அலை பேசி தொடர்ந்து சிணுங்கியபோது இரவு மணி இரண்டு..
தூக்கம் கலைந்த சலிப்போடு பக்கத்து மேஜையில் அலைபேசியை எடுத்து..
“ஹழோ”
தூக்கக் கலக்கத்தில் குழறினேன்.
“டேய் மது பேசறேன்.. சக்ஸஸ்டா.. ஏப் வேலை செய்யுது”
“… …”
“டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”
“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல சொல்லக் கூடாதா? இப்படி பாதி ராத்திரில எழுப்பி தூக்கத்தைக் கெடுக்கணுமா?”
“என் சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக்க உன்னைத் தவிற வேற யாரு இருக்கா? உனக்குத் தான் தெரியுமே.. என் பொண்டாட்டிக்கு இதுலலாம் ஆர்வம் கிடையாது.. அவளைப் பொறுத்தவரை.. இதுக்கு நேரம் செலவு பண்றதை விட அவளைக் கூட்டிட்டு ஷாப்பிங் போகலாம்னு தான் சொல்லுவா.. அதோட இப்ப அவ வீட்டுல இல்லை.. அவம்மா வீட்டுக்குப் போயிருக்கா.. வர ரெண்டு நாளாகும்.. அதனால..”
”சரி.. சரி.. புலம்பாதே.. வாழ்த்துகள்.. நாளைக்கு வரேன்.. குட் நைட்”
“இல்லைடா.. குட் மார்னிங்”
லைன் கட்டானது.
கட்டிலிலிருந்து எழுந்து வாஷ் ரூமுக்குப் போனேன்..
திரும்பி வந்து படுத்தவனுக்கு கலைந்த தூக்கம் தொடர மறுத்தது..
மது..
பள்ளி நாட்களிலிருந்தே நாங்கள் இருவரும் நண்பர்கள்..
மது ஒரு சைல்ட் பிராடிஜி என்று தான் சொல்ல வேண்டும்.. சின்ன வயதிலேயே அவன் அதைக் கண்டு பிடிக்கறேன்.. இதைக் கண்டு பிடிக்கிறேன் என்று எதையாவது புதிது புதிதாக செய்துக் கொண்டே இருப்பான்.. அதில் பாதியும் எனக்குப் புரியாது.. காரணம் எனக்கும் விஞ்ஞானத்துக்கும் ஏழாம் பொருத்தம்.. அதனால் தான் நான் காமெர்ஸ் படித்து இன்று பேங்க் ஆபீசர்..
ஆனால் மது பி.ஈ. முடித்து.. எம்.டெக். முடித்து.. பிரபல ஐ.டி. கம்பெனியில் பணியில் இருக்கிறான்.. இருந்தாலும் அவனுடைய கண்டுபிடிப்பு ஆர்வம் தொடர்ந்தது.. ஆனால் பள்ளி நாட்களிலிருந்தே ஏனோ அவனுடைய கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்க.. வெளிச்சத்துக்குக் கொண்டு வர ஆளில்லாமல் போனது துரதிருஷ்டம்..
வேலையில் சேர்ந்த பிறகும் ஏதேதோ கண்டு பிடித்தவன் ஒருமுறை கைக்கடிகாரம் போன்ற ஒரு வஸ்துவைக் கண்டு பிடித்தான்..
“என்னடா இது.. இந்த சாதாரண வாட்சைக் கண்டு பிடிக்கவா இவ்வளவு மெனக்கெட்ட?”
என் குரலில் தொனித்த கிண்டலை அலட்சியம் செய்த மது..
“டேய்.. இது சாதாரண வாட்ச் இல்லை.. இதை வயசானவங்க கையில கட்டிகணும்.. அவங்களுக்கு நெருக்கமானவங்க தங்களோட மொபைல்ல நான் கண்டு பிடிச்சிருக்கிற ஏப்பை இன்ஸ்டால் பண்ணிக்கணும்.. அந்த ஏப்பும் வயசானவங்க கையில கட்டியிருக்கிற வாட்சும் சிங்க் ஆகி.. அவங்களுக்கு திடீர்னு ஏதாவது உடம்புக்குன்னு வந்தா.. ரத்தக் கொதிப்பு வேறு பட்டாலோ.. இல்லை வேறு ஏதாவது திடீர் பிரச்சனை வந்தாலோ.. உடனே உடம்புல ஏற்படற பதட்டத்தை அந்த வாட்ச் உணர்ந்து அடுத்த கணமே நெருக்கனானவங்க மொபைலுக்கு அலர்ட் அனுப்பிரும்.. அவங்க உடனே வந்து வயசானவங்களைக் கவனிக்கலாம்”
மது இதை விவரித்த போது என்னால் நம்ப முடியவில்லை..
“நல்லாத் தான் இருக்கு.. ஆனா அதெப்படி.. ரத்தக் கொதிப்பு அதிகமானா எப்படி அலர்ட் வரும்?”
“வரும்.. அதான் என் ஏப்.. நிரூபிக்கட்டுமா?”
படுக்கையில் கிடக்கும் பக்கத்து வீட்டு பெரியவர் கையில் அந்த வாட்சைக் கட்டி தன் மொபைலுடன் இணைத்து நிரூபித்தான்.. விலைவாசி போல் ஊசலாடிக் கொண்டிருந்த அவருடைய ரத்தக் கொதிப்பின் ஒவ்வொரு ஏற்ற இறக்கமும் அவனுடைய மொபைலில் அலர்ட் கொடுத்தது.. நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.. எவ்வளவு உபயோகமான கண்டு பிடிப்பு..
மதுவுக்கு விஞ்ஞானம் தெரிந்த அளவுக்கு சாமர்த்தியம் போதாது.. அப்பாவி.. தன் கண்டுபிடிப்புகளை வியாபாரம் செய்ய தெரிந்திருக்கவில்லை..
தன்னுடைய கைக்கடிகார கண்டு பிடிப்பை அக்கு வேறு ஆணி வேராக ஒருவரிடம் விவரித்து.. தஸ்தாவேஜுகளை சமர்பித்து அதை விற்க முயல..
அவனுடைய கண்டு பிடிப்பு விரைவிலேயே மார்கெட்டில் புகுந்து சக்கை போடு போட்டது.. ஆனால் அவனுடைய கண்டு பிடிப்பாக அல்ல.. சகலத்தையும் அவன் ஒப்புவித்தவரின் கண்டு பிடிப்பாக..
மது இடிந்து போனான்..
எனக்கும் பொறுக்க வில்லை..
“டேய்.. என்ன காரியம் பண்ணியிருக்கேடா?.. உன்னுடைய கண்டு பிடிப்பை வெச்சு எவனோ ஒருத்தன் லட்ச லட்சமா சம்பாதிக்கறான்.. நீ பேக்கு மாதிரி பராக்கு பார்த்திட்டு நிக்கறே?”
“… …”
“இப்படியாடா புத்தி கெட்டதனமா நடந்துப்பே?”
மதுவின் முகம் தொங்கிப் போனது..
இது முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு மதுவை அவன் வீட்டில் சந்தித்தேன்,, பிரமை பிடித்தவன் போல்.. எதையோ பறி கொடுத்தவன் போல்..
“டேய்.. என்னடா.. ஏன் இப்படி இருக்கே?”
என் கேள்விக்கு பதில் வெற்றுப் பார்வை தான்..
மதுவின் மனைவி ரம்யா புலம்பினாள்..
“என்னங்க இவர்.. ஒண்ணு இப்படி எதுவும் பேசாம உட்கார்ந்திருக்கார்.. இல்லை. திடீர்னு எரிச்சல் பட்டு.. கன்னா பின்னான்னு கத்தறார்.. இப்படித் தான் நேத்து பக்கத்து வீட்டு மாறன் சார் கிட்ட பெரிசா சண்டைக்குப் போயிட்டார்.. இவ்வளவுக்கும் பெரிய விஷயம் ஒண்ணுமில்லை.. மாறன் சார் அவர் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது எங்க வீட்டு கேட்டுல லேசா இடிச்சுட்டார்.. எங்க கேட்டுக்கு ஒண்ணும் டேமேஜ் இல்லை.. மாறன் சாரோட காருக்கு தான் டேமேஜ்.. ஆனா அதெப்படி எங்க வீட்டு கேட்டுல இடிப்பேன்னு காச் மூச்னு கத்த ஆரம்பிச்சுட்டார்.. அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. மானமே போச்சு”
இதற்கு பிறகு இதை இப்படியே விட எனக்கு மனமில்லை..
அன்று மாலை மதுவை பீச்சுக்கு அழைத்துச் சென்றேன்..
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் உட்கார்ந்தோம்..
எதிரே கடலலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர..
கடலையே வெரித்துக் கொண்டிருந்தான் மது..
”டேய்.. உன் கண்டுபிடிப்பை அந்தாளு ஏமாத்தி எடுத்துண்டது அநியாயம் தான்.. உன் கோபம் நியாயமானது தான்.. ஆனா நீ பேட்டண்ட் ரெஜிஸ்டர் பண்ணாததுனால தானே எல்லாம்.. அதனால தானே சட்டப் பூர்வமா எதுவும் பண்ண முடியலை.. சரி.. நடந்தது நடந்து போச்சு.. அதுக்காக இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருவியா? நீ சாதிக்கப் பிறந்தவன்.. இன்னும் எவ்வளவோ நீ கண்டு பிடிக்கணும்.. உனக்கு நிறைய பேரும் புகழும் வரணும்..”
“… …”
“இதப் பாரு.. இனிமே நீ எதுக்கும் கவலைப் படாதே.. நான் இருக்கேன்.. உன் பேட்டண்ட் ரெஜிஸ்ட்ரேஷன், மார்கெட்டிங் எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. இனிமே யாரும் உன்னை ஏமாத்த முடியாது.. நீ தைரியமா உன் கண்டுபிடிப்புகள்ள இறங்கு”
மது மௌனமாக இருந்தான்..
“என்னடா எதுவும் பேச மாட்டேங்கறே?”
சிறிது நேரம் மௌனம்..
பிறகு மெதுவாக ஆனால் தீர்மானமாகச் சொன்னான்..
“நீ எனக்கு உதவி பண்ணுவியா? அப்பக் கண்டிப்பா புது முயற்சில இறங்கறேன்.. அருமையான ஐடியா ஒண்ணு சிக்கியிருக்கு”
என்னவென்று அவன் உடனே சொல்லவில்லை..
ஆனால் மறுநாளிலிருந்தே மும்முரமாக வேலையில் இறங்கினான் மது..
ஒரு வாரம் கழித்து என்னை பீச்சுக்கு வரச் சொன்னான்..
“டேய்.. அமெரிக்காவுல ஒரு கோடில பறவைகளோட மொழியை ஆராய்ச்சி பண்ண அலைவரிசைக் கருவிகளோட ஒரு குழு போயிருக்கு.. அப்ப திடீர்னு இனம் புரியாத மொழில ஏதோ பேச்சு சத்தத்தை அவங்களோட கருவி பதிவு பண்ணியிருக்கு.. ஆய்வு பண்ணிப் பார்த்ததுல அந்தப் பகுதில பல நூறு வருடங்களுக்கு முன்னால ஒரு காட்டு வாசி இனம் இருந்ததாகவும்.. பதிவு செய்யப் பட்ட அந்த மொழி அவங்க பேசினதுதான்னும் கண்டு பிடிச்சிருக்காங்க.. ஆனா அந்த இனத்தவர்களும் அவங்க மொழியும் அழிஞ்சு போய் பல வருஷங்கள் ஆயிருத்தாம்..”
”அப்ப மறுபடியும் எப்படி அந்த மொழில பேசினது அவங்களுக்குக் கேட்டுது?”
”அங்க தான் விஷயமே.. அதாவது நாம பேசறதெல்லாம் அழிஞ்சு போறதில்லை.. அது காத்துல மிதந்திண்டிருக்கு.. நம்ம புராணங்கள்ளயே இதைப் பத்தி குறிப்பு இருக்கிறதா கூகிள் சொல்றது.. சரியான அலைவரிசைக் கருவிகளை உருவாக்கினா ஒரு இடத்துல இருந்து நாம பேசினதையெல்லாம் மறுபடியும் பிடிச்சு இழுத்துக் கேட்கலாம்.. பதிவு பண்ணலாம்”
“சரி.. இப்ப எதுக்கு இதைச் சொல்றே?”
“கண்டு பிடிக்கப் போறேன்.. ஒரு இடத்துல பேசின பேச்சையெல்லாம் பிடித்து இழுத்து பதிவு பண்ணக் கூடிய ஒரு கருவியைக் கண்டு பிடிக்கப் போறேன்..”
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. நீ சொல்றது நல்லது மாதிரியும் இருக்கு.. ஆபத்து மாதிரியும் இருக்கு”
“ஒரு ஆபத்தும் இல்லை.. இந்த என் கண்டுபிடிப்பு மட்டும் சக்ஸஸ் ஆச்சு.. ஓவர் நைட் பிரபலமாயிருவேன்.. என் கண்டு பிடிப்பை வெளில விக்க மாட்டேன்.. நம்ம அரசாங்கத்துக் கிட்ட கொடுத்திருவேன்.. பல பிரச்சனைகளை சுலபமா தீர்க்க அவங்களுக்கு இது ரொம்பவே உபயோகமா இருக்கும்”
தீர்மானமாகச் சொன்னான். அதிலிருந்து அலுவலக நேரம் போக இதே சிந்தனை தான்.. பல அலைவரிசையை கிரகிக்கக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்கினான்.. கணினி மூலம் அந்த இயந்திர செயல்பாடுகளை இணைத்தான்.. அதை இயக்க ஒரு ஏப் கண்டு பிடித்தான்..
ஆனால் அவனுடைய முயற்சி உடனே வெற்றி பெற வில்லை.. நினைத்த படி ஏற்கனவே பேசப்பட்ட குரல்களை அவனுடைய ஏப் இழுத்து பதிவு செய்யவில்லை..
அவன் தளரவில்லை.. மனதில் வேகம் கூடியது..
அலுவலகத்துக்கு பத்து நாட்கள் விடுப்பு எடுத்தான்..
இருபத்தி நான்கு மணி நேரமும் இதே முயற்சியில் ஈடு பட்டான்..
நானும் தினம் அவனை சந்தித்து ஊக்கம் கொடுத்தேன்..
நேற்று கூட..
“டேய்.. நெருங்கியாச்சு.. நிச்சயம் ஜெயிச்சிருவேன்”
நம்பிக்கையோடு தெரிந்தான்..
சொன்ன மாதிரியே ஜெயித்து எனக்கு நள்ளிரவு என்று கூடப் பார்க்காமல் அலைபேசியிலும் தெரிவித்து விட்டான்..
மதுவை நினைத்தால் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது..
நினைக்க நினைக்க.. மதுவின் இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் புரிந்தது.. இதை நேர்த்தியாகக் கையாண்டால் அரசியலில் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.. அதே சமயத்தில் தீவிரவாதிகள் கையில் சிக்கினால் ரொம்பவே ஆபத்து..
இப்படி யோசித்துக் கொண்டே என்னையுமறியாமல் உறங்கிப் போனேன்..
மீண்டும் அலைபேசி சிணுங்கியது..
விழித்து மணி பார்த்தேன்..
ஏழு..
“ஹலோ..”
மறுமுனையில் சொல்லப் பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்..
மது தற்கொலை செய்துக் கொண்டு விட்டானாம்..
ஏன்.. ஏன்.. சில மணிநேரங்கள் முன் தானே சாதித்து விட்டேன் என்று சந்தோஷப் பட்டான்.. பின் ஏன்?
கிளம்பும் போது மதுவிடமிருந்து வந்திருந்த வாட்ஸ்-ஏப் வாய்ஸ் மெஸேஜ் கண்ணில் பட்டது..
“டேய்.. நான் இந்தக் கருவியை கண்டு பிடிச்சிருக்கக் கூடாது.. தப்புப் பண்ணிட்டேன்.. ரொம்பவே தப்பு பண்ணிட்டேன்..”
அடுத்து இன்னொரு வாய்ஸ் மெஸேஜ்..
“மாறன்.. நான் இன்னிக்கு எங்கம்மா வீட்டுக்குப் போறேன்.. அந்தாளு தனியாத் தான் மெஷினோட மாரடிச்சிட்டிருப்பான்”
ரம்யாவின் குரல்..
“அதனால?..”
“இதுக்கு மேல எனக்குப் பொறுமை இல்லை.. நம்ம பிளான்படி அவனை இன்னிக்கு முடிச்சிருங்க… ”