இலக்கியங்களில் நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு, போன்ற பெயர்களில் குறிக்கப்படுகிறது. ”ஐங்குறுநூறு” என்னும் சங்க இலக்கிய நூலில் மருதத்திணையைப் பாடிய ஓரம்போகியார் நண்டு குறித்துப் பத்துப் பாக்கள் “கள்வன் பத்து” என்னும் பெயரில் எழுதி உள்ளார். நண்டின் செயல்கள் எல்லாவற்றையும் அவற்றில் அவர் காட்டுகிறார்.
கள்வன் பத்தின் நான்காம் பாடலில் “தாய் சாவப் பிறக்கும் புள்ளிக்கள்வன்” என்று என்று அவர் எழுதுகிறார். தலைவனின் கொடுமையைக் கூற வந்த தலைவியின் கூற்று இது. குஞ்சுகளை ஈன்ற பிறகு தாய் நண்டானது இறந்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ”தன் தாயே இறந்து பிறக்கும் நண்டு உள்ள ஊரை சேர்ந்தவன் தலைவன்; அவன் மனத்தில் அன்பில்லை; தன்னைச் சேர்ந்த மகளிர் நலம் கெடுப்பவன் அவன்” என்று தலைவி கூறுகிறாள்.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திற்கு உரை எழுதுகையில், நச்சினார்க்கினியர் “தாயுயிர் வேண்டாக் கூருகிர் அலவன்” [157] என்று மேற்கோள்காட்டுகிறார்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் காலன் எந்தெந்த வடிவில் வருகிறான் என்பதைக்காட்டும் பாடல் இது.
”சிலந்திக்குத் தன்சினை கூற்றம்;நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான்—வலம்படா
மாவிற்குக் கூற்றமாம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை”
இப்பாடல் ’ஞெண்டு’ எனும் பெயரால் காட்டப்படும் நண்டிற்கு அதன் குஞ்சே கூற்றமாக அமைகிறது என்று சொல்கிறது.
கவியரசர் கண்ணதாசனும், ஜனனம்—மரணம் பற்றி எழுதும்போது,
”உண்டபணக் காரனவன் தொந்திஎன விம்மிவரும்
நண்டிலொரு பிள்ளைநண்டு ஜனனம்—அதைக்
கண்டவுடன் பெற்றநண்டு மரணம்”
என்று பாடி உள்ளார்.
தாய் நண்டானது சினை ஈன்ற பிறகு உடல் சுருங்கிவிடும். பிறகு உடல் பருப்பதற்காக அது தன் ஓட்டை மாற்றத் தொடங்கும். அப்பொழுது அதன் சினைகள் பொரிந்துத் தாயைவிட்டு நீங்கும். தாய் நண்டு இப்போது ஓய்ந்து ஒடுங்கி இறந்தது போலக் கிடக்கும். அதைக்கண்டவர்கள் அது இறந்துவிட்டது என எண்ணுவார்கள். எனவேதான் இலக்கியங்கள் இவ்வாறு எழுதி உள்ளன போலும். புது ஓடு பெற்ற பின்னர் அது மீண்டும் நடமாடத் தொடங்குமாம்.
திருமங்கையாழ்வார் திவ்யப்பிரபந்தத்தில் நண்டின் மூலம் ஒரு சிறுகதையையே காட்டுகிறார். திருநறையூர் திவ்யதேசத்தைப் போற்றும் பாடல் இது.
பள்ளிக் கமலத் திடைப்பட்ட
பகுவாய் அலவன் முகம்நோக்கி
நள்ளி ஊடும் வயல்சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே!’ [1513]
இந்த அடிகளில் அலவன் என்பது ஆண் நண்டினையும் நள்ளி என்பது பெண் நண்டினையும் குறிக்கும். திருநறையூரில் ஓர் ஆம்பல் மலரில் ஆணும் பெண்னுமாய் இரு நண்டுகள் வாழ்ந்து வந்தன. பெண் நண்டு கருவுற்றது. அதற்குத் தருவதற்காக இனிமையான பொருள் தேடி ஆண் நண்டு தாமரை மலரை அடைந்தது. அதனுள் இருக்கும் மகரந்தத்தைத் திரட்டுவதற்குள் சூரியன் மறைந்துபோக தாமரை மலர் மூடிக்கொண்டது. உள்ளே இருந்த ஆண் நண்டின் மீது தாமரைத்தாதுகளும் சுண்ணமும் படிந்துவிட்டன. மறுநாள் பொழுது விடிந்தவுடன் ஆண் நண்டு அதே கோலத்தில் பெண் நண்டைத்தேடிவர அதற்குள் பகலில் குவியும் ஆம்பல் மலரும் மூடிக்கொண்டது. ஆண் நண்டு இரவு முழுதும் வேறிடத்தில் தங்கி வந்த படியாலும், அதன் உடலிலிருந்த கோலங்களாலும் பெண் நண்டு ஊடல்கொண்டு கதவை அடைத்துக்கொண்டது போலிருந்ததாம் அது.
இதைப் பட்டர் சொல்லக் கேட்ட அரையர், ”என்ன நடந்ததென்று கேள்வி கேட்டுப் பின் குற்றம் நிரூபணமானால் அன்றோ தண்டிக்க வேண்டும்?” என்று கேட்டாராம். அதற்குப் பட்டர் “என்ன செய்வது? கேள்வி கேட்க முடியாதபடிக்குப் பெண் அரசு நடக்கிறதே? என்றாராம்.
திருநறையூர் என்னும் நாச்சியார் கோயிலில் பெருமாளைவிடத் தாயாருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீதி புறப்பாடுகளில் தாயார் முன்னால் செல்லப் பின்னால்தான் பெருமாள் வருகிறார். இதுவே மறைமுகமாக இங்குக் காட்டப்படுகிறது.
இவ்வாறு நண்டுகள் பல இலக்கியங்களில் இடம் பெற்று நம்மை மகிழ்விக்கின்றன.
அருமை ஐயா.
LikeLike