அந்த ஒரு நிமிடம் . .
திரை விலக.
நல்ல சிவத்தின் மாணவன் மீது வெளிச்சம் . . .
(குழம்பிப் போயிருக்கும் மனநிலையில் அந்த மாணவன் சொல்வது) …
என்னால மாத்திரம் இல்லே. இந்த மெடிக்கல் காலேஜ் மாணவங்க யாரைக் கேட்டாலும் இதையேதான் சொல்லுவாங்க. எங்க டீன் நல்லசிவம் இதைப் பண்ணியிருக்க சான்ஸே இல்ல. அவரை மாதிரி ஒரு நல்ல மனுஷனை. ஒரு நல்ல டீனை தமிழ்நாட்டுல எந்த மெடிக்கல் காலேஜிலேயும் பார்க்கவே முடியாது.
(இப்பொழுது அவன் இடம் மாறி வெளிச்சம்படும் இன்னொரு வட்டத்தில். இப்பொழுது அவன் அவர் பக்கத்து வீட்டுக்காரனாக)
நல்ல சிவம் ஐயா எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடுதாங்க. . . ஒரு பெரிய மெடிகல் காலேஜ் டீன்னு அவரைப் பார்த்து சத்தியம் பண்ணி சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்க . . . அவ்வளவு சிம்பிளுங்க….. இவ்வளவு ஏங்க…. ரெண்டு வருஷம் முன்னாடி அவரு பொண்ணு கல்யாணம் நடந்ததுங்க. . ஒரு மெடிகல் காலேஜ் டீன் பொண்ணு கல்யாணம்னு யாராச்சம் அதை சொல்வாங்களா?
கோவில்ல வச்சுதாங்க மாப்ளை தாலிகட்டினாரு…. கூடவே அமெரிக்கா கூட்டிகிட்டுப் போயிட்டாரு.. நூறுபேருகூட மொத்தமாக இல்லீங்க கல்யாணத்துக்கு… அவரால மாத்திரந்தாங்க இப்படியெல்லாம் செய்ய முடியும். கூப்பிட்டவங்க எல்லாரையும் அவரு எப்படி கவனிச்சாரு. எல்லாம் கூடவே இருந்த எனக்குத் தாங்க தெரியும். அவரு போயி இப்படி செஞ்சாருன்னு சொன்னா, நம்பறா மாதிரியா இருக்குது?.
(ஒளி வட்டம் மாறுகிறது. வேறு இடத்திற்கு)
இப்பொழுது அதே மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவனின் தந்தையாக.
இவரைப் பத்தி முழுக்கத் தெரியாதவங்க என்ன வேணும்னாலும் பேசுவாங்க… யார் வேணும்னாலும் அதை நம்புவாங்க . . எங்களால முடியாதுங்க… ( கண்களை இலேசாகத் துடைத்தவாறே) இன்னிக்கு என் பையன் இதே மெடிகல் காலேஜில மூணாவது வருஷம் படிப்புங்க… கையில காசே இல்லாத குடும்பமுங்க…. கவர்மெண்ட்டு போடற சலுகையிலதாங்க என்னைய மாதிரி ஆளுங்க குடும்பமே நடக்குது.. மவன் படிப்புல கெட்டிக்காரனுங்க .. மேல டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டாங்க… ஊர்ல சில நல்லவங்க வழிகாட்டுதல்.. உதவி … இவரை வந்து பாத்தேனுங்க… பையன்கிட்ட சில கேள்விங்கதாங்க கேட்டாரு… நாளைக்கு காலேஜூக்கு வான்னாருங்க… ஒரு பைசா வாங்காம அட்மிஷன் என் புள்ளாண்டானுக்குக் கெடச்சுதுங்க… அவுரு கோட்டா… அது இதுன்னு ஊருல சொன்னாங்க. லட்ச லட்சமா கொடுத்தாலும் கெடக்காத சீட்டுன்னு சொன்னாங்க. இந்த மனுஷன் இப்படி செஞ்சிட்டாருன்னு சொல்றீகளே.. நாக்கு அழுகிப் போயிடுமிய்யா
(ஒளி வட்டம் மாறுகிறது)
ஒரு நிருபரா நான் இந்த செய்திய சேகரிச்சுகிட்டு வந்து எங்க எடிட்டர்கிட்ட கொடுத்தப்போ. அவரு தெகச்சிப் போயிட்டாரு… நல்லசிவத்தைப்பத்தி என் பத்திரிகைல இப்படி ஒரு செய்திய நான் எப்படிப்பா தீர விசாரிக்காம போட முடியும்?. அவனைப் பார்த்துட்டு முழுவிவரமும் தெரிங்சிக்காம நான் இந்த செய்தியை பிரிண்ட்டுக்கு அனுப்பவே மாட்டேன் .. பத்திரிகை சேல்ஸே படுத்தாலும் சரி. நான் மொதெல்ல அவனைப் பார்க்கணும்னு உடனே போயிட்டாரு. நேரமாயிகிட்டே போவுது. மார்னிங் எடிஷன் போயாவணும் மை காட் ! … எடிட்டர் கிட்டேர்ந்து ஒரு நியூசும் காணோமே.
(ஒளி வட்டம் சுழன்று சுழன்று நிற்கிறது)
(மையமாக… மையத்தில் மிகவும் அமைதியாக நல்லசிவம் நின்று கொண்டிருக்கின்றார். சலனமற்ற முகம் மெதுவாக உள்ளே எடிட்டர் வருகிறார். நல்லசிவம் மிகவும் சோர்ந்து. தளர்ந்து காணப்படுகிறார்)
எடிட்டர் :- ஒரு பத்திரிகை எடிட்டர்ங்கற முறைல. என் இன்ப்ளுயன்சைப் பயன்படுத்திகிட்டுத்தான் உங்கிட்ட பேசவே போலீஸ் பர்மிஷன் கெடச்சது. வாயயே தொறக்க மாட்டேங்குற… நல்ல சிவம் .. ப்ளீஸ் இன்னும் பதினஞ்சு நிமிஷந்தாண்டா இருக்கு… என்ன நடந்ததுன்னு சொல்லு சிவம். ப்ளீஸ்… நல்லசிவம் அவரைத் திரும்பி மௌனமாகவே பார்த்துவிட்டுப் பழைய நிலைக்கே வருகிறார்.
எடிட்டர் :- இந்த ஹரிகிட்ட கூட நீ நடந்ததை சொல்லலேன்னா அப்புறமா ஐம்பது வருஷமா நாமரெண்டுபேரும் பிரண்ட்ஸுன்னு சொல்லிக்கறதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும் சிவம். எனக்கு நல்லா தெரியும். நீ இப்படி பண்ணுற ஆளே இல்லை. எங்கியோ தப்பு நடந்திருக்கு. எனக்குத் தெரிங்சாகணும் ப்ளீஸ் .. சொல்லு சிவம்!
நல்லசிவம்:- (மெதுவாக அவரையே பார்க்கிறார்…) ஹரி .. . . ( நிறுத்தி நிதானமாக) இந்த சமூகத்துல ஒரு ப்ரெண்டு கிட்டியே சிலதெல்லாம் சொல்லமுடியாதுடா.. அதுலயும் நீ ஒரு பத்திரிகை எடிட்டர் வேற ..
ஹரிஹரன்:- ( சிவனையே பார்க்கிறார்) தெரியும் சிவம் . . . நானும் இந்த சமூகத்துல பொறந்து வளர்ந்தவன்தானே சிவம் . . . கணவன் – மனைவி உறவுங்கறது எவ்வளவு புனிதமானதுன்னு எனக்குத் தெரியாமலா உன் கேசுல என்ன நடந்ததுன்னு விசாரிக்க நேரவே ஓடி வந்திருக்கேன். ஆமா. செண்பகம் கூட ஏதாவது சண்டையா?
நல்லசிவம் :- (பெருமூச்சு விட்டவாறு. . மெதுவாக இங்குமங்கும் நடந்தவாறு…. .) கணவன் – மனைவி – உறவு – புனிதம். ம்.. . கேக்க நல்லா இருக்கு. இல்ல ஹரி .. இதெல்லாம் இன்னமும் இந்த சமூகத்துல இருக்குன்னு நெனக்கிறியா ?
ஹரிஹரன்:- நீ நம்புறயோ இல்லியோ. நான் நம்புறேன்.. நம்ம சமூகம் இருக்குறவரை இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும் சிவம். போயிடாது… அழிஞ்சுடாது
நல்லசிவம் :- ஆனா. கொஞ்சம் கொஞ்சமா மாறும். மாறுது…. ஹரி… . . மாறிகிட்டுவருது ஹரி . . .
ஹரிஹரன் :- என்ன சொல்ற சிவம் ?
நல்லசிவம் :- செண்பகத்தை உனக்கு எவ்வளவு நாளா தெரியும்?
ஹரிஹரன் :- இது என்ன கேள்வி? நீயாவது உன் கல்யாணத்து அன்னிலேர்ந்துதான் அவகிட்ட பேச ஆரம்பிச்ச. . . ஆனா, தேனி பக்கம் ஒரு சின்ன ஊர்ல உன் கல்யாணத்துக்கு மொத நாளே அவ எங்கூட பேச ஆரம்பிச்சவ. என் சிநேகிதனுக்கு வரப்போறவகிட்ட அவன் சார்பா மொதல்ல நான்தான் பேசுவேன்னு, அந்தக் காலத்துலயே அழிச்சாட்டியமா போய் நின்ன ஆளு நான் .
நல்லசிவம்:- இப்பவும் நீயும் நானும் மூணுமாசத்துக்கு ஒரு தரமோ ஆறுமாசத்துக்கு ஒரு தரமோ. பாத்துக்குறோம்… வாரா வாரம் போனுல பேசிடறோம். இருந்தாலும் இப்ப உன் சம்சாரம் பத்தி எனக்கோ, என் சம்சாரம் பத்தி உனக்கோ எந்த அளவுக்குத் தெரியும்னு, உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா. ஹரி?
(ஹரி கொஞ்சம் திடுக்கிடுகிறார்.)
ஹரிஹரன்:- இது என்ன கேள்வி சிவம்? அப்ப நான் பார்த்த அதே செண்பகத்தையா நான் இப்பவும் பாக்கமுடியும். முப்பது வருக்ஷம் தாண்டிரிச்சில்ல. வயது கூடியிருக்கும். உருவம் கூடியிருக்கும். பருமனும் கூடியிருக்கும் . . இதெல்லாமா ஒரு கேள்வி ? .
நல்லசிவம்:- இது தான் ஹரி. எல்லாருமே சொல்லக்கூடியது. ஆனா ஆசைங்க கூடியிருக்கும் பேராசையா பெருகியிருக்கும். நமக்குக் கூடி வராதது எதுவும் இருந்திரக்கூடாதுங்குற வெறியும் அதிகமாயிருக்கும். அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லத் தோணவே இல்ல. உனக்கு இல்லியா?
ஹரிஹரன்:- நான் பார்த்த வரை செண்பகம் அப்படிப்பட்ட பொண்ணு இல்லியேப்பா!
நல்லசிவம்:- நான் பார்த்தவரை கூட செண்பகம் அப்படிப்பட்ட மனைவியா இருக்கல ஹரி.. ஆனா இந்த பத்து வருஷமா அவ மாறிகிட்டேதான் வந்திருக்கான்னு எனக்கே தெரியாம போயிருச்சே. உனக்கு மாத்திரம் எப்படித் தெரிஞ்சிருக்கும்?
ஹரிஹரன்:- இது என்ன சிவம். புதுக் கதையா இருக்கு?
நல்லசிவம் :- (மறுபடியும் யோசித்து) கொறையான்னு எனக்குத் தெரியலை. . . அதுவும் அவளுக்கு எதிரான கொறையான்னு எனக்குச் சொல்லத் தெரியலை. இருந்தாலும்.. எஸ்… கொறைதான் யூ கேன் கால் இட் எ சார்ஜ் (You can call it a charge … ) எஸ் நம்ம சமூகத்து மேல நான் இந்த சார்ஜை வைக்கறேன்.
ஹரிஹரன்:- என்ன சொல்ற நீ?
நல்லசிவம்:- இந்தப் பத்து வருஷமா. என் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வந்திருக்கு.. மாறாம இருக்க நெனைச்ச என்னையும் மாத்திடும் போல இருக்கு. அக்கம் பக்கத்தைப் பார்த்துப் பார்த்து நம்மளை அறியாமலே நாமே மாறிக்கிட்டு வரோமோன்னு நெனைக்கத் தோணுது. எல்லாத்தைவிட உலகத்துல பணமும், செல்வமுந்தான் பெரிசுங்கற எண்ணத்துக்கு- நெலமைக்கு , இந்த உலகம் – இந்த நாடு – நம்ம ஊரு, உற்றம், சுற்றம்,. சொந்த பந்தம்குடும்பம் எல்லாமே மாறிகிட்டு வருதோன்னு தோண ஆரம்பிச்சிரிச்சு, ஹரி !
ஹரிஹரன்:- நான்சென்ஸ் ! ஏன் இப்படி எல்லாம் நெனைக்குறே…? நீ மாறிலியே. உலகம் உன்னை அதே நல்ல சிவமாத்தானே பார்க்குது.. நல்லசிவம் செஞ்சிருக்கமாட்டாருன்னுதானே சொல்லுது. எது மாறிடிச்சிங்கறே?
நல்லசிவம் :- (நிதானமாக) அந்த ஒரு நிமிஷம் எல்லாத்தையும் மாத்திரிச்சு ஹரி. செண்பகம் அப்படியேதானே இருக்கான்னு நீயும் நானும், அவ மாறினதையே புரிஞ்சிக்கில.. இந்த நல்லசிவம் மாறாமா அப்படியேதானே இருக்கான்னும், நீயும் உலகமும் இன்னமும் நம்புறீங்களே… ஆனா எல்லாத்தையும் அந்த ஒரு நிமிஷம் மாத்திரிச்சே.. ( விம்முகிறார்..)
ஹரிஹரன்:- (அவர் அருகில் வந்து அவரை ஆதரவாகப் பற்றி) நீயா சிவம் இது? என்னடா ஆச்சு , உனக்கு?
————————————————–
(இலேசாக மேடையில் இருள் .. இருள் மெல்ல மெல்ல விலகி வெளிச்சம் பரவ, மேடையில் ஒரு நாற்காலியில் நல்லசிவம் இன்னொரு பக்கம்- வட்ட ஒளியில் செண்பகம் ஐம்பது – ஐம்பத்தி ஐந்து வயதினளாக)
செண்பகம்:- இதோ பாருங்க. . . என்னால இதுக்கு மேல உங்ககிட்ட மல்லுக்கு நிக்க முடியாதுங்க… இன்னும் ரெண்டு வருஷத்துல நீங்க ரிட்டயர் ஆயிடலாம் .
நல்லசிவம்:- தெரிஞ்ச விஷயந்தானே? அதுக்கென்ன இப்போ?
செண்பகம்:- கல்யாணம் ஆயி. இந்த ஊருக்கு நான் வந்தப்போ. ஏதோ ஒரு காலேஜ் லேபில்ல டெமான்ஸ்ட்ரேட்டரா இருந்த உங்களுக்கு (லெக்சரரா ப்ரோமோஷன் கெடச்சுது. சைக்கிள்ல அதுவரை போயிகிட்டிருந்த நீங்க ஸ்கூட்டருக்கு மாறினீங்க.
நல்லசிவம்:- ஆமா. இல்லேங்கிறியா?
செண்பகம்:- ஏழெட்டு வருக்ஷம் கழிஞ்சப்புறமா. ப்ரொபசரா பதவி உயர்வு கெடச்சது. அப்பவும் உங்க பின்னாடியே ஸ்கூட்டர்தால தான் போகணம்னு என் தலைல எளுதியிருந்தது.
நல்லசிவம்:- இப்ப எதுக்கு அதெல்லாம்? மலரும் நினைவுகளா?
செண்பகம்:- இல்ல. எரிச்சலான நினைவுங்க?
நல்லசிவம் :- (சற்றே நக்கல் பார்வையாக) ஸ்கூட்டர்ல போனது எரிச்சலான நினைவுகளா? புரியலியே?
செண்பகம்:- புரியலை இல்லையா? புரிய வைக்கிறேன். அந்த காலேஜில ஹெச் ஓ டி ஆனப்பறம் ஒரு பத்மினி ப்ரிமயர்னு ஏதோ ஒரு செகண்ட் ஹேன்ட் காரு வாங்கினீங்க.
நல்லசிவம்:- ஆமா.. நல்ல காருதானே!
செண்பகம்:- அதுக்காக இன்னிவரைக்கும் அதே காரைத்தான் வச்சிக்கணுமா?
நல்லசிவம்:- ஏன் அதுக்கென்ன… மொறப்படி சர்வீஸ்க்கு விடறேன். இன்னமும் நல்லாத்தானே ஓடிகிட்டிருக்கு
செண்பகம் :- கேவலமா இல்லை? (பொண்ணு கல்யாண சமயங்கூட அதை மாத்தமாட்டேன்னு பிடிவாதமா இருந்தது நல்லவா இருந்திச்சி? தெரியாமத்தான் கேக்குறேன். ஒரு மெடிகல் காலேஜ் டீன் செய்யுற காரியங்களா இதெல்லாம்?
நல்லசிவம்:- (சற்றே குரல்) இதெல்லாம்னா?..
செண்பகம்:- இதைத் தாங்க நான் கையாலாகாத்தனம்னு முட்டிக்கிறேன்.
நல்லசிவம்:- முட்டிக்க . . நா என்ன செய்ய? சிம்பிளா வாழ்ந்தா போதும்னு நெனைக்குறது கையாலாகாத்தனம்னு நீ சொன்னா. நான் அப்பிடியே ஒத்துக்கிடணுமா?
செண்பகம்:- ஒத்துக்காதீங்க.. உங்களை மத்தவங்க எளக்காரமா பேசறப்ப என் மனசு எம்புட்டு பாடுபடுதுன்னு கொஞ்சமாவுது உங்களுக்கு யோசனை இருக்குதா?
நல்லசிவம்:- என் சம்பளத்துல நான் வாழறேன். வீட்டைக் கட்டின கடனே எனக்கு இன்னும் முடியலை. செண்பகம். வசதியான வீடுதானே?
செண்பகம்:- ஏதோ ஒரு எண்ணூறு சதுர அடிலே வீட்டைக் கட்டிப்புட்டாராம் வீட்டை .. யாரும் கட்டாத வீட்டை! ஒரு மெடிக்கல் காலேஜ் டீனு வீடு மாதிரிமா இருக்குது இது? கவர்மெண்ட்டுல வேலை செய்யுற ஒரு க்ளாஸ் போர் கட்டினவீடு கூட இதைவிட சூப்பரா இருக்கும் ! வெளில சொல்லவே வெக்கமா இருக்குது எனக்கு!
நல்லசிவம்:- போதும் செண்பகம். நிறுத்திக்கோ..
செண்பகம் :- முடியாதுங்க. . . இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடனும் உங்க கூட வாழ்ந்து வாழ்ந்து. இந்த முப்பது வருஷத்துல என்ன சுகத்தைக் கண்டேங்க நான்…?
நல்லசிவம் :- (அதிர்ந்து போகிறார்) நீ.. . . நீயா செண்பகம் இப்படிப்பேசறே?
செண்பகம்:- பின்ன பக்கத்து வீட்டுக்காரியா வந்து உங்கிட்ட இப்படிப் பேசுவா? இவ புருசன் எதுக்கும் கையாளாகாதவன்னு. என் காதுபடத்தானே பேசுவாளுங்க.. பேசுறாளுங்க. . உங்களுக்கென்ன காலேஜே கதின்னு கெடந்துட்டாப்போதும்.
நல்லசிவம்:- இப்ப என்ன செய்யணம்ங்கறே?
செண்பகம் :- வருஷா வருஷம். உங்களுக்குன்னு ஒரு சீட்டை உங்க மேனேஜ்மெண்ட்டுல ஒதுக்குறாங்கல்ல. . . அந்தக் கோட்டாவுல எம்பது லட்சம். ஒரு கோடின்னு வருசம் தவறாம சம்பாதிரிச்சிருந்தா கூட இன்னிக்குத் தேதில கையில ஒரு மூணு நாலு கோடி தேறி இருக்கும்ல? யாராவது கொறை சொல்லப் போறாணுங்களா? சட்டம். அது இதுன்னு சிக்கல்தான் உங்களுக்கு வரப்போவுதா? செஞ்சிருக்கலாம்ல?
நல்லசிவம்:- என் மனசாட்சி என்னையக் கொன்னுரும் தாயி.. நான் அப்படி வளர்ல. .
செண்பகம் :- யாருக்கும் இல்லாத மனசாட்சி இவருக்குத்தான் இருக்கு…. கையாலாகாத்தனத்துக்கு இன்னொரு பேரு மனசாட்சி. பேடித்தனத்துக்கு இன்னொரு பேரு.. நான் அப்படியெல்லாம் வளர்லியே…! இந்த நாட்டுல மத்தவங்க யாருமே நார்மலா வளரலியா?
(நல்ல சிவத்திற்குக் கொங்சம் கொஞ்சமாக பி பி ஏறுகிறது. இலேசாகத் தவிக்கிறார்.)
நல்லசிவம்:- போதும்….. பேச்சைக் கொறச்சி போயி கொஞ்சம் தண்ணி எடுத்துக்கிட்டு வர்றியா?
செண்பகம்:- மாட்டேன். வேணும்னா போயி நீங்களே எடுத்திகிடுங்க. எனக்குன்னு எதையும் செய்யத்துப்பில்லாத மனுசனுக்கு நான் எதுக்கு மாங்கு மாங்குன்னு செய்யணும்?
(நல்ல சிவம் மனம் உடைந்து போகிறார். )
நல்லசிவம்:- வேணாம் செண்பகம்… நீ செய்யறது பேசறது எதுவுமே நல்லயில்லே..
செண்பகம்:- நீ செய்யறது மாத்திரந்தான் நல்லாயிருக்குன்னு நீ சொன்னா ஆயிரிச்சா . . காலமே நீ இல்லாதப்போ வீட்டுக்கு ஒருத்தன் வந்தான்.. அம்மா. என் புள்ளை மெடிகல் காலேஜ் படிச்துத்தான் ஆகணம்னு ஒத்தக்கால்ல நிக்கிறான். உன் வூட்டுக்காரரு மனசு வச்சா நிச்சயம் நடக்கும். இந்த ஒரே ஒரு முறை அவரு கோட்டா சீட்டுல என் மவனை அங்க சேத்துரச் சொல்லுன்னு அவரு சொன்னாரு! நாளைக்கே உன் வீடு தேடி வந்து ஒண்ணரைக்கோடி ரூபாய கொடுத்திறேம்மா.. இல்ல. எந்த அக்கவுண்டில. எந்த பேங்குல கட்டணம்னு சொல்லு.. கம்முனு முடிச்சி. ரசீது கொண்டு வந்து தரேன்… கருணை வை தாயின்னு கால்ல விளாத கொறையா கெங்சிட்டுப் போயிருக்கான் என்ன சொல்றீங்க?
நல்லசிவம்:- வேண்டாம் செம்பகம் . இதெல்லாம் தப்பு…. உன் மூலமா என்னைய வளைக்கப்பபாக்குறவன் யாரா இருந்தாலும். அவன் இந்த சமூகத்துக்கு நல்லது செய்யப் போறதில்லை்.
செண்பகம்:- வீடு தேடி வர்ற லட்சுமியை வேண்டாம்னு தள்ளி வக்கிற ஒனக்குப் போயி நான் களுத்தை நீட்டினே பாரு.. என்னையச் சொல்லணும். என்ன ஆம்புளயா நீ? இதோ என்கிட்ட அவன் செல் நம்பரைக் குடுத்துட்டுத்தான் போயிருக்கான். நாளைக்கே கொண்டு வான்னு சொல்லிடறேன். இந்த சந்தர்பத்தை நான் விடவே மாட்டேன்.
(அவள் செல்போனில் நம்பரை அழுத்த. அவர் விரைந்து அதைத் தடுக்க. அவள் கொடுக்க மறுக்க. உள்ளே விரைந்து போகும் அவர் மிகவும் ருத்ரனாக. நரசிம்மனாக மாறி. ஏதோ ஒரு கட்டையால் அவள் மண்டையில் கோபமாக அடிக்க. அவள் பொத்தென்று விழுவது. துடிதுடித்தவாறே அவள் விழுகிறாள்… . கரங்கள் நடுங்க. கொஞ்சம் கொஞ்சமாக ஆவேசம் குறையும் அவர், அவளருகே அமர்கிறார். நாடி பார்க்கிறார். மூச்சு வருகிறதா என்று பார்க்கிறார். உருகுகிறார்.)
நல்லசிவம்:- முப்பது வருஷமா நல்லாத்தானே செண்பகம் வாழ்ந்தோம்… இந்த அஞ்சி வருஷம் உன்னைய மாத்திரிச்சே. . . இந்த ஒரு நிமிஷம். ஒரு ஈயைக் கூடக் கொல்லாத என்னை. (அவளைக்காட்டி) இப்படி செய்ய வச்சிரிச்சே … என்னைக் கொலைகாரனை மாத்திட்டியே செண்பகம் ..
(அவளின் தலையைக் கோதி விம்முகிறார்.)