சோவின் மறைவு ஒரே எழுத்தில் சொல்லப்போனால் ‘ஓ ‘
பத்திரிகையாசிரியர் சோ, எழுத்தாளர் சோ, அரசியல்வாதி சோ, நாடகாசிரியர் சோ, நாடக நடிகர் சோ, திரைப்பட நடிகர் சோ, பேச்சாளர் சோ, டைரக்டர் சோ, சட்ட நிபுணர் சோ, பின்னால் ஜெயலலிதாவின் ஆலோசகர் சோ , மிடாஸ் போன்ற மதுக்கம்பெனிகளுக்கு நிர்வாக இயக்குனர் சோ !
இதில் எந்த சோவை உங்களுக்குத் தெரியும்?
எல்லா சோவிற்கும் ஒரு பொதுவான இழை – நகைச்சுவை !
காலத்துக்கு ஏற்ப மாறுபவர் ! ஆனால் சந்தர்ப்பவாதி அல்ல.
காங்கிரசைத் திட்டினவர் – தி மு க வை ஆதரித்தவர். அ திமு க வை எதிர்த்தவர். எம் ஜி ஆரை ஆதரித்தவர். ஜனதாவை மதித்தவர். மொரார்ஜி, வாஜ்பேய், மோடி இவர்களைத் தீவிரமாக ஆதரித்தவர். ஜெயலலிதாவை ஆதரித்தவர்.
ஒவ்வொன்றும் காரணம் இல்லாமல் அவர் செய்ததில்லை.
யாருக்கும் தலை வணங்காத ஜெயலலிதா -இவருக்குத் தலை வணங்கியதாக ஒரு புகைப்படம் இணைய தளத்தில் வலம் வந்திருக்கிறது.
துக்ளக் என்ற அரசியல் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தியதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சோவின் மகாபாரதமும் அவரது எங்கே பிராமணனும் என்றென்றும் பேசப்படும்.
அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் குவிகத்தின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.