ஷாலு மை வைஃப் (எஸ் எஸ் )

 

” சைலன்ஸ்… இது புதுமையான கோர்ட் . இதைப்பத்தி முதல்ல விளக்கம் சொல்லவேண்டியது என் கடமை. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் நமது குருஜினி அவர்கள் அமைத்துக் கொடுத்த ஓர் அருமையான பாரம்பரியம்.

இதைக் குடும்ப மன்றம் என்றும் சொல்லலாம். குடும்ப நீதி மன்றம் என்று சொல்லிக்கொண்டு குடும்பத்தைப் பிரித்து விவாகரத்து வாங்கிக் கொடுக்கும் இன்றைய நீதி முறைக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கிட்டத்தட்ட கிராமத்தில இருக்கிற பஞ்சாயத்து முறை மாதிரி தான். அங்கே பஞ்சாயத்துத்  தலைவர் ஊருக்குப் பெரியவர். பொதுவானர். எல்லாரைப் பத்தியும் எல்லா வழக்கங்களையும் தெரிஞ்சவரா இருப்பார்.

ஆனா இங்கே டவுனிலும்  சிட்டியிலும் வேற மாதிரி பஞ்சாயத்து இருக்கு. அதுக்குக் கட்டப்பஞ்சாயத்துன்னு சொல்வாங்க. அது கட்டாயத்தில கட்டின பஞ்சாயத்து.  ஆனா நாம இங்கே சொல்றது  அன்பால  கட்டப்பட்டப் பஞ்சாயத்து. நடுவில இருக்கிற நான் நடுவர் இல்லே. ஒரு ஒழுங்குபடுத்தறவர்தான். குடும்பத்தில இருக்கிற மற்ற உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் ஜூரர் மாதிரி இருந்து எல்லா நியாயத்தையும் கேட்டுட்டு அவங்க கருத்தைச் சொல்லுவாங்க.  பிறகு எல்லோருமா சேர்ந்து ஒரு தீர்ப்பைத்  தேர்ந்தெடுப்போம். அப்படி ஒருமனதா தேர்ந்தெடுக்கற முடிவுக்கு எல்லோரும் கட்டுப்படணும்.

இதற்கு அரசாங்கம் அனுமதியும் கொடுத்திருக்காங்க. மனித வள மேம்பாட்டுத் துறை இதை ஒரு புதிய முயற்சியாக அங்கீகரித்து தமிழ் நாட்டில் முதல் பரிசோதனை முயற்சியாக ஆரம்பித்திருக்கிறார்கள்.  மருத்துவ –  மனோதத்துவ முறையில் நீதி வழங்கும் கூட்டுறவு குடும்ப மன்றம் இது. இதற்கு நடுவராக இருப்பவருக்கு மனோதத்துவ மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு  மேல் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தைப்  பாருங்கள்.

இந்த முன்னுரையோடு ,  இப்போது ஷாலு கொடுத்த மனுவைப் பற்றி இந்தக் குடும்ப மன்றம் விசாரிக்கத் துவங்குகிறது.

“ஷாலு மேடம், நீங்கள் உங்கள் எண்ணங்களைச் சொல்லலாம்.”

ஷாலு எழுந்தாள். அந்த அறையிலிருந்த அனைவரையும் சுற்றிப் பார்த்தாள்.

நான் அங்கே  வில்லன் மாதிரி -கில்லி படத்தில சேற்றில  விழுந்த பிரகாஷ்ராஜ் மாதிரி உட்கார்ந்திருந்தேன். ஷியாமும் ஷிவானியும் கிரேஸி  மோகனோட கூகுள் கடோத்கஜன் நாடகம் பார்க்கப் போகும்போது எப்படி ஒரு எதிர்பார்ப்போட உட்கார்ந்திருந்தார்களோ  அதே மாதிரி ஜாலி மூடில் இருந்தார்கள். ஷாலு கொஞ்சம் டென்ஷன் ஆகியிருப்பது எனக்குப் புரிந்தது.

” ஷாலு ! நீ சொன்னதை  நான் என்னிக்காவது  மாட்டேன்னு சொல்லியிருக்கேனா ? எதுக்கு இந்த மகளிர் அணி கோர்ட் எல்லாம். (அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்). எங்க குடும்பத்தில யாரும் கோர்ட் வாசப்படியை மிதிச்சதே இல்லை. உன்னோட சட்டப் படிப்பை உபயோகிக்கறதுக்காக என் மேல கேஸ் போட்டிருக்க வேண்டாம். சாட்சிக்காரன் காலில விழறதுக்குப்  பதிலா சண்டைக்காரியான உன் காலில் விழத் தயார். எனக்கு என்னவோ கடைசில நீ’ இவருக்கு அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை வழங்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன் ‘ என்று அந்தக்காலத்து சினிமாவில கண்ணாம்பா, சாவித்திரி, லட்சுமி, சுஜாதா அவர்கள் வந்து உணர்ச்சி பொங்க சொல்லுவதைப் போல சொல்லுவியோன்னு பயமாயிருக்கு. நான் உன்னோட  ஆயுள்  முழுக்க ஒண்ணா இருக்கேன்னு ஒத்துக்கிட்ட ஆயுள் தண்டனைக் கைதி இல்லையா? ” – இப்படியெல்லாம் நான் பேசப் போக அது ஷாலுவின் கோபத்தை  மேலும் கிளறிவிட்டது.

“உங்கமேல கோர்ட் அவமதிப்புச் சட்டத்தின் பேரிலும் தனியா வழக்குத் தொடுக்கலாம் ” என்று சொல்லிவிட்டு ” இங்கே பாருங்கோ, எனக்கு உங்க பேரில தனிப்பட்ட முறையில் கோபம் இல்லை . அப்படி வந்தா அதை எப்படிக் காட்டுவதுன்னும் எனக்குத் தெரியும். ஆனால் இதை ஒரு பெண்ணீயப் பார்வையில் அணுகணும். படித்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் தங்களின் படித்த மனைவி மக்களை எப்படிக் கேவலமாக மதிக்கின்றார்கள் என்பதை ஊருக்கு, உலகுக்கு எடுத்துக் காட்டவே இப்படி ஒரு வழக்கைத் தொடுத்துள்ளேன்”

இந்த டயலாக்கை அவ நேத்து ராத்திரியிலிருந்து மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.  “அப்ப,  இதெல்லாம் ஒரு டிராமா ரிகர்சல் மாதிரி தானே ஷாலு? ” என்று கேட்டதும் வந்ததே அவளுக்கு ஒரு கோபம். ‘இதெல்லாம் நாளைக்குக் கோர்ட்டிலேயே பேசிக்கிறேன்’ என்று    சொல்லிவிட்டு இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கி விட்டாள். சத்தியமா  அவளோட  திட்டம் என்னன்னு எனக்குப் புரியலை.

இன்னிக்குக் காலையில கூட  “இந்தாங்கோ , உங்களுக்குப் பிடித்த பூரி மசாலாவும் அக்காரவடிசலும்  பண்ணியிருக்கேன். சாப்பிடுங்கோ” என்று ஏதோ தூக்குத் தண்டனைக் கைதிக்கு அவனுடை இஷ்ட பதார்த்தத்தைக் கொடுப்பது போலச் சொன்னாள்.

அதுமட்டுமல்ல , ” எனக்கு இந்த வழக்கில வெற்றி கிடைக்க நீங்கதான் ஆசீர்வாதம் செய்யணும்’ என்று காலில் வேற விழுந்தாள்.  கௌரவம் சிவாஜி மாதிரி நான் ஏதாவது சொல்லணும்னு நினச்சா ஒண்ணுமே வரலை. ஆபீசிலேயே டிபார்ட்மெண்ட் விசாரணையின் போது ஒண்ணுக்கிடக்க ஒண்ணு பேசி சொதப்பினவன் நான்.   ஒரு தடவை டிராமா போடும்போது எனக்கு ஹீரோ வேஷம் கொடுத்துவிட்டு நாலு ரிகர்சல் முடிஞ்ச பிறகு எனக்கு வில்லன் வேஷம் கொடுத்துட்டாங்க. மேடையில ஏறினதும் எனக்கு வில்லன் டயலாக் எல்லாம் சுத்தமா  மறந்து போச்சு. ஆனா ஹீரோவோட டயலாக் அப்படியே ஞாபகம் வந்தது. ஹீரோ பேசவேண்டிய வசனத்தை நான் பேச,  ஹீரோவும்  அதே வசனத்தைத் திருப்பிச் சொல்ல அது ஒரு புது விதமான காமெடி என்று எல்லாரும் சிரிக்க அத்தோட என் நாடக வாழ்க்கையும் முடிஞ்சுது.

ஷிவானி மட்டும் ஷாலுவுக்குத் தெரியாமல்  என்கிட்டே வந்து ” அப்பா ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு ஒரு கிஸ் கொடுத்துவிட்டுப்  போய்விட்டாள். ஷ்யாம் ‘உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ; என்கிற பார்வையில் லுக் விட்டுட்டுப் போனான். போன வாரம் அவன் கேட்ட ஜீன்ஸ் பேண்ட் வாங்கித் தரலை. அதன் விளைவு தான் இது.

ஆம்பிளை ஜட்ஜை ‘மை லார்ட்’ என்று சொல்லுவது போல இந்த ஜட்ஜை ‘மை லேடி’ன்னு ஒரு ஃப்ளோவில  சொன்னா  அந்த நடுவர் அம்மா போலீசைக் கூப்பிடுவாங்களோன்னு பயமா இருந்தது.

ஷாலு அந்த அறைக்குள்ளே இருந்த அனைவரையும் பார்த்துவிட்டு குருஜினியைக் கண்ணால் வணங்கி அவர் தலை அசைத்து ஆசீர்வாதம் செய்ததும் கணீர் என்று ஆரம்பித்தாள்.

“கனம் கோர்ட்டார் அவர்களே”

அதற்குள் நடுவர் கையமர்த்தி ” இந்த மன்றத்தில் அப்படி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னை மேடம் என்றே அழைக்கலாம், நீங்கள் அவர் மேல உள்ள குற்றங்களை மட்டும் எடுத்துச் சொல்லுங்கள் ‘ என்று சொன்னதும் முதல் பாலே ‘நோ பால்’ என்று சொன்னதைப் போல ஜாலியா இருந்தது.

” நன்றி, மேடம் ! நேரடியாக விஷயத்துக்கு  வருகிறேன்.   இதோ இங்கு அமர்ந்திருக்கும் என் கணவர் என் மீதும் எங்கள் குழந்தைகள் மேலேயும் மிகவும் பிரியமாக இருப்பவர். அவருக்கு எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது.  மிகவும் நல்லவர். நன்றாகப் படித்தவர்.  பண்புள்ளவர். ஆனால்  அப்படிப்பட்ட இவரின்   நடவடிக்கைகள் பெண்கள் உரிமைக்கு எதிராக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் வெளிப்படுத்தி சமூகத்துக்கு ஒரு பாடத்தைப் புகட்டவே (சமூகமே ஒரு பெரிய பாடம் என்று ஷ்யாம் சொல்வது என் காதில் விழுந்தது )  இந்த வழக்கைக் கொண்டுவந்திருக்கிறேன் “

“யெஸ், புரஸீட்”

” மேடம், நான் இதுநாள் வரை ஒரு சராசரிக் குடும்பப் பெண்போல இருந்து வந்தேன். சமையல், சினிமா, அரட்டை, சீரியல், குழந்தைகள், வீட்டு வேலை என்று இருந்து வந்தேன். திருமணத்துக்குப் பிறகு என் ஆசைகள் அபிலாஷைகள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்று ஆணாதிக்கம் எப்படி இருபது நூற்றாண்டுகளாகத் தீர்மானித்திருந்ததோ அதேபோல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அது எல்லோருக்கும் திருப்தியைக் கொடுத்து  வந்தது. ‘ஷாலு அருமையா குடும்பம் நடத்துறா’ என்று என் அப்பாவும் மற்ற உறவினர்களும் என்னைப் பாராட்டும்போதெல்லாம் என் மனதில் உள்ளூர ஒரு வலி தெறித்துக் கொண்டிருந்தது.

நான் எல்லோருக்கும் பிடித்தவளாக வாழுகிறேன்; ஆனால் எனக்குப் பிடித்தவளாக வாழ்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தது. பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இந்த சமுதாயம் போட்ட கோட்டில் நேராக நடப்பதற்கு நான் என் மனத்தை வளைத்து வளைத்துக் காயப்படுத்த வேண்டியிருக்கிறது. என் திறமைகளையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு ‘நான் ஒன்றுமே தெரியாதவள்’ போல  வெளிவேஷம் போட வேண்டி இருக்கிறது. எப்போதாவது ஓரிருமுறை என் திறமையை வெளிக்காட்டினால் அது .மற்றவர்களுக்கு அதிகப்பிரசிங்கத்தனமாகத் தோன்றியது.

எனக்கு ரெண்டு சாய்ஸ் இருந்தது. ரணமாகியிருக்கும் என் மனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அது மரத்துப் போனதாக நினைத்துக் கொண்டு செக்கு மாடு மாதிரி ஒரு குறுகிய வட்டத்திலேயே சுத்தி சுத்தி வருவது. இன்னொன்னு வருவது வரட்டும் என்று என் சக்தியை ஊருக்கு உலகுக்கு எடுத்துக் காட்டி அதன் மூலம் எனக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துவது.

நமது குருஜினியைக் கண்டுபித்தபிறகு நான் இரண்டாவது வழியை முயற்சி செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஒவ்வொரு  மாதமும் நீ புதிது புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்ற குருஜினியின் கட்டளை எனக்கு மிகவும் பிடித்தது. அதன் படி நான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டேன். சிறு வயதில் கற்றுக் கொண்ட  நாட்டியத்தை மீண்டும் அரங்கேற்றினேன். குருஜினியுடன் சேர்ந்து கோமாதா பூஜை செய்தேன். பிறகு யோகா பயிற்சி செய்தேன். அவருடன் சிங்கப்பூருக்குப் போய்   பாரதப் பிரதமர் மோடி அவர்களைச்  சந்தித்தேன். இன்னும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றலாம் என்று மனதில் குதூகலம் அடைந்தேன்.

‘ உன் கணவர் உனக்கு உதவி செய்ததனால் தானே இத்தனையையும் உன்னால் சாதிக்க முடிந்தது ‘ என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அது ஆணாதிக்கத்தின் ஒரு சிறிய சலசலப்பு  என்று தெரிந்து கொண்டேன்.

நான் நிறையப் பேசி எல்லோருடைய நேரத்தையும் வீணாக்க விரும்பவில்லை.

என் கணவர் என்னை இதுவரை ஒரு பொம்மலாட்ட  பொம்மையைப் போலத்தான் நடத்தி வந்திருக்கிறார்.   முதன் முதலில் அவருடைய  கம்பெனி இண்டர்வியூவில் பார்த்தோம். பிறகு மகாபலிபுரம் கலங்கரை விளக்கத்தருகே சந்தித்தோம். அவர் நண்பருக்காகப் பெண் பார்ப்பது போல வந்து என்னைப் பார்த்து விட்டுப் பிறகு உண்மையைக் கூறித் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி நாலைந்து மாதத்திலேயே என்னை வேலையை விட்டுவிடும்படிக் கூறினார். எனக்கு அதற்கு விருப்பமில்லைதான். ஆனால் கடைசியில் அவருடய விருப்பமே நடைபெற்றது.

அவர் , அவருடைய பள்ளி, கல்லூரி  வாழ்க்கை , அவருடைய சிறுவயது கனவுகள் பற்றி நாள் கணக்காக மணிக் கணக்காகப் பேசுவார்.  ஆனால் என்னுடைய  கனவு என்னவென்று நான் சொல்லத் தொடங்கும் போது குறட்டைவிட்டுத் தூங்குவார்.

பெண்டாட்டி , குழந்தை குட்டிகளை விட அவருக்கு அவருடைய ஆபீஸ், சாப்பாடு, தூக்கம் இவைதான் முக்கியம்.

வீட்டு வேலையில்  எனக்குக்  கொஞ்சம் கூட உதவிக்கு வர மாட்டார்.

குழந்தைகளை செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்குகிறார்.

நான் பிறந்த வீட்டில் வளர்ந்த விதத்தைப்  பற்றிக் கிண்டலாகப் பேசுவார்.  நாங்கள் பேசும் பேச்சு, நாங்கள் உண்ணும் உணவு இவற்றையெல்லாம் கேலியாகப் பேசுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

ஆனால்  ஷாலு  மை வைப் என்ற பெயரில் குவிகம் என்ற பத்திரிகையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு சீரியல் எழுதி வருவதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. இது அவருடைய    மாபெரும்  குற்றம்.

எங்கள் திருமணத்தின் போது வேடிக்கையாக ஆனால் சற்று சீரியசாக ஒரு அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டோம். அது எங்களுக்குள் மட்டும் தான்  இருக்கவேண்டும் வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று உறுதிமொழி எடுத்திருந்தோம். அதைப்  பற்றியும் அவர் குவிகம் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.  இது அவர் செய்த நம்பிக்கைத்  துரோகம்.

இதை அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே ? அதை விட்டுவிட்டு ஏன் இங்குவந்து சொல்லவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

இது எனக்கு மட்டுமல்ல, என்னைப் போல் ஏராளமான பெண்கள் கணவனின் நிழலிலேயே இருந்து தங்கள் உருவத்தைத் தொலைத்துவிட்டவர்கள், தங்களுக்குத் தெரியாமலே தங்கள் சிறகை உதிர்த்து விட்டவர்கள், என்றைக்காவது ஒருநாள்  நான் பறக்கப் போகிறேன் என்று எண்ணிப் பறக்க முயலும்போது தங்கள் சிறகுகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன என்பதை உணர்வார்கள்.

இந்தப் பிரச்சினையை இங்கே எழுப்புவதன் மூலம் அந்த  உண்மையின் சூடு  நம் நாட்டில் முடங்கிக்கிடக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச்சேரும்.  பிறகு மக்கள் மன்றத்துக்குப் போகும் – சட்ட சபைக்குப் போகும்-  நாடாளுமன்றத்துக்குப் போகும். புது சட்டம் உருவாகும்.

அதற்கு முதல் பொறி என்னுடையதாக இருக்கட்டும் என்று தான், நான்  காதலித்துத் திருமணம் புரிந்து கொண்ட  என் அன்பான கணவரை இந்த மேடையில் நிறுத்திக் குற்றப் பத்திரிகை வாசிக்கிறேன்.

அவருக்கு என்ன தண்டனை வழங்கினாலும் அது என்னைத்தான் காயப்படுத்தும் என்பதை உணருகிறேன். இருந்தாலும் இந்தப் பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்று இந்த மன்றத்தை யோசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

தட்ஸ் ஆல்,  யுவர் ஆனர். மன்னிக்கவும் மேடம்.  “

ஷாலு  அமைதியாகத் தன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் அழவில்லை. அவள் கண்களில் கலக்கமில்லை. ஒரு தெளிவு இருந்தது. இதயத்தின் ரத்த நாளத்தில் இருக்கும் அடைப்பை ஆஞ்சியோ மூலம் எடுத்தபிறகு இரத்தம் குபு  குபுவென்று ஒடுமே அதைப் போன்ற   நிலை அவளுக்கு.

நடுவர் மேடம் என்னைப் பார்த்தார்கள்.

“ஷாலுவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார்.

நான் மெதுவாக எழுந்து  நின்றேன். ஷாலுவைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் உணர்ச்சிகள் அவள் கழுத்து நரம்பில் துடிப்பதை உணர்ந்தேன்.

எனக்கு வார்த்தைகள் வரவில்லை.  என் கண்ளிலிருந்து கண்ணீர் பெருகி வரத் தொடங்கியது.  எனக்கு நினைவு தெரிந்து நான் அழுதது கிடையாது. ஆனால் இன்று   அது கண்களில் இறங்கிக் கன்னத்தை நனைத்து நெஞ்சில் விழும்போதுகூட அதைத் துடைக்கும் சக்தி என் கைகளுக்கு இல்லை.

குருஜினிக்கும்  நடுவர் மேடத்திற்கும்  என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மெல்லத் தட்டுத் தடுமாறி

” ஷாலு கூறிய அத்தனை குற்றங்களையும் நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் என் ஷாலுவை என் ஷ்யாம் – ஷிவானியை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்”  என்று சொல்லிவிட்டு நின்றேன்.

என் தலையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தேன்.

பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.

பிறகு கண் விழித்துப் பார்க்கும் போது தான் தெரிந்தது அத்தனையும் கனவு என்று. எத்தனையும் என்று சொல்லத் தெரியவில்லை.

முற்றும்

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.