ரோஜா நிறச் சட்டை – அழகியசிங்கர்

 
 
 
சரஸ்வதி வேகமாக சைக்கிளை மிதித்தாள்.  ஒரு சின்ன டிபன் ஃபாக்ஸ், ஒரு டிபன் காரியர்.  எல்லாம் இந்தக் காலை நேரத்தில் பத்மநாபனிடம் போய்ச் சேர்க்க வேண்டும்.  பத்மநாபன் காலை அலுவலகத்திற்குப் போவதற்குமுன், டிபனும் மதியம் சாப்பாடும் தயாராகி விட்டது.  ஆனால் துரித கதியில் அவரிடம் இவற்றைச் சேர்ப்பிக்க வேண்டும்.  சரஸ்வதியால் அது முடியவில்லை.  தினமும் அவளுக்கு இது சோதனை.  காலையில் எல்லாவற்றையும் சமைத்துவிட்டு, எல்லாவற்றையும் டப்பாக்களில் நிரப்பி எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பதென்பது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை.  அதேபோல் திருவாளர் பத்மநாபனுக்கும் அவர் அலுவலகம் போவது சாதாரண விஷயமாகத் தோன்றுவதில்லை.
 
சரஸ்வதி,  பத்மநாபன் தங்கியிருக்கும் மாடிப் போர்ஷனுக்கு
வேகவேகமாக வந்துவிட்டாள்.
 
“இத்தனை நேரம் உனக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன்,”என்றார் பத்மநாபன்.
“ஓடி ஓடி வரேன்,”என்றாள் மூச்சிரைக்க.
பத்மநாபன் அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.  ஆனாலும் அவள் முகத்தில் தென்படும் அலாதியான தேஜஸ் கண்டு அவர் ஆச்சரியப் படாமலில்லை.  சாதாரணப் பெண்களுக்கே உரிய உயரத்தைவிட சரஸ்வதி சற்று உயரம்.  அதனால் அவர் இடத்திற்கு வரும்போது, உங்கள் மாடிப்படிகள் குறுகலாக இருக்கின்றன, நிலை இடித்துவிடும் போல் தோன்றுகிறது என்பாள்.
 
சரஸ்வதியிடமிருந்து வாங்கிக்கொண்டு அவர் ரிலே ரேஸ் மாதிரி ஓட்டமாய் ஓடுவார்.  பின் யோசிப்பார்.  இந்த வாழ்க்கையின் அர்த்தமென்ன? என்று.  ஓடுவதுதான் என்று மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டு, சிரித்தும் கொள்வார்.  சரஸ்வதி அவள் வாழ்க்கையில் ஓடுகிறாள்.  பத்மநாபன் தன் வாழ்க்கையில் ஓடுகிறார்.
இதோ தமிழ் பஸ்ஸைப்  பிடிக்க வேண்டும்.  இன்னும் சிறிது நேரத்தில் பஸ் அகப்படாமல் முன்னதாகப் போய்விட்டால், 10 மணிக்குமேல்தான் அலுவலகம் போகமுடியும். பிராஞ்சில் வாடிக்கையாளர்கள் கூடி விடுவார்கள்.  அமளிதுமளிதான்.  சிலசமயம் கூட்டமே இருக்காது.  ஹோ என்று இருக்கும்.
 
பத்மநாபன் பஸ்ஸை  எப்படியோ பிடித்து விட்டார்.  எப்படியோ பின் சீட்டில் அமர்ந்து விட்டார்.  இன்று என்ன சட்டை போட்டுக்கொண்டு வந்தோமென்று பார்த்தார்.  திடுக்கிட்டார்.  ரோஜா நிறச் சட்டை.   போச்சு. போச்சு.  இன்று  ஏதாவது தகராறு இல்லாமல் இருக்காது. நிம்மதியாய்ப் பொழுது போகாது.
 
வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை, சென்னைக்கு அவர் ஒருமுறை போயிருந்தபோது, அவர் மனைவியுடன் நாயுடு ஹால் கடைக்குச் சென்றார்.  அங்கு அவர் ஒரு மாதிரியான டிசைன் போட்ட இரண்டு மூன்று சட்டைகள் வாங்கிக்கொண்டார். ஒவ்வொன்றாய் அலுவலகத்திற்குப் போட்டுக்கொண்டு போகும்போது, முதல்முறையாக இந்த ரோஜா நிறச் சட்டையை அணிந்து அலுவகம் சென்றபோது, அவருக்குப் பிரச்சினையை உண்டாக்கி விட்டது.
 
அன்று வீ  ஆர் ராமகிருஷ்ணனுடன் சண்டை போடும்படி நேர்ந்தது.  கூட்டம் அதிகம்.  அலுவலக நேரம் முடிந்தபின்னும் எல்லோரும் வந்துகொண்டிருந்தார்கள்.  ஒரு கஸ்டமர் அவசரமாக டிடி வேண்டு மென்றான்.  பத்மநாபன் பக்கத்தில் வந்து கெஞ்சினான்.  “சார், இன்னிக்குத்தான் லாஸ்ட் டேட்”என்றான்.  ஏனப்பா முன்னாடியே வரலை,” என்றார் இவர்.  பின், வீ ஆர் ராமகிருஷ்ணன் இருக்குமிடத்திற்குப் போய் கேட்டார், (அவன்தான் காஷ் பார்த்துக் கொண்டிருந்தான்.) ஒரு டிடி அவசரமாம் என்று.  வீ ஆர் ஆர் அதுதான் சாக்கென்று கத்த ஆரம்பித்தான். “பாருங்க சார், பாருங்க..எவ்வளவு பணம் எண்ணாமல் இருக்கு..”
“ஒண்ணே ஒண்ணாம் லாஸ்ட் டேட்டாம்,”
“முடியாது, சார்.  நான் இப்பவே சர்க்கிள் ஆபிஸ் போறேன்.”
வெறுத்துப் போய் உட்கார்ந்தார் பத்மநாபன்.  வீ ஆர் ஆர் அதன்பின் சும்மா இருக்க மாட்டான்.  பெரிதாகக் கத்தி அமர்களப்படுத்துவான்.
கஸ்டமரும் வெறுத்துப் போய்விட்டார்.
“இங்க உங்க கணக்குல பணம் இருக்கா..உடனே மாத்தி
டிடி தர்ரேன்,” என்றார் பத்மநாபன்.
“இல்ல சார்,” என்றான் அவன்.  வேறு வழியில்லாமல் அவனை அனுப்ப வேண்டியிருந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது வீ ஆர் ஆர் கத்துவது எவ்வளவு மோசமான விஷயமென்று அவருக்குத் தோன்றியது. அவருக்கு இப்படி கத்துபவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது.  வீ ஆர் ஆர் தனக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்று நடந்து கொள்பவன்.  ஆனால் மாதாமாதம் நடக்கும் அலுவகக் கூட்டத்தில் அவன் வாய் கிழிய கஸ்டமருக்குச் செய்ய முன்வரும் சேவையைப் பற்றி அளப்பான்.  அன்று பிராஞ்ச் மானேஜர் இல்லை.  பத்மநாபன்தான்  பிராஞ்சைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  சனிக்கிழமை வேறு.
 
வழக்கம்போல் சென்னைக்குப் போகும்போது, வீ ஆர் ஆர் சத்தம் காதில் அறைந்துகொண்டிருந்தது.  ஒரு மரியாதைக்குக்கூட அவன் அன்று கஸ்டமரிடமிருந்து  பணம் வாங்கிக்கொள்ளவில்லை என்பது அதைவிட துக்கமாக இருந்தது. வண்டியில் போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவர் தான் போட்டிருந்த சட்டையைப் பார்த்தார்.  முதன் முதலாக நாயுடு ஹாலிலிருந்து வாங்கிய அந்த ரோஜா நிறச் சட்டையைப் பார்த்தார்.   அவருக்கு ஏனோ அந்தச் சட்டை பிடித்திருந்தது.    வீ ஆர் ஆர் மூடைக் கெடுத்து விட்டானே என்று நினைத்தார். அதுதான் முதல் முறை அந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி.
இன்னொன்றையும் கவனித்தார் பத்மநாபன்.  இந்த ரோஜா நிறச் சட்டையை அலுவலகத்திற்குள் போட்டுக்கொண்டு செல்லும் போதுதான் தேவையில்லாமல் சண்டை ஏற்படுகிறது.  மற்ற இடங்களில் ஒன்றும் ஆவதில்லை.
 
மற்றொருமுறை அவர் இந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு அலுவலகத்திற்குப்  போனபோது, வேறொரு சம்பவம் நடந்தது.  ஒரு நடுத்தர வயது பெண் வாடிக்கையாளர். அவரைத் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டார்.  பணம் எடுக்க வந்திருந்தார் அவர்.  அவர் கணக்கைப் பார்த்த பத்மநாபன் எங்கிருந்து பணம் வந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தார்.  அதை வாய்விட்டு சேமிப்புக் கணக்கைப் பார்த்தவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.  அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நடுத்தர வயது பெண் வாடிக்கையாளர், தன்னைத் திருடி  என்று சொல்கிறாரென்று நினைத்து வீட்டிலிருந்து அவளுடைய கணவரை அழைத்துக்கொண்டு வந்து விட்டாள்.  சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
மறக்க முடியாத சம்பவம், மறக்க முடியாத ரோஜா நிறச் சட்டை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு  கஸ்டமரை மட்டுமல்ல அலுவலகத்தில் பணிபுரிபவர்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்று அவருக்குத் தோன்றியது.  பின் யோசிப்பார், வாழ்க்கை என்றால் என்ன? வாழ்க்கையின் அர்த்தமென்ன என்று.
 
ஒரு சமயம் சென்னையில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் யோசித்திருக்க மாட்டார்.
 
திரும்பவும் ரோஜா நிறச் சட்டை.  இந்த முறையும் தெரியாமல்தான் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பி விட்டார்.  அன்று க்யூக் டேட்டா அனுப்ப வேண்டும்.  சுந்தரேசனை சீக்கிரம் க்யூக் டேட்டா போட்டுக் கொடு என்று கேட்டார்.  சுந்தரசேன் திருமணம் ஆகாத 30வயது இளைஞன்.  பெண்களிடம் தனிப்பட்ட அக்கறை கொண்டவன்.  ஒரு பெண் கஷ்டமருடன் பேசிக் கொண்டிருந்தவன், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தான்.  பத்மநாபனுக்கோ பொறுமையின் எல்லை தாண்டி விட்டது.
 
“சுந்தரேசா,” என்று கூப்பிட்டார்.
அவனுக்கோ அவர் குரல் காதில் விழவில்லை.
சிறிது நேரம் கழித்துத் திரும்பவும் கூப்பிட்டார்.  அவர் கூப்பிட்டதை அந்தப் பெண் கஷ்டமர் கவனித்து விட்டாள்.  மிரட்சியோடு அவரை அவள் பார்த்ததாகத் தோன்றியது.  ஆனால் சுந்தரேசனோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவளையே பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான்.
நொந்து விட்டார்.  இனிமேல் கூப்பிட்டுப் பயனில்லை என்று நினைத்தார்.  சுந்தரேசன் அந்தப் பெண்ணுடன் அலுவலக வாசல் வரை போய்விட்டு வந்தான்.
வந்தவன் நேராக பத்மநாபனிடம் போய் நின்றான்.
“என்ன மனசுக்குள்ளே நினைச்சிருக்கீங்க..கொஞ்சங்கூட மேனர்ஸ் இல்லையே..நான் ஒருத்தருடன் பேசிக் கொண்டிருந்தபோது ஏன் இப்படிக் கூப்பிட்டீங்க..”
“எனக்கு என் வேலை முக்கியம்…அதான் கூப்பிட்டேன்..நீ யாருடன் எப்படிப் பேசிக்கொண்டிருந்தால் எனக்கென்ன?” என்றார் திரும்பவும்.  சுந்தரேசனும்  கத்த ஆரம்பித்தான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னான்.  அவன் பக்கத்தில்தான் எல்லா நியாயங்களும் இருப்பதுபோல் பேசினான்.
 
அவனுடன் எதுவும் பேச முடியாது என்று விட்டுவிட்டார் பத்மநாபன்.  அன்றைக்குப் போக வேண்டிய க்யூக் டேட்டா போகவில்லை. காரணம் சொல்லும்போது, இன்னிக்குக் கூட்டம் அதிகம், க்யூக் டேட்டா போட முடியவில்லை, என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான்.
எல்லாம் இந்த ரோஜா நிறச் சட்டைதான் என்று யோசிக்க ஆரம்பித்தார் பத்மநாபன்.  வீட்டிற்கு வந்தவுடன் சட்டையைத் தூக்கி மூலையில் எறிந்தார்.
 
அலுவலகத்திற்குப் போகும்போது அந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு போனால் இதுமாதிரியான பிரச்சினை ஏற்படுவதாக அவர் நினைத்தார்.  சனியன், சனியன், இது கண்ணுலபடாம இருக்கணும் என்று நினைத்தார்.  சட்டையை யாருக்காவது கொடுத்து விடலாமென்றால் மனசு வரவில்லை. ஆனால் சாதாரணமாக வேறு இடங்களுக்குப் போகும்போது இந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு போனால் ஒன்றும் ஆவதில்லை.  அதையும் கவனித்து விட்டார். இது வெறும் கற்பனை என்று அவர் நினைப்பதுண்டு.  ஆனால், அப்படியும் சொல்ல  முடியவில்லை.
 
பல நாட்கள் அவர் அந்தச் சட்டையைத் தொடக்கூட இல்லை.
****
 
இன்று அவர் சிந்தனை ரோஜா நிறச் சட்டையைக் குறித்து ஓடியது.  எப்படி இந்தச் சட்டையை மாட்டிக் கொண்டோம் என்று யோசிக்கத் தொடங்கினார்.  கடந்த சில தினங்களாக பல சட்டைகளை உடுத்தி, உடுத்தி துவைக்காமல் வைத்திருந்ததால், இந்தச் சட்டையை எடுக்கும்படி ஆகியிருக்குமோ என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார்.
இன்று அலுவலகத்தில் கணக்குகளை முடிக்கும் நாள்.  கணினிகளை நம்ப வேண்டிய நாள்.  எல்லோரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டிய நாள்.
பத்மநாபன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.  ‘நீ பரபரப்பாக இருக்காதே’ என்று.
அலவலகத்திற்குள் நுழைந்தபோது, வழக்கத்தை விடக் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலாளர் அறை முழுவதும் பலர் குழுமியிருந்தார்கள்.  கூட்டத்தைப் பார்த்தவுடன் அவர் பரபரப்பாக மாறி விடுவார்.  அது அவர் இயல்பு. பின்னால் பெரிய பிரச்சினையாக அது வெடிக்கப் போகிறதென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.   அதேபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
 
ஒரு என் ஆர் ஐ பார்ட்டி. அவருடைய  கணக்கைக் கணினியில் முடித்து, அதே தொகையில் புதிய கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.
மேலாளர் உள்ளேயிருந்து அவரைக் கூப்பிட்டார்  “இந்தாங்க இந்தக் கணக்கை முடிச்சு, இன்னும் ஒரு வருஷத்துக்கு அதே பணத்தைப் போடுங்க..இன்னும் பத்து நிமிஷத்தில வேணும்” என்றார்.
அவர் பரபரப்பு, பத்மநாபனுக்கு டென்ஷனை ஏற்படுத்தி விட்டது.  இன்னும் பத்து நிமிஷத்தில அவர் முன் மேலாளர் நின்றுகொண்டு, எங்கே எங்கே என்று கேட்பார்.
மாதவனைப் பார்த்து, சீக்கிரமாக முடித்துக் கொடு என்று வேண்டிக் கொண்டார்.  மாதவன் 58வயது நிரம்பிய இளைஞர்.  அவரால் இன்று கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.  பத்மநாபனிடமிருந்து வாங்கிய ரிசிப்டை ஒரு மூலையில் போட்டுவிட்டார்.
பத்மநாபன் திரும்பவும் மாதவனைக் கூப்பிட்டு, “முதல்ல இதை முடிங்க..பார்ட்டி காத்திருக்காங்க..” என்று பரபரத்தார்.
 
மாதவன் அந்தக் கணக்கை எடுத்து முடிக்கும்போது, கணினி ஒத்துழைக்க வில்லை.  பிரச்சினையைக் கிளப்பி விட்டது.
பத்மநாபனுக்கு டென்ஷன்.  இன்னும் சிறிது நேரத்தில் மேலாளர் வந்து நிற்பார்.  படபடவென்று.
மாதவன் அதை மேலும் ஒன்றும் செய்யத் தெரியாமல் தூக்கிப் போட்டுவிட்டார்.  அலை அலையாய்க் கூட்டம்.
மேலாளர் வந்து விட்டார். “என்ன பத்மநாபன் ரிசிப்ட் எங்கே?”
என்று கேட்க ஆரம்பித்தார்.
“சார், ஒரு தப்பு நடந்து போயிருச்சு..” என்று இழுக்க ஆரம்பித்தார் பத்மநாபன்.
“சரியான ஆளுய்யா. முக்கியமான பார்ட்டி. உடனடியாகக் கொடுக்கணும்..”
“இன்னும் கொஞ்ச நேரத்தில சரி செய்து விடலாம்,”என்றார் பத்மநாபன்.
மேலாளர் விருட்டென்று போய்விட்டார்.
பத்மநாபன் பரபரப்பாக மாதவனிடம் வந்தார்.
எப்படியும் இன்று சிக்கலை கணினி உருவாக்கி  விடுமென்று பத்மநாபனுக்குத் தோன்றியது.
மாதவனிடமிருந்து ரிசிப்டை வாங்கி, வீ ஆர் ஆரிடம் கொடுத்தார்.  கணினி விஷயங்களில் அவன் கெட்டிக்காரன்.  ஒரு வழியாக அவன் பிரச்சினையைச் சமாளித்து ரிசிப்டை அடிக்கும்படி செய்தான்.
 
பத்மநாபன் ரிசிப்டை எடுத்துக்கொண்டு மேலாளர் அறைக்குப் போனார்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.  ரிசிப்டை கோபமாக வாங்கிக் கொண்டார் மேலாளர் ஒரு முறை முறைத்துவிட்டு.
பத்மநாபன் தன் இடத்திற்கு வந்து ஒரு வழியாக உட்கார்ந்து கொண்டார்.
‘யே ரோஜா நிறச் சட்டையே, சும்மா இரு,’என்று சட்டையைப் பார்த்துக் கோபித்துக் கொண்டார்.
அன்று உண்மையாகவே மேலும் பிரச்சினை அதிகம் ஆகிவிட்டது.  கணினி அன்றைய நாள் கணக்கை முடிக்க விடவில்லை.  பத்மநாபன் என்ன செய்யமுடியும் என்று தெரியாமல் திகைத்தார்.
மாதவனைச் சிறிது நேரம் இருக்கச் சொன்னார். கணினி மூலம் தப்பாகப் போட்ட கணக்கை முடிக்க வேண்டும்.  மாதவன் முடியாது என்று மறுத்துவிட்டார்.  மேலும், மேலாளரிடம் போய் நின்று, நான் போகணும், என்னை இருக்கச் சொல்கிறார் என்று போட்டுக் கொடுத்துவிட்டு வந்தார்.
பத்மநாபன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
மாதவனின் புகாரைக் கேட்டு மேலாளர் அவசரம் அவசரமாக வந்தார். “இவரை ஏன் இருக்கச் சொல்கிறீர்..இருக்க முடியாது..நீங்கதானே சிஸ்டம் மானேஜர். எதாவது பண்ணுங்க ” என்று கத்திவிட்டுச் சென்றார்.
 
கணினி நாள் கணக்கை முடிக்காமல் படுத்தியது.
திரும்பவும் மாதவனைப் பார்த்து, “மாதவன், நீங்க அடித்த என்ட்ரியை திரும்பவும் போய் அழித்துவிட்டால், போதும்.  அதற்காக சிறிது நேரம் இருங்கள்” ,  என்று கேட்டுக்கொண்டார்.
எப்படி இருப்பது?   முடியாது என்று மாதவன் கோபமாக திரும்பவும் மேலாளரிடம் புகார் பண்ணினர்.
பத்மநாபன் எதிர்பார்த்தார்.  அவர் தன்னிடம்தான் பாய வருவாரென்று.   என்னதான் இந்த கணினியில் செய்து முடித்தாலும், நியாயம் அவர்களிடம்தான் இருப்பதாக எண்ணுபவர் மேலாளர்.
கூண்டிலிருந்து புலியைத் திறந்துவிட்டால் எப்படிப் பாய்ந்துகொண்டு வருமோ அப்படி வந்தார். இந்த முறை அவர் கத்தியதைக் கேட்டு அந்த அலுவலகம் முழுவதும் ஆடியது.  அங்கிருந்த கஷ்டமர்கள் சிலரும் திகைத்து விட்டார்கள்.
பத்மநாபனுக்கு அவமானமாகப் போய்விட்டது.
 
காலையில்தான் அவரும் மேலாளரும் நல்லபடியாகப் பேசிக்கொண்டு வந்தார்கள். மாதவன் கண்ணில் இது பட்டிருக்கும்.  வத்தி வைத்திருப்பான்.  என்னதான் சொன்னாலும் கணினி பற்றி அவர் புரிந்துகொள்ளப் போவதில்லை.  அவருக்கு கஷ்டமர்தான் முக்கியம்.  தனக்குக் கணினிதான் முக்கியம்.  கணினிக்கும் கஷ்டமர்தான் முக்கியம்.  கணினியை அட்ஜஸ்ட் செய்தால், எல்லாம் சரியாகிவிடும்.  சிலசமயம் கணினி நம்மைப் பாடாய்ப் படுத்தும்.
 
மேலாளர் கத்தலைக் கேட்டு நொந்து விட்டார் பத்மநாபன்.  அவர் வாழ்க்கையில் யாரும் இதுமாதிரி கத்தியதில்லை.  84 வயதாகிற அவர் அப்பா ஒரு முறைகூட அவரைக் கடிந்து பேசியதில்லை. ஏன் அவர் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் வட்டாரம் யாரும்  எந்தக் கோபமான வார்த்தைகளையும் வீசியதில்லை.
 
இது அலுவலகம்.  அலுவலகத்தில் நடக்கும் விஷயத்தில்தான் மேலாளருக்கு அவர் மீது கோபம் என்று பத்மநாபனால் எண்ணி சும்மா இருக்க முடியவில்லை.  இதன் காரணத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சத்தம் போடுகிறார் என்றும் எண்ண முடியவில்லை.
பத்மநாபனும் அவரைப் பார்த்துக் கத்தலாம்.  ஆனால் அவரால் முடியாது.  சத்தமாகக் குரலை எழுப்பினால், அவர் உடல் பதறும்.  அதன் பின் விளைவுகள் விபரீதமான எல்லைக்குக் கொண்டு போய் விடும்.  யாராவது அவரைப் பார்த்துச் சத்தம் போட்டால் அவரால் கேட்டுக்கொண்டுதான் இருக்க முடியும்.
 
பிறகு மாதவனை அவர் வற்புறுத்தவில்லை.  வட்டார அலுவலகத்தில் உள்ள கணினி மேலாளரைத் தொடர்புகொண்டபோது, சில நிமிடங்களில் அந்தப் பிரச்சினை சரியாகிவிட்டது. ஏன் அப்படி ஏற்பட்டது என்றும் புரிந்தது.
 
அன்று மாலை அவர் சோர்ந்துபோய் அவர் இருக்குமிடத்திற்கு வந்தார்.  அவர் இல்லத்திற்குப் போவதற்குமுன், சரஸ்வதி வீட்டிற்குப் போய், டிபன் வாங்கச் சென்றார்.
சரஸ்வதியின் இரண்டு குழந்தைகளும் வாசலில் அம்மாவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தது.
ஒரு பையன் டிராயரே போட்டுக்கொள்ளவில்லை.  பத்மநாபனைப் பார்த்தவுடன், ஒரு பையன் உள்ளேயிருந்து டிபன்  பாக்ஸை எடுத்துக்கொண்டு வந்தான்.  அம்மா கொடுக்கச் சொன்னாள் என்று கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு திரும்பும்போது, சரஸ்வதி எதிர்பட்டாள் சைக்கிளிலிருந்து.
“இப்பத்தான் வர்றீங்களா,” என்று கேட்டார் பத்மநாபன்.
“ஆமாம், சார்..இந்தப் பையனுக்குத்தான் உடம்பு சரியாயில்லை…யூரின் சரியாகப் போக மாட்டேங்கிறது,” என்றாள்.
திரும்பவும் சரஸ்வதி பையன்களைப் பார்க்கும்போது, பத்மநாபனுக்குப் பரிதாபமாக இருந்தது.  இரண்டுக்கும் புரியாத வயது.
பத்மநாபன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.  அன்று அவர் மனநிலையும் சரியில்லை.
“சார்,” என்றாள் சரஸ்வதி.
என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தார் பத்மநாபன்.
“இந்தச் சட்டை உங்களுக்கு ரொம்ப நல்லாயிருக்கு, சார்.. உங்கள் நிறமும் இந்தச் சட்டை மாதிரி இருக்கு,” என்றாள் சரஸ்வதி.
பத்மநாபன் வியப்புடன், “அப்படியா?” என்று கேட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் ரோஜா நிறச் சட்டையைப் போடுவதே இல்லை.  மனதால் இன்னொருவரைப் புண்படுத்துவதைப் பற்றி அவர் பல நாட்கள் யோசித்துக்கொண்டே இருந்தார். யார்மீது இரக்கப்படுவது? புண்படுத்தும் நபர் மீதா? புண்பட்டவரையா?
இந்தக் கேள்விக்கும் பதில் தெரியவில்லை.
 
 
 
Click here to Reply or Forward

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.