குவிகம் குழுமம் – குவிகம் மின்னிதழ்

குவிகம் இலக்கியவாசல், அளவளாவல், பதிப்பகம், ஒலிச்சித்திரம் , குறும் புதினம் , ஆவணப்படம்

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019

Image result for world cup tie and super bowl

‘கிரிக்கெட் உலகக்கோப்பை  2019’  ஒரு மாபெரும் திரில்லர்.

நியூசிலாந்தும் இங்கிலாந்தும் 50 ஓவர்களில்  சமமாக 240 எடுத்து ‘டை’  நிலையில் இருந்தது.

சமனை உடைக்க  சூப்பர் பவுல் வந்தது. அதன்படி இருவருக்கும் ஆளுக்கொரு ஓவர் கொடுக்கப்பட்டது.

ஆச்சரியம் என்னவென்றால் அதிலும் இரு அணிகளும் சமமாக 15 ஓட்டங்கள் எடுத்து சமநிலையில் நின்றன.

ஆட்டவிதியின்படி கடைசிப் போட்டியில் யார் அதிகமாக ‘பவுண்டரி’ எடுத்தார்களோ அவர்களுக்குத்தான் உலகக்கோப்பை !

அதன்படி இங்கிலாந்து – உலகத்துக்கு கிரிக்கெட்டைச் சொல்லிக்கொடுத்த அணி தன் சொந்த மண்ணில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது.

உலகக்கோப்பை (2019) யின்  கடைசி வினாடிகளைப் பாருங்கள் !

(அதே சமயத்தில் அதே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் அதே விறுவிறுப்புடன் திரில்லர் போலவே நடைபெற்றது. நோவக் ஜோக்கோவிச் , பெடரரை டை-பிரேக்கரில்தான்  வெற்றி  பெற முடிந்தது.  )

 

 

 

சரி, நம் இந்தியாவின் கதி என்ன?

இந்தியா பாகிஸ்தானை வென்றது !

World Cup 2019: Rohit Sharma, Virat Kohli See India To Dominant Win Over Pakistan

இந்தியா பங்களாதேஷை வென்றது.

 

World Cup: India Beat Bangladesh By 95 Runs In Warm-Up match

 

இந்தியா ஸ்ரீலங்காவை வென்றது

 

Rohit Sharma, KL Rahul Hit Tons As India Beat Sri Lanka By 7 Wickets

இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றது

 

India Beat Afghanistan To Record 50th World Cup Win

 

இந்தியா வெஸ்ட் இண்டீசை வென்றது !

Unbeaten India Knock West Indies Out Of World Cup 2019

இந்தியா ஆஸ்திரேலியாவை  வென்றது !

Image result for photos of india vs australia 2019

இந்தியா தென் ஆப்பிரிக்காவை வென்றது

இந்தியா நியூஸிலாந்து போட்டி மழையினால் ரத்தானது

India's Jasprit Bumrah celebrates taking the wicket of New Zealand's Martin Guptill 

இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியுற்றது

Shami dismissed Bairstow and Morgan in quick succession to help India fight back in the game.

அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியுற்று உலகக் கோப்பை ஆட்டத்திலிருந்து வெளியேறியது

Related image

உலகக்கோப்பை 2023க்குக் காத்திருப்போம். 

“நிராகரிக்கப் பட்டேன்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Related image

விநீத், தன் மனைவி, இரு பிள்ளைகளுடன் சேர்ந்து என்னை ஆலோசிக்க டாக்டர் சொன்னதாகத் தெரிவித்தார். பொதுவாக டாக்டர் ஒருவரை குறித்துப் பார்க்கச் சொல்வார், இந்தமுறை மனநல ஆலோசகரான என்னை நால்வரும் சேர்ந்தே பார்த்தால் நல்லது என்று டாக்டருக்குத் தோன்றியது.

விநீத்தின் மனைவி தேவகி, மூத்த மகன் சுநீத், இளையவன் புநீத். சுநீத்தைக் காண்பிக்க வந்ததாகத் தெரிவித்தார்கள். சுநீத்தின் முன்னே அவனைப்பற்றிய விவரங்களை மற்றவரிடமிருந்து கேட்டுக்கொள்வதைத் தவிர்த்தேன், குழந்தை என்றபோதிலும். பெற்றோரிடமும், குழந்தையிடமும் தனித்தனியே விவரங்களைச் சேகரிப்பது என் வழக்கம். இந்த முறை சுநீத்திடம் ஆரம்பித்தேன்.

ஏழு வயதான சுநீத், மூன்று மாதங்களாக அடிக்கடி தலைவலி என்று சொன்னதால் நரம்பியல் மருத்துவரான எங்கள் டாக்டரிடம் அவனை அழைத்து வந்திருந்தார்கள். இந்த இரண்டு மாதமாக வலி வெவ்வேறு வடிவம் எடுத்ததால் டாக்டருக்கு இதற்கு மன அளவில் காரணி இருக்கக்கூடும் என்று ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கரான என்னிடம் அனுப்பி வைத்தார்.

சுநீத், இஸ்திரி போட்ட உடை, இரு கைகளையும் விவேகானந்தர்போல் கட்டிக்கொண்டிருந்தான். அவன் வயதிற்கு ஏற்ற உற்சாகம் இல்லை. வண்டுக் கண்களில் ஏதோ சோகமோ, ஏக்கமோ(?), பரிதாபம் ததும்பி இருந்தது. தலையைக் குனிந்து உட்கார்ந்துகொண்டான். தம்பி புநீத்தையும் பெற்றோரையும், வெளியே உட்காரச்சொன்னேன்.

சுநீத் தன் நிலைமையை, அவனுக்கு வரும் வலியினைப்பற்றி விவரித்தான். அவனுடைய வீடு, பள்ளிக்கூடம், நண்பர்கள், சூழல், எனப் பலவற்றைப்பற்றிக் கேட்கக் கேட்கப் பல விவரங்கள் புரியவந்தது.

இந்த வருடம் பள்ளி ஆரம்பமாகி இரண்டு மாதங்களாக சுநீத் எதையும் வேண்டாவெறுப்பாகச் செய்வது அதிகரித்தது. அவனை வற்புறுத்தினால் மட்டும் குளியல், சாப்பிடுவது. இதுவரையில் பிடித்த கிரிக்கெட்டிலும் ஈடுபாடு குறைந்து சலிப்பு அதிகரித்தது. யாரிடமும் பழகப் பிடிக்கவில்லை, பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள். அவன் செய்வதைப் பார்ப்பவர்களுக்குச் சோர்வு இருப்பதுபோல் தோன்றும். இந்த வர்ணனை குழந்தைகளுக்குத் தோன்றும் மன அழுத்தம். இது பெரியவர்களிடம் காண்பதிலிருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும்; இதை அடையாளம் கண்டுகொள்ள எங்கள் படிப்பில் பயிற்சிகள் உண்டு.

அவனுடைய வகுப்பு ஆசிரியர் இதை அடம்பிடிப்பு எனக் கருதிக் கண்டித்து, பலவிதமான தண்டனை கொடுத்துப்பார்த்தாள், ஆனால் அப்படியே இருந்தான். பெற்றோரிடம் புகார் செய்தாள். அவர்கள் சுநீத்திற்காகப் பல டாக்டரை அணுகிய பின்பு இங்கு வந்தார்கள்.

சுநீத் என்னிடம் பேசும்பொழுது, தான் ஓரிரு தடவை புனீத்தை அடித்தது தவறு என வருந்தினான். அதனாலேயே பெற்றோர்கள் தன்னை விடுதியில் விட்டார்கள் என நம்பினான். இது, அவர்கள் தனக்குக் கொடுத்த தண்டனை என எண்ணினான். அப்படி இல்லை என்றால், எதற்காக அங்கு அனுப்பி வைத்தார் என்பது புரியவில்லை என்றான். விடுதியில் குற்ற உணர்வாகவும், வீட்டு நினைவாகவே இருப்பதாகவும், அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றும் சொன்னான்.

அவனுடைய பெற்றோரிடம் விசாரித்துப் பார்த்தேன். இருவரும் சுநீத் விடுதியில் இருக்கத் தாங்கள் எடுத்த முடிவு சரியென்று மிக உறுதியாக இருந்தார்கள்.

அப்பா வினீத்தைப் பொறுத்தவரைச் சிறுவயதில் விடுதியில் தனியாக இருப்பது தைரியத்தை வளர்க்கும் என நம்பினார். எந்த அளவிற்கு சுநீத்தை இதற்குத் தயார்செய்தார் என்பதற்குப் பதில் சொல்லஇயலவில்லை.

தேவகி கண்டிப்பிற்கு முதலிடம் வகித்தாள். சுநீத் சொல்லும் வலிகளைக் கேட்டு, இடம் கொடுத்தால் அது அவனைப் பலவீனமானவனாக ஆக்கும் என நம்பினாள். பாசத்திற்கு இடம் இல்லை என்றாள்.  ஒரு தாய் இவ்வளவு கடுமையாக இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களிடம் மேலும் பேசினேன்.

தேவகி தன்னுடைய நிறுவனத்தை மிகச் சிறந்தமுறையில் நடத்திவந்தாள். விளம்பரத் துறையில், பலர் அறியும் அளவிற்குப் பிரபலமானவள். தன்னைப்பற்றிப் பெருமைப்பட்டாள். தன் நிர்வாகம் உலக அளவில் புகழ்பெற வேண்டும் என்று கனவு கண்டாள். முழுநேரச் சிந்தனை இதில்தான்.

இருபத்தியோரு வயதிலேயே கல்யாணம் நடந்துவிட்டது. தன் கனவுகளுக்கு வினீத்தின் ஒத்துழைப்பு இருந்தது மிகவும் தெம்பூட்டியது.

கல்யாணமாகிய அதே வருடம் கர்ப்பம் ஆனாள். திடுக்கிட்டாள். தனக்கு வயது இருபத்தி இரண்டுதானே, தன் பளிங்கு உடல் வயதான தோற்றம் கொண்டுவிடும் என அஞ்சினாள். அதற்குள் குழந்தையா என வேதனைப்பட்டாள். தன் நிர்வாகக் கனவுகள், என்னவாகும்? இப்படிப் பலபல கேள்விகள்.

கருவைக் கலைக்க யோசித்து, வினீத்திடம் பகிர்ந்தாள். இருவரும் அதுவே சரியென்று முடிவெடுத்து, வினீத்தின் அம்மாவிடம் பகிர்ந்தார்கள். அவள் மறுத்துவிட்டாள். அரைமனதோடு வினீத்-தேவகி இந்த எண்ணத்தை விட்டார்கள். எதையானும் சாதிக்க முடியாமல் போனால் அது பிரசவத்தினால்தான் என உறுதியாக நினைத்து, வளரும் சிசுவை வெறுத்தார்கள்.

தேவகிக்குச் சிசுவின்மேல் கோபம், வருத்தம். சூழ்நிலையின் வற்புறுத்தல் என்பதால் கடுகளவும் பாசம்-பற்று இல்லை. கல்யாணமாகி ஐந்து வருடங்களுக்காவது கணவருடன் குடும்பம் நடத்தி, இஷ்டம்போல் எங்கெங்கோ பயணம் செய்யவேண்டும் எனப் ப்ளான் இருந்தது. இதுவெல்லாம் சுக்குநூறாகப் போன வருத்தம், வேதனை. பிறந்த பின்பும், சுநீத்தின்மேல் பெற்றோர் இருவருக்கும் பாசம் இல்லாமலேயே போய்விட்டது.

இரண்டாம் குழந்தை  புநீத், உருவானதிலிருந்து இன்றுவரை அவன்மேல் பாசம் பொழிந்தார்கள். அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார்கள். அவனை எந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல் வளர்க்கவேண்டும் என உறுதியாக இருந்தார்கள்.

ஆனால் சுநீத்தைப் பார்த்துக் கொள்வதையோ சுமையாகக் கருதினார்கள். பெரும்பாலும் அவனை வினீத்தின் பெற்றோரிடம் விட்டுவிடுவார்கள். சுநீத் மேல் பரிவு இல்லாததின் விளைவாகவே அவனை விடுதியில் விட முடிவானது.

ஐந்து வயதான புநீத்திற்கு தன் அண்ணன் மேல் அலாதிப் பிரியம். இருவரும் தனக்குத் தரப்படும் எல்லாவற்றையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்வார்கள். பெற்றோர்கள் பார்க்காமல் இருக்கும்போது அவசர அவசரமாக சுநீத்தைக் கட்டிக்கொள்வது என்பதுபோல் தன் சார்பில் புநீத் பல வகையில் அன்பைக் காட்டினான். இதுதான் சுநீத்தின் பலமானது.

அதையே என்னுடைய ஸெஷன்களுக்கு உபயோகித்துக்கொண்டேன். இந்த இரு குழந்தைகளையும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஏற்கனவே இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாசமாக இருப்பதால் இதை வலுப்படுத்த அவர்களின் பலவகையான அனுபவங்களை வைத்துப் பேசினோம். சுநீத்திற்கு இது சமாதானமாக இருந்தது.

சுநீத்தை அவன் பெற்றோர் நிராகரித்ததால், அவனுக்குள் எந்த அளவிற்குச் சோகம், வேதனை குவிந்துகிடக்கின்றது என்பது ப்ளே தெரப்பியில் (Play Therapy) தென்பட்டது.

சிறு குழந்தைகள் தன்னைப்பற்றி முழுதாகச் சொல்லக்கூடியவர்கள் அல்ல. தன் பெற்றோர், கூட இருப்பவர்களினால்பட்ட கசப்பான அனுபவங்களை இந்த ப்ளே தெரப்பீ வெளிப்படுத்த உதவும். இந்தமுறையில் கதை சொல்வது-கதை சொல்லவைப்பது, வண்ணங்கள் தீட்டுவது, வரைவது, க்ளே அல்லது சோப்பினால் பொருள், பொம்மைகள் செய்வது, எனப் பலவகைகள் உண்டு. இதை ஸெஷன்களில் செய்தோம்.

க்ளையன்ட்டின் நிலைமைக்குப் பொருத்தமாக, சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு இவற்றை உபயோகிப்பது அவசியம். இதைப் பிரயோகம் செய்யச்செய்ய குழந்தையின் அடிமனதில் சிக்கிக் கிடக்கும் விஷயங்களை மறைமுகமாக வெளியில் கொண்டுவந்து அவற்றைச் சுதாரிக்க முடியும். அதுதான் இங்கேயும் நடந்தது. சுநீத்தின் ஒவ்வொரு காயம் வெளிவர, அவற்றை அவனுக்குப் புரியும்வகையில் எடுத்துச் சொல்லிப் புரியவைக்க நெடுநாள் ஆனது.

சுதாரிக்க மேற்கொண்ட வழிமுறைகளில், சுநீத்திற்குப் பிடித்துத் தானாகத் தேர்ந்தெடுத்துச் செய்தது, தன் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் இரு வயதான மூதாட்டிகளுக்கு ஆக்ஷனுடன் கதைகளைச் சொல்வது, வீட்டுப் படிப்பைப் பக்கத்து வீட்டில் உள்ள நண்பனுடன் எழுதிப் படிப்பது. தான் வரைவதை அதே தெருவில் உள்ள யாராவது ஒருவருக்குப் பரிசாகத் தருவேன் என்றும் முடிவு எடுத்தான்.

வினீத்-தேவகி இருவரையும் ஒன்றாகச் சேர்ந்து ஸெஷனுக்கு வரச்சொன்னேன். அவர்களின் நிராகரிப்பின் பிரதிபலிப்பை, அதன் காரணிகளை, விளைவுகளைப் பல ஸெஷன்களுக்கு அலசினோம். அதைப் புரிந்துகொள்ளும்வரையில் சுநீத்துடன் சேர்ந்து அவர்கள் எதையும் செய்ய நான் பரிந்துரைக்கவில்லை.

சற்றுப் புரிந்துகொண்டு, மாற முயன்றார்கள். ஏற்பட்ட அந்த துளி மாற்றத்தின் விளைவாக சுநீத்திடம் அவன் மதிப்பெண்ணில் மாறுதல் தென்பட்டது. இதையே எடுத்து அவனுக்குப் புரியும்படி விளக்கினேன். அதாவது நம் முயற்சிகளுக்குப் பல பாதிப்புகள் ஏற்படலாம். அவை எப்படியெல்லாம் நேர்கிறது என்பதை உதாரணங்களுடன் எடுத்துச்சொல்லி, வேறு என்ன செய்திருக்கலாம் என்றும் பேசினோம்.

இப்படி நம்மால் செய்யக்கூடியவற்றைத் தடை செய்துகொள்வது நாம் தனக்கே தரும் தண்டனை என்றேன். இப்படிச் செய்வதற்குப் பதிலாக, எவ்வாறு நம் மனதைத் துளைத்துவிடும் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று பல ரோல் ப்ளே மூலமாகச்செய்ய, தான் ஒரு புது மொழியே கற்றுக்Related imageகொண்டதாக சுநீத் சொன்னான்.

சுநீத் அந்த விடுதிக்குத் திரும்பவில்லை. ஆனால் சுநீத்தின் நிலையில் வேறொருவர் இருக்கலாம், வரலாம். ஆதலால்,அந்த விடுதி ஆசிரியருக்கு அவர்களின் மனநிலை, அதன் விளைவுகள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன என்பதைப்பற்றி விளக்கினேன். வரும் அரையாண்டுப் பரீட்சை விடுமுறையின்போது

 இதைப் பற்றிய வர்க்ஷாப் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

விநீத்-தேவகி விடுதி முடிவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். தங்களால்தான் இந்தக் குழந்தைக்கு வேதனை, வலி என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்னும் வரவில்லை. சுநீத்தை இவர்களின் பிடிவாதத்திற்கு விட்டுவைக்க வினீத்தின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. பெற்றோரின் பாசம் பூஜ்யத்திலியே சஞ்சரித்துக்கொண்டு இருந்ததால் வினீத்தின் பெற்றோர் தாங்களே சுநீத்தின் பொறுப்பை எடுத்துப் பார்த்துக்கொண்டார்கள்.

  ஒருநாள் மட்டும் – செவல்குளம் செல்வராசு

  

Related image

வெகுநாட்களுக்குப் பின்

இன்று வானத்தில் மேகமூட்டம்

மகிழ்ச்சியாய் இருக்கிறது

இரவு எப்படியும் மழைவரும்

இன்றுதான் வைக்க வேண்டுமா

சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

மாலைநேரம் முடிந்து

இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது

அலுவலக மேலாளரைக் கடிந்துகொண்டே

கால்கள் நடைபோட்டன

பேருந்து நிலையம் நோக்கி

மல்லி வாங்காததற்காய்

தினமும் ஏளனமாய்க்

கடந்து செல்லும்

அதே பூக்காரரை அழைத்து

மல்லி வாங்கி பக்குவமாய்க்

கைப்பையில் மறைத்தாயிற்று

அவளுக்குப் பிடித்த தேன்மிட்டாய்

எனக்குப் பிடித்த உலர்திராட்சை

இருவருக்கும் பிடித்த இஞ்சிமிட்டாய்

மறக்காமல் வாங்கியாகிவிட்டது

வீடு திரும்பையில்

தினமும் செல்லும்

பிள்ளையார் கோவில்

இன்று ஒருநாள் மட்டும்

வேண்டாமென முடிவாயிற்று

இன்னும் வரவில்லை

வீடு செல்லும் பேருந்து

நேரம் 8.30 நெருங்கிவிட்டது

மூ(பூ)த்த மகளும், இளைய மகளும்

படிக்கும் பள்ளியில் இன்று

இன்பச் சுற்றுலா செல்கிறார்கள்

நள்ளிரவில் புறப்படுவதாய்த் திட்டம்

இரவே பள்ளிக்குச் செல்ல வேண்டுமாம்

வீட்டிற்குச் செல்ல இன்னும்

அரைமணி நேரமாகும்

இன்றிரவு மகள்கள்

வீட்டில் இருக்கமாட்டார்கள்

எல்லா ஏற்பாடுகளும் சரி

இன்று என்னவளுக்கு … …

அப்படி இருக்க வாய்ப்பில்லை

வழக்கம் போலவே காலையில்

மகள்களுக்கு அவள்தானே

விபூதி வைத்துவிட்டாள்

எப்போதாவது வீடு வரும்

உறவினர்கள் இன்று மட்டும்

வந்திருக்கக் கூடாது

மனதினுள் மௌனப் பிரார்த்தனை

சில நிமிட நடையில்

வீடடைந்துவிடலாம்

நல்ல நாவலின் கடைசி

பத்துப் பக்கங்கள் புரட்டும்

பரபரப்பு மனதில்

வாசல் நுழைந்ததும்

வண்ண மயிலாய் அவள்

கட்டியிருந்த கசங்காத புடவையில்

கசங்குகிறது மனம்

அவள் இதழ்களில் உதிரும் புன்னகை

இது வழக்கத்திலிருந்து மாறுபட்டுள்ளது

இன்று வானமும் மகிழ்ச்சியாயிருக்கிறது

இடியும் மின்னலுமாய் வெளியில் வானம்

வெகுநாட்களுக்குப் பின்

இன்று வானத்தில் மேகமூட்டம்

இன்னும் சிறிது நேரத்தில்

எப்படியும் மழைவரும் 

 


குவிகம் இலக்கியவாசல் 50

குவிகம் இலக்கிய வாசலின் ஐம்பதாவது நிகழ்வு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இயல் இசை நாடகம் என்ற தமிழின் முப்பெரும் பிரிவினைக் காப்பதுபோல

இயலுக்கு சந்தியா பதிப்பகம் நடராஜன் அவர்கள்  சிறப்புரை  ஆற்ற

இசைக்கு ரவி சுப்பிரமணியன் அவர்கள் சந்தக் கவிதைகள், பாரதி கவிதைகள் , புதுக்கவிதைகளுடன் தன் கவிதையில்  இசை வடிவில்  பாடி மக்களை வசீகரிக்க

நாடகத்திற்கு காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் தன் பாணியில் நகைச்சுவையுடன் நாடகம் நடத்துவதில் உள்ள பிரச்சினைகளைப்பற்றிப் பேசி  வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்க

விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவின் இன்னொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் நண்பர் ஆர் கே ராமநாதன் அவர்களின் ” ஒரு கோப்பை சூரியன்’ என்ற கவிதை நூலை திரு காத்தாடி ராமமூர்த்தி வெளியிட திருவாளர்கள் ரவி சுப்பிரமணியனும் சந்தியா நடராஜன் அவர்களும்  முதல்  பிரதி பெற்றுக்கொள்ள விழா களைகட்டியது.

டாக்டர் பாஸ்கரன் அவர்கள் ஆர் கேயின் கவிதை நூலுக்கு முன்னுரை வழங்கியது மட்டுமல்லாமல்  அந்த நூலைப்பற்றியும் சிறப்பாகப் பேசி அனைவரிடமும் அந்த நூலைப்பற்றிய ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார்.

பானுமதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

சதுர்புஜன் அவர்கள் குவிகம்பற்றி ஒரு கவிதை படைத்து அதை மேடையில் படித்து  நம்மை எல்லாம் பாராட்டு மழையில் நனையவைத்தார்.

குவிகம் 50க்குச் சிகரம் வைத்ததுபோல ராஜ் வெப் வீடியோ நண்பர்கள் வந்து விழா முழுவதையும் படம்பிடித்து அதனை அரைமணி அளவில் தொகுத்து ராஜ் வெப் வீடியோவில் வெளியிட்டார்கள்.

அரங்கு நிறைந்த நிகழ்வாக கே கே நகர் டிஸ்கவரி  பேலஸ் புத்தக நிலையம் அன்று காட்சி அளித்தது.

குவிகத்தின் சார்பில்  அனைவருக்கும் நன்றி பாராட்டிப் பேசினார் விழா நாயகனான ஆர் கே !

 

 

திரைக்கவிதை – வாலி- படகோட்டி

Image result for "தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்Image result for "தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்

உலகத்தின் தூக்கம் கலையாதோ ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ  ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ  ..

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை  (தரைமேல்)

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்  (தரைமேல்)

படம் : படகோட்டி
இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : வாலி
குரல் : T.M.சௌந்தரராஜன்

 

எமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்


( சில தவிர்க்க முடியாத காரணத்தால் சென்ற மாதம் எமபுரிப்பட்டணம் வெளிவரவில்லை. அதற்காக மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறோம்.)

 

(முதல் பகுதியின் இரண்டாம் பாகம்)

Related imageகாலத்தை நிர்ணயிக்கும் சூரிய மண்டலத்திலும் காலம் கடந்து சென்றுகொண்டே இருக்கும் என்பது நியதி.

சூரியனை ஒரு நியதிக்குள் கட்டிப்போட முடியுமா ? அகில உலகத்திற்கும் காலத்தை நிர்ணயிக்கிற சூரியதேவனை நியதிகள் கட்டுப்படுத்துமா? சூரியதேவனின் பெருமைகள் என்ன?

வசிஷ்டர் வாயாலே சொன்ன வார்த்தைகளைப் பார்ப்போமா?

“உதிக்கும் போதே உலகைத் தம் கிரணங்களால்  இருள் இல்லாததாகச் செய்கிறாரோ அவரை விட உயர்ந்தவர் வேறு ஒன்று இருக்க முடியுமோ?

எவரை  எல்லாரும் பிரத்யக்ஷமாக நேரில் பார்க்கிறார்களோ அவரே தேவர்களுக்கும் மேலானவர்.

ஆதியும் அந்தமும் மட்டுமல்ல அழிவும் இல்லாதவர் அவர்.

மூவுலங்களையும் தன் கிரணங்களால் பிரகாசப்படுத்தி சஞ்சாரம் செய்து வருகிறவர்.

சர்வ ஜகத்திற்கும் அவரே அதிபதி.

சகல தர்மங்களுக்கும் சாட்சியாக அவரே விளங்குகின்றார்.

அவரே சகல ஜீவங்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறார்.

அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் ஆதித்தன் என்ற அவரையே வந்தடைகின்றன.

அவரிடமிருந்து மழை உண்டாகிறது. மழையிலிருந்து அன்னம் விருத்தியாகிறது. அன்னத்தால் பிரஜைகள் ஜீவிக்கிறார்கள்.  சூரியனிடமிருந்து உண்டான இந்த உலகம் அவரிடமே அடங்குகிறது.

க்ஷணம் , முகூர்த்தம், பகல், இரவு, பக்ஷம், மாதம், ருது, வருஷம்   என்ற காலப்பிரமாணங்கள் எல்லாம் அவரிடமிருந்தே உண்டாகின்றன. காலத்திற்கு சூரியனே காரணமாக இருக்கின்றார்.

சூரியனுக்குச் சாமான்யமாகப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு.ஆதித்யன், சவிதா, சூரியன், மிஹிரன், ஆர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, திவாகரன், ரவி  என்பவையே அவை. விஷேஷமானப் பெயர்களும் உண்டு. விஷ்ணு, தாதா, பாகான், பூசா, மித்திரன் , இந்திரன், வருணன், எமன், விவஸ்வான், அம்ஸுமான், த்வஷ்டா , பர்ஜன்யன் என்பவையே அவை. இந்த விஷேஷப் பெயர்களிலேயே அவர் ஒவ்வொரு மாதஇத்திலும் ஒருவராக இருந்து உதயத்தையும் அஸ்தமனத்தையும் செய்கிறார்.

சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று காலங்களிலும் இருந்து அக்காரியங்களைத் தாமே செய்வதால் அவருக்கு  த்ரைகாலர் என்ற பெயரும் உண்டு.” ( * விஷ்ணு புராணம்)

இப்படிக் காலத்திற்கே காரணமாக இருந்தாலும் காலத்திற்கு அவரும் கட்டுப்படவேண்டும் என்பதே அவரே வகுத்த நியதி.

அந்தக் காலம் தந்த மாற்றத்தை சூரியன் மகிழ்ச்சியாக உணர ஆரம்பித்ததே ஸந்த்யாவின் வருகைக்குப் பிறகே. அவளுடன் இருக்கும் ஒவ்வொரு க்ஷணமும் தான் வேகமாகப் ஃப்;ஓவது போன்ற உணர்வினால் காலம் விரைவாகப் போகிறதோ என்ற எண்ணம் அவனுக்கு எப்பொழுதும் உண்டாகும். அவளுடன் இருக்கும் காலப் பொழுதை என் அப்படியே நிறுத்தி வைத்துவிடக் கூடாது? என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதுண்டு.  ‘தாம்  தானே காலத்துக்கு அதிபதி. தம்மால் அப்படிச் செய்ய முடியாதா?’  என்றும் அவன் பலமுறை யோசிப்பதுண்டு.  அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஸந்த்யாவிடமிருந்து தாற்காலிகமாகப் பிரியும் ஒவ்வொரு பொழுதும் அவனுக்கு அவன்  அமைத்த காலத்தின் கொடுமையை அவனையே  உணர வைத்தது.

இப்பொழுதும் ஸந்த்யாவின் நினைவில் தன்னைத் திளைத்து அருணன் இயக்கும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியதேவன் அகில உலகங்களையும் சஞ்சாரம் செய்துகொண்டிருந்தான்.  அருணனும் தன் தலைவன் எண்ணப்படி அழகாகத் தேரைச் செலுத்தி உலகில் உள்ள எல்லா இடங்களிலும் சூரியனின் கிரணங்கள் படும்படி செய்து கொண்டிருந்தான்.

 

அப்போது திடீரென்று தனக்கு மிக அருகில் ஒரு பறவை பறந்து வருவதைப் பார்த்துத் திடுக்கிட்டான். சூரியன் பாதையில் யாரும் குறுக்கிடக்கூடாது. குறுக்கிடவும் முடியாது. யாராக இருந்தாலும் சூரியனின் பிரபாவத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். தன் பயணத்திற்கு எந்தவித இடையூறும் இருக்காது என்பது அருணனுக்கு நான்கு தெரியும். ஆனால் அந்தப் பறவை சூரியனின் சுடு கிரணங்களைகிக் கொஞ்சமும்  லட்சியம் செய்யாது இன்னும் அருகில் மிக வேகமாகஃப் பறந்து வர ஆரம்பித்ததைப்  பார்த்த அருணன் அந்தப் பறவையைப் பற்றிய கவலையை விட்டுவிட்டுத் தங்கள் பயணத்தில் தடை ஏற்படுமோ என்று கவலைப்பட ஆரம்பித்தான்.

Image result for அருணன் + கருடன்

செம்மண் நிற  இறக்கைகளைக் கொண்டு  நடுப்பகுதியில் வெண்மையாக இருக்கும் அப்பறவை தன் பெரிய திருவடிகளால் தன்னயோ ரதத்தையோ தாக்க முற்பட்டால் என்னாவது என்ற கவலை அவனுக்கு முதன்முறையாக உதிக்க ஆரம்பித்தது.

சூரியதேவனோ எதையும் யோசிக்கும் எண்ணமில்லாதவனாக மயக்க நிலையில் இருந்தான். காலையில் ஸந்த்யா கூறிய வார்த்தைகள் அவன் காதிலேயே ஒலித்துக் கொண்டிருந்தன. ” நேரம் மிக அருகில் வந்துவிட்டது ” . இதோ இன்னும் சற்று நேரத்தில் அவளைச் சந்திப்போம் என்ற உல்லாச உணர்வு அவன் கிரணங்களில் பிரதிபலித்தது. அவன் கண்கள் அரைவாசி மூடி அதனால் உலகில் சில பகுதிகளுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்னதாகவே இருள் வர ஆரம்பித்தது.

இதனால் அருணனின் பணி இன்னும் கடினமாகியது. தேரைச் செலுத்தவேண்டும். சூரியதேவனின் மயக்க நிலையைக் கலைக்காமல் தேரைச் செலுத்தவேண்டும். வருகின்ற ஆபத்தையும் சமாளிக்கவேண்டும். இரு கால்களும் இல்லாத அருணன் ஒரே தேர்ச் சக்கரத்தைக் கொண்ட சூரியனின் ஏழு குதிரையில் பூட்டிய ரதத்தைச்  செலுத்துவதில் மிகவும் திறமைசாலி.  ஆனால் இதுவரை அவனுடைய பாதையில் யாரும் குறுக்கிட்டதாகச் சரித்திரம் கிடையாது. இப்போது வரும் அந்தப் பறவை ஏதாவது அசுரனாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சூரியனின் பகைவனான ராகுவால்  ஏவப்பட்ட ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தான்.

அதைத் தாக்க எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்று அருணன் ஒரு கணம் யோசித்தான். அது தூரத்தில் இருக்கும் போதே எரி  அம்பு விட்டு அதை அழித்து விடலாமா என்று நினைத்தான்.  யார் என்று தெரியாமல் அதனைக் கொல்ல அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. ‘சரி, அருகில் வரட்டும்.யார் அது என்று தெரிந்துகொண்டு எதிரியாக இருந்தால் நெருப்பாற்றை அதன் மீது ஏவி உருத் தெரியாமல் எரித்துவிடலாம்’ என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான்.

அந்தப் பறவை அருகில் வரும் சத்தம் சூரியனால் ஏற்படுத்தப்பட்ட இடியைவிடப் பயங்கரமாக ஒலித்தது. ஆனால் அது சூரியதேவனின் காதுகளில் விழவில்லை. காலையில் ஸந்த்யா சொன்ன வார்த்தைகளை அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.  கிட்டத்தட்ட மயங்கிய நிலையில் இருந்தான்.

ஆனால் அருணன் சற்றும்  எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது. சிறியதாக வந்த அந்தப் பறவை திடீரென்று ரதத்தைவிடப் பெரிய வடிவம் எடுக்க முடியும் என்று அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவன் பிரயோகித்த நெருப்பு  ஆற்றையும் அது பன்னீர் தெளித்து போல உதறிவிட்டதைக் கண்ட அருணன் ஆச்சரியத்தில் மூழ்கினான். எப்போதும் பின்வாங்காத சூர்யாஸ்திரத்தை பிரயோகிக்க வேண்டியதுதான் என்று புறப்பட்டவன் அந்தப் பறவையின் கால்களைக் கண்டதும் கோபத்திற்குப் பதில் சந்தோஷத்தில் திளைத்தான்.

“அடேடே ! பெரிய திருவடியா? நீயா என்னை பயமுறுத்தினாய்? உன் குறும்பு இன்னும் உன்னைவிட்டுப் போகவில்லையா? ” என்று வினவினான்.

“ஆம் அண்ணா! தங்கள் தம்பி திருவடி தான் வந்துள்ளேன். நீங்கள் என்னை பெரிய திருவடி என்று சொல்லலாமா? “

” சொன்னாலும் சொல்லாவிட்டாலும்  நீ பெரிய திருவடிதான். மகாவிஷ்ணுவிற்கே வாகனமாகும் பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறதே! அது சரி! ஏன் இப்படி தலை தெரிக்க பறந்து வருகிறாய்? ஏதெனும் முக்கியச் சேதி யாருக்காவது கொண்டு செல்கிறாயா, என்ன?”

“ஆம் அண்ணா! உன் தலைவருக்குத் தான் நல்ல சேதி கொண்டு வந்துள்ளேன். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. சந்த்யாதேவி அவரிடம் தெரிவிக்கும்படி  கூறினார்கள்” என்றான்.

“ஆஹா! காலையிலிருந்து சூரியதேவர் ‘ நேரம் வந்துவிட்டது’ என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார். உண்மையில் அனைவரும் நல்ல நேரம் வந்துவிட்டது. இந்த நல்ல செய்தியை நீயே அவரிடம் சொல்வாயாக!” என்றான் அருணன்.

காலத்தின் தூதுவனாக பெரிய திருவடி என்றழைக்கப்பட்ட கருடாழ்வார் சூரியதேவனின் மயக்கத்தைக் கலைத்து  அவனுக்கு மூன்று குழந்தகள் பிறந்த செய்தியைக் கூறினான்.
சூரியதேவன் தான் வாழ்நாளில் இதுவரை அனுபவிக்காத சந்தோஷத்தை அடைந்தான்.
(தொடரும்)
இரண்டாம் பகுதி
Image result for bharathi baskar speech 2019

தலைவர் அவர்களே! இங்கு குழுமியிருக்கும் நான் வணங்கும் தெய்வங்களே! உங்கள் அனைவரையும் தொழுது வணங்கி என் தலைப்பிற்கான வாதத்தை உங்கள்முன் பணிவன்போடு சமர்ப்பிக்கிறேன்.

முதலில் இந்த எமபுரிப்பட்டணத்திற்கு வந்து பேசவேண்டும் என்று கேட்டபோது நமது ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்ற எண்ணத்திற்கு வந்தேன். தலைவர் அவர்களும் , ராஜா அவர்களும் லியோனி அவர்களும் வருகிறார்கள் என்று சொன்ன பிறகு கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியாக அவர்கள் ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்தியபோது என்னால் மறுக்க முடியவில்லை. நீ அங்கு வந்தால் உன் முன்னோர்களை மட்டுமல்ல நம்மை விட்டு மறைந்து சென்ற மேதைகள் – காந்தியடிகள், காமராஜர் ஐயா, அண்ணா அவர்கள், எம் ஜி ஆர் அவர்கள், கருணாநிதி அவர்கள், ஜெயலலிதா அவர்கள் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறினார்கள்.

எனக்கு ஜெயலலிதா அவர்களிடம் பேசி அவர்கள் இறப்பிற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை ! அந்த ஒரு காரணத்திற்காக நான் இங்கு வர ஒப்புக்கொண்டேன்.

அதைவிட ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது. நான் ஒரு படைப்பாற்றல் பெண்மணி. படைப்பும் பெண்மையும் எப்போதும் இணைந்தே இருக்கும். ஐயா கூறியதுபோல சோற்றை ஆக்குபவளும் பெண்தான். பிள்ளகளை ஆக்கித் தருபவளும் பெண்ணே! நல்ல சமுதாயத்தை உருவாக்கித்தருபவளும் பெண்ணே! இப்படி ஆக்கலுக்கு உருவகமாக இருக்கும் பெண்ணின் பிரதிநிதியான நானே இங்கு பேச மறுத்தல் நியாயமன்று என்று உணர்ந்ததால் இங்கு வர ஒப்புக்கொண்டேன்.

ஆக்கல், காத்தல், அழித்தல் இவை மூன்றில் எது சிறந்தது என்பது இந்த விவாதமேடையின் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி. அந்தக் கேள்வியை ஒட்டி நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஆக்கல் என்ற ஒன்று இல்லாவிட்டால் இவர்கள் எதைக் காப்பார்கள்? எதை அழிப்பார்கள்?
ஒரு ஆணியும் பிடுங்க முடியாதல்லவா?

அதனால் தான் உறுதியிட்டுக் கூறுகிறேன். ஆக்கலிற் சிறந்தது வேறொன்றும் இல்லை.

இன்னொன்று சொல்கிறேன் கேளுங்கள்! நம் எல்லோருக்கும் தெரிந்தவர் தெய்வப் புலவர் கம்பர் அவர்கள். படைப்பாற்றல் மிக்கவர். அவரது கம்பராமாயணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று எல்லோராலும் போற்றப்படுகிறது. இருந்தும் சிலர் கம்பராமாயணத்தைப் பிடிக்காமல் அதை எரித்து அழிக்கவும் முற்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள்! இவர்களில் யார் சிறந்தவர்? இராமாயணத்தை எழுதிய கம்பரா? அல்லது அதை இவ்வளவு காலம் காட்டிக் காத்த மக்களா? அல்லது அதை எரிக்க முற்பட்ட முற்போக்குச் சிங்கங்களா? கம்பர் தான் சிறந்தவர் என்பதை நிரூபணம் செய்யவேண்டுமா? அதற்கு ஒரு பட்டி மன்றமோ விவாத மேடையோ தேவையா என்ன ?

எதையும் ஆக்குபவன்தான் உயர்ந்தவன்.

மண்ணை எடுத்து சட்டி செய்கிறானே குயவன் அவன்தான் உயர்ந்தவன். வாங்கி அடுக்குபவன் அல்ல. உடைத்து நொறுக்குபவனும் அல்ல.

கல்லை எடுத்து சிலைகள் வடிக்கும் சிற்பி

தூரிகை கொண்டு ஓவியம் வரையும் ஓவியன்

மரத்தை அறுத்து மாளிகை கட்டும் தச்சன்

பொன்னை உருக்கி நகைகள் செய்யும் கம்மான்

இரும்பை வளைத்து ஆயுதம் செய்யும் கொல்லன்

ஏரை ஓட்டி நெல்லை ஆக்கும் உழவன்

அந்த நெல்லை சமைத்து சோற்றை ஆக்கும் தாய்

மகனைப் பள்ளியில் சேர்க்கும் தந்தை

பாடம் சொல்லித் தரும் ஆசான்

தொழிலைத் துவங்க முதலைப் போடும் முதலாளி

உழைப்பைத் தந்து உற்பத்தி பெருக்கும் தொழிலாளி

இப்படி அத்தனை பேரும் ஆக்கல் கதையின் நாயகர்கள். மற்றவர்கள் எல்லோரும் துணைக் கதாநாயகர்கள் காமெடியன்கள் அல்லது வில்லன்கள்.

ஆக்கள் நாயகன் தான் ஆக்சன் நாயகன் . ரஜினி மாதிரி சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் எல்லோரும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, ராதாரவி ,நம்பியார் போன்றவர்கள்.

இன்னொரு உதாரணத்திற்கு வருவோம்.

ஒரு மாநிலத்திற்கு முதல்வர் முக்கியமா? கவர்னர் முக்கியமா ? எதிர்கட்சித் தலைவர் முக்கியமா?

குறுக்கிட்ட நடுவர் சாலமன் பாப்பையா ,” பாரதி அம்மா இங்கு வர்ரதுக்குமுன் புதுச்சேரி பக்கம் போய்விட்டு வந்தீகளா?” என்று வினவினார்.

நடுவர் அவர்களே! புதுச்சேரி சென்று வந்தது உண்மைதான். அங்கே அரவிந்தர் என்ற ஆக்கல் புருஷரைத் தரிசிக்கச் சென்றிருந்தேன்.

தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். முதல்வர் தான் ஒரு மாநிலத்துக்கு முக்கியம் என்பதை ரூம்ஸ் போட்டு மீம்ஸ் போட்டுத் திரியும் இளைஞர்களூம், வாட்ஸ் அப்பில் மூழ்கிக் கிடக்கும் மூத்தகுடிகளும், பேஸ்புக், ட்விட்டர் இவற்றில் மூழ்கியிருக்கும் நெட்டிஜன்களும் சீரியல்களில் தத்தளிக்கும் பெண்மணிகளும் ஒப்புக்கொள்வர்.

அதைப்போலத்தான் ஆக்கலே   சிறந்தது என்று கூறி வாய்ப்பளித்த எமபுரிப்பட்டணவாசிகளுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்

(தொடரும்)

30 நாட்களில் முன்னேறுவது எப்படி?

Related image

“முப்பது நாட்களில் நான் எப்படி முன்னேறுவது ? “

என்ற கேள்விக்கு சமூக வலைத்தளத்திலிருந்து கிடைத்த 21 அபூர்வ யோசனைகள் :

நாமும் முயலலாமே!

 

1 உங்கள் பேச்சில்  உள்ள விஷத்தன்மையை எடுத்துவிடுங்கள்! எதிர்மறை வார்த்தைப் பிரயோகத்தைக் குறைத்துவிடுங்கள்! எப்போதும் அமைதியாக  இருங்கள்!

2. தினமும் படியுங்கள்! எதுவாக இருந்தாலும் சரி! உங்களுக்குப் பிடித்ததாக அது  இருக்கட்டும்!

3. பெற்றோர்களிடம் கோபமாகப்  பேசமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்! எந்தச்   சூழ்நிலையிலும் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல.

4, உங்களைச் சுற்றி உள்ளவர்களைக் கூர்ந்து கவனியுங்கள்! அவர்களிடமிருந்து நல்ல எண்ணங்களைக் கிரகித்துக்கொள்ளுங்கள்!

5. தினமும் சிறிதுநேரம் இயற்கையுடன் செலவழியுங்கள்!

6. அனாதையாய்த் திரியும் விலங்குகளுக்கு உணவளியுங்கள்! பசித்தவருக்குப் புசிக்கக்கொடுப்பது மனநிறைவைக் கொடுக்கும்!

7. ‘தான்’ ‘நான்’ ‘எனக்கு’ என்ற எண்ணத்தை உதறுங்கள்! புரிதல்தான் வாழ்க்கை! அதைக் கற்றுக்கொள்ளுங்கள் !

8. சந்தேகத்தை நிவர்த்தி செய்யத் தயங்காதீர்கள் ! ( கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடம் முட்டாளாகிறான். கேட்காதவன் வாழ்நாள் முழுதும் முட்டாளாயிருக்கிறான்.  )

9. எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள்!அது தியானத்திற்குச் சமானம். 

10. எதிர்மறையான எண்ணங்களை விதைப்பவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்! ஆனால் அவர்களை வெறுக்காதீர்கள்! 

11. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் உங்கள் திறமை உங்கள் கண்களுக்குப் புலப்படாமால் போகும்..

12. முயற்சி செய்யாமல் இருப்பதுதான் வாழ்வின் மிகப்பெரிய தோல்வி. 

13. எப்போதும் குறைகூறாதீர்கள். ( காலில்  அணிய செருப்பில்லையே என்ற என் புலம்பல் காலே இல்லாதவனைப் பார்த்ததும்தான் நின்றது) 

14. ஒவ்வொருநாளும் திட்டமிடுங்கள்! அதில் செலவழியும் மணித்துளிகள் பல நாட்களைக் காப்பாற்றும். 

15. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் அமைதியாக உங்களுக்காக உங்களுடன் செலவிடுங்கள்! அது புரியும் மாயத்தை உணருங்கள்!

16. நல்ல ஆரோக்கியமான உடம்பில்தான் ஆரோக்கியமான மனமும் குடியிருக்கும். அதைக் குப்பை கூளத்தால் நிரப்பாதீர்கள். 

17. தினமும் 8 -10 குவளை நீர் அருந்துங்கள்! 

18. தினமும் ஒரு வேளையாவ்து உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்!

19. உங்கள் உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் . ” உடல் நலம் நம்பிக்கையைக் கொடுக்கும்;  நம்பிக்கை மற்ற எல்லாவற்றையும் கொடுக்கும். 

20. வாழ்க்கை என்பது மிகச் சிறியது. மிகச் சாதாரணமானது. அதைக் குழப்பிவிடாதீர்கள். சிரிக்க மறந்துவிடாதீர்கள். 

21. இந்தக் குறிப்பை தினமும் ஒருமுறையாவது படியுங்கள்! 

 

சரித்திரம் பேசுகிறது – யாரோ

ஹர்ஷவர்த்தனன்

Image result for emperor harshavardhan

சரித்திரத்தின் ஏடுகளில் பலர் நாயகனாக இருப்பர்- சிலர் சூப்பர் ஸ்டார்கள் .

அலெக்சாண்டர், சந்திரகுப்த மௌரியர், அசோகர் – இப்படி சூப்பர் ஸ்டார்கள்.

அந்த வரிசையில் இதோ ஒரு சூப்பர் ஸ்டார் -‘ஹர்ஷன்’!

பின்னாளில் முகம்மதியப் பேரரசர் பெரும்பாலான இந்தியாவை ஆண்டனர்.

ஆனால்..கடைசியான இந்தியாவை ஆண்ட (முகம்மதியர் அல்லாத) பேரரசன் ‘ஹர்ஷன்’!

 

கி பி 600:

இந்தியா அன்று சிதறிக்கிடந்தது..

மாபெரும் மன்னர்கள் : வர்த்தனர்கள்- சாளுக்கியர்-பல்லவர்-பாண்டியர் – என்று பலர் இருந்தனர்.

தவிர மாளவம், வங்காள கவுடா, காமரூபா அரசர்களும் சக்தி கொண்டு விளங்கினர்.

இவர்களுக்குள் அடி-தடி-ரத்தம்-வெற்றி-தோல்வி.

இந்தியா இரத்த வெள்ளத்தில் மிதந்தது..

அந்த காலத்தில்..

குப்தர்களின் படைத் தலைவர்களாக புஷ்யபூதிகள் பணியாற்றி வந்தனர்.

அவர்கள் தங்களை வர்த்தனர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்.

புஷ்யபூதி வம்சத்தின் முதல் முக்கிய அரசர் பிரபாகர வர்த்தனர்.

டெல்லிக்கு வடக்கேயிருந்த தானேஸ்வரம் அவரது தலைநகரம்.

ஒரு சினிமாவுக்குத் தேவையான மூலப்பொருள் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

இந்த சினிமாவின் முன்கதை சொல்வோம்:

முதலில் க்ரெடிட்ஸ்:

 

கதை: சரித்திரம்

திரைக்கதை : யுவான் சுவாங்

வசனம்: கவிஞர் பாணன்

இயக்கம்: ஹர்ஷன்

தயாரிப்பு: யாரோ

 

அக்காலத்தில்…

மௌகாரி நாட்டில் –கன்னோசியைத் தலைநகராகக்கொண்டு -அவந்தி வர்மன் அரசாண்டிருந்தான்.

மாளவ நாட்டில் – மஹாசேனகுப்தன் என்ற ஓர் அரசன்.

இந்த இரு நாடுகளுக்கும் பெரும் பகை.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போல..

மகதத்தை விழுங்க இரு நாடுகளும் துடித்திருந்தது!

‘அரசியல் திருமணங்கள்’ பொதுவாகவே அரசியல் கூட்டணி அமைய முக்கிய காரணங்களாக அமைந்தன …

இந்தப் பகைக்கு நடுவில் பிரபாக வர்த்தனன் பிறந்தான்…சக்தி கொண்டு வளர்ந்தான்.

தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னன் ஆனான்.

மாளவம், மௌகாரி – இரு மன்னர்களும் – பிரபாக வர்த்தனனைச் சேர்த்துக்கொண்டால் பலம் கிடைக்கும் என்று உணர்ந்தனர்.

இந்த சதுரங்க ஆட்டத்தில் – மாளவத்தில் மஹாசேனகுப்தன் – முதல் காயை நகர்த்தினான்.

தனது மகளை பிரபாகவர்த்தனனுக்கு மணமுடித்தான்.

அவந்தி வர்மன் – இந்த ஆட்டத்தில் தோற்றுப்போனான்.

திருப்பங்கள் நிகழ்ந்தது.

மாளவத்தின் மஹாசேனகுப்தனுடைய உறவினன் ஒருவன் மஹாசேனகுப்தனது மகன்கள் (குமார், மாதவா) இருவரையும் துரத்திவிட்டு அவனது அரியணையைப் பறித்துக்கொண்டான்.

அவன் நமது கதையில் முதல் வில்லன்..

தேவகுப்தன்..

மஹாசேனகுப்தனது மகன்கள் தானேஷ்வரம் சென்று – பிரபாக வர்த்தனனிடம் அடைக்கலம் புகுந்தனர்.

மைத்துனர்களை தன்னுடன் வைத்துக்கொண்டாலும்… மாளவத்தின் அரியணையில் அவர்களை ஏற்ற முடியவில்லை.

தேவகுப்தன் பலத்தைப் பெருக்கியிருந்தான்.

மௌகாரியைக் கைப்பற்றுவது அவனது முதல் குறிக்கோளாக இருந்தது.

 

மௌகாரி மன்னன் அவந்தி வர்மன்- சதுரங்கத்தின் அடுத்த காயை நகர்த்தினான்.

மெல்ல மெல்ல .. பிரபாகவர்த்தனனை சிநேகம் செய்து கொண்டான்.

தனது மகன் கிரகவர்மனை தானேஸ்வரத்திற்கு அனுப்பி… பிரபாகவர்த்தனன் குடும்பத்துடன் ‘பழக’ விட்டான்.

அவனும் ‘வாங்க பழகலாம்’ – என்றான்.

பழக்கம் திருமணத்தில் முடிந்தது.

பிரபாகவர்த்தனனின் மூத்த மகள் இளவரசி ‘ராஜ்யஸ்ரீ’ – கிரகவர்மன் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

கிரகவர்மன் மௌகாரி மன்னனாக முடி சூடினான்.

ராஜ்யஸ்ரீ மணமகளாக கன்னோசி (மௌகாரியின் தலைநகரம்) சென்றாள்.

சிவ-விஷ்ணு பக்தையாக வளர்ந்திருந்த ராஜ்யஸ்ரீ – கன்னோசியில் புத்த மதத்தினால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்தைத் தழுவினாள்.

மாளவ – மௌகாரி பகை.. இப்ப வேற லெவலுக்குப் போனது!

அரசியல் தராசில்..மௌகாரியின் சற்றே எடை கூடியது.

தேவகுப்தன் சரியான நேரத்திற்குக் காத்திருந்தான்.

வங்காளத்தின் ‘கவுடா’ ராஜ்யத்தின் அரசன் ‘சசாங்கன்’ நமது கதையின் முக்கிய வில்லன்.

தேவகுப்தன்-சசாங்கன் – ரகசியக் கூட்டணி அமைந்தது.

அரசியல் கூட்டணிகள்.. அன்றும் –இன்றும்- என்றும் தேவைப்படுகிறது.

அதுவும் ரகசியமாக இருக்கும்போது – சக்தி வாய்ந்து- சதிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது.

தேவகுப்தனின் நேரம் வந்தது.

தானேஸ்வரம்:

பிரபாகவர்த்தனன் வயோதிகனான்.

வயோதிகத்துக்கு நண்பன் வியாதி தானே!

வியாதி அவனை வரித்தது..

மரணம் அவனது துரத்தியது..

அவனைத் தின்னத் துடித்தது..

மூத்த மகன் ராஜ்யவர்த்தனன் – மாவீரன்..வல்லவன்.. நல்லவன்..

ஹூணர்களது எச்சம் …மீண்டும் துளிர் விடத்தொடங்கியிருந்தது கண்டு – அதை முழுதாக அழிக்க ராஜ்யவர்த்தனன் படையெடுத்துச் சென்றிருந்தான்..

இளைய மகன் ஹர்ஷன் …

பதினாறு வயது நிரம்பிய இளைஞன்…

போர்க்கலைகளை நன்கறிந்தவன்.

கவிஞன் …

திடமான மனமுள்ளவன்..

அருகிருந்த காட்டில் ‘வேட்டைக்கு’ சென்றிருந்தான்!

பிரபாகவர்த்தனன் உடல்நிலை கவலைக்கிடம் ஆனது.

கவிஞர் பாணன் – கவிதை மட்டிலுமல்லாது அரசியலிலும் சக்தி வாய்ந்தவன்.

அதிவேக குதிரை வீரன் ஒருவனை அனுப்பி…ஹர்ஷனை வரவழைக்க ஏற்பாடு செய்தான்.

பிரபாகவர்த்தனனுக்கு ஹர்ஷன் மேல் அலாதிப் பிரியம்.

“மகனே ஹர்ஷா! உன் அண்ணன் ராஜ்ய வர்த்தனன் … ராஜ்ஜியம் ஆளப்பிறந்தவன்.

அவன் ரொம்ப நல்லவன்..அரசன் அவ்வளவு நல்லவனாக இருந்தால் ஆள்வது கஷ்டம்..”

மூச்சு வாங்கியது.

மேலும் பேசினான்.

“நீ அரசனானால் நமது வர்த்தன ராஜ்ஜியம் சாம்ராஜ்யமாகும் என நம்புகிறேன்”.

ஹர்ஷன் உடன் மறுத்தான்.

“தந்தையே … அண்ணன் ஆளப் பிறந்தவன்.. அவனது வீரத்திற்கு இணை யாருமில்லை.. அவன் தான் அரசனாவான்.. நான் என்றும் அவனுக்கு உதவுவேன்”.

மன்னன் கண்ணீர் விட்டான்.

‘மகனே! நீ வாழ்க’- அது அவனது கடைசி வார்த்தைகள்..

வாசலில் நின்ற காலன் உள்ளே நுழைந்து -பிரபாகவர்த்தனன் உயிரைக் கவர்ந்து சென்றான்..

தானேஸ்வரம் கண்ணீரில் மிதந்தது.

அதே நாள்..

பிரபாகவர்த்தனன் காலமான செய்தி காற்று வேகத்தில் மாளவ மன்னன் தேவகுப்தனை எட்டியது.

அவனது காதில் அது தேனாக இனித்தது.

உடனே.. அதே நாள்..தேவகுப்தன் படைகள் புறப்பட்டு மௌகாரியைத் தாக்கியது.

மௌகாரி மன்னன் கிரகவர்மன் – ராணி ராஜ்யஸ்ரீ – இருவரும் கன்னோசி அரண்மனையில் பூங்காவில் உலவிக்கொண்டிருந்தனர்.

‘ராஜ ராஜஸ்ரீ ராஜன் வந்தான்.. ராஜபோகம் தர வந்தான்’ – இருவரும் காதலின் ஆதிக்கத்தில் இருந்தனர்.

ஆபத்து நாற்புறமும் வந்தது.

தேவகுப்தன் படைகள் மௌகாரியை ஒரு மாலைக்குள் தன் வசமாக்கியது.

தேவகுப்தன் கிரகவர்மனைத் தாக்கினான்.

எதிர்பாராத அந்த தாக்குதலில் கிரகவர்மன் இறந்தான்.

ராஜ்யஸ்ரீ – திக்பிரமையால் வீழ்ந்தாள்.

ராவணன் சீதையைச் சிறையெடுத்தது போல் ராஜ்யஸ்ரீ சிறையெடுக்கப்பட்டாள்.

“தேவகுப்தா! என் தந்தை உன்னைச் சும்மா விட மாட்டார்” – என்று அவள் சூளுரைத்தாள்.

தேவகுப்தன் – வெறித்தனத்துடன் சிரித்தான்..

“ராஜ்யஸ்ரீ! இன்று காலை எனது புறா தானேஸ்வரத்திலிருந்து ஒரு நல்ல செய்தி கொண்டு வந்தது! என்ன தெரியுமா?”

ராஜ்யஸ்ரீ: “…”

தேவகுப்தன்:”இன்றைய தலைப்பு செய்திகள்: பி ர பா க  வ ர் த் த ன ன் … மரணம்..தானேஸ்வரம் தத்தளிக்கிறது..அங்கு மன்னன் யாரும் இல்லை”.

ராஜ்யஸ்ரீ ஒடிந்து போனாள்.. துவண்டு விழுந்தாள்..

தேவகுப்தன்: “ஒரு ரகசியம் சொல்லவா?”

ராஜ்யஸ்ரீ:”…”

தேவகுப்தன்: “நீ இந்த கன்னோசி சிறையில் இரு. நான் தானேஸ்வரம் மீது படையெடுத்து அரசனில்லாத அந்த நாட்டை என்னாட்சிக்குக்குள் கொண்டு வருகிறேன்”.

ராஜ்யஸ்ரீ :“என் அண்ணன் ராஜ்யவர்த்தனன் உன்னைக் கொல்லாமல் விடமாட்டான்”

தேவகுப்தன் :”அவன் ஊரில் இல்லை. அவனும் ஹூணர்களுடன் சண்டைபோட்டு சிதைந்து உள்ளான்”

ராஜ்யஸ்ரீ – மௌனமானாள்.

உள்ளம் அழுதது..கண்கள் கண்ணீர் வற்றி உலர்ந்தது..

இந்த இடத்தில் ‘இடைவேளை’ – என்று போடச்சொல்லி ‘யாரோ’ ஒரு தயாரிப்பாளர் சொன்னார் போலும்.

சரித்திரம் மேலும் கூறும்.

 

குவிகம் பொக்கிஷம் -இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி

வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 7:42 AM | வகை: கதைகள், கு. அழகிரிசாமி

நன்றி : அழியாச்சுடர்

 

Image result for வெள்ளைப்புடவையில் சாவு

வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான்.

சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ, முழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால், மானத்தை மறைக்க முடியாத பரிதாபத்தை நினைத்து அவள் அதிகமாகக் கவலைப்பட்டுவிடவில்லை. அவளுடைய கவலையெல்லாம், தான் உழைக்காவிட்டால் குழந்தைகள் பட்டினி கிடக்கவேண்டுமே என்பதுதான். இந்தச் சமயத்தில் குளிர் ஜூரமும் வந்து அவளைப் படாதபாடுபடுத்திக் கொண்டிருந்தது.

அவள் படுத்திருக்கும் தாழ்வாரம் ஒரு மாட்டுத்தொழு. ஐந்தாறு ஓலைகளை வைத்துக் கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய குழந்தைகளுமாக வசித்து வந்தார்கள். வீடில்லாத ஏழைகள் மாட்டுத் தொழுவில் குடியிருக்க இடம் கேட்டால், அந்தக் காலத்தில் வாடகை கேட்காமலே அனுமதிக்கும் மனிதர்கள் இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. அதனால், வாடகை கொடுக்காவிட்டாலும், அதற்குப் பதிலாகத் தொழுவின் சொந்தக்காரருடைய வீட்டில்-முதலாளி வீட்டில் – அவ்வப்போது வெள்ளையம்மாள் இலவசமாக வேலை செய்து வரவேண்டியிருந்தது. அப்படி ஊழியம் செய்வதற்கு முதலாளி வீட்டிலிருந்து அழைப்பு வரும் தினத்தில் அவள் கூலி கிடைக்கும் வேலைக்கும் போகக்கூடாது. விடிந்ததும் முதலாளி வீட்டுக்குப் போய் விளக்கு வைக்கும் நேரம் வரை கலக் கணக்கில் நெல்லைக் குத்திவிட்டு, ஆழாக்கு உமிகூட இல்லாமல் தொழுவுக்குத் திரும்புவாள். இப்போது இந்த ஐந்தாறு தினங்களாக இந்த ஊழியத்துக்கு அழைப்பு வந்தும் அவளால் போக முடியவில்லை. அதனால் அவள் தொழுவை விட்டு உடனே கிளம்பி விடவேண்டும் என்று முதலாளியம்மாள் காலையும் மாலையும் ஆள் விட்டு விரட்டிக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாக இந்தத் தொல்லை இப்போது இரண்டு நாட்களாக இல்லை; முதலாளியம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம், “பாவம், வெள்ளை, இருந்துட்டுபோறா போங்க. வெளியிலே புடிச்சித் தள்ளினா எங்கே போவா? ஏதோ, நம்ம வீடே அடைக்கலம்னு வந்து சேந்துட்டா. என்ன பண்றது?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு தூரம் அவள் உள்ளம் விசாலமாகிவிட்டதற்குக் காரணம் வெள்ளையம்மாள் இன்றோ நாளையோ செத்துப் போய்விடுவாள் என்று அவளுக்கு நம்பகமான தகவல் கிடைத்ததுதான். அவளுடைய சாவை முதலாளியம்மாள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில்….

வெள்ளையம்மாள் குளிர்காய்ச்சலில் வெடவெடத்துக்கொண்டு தன்னுணர்வில்லாமல் தொழுவில் கிடந்தாள். ஆறுவயதும், ஐந்து வயதும் ஆன அவளுடைய குழந்தைகள் இரண்டும் அப்போது அங்கே இல்லை. அதுவரையிலும் பசி பொறுக்க மாட்டாமல் அம்மாவைப் பிய்த்துப் பிடுங்கி விட்டு அப்பொழுதுதான் வெளியே போயிருந்தன. அந்த இரண்டு சிறுவர்களும் தெருவுக்குப் போய், வேலப்பன் வீட்டு வாசலுக்கு அருகில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டும், முழங்கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்துக்கொண்டும் ஆளுக்கு ஒரு பக்கமாகக் குந்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்கு முன்புதான் முதலாளி வீட்டு மாடுகளைத் தொழுவில் கொண்டுபோய்க் கட்டிவிட்டு வந்து, மத்தியானக் கஞ்சி குடித்த வேலப்பன், வாயையும் மீசையையும் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான். வாசலுக்கு அருகில் அந்த இரண்டு சிறுவர்களும் குந்திக் கொண்டிருந்த கோலத்தைப் பார்த்தான். பார்த்ததும், “என்னடா ஆக்கங்கெட்ட கழுதைகளா! ஏன் முழங்காலைக் கட்டிக்கிட்டு நடுத்தெருவிலே உக்காந்துக்கிட்டிருக்கீங்க?” என்று கேட்டான்.

அவனுடைய பேச்சுக்குரல் கேட்டு, சிறுவர்கள் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்தார்கள். இருவருடைய கண்களும் சிவந்திருந்தன. வெகுநேரமாக அவர்கள் பசியினால் அழுதிருக்கிறார்கள் என்பது வேலப்பனுக்குத் தெரியாது.

“உங்க அம்மா எங்கடா?” என்று அவன் கேட்டான்.

சிறுவர்கள் பதில் சொல்லவில்லை; சொல்வதற்குத் தெம்பும் இல்லை.

“உங்க அம்மாவுக்கு உடம்பு தேவலையாயிட்டதா?”

இந்தக் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சிறுவர்கள் விழித்தார்கள். ஆகவே, அதற்கும் மௌனமாகவே இருந்தார்கள்.

மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப் பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று. மாடு முரட்டுத்தனமாகத் தன்னை இழுத்துக்கொண்டு போகும் சிரமத்துக்கு இடையே, ஒரு கேள்வி கேட்டான். வெள்ளையம்மாள் ஈனஸ்வரத்தில் பதில் சொன்னது அவன் காதில் விழவில்லை. அவனும் அவள் பதிலுக்காகக் காத்துக்கொண்டு நிற்கவில்லை. அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லாமலே சும்மா படுத்துக் கொண்டும் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, மாட்டைக் கொண்டுபோய்க் கட்டிவிட்டுத் தன் வீட்டுக்குப் போனான். அவளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்குமோ என்று அப்பொழுது ஏற்பட்ட சந்தேகம் இப்போது திரும்பவும் ஞாபகத்துக்கு வரவே மேற்படி கேள்வியைக் கேட்டான் வேலப்பன். தண்ணீர் காணாத பயிர்களைப்போல வாடித் துவளும் சிறுவர்கள் மௌனமாக இருப்பதையும், அவர்களுடைய கண்கள் சிவந்திருப்பதையும் பார்த்து, “கஞ்சி குடிச்சீங்களாடா?” என்று அவன் விசாரித்தான்.

அப்போதுதான் சிறுவர்கள் பதில் சொன்னார்கள்.

“இல்லே.”

“கஞ்சின்னாத்தான் பயக வாயைத் திறப்பாங்க போலிருக்கு!” என்று ஒரு தடவை தமாஷாகச் சொன்னான் வேலப்பன். உடனே, “எந்திரிச்சி உள்ளே வாங்கடா” என்று இருவரையும் கூப்பிட்டான்.

சிறுவர் எழுந்து உள்ளே போனார்கள்.

வேலப்பன் தன் மனைவியை அழைத்து, சிறுவர்களுக்குக் கஞ்சி ஊற்றும்படி சொன்னான். அவளும் சோளச் சாற்றை மோர் விட்டுக் கரைத்து ஒரு பெரிய மணி சட்டியில் ஊற்றி, சட்டியின் மேலேயே பருப்புத் துவையலையும் அப்பி வைத்துக் கொண்டு அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்; கஞ்சிச் சட்டியைச் சிறுவர்களிடம் கொடுத்தாள்.

இளையவன் ஆவலோடும் அவசரத்தோடும் சட்டியைக் கைநீட்டி வாங்கிக் கொண்டான்.

மூத்தவன், “வேண்டாம்” என்று ஒரு வார்த்தை சொன்னான்.

“வேண்டாமா! வாங்கிக்கோ நாயே!” என்று ஒரு அதட்டுப் போட்டான் வேலப்பன்.

“இங்கேயே வச்சிக் குடிச்சிட்டுப் போங்களேண்டா” என்றாள் வேலப்பனின் மனைவி.

”இல்லை இல்லை, கொண்டு போகட்டும். இவுக ஆத்தாளும் அங்கே வயித்துக்கு இல்லாமத்தான் கெடப்பா. இல்லேன்னா, இதுகள் எதுக்கு இப்படிக் காயுது? அங்கே கொண்டு போனா, அவளும் ஒருவாய் குடிச்சுக்கிடுவா: என்று அவன் சொன்னான்.

சிறுவர்கள் தொழுவுக்கு நடந்து வரும்போதே, “சீ! ஊரார் வீட்டிலே கஞ்சி வாங்கிக்கிட்டு வாறே! கேவலம்! இரு, அம்மாகிட்டச் சொல்றேன்” என்றான் மூத்தவன்.

பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருக்கிறாள். அந்த நிலையில் இப்போது கஞ்சிச் சட்டியோடு போனால் அம்மா அடிப்பாள் என்று சின்னவனுக்கும் தெரியும். இருந்தாலும், இரண்டு நாளையப் பசி அவனுக்குப் பதிலாக அவனுடைய ஸ்தானத்தில் நின்று அண்ணனையும் அம்மாவின் உபதேசத்தையும் எதிர்த்து முழுப் பலத்தோடு போராடியது.

“அம்மாவுக்குச் சொல்லாதே, உனக்கும் கஞ்சிதாறேன்” என்று ஆசை காட்டினான் தம்பி.

”சீ! நான் குடிக்கவே மாட்டேன்” என்றான் அண்ணன்.

மேற்கொண்டு விவகாரம் பண்ணுவதற்குத் தம்பியின் உடம்பில் ஆவி இல்லை. ஒன்றும் பேசாமல் அங்கேயே நின்று கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்து விட்டான். “கேவலம்,கேவலம்” என்று சொல்லிக்கொண்டு சின்னவனை அடித்தான் பெரியவன். தம்பி ஒரு மடக்குத்தான் குடித்திருந்தான். அதற்குள் முதுகில் பலமாக அடி விழவே, ஒரு கையால் சட்டியை இடுக்கிக்கொண்டு மறு கையால் அண்ணனைத் திரும்பி அடித்தான் தம்பி. சண்டை முற்றிவிட்டது. கைகளால் அடித்தும், நகங்களால் பிறாண்டியும், பல்லால் கடித்தும் சண்டை போட்டதன் பலனாகக் கஞ்சிச்சட்டி கீழே விழுந்து உடைந்துவிட்டது. கஞ்சியெல்லாம் தெருப்புழுதியோடு ஐக்கியமாகிவிட்டது.

ஏமாற்றத்தோடும் பயத்தோடும் அதைப் பார்த்தான் தம்பி.

அண்ணனும் பார்த்தான். மண்ணில் கொட்டியதை இனிமேல் எடுத்துக் குடிக்க முடியாதே என்ற ஏமாற்றத்தினால் அவன் விட்ட பெருமூச்சில் அவனுடைய உயிரே வெளிவந்து திரும்பியது. பெருமூச்சைத் தொடர்ந்து அடக்கமுடியாத அழுகை வந்தது; அழுதுவிட்டான்.

“அடுத்த வீட்டிலே வாங்கிச் சாப்பிடுவது கேவலம்” என்று அம்மா சொல்லி வந்ததற்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலே, தானும் அப்படியே சொல்லி அதைப் பிடிவாதமாக நிலைநாட்ட முயன்றபோது, இப்படிப்பட்ட ஒரு பெரு நஷ்டம் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்குப் பசி மும்மடங்காகிவிட்டது. அர்த்தமில்லாத உபதேசம் செய்து, அதன் மூலம் இப்போது கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்துவிட்ட அம்மாவின் மீது அண்ணனுக்குக் கோபம் சண்டாளமாக வந்தது.

இருவரும் தொழுவை நோக்கி ஓடிவந்தார்கள். அம்மாவிடம் வந்து பரஸ்பரம் ஒருவனை ஒருவன் குற்றம் சொல்ல வேண்டும் என்பதுதான் அப்படி ஓடிவந்ததுதான் நோக்கம்.

அம்மா முன்போலவே கிழிந்துபோன பழைய கோணியின் கந்தலைப் போர்த்துக்கொண்டு கிடந்தாள். வாய் ஒரு புறம் கோணித் திறந்திருந்தது. கண்கள் பாதி மூடியிருந்தன. உடம்பிலே அசைவே இல்லை.

இப்படியெல்லாம் அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை ஆடியிருக்கிறாள். அப்போதெல்லாம் அம்மாவின் மேல் விழுந்து, “செத்துப்போக வேண்டாம்” என்று இருவரும் கூச்சல் போடுவார்கள். இப்போதும் அதேமாதிரி கூச்சல் போட்டார்கள்; அம்மாவை அடித்தார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் சிரித்துக்கொண்டே, “நான் செத்துப் போகவில்லை” என்று சொல்லியவண்ணம் கண்களை முழுக்கத் திறப்பதுபோல அம்மா இன்று திறக்கவில்லை. அதனால் சிறுவர்களுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. பிணத்தைப் போட்டு அடிஅடி என்று அடித்தார்கள். “அம்மா, செத்துப்போகாதே! செத்துப் போகாதே, அம்மா!” என்று கதறிக்கொண்டு அவளைக் கிள்ளிக் கிழித்தார்கள். சின்னவன் அவள் மீது கிடந்த கந்தல் கோணியையும் கோபத்தோடு இழுத்துத் தூரப்போட்டான். அம்மா முழு நிர்வாணமாகக் கிடந்தாள்.

எப்படியும் அம்மாவை எழுப்பிவிடுவது என்ற உறுதியோடு சிறுவர்கள் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் அடிக்க முடியும்? கை ஓய்ந்துபோன தம்பி அம்மாவின்மேல் விழுந்து, “செத்துப்போகாதே அம்மா!” என்று ஓலமிட ஆரம்பித்து விட்டான். அவன் அழுவதைப் பார்த்த பெரியவனும், அம்மாவின்மேல் விழுந்து அழுதான்.

மாலையில் வெள்ளையம்மாளின் பிணத்தை எடுத்துத் தகனம் செய்வதற்காகச் சிலர் வந்து சேர்ந்தார்கள். நாலு பச்சைக் கட்டைகளையும், ஐந்தாறு தென்னை ஓலைகளையும் வைத்து ஒரு பாடை கட்டினார்கள். பிணத்துக்கு உடுத்துவதற்காக ஒரு கிழவர் புதிதாக வெள்ளைச்சேலை ஒன்று வாங்கிக்கொண்டு வந்து தர்மமாகக் கொடுத்தார். தாயார் வெள்ளை வெளேர் என்று புதுச்சேலை கட்டியிருப்பதைச் சிறுவர்கள் அன்றுதான் முதன்முதலாகப் பார்த்தார்கள். ஆச்சரியத்தினால் அழுகையை ஒரு நிமிஷம் நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான ஆனந்தம்கூட ஏற்பட்டது; மறுநிமிஷம் தங்களுக்கும் அப்படி ஒரு புதுச்சேலை கிடைக்காதா என்று ஏங்கினார்கள். பிறகு, அம்மா செத்துப்போனது ஞாபகம் வந்து, பழையபடியும் அழத் தொடங்கினார்கள்.

வெள்ளையம்மாளின் பிணம் சுடுகாட்டுக்குப் போய்ச் சாம்பலாகி விட்டது. இதையும் சிறுவர்கள் பார்க்கும்படி ஊரார் விடவில்லை. பார்த்திருந்தால் அம்மா மட்டுமல்லாமல் அழகான புதுப்புடவையும் சேர்ந்து தீயில் எரிந்ததற்காகச் சிறுவர்கள் அழுதிருக்கக்கூடும். பிணத்தைப் பாடையில் கொண்டுவந்து வைப்பதற்கு முன்பே வேலப்பன் சிறுவர்களுக்கு முறுக்கு வாங்கிக் கொடுத்துத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அங்கே இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள். வயிறு நிறைந்த பிறகுதான் அம்மாவின் நினைவு முழுவேகத்தோடு வந்து சிறுவர்களின் நெஞ்சில் அடித்தது. வேலப்பனின் மனைவி, “உங்க அம்மா வந்துருவாடா. அழாதீங்க. பேசாமல் இங்கேயே விளையாடிக்கிட்டிருங்க” என்று சொல்லி அவர்களுடைய துயரத்தை மறக்க வைக்க முயன்றாள்.

இரவு வந்ததும் அவள் விளக்கு ஏற்றினாள். வேலப்பனும் வீடு வந்து சேர்ந்தான். சிறுவர்களுக்குச் சுடுசாதம் போட்டார்கள். அதன்பின் ஒரு பாயை விரித்து அதில் அவர்களைப் படுக்க வைத்தார்கள். சாக்குப் படுதாவிலேயே பிறந்த நாள் முதல் படுத்து உறங்கிய சிறுவர்களுக்குப் பாய்ப்படுக்கை சொல்லமுடியாத பேரானந்தத்தை அளித்தது. இந்தப் பாயில் அம்மாவும் தங்களோடு படுத்துக்கொண்டால் இன்னும் ஆனந்தமாக இருக்குமே என்று நினைத்து, “அம்மா, அம்மா” என்று பழையபடியும் அழத் தொடங்கினான் சின்னவன். வேலப்பன் அவர்களைத் தூங்கும்படி நயமாகவும் இரக்கத்தோடும் சொன்னான். அவர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரு பழைய வேஷ்டியைக் கொண்டு வந்து போர்த்திவிட்டு, அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தைக் குறைத்து வைத்துவிட்டு தானும் பக்கத்திலேயே ஒரு பாயை விரித்துப் படுத்து விட்டான்.

வயிறு பூரணமாக நிறைந்துவிட்டது. படுக்கையும் வழக்கம்போல அரித்துப் பிடுங்கும் கோணியல்ல. அதே போலப் போர்வையும் கோணியாகவோ கந்தலாகவோ இல்லாமல் வேஷ்டியாக இருந்தது. இத்தனை வசதிகளும் ஒரு சேர அமைந்துவிட்டதால் சிறுவர்கள் சுகமாகத் தூங்கிவிட்டார்கள்.

அதற்கு அப்புறமும் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஒரே நிசப்தம்; தாங்கமுடியாத குளிர்; மழையாகக் கொட்டிக் கொண்டிருந்தது. தைமாதப் பனி. போர்வையாகக் கிடந்த வேஷ்டி, அவர்கள் தாறுமாறாக உருண்டு புரண்டதால் தனியே விலகி, சுருண்டுபோய் ஒரு பக்கத்தில் கிடந்தது.

சந்தர்ப்பவசமாகத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட வேலப்பன் சிறுவர்களைத் திரும்பிப் பார்த்தான். வெறுங் கோவணத்தோடு குளிரில் நடுங்கிக்கொண்டு கிடந்த சிறுவர்களின் மீது மீண்டும் வேஷ்டியை எடுத்துப் போர்த்தினான். அப்போது அவன் கொஞ்சங்கூட எதிர்பாராதவாறு சிறுவர்கள் இருவரும் ஏகாலத்தில் ஒரே குரலில், “அம்மா” என்று வீடே அலறும்படி கத்தினார்கள்.

வேலப்பனுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல் இருந்தது. அதிர்ச்சியால் வாயடைத்துப்போய் நின்றான். அவன் மனைவி தூக்கத்திலிருந்து துள்ளி விழுந்து எழுந்தாள். என்னவோ ஏதோ என்று எழுந்து உட்கார்ந்து விட்டார்கள்.

தைரியசாலியான வேலப்பனுக்கு அதிர்ச்சி நீங்கியது. “கடவுளே! இந்தக் குழந்தைகள் என்ன பாவம் பண்ணிச்சி, இதுகளை இப்படிப் போட்டுச் சோதிக்கிறயே!” என்று வாய் விட்டுப் புலம்பினான்.

கணவனும் மனைவியும் வெகுநேரம்வரை என்னென்னவோ சொல்லிச் சமாதானப்படுத்தியும் சிறுவர்கள் அம்மாவை அழைப்பதையோ, சுற்றுமுற்றும் திரும்பிப்  பார்த்து அம்மாவைத் தேடுவதையோ நிறுத்தவில்லை. அவள் கதவு மறைவிலோ, சுவர் மறைவிலோ நிச்சயமாக ஒளிந்து கொண்டிருப்பதாகவே நினைத்துப் பயங்கரமாகக் கூப்பாடு போட்டு அழைத்தார்கள்.

“ரெண்டும் ஏதாச்சும் கனாக் கண்டிருக்குமோ?” என்றாள் வேலப்பன் மனைவி.

”என்னான்னு தெரியலையே!” என்று சொல்லிவிட்டுத் தலையில் கைவைத்த வண்ணம் அப்படியே ஒரு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டான் வேலப்பன்.

அவள் நினைத்ததுபோலக் குழந்தைகள் கனவு கண்டது உண்மைதான். ஆனால், இரண்டு சிறுவர்களும் ஒரே சமயத்தில் ஒரே கனவைக் கண்டார்கள் என்பதை நிச்சயமாக அவளால் நினைத்திருக்க முடியாது. யாரால்தான் முடியும்?

சிறுவர்கள் தூங்கும்போது, கனவில் அவர்களுடைய அம்மா வந்தாள். குழந்தைகள் இருவரையும் தனித்தனியாக வாரி எடுத்து முத்தமிட்டாள். அம்மாவின் புதுச்சேலையைக் குழந்தைகள் ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள்.

“என் கண்ணுகளா, இந்தச் சீலை இனி உங்களுக்குத்தான். உங்களுக்குக் கொடுக்கத்தான் அம்மா வந்திருக்கிறேன். நான் செத்துப் போகவில்லை” என்றாள் தாய். பிறகு குழந்தைகளைப் படுக்க வைத்தாள். அதன்பின் தான் உடுத்தியிருக்கும் புதுச் சேலையை அவர்களுக்குப் போர்த்திவிட்டு, பிறந்த மேனியுடன் வெளியே நடந்தாள். அம்மா தங்களை விட்டு விட்டு எங்கோ போகிறாள் என்பதைப் பார்த்தபோதுதான் சிறுவர்கள் வீடே அலறும்படியாக “அம்மா” என்று கத்தினார்கள். அவ்வளவில் அவர்களுடைய தூக்கமும் கலைந்துவிட்டது. எழுந்து கண்களைத் திறந்து பார்க்கும்போது எதிரே அம்மா இல்லை; சுடுகாட்டுக்குப் போனபிறகும் அம்மா வீடு தேடி வந்து அவர்களுக்குப் போர்த்திய அந்த வெள்ளைப் புடவையும் இல்லை; வேலப்பன்தான் நின்று கொண்டிருந்தான்.

கி ரா – ஜெ பாஸ்கரன் சந்திப்பு

திரு வ.வே.சு., லேடீஸ் ஸ்பெஷல் கட்டுரையைப் படித்துவிட்டு, நான் புதுச்சேரி சென்றால் அவசியம் கி.ரா. வைச் சந்திக்க வேண்டும் – வாழ்நாளில் முக்கியமான சந்திப்பாக அது இருக்கும் என்று ஒருநாள் சொல்லியிருந்தார் – அன்று கையில் சரியான விலாசம் இல்லாததால், விருட்சம் அழகியசிங்கருக்குப் போன் செய்தேன். அவரிடமும் உடனே கிடைக்காததால், கிரிஜா ராகவன் அவர்களைக் கேட்டேன் – என் நினைவில் இருந்த அதே முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தார் ( என்னமோ போடா மாதவா, உன் ஞாபக சக்தி இப்படி நாளுக்கு நாள் அதிகமாய்ட்டு வருது என்று ஜனகராஜ் ஸ்டைலில் முதுகை நானே தட்டிக்கொண்டேன் – ‘கோயில் வாசல்ல விட்ட செருப்பை இப்படி மறந்துட்டுப் போறீங்களே’ என்ற குரல் கேட்டு, சிகரெட்டுக்குப் பதில் வெடியை வாயில் வைத்துப் பற்ற வைக்கும் மறதி ஜனகராஜ் ஆக மாறிப்போனேன்!).Image may contain: 1 person, standing and sunglasses

நான்கு மாடிகள் கொண்ட கட்டிடங்கள் – பதினைந்து இருபது அடி இடைவெளியில் – மரங்கள், செடிகள் சூழ தூங்கி வழிந்து கொண்டிருந்தன. ஏற்கனவே, ஏ 4 ஃப்ளாட் ஏமாற்றி விடவே, அருகில் இருந்த மராமத்து ஆபீஸில் விசாரித்தோம். ‘ஓ, அவரா, முன்னாடி க்யூ ப்ளாக்குல இருக்கிறார் – சுத்தி நெறைய செடி, கொடிங்க இருக்கும் பாருங்க’ என்று சொல்லிவிட்டு, திரும்பி நின்று தனது அரசியல் சர்ச்சையைத் தொடர்ந்தார்!

வந்த வழியே திரும்பி வந்து, கியூ ப்ளாக் ஏ 4 ல் விசாரித்தோம். கையில் ஈரப் புடவையைக் காயப் போட கொசுவியபடி கதவைத் திறந்த பெண்மணி, புன்னகைத்து,” அதோ, அந்த ஃப்ளாட்தான்” என்று எதிர் பில்டிங்கைக் காட்டினார். தேடுகின்ற அவசரத்தில் பழங்கள் கூட வாங்கவில்லை – இரண்டு மேரீ பிஸ்கட் பாக்கெட்டுகளும், ஆஸ்ரம ஊதுபத்தியும் கையில் எடுத்துக் கொண்டு, கிரில் கேட்டைத் தட்டினோம் – Q 13, கி.ராஜநாராயணன், எழுத்தாளர் என்று சுவற்றில் பதித்திருந்தது.

அவருடைய மகன் (பிறகு தெரிந்தது) கதவைத் திறந்தார். ‘போன் செய்திருக்கலாமே’ என்றார். ‘தெரியவில்லை. அய்யாவுக்குச் சிரமம் என்றால் இன்னொரு நாள் வருகிறோம்’ என்றேன். ‘சிறிது உட்காருங்கள், வந்துவிடுவார்’ என்று உள்ளே சென்றார்.

அறை சைசில் இருந்தது ஹால்! கப்போர்டில் ஏராளமான விருதுகளும், பட்டயங்களும் நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தன. பொன்னாடை போர்த்திய கி.ரா. சிரித்தபடி அமர்ந்திருக்க, வலது பக்கம் குடும்பத்தினரும், இடது பக்கம், கையைப் பிடித்தவாறு, தேவர் மகன் மீசையுடன் கமல் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். எவ்வளவு பெரிய எழுத்தாளர், கரிசல் இலக்கியத் தந்தை, ஒரு சிறிய அரசுக் குடியிருப்பில், எளிமையாக மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்கிறார் என்பது மனதை வருத்தியது. உண்மையாகத் தமிழை வளர்த்தவர்களின் நிலைமை தமிழ்நாட்டில் இப்படித்தான் போலும். ‘தமிழ் வாழ்க’ என வெற்றுக் கோஷம் போடுபவர்களுக்கே செல்வாக்கு என்பது வேதனைக்குரியது.

வயது தொண்ணூறுக்கும் மேல், மெதுவான நடை, மெலிந்த தேகம், இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி, மேல் துண்டு, அடிக்கடி அமைதியாய் நினைவுகளில் மூழ்கிவிடும் முகம், மூன்று , நான்கு நாட்களின் சின்ன தாடி, அரைச் சிரிப்பில் பளிச் சென்ற பற்கள், முதுமையின் மறதி, தெளிவான பேச்சு – ஈசீ சேரில் அமர்ந்தபடி, எதிரே மாட்டியிருந்த தி.க.சி யின் படத்தைப் பார்த்தபடி பேசிய, கி. ரா. வுடன் சுமார் அரை மணி நேரம் உரையாடினோம் – எண்ணங்களைக் குவிப்பதும், சிதறுவதைச் சேர்ப்பதும் முகத்தில் தெரிந்தது. இடையிடையே சொற்களில்லாத அமைதி பேசியது! சிறிய டிவி, சுற்றிலும் புத்தகங்கள், பேப்பர்கள், பேனா, காலச்சுவடின் கி ரா எழுதிய ‘மாயமான்’ எல்லாம் எங்கள் பேச்சைக் கேட்டபடி இருந்தன!

என்னை அறிமுகம் செய்துகொண்டேன் – இப்போது என்ன எழுதுகிறீர்கள் என்றேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தன் கைப்பட எழுதியவைகளைக் காண்பித்தார். தனித் தனியான அழகான எழுத்துக்கள் – தி க சி ஐ யைப் பற்றிய நினைவுக் குறிப்புகள், இலைகளைப் பற்றி கட்டுரை !
“வாழையில் ‘இலை’ வாழை என்ற ஒரு வகை இருக்கிறது – தஞ்சாவூர்ப் பகுதிகளில். அதில் பூவோ, காயோ இருக்காது; வெறும் இலை மட்டும்தான். அதன் ஒரு இலையில் பத்து நுனி இலைகள் எடுக்கலாம், அவ்வளவு பெரியதாக இருக்கும் ” என்றார். தையல் இலை, மந்தார இலை என அன்றைய நாட்களைப் பற்றிச் சொன்னார். தஞ்சாவூர்க் காரனான எனக்கு இலை வாழை பற்றித் தெரியவில்லை என்றேன் – ‘எல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை’ என்றார் சிரித்தபடி!

இசை பற்றி கேட்டபோது, ‘ எனக்கு வெறும் கேள்வி ஞானம்தான்; காருக்குறிச்சி அருணாசலம் எங்க வீட்டுக்கு வருவார், அருமையாக வாய்ப்பாட்டு பாடுவார். கணீர் என்ற குரல் (இது எனக்கு புதிய செய்தியாய் இருந்தது). ராஜரத்தினம் கூட வந்திருக்கிறார். நாதஸ்வரம், நாகஸ்வரம் எல்லாம் தப்பு, “நாயனம்” என்பதே சரி! விளாத்திகுளம் சுவாமிகள் ராகங்களை மட்டும் ஆலாபனை செய்வார் – ‘கரஹரப் பிரியா ராகச் சக்கரவர்த்தி’ என்றே பெயர் பெற்றவர் – காருக்குறிச்சியார், எம் கே தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் இவரைக் குருவாக ஏற்றுக்கொண்டு கோலோச்சியவர்கள்”. என்று கூறி சுவாமிகள் பற்றிய புத்தகம் (என் ஏ எஸ் சிவகுமார் எழுதியது) ஒன்றினைக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

‘கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள்’ – அவரது மகன் கி.ரா.பிரபாகர் எழுதிய நாவலும், ரசிகமணி தி.கே.சி பற்றி கி.ரா. எழுதிய ‘அன்னப்பறவை’ புத்தகமும் பெற்றுக்கொண்டேன்.

இப்போது அதிகம் படிப்பதில்லை என்றார். போனில் மகன்தான் பேசுவார் என்றார். சென்னைக்கு வரவே மாட்டேன் என்றார் (நான் காரணம் கேட்கவில்லை).

சமையல் பற்றி பேச்சு வந்தது. ‘என் நாக்குக்கு உங்கள் சமையல் ஒத்துவராது. அப்படியே ஒத்து வந்தாலும், மீண்டும் வேண்டுமானால் உங்களைத் தேடி நான் வரவேண்டீருக்கும் அது முடியாது’ என்று சிரித்தார்! வசதி படைத்த பெண்மணி ஒருவர், பொழுது போவதற்காக தினமும் எழுத்தாளர் சார்வாகன் வீட்டில் வந்து சமைத்துப் போனதை ஆச்சரியமுடன் சொன்னார். தூக்கத்திலேயே மறைந்து விட்ட சார்வாகன் மனைவி பற்றியும், அவர்கள் நேர நிர்வாகம் பற்றியும் வியந்தார்.

முதலியார், நாடார் போன்று ‘பிள்ளை’ என்ற ஒரு ஜாதி இல்லை என்றார். அதற்குக் காரணமும் சொன்னார்!

‘ராயல்டி’ ஏதோ இப்போது கொஞ்சம் கொடுக்கிறார்கள் – பணத்தை எதிர்பார்த்து இங்கு எழுதமுடியாது என்றார். “சத்தியமூர்த்தி அவர்கள் மகள் – அழகா இருப்பாங்களாம், நான் பார்த்ததில்லே – லட்சுமி கிருஷ்ணமூர்த்திதான் சொன்னபடி, பைசா வாரியா ராயல்டிய அனுப்பிடுவாங்க” என்றார்.

தி க சி, குற்றாலம், தென்காசி எனப் பேசும்போது, எண்ணங்களின் ஓட்டம், நினைவு அலைகளாக முகத்தில் தெரிந்தது.

வீடு கண்டுபிடிக்க சிரமப் பட்டோம் என்ற போது அவர் சொன்னது: “என் பெரிய மகன் மொத முறையா இங்க வந்து வீட்டத் தேடியிருக்கான். என் வீட்டுக்கு கீழயே நின்னுகிட்டு, நடந்து போன ரெண்டு பேருகிட்ட என் பேரச் சொல்லி கேக்கறான். நான் மாடீல இருந்து பாத்துகிட்டே இருக்கேன். ஒருத்தன் ‘அப்படி ஒருத்தர் இருக்கிறதே தெரியாது’ ன்னான்! இன்னொருத்தன், காலைலே இரண்டுபேரும் (கிரா வும், அவர் மனைவியும்) வாக்கிங் போவாங்க… அவங்க வீடு….ன்னு கொஞ்சம் யோசிச்சான், அப்புறமா, ‘ஆங்… நாஸர் வந்தாரே அவரைப் பார்க்க, கை உயர்த்தி என் வீட்டைக் காட்டினான். என்னைத் தெரிய ஒரு நாஸர் வேண்டியிருக்கிறது” ! சிரித்தார்!

மறுநாள் என் பிறந்தநாள் என்று சொல்லி, பாதம் தொட்டு வணங்கினோம். வீட்டுப் புழக்கடையில், வேப்ப மரம் ஒன்று மதிய வெயிலில், அசையாமல் தூங்கிக்கொண்டிருந்தது.

விடை பெற்றுக் கொண்டோம். சென்னை வரும் வரை வெகுநேரம் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’ மனதில் சுற்றி வந்தது.

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

(நன்றி : நக்கீரன்)

america

 

10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழா மற்றும் வடஅமெரிக்க பேரவையின் 32 ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பித்தது. விழா தொடங்குவதற்கு சில மணிநேரங்கள் முன்பிலிருந்தே தமிழ் அறிஞர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் உலகத்தின் பல பகுதிகளில் வாழும் தமிழ் பெருமக்களும் உற்சாகத்துடன் வரத்தொடங்கினர்.

தமிழ் மரபையும் பண்பாட்டையும் உலக அரங்கில் எடுத்தியம்பும் விதமாக அடையாளச் சின்னங்களோடு விழா அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி, சிறார்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது. தொடர்ந்து திருக்குறள் மறை ஓதப்பட்டது. நிகழ்ச்சி நடக்கும் அமெரிக்கா நாட்டின் நாட்டுப்பண் இசைக்கப்பபட்டபிறகு குத்து விளக்கு ஏற்றப்பட்டது. தமிழை வாழ்த்தும் விதமாக ‘செந்தமிழே வணக்கம்’ என்ற பாடலுக்கு வரவேற்பு நடனம் அரங்கேறியது. மங்கள இசையுடன் விழா தொடர்ந்தது.

தமிழ் மாநாடு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், சிகாகோ தமிழ் சங்கத் தலைவர் மற்றும் வட அமெரிக்க பேரவையின் தலைவர் மூவரும் வரவேற்புரை நிகழ்த்தினர். ‘தமிழ் தமிழர்’ என்ற தலைப்பில் ஸ்டாலின் குணசேகரன், கீழடி ஆய்வு குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மதுரை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சிகாகோ, அயோவா, மத்திய இலினாய்சு, நியூயார்க், மினசோட்டா மற்றும் டொரோண்டோ தமிழ் சங்கத்தினர் மரபு கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

கலிஃபோர்னியாவில் செம்மையாக நடத்தப்படும் தமிழ் பள்ளிகள் பற்றிய காணொலி திரையிடப்பட்டது. சிகாகோ தமிழ் சங்கத்தினர் தமிழர் வாழ்வியல் பெருமைகளை உயர்த்திக்காட்டும் விதமாக நாடகம் நடத்தினர். சிலம்பம் அருணாச்சலம் மணி தலைமையில் மரபு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முப்பெரும் விழாவின் சிறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. ‘கீழடி என் தாய்மடி’ என்ற தலைப்பில் கவிஞர் சல்மா தலைமையில் அமெரிக்க தமிழன்பர்கள் பங்குபெற்ற கவியரங்கம் சிறப்பாக அமைந்தது.

கவிஞர் சல்மா, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் இணைஅமர்வில் பங்கேற்று அம்பேத்கர், பெரியார் சிலையை வெளியிட்டார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் இயங்கிவரும் தமிழ் பள்ளிகள் பற்றிய கண்ணோட்டம் விவரிக்கப்பட்டது. தஞ்சை டெல்டா பகுதி விவசாய மக்களின் உரிமைக்குரலை அடக்கும் விதமாக நடந்த கொடூரத்தையும் இன்று தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டும் அவலங்களையும் உணர்வுப்பூர்வமாக எடுத்து இயம்பும் ‘குரலற்றவர்களின் குரல்’ நாடகம் மினசோட்டா தமிழ் சங்கத்தினரால் அரங்கேற்றப்பட்டது. தமிழறிஞர் ஜி.யு. போப்பை பாராட்டி பேராசிரியர் திருஞானசம்பந்தம் உரைநிகழ்த்தினார்.

தமிழ் மாநாடு

இந்நிகழ்வில் ஜி.யு. போப் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அமெரிக்கா, கனடா, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நடன குழுவினர், ‘ஈழத்தின் நடனமும் பாரம்பரியமும்’ என்ற தலைப்பில் நடனமாடினார். நவி பிள்ளை (ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் உயர் ஆணையர்) உலகத் ‘தமிழர் விழிப்புணர்வு நேரம்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். சிகாகோ தமிழ்ச்சங்கம் பொன்விழா கொண்டத்தின் முத்தாய்ப்பாக சிறப்பு பொன்பறை சிகாகோ பறை கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டது.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முன்னெடுப்பு பற்றி விவரிக்கப்பட்டது. இளம் சாதனையாளர் லிடியன் நாதஸ்வரத்திற்கு பாராட்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முரசு சேர்ந்திசை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக அமைந்தது. சாலமன் பாப்பையா தலைமையில் ‘தமிழர் பெருமையில் விஞ்சி நிற்பது அகமா? புறமா?’ என்று ராஜா, பாரதி பாஸ்கர் மற்றும் அமெரிக்க பேச்சாளர்கள் பங்குபெற்ற சிறப்பு பட்டிமன்றத்துடன் முதல் நாள் நிகழ்வுகள் இனிதாக நிறைவடைந்தன.

 

நான்காம் பத்து – என் செல்வராஜ்

நான்காம்  பத்து – என் செல்வராஜ்

Image may contain: 1 person

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

 

 

ஆர் சூடாமணி

உளவியல் எழுத்தாளர் எனப் புகழப்பட்டவர். மனதுக்கு இனியவள் என்ற நாவலுக்கு கலைமகள் வெள்ளிவிழா பரிசு பெற்றவர். ஆரவாரம் இல்லாமல் மிக எளிமையாக மத்திய தர வாழ்க்கையையும் அதன் மனிதர்களையும் குறிப்பாகப் பெண்களையும் பற்றி நிறைய எழுதி உள்ளார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தனது சொத்து முழுவதையும் சேவை நிறுவனங்களுக்குச் சேர உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர். தனிமைத் தளிர் என்ற தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் அந்நியர்கள், புவனாவும் வியாழக்கிரகமும்

ஆதவன்

கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற் பெயர் கே எஸ் சுந்தரம். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை தொகுப்புக்காக 1987 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காடமி விருது இவரது மறைவுக்குப்பின் வழங்கப்பட்டது.என் பெயர் ராமசேஷன் , காகித மலர்கள் ஆகிய நாவல்கள் சிறப்பானவை. தில்லியிலேயே தமது இளமைக்காலம் முதல் இருந்த ஆதவன் அதன் மதிப்பீடுகள்,சிக்கலான வாழ்க்கை முறை , போக்குவரத்து ஜனநெரிசல் என்று நகரின் மனநிலையை ஆழமாக படம் பிடித்தவர்.இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம், லேடி, ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

வேல ராமமூர்த்தி

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் பிறந்த இவர் தான் பிறந்த ஊர் மற்றும் அதன் அண்டை கிராமங்களைக் கதைக்களமாகக் கொண்டு பல

சிறுகதைகள் எழுதி உள்ளார். இவரின் குற்றப்பரம்பரை என்ற நாவல் சிறந்த நாவல். இவரின் சிறுகதைகள் பெரும்பாலும் சுயசாதியைப் பற்றியவை.எனினும் விமர்சனப் பார்வையோடு படைத்துள்ளார். தென் தமிழகத்திலுள்ள சாதிய சிக்கல்களை இவரின் கதைகள் கவனப்படுத்துகின்றன.சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களான அம்பட்டர், அருந்ததியர், வண்ணார் முதலான பலரின் வாழ்வியல் சிக்கல்ளை மையமிட்டு அவர்களின் வலியினை சரியாக பதிவு செய்துள்ளார். இவரது சிறுகதைகளின்முழு தொகுப்பை வேலராமமூர்த்தி கதைகள் என்ற பெயரில் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதை இருளப்ப சாமியும் 21 கிடாய்களும்.

சுந்தர ராமசாமி

சிறந்த நாவலாசிரியர். பசுவய்யா என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். சிறந்த சிறுகதையாசிரியராகவும் இருந்தார். ஒரு புளிய மரத்தின் கதை, ஜே ஜே சில குறிப்புகள் இவரின் சிறந்த நாவல்கள் ஆகும். தமிழ் இலக்கிய தோட்டத்தின் இயல் விருது பெற்றவர். காலச்சுவடு என்ற இலக்கிய இதழின் நிறுவனர். இவரின் சிறுகதைகளின் முழு தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் கோயில் காளையும் உழவு மாடும்,பல்லக்கு தூக்கிகள், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம், பிரசாதம், சன்னல்,பள்ளம், வாழ்வும் வசந்தமும், எங்கள் டீச்சர், காகங்கள், சீதை மார்க் சீயக்காய் தூள்,

நாஞ்சில் நாடன்

நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான நாஞ்சில் நாடனின் இயற்பெயர் க சுப்ரமணியம். சங்க இலக்கியத்தில் அதிக

ஈடுபாடு கொண்டவர். சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 2010ல் சாகித்ய அக்காடமி விருது பெற்றவர்.இவரது நாவல்கள் புகழ் பெற்றவை.

தலைகீழ்விகிதங்கள் இவரது முதல் நாவல். இவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை நாஞ்சில் நாடன் கதைகள் என்ற பெயரில் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விவசாயக் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கும் மனிதர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடனின் பார்வையானது விவசாய கலாச்சாரத்தின் உள்ளீடுகளின் அடிநாதமாகவே இழையோடுகிறது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு இந்நாட்டு மன்னர், கிழிசல், விரதம், பாலம்.

பாவண்ணன்

பாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் . 1980களில் எழுதவந்த சிறுகதை எழுத்தாளத் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய முதல் சிறுகதை

நா. பார்த்தசாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தீபம் சிற்றிதழில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்தது. சிற்றிதழ்களிலும் பெரிய இதழ்களிலும் தொடர்ந்து தரமான படைப்புகளை எழுதிவருகிறார். தமிழ்ச்சிறுகதைகளையும் தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து ’எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் ’திண்ணை’ இணைய இதழில் சிறுகதைகளில் பொதிந்திருக்கும் அழகியலையும் வாழ்வியலையும் இணைத்துப் பொருத்திப் புரிந்துகொள்ளும் விதமாக இவர் எழுதிய நூறு கட்டுரைகள் பரவலான வாசக கவனம் பெற்றவை. ஐம்பது தமிழ்க்கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணைய தளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை. 17 சிறுகதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு “பிரயாணம்” காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரது பாய்மரக் கப்பல் என்ற நாவல் இலக்கிய சிந்தனை விருது பெற்றது. பருவம் என்ற நாவலை கன்னடத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அக்காடமி விருது பெற்றவர். இவரின் சிறந்த சிறுகதைகள் முள், பேசுதல்.

தஞ்சை ப்ரகாஷ்

பிரகாஷ் பொதுவாக அறியப்பட்டிருப்பது சிறுகதையாளர், பதிப்பாளர், ஒரு கட்டுரையாளர், ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்பதாகத்தான். அவ்வளவாக அறியப்படாதவை அவரது நாவல்கள். தமிழ் நாவல் இலக்கியத்தில் அவரது ‘கரமுண்டார் வீடு, ‘மீனின் சிறகுகள்’ ஆகியவை முக்கியப் பங்களிப்புகள். மற்றவர்கள் பேசத் தயங்கும் பாலியலின் பல்வெறு முகங்களை வெளிக்காட்டியிருப்பதும் இவற்றின் சிறப்பம்சம். இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் ஒரு இலக்கிய இயக்கமாகவும் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் என்று அழைக்கப்படும் ஜி எம் எல் ப்ரகாஷ். பாலம் என்ற சிற்றிதழை நடத்தினார். வெங்கட் சாமினாதனுக்காகவே வெ சா எ என்ற இலக்கிய இதழை நடத்தினார். வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் பற்றி எரிந்த தென்னை மரம், மேபல்.

ந பிச்சமூர்த்தி

தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய் கருதப்படுபவர். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். கலைமகள் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற முள்ளும் ரோஜாவும் என்ற சிறுகதை மூலம் தமிழிலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ்ப் புதுக்கவிதைக்கு அடித்தளமிட்டு வளப்படுத்தியவர். ந பிச்சமூர்த்தி கதைகளை மூன்று தொகுதிகளாக மதி நிலையம் வெளியிட்டது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஞானப்பால், விஜயதசமி, பதினெட்டாம் பெருக்கு, விதை நெல், தாய், ஜம்பரும் வேஷ்டியும், மாயமான்.

எஸ் ராமகிருஷ்ணன்

மல்லாங்கிணற்றைச் சொந்த ஊராகக் கொண்ட இவரது முதல் கதையான “பழைய தண்டவாளம்” கணையாழியில் வெளியாகியிருக்கிறது.

ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம், உப பாண்டவம் ஆகிய நாவல்கள் சிறந்தவை. இவரது சிறுகதைகளை மூன்று தொகுதிகளாக உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார். இவரின் சிறந்த சிறுகதைகள் வேனல் தெரு, இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன, புலிக்கட்டம், தாவரங்களின் உரையாடல்

சி என் அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பேனா முனையின் வலிமையை நிரூபித்த எழுத்துத் தளபதி. அண்ணாவின் முதல் சிறுகதை ‘கொக்கரகோ’ என்பது. 1934ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்து நான்கு கதைகளைக் குடியரசு இதழில் எழுதியுள்ளார். மற்ற கதைகள் அனைத்தும் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழில் வந்தவை.அண்ணா தமிழ் சிறுகதையை உன்னத நிலையில் வைக்க வேண்டும் என்பதற்காகக் கதை எழுதியவர் அல்ல. அவருடைய நோக்கம் கருத்துப் பிரச்சாரம் என்பது தெளிவு. சமகாலத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பேசுவதன் வழியாக இவை பெருந்திரளைச் சென்றடையும் வாய்ப்புப் பெற்றவையாக உள்ளன. செவ்வாழை பொதுத் தளத்தில் மிகவும் பிரபலமான கதை. புலி நகம், பிடிசாம்பல், திருமலை கண்ட திவ்யஜோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில், இரும்பாரம், முதலிய வரலாற்றுச் சிறுகதைகளையும் அண்ணா படைத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் செவ்வாழை, தனபால செட்டியார் கம்பெனி

 

கோவை சங்கர்

 

Image result for தர்மராஜா யோகிபாபு

கேளுங்கள் கொடுக்கப்படும்….!

பரம பக்தனவன்
பட்டென்று போய்விட்டான்
கடவுள்மேல் குற்றமில்லை
‘ஐயனே தாங்கவில்லை
பேரிடரில் உழல்கின்றேன்
உடனேநீ காப்பாற்றெ’ன
அகமுருகி கேட்டதுவும்
தர்மராஜா எமனிடத்தில்.

Image result for அரசியல்வாதி கவுண்டமணி

பார்வை எங்கே…?

தோளிலே துண்டு போட்ட அரசியல்வாதி
இலவச வேட்டி கொடுப்பார் என்று பார்த்தால்
என்துண்டையும் அல்லவா உருவிச் சென்று விட்டார்..!

 

திருமந்திரம் பாடிய திருமூலர் வரலாறு

 

திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர்,   அண்ணாமலைப் பல்கலைக்கழக வித்துவான் க. வெள்ளைவாரணம் அவர்கள் திருமூலரைப் பற்றி விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை  எழுதியிருக்கிறார். 

அந்தக் கட்டுரையின் சாரமே இந்தக் கட்டுரை :

Image result for tirumular

சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய நூல்கள்  பன்னிரு திருமுறைகளாகும். அதில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது, திருமந்திரமாகும்.

இந்தத் திருமுறையை எழுதிய சித்தர் திருமூலரைப் பற்றி சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.

திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் நந்திதேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் சகல சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, தில்லை  ஆகிய திருத் தலங்களைப் பணிந்து சாத்தனூர் வந்தார்.

அங்கே பூசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலன் என்ற ஆயன் காவிரி சோலை அருகில் மாண்டு கிடந்தான். பசுக்களெல்லாம் அவனைச் சுற்றி நின்று கதறி அழுதுகொண்டிருந்தன.

அதைக் கண்டு வருந்திய சிவயோகியார் பசுக்களின் துயரைத் தீர்ப்பதற்காக  தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார்.

சுற்றி நின்ற பசுக்கள் யாவும் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் திரிந்து தத்தம் இல்லம் அடைந்தன.

அது சமயம் அங்கு வந்த ஆயனின் மனைவி, அவரை ஆயன் என்று எண்ணித்  தம் இல்லத்திற்கு அழைக்க திருமூலர் அவளைப்பார்த்து, “நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை` என்று சொல்லிவிட்டு சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார். பிறகு அவர் தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை.

இதுவும் சிவபெருமானின் ஆணையே என்பதை உணர்ந்தார். அதன்பின் அவ்வடிவிலேயே திருவாடுதுறை கோவில் அடைந்து அங்கே திருமந்திர மாலையாகிய செந்தமிழ் நூலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,

 

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,

நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து

வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்

சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே.

 

என்னும் திருப்பாடலைத் தொடங்கி, மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார்.

பின்னர் அவர் திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி பெற்றார்  எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற்றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

திருமந்திரம் படிப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பொருள் இருக்கும்.

திருமந்திரத்தைப் படிக்காதவர்கள் கூட திருமூலர் எழுதிய பல வரிகளைத் தெரிந்திருப்பார்கள்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”

“அன்பே சிவம்”

“யாம்  பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”  

“உள்ளம் பெருங்கோயில் ; ஊன் உடம்பு ஆலயம்”

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் “

“உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே “

தான் ஆயன் வடிவில் மாறியது சிவனருளால் திருமந்திர நூலை எழுதவே என்று கருத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

 

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது

முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.

 

திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப் பனுவற்பொருளை கேட்டுணர்ந்த மாணவர்கள்  மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயரினராகிய எழுவர் எனத் தெரிகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு.

இவர் காலத்தில்  தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின என்பதை இவரது பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம். அது மட்டுமல்லாமல் இவர் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்து பிரிவாக இருந்தது என்பதையும் இவரது பாடல் உரைக்கிறது. சங்க காலத்தில் பதினெட்டு மொழிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. தமிழ் நாடும் மூன்று மண்டலங்களாகத் தான் பிரிந்திருந்தது.

மேலும் இவர் தில்லையைப் பொன்னம்பலம் என்று குறிப்பிடுகிறார். பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பவன் தில்லைக்குப் பொன் கூரை  வேய்ந்தான். அதனால் திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.

Image result for tirumularதிருமூலர் தமிழ்  வடமொழி இரண்டிலும் சொல்லாட்சி பெற்றவர் என்பது அவரது பாடல் மூலம் நன்கு புலனாகிறது.

அவரது பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம் விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச நியாசங்கள் முத்திரை; பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம் என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும் அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் இடம் பெற்றுள்ளன.

திருமந்திரம் மற்ற திருமுறைகளிலிருந்து மாறுபட்டு நிற்பது படிக்கும் போதே புலனாகும்.  

இன்றைய பகுத்தறிவுவாதிகளின் பல கருத்துக்கள் திருமந்திரத்தில் ஆங்காங்கே தெரிவது மிகவும் ஆச்சரியமானது.

மனதைக் கவர்ந்த பதிவு

Image result for post in social media

 

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள் பதிந்த பதிவு.

 

👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!

👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!

 

 

 

அம்மா கை உணவு (17) – இனிப்பு வரிகள் – சதுர்புஜன்

இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிய வேண்டும்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019

 

 

 1. இனிக்கும் வரிகள் !

 

இனிப்பில் ஆயிரம் வகையுண்டு – எங்கள்

இல்லத்தில் இனிமை என்றுமுண்டு.

ஒன்றா இரண்டா எடுத்தியம்ப – அணி

அணியாய் வந்திடும் – ஒரு கணக்குமில்லை.

 

மைசூர் பெயரை தாங்கினாலும் – மைசூர் பாக்

எங்கள் இனிப்பு வகை.

ஜாங்கிரி என்று சொன்னாலும் – அது

கரைந்து போவது எம் வாயினிலே.

 

பல மொழி பேசும் மனிதருண்டு – ஆயின்

பாரதம் முழுதும் லட்டு உண்டு.

பல வகை மனிதர்கள் சேர்ந்ததுபோல் – இங்கே

லட்டிலும் பல்சுவை உண்டு உண்டு.

 

வாயில் கரையும் பயத்தம் லட்டு – சற்றே

பொற பொற எனும் ரவா லட்டு உண்டு.

முத்துமுத்தாய் உதிரும் பூந்தி லட்டு – வட

நாட்டினர் வழங்கிய லட்டு உண்டு.

 

அதிரசம் என்ற இனிப்பு வகை – அதை

மெல்ல ஆயிரம் கதை சொல்லும்.

அட சின்ன சின்ன எள்ளுருண்டை – அது

இனிப்பில் ஹைக்கூ பாடிடுமே.

 

பாதுஷா என்றால் பாதுஷாதான் – அது

இனிப்புக் குவியலின் அரசன்தான்.

பர்பி என்றொரு இனிப்பு வகை – அதில்

எண்ணிக்கையில்லா விதமுண்டே.

 

அல்வாவுக்கென்றே தனிக்கவிதை – இனி

பாடி வருவேன் ஒரு நாள்தான்.

பால்கோவாவும் திரட்டிப்பாலும் – புகழ்

பாட்டிலும் ஏட்டிலும் அடங்கிடுமோ ?

 

இன்னும் இன்னும் என்று எத்தனையோ.

இனிப்புகள் இங்கே உண்டன்றோ !

எத்தனை இனிப்புகள் இருந்தாலும் – என்

அன்னையின் நினைவே பெரிதன்றோ !

  

 

கிரேஸி மோகனுக்கு கவிதாஞ்சலி – சு ரவி

கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பர் தனது ஆற்றாமையைக் கவிதையாய்ப் படைத்து வெளியிட்டுள்ளார். 

இதோ அந்தக் கவிதை  வரிகள் :

Image result for கிரேஸி மோகன்

 

அழவு மியலா(து) அவன்நினைவாய் ஏதும்
எழுத முடியாது நெஞ்சம்- முழுதும்
துயர்மரத்துப் போச்சே விழி வெறிக்கலாச்சே!
அயர்ந்ததே அந்த ராத்மா!

கலகலக்க வைத்தே கவலை துரத்தி
உலகனைத்தும் உன்திறனால் வென்றோய்! – பலகலைகள்
தேர்ந்தவனே தேகான்ம பாவம் தொலைத்தவனே!
சோர்ந்து குலைந்ததென் நெஞ்சு!

மயிலைக் கபாலியைக் கற்பகத்தை என்றும்
துயிலும் பொழுதும் மறவோய்-வியப்பால்
உனையுலகம் போற்ற உனையென்றும் கர்வம்
தினையேனும் தீண்டிய தில்லை!

எனக்கிரங்கல் வெண்பா எழுதுவாய் என்றே
நினைத்திருந்தேன் ஏமாற்றி விட்டாய்- நினக்கிரங்கல்
நானெழுத நேர்ந்ததே நண்பனே, நீருக்குள்
மீனழுதாற் போலழுதேன் நான்!

எங்கோபிறந்தோம் எவர்மடியிலோ வளர்ந்தோம்
இங்கேன் மனத்தால் இணைந்தோம்நாம்- கங்குகரை
இல்லாக் கடல்போல் இருள்கவிந் தென்நெஞ்சில்
பொல்லாப் பிரிவுத் துயர்தரவோ-நல்லோய்
சிரிப்புக் கிறையாய் வலம்வந்த தேகம்
நெருப்புக் கிரையா வதோ!

நேற்றோ நினைவில்லை உன்னுள் கவிதையெனும்
ஊற்றுக்கண் கண்டு திறந்துவிட்டேன்- ஆற்றலுடன்
காட்டாறு போலக் கவிபொழிந்தாய்! மீண்டுவர
மாட்டாயோ ஏங்கும் மனம்!

என்னை‘ குரு’வென்(று) அழைப்பதுவோ? நண்பனே,
என்னைநீ விஞ்சிப்போய் எத்தனையோநாளாச்சு!
இன்னமும் என்னை உயர்த்தி உரைக்குமுன்
அன்புக்(கு) அடிமையடா நான்!

இன்னுமோர் நூறாண்டிரு நண்பா எம்நெஞ்சில்
என்றும்பதினாறாய்ஏற்றமுற!- குன்றாக்
கவிதை, நகைச்சுவை, ஓவியத்தால் வாழும்
புவியினில் உன்றன் புகழ்!

“எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்!
தொழுது போற்றி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாவும்
வழுவிப் பின்னால் ஏகியொரு வார்த்தை மாற்றம் செய்யாது
அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழிக்காது”

ஆம்; சற்றும் இரக்கம் காட்டாமல் விதியின் கரம் ஒரு முடிவுரையை எழுதிச் சென்றுவிட்டது.
என் ஆருயிர் நண்பன் இப்போது நினைவுகளிலும், புகைப்படங்களில் மட்டுமே!

அவகாசம் அளிக்காமல் உடனே பிரிந்துசெல்ல அப்படியென்ன அவசரமடா உனக்கு?
யாருன்னை அப்படி அழைத்துக்  கொண்டது?

போதுமெனத் தீர்மானித்துப் புறப்பட்டுச் சென்றாயா?
நோயிற் படுத்திருந்தால் நோன்பிருந்து மீட்டிருப்போம்!
நாற்றிசையும் சுற்றி அமுதம் கொணர்ந்திருப்போம்!
வாய்ப்பே அளிக்காமல் வாய்க்கரிசி போடவைத்தாய்!

வெண்பா எழுதாமல் விண்ணுலகம் போகலாமா?
ஓவியங்கள் தீட்டாமல் விரல்கள் ஓயலாமா?
பெருமாள் மேல் நீபடைத்த வண்ணவிருத்தங்கள்
அருமையிலும் அருமையடா! அவையெல்லம் இசைவடிவில்
உலகெலாம் ஒலிக்க நீகேட்க வேண்டாமா?

கே.பி.டி. சிரிப்புராஜ சோழனை மேடையிலே
நாடகம் ஆக்கித் தருகின்றேன் என்றனக்கு
நீஅளித்த வாக்கை நிறைவேற்ற வேண்டாமா?

மலைமகளும் ,கலைமகளும், அலைமகளும், நீபடைத்த
வெண்பாவைப் புத்தகமாய் விஜய தசமியன்று
பார்க்கப் பொறுமையின்றி உனையங் கழைத்தாரோ!

மாலையிலும், இரவினிலும் தொலைபேசி ஒலித்தாலே
நீயழைக்கிறாயென்று ஓடோடி நான்வருவேன்.
இனியந்த அழைப்பு வாராதே, என்செய்வேன்!
காலை எழுந்தவுடன் கேசவ் ஓவியமும்
கண்ணன் வெண்பாவும் மின்னஞ்சல் கொண்டுவரும்!
இனியந்த வெண்பாக்கள் வாரா! வெறுமையடா!

எல்லாம் மறக்க நினைத்தால், ஓய்வெடுக்கப்
புனா நகருக்குப் புறப்பட்டு வந்துவிடு.
ஷீரடியின் நாயகனைப் பண்டரியின் விட்டலனைச்
சேர்ந்துசென்று தரிசிப்போமென்றழைத்தேன், சரியென்றாய்!
சனிக்கிழமை சரியென்றாய், திங்கள் சரிந்துவிட்டாய்!

வார்த்தை தவறுவது சரியோ, சம்மதமோ!
சொல்ல முடியவில்லை; சொல்லில் அடங்கவில்லை;
சோகச் சுவடுகளைச் சுமக்க முடியவில்லை!

உன் ஓவியங்களையும், உன் கவிதை , உன்வசனம்
உன்னுயர்வு, உன் வளர்ச்சி, உன் பெருமை,சாதனைகள்
எல்லாமே என்னுடைய தென்றே இறுமாந்து
நெஞ்சு நிமிர்ந்திருந்தேன்- இன்று நிலைகுலைந்தேன்!

இதுதான் வாழ்க்கை நியதியென்று விரக்தியுடன்
வேதாந்தம் பேசி வீடு திரும்பிவிட்டோம்!

ஆடிக் களைத்தாலும், அழுது களைத்தாலும்
அடுத்தநாள் வேலைகளைப் பார்க்கத் தொடங்குகிறோம்!

ஆம்;

“இருந்து சென்ற முன்னோரின் இடத்திலெல்லாம் நாம் இன்று
விருந்து செய்து வாழ்கின்றோம் விகடம் சொல்லி மகிழ்கின்றோம்!
இருந்த இடம் விட்டு யாமும் இனி எழுந்து சென்றால் இங்கிருந்து
விருந்து செய்வார் யார்,யாரோ!விகடம் சொல்வார் யார் யாரோ!!”

அமைதி கொள் நண்பா!
அஞ்சலியுடன்,

சு.ரவி

ஆத்மாநாம் நினைவுகள் – வைதீஸ்வரன்

 

(முகநூலிலிருந்து)

Image result for கவிஞர் வைதீஸ்வரன்Image result for ஆத்மாநாம்

 

1984ம் ஆண்டு கவிஞர் ஆத்மாநாம் நம்மை விட்டு அதிர்ச்சி தரும் விதமாக பிரிந்தார். அப்போது அவருக்கு பாரதியாரை விட இன்னும் குறைந்த 33 வயது. அந்தக் குறுகிய ஆயுளுக்குள் அவர் விட்டுச் சென்ற கவிதைத் தொகுப்புகளின் மூலமும் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் அவர் பரிமாறிக் கொண்ட சம்பாஷணைகளின் மூலமும் கொஞ்சம் பூடகமாகத் தெரிந்த அவருடைய குடும்ப நிலைமைகள் மூலமும் அவருடைய மானஸீக உலகம் ஒன்று நமக்குத் தட்டுப் படுகிறது.

ஏதோ விதி வசம் போல் ஆத்மாநாமிடம் நான் சில மாதங்களுக்கு மேல் பழகியதில்லை. அந்த சில மாதங்களும் அவர் தனக்குள் ஒரு கவிஞரை கண்டடைந்து கொண்டிருக்கும் பட்டுப்புழுக் காலமாக இருந்தது.

நான் திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அறைக்கு சென்று வந்த சில நாட்களில் அவர் மூலையில் அமைதியாக பணிவுடன் அங்கே நிகழும் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு தீவிர சிந்தனை வயப்பட்டவராக அமர்ந்திருப்பார்.

74க்குப் பிறகு நான் குடும்ப பிரச்னைகள்..மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தனியனாகி விட்டேன்.
“ ழ ” பத்திரிகை தொடங்கிய காலத்தில் கவிதை கேட்டு எனக்கு இரண்டொரு முறை கடிதங்கள் எழுதினார். நான் அப்போது எதுவும் எழுதாமல் இருந்தேன்.

ஆத்மாநாம் மன உபாதைகளால் தள்ளப்பட்ட வேதனைகளின் வலிகளுக்கு ஈடான துன்பங்களை நான் உடல் உபாதை காரணமாக அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தேன். அது இங்கே அவசியமில்லாத விவரம்.

ஆத்மாநாம் படைப்புகளை மீண்டும் வாசிக்கும் நல்வாய்ப்புக் கிட்டிய போது ஒரு நல்ல இலக்கிய நண்பனை நுண்மையான தனித்தன்மையான பார்வையுள்ள படைப்பாளியின் அன்னியோன்யத்தை இழந்து விட்டதான சோகம் எனக்குள் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான்? அவன் பரிணாமத்துக்கு ஆதாரமான தூண்டுதல் அல்லது சூட்சமமான வீர்யம் எதுவாக இருக்க முடியும்?

யோசிக்கும்போது அநேக சமயங்களில் அது புறவாழ்க்கைக்கும் வாழ்க்கை பற்றிய லட்சிய தரிசனங்களால் ததும்பிக் கொண்டிருக்கும் அவன் சித்தத்துக்கும் இடையே ஏற்படுகின்ற தீராத ஒவ்வாமை தான் என்று தோன்றுகிறது. விடுதலைக்கு ஏங்கும் ஆத்மாவின் வெளிப்பாடுகளாக இந்த வாழ்வின் மீதும் மக்கள் மீதும் ஏற்படுகின்ற அக்கறை காரணமாக வெடிக்கும் தார்மீகக் கோபமாக விரக்தியாக அவன் கவி வார்த்தைகள் வெளிப்படுகின்றன

ஆத்மாநாம் கவிதைகளில் அவன் வாழ்வில் எதிர் கொண்ட நிராகரிப்புகளும் சகஜமான சமரசங்களுக்கு பணிந்து போகத் தெரியாத எளிமையான நேர்மையான மனப்பாங்கும் ஒரு ஆக்க பூர்வமான ரசாயன மாற்றமடைந்து சிறந்த நவீனக் கவிதைகளாக பரிணமிக்கிறதை நான் பார்க்கிறேன்.

“” மறுபரிசீலனை “” என்று ஒரு கவிதையில் சில வரிகள்

நான் மனிதன் தானா என்று யோசித்துக் கொள்ளும் நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக் கொண்ட மீன் முள்ளென 
பச்சைப் புல் வெளியில் சிக்கிக் கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப் பறக்கும் பிணந்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்

******************

“ காரணம் ” என்று இன்னொரு கவிதை

எதிர்த்து வரும் அலைகளுடன்
நான் பேசுவதில்லை……..
எனக்குத் தெரியும் அதன் குணம்
பேசாமல் வழி விட்டு ஒதுங்கி விடுவேன்.
நமக்கு ஏன் ஆபத்து என்று!..

மற்றொரு நாள்
அமைதியாய் இருக்கையில் 
பலங்கொண்ட மட்டும் 
வீசி எறிவேன் கற்பாறைகளை!
அவை மிதந்து செல்லும்
எனக்குப் படகாக,
**************

ஆத்மாநாமின் கவிதைகள் அனைத்துமே ஒரு அரூப நிலைக்கு உலக வாடைகளற்ற சரீரமற்ற சூழலுக்கு தள்ளி விட வேண்டுமென்ற தீராத தாகத்தை உட்கொண்ட படைப்பாக எனக்கு உணர முடிகிறது. நான் வாசித்த 100 கவிதைகளீல் அதிக பட்சமானவை உயிர் விடுதலையையே ஸ்மரிக்கின்றன.

ஆனால் எந்தக் கவிதையும் வெறும் பிரலாபக் குரலாக ஒப்பாரிகளின் நகலாக துக்கத்தை உற்சவமாக்கும் சாதுரிய ” ஆலாபனைகளாக ” முடங்கி விடாமல் கவிதைகளாக நிலைத்து நிற்கின்றன.

இன்றைய படைப்பு சூழலில் அடிக்கடி நம் கவனத்தை சீண்டுவது ஒரு கவிதை எவ்விதம் தன் கருப் பொருளான பிரச்னையை சரிவரக் கையாளாமல் தோல்வி யடைகிறது என்பது தான்!

ஒரு கலைப் படைப்புக்கும் அது கையாளும் பிரச்னைக்கும் உள்ளுணர்வால் தீர்மானிக்கப் பட்ட ஒரு பொருத்தமான தூரம் அவசியம்
அந்த பிரக்ஞை சார்ந்த இடை வெளி தான் கவிதையின் தரத்தை தெரிவிக்கிறது

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் இந்தப் பான்மையில் வெற்றி பெற்றிருக்கின்றன

ஒரு கவிஞன் ஆளுமையின் பின்னணியில் புதிய பார்வைகளை பிரதிபலிக்கும் கவிதைப் பத்திரிகையாக ” ழ ” என்ற பிரசுரத்தைத் தொடங்கி அவர் ஆற்றிய மறைமுகமான சேவை மிக முக்கியமானது. இந்த சோதனை முயற்சியில் சேர்ந்து பங்காற்றிய ஞானக்கூத்தன் ராஜகோபாலன் அழகியசிங்கர் யாவருக்குமே இப்பத்திரிகை பயன் தரக் கூடிய அனுபவமாக அமைந்ததுள்ளது..

இப்படிப்பட்ட சீரிய படைப்பாளி இத்தனை இளம் வயதில் மாய்ந்திருக்க வேண்டாம் என்று மனம் வேதனைப்படுகிறது. ஆனால் வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்பதே நாம் அனுபவத்தில் காணும் உண்மை. { Rimbaurd } என்கிற ப்ரஞ்ச் கவிஞன் 19 வயதுக்குள் அருமையான கவிதைகளைப் படைத்து விட்டு இலக்கியத்தையே துறந்து விட்டு பாக்கி ஆயுளை வேறு தேசத்தில் எடுபிடி வேலைகள் செய்து கழித்து விட்டு மாய்ந்து போனான்.

ஆத்மாநாம் ஜூலை மாதத்தில் ஒரு நாள் இறந்து போனார். அப்படி ஒரு ஜூலை மாதத்தில் என் மனம் இயல்பாக அவரைப் பற்றி நினைத்துக் கொண்டு தன்வயமாக ஒரு கவிதையும் எனக்கு எழுத வாய்த்தது 
அந்தக் கவிதையை கீழே தந்திருக்கிறேன் அவருக்கு என் அஞ்சலியுடன்

ஆத்மாவின் குரல்
————————-
கிணற்றில்
என்றோ விழுந்த என் நிலவைத்
தேடிப் போனேன்.; ஒரு நள்ளிரவில்.
நிலவு இன்னும் 
தொலைந்து விடவில்லையெனத் தெரிந்தது.
நடுங்கிய நீர் பிம்பமாய்….
குரல் கேட்டவுடன் நிலவு போல் இல்லை.
“ நீ யார் முகம் என்றேன்? “ 
“உன் முகத்திற்குள் பிறந்த முகம்! “
என வட்டமாய் ஒலித்தது
நீர் மட்டத்தின் மேல்.
சுற்றி வளைக்காதே!. சொல்லு. 
எனது ஆத்மாவா நீ? “ என்றேன்.
“ஆத்மா- நாமே ” என்றது. வளைந்து.

“அடாய்! அன்று
அலையில் தெறித்த மீன்களைப் போல்
அழகான சில கவிதைகளை 
தமிழுக்குத் தந்து விட்டு
நழுவி விட்டாயே……
இருட்டின் ஈரமான ஆழத்திற்கு.. ஏன்? என்றேன்

அது இன்னும் 
எனக்கே வெளிச்சமாகவில்லை
கவிதையின் விந்துகள் போல…”
எனக் குறும்பொலி செய்தது…
……….ழழ் ழழ ழழ்ழா………………….

**************

வைதீஸ்வரன்

என்னை மீண்டும் கேட்காதே!- தில்லைவேந்தன்   

image
எங்கே அந்த மின்னலென
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் இடையாக
     இருக்கும் தன்மை அறியாயோ?
எங்கே அந்த  மேகமென
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே கரிய அருவியென
     இறங்கும் கூந்தல் வேறெதுவோ?எங்கே அந்தத்  தென்றலென
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே  உன்றன் நடையழகில்
     இயையும் மென்மை அதுவன்றோ?
எங்கே அந்த  நிலவெனவே
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே முகமாய் வடிவெடுத்த
       எழிலை எதுவென்று எண்ணிவிட்டாய்?எங்கே அந்தத் தேனெனவே
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் சொல்லினிலே
     இருக்கும் இனிமை வேறென்ன?
எங்கே அந்த வண்டெனவே
     என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்னைச் சுற்றிவரும்
     என்றன்  உள்ளம்  அதுவன்றோ?
    
   
    

அத்திவரதர்

Related image

 

1939 மற்றும் 1979-ம் ஆண்டுகளில் வெளியான அத்தி வரதர் 01/07/2019 மீண்டும் நமக்கு  அருள்பாலிக்க ஜூலி 1, 2019 அன்று வந்திருக்கிறார். 

அத்திவரதர், ஜூலை 1 லிருந்து 48 நாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்..

காஞ்சிபுரம் ஶ்ரீ வரதராஜ பெருமாள்  ஆலயத்தில் அனந்தசரஸ் என்ற திருக்குளம் இருக்கிறது.

இந்த திருக்குளத்திற்குள் அத்திவரதர் பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்கிறார்.

 

 

இவர் அத்தி மரத்தால் ஆனவர். இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.

இறுதியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளின் ஆதி மூர்த்தம்தான் அத்தி வரதர். தற்போது நாம் கருவறையில் தரிசிப்பது வரதராஜப் பெருமாள் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அவர் பழைய சீவரம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தேவராஜப் பெருமாள்தான்.

இந்தக் கோயிலின் ஆதி மூர்த்தியான அத்தி வரதர் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர்.

அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

அத்தி வரதரின் புராண வரலாற்றை இங்கே தெரிந்துகொள்ளலாமே.

ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார்.

தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை.

சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்குப் பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார்.

சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள்.

பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார்.

வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள்.

பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது.

தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார்.

தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்’ என்ற திருப்பெயர் கொண்டார்.

ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார்.

எனவே, அதே நாளில் பிரம்ம தேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார்.

இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.

பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது.

அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.

பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார்.

யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார்.

வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார்.

அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார்.

யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது.

அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.

பிரம்மதேவருக்குப் பெருமாள் கட்டளையிட்டபடி, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்து நீரை எல்லாம் இறைத்து விட்டு பெருமாள் மேலே எழுந்தருளுவார்.

சயன மற்றும் நின்ற கோலமாக 48 நாள்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவரைத் தரிசிக்க முடியும் என்பதால் அப்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிப்பது மோட்சத்தை அளிக்கும் என்பார்கள்.

இரண்டாவது முறை யாரேனும் தரிசித்தால் வைகுந்த பதவி பெறுவார்கள் என்பதும் ஐதீகம்.

மூன்று முறை தரிசித்த மகா பாக்கியவான்களும் சிலருண்டு

 

தவறின்றி தட்டச்சுவோம் வாருங்கள் -கிருபானந்தன்

 

தமிழ் எழுதி வருபவர்களில் பலர் இப்போது கணினியைத்தான் பயன்படுத்து கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் இப்போது தட்டச்சாளர்  ஆகிவிட்டார்கள். முறையாக தமிழ் தட்டச்சு பயின்று தமிழில் தட்டச்சு செய்பவர்கள்  மிகக் குறைவு.  தொழில் முறையில் தட்டச்சு செய்யும்  நபர்களும் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளார்கள்.

வலைப்பூக்களில் தொடர்ந்து எழுதுவோர் பல்வேறு விசைப் பலகைகளையும்  TAM TAB TSCu TSCii போன்ற பல எழுத்துரு வகைகளையும் பயன் படுத்தி வந்தார்கள்.  இப்போது ஒற்றை குறியீடு அல்லது ஒழுங்குக்குறி எனப்படும் யூனிகோட் முறைதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதுவும்  தங்க்லீஷ் எனப்படும் ஒலியை வைத்து தட்டச்சு செய்வதற்கு பலரும்  பழகிவிட்டார்கள். முகநூல்  போன்ற செயலிகளிலும் இது பயன்பட்டு வருகின்றது. கூகிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இதற்கான மென்பொருளை இலவசமாக அளித்து வருகின்றன.

தட்டச்சு ஓரளவிற்கு சீரமைப்பிற்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்த மிகப் பெரிய தேவை பிழைதிருத்தம். தமிழக அரசால் மென் தமிழ் சொல்லாளர் என்ற மென்பொருள் வெளியிடப்பட்டிருந்தாலும் இது குறுந்தகடு மூலமாகவே நமது கணினியில் நிறுவிக்கொள்ளமுடியும். இது பரவலாகப் பயன்படுத்தபடுகிறதா என்று தெரியவில்லை. Learnfun System என்றொரு அமைப்பும் ஒரு பிழைத்திருத்தியை உருவாக்கி இருக்கிறது. இதன் பயன்பாடு மற்றும் நிறைகுறைகளும்   அவ்வளவாக அறியப்படவில்லை.

பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் விரும்பி உபயோகித்துப் பயனடைவது இணையத்தில் உபயோக்கிக்கூடிய http://vaani.neechalkaran.com/ என்னும் இணைய தளம்தான். குவிகம் மின்னிதழ் இதனால் மிகவும் பயனடைந்து வருகிறது

இந்த மென்பொருளை உருவாக்கிய திரு ராஜாராமன் அவர்கள் தொடர்பு தற்செயலாகக் கிடைத்தது. குவிகம் இலக்கிய வாசலின் ஜூன் மாத   நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இணையத்தில் இயங்கும் பிழை திருத்தியைத் தவிர தமிழுக்காக பல மென்பொருட்களையும் உருவாக்கியிருக்கிறார். தமிழில் ஒற்றைக்குறியீடு முறையில் தட்டச்சு  செய்வோருக்கு பயன்படும் மென்பொருட்களும்  அவற்றின்   இணைய முகவரிகளும் பின் வருமாறு.

 

தமிழ் எழுத்துப்பிழை திருத்தம் செய்ய இதனைப் பயன்படுத்தலாம்.

http://vaani.neechalkaran.com

 

பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் தாமதமாக வாய்ப்பு உண்டு என்பதால் ஒரு சமயத்தில் சில பக்கங்களே இதில் பிழைதிருத்த இயலும்.  இணையம் இன்றி பயன்படுத்த மென்பொருளும் உள்ளது. இது தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்ட     http://www.tamilvu.org/en/content/tamil-computing-tools

பல நாட்களாக பழக்கத்தில் இருந்துவரும் எழுத்துருக்களை தேவைப்பட்ட எழுத்துருவாக மாற்றிக்கொள்ள ஒரு தளம் உள்ளது.

http://dev.neechalkaran.com/oovan

இது NHM அழகிபோன்ற மென்பொருட்களையும்  http://www.suratha.com/reader.htm  , https://kandupidi.com/converter/ இணைய தளங்களையும் போன்றது

 

200க்கும் மேற்பட்ட தமிழ் யுனிக்கோட் எழுத்துருக்கள் கிடைக்கும் இணைப்புகளை கீழ்கண்ட தளத்தில் தருகிறார் ராஜாராமன்.

http://oss.neechalkaran.com/tamilfonts/

 

தட்டச்சு செய்பவற்றை ஒலிவடிவத்தில் மற்ற மொழி எழுத்தாக மாற்றும் ஒரு தளம்

http://macrolayer.blogspot.com/p/indic-transliteration.html

 

சந்தி இலக்கணத்தையும் எளிதில் ஒருவர் புரிந்து கொள்ள வழிகாட்டி மரம் ஒன்றும் உருவாக்கியுள்ளார். இது மிகுந்த பயனை அளிக்கக்கூடியது

http://tree.neechalkaran.com/p/sandhi.html

 

மேலும் இரு வித்தியாசமான செயலிகளை இவர் தயாரித்திருக்கிறார்.

a

கோலம் வரையும் செயலி

http://dev.neechalkaran.com/p/kolam.html

ஆடுபுலி ஆட்டம் விளையாடும் செயலி

http://dev.neechalkaran.com/p/aadu-puli.html

 

இளைஞர் ராஜாராமன் உடன் குவிகம் இல்லத்தில் மேற்கண்ட பயன்பாடுகளை தெரிந்துகொள்ள ஒரு “HANDS ON” வைக்கலாமா? உங்கள் கருத்து தேவை.

 

நண்பரைத் தொடர்புகொள்ள

திரு ராஜாராமன்
neechalkaran@gmail.com

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

இது தொற்று வியாதியா? பரம்பரை வியாதியா?
மாலை ஏழு மணியிருக்கும் – மூன்று தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் – மாமியார், மருமகள், பெயர்த்தி – என் கிளினிக் வந்தார்கள்.
நான்கு வயதுப் பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க மருமகள்! சுமார் ஐம்பது வயதுக்கருகில் இருந்த மாமியார் முகம் கொஞ்சம் சோர்ந்திருந்தது!
மகளின் மூக்கில் சளியுடன், புண்ணாகிப் போயிருந்த மூக்கு நுனியைக் கையில் வைத்திருந்த ‘வெட்’ டிஷ்யூ பேப்பரால் பட்டும் படாமலும் ஒற்றித் துடைத்துக் கொண்டிருந்தார் மருமகள்.
எனக்கு வலது பக்கம் ஸ்டூலில், மாமியாரும், எதிரில் நாற்காலியில் மருமகள் தன் மகளுடனும் அமர்ந்தனர்.
என்ன என்பதைப்போல் நான் பார்க்க, “அம்மாவுக்குதான்” என்றார் மருமகள்.
கைகளிலும், கால்களிலும் வெடிப்பும், ஆங்காங்கே ‘சொர’ ‘ சொர’ என்ற தோலும், கை மருந்தாகத் தடவிய பச்சைக் களிம்பின் மிச்சம் மீதியும் என்னைப் பார்த்து முறைத்தன.
“ம், எவ்வளவு நாளா இருக்கு?”
“கொஞ்ச நாளாவே இருக்கு”
“ஒரு இரண்டரை நாளா இருக்குமா?” – தோராயமாகக் கூட எப்போதிருந்து என்று சொல்லாதவர்களுக்கு என் பொதுவான கேள்வி இது!
சிரிப்பும், கடுப்புமாய் ஒரு முக பாவத்துடன், “ரெண்டு, மூணு வருஷமாய் இருக்கு!”
“எப்படி ஆரம்பித்தது?”
“தெரியலை. தண்ணீல நிற்கறதாலயும், பத்து பாத்திரம் தேய்க்க ………. யூஸ் பண்ணறதாலயும் வரதுன்னு நெனச்சேன். அப்பொப்ப புண்ணாயிடும். எரிச்சலும், வலியும் படுத்தும்”
“சுகர் உண்டா?”
“கிடையாது. போன வாரம்தான் செக் பண்ணினேன்”
“மேல என்ன பூசினீங்க?”
“வெறும் தேங்காய் எண்ணைதான் – நேத்திக்குதான், வீட்டு செர்வண்ட் மெய்ட் மஞ்சளும், வேப்பிலையும் அரைத்துப் போட்டாள்”
“சந்தோஷம். வீசிங், டஸ்ட் அலர்ஜி ஏதேனும் உண்டா?”
“அதெல்லாம் ஒண்ணும் கிடையாது சார் – இந்தக் கை,கால் அலர்ஜிதான் ,அரிச்சு திரும்பத் திரும்ப கிளைச்சிக்கறது”
நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்பவர்களுக்கு வரக்கூடிய ‘இரிடண்ட்’ டெர்மடைடிஸ் – உடன் பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் சில பொடிகளால் வரும் ‘கான்டாக்ட் டெர்மடைடிஸ்’, அதன் மேல் வரக்கூடிய பாக்டீரியல் / பூஞ்சை தொற்று – எல்லாமாகச் சேர்ந்து வரக்கூடிய கரப்பான் வகைத் தோல் வியாதி இது. கூடியவரை கை கால்களை ஈரமில்லாமல் வைத்துக்கொள்வது (’எப்படியாம்?’ என்று என்னை முறைக்கும் மகளிர், காய்ந்த கைப் பிடித் துணியையோ, அணிந்திருக்கும் நைட்டியையோ உபயோகித்து அவ்வப்போது துடைத்துக் கொள்ளலாம், துணி கிளவ் உபயோகிக்கலாம் – அல்லது அலர்ஜியே இல்லாமல், நியூஸ் பேப்பர், முகநூல் போன்றவற்றில் குனிந்தபடி மூழ்கியிருக்கும் கணவரை பாத்திரம் கழுவுதல், புளி கரைத்தல் போன்ற சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொல்லி, உங்கள் கையை ‘டிரை’யாக வைத்துக் கொள்ளலாம்!), ‘மாய்சரைசிங் லோஷன்களை உபயோகிப்பது, அலர்ஜிக்கும் பொடி, திரவங்களை தவிர்ப்பது போன்ற வழிகளை ஆராயலாம்!
போதிய அறிவுரைகளைச் சொல்லி, மருந்து மாத்திரைகளுடன் மாமியாரை அனுப்பிவைத்தேன். வெளியே சென்ற மருமகள், குழந்தையுடன் தான் மட்டும் தனியே திரும்ப உள்ளே வந்தார். குழந்தையின் மூக்கைத் துடைத்தவாறே, என்னைப் பார்த்து, ‘ சார், அம்மாவுக்கு வந்திருப்பது ‘ஒட்டுவார் ஒட்டி’ இல்லையே? ‘ என்றார் கவலையுடன்.
“இல்லையம்மா” என்றேன்.
“அதுக்கு இல்லே, குழந்தைக்கும் நாலு நாளா இப்படிப் புண்ணாகிறது – மூக்கு, மேல் உதடு, கை, தொடை ன்னு எல்லா இடத்துலேயும் வருகிறது. அம்மாகிட்டேந்து வந்திருக்குமோன்னு ஒரு கவலை”
“அதற்கான வாய்ப்புகள் குறைவு. இது குழந்தைகளுக்கு வரக்கூடிய சாதாரண புண் – இம்பெடைகோ – சரியாகக் குளிப்பாட்டாததனாலயும், மூக்கு சளியை ஈஷிக்கொள்வதாலயும், புன்ணிலிருந்து வரும் நீர் மற்ற இடங்களில் படுவதாலும் வரும் பாக்டீரியல் தொற்று” என்று கூறி, அதற்கான ஆண்டிப்யாடிக் மற்றும் பூசிவதற்கு கிரீம் எழுதிக்கொடுத்து அனுப்பினேன். வெளியே போகுமுன் “ அம்மா குழந்தைய ஹாண்டில் பண்ணலாமா? குழந்தைக்கும் வந்திடுமா? எங்க வீட்டில் இதுமாதிரி யாருக்கும் கிடையாது” என்றார். குரலில் கொஞ்சம் அருவெறுப்பு கலந்த பயம் இருந்தது.
“அம்மாவின் ப்ராப்ளம் வேறு – குழந்தைக்கு வராது. குழந்தையை நன்கு குளிப்பாட்டி, மண்ணில் விளையாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூக்கில் வரும் சளியை ஈஷிக்கொள்ளாமல், துடைத்து விடுங்கள் – அது போதும் . ஆனாலும் அம்மாவை இரண்டு மூன்று நாட்கள் குழந்தையைத் தூக்கச் சொல்லாதீர்கள் – குழந்தையின் புண் அம்மவுக்கு வர வாய்ப்புகள் உண்டு” என்றேன். என்னை முறைத்தாற்போல் இருந்தது – தலையை சிறிது ஆட்டியவாறு அம்மணி வெளியே சென்றார்.
ஒருவர்க்கொருவர் வரும் வியாதிகள் – CONTAGEOUS AND COMMUNICABLE – தொடுதலால் வருபவை, வெளியில் இருக்கும் மாசு மற்றும் நோய்த் தொற்றுகளால் வருபவை எனப் பிரிக்கலாம்.
எல்லாத் தோல் வியாதிகளும் பரம்பரை வியாதிகளோ, தொற்று வியாதிகளோ அல்ல.
வீண் கவலைகள், வீட்டில் குழப்பத்தையே உண்டாக்கும்!