‘குழலினிது யாழினிது என்ப தம் வீட்டு அஞ்சலைக் குரல் கேளாதவர்’ ஆம் ‘அம்மாவ் துணி ஊற வைச்சுட்டயா’ என்று அவசரமாக வேலை செய்ய வரும் அவளை எல்லோரும் சந்தோஷத்தோடு வரவேற்பார்கள். அவளது அதிர வைக்கும் குரல் எப்போது கேட்கும் என்று ஆவலாகக் காத்திருப்பார்கள். வேலைக்காரியை வரவேற்காத வீடு உண்டா! புவனாவும் இதற்கு விதி விலக்கல்ல. அவசரமாக வரும் அஞ்சலை அதற்கப்புறம் எதிர் வீட்டு கமலா தண்ணி காப்பி தருவது, அடுத்தாத்து அம்புஜம் அவசர புத்தியினால் பாவக்காயை கருக்குவது, புதிதாக கல்யாணம் ஆன புனிதா இட்லி பானையில் தண்ணீர் வைக்காமல் அடுப்பில் வைப்பது என்று ஒரு கூஜா நிறைய காப்பியைக் குடித்துக் கொண்டே கூறி டைம் வேஸ்ட் செய்வாள். புவனாவும் அரை மனதாக ‘இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகிறாய்’ என்பாளே ஒழிய ஸ்வாரஸ்யமாகக் கேட்பாள். வம்பு யாருக்குத்தான் பிடிக்காது! ஆனால் புவனாவின் கணவர் மாதவனுக்கு இவளது வம்புப் பேச்சுகள் பிடிக்காவிட்டாலும் வேலை செய்யும் நறுவிசு அவருக்குத் திருப்தியாக இருந்ததால் பேசாமல் இருந்தார்.
ஒரு நாள் ‘கூடை நிறைய பேண்ட், சர்ட் போடறயே அம்மா’ என்று முணுமுணுத்துக்கொண்டே துணிகளைத் துவைத்துக் காய வைத்தாள். மாலையில் புவனாவின் கணவர் வீட்டிற்கு வந்து எதையோ அவசரமாகத் தேடினார். பிறகு பேண்ட்டைத் தேடி அது கிடைக்காமல் ‘புவனா இங்கே இருந்த என் பேண்ட் எங்கே’ என்று வினவினார். ‘அது ரொம்ப அழுக்காக இருந்தது என்று தோய்க்கப் போட்டேன். ஏன் என்னாச்சு எதற்கு இவ்ளோ பதட்டம்’ என்று புவனா கேட்டாள். ‘போச்சு போச்சு அதிலே ஐந்து லட்சம் பணம் வைத்திருந்தேன். என் நண்பன் திருப்பிக் கொடுத்த பணம். நீ கேட்ட நெக்லசை இன்று சர்ப்ரைசாக வாங்கி வரலாம் என்று இருந்தேன். அதான் உன்னிடம் கூட சொல்லவில்லை. ஆனால் நீயும் கவனிக்காமலேயே பேண்ட்டை தோய்க்கப் போட்டு விட்டாய்’ என்று கூறினார். அதற்கு புவனா ‘இல்லை அதில் பணம் இருந்திருந்தால் அஞ்சலை சொல்லியிருப்பாள். அவள் ஒன்றும் சொல்லவில்லையே’ என்று ஆச்சர்யம், சந்தேகம் கலந்து கேட்டாள்.
‘ஆஹா அதுதான் விஷயமே! எனக்கு முதலிலேயே சந்தேகம் அஞ்சலை மீது. நீ தான் இது எதையும் கவனிப்பதில்லை. பெரிதாகப் பணம் வந்தவுடன் எடுத்துக் கொண்டு விட்டாள். உன்னிடம் எதற்கு சொல்ல வேண்டும்! என் கணிப்பு சரியாக இருந்தால் இன்றிலிருந்து வேலைக்கு வர மாட்டாள் பார். ஐந்து லட்சம் என்பது சின்ன தொகையா!’ என்று படபடத்துக் கோபத்துடன் சொன்னான் மாதவன். ‘இல்லை அஞ்சலை அப்படிப் பட்டவள் இல்லை. நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம். நான் மெதுவாக விசாரிக்கிறேன்’ என்று புவனா சொல்ல ‘முடியாது நான் அவளை விசாரிக்கும் விதத்தில் விசாரிக்கிறேன். அப்பத்தான் சரியாக வரும்’ என்று மீண்டும் கத்தினான் மாதவன். ‘நீங்கள் செய்த தப்புக்கு அவள் எப்படி பொறுப்பாக முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று புவனா மறுபடியும் நிதானமாகக் கூற ‘ஏதோ பண்ணு. நான் சொன்னால் நீ கேட்கமாட்டாய். போலீசைக் கூப்பிடுவேன் அவள் ஒத்துக்கொள்ளாவிட்டால். எனக்கு என் பணம் வேண்டும்’ என்று அழுத்தமாகக் கூறினான்.
ஆனால் மாதவன் கணித்ததிற்கு மாறாக மறு நாள் அஞ்சலை வந்து எப்போதும் போல ஆர்ப்பாட்டத்துடன் வேலை செய்ய ஆரம்பித்தாள். புவனாவிற்குத்தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மெதுவாக ‘இன்று என்னுடைய துணிதான் கொஞ்சம் இருக்கிறது, நேற்றே ஐயாவுடையது எல்லாம் தோய்த்தாகி விட்டதே’ என்று ஆரம்பித்தாள் நப்பாசையுடன். இப்படி ஆரம்பித்தாலாவது அவள் ஞாபகம் வந்து சொல்லுவாள் என்று எதிர்ப்பார்த்தாள். அவள் எடுத்திருக்க மாட்டாள், அப்படியே எடுத்திருந்தாலும் அங்கே அவசரத்தில் வைத்து விட்டு இப்போது ஞாபகம் வந்து சொல்லுவாள் என்று நினைத்தாள். ஆனால் இது ஒன்றும் தெரியாத அஞ்சலை ‘ஆமாம்மா நேற்று நிறைய பேண்ட், சர்ட் தோய்த்து விட்டேன், நீயும் கையால் தோய்த்தால்தான் நன்றாக இருக்கிறது என்று மிசிணும் வாங்க மாட்டேன் என்கிறாய். கை வலிக்கிறதம்மா. நாளை உன் துணிகளைத் தோய்க்கிறேன்’ என்றாள். ஆனால் பணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மாதவனை எப்படி சமாளிப்பது என்றும் புரியவில்லை.
சாயங்காலம் வீட்டிற்கு வந்த மாதவன் முதலில் இதைத்தான் விசாரித்தான். ‘அஞ்சலையிடம் கேட்டேன் அவள் இதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆகையால் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் வேறு எங்காவது வைத்து விட்டீர்களா என்று யோசியுங்கள்’ என்று புவனா சொன்னவுடன் ‘நீ சரியாக விசாரித்திருக்க மாட்டாய், நான் நாளை விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் உண்மை வெளி வந்து விடும்’ என்று மாதவன் உருமினான்.
மறுநாள் புவனா பயந்த மாதிரியே அஞ்சலை வந்தவுடன் ‘நேற்று என் பேண்ட் தோய்த்தாயே அதில் ஏதாவது இருந்ததா’ என்று ஆரம்பித்தான் மாதவன். ‘ஆமாஞ்சாமி சில காகிதங்கள் இருந்தன பின் பக்கத்தில் வைத்துள்ளேன்’ என்று இரண்டு சிறு துண்டுகளை எடுத்து வந்தாள். ‘ம்கூம் இதைத் தவிர கத்தைப் பேப்பர்கள், பணம் இருந்ததா?’ ‘இல்லை சாமி இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை’ இப்போது மாதவன் கோவத்துடன் ‘உண்மையைச் சொல் பணம் கத்தைப் பணம் இருந்ததா, நீ எடுத்து வைத்துள்ளாயா’ ‘சாஆஆமி அப்படி இருந்தால் நான் உடனே அம்மாவிடம் கொடுத்திருப்பேனே’ என அஞ்சலை பதற ‘பொய் சொல்லாதே நான் போலீசைக் கூப்பிடுவேன். அவர்கள் விசாரிக்கும் விதத்தில் விசாரிப்பார்கள். உண்மையைச் சொல். ஐந்து லட்சம் ரொக்கம். கொடுத்து விடு. உனக்கும் ஏதாவது அதிலிருந்து தருகிறேன்’ என்று சாம, தான, தண்டத்தை உபயோகித்தான் மாதவன். அஞ்சலைக்கு கண்களிலிருந்து கண்ணீர் தாரையாகக் கொட்டியது. முந்தானையால் துடைத்துக் கொண்டே விசும்பியவாறு ‘சாமி நாங்கள் ஏழைகள் தாம் ஆனால் மானம் மருவாதை உள்ளவர்கள். சத்தியத்திக்குக் கட்டுப்பட்டவர்கள். உழைச்சி சாப்பிடுவிமே தவிர உட்கார்ந்து சாப்பிட மாட்டோம். நான் பணம் எதுவும் பார்க்கவில்லை’ என்று முடித்தாள்.
அப்போதும் மாதவன் சமாதானமாகவில்லை என்று கண்டு ‘அம்மோவ் நான் போகிறேன். இனி இங்கு வேலை செய்ய மாட்டேன். இனி எது காணோம் என்றாலும் என்னத்தான் சொல்வீங்க. பணம் ஒரு நாள் கிடைக்கும் அப்போ இந்த அஞ்சலையை நினைங்க. என் பையை பார்த்துக்கோங்க’ என்று முந்தானையை, பையை உதறி விட்டு சென்று விட்டாள். ‘பாவம் இந்த மாச சம்பளம் கூட கேட்கவில்லை தலை குனிந்து போகிறாள்’ என்று புவனா மிகவும் வருத்தப்பட்டாள். அவள் அஞ்சலையை மிகவும் நம்பினாள். அவள் போனது அதுவும் அப்படி வருத்தப்பட்டு போனது அவளுக்கு வேதனையாக இருந்தது. என்ன செய்ய! அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் கஷ்டப்பட்டப்பிறகு கமலாம்பாள் வந்தாள். ஏதோ வேலை ஆயிற்று
நான்கு நாட்களுக்குப் பிறகு ஆபிசில் இன்ஸ்பெக்க்ஷன் எல்லோரும் அவரவர்கள் இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்று சர்க்குலர் வந்தது. மாதவன் எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பான். ஆனாலும் மறுமுறை எல்லாவற்றையும் எடுத்து தூசி தட்டி வைக்கலாம் என்று மேசை டிராயரை திறந்த போது உள் பக்கமாக ஏதோ குண்டான கவர் கையில் பட்டது. யோசனையுடன் அதை இழுத்துப் பார்த்தால் ரூபாய் நோட்டுகள் கத்தையாக. அப்போதுதான் அவனுக்கு பொறி தட்டியது. நண்பன் பணத்தைக் கொடுத்தவுடன் பியூன் வந்து மேனேஜர் அழைப்பதாகச் சொல்லவும் பணத்தை அவசரமாக கவரில் போட்டு டிராயரில் வைத்ததும் பிறகு எடுத்து பேண்ட்டில் போட மறந்ததையும் இப்போது நினைத்தான். அஞ்சலையை நாம் எப்படி தவறாக எண்ணி விட்டோம். புவனா சரியாகத்தான் சொன்னாள். ‘அவசர ஆத்திர புத்தியினால் ஏழை என்ற ஒரே காரணத்தினால் அப்படி நினைத்தோமே அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்’ என்று மிகவும் நொந்து போனான். அவள் சொன்ன மாதிரி பணம் கிடைத்தவுடன் அவள் ஞாபகம் தான் வருகிறது. வீட்டிற்கு வந்து புவனாவிடம் இதைத் தயங்கித் தயங்கி சொன்னபோது புவனா கேட்ட கேள்வி ‘இந்த பாவத்திற்கு மன்னிப்பு ஏது!’