ருத்ரதாமன்
இருண்ட காலமென்று கூறப்படும் வட இந்திய சரித்திரத்தை…
சற்றே சிறு விளக்கு ஒன்று கொண்டு தேடுகிறோம்.
ஏதேனும் சித்திரங்கள் கிடைக்காதா என்று…
அந்த தேடலில்…
இன்று நமக்கு புதையல் ஒன்று கிடைக்கிறது!
அப்படிப்பட்ட ஒரு ‘நாயகனின்’ கதை இது!
சாதவாகன மன்னர்களைப் பார்த்தோம்.
அதில் சக சாம்ராஜ்யத்தையும் கோடி காட்டினோம்.
இன்று சக மன்னன் ஒருவனது கதை கேட்போம்.
ருத்திரதாமன்.
‘அட இது யாரு புது ஆளு… கேள்விப்படாத பேராயிருக்கே!’
-இந்த ஐயம் உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும் இருந்தது – சரித்திரக்கடலில் மூழ்கி முத்துக்குளிக்கும் வரை.
சரி… நீங்களும்…
‘முத்துக்குளிக்க வாரியளா’?
வருடம் கி பி 2015 டிசம்பர் மாதம்:
இடம்: சென்னை
இது அச்சுப்பிழை அல்ல.
ஒரு சிறு காட்சியை சொல்லி விட்டு நமது முதல் நூற்றாண்டு செல்வோம்.
புயல் ஒன்று புறப்பட்டது.
வானம் பொழிந்தது.
பொழிந்து தள்ளியது.
பூமி வழிந்தது.
தூர்வாரப் படாத ஏரிகள் நிரம்பியது.
தளும்பும் பொழுதில் அவைகள் திறந்து விடப்பட்டு…
நீர்….
சீறிப்பாய்ந்து நகரத்தை சூறையாடியது.
அரசாங்கம் திகைத்து நின்றது.
இயற்கையின் இதைப்போல அனைத்துப் பிரச்சினைகளையும் சரித்திரம் முன்பே சந்தித்திருக்கிறது.
ஒரு முறை மட்டுமல்ல.
ஒரே இடத்தில மூன்று முறை நடந்தது.
சரித்திரத்தை நன்கு படித்திருந்தால்… அதை நடைமுறைப்படுத்தியிருந்தால்… அரசாங்கம் இந்தப்பிரச்சினை வராமல் தடுத்திருக்கலாம்….
சந்திரகுப்த மௌரியர் காலத்திற்கு சற்று செல்வோம்.
இன்றைய குஜராத் மாநிலம்.
பாடலிபுத்திரத்திலிருந்து வெகு தொலைவு.
அங்கு சந்திரகுப்தனின் ஆளுநர் – வைஸ்ய புஷ்யகுப்தா.
அவன் ஆளும் மாநிலத்தில்..
உர்ஜயாத் என்னும் ஒரு மலை.
அங்கு…
ஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளும், அதன் மூன்று கிளை நதிகளும் மலையிலிருந்து கும்மாளமிட்டு புறப்படும்…
மணம் நிறைந்த மலர்கள் நதி நீரை ஆடையிட்டு அலங்கரிக்கும்…
ஐந்து சிறு நதிகளும் மலையிலிருந்து இறங்கி…
மோதிரங்கள் அணிந்த விரல் கொண்ட மலர்க்கரம் ஒன்று மலையை விட்டு நாட்டைத் தொடும் காட்சி…
வர்ணனைக்குக் காளிதாசன் இன்னும் பிறக்கவில்லை…
ஒரே வார்த்தை சொல்வோம்… ரம்யம்…
அந்த நதிகள் நாட்டில் தவழ்ந்து இன்பமாகக் கடலில் கலக்கும்.
ஆயினும் இயற்கை சீறிய பொழுது ….
மணமலர்களுக்கு மாறாக சேற்றைப் பூசிக் கோபம் கொண்டிருந்த நதிகள்..
வெறி கொண்டு … கண் மண் தெரியாமல்… கரை தெறித்து… ஓடி… வழியில் உள்ள நகரங்களை அழித்தது.
சந்திரகுப்தன் ஆளுனரை அழைத்தான்.
‘வெகு விரைவில் அந்த மலையில் ஒரு அணை கட்டி இது போல் அனர்த்தம் நிகழாது செய்’ – என்று பணித்தான்.
புஷ்யகுப்தன் அணை கட்டி அந்த நதிகளின் கோபத்தைத் தணித்தான்.
அந்த அணை ‘சுதர்சனா ஏரி’!
அது மக்கள் உயிர் காத்தது.
பின்னாளில் அசோகர் அந்த அணைக்கு பல கால்வாய்கள் – குழாய்கள் (conduits) அமைத்து அந்த அணையை வலுப்படுத்தினான்.
அவனது ஆளுநர் ஒரு யவன ராஜா ‘துசாபா’ அதை நிறைவேற்றினான்.
எந்த படைப்புக்கும் பராமரிப்பு வேண்டும்.
செம்பரம்பாக்கத்திலிருந்து … சுதர்சனா வரை எல்லா ஏரிகளுக்கும் இது பொருந்தும்.
மக்கள் நலம் கொண்ட அனைத்து அரசுகளுக்கும் இதை செய்யும் கடமை உண்டு.
சில நூற்றாண்டுகள் கழிந்தன.
இப்பொழுது முதல் நூற்றாண்டுக்குச் செல்வோம்.
நாள்: கி பி 72
அது ஒரு முன்பனிக்காலம்.
நமது கதாநாயகன் ருத்திரதாமன் சக மன்னன்.
(ருத்திரதாமன்)
ஒரு நாள்…
கருமேகங்கள் பெருத்து வந்து குவிந்தது..
மழையை பொழிந்தது..
நதி போல நீர் வானத்திலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்தது.
நாட்கள் சென்றன…
வானம் நிறுத்தவில்லை.
வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்தது.
ஸ்வர்ணசிகாதா பலாசினி என்ற இரு நதிகளிலிருந்தும், மேலும் அதன் மூன்று கிளை நதிகளிலிருந்தும் பொங்கிய வெள்ளத்தை பூமி தாங்க இயலவில்லை.
மரங்கள் உடைந்தன.
கரைகள் கரைந்தன.
மலைகள் மண்ணரிப்பால் சேற்றை எங்கும் பரப்பியது.
மண்ணுலகமே மகா சமுத்திரம் போலக் காட்சி அளித்தது.
யுகம் முடிந்துவிட்டது போன்ற தோற்றம்.
ருத்திரதாமன் பல முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் –இந்த ஆழி பேரழிவை நிகழ்த்தியது.
சுதர்சனா ஏரி 100 அடி ஆழம் கொண்டிருந்தது.
அது முழுதும் உடைந்தது.
ஏரியின் அனைத்து நீரும் வற்றி அது ஒரு மணல் பாலைவனம் போல் காட்சி அளித்தது.
அழகான ஏரி அன்று பார்க்க காணத்தகாமல் அலங்கோலமாக இருந்தது.
சுதர்சனா என்ற ஏரி.. துர்தர்சனா என்று அழைக்கப்படும் நிலை.
மக்கள் அடைந்த துயரத்திற்கோ அளவில்லை.
ருத்திரதாமனின் மந்திரிகளும் ஆலோசர்களும் அந்த அவலத்தைக் கண்டனர். மன்னரிடம் சென்று ஒரே குரலில் கூறினர்:
‘என்ன பேரழிவு..இந்த அணையை செப்பனிடுவது என்பது முடியாத காரியம்’
மன்னன் அதை ஒப்பவில்லை.
‘அணை முழுமையாக் கட்டப்படவேண்டும்..
நாட்டின் பசுக்களுக்கும், மக்களுக்கும் இன்னும் ஓராயிரம் ஆண்டிற்கும் இந்த கஷ்டம் வரலாகாது. இதுவே என் ஆணை’ – என்றான்.
தனது ஆட்சிக்குக் கீழ் இருந்த ‘அனர்த்த’ நாட்டு மன்னனை அழைத்தான்.
அவன் பெயர் ‘அமத்யா சுவிசாகா’.
அமத்யா நேர்மையான, மக்கள் நலம் விரும்பும், சிறந்த ஆட்சியாளன்.
ருத்திரதாமன்:
‘அமத்யா, இதைச் செய்வதற்கு நீயன்றி யாரும் இல்லை’
அமத்யா:
‘இதைச் செய்வது எனக்கும் கடமைதான் மன்னா! வெகு விரைவில் செய்து முடிப்பேன்’
அந்த அணையை முன்பிருந்ததை விட மூன்று மடங்கு பெரியதாகவும் ஆழமாகவும் விரைவில் செப்பனிட்டான்.
இதில் என்ன சிறப்பு என்றால்:
ருத்திரதாமன் இதை அருகிலிருந்த நகர, கிராம வாசிகளுக்கு எந்த வித தொந்தரவு இல்லாமலும், மக்களைக் கட்டாய வேலை செய்விக்காமலும், வேறு வரி விதிக்காமலும் செய்தான். எந்த வித நன்கொடையும் பெறப்படவில்லை. மொத்த செலவும் அரண்மனைக் கருவூலத்திலிருந்து சென்றது.
(பின் குறிப்பு: பின்னாளில் ஐந்தாம் நூற்றாண்டில் ஸ்கந்தகுப்தன் என்ற குப்த மன்னன் காலம்.. இந்த அணை பெரும் மழையின் தாக்குதலால் மீண்டும் உடையவே, மன்னன் அதைச் சீர்திருத்தி செப்பனிட்டான்)
அசோகரது கல்வெட்டுகள்
ஜீனாகத் கல்வெட்டு
அணையைத் தவிர ருத்ரதாமன் வேறு என்ன செய்தான் – என்று கேள்விக்கு சரித்திரம் பதில் சொல்கிறது:
குஷானர் மேலோங்கியிருந்த காலத்தில் அவர்களுக்கு அடி பணிந்த சிற்றரசர்களாக சக வம்சத்தினர் ஆட்சி செலுத்தி வந்தனர். கனிஷ்கருக்குப் பின் வந்த குஷானர்கள் திறமையற்றவர்களாக இருந்தமையால், இந்த சக மன்னர்கள் உஜ்ஜயினியை தலை நகராகக் கொண்டு மன்னன் என்று பட்டம் சூட்டிக்கொண்டு வாழ்ந்தனர்.
சதவாஹன அரசின் கவுதமிபுத்திரன் என்ற மன்னனைப் பற்றி நாம் படித்திருந்தோம்.
அவன் சக நாட்டை வென்ற பின் – சக நாட்டில் சாஸ்தானா என்ற மன்னன் சக நாட்டை மீண்டும் அமைத்தான்.
அந்தப் பரம்பரையில், சாஸ்தானாவின் பேரன் முதலாம் ருத்திரதாமன்.
ருத்ரதாமன் அரசுரிமை ஏற்ற பொழுது நாடு நிலைமை – புயலுக்குக்குப் பின் சுதர்சனா ஏரி அப்படியிருந்ததோ- அவ்வளவு மோசமான நிலையில் இருந்தது.
ருத்ரதாமன் –
மாவீரன்…
அறிவாளி…
நேர்மையான நிர்வாகி…
தர்மத்தைக் கொள்கையாகக் கொண்டவன்…
வாள்வீச்சில் சிறந்தவன்…
குத்துச்சண்டையில் மாமல்லன்.
குதிரை, ரதம் மற்றும் யானை அனைத்தையும் செலுத்துவதில் வல்லவன்…
ஏழைக்குப் பொருள் வழங்குவதில் வள்ளல்…
இசை வல்லுனன்…
விஞ்ஞான அறிவுடையவன்…
அழகிய கவிதைகள் , உரைநடை எழுதிய கவிஞன்.
சம்ஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்று சிறந்தான்.
முதன் முறையாக சரித்திரத்தில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் அமைத்தவன்…
(அதற்கு முன் பிராகிருத பாணியில் பாலி, மற்றும் மகதி மொழிகளில் மட்டும் தான் அமைந்திருந்தது)
சகலகலாவல்லவன்.
ருத்ரதாமனது வெள்ளி நாணயம்.
குஷானர்களைப்போலவே சக அரசர்களும் கிரேக்க மற்றும் மத்திய ஆசியாவின் வம்சத்தில் வந்தவர்கள்.
அப்படிப்பட்ட ருத்திரதாமன் சம்ஸ்கிருத பண்டிதனாகியது அவன் தனது மக்கள் (பிராமண மக்கள் சேர்த்து) மீது கொண்ட அன்பைக் காட்டியது…..
இந்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தானும் இந்து சமயத்தவராக மாறினான்.
ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் திருமண உறவுகள் கொண்டிருந்தான். தன் மருமகனான வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு திருமணப் பரிசாக, அபராந்தா எனும் நிலப்பரப்பை வழங்கினான்.
ருத்திரதாமன் தற்கால அரியானாவின் யௌதேயர்களை வென்றதாக கிர்நார் மலைக் கல்வெட்டுகள் கூறுகிறது.
ருத்திரதாமன் சாதவாகனர்களுடன் இருமுறை போர் புரிந்து வெற்றி கொண்டான். தோற்கடிக்கப்பட்ட தனது மருமகன் வசிஷ்டிபுத்திர சதகர்ணிக்கு தீங்கு வராமல் மன்னித்து அனுப்பினான்.
தோற்கடிக்கப்பட்ட எல்லா மன்னர்களுக்கும் ஆட்சியைத் திரும்பக் கொடுத்துப் புகழ் பெற்றான்.
கல்வியா.. செல்வமா.. வீரமா..?
இவை மூன்றும் சேர்ந்த மன்னன் ருத்திரதாமன்…
ருத்ரதாமன் அவையை மிகப்பெரிய கிரேக்க எழுத்தாளர் ‘யவனேஸ்வரா’ அலங்கரித்தார். அவர் தான் கிரேக்க மொழியிலிலிருந்து சமஸ்கிருதத்தில் யாவனஜாதகா என்ற நூலை எழுதியவர்!
அவன் சரித்திரக் கடலில் ஆழத்தில் ஒளிவிட்ட மாபெரும் முத்து!
அவனது கதை கூறி சரித்திரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டது…
இன்னும் இரண்டு நூற்றாண்டுகளில் அந்த அழகு ஜெகஜ்ஜோதியாக நவரத்தினங்களாக ஜொலிக்கவிருக்கிறது.
அந்த நாட்கள் விரைவில்…
ருத்ரதாமன் என்ற மன்னனைக் குறித்த நல்லதொரு விளக்கம். ஜூனகாத் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் அழகு தமிழில் எளிய நடையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். நிறைய தகவல்கள் . நன்று. வாழ்த்துக்கள்
LikeLike
ருத்ரதாமன் என்ற மன்னனைக் குறித்த நல்லதொரு விளக்கம். ஜூனகாத் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் அழகு தமிழில் எளிய நடையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். நிறைய தகவல்கள் . நன்று. வாழ்த்துக்கள்
– ஜெயக்குமார் சுந்தரம்
LikeLike