சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வுக்காக ஜனவரி 2023 மாதத்தில் வெளியான சிறுகதைகளிலிருந்து என்னுடைய தேர்வு :
முதல் இடம் பெறும் கதை –
“பிரம்ம சாமுண்டீஸ்வரி
எழுதியவர் – இரா. சசிகலாதேவி (சொல்வனம் – ஜனவரி 8, 2023 )
இந்தக் கதைபற்றி :
“காளியை நீ கூர்ந்து பார்க்கும்போது, ப்ரம்ம சாமுண்டேஸ்வரியைக் காண்பாய்” என்ற அம்மாவின் வார்த்தைகளின்படி, இறந்து கிடக்கும் பெண்ணுடலைத் தில்லை காளியாகப் பார்க்கும் பிணவறை அலுவலரின் கதை.
“உனக்கு நல்ல வாசனையான கிராக்கி வந்திருக்கு” என்று ஆரம்பிக்கும் இந்தக் கதை ஒரு அழுகிய பிணத்தைப் பற்றியது. ஒரு சாவு, அதன் மர்மம், அது தொடர்பான ஊகங்கள், சந்தேகங்கள், அதனால் எழும் வாழ்வைப் பற்றியதான விசாரங்கள், யாரோ ஒருவரின் மரணம் மேலெழுப்பும் நம் ஆழ்மனதில் அமிழ்ந்திருந்த சொந்த வாழ்க்கை சோகங்கள் என்று மரணம் தொடர்பான அனத்தையும் ஒரு சுற்றுச் சுற்றி முடிக்கும் இந்தக் கதை, வாசிக்கும்போது உணர்வுகளாலும், முடித்தபின் சிந்தனைகளாலும் நம்மை நிறைக்கிறது.
கதை முழுவதும் “மரணத்தின்மேல் மரணமில்லாமல் தான் மட்டும் நீண்ட காலம் வாழ்வதுபோல் கற்பனை செய்யும் புழு, மரணமடைவதை ஆயிரம் முறை கண்டாலும் சுகமாக வாழ்வதுபோன்ற பிரமை, எத்தனை நெருங்கிய உறவாக இருந்தாலும் நாற்றத்திற்கு முகம் சுழிக்கும் மனித இயல்பு, ஒவ்வொரு மரணத்துக்கும் ஒரு கதை, மங்கலான ஒளியில் அந்த உடல் சிதிலமடைந்திருந்த கோவில்போலிருந்தது, பெண்ணுக்கும் நீருக்கும் சம்பந்தம், மரணம் முடிச்சிடப்படாத புதிர்” போன்ற பொருத்தமான, கதையோடு ஒட்டிய, பிரமிக்க வைக்கும் கருத்துக்கள்.
தண்ணீரில் ஊறிப்போய் சிதிலமாகிவிட்ட உடலை, தன் வேலை விதிமுறைகளுக்கும் மேற்பட்டு, இறுதி யாத்திரைக்கு ஏற்றபடி முடிந்தவரையில் அழகாகத் தயார் செய்வது மனிதாபிமானத்தின் எல்லை.
ஒரு சாவின் துக்கம் வசப்பட்ட பொழுதுகளில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளில் ஒன்றுதான் இறந்த தேவியின் அம்மா செவ்வரளிப் பூக்களைப் பறித்து முந்தானையில் முடிந்து கொள்வதும்.
‘ஒரு இறந்த பெண்ணை தெய்வத்தின் அம்சமாகக் காண முடிந்தால், உயிருள்ள பெண்ணையும் அப்படியே காண முடியுமே?’ என்கிற நம்பிக்கையையும் தருகிறது கதை.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இரா. சசிகலாதேவி!
கதைத் தேர்வில் போட்டிக்குப் பரிசீலிக்கப்பட்ட மேலும் ஐந்து கதைகள் கீழே :
- குரு அரவிந்தனின் “நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டிய நாடகம்” –
திண்ணை 15/01/2023
1865 ஆம் ஆண்டுவரை கருப்பினத்தவர் நீச்சல் குளங்களிலோ, கடலிலோ இறங்கக்கூடாது என்று அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து, கருப்பினத்தவர் கடலில் இறங்கி, கைது செய்யப்பட்டு, பின் கடலில் இறங்கலாம் என்று தீர்ப்புப் பெறும் கதை.
ஒரு நாட்டிய நாடகத்தில் பாடப்பட்ட “வேட் இன் த வாட்டர்ஸ்” பாடல் ஏற்படுத்திய தாக்கம் அது. கருப்பினப் பெண்களை அடிமைகளின் இனப்பெருக்கத்துக்காகப் பயன்படுத்தியதும், தப்பி ஓடும் கருப்பினத்தவரை வேட்டை நாய்களை வைத்துப் பிடித்ததும், கருப்பினத்தவர் நீரில் இறங்கியதும் வெள்ளையர்கள் வெளியேறியதும் நிறவெறியின் உச்சம்.
“நம் உரிமையை நாம்தான் வென்று எடுக்க வேண்டும்” என்பது இந்தக் கதை சொல்லும் நீதி. “நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம், நமக்காக யாரோ, எப்போதோ போராடிப் பெற்றுக் கொடுத்தது” என்னும் வரிகள் நாடுகள் தாண்டி, கடல்கள் தாண்டி, பிரச்னைகளும், போராட்டங்களும் தாண்டி, எல்லா உரிமைகளுக்கும் பொருந்துவது எப்பேர்ப்பட்ட விந்தை!
வருடம், மாதத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்தப் படைப்பு கதையா? உண்மை வரலாறா?
- கு. இலக்கியனின் “கல்மாலைப் பூக்கள்” – விகடன் 11/01/2023
ஒரு கோவில் கட்டுவதன் பின்னணியில் இருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத உழைப்பும், கலா ரசனையும், அதன் கட்டமைப்பும், ஏதோ ஆராய்ச்சி செய்யப்பட்டதுபோலக் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. கதை முடியும்போது ஒரு கோவில் கட்டப்பட்டதை ஒவ்வொரு நிலையிலும் நேரில் பார்த்ததுபோன்ற நிறைவு, நேர்த்தி! ஆசிரியரின் கடும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
சித்தாள் செங்காயி முதல் முறையாகத் தன் இளம் வயது மகள் கொடிலாவோடு கோவில் கட்டுமானத்துக்காக இன்னொரு ஊருக்கு
வருகிறாள். அங்கே கோவில் சிலைகளை அமைக்கும் திருப்பணியில் இருக்கும் மணிக்குட்டியோடு கொடிலாவுக்குப் பழக்கம் நேர்ந்து காதலாகிறது. பின் இருவரும் செங்காயியின் எதிர்ப்பால் ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். மீண்டும் மகளையும், பேத்தியையும் செங்காயி சில வருடங்கள் கழித்து இன்னொரு கோவில் கட்டுமானப் பணியில் சந்திக்கிறாள். பேத்தியின் பெயர் “செங்க மலர்” என்பதை அறிந்து மகிழ்கிறாள், அழுகிறாள்.
வேலைக்கும் சென்றுகொண்டு ஒற்றைத் தாயாக ஒரு மகளை வளர்ப்பதன் சிரமங்களைக் கதை கட்டட வேலையோடு சேர்த்தே சொல்கிறது. சித்தாள் வேலை தரும் சவால்கள் வேறு.
- ஸ்ரீதர் பாரதியின் “ஜல்லிக்கட்டு” – விகடன் 14/01/2023
ஜல்லிக்கட்டைப் பற்றிய கதை. காலப்போக்கில் அழிந்துவிடுமோ என்று கவலை கொள்ளும் பல விஷயங்களில் ஒன்று இன்றும் கிராமங்களில் உயிர்ப்புடன் இருக்கும் ஜல்லிக்கட்டு. நல்ல மழைக்குப் பின், காளி அம்மனுக்குக் காப்புக் கட்டி கீழக்குடி என்னும் ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டை கதை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது.
“ஜெயக்கொடி பெரியாம்பளை” என்கிற, இன்றைய ஆறுபது வயது, அன்றைய இளைஞனான ஜல்லிக்கட்டு வீரரின், காளைகளை அடக்கிய வீர, தீர, பராக்கிரமங்கள், அதன் பக்கக் கதைகள், தன் அடக்கப்பட்ட காளையின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத பிரசிடென்டின் சூழ்ச்சியான தாக்குதல் என்று ஒரு முழுச் சுற்று சுற்றி வருகிறது கதை.
ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க முடியாதவர்கள் இந்தக் கதையைப் படித்தால் போதும். நேரில் பார்த்த திருப்தியும், த்ரில்லும் கிடைக்கும்.
கண்முன் ஒரு திருவிழாக் கோலம் தெரியும்.
“ஜல்லிக்கட்டு நடத்தலாமா, கூடாதா?” என்கிற வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப் போவதை ஒட்டி ஜெயக்கொடியின் நினைவலைகளாக ஆரம்பிக்கும் கதை, “ஜல்லிகட்டு நடத்தலாம்” என்று தீர்ப்பு ஆவதுடன் முடிகிறது.
ஒரு நல்ல திரைப்படம் பார்த்தது போன்ற அனுபவம்.
- விக்னேஷின் “ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்” – சொல்வனம் 22/01/2023
இசை அமைப்பாளர் ரஹ்மானின் பாடல்களைப் பின்புலமாகக் கொண்டு, மழைக்குப் பின் ஒவ்வொரு வண்ணமாக வந்து முடிவில் தெரியும் வானவில்போல, ரயில் பயணிகளான பிரேமா, சத்யன் இருவருக்கும் நடுவிலான அறிமுகம் நட்பாகி, பின் காதலாவதையும்,
அது கனிவதையும் கவிதைபோல நவீன பாணியில் சொல்லும் புதிய முயற்சிக் கதை.
வழக்கமான பாணியிலிருந்து வேறுபடும் கதைகள் நம் கவனத்தை இயற்கையாகவே கவர்வது இயல்பு. இதுவும் அப்படித்தான். கூட வரும் பயணிகளான முதியவர். மற்றும், தம்பதியர் துணைக் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு பாட்டையும் பிரேமாவும், சத்யனும் அகழ்ந்து ஆராய்வதும், படைப்பாளியின் அகத்துக்குள்ளேயே நுழைந்து, அதன் பின்புலம், உணர்வுகள், நுணுக்கமான அனுபவங்கள், அதன் வேறுபட்ட பரிணாமங்களை கலாரசனையோடு சொல்வதும் ஒவ்வொரு முறையும் “அடடே! பலே!” சொல்ல வைக்கிறது. புன்னகை பூக்கவும், வியப்பில் புருவங்களைத் தூக்கவும் வைக்கிறது. கதை சொல்வதில் இது ஒரு நவீன பாணி என்பதில் சந்தேகமில்லை.
வெறும் பார்வையாளர்களாக மட்டுமே ஆரம்பத்தில் இருந்த பெரியவரும், தம்பதியும் உள்ளே வருவதும், பிரேமா, சத்யனிடம் காதல் வசப்படுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு மயிலறகு வருடுவதைப்போல, தென்றல் தலைமுதல் கால்வரை தழுவுவதைப்போல சொல்லப்பட்ட, வித்தியாசமான, ரஹ்மான் பாடலைப்போலவே இனிமையான காதல் கதை. ஒருவேளை இதற்கும்கூட நான் ஏதாவது நவீன உதாரணங்களைத் தேட வேண்டுமோ?
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் விக்னேஷ்! இன்னும்கூட நவீன உத்திகளை முயன்று தமிழ் சிறுகதை உலகத்துக்குப் புதிய பக்கங்களைக் காட்டுங்கள். உங்களால் முடியும்!
- ஆர்னிகா நாசரின் “அரசின் கடனை அடைப்போம்” – கல்கி 23/01/2023
அரசின் கடனில் தன் பங்கை அடைக்க முயலும், அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக்கூடத்தில் பணிபுரியும் கதிர்வேல் என்பவரின் கதை. உண்டியல்களை எல்லாம் உடைத்து, வீட்டைத் துடைத்துப் பணம் சேகரித்து தன் ஆலோசனைகளுடன் அவர் அரசாங்கத்துக்குப் பணம் அனுப்பி வைக்க, அதற்குப் பதிலாக, பரிசாக அரசிடமிருந்து அவரது நேர்மையை சந்தேகித்துக் கேள்விகளும், அவர்மேல் ஒழுங்கு நடவடிக்கைக்கான பரிந்துரைகளும் வருவது எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பம்.
கற்பனை ஆனாலும் மிகவும் யதார்த்தமாக நல்லவர்களின் நிலையைச் சொல்கிறது கதை. நேர்மறை மாற்றங்களை விரும்பும், முயலும் நல்லவர்களுக்குக் காத்திருக்கும் அச்சுறுத்தல்களை, சவால்களை, சோதனைகளை உருவகமாக சொல்வதாகவும் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
கதை சொன்ன விதத்தில் உலகத் தரம் தெரிகிறது. வாழ்த்துக்கள் ஆர்னிகா நாசர்! ஒரு காலத்தில் உங்கள் கதைகளும் ஆன்டன் செக்காவ்வின் கதைகள்போலக் கடல்கள் தாண்டிப் பேசப்படலாம்.
நீங்கள் ஏன் உங்கள் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது?
சில பொது ஆலோசனைகள் :
ஒரு வாசகியாக, என் வாசிப்பில், சில கதைகளில் நான் உணர்ந்த, சொல்ல நினைக்கிற சில விஷயங்கள் :
- எழுத்துப் பிழைகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும்.
- நிறுத்தக் குறியீடுகள் (punctuation) மிக முக்கியம். அதிலும் உரையாடல்களில் அது மிக அவசியம்.
- முடிந்தவரையில் உரையாடல்களில் எழுத்துத் தமிழ் இல்லாமல் பேச்சுத் தமிழ் இருப்பது நலம்.
வாசித்த எல்லாக் கதைகளுமே அருமை. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த குவிகம் இணையதளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சிவசங்கரி விமர்சனம் செய்த கதைகளை படிக்க ஆர்வமாக இருக்கிறது. வாசிக்கும் பழக்கம் மறைந்து விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.அடுத்த தலைமுறைக்கு க்கொண்டு செல்ல வேண்டிய நிலை யில் இருக்கிறோம்.
LikeLike