‘ஷாலு என் வைப் ‘ என்று என் குடும்பத்தைப் பற்றி ஒரு நகைச்சுவைத் தொடராக சும்மா எழுதிக்கொண்டிருந்த எனக்கு இப்போது ஒரு சீரியஸ் திருப்பம் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் இப்போது மிகப் பெரிய எலிப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
குவிகம் ஆசிரியரின் குரல் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
” நகைச்சுவைத் தொடர் என்று சொல்லிவிட்டு ஏதோ சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பினாத்திக் கொண்டே போகிறீர்களே? தேவையில்லாமல் மோடிஜியை இழுத்திருக்கிறீர்கள். யோகாவையும் நமது கலாச்சாரத்தையும் கிண்டல் செய்கிறீர்கள். பெண்களை மிகவும் கேவலப்படுத்துகிறீர்கள். ஹிந்து மதத்தையும் கோமாதா பூஜையையும் பஜ்ரங் பலியையும் தவறாகச் சித்தரித்திருக்கிறீர்கள். குழந்தைகள் மனதில் தீவிரவாத எண்ணத்தை விதைக்கிறீர்கள். ஆர்குமெண்ட் என்ற பெயரில் அராஜகம் செய்கிறீர்கள்.
இதனால் சில அரசியல் கட்சிகள் குவிகத்தைத் தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்கு அடுத்த மாதக் கதையில் சரியான பதில் சொல்லவில்லை என்றால் அத்துடன் கதை நிறுத்தப்படும். விட்டுப்போன செய்திகளை பொன்னியின் செல்வன் மாதிரி நாலைந்து கேள்வி-பதிலில் நானே முடித்து விடுவேன்”
மோடி, யோகா, பெண் சாமியாரிணி, கோமாதா அவற்றைப் பற்றி எழுதியதால் நான் ஹிந்துத்துவத்துக்கு விரோதி என்று யாரோ ஒருவர் பேஸ்புக்கில் முத்திரை குத்த அதை ஒரு ஆயிரம் பேர் லைக் வேற போட பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து கொண்டே போயிற்று. மக்கள் எழுதிய கமெண்ட்களை எல்லாம் படித்த பிறகு எங்கே போய் என் முகத்தை வைத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. அந்தக் காலத்தில் பிடிக்காதவர் போஸ்டருக்கு சாணி அடிப்பது போல இப்போ கமெண்ட் என்ற பெயரில் நம்மைக் கிட்டத்தட்ட உரிச்ச கோழி ஆக்கிவிடுகிறார்கள்.
உதாரணம் சொல்லும் போது கூட ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருக்கு. சல்மான் கான் ஏதோ உளறப் போக இப்போ கோர்ட் அது இதுன்னு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையா வந்திருக்கிற மாதிரி ஆகி விடக் கூடாது. இன்னும் கொஞ்சம் போனா ‘ இனிமே நான் கீ போர்டைத் தொட மாட்டேன். என் பிளாக்லே நானே வைரஸ் விட்டு அழிச்சுக்குவேன்’ அப்படின்னு அறிக்கை கொடுக்க வேண்டியிருக்கும். கந்து வட்டிக்காரங்களை விட இந்த கமெண்ட் போடற மக்கள் ரொம்பவும் மோசம். ஆராய்ச்சி செய்து நம்ம ஜாதியைக் கண்டுபிடித்து அந்த ஜாதியைச் சொல்லித் திட்டத் தொடங்கிவிடுவார்கள்.
சரி, பொதுவான விஷயத்தைவிட்டு என் பிரச்சினைக்கு வருவோம். குவிகம் ஆசிரியர் காப்புரிமை ஆசிரியருக்கே என்று சொல்லி எல்லாவற்றிக்கும் நான் தான் காரணம், தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கிற பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டார்.
அந்தக் காலத்தில் குமுதம் ஆசிரியர் எழுதிய ஒரு பிராக்டிகல் ஜோக்கிற்காக நீதிமன்ற வாசப்படியை அடிக்கடி மிதிக்க வேண்டி வந்ததை நினைத்து இப்போ இந்த ஆசிரியரும் ரொம்ப ஜாக்கிரதையா காரியம் செய்கிறார் .
இறைவி படத்தில தயாரிப்பாளரைக் கேவலமாகச் சித்தரித்திருக்கிறார் என்று தயாரிப்பாளர் சங்கம் கார்த்திக் சுப்பராஜ் மேல வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவில்லையா? அது மாதிரிதான்.
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ” பத்திரிகையைத் தடை செய்யவேண்டும் . எழுதிய எழுத்தாளரை குண்டா சட்டத்தில் உள்ளே போடவேண்டும் ” என்று சில நற்பணி மன்றங்கள் அவருக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பியிருக்கிறார்கள்.
மீடியாக்களும் இதை சும்மா விடவில்லை. ஊதி ஊதிப் பெரிதாக மாற்ற முயல்கிறார்கள்.
ஓர் அரசியல் தலைவர் இது ‘ வலையில் வளரும் விஷக் களைகள்’ என்று கவித்துவமாகத் திட்டினார்.
இன்னொருவர் ‘இப்படி எழுதறவங்களோட விரலை முறிக்கணும்னு’ ஜாடையா சொன்னார்.
இன்னொரு கூட்டணித் தலைவரோ எனக்கு எதிராக இணைய தளத்தில் ப்ரவுஸ் யாத்திரை போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார்.
மற்றொரு தேசிய மதச் சார்பற்ற கட்சியின் தலைவர்கள், மாறுபட்ட கருத்தைக் கூறியதால் அவர்கள் ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பது யாருக்குமே புரியவில்லை.
ஆங்கில சேனலில் என் தொடரைப் பற்றிக் கூறி அரைமணிநேரம் கார சாரமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு கட்சிப் பத்திரிகை ‘ ஆப்பசைத்த குரங்கு’ என்று என் படத்தைப் போட்டுக் கார்ட்டூன் போட்டது.
இன்னொரு பெரிய மனிதரோ ‘ இவன் தன்னை ஆர்.பி.ஐ. கவர்னர் என்று நினைத்துக் கொண்டு எழுதுகிறான் ‘ என்று என்னை மரியாதையாகச் சாடினார்.
என் நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச காலம் என்னைத் தலை மறைவாய்ப் போகும்படி வலியுறுத்தினார்கள். ஆபீஸில் என் பாஸ், இந்தப் பிரச்சினை முடியற வரைக்கும் ஆபீஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கவேண்டாம் என்று அன்போட எச்சரித்தார். மொத்தத்தில் என்னை -சாதாரணமா குடும்பக் கதை எழுதிய என்னை – ஒரு மெட்ராஸ் ஐ வந்தவன் மாதிரி -ஒரு தீவிரவாதி அளவில் மாற்றி விட்டார்கள். சில எழுத்தாளர் அமைப்புக்கள் எனக்காக வரிந்துகட்டி ஆதரவாகப் பேச அது எரிகிற நெருப்பில் எண்ணை விடுவதைப்போல ஆயிற்று.
‘ சரி, சக எழுத்தாளர் நண்பர்களிடம் யோசனை கேட்கலாம்’ என்று போனால் அவர்கள் என்னை மேலும் குழப்பமடையச் செய்துவிட்டார்கள். மன்னிப்பு அறிக்கை எழுதுவதிலிருந்து ஜனாதிபதிக்குக் கருணை மனு போடும் வரையான அத்தனை யோசனைகளும் வந்தன.
சரி குவிகம் ஆசிரியர் குழுதான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் குவிகம் அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கே ஆசிரியர், துணை ஆசிரியர், இணை ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழு என்று எல்லோரும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் கதவு சாத்தப்பட்டது. எல்லோரும் மிகுந்த யோசனையில் இருந்தார்கள். ‘இப்போ என்ன செய்வதாக உத்தேசம்?” என்று புதிதாக வந்த துணை ஆசிரியர் கேட்டார்.
” ஒரு வருஷத்துக்கு மேலா இந்தத் தொடரை நான் எழுதி வருகிறேன். இத்தனை நாளும் நீங்கள் அனைவரும் தான் இது நன்றாகப் போகிறது என்று சொல்லி என்னைத் தூண்டிவிட்டீர்கள். பேஸ்புக்கில் இதைப் பெரிதாக விளம்பரம் செய்து உங்கள் சர்குலேஷனை ஏற்றிக் கொண்டீர்கள். ‘ஷாலு ரசிகர்கள் மன்றம்’ என்று ஒரு வாசகர் வேறு பேஸ்புக் பக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது இப்போ பிரச்சினை என்று வந்ததும் எல்லோரும் என் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்க முயலுகிறீர்கள். இது நியாமா?”
“பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? ” என்று கேட்டார் ஆசிரியர்.
” எது பத்திரிகை தர்மம்? எழுத்தாளரைக் காவு கொடுப்பது தான் பத்திரிகை தர்மமா?’ நானும் சூடாகக் கேட்டேன்.
” இங்கே பாருங்க! இந்தப் பிரச்சினைக்கு நான் ஒரு வழி சொல்றேன். அதுபடி நீங்க செஞ்சீங்கன்னா நீங்களும் தப்பலாம் , நம்ம பத்திரிகையும் தப்பும்’ என்றார் குவிகம் ஆசிரியர்.
” என்ன ? என்ன ? என்று எல்லோரும் ஒருமித்துக் கேட்டனர். நானும் கேட்டேன்.
” இந்தத் தொடரை எழுதியதற்காக உங்கள் கைப்பட எழுதிய மன்னிப்புக் கடிதத்தை அட்டையில் போட்டுவிடுவோம். ‘இந்தத் தொடர் இனி வராது’ என்று நாங்களும் முதல் பக்கத்தில் போட்டுவிடுகிறோம்.”
“இது கோழைத்தனம். நாம் தைரியமாக இந்தத் தொடரைத் தொடர வேண்டும். இதனால் நாம் இழப்பது ஒன்றுமில்லை. எழுத்துரிமையைப் பறிக்க யாராலும் முடியாது. என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோமே?’ என்று ஒரு ஆலோசகர் குழுவில் உள்ள இளைஞர் ஒருவர் கூறினார். அவர் மூட்டிய தைரியம் மற்றவர்களையும் பற்றிக் கொண்டது – குவிகம் ஆசிரியரைத் தவிர.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் குவிகம் ஆசிரியர் மசிகிறவராகத் தெரியவில்லை. மற்றவர்களை எப்படி கன்வின்ஸ் செய்வது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
குவிகம் ஆசிரியருக்குப் புதிய யோசனை தோன்றியது. ” இதுவரை நீங்கள் ‘ஷாலு மை வைஃப் ‘ என்று எழுதிவந்தீர்கள். இப்போ ‘ என் ஹஸ்பெண்ட் என் எனிமி’ என்று ஷாலுவை எழுதச் சொல்வோமே?. பெண்ணீயமும் திருப்தி அடைந்த மாதிரி இருக்கும். சபாஷ் சரியான போட்டி என்று மக்களும் ரசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் சில மாதங்கள் கழித்து – மக்கள் எல்லாரும் மறந்த பிறகு ‘ஷாலு மை வைஃபை ‘ நீங்கள் தொடரலாம். குமுதத்தில அந்தக் காலத்தில சுஜாதா ஒரு கதை எழுதினார். அதில சில பிரச்சினை வந்ததுன்னு அதை அப்படியே நிறுத்திவிட்டார் ஆசிரியர். கொஞ்ச நாள் கழிச்சு அதே கதையை வேற பெயரில் சுஜாதாவே எழுதினார். மக்களும் ஏத்துக்கிட்டாங்க ‘ என்று வயா- மீடியாவுக்கு வந்தார்.
மற்ற ஆசிரியர்களும் இந்தப் புதுமைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
‘ஷாலுவையும் குருஜினியையும் கிண்டல் செய்து எழுதியதற்கு இந்தத் தண்டனை எனக்குத் தேவை தான்’ என்று நினைத்துக் கொண்டேன்.
” சரி ஷாலுவிடம் சொல்கிறேன்.” என்று சொல்லி விட்டுக் கிளம்பும் போதுதான் அந்த சம்மன் எஸ்எம்எஸ் . குருஜினியிடமிருந்து வந்தது. கிட்டத்தட்ட வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருந்தது அந்த எஸ் எம் எஸ். இது என்ன கிணறு வெட்ட தண்ணி வந்து அதிலேர்ந்து திமிங்கிலம் வந்த மாதிரி இருக்கே என்று பயந்து கொண்டே படித்தேன்.
என்னுடைய இந்தத் தொடரைப் படித்துவிட்டு ஷாலு என்னைப் பத்தி குருஜினியிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள் போலும்.
” நீங்கள் என் சிஷ்யையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காகவும், (அடிப்பாவி!) அவர்களின் கவுரவத்திற்குக் குந்தகம் ( குந்தகம் அப்படின்னா என்னா சார்) விளைவித்ததற்காகவும் உங்கள் மீது குருஜினி நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்குடன் ஒரு விசாரணைக் கமிஷன் வைத்திருக்கிறோம்.
ஜட்ஜ் ‘என்னம்மா இப்படி பண்ணறீங்க’ புகழ் விஜயலக்ஷ்மி அம்மையார்.
அடுத்த ஜூலை மாதம் 15ஆம் தேதி நீங்கள் ஆஜராகவேண்டியது. உங்கள் சாட்சியங்கள் ஷிவானி , ஷ்யாம், ஷாலுவின் அப்பா , அம்மா மற்றும் பிளாட்டில் இருக்கும் சில்க் ஸ்மிதா அவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருக்கிறது. உங்களுக்குத் தேவையானால் ஒரு வக்கீலை நியமித்துக் கொள்ளலாம். “என்னையும் என் குழந்தைகளையும் கேவலப்படுத்துவதற்காகவே இந்தத் தொடர் எழுதப்பட்டு வருகிறது . இதனை உடனே தடை செய்யவேண்டும் ” என்று புகார் கொடுத்த ஷாலு தனக்குத் தானே வாதிடுவதாக அறிவிப்பு அனுப்பியிருக்கிறாள்.
எனக்குத் தலை சுற்றியது. ‘குவிகம் பிரச்சினையை ஒருவாறு முடிக்கலாம் என்றாலும் குடும்பப் பிரச்சினை இப்போ எங்கேயோ போயிக்கிட்டிருக்கே. இது ரொம்ப ரொம்ப முக்கியமான சமாசாரம். இதற்கு உடனே முடிவு கட்டிவிட வேண்டும் ‘ ‘ என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்குப் போனேன்.
வீடு பூட்டியிருந்தது.
(அடுத்த இதழில் முடியும்) அனைவரும்: அப்பாடா!!!