Om Namo Narayanaya: January 2015(மாடுகளையும், சிறுவர்களையும் ஒரு குகையில் அடைத்து வைத்துத் தன்னைச் சோதித்த பிரமனின் கர்வத்தை அடக்கிய பிறகு, கண்ணன் வழக்கம் போல மற்ற சிறுவ்ர்களோடு சேர்ந்து யமுனை நதிக்கரையில் மாடுகளை மேய்த்து வந்தான்….)

நண்பர் குழாத்தின் செயல்கள்

குயில்களைப் போலக் கூவிக்,
கூட்டமாய் நண்பர், வண்ண
மயில்களைப் போல ஆடி,
மலர்களைப் பறித்துச் சூடி,
வெயிலினில் சுற்றிப் பின்னர்
விருப்புடன் நீரில் நீந்தித்
துயில்வரும் உச்சி வேளை
சோலையில் ஓய்வெ டுத்தார்.

கோவிந்தன் பெயரைக் கூறும் வண்டு

(பூவில் தேனுண்டு மயங்கிய வண்டு,கண்ணனையே நினைத்துக் கண்ணை மூடிக் கொண்டு அவன் பெயரைச் சொல்லி ஒலியெழுப்பும்)

நறைகெழு மலர்கள் தேடி
நாடியே ஊறும் தேனை
நிறையவே களிப்பில் உண்டு
நீண்டதோர் மயலில் ஆழ்ந்து,
சிறைவிரி சின்ன வண்டு
சிந்தையில் அவனைக் கொண்டு
முறையுடன் கோவிந் தன்பேர்
முரலுமே கண்ணை மூடி!

(நறை- தேன்) (மயல்- மயக்கம்) (சிறை- சிறகு) ( முரலும்- ஒலிக்கும்)

 இயற்கை பெற்ற பேறு

(கண்ணனின் தொடர்பால் இயற்கையே மகிழ்தல்)

தாமரைக் கால்கள் பட்டுத்
தரையுமே சிலிர்த்துப் போகும்.
பூமரம் தளிர்க்கை தொட்டுப்
புண்ணியப் பேற ளிக்கும்.
காமரக் கூட்டம் புட்கள்
கான்மலை பாயும் ஆறு
கோமகன் பார்வை தம்மேல்
குலவிட மகிழ்ந்த அம்மா!

சிறுவனா? தெய்வமா?

கோகுலச் சிறுவன் போன்று
கொண்ட, தன் தோற்றம் செய்கை
ஆகிய வற்றால் கண்ணன்
அவர்க்கெலாம் எளியன் ஆனான்.
மேகமார் நிறத்து மன்னன்
வேண்டிய போது மட்டும்
சாகசம் நிகழ்த்தித் தெய்வத்
தன்மையைக் காட்டல் உண்டு!

பனைமரக் காடும் கழுதை அரக்கனும்

(அருகில் இருந்த பனைமரக் காட்டில் கழுதை உருவம் கொண்ட தேனுகாசுரன் என்ற அரக்கன் தன் கூட்டத்தோடு வாழ்ந்து வந்தான். அங்கு யாரும் வந்தால் அவன் கொன்று விடுவான். அங்குச் சென்று, சுவையான பனம்பழங்கள் கிடைக்கச் செய்யுமாறு சிறுவர்கள் கண்ணனை வேண்டுகின்றனர்)

பனைமரக் காடொன் றிங்குப்
பக்கமாய் உண்டு கண்ணா!
அனைவரும் அங்குச் சென்றால்
அரியநல் பழங்கி டைக்கும்
கனைகுரல் கழுதை யான
காய்சின அரக்கன் உள்ளான்
இனமென அரக்கர் உள்ளார்
இவர்நமைத் தாக்கிக் கொல்வார்

பனம்பழம் கேட்ட சிறுவர்கள்

சுவைமிகு பழங்கள் வேண்டும்
தொல்லையே இன்றி வேண்டும்
அவைமிக வீணாய்க் கீழே
அழுகவே வீழ லாமா?
குவைகுவை யாக மண்ணில்
குலைந்துபோய்க் கிடக்க லாமா?
செவியறும் சொற்கள் கேட்டுத்
தேன்பழம் கிடைக்கச் செய்வாய்!

 இருவரும் சென்று தேனுகாசுரனைக் கொல்லுதல்

அண்ணனும் இளையோன் தானும்
ஆவலாய்ப் பனைக்கா டுற்றார்..
விண்ணுயர் மரங்கள் ஓங்கி
விளங்கிடும் தன்மை கண்டார்
திண்ணிய மூத்தோன் அங்குத்
திறல்மிகு களிறு போன்று
மண்ணகம் அதிரச் சென்று
மரங்களை அசைக்க லானான்.

கீழே பழங்கள் விழுந்தனவே
கிளர்தெ ழுந்த சிறுவர்கள்
சூழச் சென்று தேர்நதெடுத்துச்
சுவைத்தார் மகிழ்ந்தார் ஆர்ப்பரித்தார்.
பூழி பறக்கக் குதித்துவந்த
பொல்லா அரக்கன் தேனுகனும்
ஆழி அலையாய் வால்சுழற்றி
அண்ணன் மீது பாய்ந்தனனே

( பூழி- புழுதி)

பின்னங் காலால் பலராமன்
பெரிய மார்பில் உதைத்தனனே
முன்னோன் விரைவாய்க் காலிரண்டை
முதலில் பற்றித் தூக்கினனே
சின்னப் பொம்மைக் கழுதையெனத்
திகிரி போலச் சுழற்றியபின்
கொன்னே அலறப் பனைமோதிக்
கொன்றான் தலையும் சிதறியதே.

( திகிரி- சக்கரம்) ( கொன்னே- வீணே)

இனத்துக் கழுதை அரக்கர்கள்
எகிறிக் குதித்துக் காலுயர்த்திச்
சினத்தால் மோத வந்தவுடன்
சேர்ந்தான் கண்ணன் அண்ணனுடன்.
வனத்துக் கழுதை ஒவ்வொன்றாய்
மாய்த்தார் மரத்தில் தலையுடைத்தார்.
அனைத்தும் ஒழிய அவரிருவர்
அமைதி தவழும் நிலையமைத்தார்!

(தொடரும்)