பகுதி – ஒன்று – அத்தியாயம் -இரண்டு
தேவ சிற்பி விஷ்வகர்மா தன் மகள் ஸந்த்யாவிற்காக அமைத்துக்கொடுத்த தனி நீச்சல் குளம் அது. படிகள் பொன்னாலும் பக்கவாட்டச் சுவர்கள் வெள்ளியாலும் அமைந்தது அந்த நீச்சல் குளம். அதற்கு வானுலக சரஸ்வதி நதியிலிருந்து நீர் சுனையாக ஊறிக்கொண்டிருந்தது. அதில் ஸந்த்யா தன் தோழிகளுடன் உல்லாசமாக நீந்தி விளையாடிக் கொண்டிருப்பாள்.
சில சமயம் அவள் தனியே அந்தக் குளத்தில் நீந்த வருவாள். . யாருமில்லை என்பதால் சுதந்திரமாகவே நீந்திக் கொண்டிருப்பாள். அன்று அப்படிக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஸ்படிகம் போன்ற தண்ணீரில் ஒரு பொன்னைப் போல ஒளிவீசும் அழகான உருவத்தைக் கண்டாள். அந்த உருவம் அவள் மீது படர்வது போன்ற உணர்வை அடைந்தாள். திரும்பி நேராகப் பார்க்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. அதனால் முதுகைக் காட்டிக் கொண்டே தண்ணீரில் தெரியும் சூரிய தேவனின் அழகு பிம்பத்தைக் கண்டாள். அவள் முதுகை சூரியனின் கிரணங்கள் மெல்ல வருடுவதை உணர்ந்து இதுவரை அனுபவிக்காத இன்ப அதிர்வு உடல் முழுதும் பரவுவதை உணர்ந்தாள்.
அடுத்த நாளும் சூரியதேவன் வருகைக்காக அவள் மனதும் உடலும் ஏங்கியது. அந்த நேரமும் வந்தது. நேரிடையாகப் பார்க்கவேண்டும் என்று குளித்துக் கொண்டிருக்கும் அவளுக்குத் தோன்றியது. பொன்னிற உருவம்தான் தெரிந்தது. கண்கள் கூசின. இடையில் ஒரு சிறு மேகம் வந்ததால் அதன் வழியே சூரியதேவனின் அழகு முகத்தைப் பார்க்கமுடிந்தது. மேகம் மறைந்ததும் அவள் கண்கள் தண்ணீரில் தெரியும் அவனுடைய பிம்பத்தைப் பார்த்துப் பிரமித்தன. அவன் அழகை அள்ளிப் பருகியவண்ணம் ஒரு மயக்க நிலையில் இருந்தாள்.
திடீரென்று அந்த பிம்பம் பெரிதாகத் தோன்றியது. அவள் அருகே கரையில் சூரியதேவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவளுக்குத் தலை சுற்றுவதைப் போல இருந்தது. அவன் அவளைக் கை நீட்டி அழைக்கக் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பு போலச் சென்றாள். கரையிலிருந்து கைலாகு கொடுத்து அவளைத் தூக்கினான். சூரியனின் வெதுவெதுப்பில் அவளது நீர்த்திவலைகள் எல்லாம் மறைந்து சூடு ஏறுவதை உணர்ந்தாள்.
குளிக்கச் சென்ற தன் பெண் இன்னும் வரவில்லையே என்று தேடிக்கொண்டு விஷ்வகர்மா அங்கு வந்து அவர்கள் இருவரையும் பார்த்துத் திடுக்கிட்டார் !
(தொடரும்)
பகுதி : இரண்டு : அத்தியாயம்: இரண்டு
இரண்டு:
யமுனாவைக் கண்டதும் எமனின் கண்கள் மகிழ்ச்சியில் மின்னின. இருக்காதா பின்னே? அவனுடைய ஆருயிர்ச் சகோதரி ‘எமி’ அல்லவா அவள்? இரட்டையர்களாகப் பிறந்த எமன், எமி இருவருக்கும் இடையே சிறு வயது முதல் இருந்த பாசத்துக்கு அளவே கிடையாது. எமி கேட்டாள் என்பதற்காக வானத்துச் சந்திரனை ஒருமுறை அவளுக்கு விளையாடப் பறித்துக் கொண்டுவந்தான் எமன். அதற்காக அவன் தந்தையின் கோபித்துக் கொண்டதைப்பற்றிக்கூட அதிகமாகக் கவலைப்படவில்லை.
எமிக்கும் அண்ணன் எமன் மீது உயிர்.
“வா! சகோதரி “ என்று வாஞ்சையோடு அவள் கரத்தைப் பிடித்து மண்டபத்துக்கு அழைத்து வந்தான்.
“இது என்ன அண்ணா? இவ்வளவு பெரிய தீபம்?”
“எமி! நீ முதல் முறையாக எமபுரிக்கு வருகிறாய்! அதுவும் இந்தத் தீபாவளி நாட்களில் வருவது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?
இன்று திரயோதசி. இன்று பூமியில் வீட்டைச்சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பர். மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று பூலோக மக்கள் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், நமது சொர்க்கபுரி, நரகபுரி இரண்டிலும் இருக்கும் பிதுர்க்கள் பூமிக்குச் செல்வார்கள்.
அப்படிச் செல்பவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்குத் திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டும். தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் பூலோகவாசிகள் ஏற்றும் தீபத்துக்கு என் பெயரை வைத்து ‘எம தீபம்’ என்று சொல்கிறார்கள். இதை அவர்கள் வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள்… வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம்.
இதனால் மக்களுக்கு விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது; நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்!” இப்படி ஒரு வரத்தை நான் பூலோக மக்களுக்குத் தந்துள்ளேன்.
ஒருமுறை திருச்சிற்றம்பலம் * என்னும் கிராமத்தில் எனக்குத் தனிக்கோவில் கட்டி மக்கள் என்னை வழிபட்டனர்.
அவர்கள் விருப்பதிற்கேற்ப கருவறையில் எருமை வாகனத்தில் மேற்கு திசைநோக்கி நான்கு திருக்கரங்களுடன் . கீழ்வலக்கையில் தீச்சுடரும், இடக்கையில் ஓலைச்சுவடிகளும், மேல்வலக்கையில் சூலாயுதம் தாங்கியும், இடக்கரத்தில் கதையுடனும் அருள் பாலித்தேன்.
அப்போதுதான் அவர்கள் என்னிடம் வேண்டிக்கொண்டார்கள். “ ஸ்வாமி, மரணம் தவிர்க்கமுடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் திடீர் மரணம், விபத்துக்கள் சம்பவிக்காது , நோய் நொடியின்றி ஆரோக்யமாக இறக்க வழி கூறுங்கள்” என்று வேண்டினர்.
அப்போதுதான் தீபாவளிக்கு முந்திய நாள் தீபம் ஏற்றி வழிபடுங்கள் . நீங்கள் கேட்டுக்கொண்டபடி துர்மரணம் ஏற்படாமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறினேன்.
அவர்கள் ஏற்றும் தீபங்களின் காணிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத்தான் நமது எமபுரிப்பட்டிணத்திலும் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது.
எமி! இன்று உன் கையால் தீபத்தை ஏற்று! பூலோக மக்கள் சந்தோஷமாக வாழ அது வழிகாட்டும்” என்றான் எமன் .
சித்ரகுப்தன் , தீப்பந்தத்தை எடுத்துத் தர எமி எம தீபத்தை ஏற்றினாள். அது சுடர்விட்டுப் பிரகாசித்தது.
எமி! நாளை தீபாவளி ! உன்னை சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்கிறேன்! அதுவரையில் உன் அறையில் ஓய்வெடுத்துக் கொள் “ என்றான் எமன்.
(தொடரும்)
* தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் எமனுக்குத் தனிக்கோவில் உள்ளது