ஆத்மாநாம் நினைவுகள் – வைதீஸ்வரன்

 

(முகநூலிலிருந்து)

Image result for கவிஞர் வைதீஸ்வரன்Image result for ஆத்மாநாம்

 

1984ம் ஆண்டு கவிஞர் ஆத்மாநாம் நம்மை விட்டு அதிர்ச்சி தரும் விதமாக பிரிந்தார். அப்போது அவருக்கு பாரதியாரை விட இன்னும் குறைந்த 33 வயது. அந்தக் குறுகிய ஆயுளுக்குள் அவர் விட்டுச் சென்ற கவிதைத் தொகுப்புகளின் மூலமும் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் அவர் பரிமாறிக் கொண்ட சம்பாஷணைகளின் மூலமும் கொஞ்சம் பூடகமாகத் தெரிந்த அவருடைய குடும்ப நிலைமைகள் மூலமும் அவருடைய மானஸீக உலகம் ஒன்று நமக்குத் தட்டுப் படுகிறது.

ஏதோ விதி வசம் போல் ஆத்மாநாமிடம் நான் சில மாதங்களுக்கு மேல் பழகியதில்லை. அந்த சில மாதங்களும் அவர் தனக்குள் ஒரு கவிஞரை கண்டடைந்து கொண்டிருக்கும் பட்டுப்புழுக் காலமாக இருந்தது.

நான் திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அறைக்கு சென்று வந்த சில நாட்களில் அவர் மூலையில் அமைதியாக பணிவுடன் அங்கே நிகழும் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு தீவிர சிந்தனை வயப்பட்டவராக அமர்ந்திருப்பார்.

74க்குப் பிறகு நான் குடும்ப பிரச்னைகள்..மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தனியனாகி விட்டேன்.
“ ழ ” பத்திரிகை தொடங்கிய காலத்தில் கவிதை கேட்டு எனக்கு இரண்டொரு முறை கடிதங்கள் எழுதினார். நான் அப்போது எதுவும் எழுதாமல் இருந்தேன்.

ஆத்மாநாம் மன உபாதைகளால் தள்ளப்பட்ட வேதனைகளின் வலிகளுக்கு ஈடான துன்பங்களை நான் உடல் உபாதை காரணமாக அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். அது இங்கே அவசியமில்லாத விவரம்.

ஆத்மாநாம் படைப்புகளை மீண்டும் வாசிக்கும் நல்வாய்ப்புக் கிட்டிய போது ஒரு நல்ல இலக்கிய நண்பனை நுண்மையான தனித்தன்மையான பார்வையுள்ள படைப்பாளியின் அன்னியோன்யத்தை இழந்து விட்டதான சோகம் எனக்குள் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான்? அவன் பரிணாமத்துக்கு ஆதாரமான தூண்டுதல் அல்லது சூட்சமமான வீர்யம் எதுவாக இருக்க முடியும்?

யோசிக்கும்போது அநேக சமயங்களில் அது புறவாழ்க்கைக்கும் வாழ்க்கை பற்றிய லட்சிய தரிசனங்களால் ததும்பிக் கொண்டிருக்கும் அவன் சித்தத்துக்கும் இடையே ஏற்படுகின்ற தீராத ஒவ்வாமை தான் என்று தோன்றுகிறது. விடுதலைக்கு ஏங்கும் ஆத்மாவின் வெளிப்பாடுகளாக இந்த வாழ்வின் மீதும் மக்கள் மீதும் ஏற்படுகின்ற அக்கறை காரணமாக வெடிக்கும் தார்மீகக் கோபமாக விரக்தியாக அவன் கவி வார்த்தைகள் வெளிப்படுகின்றன

ஆத்மாநாம் கவிதைகளில் அவன் வாழ்வில் எதிர் கொண்ட நிராகரிப்புகளும் சகஜமான சமரசங்களுக்கு பணிந்து போகத் தெரியாத எளிமையான நேர்மையான மனப்பாங்கும் ஒரு ஆக்க பூர்வமான ரசாயன மாற்றமடைந்து சிறந்த நவீனக் கவிதைகளாக பரிணமிக்கிறதை நான் பார்க்கிறேன்.

“” மறுபரிசீலனை “” என்று ஒரு கவிதையில் சில வரிகள்

நான் மனிதன் தானா என்று யோசித்துக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக் கொண்ட மீன் முள்ளென 
பச்சைப் புல் வெளியில் சிக்கிக் கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப் பறக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்

******************

“ காரணம் ” என்று இன்னொரு கவிதை

எதிர்த்து வரும் அலைகளுடன்
நான் பேசுவதில்லை……..
எனக்குத் தெரியும் அதன் குணம்
பேசாமல் வழி விட்டு ஒதுங்கி விடுவேன்.
நமக்கு ஏன் ஆபத்து என்று!..

மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில் 
பலங்கொண்ட மட்டும் 
வீசி எறிவேன் கற்பாறைகளை!
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக,
**************

ஆத்மாநாமின் கவிதைகள் அனைத்துமே ஒரு அரூப நிலைக்கு உலக வாடைகளற்ற சரீரமற்ற சூழலுக்கு தள்ளி விட வேண்டுமென்ற தீராத தாகத்தை உட்கொண்ட படைப்பாக எனக்கு உணர முடிகிறது. நான் வாசித்த 100 கவிதைகளீல் அதிக பட்சமானவை உயிர் விடுதலையையே ஸ்மரிக்கின்றன.

ஆனால் எந்தக் கவிதையும் வெறும் பிரலாபக் குரலாக ஒப்பாரிகளின் நகலாக துக்கத்தை உற்சவமாக்கும் சாதுரிய ” ஆலாபனைகளாக ” முடங்கி விடாமல் கவிதைகளாக நிலைத்து நிற்கின்றன.

இன்றைய படைப்பு சூழலில் அடிக்கடி நம் கவனத்தை சீண்டுவது ஒரு கவிதை எவ்விதம் தன் கருப் பொருளான பிரச்னையை சரிவரக் கையாளாமல் தோல்வி யடைகிறது என்பது தான்!

ஒரு கலைப் படைப்புக்கும் அது கையாளும் பிரச்னைக்கும் உள்ளுணர்வால் தீர்மானிக்கப் பட்ட ஒரு பொருத்தமான தூரம் அவசியம்
அந்த பிரக்ஞை சார்ந்த இடை வெளி தான் கவிதையின் தரத்தை தெரிவிக்கிறது

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் இந்தப் பான்மையில் வெற்றி பெற்றிருக்கின்றன

ஒரு கவிஞன் ஆளுமையின் பின்னணியில் புதிய பார்வைகளை பிரதிபலிக்கும் கவிதைப் பத்திரிகையாக ” ழ ” என்ற பிரசுரத்தைத் தொடங்கி அவர் ஆற்றிய மறைமுகமான சேவை மிக முக்கியமானது. இந்த சோதனை முயற்சியில் சேர்ந்து பங்காற்றிய ஞானக்கூத்தன் ராஜகோபாலன் அழகியசிங்கர் யாவருக்குமே இப்பத்திரிகை பயன் தரக் கூடிய அனுபவமாக அமைந்ததுள்ளது..

இப்படிப்பட்ட சீரிய படைப்பாளி இத்தனை இளம் வயதில் மாய்ந்திருக்க வேண்டாம் என்று மனம் வேதனைப்படுகிறது. ஆனால் வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்பதே நாம் அனுபவத்தில் காணும் உண்மை. { Rimbaurd } என்கிற ப்ரஞ்ச் கவிஞன் 19 வயதுக்குள் அருமையான கவிதைகளைப் படைத்து விட்டு இலக்கியத்தையே துறந்து விட்டு பாக்கி ஆயுளை வேறு தேசத்தில் எடுபிடி வேலைகள் செய்து கழித்து விட்டு மாய்ந்து போனான்.

ஆத்மாநாம் ஜூலை மாதத்தில் ஒரு நாள் இறந்து போனார். அப்படி ஒரு ஜூலை மாதத்தில் என் மனம் இயல்பாக அவரைப் பற்றி நினைத்துக் கொண்டு தன்வயமாக ஒரு கவிதையும் எனக்கு எழுத வாய்த்தது 
அந்தக் கவிதையை கீழே தந்திருக்கிறேன் அவருக்கு என் அஞ்சலியுடன்

ஆத்மாவின் குரல்
————————-
கிணற்றில்
என்றோ விழுந்த என் நிலவைத்
தேடிப் போனேன்.; ஒரு நள்ளிரவில்.
நிலவு இன்னும் 
தொலைந்து விடவில்லையெனத் தெரிந்தது.
நடுங்கிய நீர் பிம்பமாய்….
குரல் கேட்டவுடன் நிலவு போல் இல்லை.
“ நீ யார் முகம் என்றேன்? “ 
“உன் முகத்திற்குள் பிறந்த முகம்! “
என வட்டமாய் ஒலித்தது
நீர் மட்டத்தின் மேல்.
சுற்றி வளைக்காதே!. சொல்லு. 
எனது ஆத்மாவா நீ? “ என்றேன்.
“ஆத்மா- நாமே ” என்றது. வளைந்து.

“அடாய்! அன்று
அலையில் தெறித்த மீன்களைப் போல்
அழகான சில கவிதைகளை 
தமிழுக்குத் தந்து விட்டு
நழுவி விட்டாயே……
இருட்டின் ஈரமான ஆழத்திற்கு.. ஏன்? என்றேன்

அது இன்னும் 
எனக்கே வெளிச்சமாகவில்லை
கவிதையின் விந்துகள் போல…”
எனக் குறும்பொலி செய்தது…
……….ழழ் ழழ ழழ்ழா………………….

**************

வைதீஸ்வரன்

One response to “ஆத்மாநாம் நினைவுகள் – வைதீஸ்வரன்

  1. அபூர்வமான கவிஞர் வைதீஸ்வரன்.

    “நிலவு இன்னும்
    தொலைந்து விடவில்லையெனத் தெரிந்தது.
    நடுங்கிய நீர் பிம்பமாய்…. ”

    என்ற வரிகளில் வரும் ‘தொலைதலும்’ ‘நடுங்குதலும்’ எவ்வளவு உயிர்ப்பானவை!

    ஆத்மா நாமை விளித்துக் கூறுவதாக

    “அடாய்! அன்று
    அலையில் தெறித்த மீன்களைப் போல்
    அழகான சில கவிதைகளை
    தமிழுக்குத் தந்து விட்டு
    நழுவி விட்டாயே……”

    என்ற வரிகளும் வழக்கமான பேத்தாஸ் ஆக இல்லாமல், “அலையில் தெறித்த மீன்களைப் போல்” என்ற அழகியல் மிக்க உவமையோடு மிளிர்வதை எவ்வாறு புகழ்வது!

    ‘வைதீஸ்வரன் கவிதைகள்’ என்ற தலைப்பில் உரை தயாரித்து வைத்திருக்கிறேன். சென்னை திரும்பியபின் மேடை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.