திரங்களையும் தன் கற்பனைப் பாத்திரங்களையும் படைத்தார் என்பது தெளிவு. கரிகாலன் மரணம் யாரால் நிகழ்ந்தது என்பதை சொல்லாமலே விட்டு நாவலின் பின்னுரையில் அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை மட்டுமே சொல்லிவிட்டு மற்றவற்றை நம் கற்பனைக்கு விட்டுவிட்டார் கல்கி. அதனால் பின்னால் வந்த  எழுத்தாளர்களான விக்கிரமன் (நந்தி புரத்து நாயகி), பாலகுமாரன் (உடையார்), காலச்சக்கரம் நரசிம்மன் போன்றோர் தத்தம் வழியிலே அந்த இரகசியத்துக்கு முடிவைச் சொல்லி எழுதியுள்ளனர். கல்கியே பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து சோழர் வரலாற்றை வைத்து இன்னொரு பெரிய நாவல் எழுதியிருந்தால் நமக்கு அந்த விடை கிடைத்திருக்கலாம். அப்படி நிகழாமல் போனது நமது துரதிருஷ்டமே.

பொன்னியின் செல்வனில் சொல்லப்பட்ட கதை வரலாற்று சான்றுகளின்படி முழுவதும் சரியானதா, முடிவு பொருத்தமானதா என்று சில கேள்விகளும் சிலரால் எழுப்பப்பட்டிருக்கின்றன.   நியாயமாக தனக்கு வரவேண்டிய அரசாட்சிக்கு ஆதித்த கரிகாலன் தடையாய் இருந்ததால், மதுராந்தக உத்தமச் சோழன் ஆதித்த கரிகாலனை சதி செய்து கொன்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு மாறாக, அதை மறுத்து உத்தமச் சோழன் குற்றமற்றவன் என்று இன்னொரு கருத்தும் சொல்லப்படுகிறது. இராஜராஜன் தான் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில், ஆதித்தனின் கொலைக்கு காரணமானவர்களாக இருந்த சோமன், ரவிதாசன், அவன் தம்பி பரமேஸ்வரன், அவர்களுக்கு உதவி செய்த மலையூரான் என்ற ரேவதாச கிரமவித்தன் போன்றோரைக் கைது செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து நாடு கடத்தினான் என்ற செய்தியை உடையார்குடி அனந்தீஸ்வரம் சிவாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்தச் செய்தியை கல்கியும் பொன்னியின் செல்வன் முடிவுரையில் குறித்திருக்கிறார். மேலும் நாவலில் இவர்கள் பெயரையே, சோமன் சாம்பவன், ரவிதாசன், பரமேஸ்வரன் என்ற தேவராளன், ரேவதாச கிரமவித்தன் என்று குறிப்பிட்டு அவர்களை வீரபாண்டியனின் ஆபத்துதவி வீரர்கள்களாகக் காட்டியிருக்கிறார். ஆனால், அப்படி சதி செய்தவர்கள், சேரநாட்டு பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படவில்லை என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. ”கிரமம்” என்பது வேதபாடப் பயிற்சியின் ஒரு நிலை என்றும் அதில் பயின்று தேர்ந்தவர்கள் ”கிரமவித்தன்” என்று அழைக்கப் படுவார்கள் என்றும் அறிகிறோம்.  அப்படியென்றால் ரேவதாசனும் வேதம் பயின்ற ஒரு அந்தணன் என்றே கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில், படகோட்டி முருகைய்யன் மனைவி ராக்கம்மா ரேவதாசனின் மகள் என்றும் அவளும் சதியில் ஈடுபட்டவள் என்றும் சொல்லியிருப்பார் கல்கி. அந்தணர் ஒருவரின் மகள் படகோட்டி ஒருவரை மணந்து கொள்வதென்பது (அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) நடக்க இயலாததாகத் தோன்றுகிறது. ஆகவே, கல்கி தன் கதையில் சதிகாரர்களின் உண்மை நிலையை சரிவர கூறவில்லை என்று கொள்ளவும் இடமிருக்கிறது.

பொன்னியின் செல்வன் –திரைப்படம்/நாடகம்:

பல்லாயிரக்கணக்கான தமிழ் வாசகர்களின் அன்பைப் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் நடந்தன.  திரு. எம்.ஜிஆர் முதலில் அதை முயற்சித்து பின்னர் கைவிட்டார். இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்களும் முன்பு இருமுறை முயற்சித்ததாகச் சொல்லி இருக்கிறார். ஜெமினியின் வெற்றிப் படமான ”வஞ்சிக் கோட்டை வாலிபன்” திரைப்படத்திலும் பத்மினி, வைஜயந்திமாலா பாத்திரங்களை “குந்தவை, நந்தினி” போன்றே     எஸ். எஸ். வாசன் அமைத்தார் என்று கூட சொல்வதுண்டு. கல்கியின் “பார்த்திபன் கனவு” நாவல் திரைப் படமாக்கப்பட்டு 1960ல் வெளிவந்தது. பெரிய கலைஞர்கள், சிறந்த வசனம், நல்ல இசை எல்லாம் நிறைந்திருந்திருந்தும் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. அதனால் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கும் முயற்சிகள் பல ஆரம்பக் கட்டத்திலேயே நின்று போயின. ஆனாலும், பல்லாண்டுகளாக கல்கி வாசகர்கள் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் திரைக்கதை எப்படி அமைய வேண்டும், யார் யார் நடிக்கவேண்டும், கதை நிகழ்ச்சிகளை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவரவர் கற்பனையில் தாமாகவே தங்கள் மனத்திரையில் படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ’எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ்’ நிறுவனத்தினருக்காக, ”மாஜிக் லாண்ட்ர்ன்” (Magic Lantern) நாடகக் குழுவினர் பொன்னியின் செல்வனை பிரமாண்டமான முறையில் மேடையேற்றினார்கள். வேறு சில நாடகக் குழுக்களும் பொன்னியின் செல்வனை தங்கள் வழியில் மேடை நாடகமாக இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், பொன்னியின் செல்வன் கதை நாடகமாக/திரைப்படமாக கொண்டுவர ஏற்ற நாவல் இல்லை என்பதுதான் என் கருத்து. பொன்னியின் செல்வன் முழுக் கதையையும் மேடையிலோ அல்லது (ஒன்று அல்லது இரண்டு பாகமாக) திரைப்படங்களிலோ சொல்லிவிட முடியுமா என்பது சந்தேகமே. சரித்திரக் கதைகளில் பெரும் பங்கு வகிப்பது வீரமும் காதலும்தான்.  பொன்னியின் செல்வனில் காதல் நிறைய உண்டு. ஆனால் படையெடுப்பு, போர் என்பது எதுவும் கிடையாது. சிறு கத்திச் சண்டைகள்தான் உண்டு. கதையில் சொல்லப்படும் விஜயாலயன் நடத்திய போர்கள், இராஜாதித்தன் வீர மரணம், ஆதித்த கரிகாலன் ஈடுபட்ட போர்கள் எல்லாம் கதை நடக்கும் காலத்திற்கு முற்பட்டு நடந்த போர்கள். நாவலைப் பெரும்பாலும், வாணர் குல வீரன் வந்தியத்தேவனின் சோழ, ஈழ நாட்டுப் பயண வரலாறு போலவே கல்கி அமைத்திருக்கிறார். உண்மையில், கல்கியின் ’சிவகாமியின் சபதம்’ திரைப்படமாகத் திரையில் கொண்டு வர ஏற்ற கதை. அந்தக் கதை, காதல், வீரம், படையெடுப்பு, போர், சிற்பக்கலை, ஆன்மீகம், இசை, நாட்டியம், அரசியல் சூழ்ச்சிகள், காதல் தோல்வி என்று ஒரு திரைப் படத்திற்குத் தேவையான எல்லா சிறப்பு அம்சங்களும் ஒன்றாக அமைந்த ஒரு முழுக்கதை. பொன்னியின் செல்வன் இன்றைய காலத்தில் தொலைக் காட்சிகளில் வரும் ”மெகா” தொடர்களுக்கு ஏற்ற கதை என்று சொல்லலாம். கதையை சுருக்காமல் முழுவதையும் அந்த வகை நெடுந்தொடரிலே சொல்லிவிட முடியும்.  தொலைக் காட்சித் தொடராக பொன்னியின் செல்வனைக் கொண்டு வரவும் சில முயற்சிகள் நடந்தன. ஆனால், அவையும் முழுமை பெறவில்லை.  நாடக, தொலைக்காட்சி நடிகரும் இயக்குனருமான திரு. பாம்பே கண்ணன் அவர்கள், பெரும் முயற்சி செய்து பொன்னியின் செல்வன் முழு நாவலையும் பல்வேறு கலைஞர்களின் குரல்களில் ஒரு ஒலிப்புத்தகமாக (Audio book) வெளிக் கொணர்ந்தார். அதைத் தொடர்ந்து, நாவலை ஒரு வலைத் தொடராக (Web serial) கொண்டு வரவும் அவர் முயற்சித்தார். நான் அந்த வலைத் தொடருக்கு திரைக்கதை, உரையாடல்களை எழுதியிருந்தேன். ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டு முன்னோட்டம் இடப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி முழுமை பெறாமல் கைவிடப்பட்டது. இப்போது பொன்னியின் செல்வனை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் திரைக்கு கொண்டு வரப் போகிறார். நாவலின் எல்லா கதா பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் எல்லா வாசகர்களின் எதிர்பார்ப்புக்கும் திருப்திக்கும் ஏற்ப திரையில் கொண்டு வருவது மிகமிகக் கடினம்தான். அதனால் வரவிருக்கும் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொன்னியின் செல்வன் – தமிழ் வாசகர் நெஞ்சில்:

திரைப்படமாக பொன்னியின் செல்வன் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், நாவல் வாசகர்களின் மனத்திரையில் எப்போதும் காட்சிகளாக திரையிடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.  வாசகர்கள் அவரவர் விருப்பத்திற்கும் கற்பனைக்கும் ஏற்ப, வந்தியத் தேவனையும் குந்தவையையும் அருள்மொழியையும் வானதியையும் ஆதித்த கரிகாலனையும் நந்தினியையும் ஆழ்வார்கடியானையும் சேந்தன் அமுதனையும் அநிருத்தரையும் பழுவேட்டரையரையும் தாங்களே சிருஷ்டித்து தங்கள் நெஞ்சங்களில் உலவ விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அமரர் கல்கி, வாசகர் உள்ளங்களில் என்றும் நிலைத்து நின்று தன் பாத்திரங்களை பேச வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவே பொன்னியின் செல்வனின் எழுபது ஆண்டு கால  வெற்றிப் பயணத்தின் வரலாறு.

 

கொசுறு:

சென்ற மாதம் அட்டையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் பற்றிய டீஸர் வெளியிட்டோம். இப்போது முதல் பாடல் வந்திருக்கிறது. 
முதல் முறையாகக் கேட்டபோது பாட்டு பிடிக்கவில்லை. மூன்று நான்கு முறை கேட்ட பிறகு பாடல் படு தூள்! அதுதான் ரஹ்மான் ஸ்டைல் ! 

பொன்னி நதி’ பாடல் தமிழ் வரிகள்

ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்

நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்

பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

பொட்டல் கடந்து
புழுதி கடந்து
தரிசு கடந்து
கரிசல் கடந்து
அந்தோ நான் இவ்வழகினிலே
காலம் மறந்ததென்ன

மண்ணே உன் மார்பில் கிடக்க
அச்சோ ஓர் ஆச முளைக்க
என் காலம் கனியாதோ
என் கால்கள் தணியாதோ

பொன்னி மகள்
லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்

வீரா சோழ புரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி

சோழ சிலைதான் இவளோ
சோல கருதாய் சிரிச்சா
ஈழ மின்னல் உன்னால
நானும் ரசிச்சிட ஆகாதா

கூடாதே
ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
கடமை இருக்குது எழுந்திரு
சீறி பாய்ந்திடும் அம்பாக
கால தங்கம் போனாலே
தம்பியே என்னாலும் வருமோடா

நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

பொன்னி நதி பாக்கணுமே
பொழுதுக்குள்ள
கன்னி பெண்கள் காணணுமே
காற்ற போல

செக்க செகப்பி
நெஞ்சில் இருடி
ரெட்ட சுழச்சி
ஒட்டி இருடி
அந்தோ நான் இவ்வழகினிலே…


 

 

ஒரு சென்டிமீட்டர் சீனமொழியில் -பிஷுமின் – தமிழில் : தி.இரா.மீனா

சீன மொழி சிறுகதை:
மூலம் : பிஷுமின் [Bi Shumin]
ஆங்கிலம் : கரோலின் சுவா
தமிழில் : தி.இரா.மீனா

ஒரு சென்டிமீட்டர்

One Centimeter by Bi Shumin - Summary and Details in Hindi - YouTube

தனியாக பஸ்ஸில் பயணம் செய்யும் போது பெரும்பாலும் டிக்கெட் வாங்குவதைப் பற்றி டாவ் யிங் கவலைப் படமாட்டாள்.ஏன் கவலைப் பட வேண்டும்? அவள் பயணம் செய்யாமல் இருந்தாலும் கூட பஸ் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்கும். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் வேலை இருக்கும். அதே அளவு பெட்ரோல்தான் செலவாகும்.

டாவ் யிங் சாமர்த்தியமாக இருக்க வேண்டும் .கண்டக்டர் பொறுப்பானவராகத் தெரிந்தால் அவள் பஸ்சுக்குள் ஏறின உடனே டிக்கெட் எடுத்து விடுவாள். ஆனால் அவன் சிறிதும் கவனம் இல்லாதவன் போல இருந்தால் கனவில் கூட அவள் டிக்கெட் வாங்க மாட்டாள். அது அவனுக்குச் சின்ன தண்டனையாக இருக்கட்டும்.அவளுக்கும் சிறிது பணம் சேரும் என்று நினைப்பாள். ஒரு தொழிற்சாலை கேண்டீனில் அவள் சமையல் வேலை செய்கிறாள். வெண்ணெயும், கோதுமையும் சேர்த்துச் செய்யப்படும் கேக் தயாரிப்பது அவள் வேலை என்பதால் நாள் முழுவதும் நெருப்பின் அருகேதான் இருப்பாள்.

இன்று தன் மகன் எக்சோ-யீயோடு இருக்கிறாள். பஸ்சுக்குள் ஏறும் அவனைத் தொடர்ந்தாள். பஸ்சின் கதவு மூடும் போது அவள் ஜாக்கெட் அதில் சிக்கி பின்பகுதி கூடாரம் போல புஸ்ஸென்று விரிந்தது. ஒருவாறு அதைச் சரி செய்தாள்.

 

( நன்றி: NCERT BOOK)

“அம்மா! டிக்கெட்” யீ கேட்டான்.பெரியவர்களை விடக் குழந்தைகளுக்கு பழக்க வழக்கங்கள் மீது அதிக கவனம். தன் கையில் டிக்கெட் இல்லாமல் இருப்பது அவனுக்குப் பயணம் செய்வது போல் இல்லை.பஸ் கதவின் பெயிண்ட் உரிந்த பகுதியில் ஒரு விரலின் அடையாளத்தோடு 1.10 எம் என்ற எண் இருந்தது.

யீ வேகமாக நுழைந்தான். அவனுடைய தலைமுடி காய்ந்து பசையற்று ஒரு கட்டு போல தூக்கி இருந்தது. யிங் பணத்தை மிக கவனமாகச் செலவழித்தாலும் தன் குழந்தையின் உணவிற்குச் செலவாகும் பணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. அதனால் அவன் போஷாக்கு உடையவனாக, புத்திசாலியாக இருந்தான். ஆனால் தலைமுடி மட்டும் கட்டுப் பாட்டிற்குள் இல்லாமல் இருந்தது. தூக்கி இருந்த முடியைச் சரி செய்து படிய வைத்தாள்.அவன் மண்டை மென்மையாகவும், ரப்பர் போலவும் இருந்ததை அவளால் உணர முடிந்தது. இரண்டு சரிபாதி பிரிவுகள் சந்திக்கிற இடைவெளி ஒவ்வொருவரின் தலை உச்சியிலும் உண்டு. அது சரியாகச் சேராவிட்டால் ஒரு மனிதனின் நிலை பொருத்தமில்லாமல் போகும்.அரைக் கோளங்கள் மிகச் சரியாக இருந்தாலும் அவை மூடிக் கொள்ள சிறிது நேரம் எடுக்கவே செய்யும். இது வாழ்க்கைக்கும் உரியது. அது திறந்தே இருந்தால் சிறு துவாரம் வழியாக உடலில் தண்ணீர் பாய்வதைப் போல வெளி உலகம் தெரியும். ஒவ்வொரு முறை மகனைப் பார்க்கும் போதும் கர்வமான பொறுப்பு உணர்ச்சியால் பெருமிதம் அடைவாள். அவள்தான் இந்த மென்மையான உயிரை உலகிற்குக் கொண்டு வந்தாள். இந்த உலகில் அவள் இருப்பு யாருக்கும் முக்கியமானதாகத் தெரியாமல் போனதை உணர்ந்தாலும் குழந்தைக்கு அவள்தான் உலகம். அதனால் எந்தக் குறையும் இல்லாத தாயாக இருக்க வேண்டும்.

யீயின் உருண்டைத் தலைக்கும், டிக்கெட் தேவைப் படுவதற்கான உயரத்தைக் காட்டும் பெயிண்ட் செய்யப் பட்ட எண்ணுக்கும் இடையில் அவள் விரல்கள் இருந்தன.அவள் எப்போதும் எண்ணையோடு வேலை செய்ததால் நகங்கள் பளீரென்றும் ,வெண்மையாகவும் இருந்தன.

“யீ ! நீ இன்னமும் அவ்வளவு உயரமாகவில்லை. ஒரு சென்டிமீட்டர் குறைவாகவே இருக்கிறாய்.” மென்மையாகச் சொன்னாள். அவள் குடும்பப் பின்னணி அப்படி ஒன்றும் உயர்ந்ததில்லை. கதைப் புத்தகங்களை அவள் படித்ததும் இல்லை.ஆனாலும் அவள் அன்பும், இரக்கமும் உடையவளாக தன் மகனுக்குச் சரியான உதாரணமாக இருக்க விரும்பினாள். இது சுயமுடையவளாகவும் , கண்ணியமானவளாகவும் அவளை உயர்த்தியது.
“அம்மா! நான் உயரம் தான். நான் உயரம் தான்”குதித்துக் கொண்டே கத்தினான். “அடுத்த முறை டிக்கெட் வாங்கலாம் என்று போன தடவை நீங்கள் சொன்னீர்கள். இது அடுத்த முறை. நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை” சொல்லி விட்டு கோபமாக அம்மாவைப் பார்த்தான். அவள் மகனைப் பார்த்தாள்.ஒரு டிக்கெட்டுக்கு இருபது சென்ட் ஆகும்.அது போகட்டும் என்று விட்டு விடக் கூடியதில்லை. அதை வைத்து ஒரு வெள்ளரிக்காய் ,இரண்டு தக்காளி அல்லது இரண்டு பத்தை முள்ளங்கி அல்லது நான்கு நாட்களுக்கான கீரை வாங்க முடியும்.ஆனால் யீயின் முகம் பாதி மலர்ந்த பூ சூரியனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல இருந்தது.

“ உள்ளே செல்லுங்கள். நுழைவு வழியை மறைக்கக் கூடாது. பீஜிங்கில் இருந்து பாடிங் வரை நின்று கொண்டே போகும் ரயில் இல்லை இது. நாம் அடுத்த ஸ்டப்பிங்கிற்கு வந்து விட்டோம்.” கண்டக்டர் கத்தினான். பொதுவாக இந்த மாதிரி பேச்சு அவள் டிக்கெட் வாங்குவதை தடை செய்யும். ஆனால் இன்று “இரண்டு டிக்கெட் “ என்று கேட்டாள்.

கூர்மையாக யீ யைப் பார்த்த கண்டக்டர் “இந்தக் குழந்தை டிக்கெட் வாங்குவதற்கு ஒரு சென்டி மீட்டர் உயரம் குறைவாக இருக்கிறது” என்றார் யீ தன்னை பல சென்டி மீட்டர் குறுக்கிக் கொண்டான். டிக்கெட் வாங்க வேண்டும் என்ற ஆசையை மிஞ்சும் குழந்தைத்தனம்…

இருபது சென்டுக்குள் சுய கௌரவத்தை வாங்குவது என்பது சிறு பிள்ளை செயல்தான். எந்தத் தாயும் தன் மகனை மகிழ்ச்சிப் படுத்தும் வாய்ப்பை இழக்க விரும்ப மாட்டாள்.“ நான் இரண்டு டிக்கெட்டுகள் வாங்க விரும்புகிறேன்” மென்மையாகச் சொன்னாள். யீ இரண்டு டிக்கெட்டுகளையும் தன் உதடுகள் அருகே பிடித்து காகிதக் காற்றாடி போல ஒலி எழுப்பினான். 

அவர்கள் பஸ்ஸின் மையப் பகுதியை அடைந்தனர். இங்கே இன்னொரு கண்டக்டர் அவர்கள் டிக்கெட்டைச் சோதிக்க இருந்தான்.அவன் அவ்வளவு புத்திசாலி இல்லை என்று டாவ் யிங் நினைத்தாள்.மகனோடு பயணிக்கும் போது எந்தத் தாய்தான் சரியான கட்டணத்தைத் தராமல் இருப்பாள்? எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் தன் மகன் முன்பு அவமானப் பட விரும்ப மாட்டாள்.

அவள் டிக்கெட்டைக் கொடுத்தாள். “இந்த டிக்கெட்டுக்களுக்கான பணத்தை கம்பெனியில் இருந்து நீங்கள் திரும்பப் பெறுவீர்களா?”கண்டக்டர் கேட்டான் “ இல்லை” என்றாள். உண்மையைச் சொல்லப் போனால் இந்த டிக்கெட்டுகளை வேலை செய்யும் இடத்தில் சுற்றுலா போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பயன்படுத்துவாள்.தன் சைக்கிளைப் பயன் படுத்திக் கொண்டு இந்த டிக்கெட்டைக் காட்டிப் பணத்தை திரும்பப் பெற்று விடலாம். அவளும்,அவள் கணவனும் சாதாரணத் தொழிலாளர்களதான். எந்தச் சேமிப்பும் கண்டிப்பாகப் பயன் தரும். ஆனால் யீ புத்திசாலி.உடனே “அம்மா ! நாம் பிரத்யேகமாகப் போகும் இடங்களுக்கு எப்படி டிக்கெட் காசைப் திரும்பப் பெற முடியும்” என்று வெளிப்படையாக சப்தமாகக் கேட்டு விடுவான். குழந்தையின் முன்னால் அவள் எப்போதும் பொய் சொல்ல மாட்டாள்.

தாயாக நடந்து கொள்வது எப்படி என்று புத்தகங்களில் சொல்லப் பட்டவைகளைப் பின்பற்றுவது கடினம்தான். ஆனாலும் ஒரு நல்ல அம்மாவாகத் தன் மகன் முன்னே இருக்க அவள் முடிவு செய்தாள். அவளுடைய செயல்கள் எப்போதும் மென்மையானதும் ,அன்பானதும் ஆகும். உதாரணமாக அவள் எப்போதும் முலாம்பழம் சாப்பிட்டாலும் பழத்தைச் சாப்பிடுவாளே தவிர தோலின் அருகே ஒட்டியிருப்பதை நாசூக்காக ஒதுக்கி விடுவாள். பழத்துக்கும், தோலுக்கும் அப்படி ஒரு அதிக வித்தியாசம் இல்லாத போதும்.

ஒருநாள் தான் பழம் சாப்பிடுவதைப் போல அவன் சாப்பிடுவதைப் பார்த்தாள்.அவனைப் பார்த்த போது தலையில் ஒரு விதை ஒட்டிக் கொண்டிருந்தது. “ யார் உனக்கு இப்படிச் சாப்பிடச் சொல்லிக் கொடுத்தது? அதிலேயே முகத்தையும் கழுவிக் கொண்டு விடுவாயோ” என்று கத்தினாள். யீ பயந்து போனான்.பழத்தைப் பிடித்துக் கொண்டிருந்த கை நடுங்கியது. ஆனால் கண்கள் மட்டும் எதிர்ப்பைக் காட்டின. உலகத்தில் தான் பார்ப்பதைச் சரியாகச் செய்பவர்கள் குழந்தைகள். அவள் அந்த அனுபவத்திலிருந்து அதை உணர்ந்து கொண்டாள். தன் மகன் நல்ல பண்புகள் உள்ளவனாக இருக்க வேண்டும் என்றால் அவள் கவனமாக இருக்க வேண்டும். தானே ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் உணர்ந்தாள். இது மிகவும் கடினம்தான். விமானங்களைச் சிறிய துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதைப் போலத்தான். ஆனால் உறுதியாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை இந்தத் தெளிவான அபிப்ராயம் இருந்ததால் அவள் வாழ்க்கை மிகவும் வெளிப்படையாகவும் சவாலாகவும் இருந்தது.

முதல் முறையாக இன்று யீயை ஒரு பெரிய புத்தர் கோயிலுக்கு அழைத்துப் போகிறாள். அவன் புத்தரை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அங்கு தரையைத் தொட்டு அவனை வணங்கச் சொல்ல மாட்டாள். அது மூட நம்பிக்கை என்று அவளுக்குத் தெரியும்.

ஒரு டிக்கெட் ஐந்து டாலர். இந்த நாட்களில் கோயில்கள் கூட வியாபார ஸ்தலங்களாகி விட்டன.லா சாங் அந்த டிக்கெட்டை அவளுக்குப் பரிசாகத் தந்திருந்தான். இதை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இன்று தான் கடைசி தினம். அவனுக்கு எல்லோருடனும் பரிச்சயம் உண்டு. “ இதைப் பார்த்திருக்கிறாயா? பெரிய பத்திரிக்கை. சாதாரணமான ஜனங்களுக்குக் கிடைக்காது” என்று ஒரு பத்திரிகையைக் கண் முன்னால் போட்டுவிட்டுக் கேட்பான். எப்படி ஒரு சிறிய பத்திரிக்கையைக் காட்டி இப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்தாள்.அவனிடமும் கேட்டாள்.அவன் குழம்பினான். எல்லோரும் அப்படிச் சொல்வதாகச் சொன்னான். பத்திரிக்கையைப் பிரித்து ஒவ்வொரு தாளாக வைத்தால் சாதாரணப் பத்திரிகையை விடப் பெரிதாக இருக்கும் என்றான். அது சரிதான் என்று அவளுக்குத் தோன்றியது. டாவ் யிங்குக்கு அவனைப் பிடித்துப் போனது.

அவனும் அவளை மரியாதைப் படுத்தும் வகையில் தன்னிடமுள்ள கோயில் டிக்கெட்டை அவளுக்குப் பரிசாகத் தந்தான். “ஒரு டிக்கெட்தானா?” என்று கேட்டாள். “ கணவனை விட்டு விடு. மகனோடு போ.1.10 சென்டி மீட்டருக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது .உனக்குப் போக விருப்பம் இல்லையென்றால் கோயில் வாசலில் விற்று விடு.அதில் சில பழங்கள் வாங்கலாம்” என்றான். அவன் எப்போதும் இயல்பாகப் பேசுபவன்.
யீயோடு வெளியே போக முடிவு செய்து டாவ் விடுமுறை எடுத்தாள். நகரின் மையப் பகுதியில் அப்படிப் பசுமையான பகுதியைப் பார்ப்பது மிகவும் அபூர்வம்தான்.

அவர்கள் உள்ளே போவதற்கு முன்னாலேயே உற்சாகப் படுத்துவது போலே பசுமை காற்றில் பரவ எங்கோ மலைச் சாரல் அருவிக்கு வந்திருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. யீ அம்மாவின் கையில் இருந்த டிக்கெட்டை பிடுங்கிக் கொண்டான்.உதடுகள் இடையே வைத்துக் கொண்டு கோயில் கேட் இடையே பறப்பது போல ஓடினான். ஒரு சிறிய விலங்கு தாகத்தை தணித்துக் கொள்ள வேகமாக ஓடுவது போல இருந்தது.

திடீரென்று டாவ் யிங்குக்கு வருத்தமாக இருந்தது.கோயிலைப் பார்த்ததும் குழந்தைக்கு ஏற்பட்ட ஆசை அம்மாவை மறக்க வைத்து விட்டதோ என்று. உடனடியாக அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். மகிழ்ச்சியாக இருக்கத்தானே இன்று மகனை அழைத்து வந்திருக்கிறாள்.

நுழைவாயிலில் இருந்த காவலன் சிகப்பு பனியனும்,கறுப்பு டிராயரும் அணிந்திருந்தான். அவன் மஞ்சள் ஆடையில் இருக்க வேண்டும் என்று ஏனோ அவளுக்குத் தோன்றியது. இந்தச் சீருடை ஒரு வெயிட்டர் போலக் காட்டியது.
யீக்கு என்ன செய்ய வேண்டும் என்று மிகச் சரியாகத் தெரிந்திருந்தது. கூட்டத்தில் அவன் போவது பெரிய அருவியில் ஒரு சொட்டுத் தண்ணீர் விழுவது போலத் தெரிந்தது. மரக்கிளையில் இருந்து ஒரு இலையை பறித்தபடி அந்த இளைஞன் அவன் வாயிலிருந்து டிக்கெட்டை எடுத்துக் கொண்டான். டாவ் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்தாள். “ டிக்கெட்” அந்த இளைஞன் அவள் வழியை மறித்தபடி கேட்டான். டாவ் தன் மகனை நோக்கிக் கையைக் காட்டினாள்.அவன் அழகாக இருப்பதை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள். “ நான் உங்களிடம் டிக்கெட் கேட்கிறேன்” இளைஞன் சிறிதும் அசரவில்லை.
“ குழந்தை உன்னிடம் டிக்கெட் கொடுக்கவில்லையா?” அவள் குரல் அமைதியாக இருந்தது. அந்த இளைஞன் மிகவும் சிறியவன் என்று நினைத்தாள். இன்று விடுமுறையாக இருப்பதால் அவள் நல்ல மனநிலையிலும் இருந்தாள்.

“அது அவனுடையது.எனக்கு உங்கள் டிக்கெட் வேண்டும்”அவன் அதையே மீண்டும் சொன்னான். அவர்கள் இரண்டு பேர்.இரண்டு டிக்கெட் வேண்டும்.
“ குழந்தைகள் விதிவிலக்கம் என்று நினைத்தேன்.” குழம்பியவளாகச் சொன்னாள்.

“அம்மா! வேகமாக வாருங்கள்” யீ உள்ளேயிருந்து கத்தினான். “ உம். வருகிறேன் “என்று குரல் கொடுத்தாள்.கூட்டம் கூட ஆரம்பித்தது. விளக்கைச் சுற்றும் விட்டில்கள் போல.. அவளுக்கு பயம் வந்தது.இந்த அமளி முடியவேண்டும். குழந்தை அவளுக்காக காத்திருக்கிறான்.

“அவனுக்கு டிக்கெட் வேண்டாமென்று உங்களிடம் யார் சொன்னது?” தன்னை நிறையப் பேர் பார்க்கிறார்கள் என்று தெரிந்து அவன் தலையை உயர்த்திப் பேசினான்.
“ அது டிக்கெட்டின் பின்புறத்தில் உள்ளது”

“என்ன உள்ளது?” அந்த இளைஞன் நிச்சயமாக பயிற்சி பெற்றவனில்லை.

“110 செ.மீக்கு குறைவான குழந்தைகள் டிக்கெட் வாங்க வேண்டியது இல்லை என்று அதில் உள்ளது.” டாவ் நம்பிக்கையாக இருந்தாள்.சிறிது முன்னே போய் இளைஞன் அருகில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு டிக்கெட்டை எடுத்து திருப்பி அங்குள்ளவர்களுக்கு கேட்குமாறு படித்தாள்.

“ அப்படியே நில்லுங்கள்” இளைஞன் கோபம் அடைந்தான்.அவள் அந்த பெட்டியைத் தொட்டிருக்கக் கூடாது என்று உணர்ந்தாள்.கையை வேகமாக எடுத்தாள்.

“ ஒ..உனக்கு சட்டதிட்டங்கள் நன்றாகத் தெரியும் .அப்படித்தானே?” இளைஞன் இப்போது மரியாதை இல்லாமல் ஏகவசனத்தில் பேசினான். அவன் குரலில் இருந்த கேலி அவளுக்குப் புரிந்தது.

“உன் மகன் 110 செ.மீக்கும் அதிக உயரமானவன்” உறுதியாகச் சொன்னான்

( மீதி அடுத்த வாரம்)