குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன்!
உதயம் முன்னே எழுந்திடுவேன் !
உற்சாகமாய் நான் ஓடிடுவேன் !
உடற்பயிற்சிகள் செய்திடுவேன் !
மூச்சுப் பயிற்சியும் செய்திடுவேன் !
பச்சைக் காய்கறி சாப்பிடுவேன் !
பழமும் தினமும் நான் உண்பேன் !
எதிர்ப்பு சக்தியை வளர்த்திடுவேன் !
ஆரோக்கியம் நான் பேணிடுவேன் !
ஆலயம் நானும் சென்றிடுவேன் !
ஆண்டவனையே வேண்டிடுவேன் !
அம்மா அப்பா சொன்ன விதம் –
அழகாய் நானும் வாழ்ந்திடுவேன் !
உறவுகள் நானும் போற்றிடுவேன் !
உதவிகள் செய்தே வாழ்ந்திடுவேன் !
நல்ல பழக்கங்கள் மேற்கொள்வேன் !
நல்லவன் என்றே பெயர் எடுப்பேன் !
நாடும் வீடும் போற்றணுமே !
நாளைய உலகம் சிறக்கணுமே !
நானும் நீயும் சேர்ந்திடுவோம் !
நல்ல உலகத்தைப் படைத்திடுவோம் !
8. மயிலே ! மயிலே ! மயிலே !
மயிலே ! மயிலே ! மயிலே ! – உனக்கு
வண்ணத் தோகை தந்தது யாரு ?
வண்ணத் தோகை தந்து உன்னை
ஆடச் சொன்னது யாரு ?
குயிலே ! குயிலே ! குயிலே !- உனக்கு
இனிய குரலைத் தந்தது யாரு ?
குரலைத் தந்து கூ கூ என்றே
கூவச் சொன்னது யாரு ?
காட்டின் தலைவா சிங்கம் – உனக்கு
வீர நடையைக் கொடுத்தது யாரு ?
நடையைக் கொடுத்து காட்டுக்கே நீ
ராஜா என்றது யாரு ?
வீட்டைச் சுற்றும் பூனை – உனக்கு
மீசை தந்தது யாரு ?
மீசை தந்து உன் மேல் எனக்கு
ஆசை தந்தது யாரு ?
எத்தனை உயிர்கள் எத்தனை உயிர்கள் –
உலகில் உள்ளது பாரு !
உலகில் உள்ள அனைத்தும் பாரு –
இயற்கையின் பெருமையைக் கூறு !
இயற்கை என்பது என்ன ? தம்பி –
இறைவன் என்பதும் அதுதான் !
இறைவன் புகழைப் பாடு – தம்பி
இன்பம் சேர்த்தே வாழு !