புலனாய்வுத்துறை, அந்த வீட்டில் அதிகாலை ஐந்து மணி அளவில் வந்து சோதனைபோட ஆரம்பித்துவிட்டனர் என்ற செய்தி அதற்குள் அந்தப் பெரிய வீதியில் எப்படிப் பரவிற்று என்றே இன்னமும் யாருக்கும் சரியாகத் தெரிந்திருக்கவில்ல. இருபது, முப்பது மனிதர்களாவது அங்கு குழுமி விட்டனர். பங்களாவினுள் இருந்து இரண்டு பேர் வெளியே வர, அவர் முன்னர் சிறு மைக்கை நீட்டியவாறே ஒரு ஊடகக்காரி கேள்விகளை ஆரம்பித்துவிட்டாள்.
‘சார், புலனாய்வுத்துறை, அஞ்சு மணிக்கெல்லாம் இந்தப் பங்களாவை சோதனை போடறது எங்களுக்குத் தெரியும் சார். நீங்க பங்களாவோட பாத்ரூமைக் கூட சோதனை போட்டதா செய்தி வெளில கசிய ஆரம்பிச்சுது .ஏதாவது கெடைச்சுதா சார்.. மக்கள் தெரிஞ்சிக்க ஆசைப்படறாங்க..”
சங்கரலிங்கம் எதுவும் சொல்லும் மன நிலையில் இப்பொழுது இல்லை. அதிகாலை மூன்றரை மணிக்கே அவர் எழுப்பப்பட்டு விட்டார். வெளியே கார் வந்து நின்றதும், அழைப்பு மணி, ஒலித்ததும்தான் அவருக்குத் தெரியும். எதற்குமே நேரம் கொடுக்கப்படவில்ல. இன்னும் இருவர் வீடுகளுக்குப் போய், அவர்களையும் இதுபோல் அவசரம் அவசரமாக அதே வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவர்கள் வந்த வண்டி இந்த பங்களாவுக்கு வரும்போது காலை மணி நாலரை ஆகியிருந்தது. புலனாய்வுத்துறை வாழ்க்கை அவருக்குத் தலையில் எழுதப்பட்டிருந்ததா, என்று அவருக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.
இந்த வீட்டுக்காரர்கள் அழைப்பு மணி ஒலி கேட்டு, கதவைத் திறந்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். சடசடவென்று உள்ளே வந்த அதிகாரிகள் , ஒன்றும் பேசாமல் அடையாள அட்டைகளைக் காட்டி, தொலைபேசி இணைப்புக்களைத் துண்டித்து, கை பேசிகள் அனைத்தையும் தங்கள் வசமாக்கிக் கொண்டு, வீட்டில் இருந்த, அனைத்துக் கணினிகளையும் பிடுங்கி, அவற்றினுள் கடந்து, புலனாய்வை மேற்கொண்டபோது மணி ஐந்தைத் தொட்டுவிட்டது.
அவர்தான் முதலில் பாத்ரூமுக்குப் போனார். அவர் அவசரம் அவருக்கு. காலையில் வேகவேகமாக வந்ததன் விளைவு. இந்தப் பெண்ணிடம் , அதை எப்படிச் சொல்லுவது.?
“ஆமாம்.. சில டாக்யுமெ…. ‘ நிறுத்துகிறார். ஊடக மொழி அவருக்கு நினைவுக்கு வர..
“ஆமாம்.. சில ஆவணங்கள் சிக்கி இருக்கு. இதுக்கு மேலே எதுவும் கேக்காதீங்க…
‘சார்..சார்…”
அதிகாரிகள் இருவரும் காலை காஃபி சாப்பிட, அருகில் இருக்கும் ஏதோ ஒரு நாயர் கடைக்குப் பறக்கின்றனர்.
முதலில் அவர்களிடம் சிக்கிய ஒரு ஆவணம் அவர்கள் அந்த வீட்டில் இருந்து எடுத்த ஒரு டைரியில் இருந்த ஒரு சிறு குறிப்புத்தான்.
‘கட்டினவதானே’ன்னு கண் மூடித்தனமா கம்முனு இருந்தே, கடைசிலே கண்ணை மூடிக்கிட்டு கண்ணீர் சிந்தற நிலைக்குக் கொண்டு போயிடும்’டா., வாத்தியாரா இல்லாம பெத்த அப்பனா சொல்லணம்னு தோணிச்சு. சொல்லிட்டேன். சின்ன வயசுலயே உனக்குச் சொல்லியிருக்கேன். சமயத்துல உன் போக்கே சரியில்லயோன்னு தோணுது.’
பெத்த தந்தை, பையனை விட்டுப்போய் ஓராண்டு காலம் ஆகிவிட்டதாம். மகன் இவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தும், தந்தை எங்கோ போரூரில் தனியாக இருக்கிறாராம்.
என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்று இன்னமும் வெளியில் தெரியாது. புலனாய்வுத் துறை எப்பொழுதுமே ஊடகங்களிடம் இருந்து ஒதுங்கிநின்றே செயல்பட, பல காரணங்கள் இருக்கின்றன.
அடுத்தபடியாக அவர்களிடம் சிக்கிய ஒரு முக்கிய ஆவணம்தான் அவர்களை மேலும் குழப்பியது.
குமுதம், விகடன் பத்திரிகை அளவில் ஆன ஒரு தனி மனிதனின் கையேடு. குழந்தைகள் பள்ளிப் புத்தகங்கள் வாங்கியவுடன் அவற்றிற்கு அட்டைபோடும் பழுப்பு வண்ணத் தாள்களில் உருவான ஒரு ஆவணம்.
அதைப் பார்த்தால், அதற்கு உரியவர் ஒரு பெரிய பதவியில் இருக்கும் உயர்ந்த அதிகாரி என, நிச்சயமாக யாரும் சொல்லமாட்டார்கள். பக்கத்திற்குப் பக்கம் வட்ட வடிவில் இந்தியத் திரை உலகின் அவ்வளவு நடிகைகளும் ஏதாவது ஒரு கோணத்தில், ‘one piece or two piece ‘ துணிகளில் அனாயாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பக்கங்கள் அனைத்திலும் மையமாக, இந்த வீட்டு மனையாள் ஒய்யாரமாகக், கிறங்கடிக்கும் சிரிப்பில் நின்றிருந்தாள்.
இவர்களில் அனைவரிலும் மேலானவள் என் செல்லம்- ஒவ்வொரு பக்க அடியிலும், இந்தக்குறிப்பு.
கிறங்கடிக்கும் அந்த சிரிப்புக்காரி அந்தக் கையகலத் துணித் துண்டுகள்கூட இல்லாத நிலையில் பலவகையான நிலைகளில் படமாக இருந்தாள்
திரை உலகத் தாரகைகளைப்போல் இவள் சிவப்பு வண்ணத்தினள் அல்ல. ஆனால் அவர்களில் பலரைவிட இவள், உடல் வளத்தில் மிகச் செழுமையானவளாகவே இருந்தது, வீட்டிற்குள் வந்தவுடன் அவளைப் பார்த்தவுடனேயே, இந்த உண்மை, புலனாய்வுத் துறை அதிகாரிகள் அனைவரின் எக்ஸ்ரே கண்களிலும் பதிந்துவிட்டது. நெடுநெடுவென்ற உயரம் வேறு. கண்களை அகற்ற முடியாத வளைவுகள். . அடக்க அடக்க அடங்காத அரபிக்குதிரை போன்ற தீட்சண்யமான கண்கள். நான் வேற ஜாதி, என்ற அட்டகாசப் பார்வை. இதுதான் அவள் வீட்டுக்காரனை, அவன் உயர்ந்த பதவியில் இருந்த ஆரம்பகாலக் கட்டங்களில் அவளிடம் ஈர்த்திருக்கவேண்டும்.
பாவிப் பய, குப்புற விழுந்துட்டான்.
புலனாய்வுத் துறைக்குப் புரிந்துவிட்டது.
ஆனால் புரியாமல் குழப்பியது மூன்றாவது ஆவணம்தான்.
அடுத்தபடியாக புலனாய்வுத்துறை ஆராய்ந்துகொண்டிருந்த ஒரு ஆவணம், சில வங்கிக்கணக்குகள்.. அவ்வப்பொழுது பல லட்சம் வரவு வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், வேறு எங்கெங்கோ புறப்பட்டுப் போயிருந்தன. இந்த வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இந்த வீட்டு மனையாளின் தனி பீரோவில் பல விலை உயர்ந்த புடவைகளின் நடுவில் மிக பத்திரமாக இருந்தன. அதே பீரோவில், தனிப் பெட்டகமாய் ஒளிந்திருந்த ஒரு ரகசிய அறையில் அவர்களுக்குக் கிடைத்த ஒரு சாவிக்கொத்தில் ஒன்று, வங்கி லாக்கர்சாவி என்பது இவ்வளவு வருட அனுபவத்தில் அந்த புலனாய்வு மூளைகளுக்கு உடனடியாகத் தெரிந்த விஷயமாக இருந்தது.
முதலில் அதுபற்றிக்கூற அந்த வீட்டு ஆண் மறுத்துவிட்டான்.
“சார், நீங்க என்னைத்தானே விசாரிக்க வந்திருக்கீங்க? என்னை என்ன வேணும்னாலும் கேளுங்க சார்.., ரத்னா பாவம் சார், அவ ஒரு சாதாரண அரசாங்க ஊழியர் மட்டும்தான். அவளையும் வாட்டுறீங்க. இது ரொம்பவே அராஜகமா இருக்கு.”
“உங்களுக்கே தெரியும் மிஸ்டர் சரவணன். தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு உள்ளயே போயி நாங்க கட்டாயமா சோதனை போடவேண்டிய காலத்துல இப்போ இருக்கோம். யாரை, எப்போ, எப்படி சோதனை போடணும், அப்படிங்கற இந்த விஷயங்களை நாங்க பாத்துக்கறோமே, ப்ளீஸ்..”
அதற்குப்பிறகு சரவணன் IAS –சால் பேசமுடியவில்லை.
“சாரி ரத்னா,” அவள் முகத்தைத் தடவியவாறே, அவளுக்கு ஆறுதல் சொல்கிறான் சரவணன். “ இவனுகள்ள சில பேரு இப்படித்தான். வலுக்கட்டாயமா, பாத்ரூமுக்குள்ள கூட புகுந்து சோதனை போடுவானுங்க. நாம ஒண்ணும் செய்யமுடியாது. மடில கனமிருந்தா பயப்படணும்.. நமக்கென்ன பயம்?”
சரவணனால் கண்ணீர் விடும் நிலையில் உள்ள ரத்னாவை அணைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
“சார், நீங்க உங்க சம்சாரத்தோட இதோ, இந்த சோஃபாவுல, உட்கார்ந்துகிட்டு, உங்க பாணியிலயே ஆறுதல் சொல்லிக்கிட்டு இருங்க. நாங்க மத்த இடங்கள்லயும் சோதனை போட்டுடறோம்.”.
“இவன்லாம் எப்படி ஒரு IAS ஆபீசர் ஆனான்.. இவனும் ஒரு களவாணிப்பயதானோ?”- மனதில் ஓடிய ஓட்டத்தை அடக்கிக்கொண்டு சங்கரலிங்கம் அடுத்துச் செய்யவேண்டிய காரியங்களில் கவனத்தைச் செலுத்தினார்.
வங்கி பாதுகாப்புப்பெட்டகம் வேறு பல ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தது.
சரவணன் வங்கி மேலாளர் எதிரேதான் அமர்ந்திருந்தான். முகம் சற்றே வாடி இருந்தது.
சரவணனும் ‘நல்ல மூக்கும் முழியுமாக’ இருந்தவன்தான். கூர்ந்து நோக்கும் கண்கள். நீண்ட நாசி. சட்டென்று மறந்துவிட முடியாத முக அமைப்பு. மனைவியை விட நல்ல நிறம் வேறு. காரில் இருந்து இறங்கி, கோட்டை வாசலில் சும்மா நின்றால் கூட , கடக்கும் முக்கால்வாசிப் பெண்கள் வழிய வந்து ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லாமல் போகமாட்டார்கள். அதில் பாதி, கடந்த பின்பும், ஒருமுறையாவது, இவனைத் திரும்பிப் பார்க்காமல், போயிருக்க மாட்டார்கள். அவனுக்கு அப்படி ஒரு ராசி.
இருந்தாலும் விவரம் அறிந்த எந்த ஜோசியனும், ரத்னாவின் ராசி அவனுடையதை அடித்துவிட்டது என்றே சொல்லி இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு அமைச்சரவைக் கூட்டத்தின், ஆரம்ப கட்டப் பணிகளுக்காக அவன் ஒரு அமைச்சரின் அறைக்குள் போனவன், தற்செயலாக அங்கு வேறு ஏதோ காரணமாக வந்த ரத்னாவைப் பார்க்க நேரிட்டது. அவள் என்ன செய்வது என்றே தெரியாமல் சிறு புன்முறுவல் பூத்தாள். அவ்வளவே. சரவணன் அன்று விழுந்தவன்தான். இதை ஜோசியர்கள் வேறு எப்படிச் சொல்ல முடியும்?
ஆனால் ரத்னா எதற்காக அந்த அமைச்சர் அறைக்கு அடிக்கடி போனாள் என்று அவன் இதுவரை கேட்டதில்லை. இப்பொழுதும் போகிறாளே, ஏன் என்றும் அவனுக்குத் தெரியாது. அவளுடைய வங்கிக் கணக்குகளை அவன் ஆராய்ந்ததே இல்லை.
அவள் உடலை மட்டுமே ஆராய்ந்திருக்கிறான். அவளும் அதற்கு முழுவதுமாகவே சம்மதித்து, அவளைப்பற்றி வேறு எதுவும் அவன் அறிந்திராதவறே பார்த்துக்கொண்டிருந்தாள்.
வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தினுள் கிடைத்த வேறு சில ஆவணங்கள், அந்தப் புலனாய்வுத்துறை அதிகாரிகளை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின.
ரத்னாவின் தனிப் பெயரில் சென்னையிலும், கோவையிலும், பெங்களூரிலும் என மூன்று தனி பங்களாக்களும், மும்பையில் இரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்களும் இருந்தன. அவற்றின் மதிப்பே பல கோடிகளைத் தாண்டியது. வேறு சில வங்கிகளிலும் அவள் பெயரில் பல லட்சக்கணக்கான நீண்ட கால வைப்புத்தொகைகள் இருந்தன. ஒரு கோடை பங்களாவில் இருந்த நகைகளின் மொத்த மதிப்பு, நிச்சயமாக, ஒரு சாதாரண அரசு ஊழியர் இவ்வளவு நகைகள் வாங்க, நியாயமான வழியே இல்லை என்று பார்த்தவுடன் கூற வைத்தது..
கடைசியாக இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் சரவணனைப் பற்றி, அவன் பள்ளி இறுதிப் படிப்பு முடித்த சமயம் ஒரு பத்திரிகையில் வந்த பேட்டி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு ஆவணமாயிற்று.
பள்ளி இறுதிச் சுற்றுத்தேர்வில் அவன் மாகாணத்தில், அவன்தான் முதல் மாணவன். அவன் ஆசிரியர்களில் சிலர் அப்பொழுது கொடுத்திருந்த பேட்டிகள்:
“சரவணன் நிஜமாகவே சூது வாது அறியாப் பிள்ளைங்க.. தான் உண்டு, தன் வேலை உண்டுன்னு இருப்பான். அடுத்தவங்க காரியங்கள்ல தலையிடவே மாட்டான். வீட்டுலயும் அப்படித்தான்னு அவங்க அப்பாவே ஒரு முறை எங்ககிட்ட சொல்லிருக்காருங்க.” – ஒரு ஆசிரியர். “
“ஆனா அவன் பாணியே தனிங்க.. அவன் சிலரை நம்பினா கண்மூடித்தனமா நம்பிடுவானோன்னு எனக்குத் தோணும். இதக் கூட அவங்க அப்பாதான் எங்ககிட்டியே கண்டுபிடிச்சுச் சொல்லி இருக்காரு. பெத்தவங்களுக்குத் தெரியாததாங்க?”- இன்னொரு ஆசிரியர்.
சங்கரலிங்கம் பத்திரிகைகளுக்கு நேரிடைப் பேட்டிகள் கொடுப்பத்தைத் தவிர்ப்பவர்.
ஆனால் இப்படியும் சில அதிகாரிகள் வரலாற்றில் இருப்பதை அவர் அரசாங்கத்திடம் சொல்லவே விரும்புகிறார். என்னவென்று சொல்வது?
சிக்கிய சில ஆவணங்கள் சில உண்மைகளைப் புட்டு வைத்து விட்டன.
அங்கு கிடைத்த ஆவணங்கள், அவர்களுக்கு அடுத்து எங்கு அதிரடி சோதனை நடத்தவேண்டும் என்று ஊர்ஜிதப்படுத்துகின்றன.
இப்பொழுது இவர்கள் இருவரில் யாரைத் தூக்கி உள்ளே போடவேண்டும்?
இதுவே சங்கரலிங்கம் முன் ஊசலாடும் கேள்வி.