பதினைந்து நாட்களுக்கு முன்புவரை, அந்த ஊட்டி மார்கழி
மாதக் குளிரிலும், ஆறு மணிக்கு ‘டாண்’ என்று எழுந்து, குளித்து,
நெற்றியில் விபூதிப்பட்டையுடன் நெற்றியின் நடுவில் குங்குமமும்,
சந்தனமும் இட்டுக்கொண்டு, விளக்கேற்றி அதன்முன் அமர்ந்து
அரைமணிநேரம் பிள்ளையாரப்பனுடன், திருச்செந்தூர் முருகனையும் துதிபாடி, நமஸ்கரித்துவிட்டுப் படிக்க உட்காரும் சரவணன், காலை ஒன்பது மணியாகியும் தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு, படுக்கையில் புரண்டுபுரண்டு படுப்பதைப் பார்த்த முகுந்தனுக்கு மனதை என்னவோ செய்தது.
‘டேய்.. சரவணா… எழுந்திருடா… காலை ஒன்பது மணியாகுது..
ஸ்வாமிக்கு பூஜை செய்யவேண்டாமா…’ என்று அவனை உலுக்கி எழுப்பினான்.
மெதுவாகத் தலையில் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு, “போடா…. ஸ்வாமியாவது… பூதமாவது… எல்லாம் ஹம்பக்..” என்று சொல்லியபடியே மெதுவாக எழுந்தான்.
திடுக்கிட்டான் முகுந்தன்.
‘டேய் என்னடா சொல்றே.. தெய்வ நிந்தனை கூடாதுடா..’
‘பின்னே என்னடா..? நாம ரெண்டுபேரும்தானே லாஸ்ட்டைம்
சென்னை போயிருந்தப்போ அந்த ஜோசியரைப் பார்த்தோம்.
அவரிடம் என் ஜாதகத்தைக் காட்டி ‘ஒரு பெரிய கம்பனியின் இம்பார்டன்ட் போஸ்டுக்கு ஒரு என்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கு.. அதுலே
ஈஸியா பாஸ் பண்ணிடுவேனான்னு கேட்டோம். அவரும் என்
ஜாதகத்தைப் பார்த்து, ஒரு மாதம் தினமும் காலையிலே எழுந்து
குளித்து, விளக்கேத்தி, பிள்ளையாரையும், திருச்செந்தூர் முருகனையும், பக்தியோடு, துதித்து வாங்க… அப்புறம் டெஸ்ட்
எழுதுங்க.. உங்களுக்கு நல்ல மார்க் கிடைச்சு ஸெலக்டும் ஆவீங்கன்னு சொன்னார்.. அவர் சொன்னபடியே தினமும் காலையிலே எழுந்து, குளித்து, பூஜை செய்துவந்தேன். ஆனா அந்த டெஸ்ட்லே நான் எக்ஸ்பெக்ட் பண்ணின மார்க் கிடைக்கலியே.. அந்த
பிள்ளையாரும், முருகனும் என்னைக் காப்பாத்தலேன்னுதானே
அர்த்தம்…?’ என்றான் சரவணன் கொதிப்போடு.
‘கூல்..கூல்.. சரவணா.. ‘சுவர் இருந்தால்தானே சித்திரம்
வரையமுடியும்’னு பெரியவங்க சொல்வாங்க கேட்டிருக்கியா..?
நீ என்ன பண்ணினே.. இந்த ஊட்டிக் குளிரிலே காலையிலே தினம்
எழுந்து குளித்துவிட்டு, வெற்று மார்போட அரைமணி நேரம்
பூஜைபண்ணினே.. இந்தக் காற்றிலே ஒரு நிமிஷம் வெளியிலே
போனாலும் உனக்கும் எனக்கும் சரமாரியா தும்மல்வந்து ஜலதோஷம் பிடிச்சுக்கும். நீ இந்தக் குளிரிலே குளிச்சு, மார்பை கவர்பண்ணிக்காம பூஜைபண்ணிட்டிருந்தே.. என்னாச்சு..? அந்த
எக்ஸாம் டேட் நெருங்கநெருங்க உனக்கு சளியும், ஜுரமும்
வந்துடுத்து. அந்த ஜுரத்தோடபோய் எக்ஸாம் எழுதினே.. நீ
எப்படி கான்ஸன்ட்ரேட்பண்ணி நல்லா எழுதி இருக்கமுடியும்
சொல்லு..’ என்றான் முகுந்தன் மெதுவாக நிதானமாக.
‘அப்போ அந்த ஜோதிடர் சொன்னது பொய்யா.. தப்பா..?’
‘இல்லெ.. அந்த ஜோசியர் சொன்னது தப்புன்னு நான் சொல்லலெ.. அவர் பொதுவாகச் சொன்னார்.. அதுவும் சென்னையில்
இருந்துகொண்டு சொன்னார்.. அந்த க்ளைமேட்டுக்கு அவர்
சொன்னது ஓகே… பட், நம்ம ஊட்டி க்ளைமேட்டுக்கு அது ஒத்-
துக்கலே..’
‘அவர்தான் காலையில் எழுந்து, குளிச்சு, சுத்தமா பூஜை
பண்ணனும்னு சொன்னாரே…’
‘ஆமாம்.. சொன்னார்.. அதாவது உடம்பும், மனதும் சுத்தமா
இருக்கணும்னு அப்படிச் சொன்னார்.. ஆனா நாம இருந்துட்டிருக்கிற சீதோஷ்ண நிலமையையும் நாம பார்த்துக்கணும்..’
‘நான் ஆராதிக்கிற அந்தக் கடவுள் எனக்கு உடம்புக்கு
ஒண்ணும் வராம பார்த்துக்கலையே.. ‘ என்றான் சரவணன் ஒரு
குழந்தைபோல.
மெதுவாகச் சிரித்தான் முகுந்தன். ‘சரவணா,,, விஞ்ஞானப்படி பார்த்தேன்னா கடவுள் ஒண்ணுமே செய்யறதில்லே.. எல்லாம்
நீதான் செய்துக்கறே.. அலாதி நம்பிக்கையோட உன் மனதை
ஒருமுகப்படுத்திக் கடவுளை தியானிக்கறெ.. அப்போ உனக்குள்
ஒரு உத்வேகமும், பாஸிடிவ் எனர்ஜியும் உண்டாகுது. உன்னுடைய ஸெல்·ப் கான்·பிடன்ஸ் லெவல் – தன்னம்பிக்கை –
ஜாஸ்தியாகுது. மனம் சஞ்சலமில்லாம, அமைதியா இருக்கு…
எக்ஸாமுக்கு மும்முரமா எல்லா போர்ஷன்ஸையும் படிக்கறே..
சஞ்சலமில்லாத, அமைதியான, தன்னம்பிக்கை அதிகம்கொண்ட
மனசு அதையெல்லாம் அப்படியே உள்வாங்கி, எக்ஸாம் ஹாலில்
குழப்பமில்லாம, அமைதியா வினாத்தாளைப் படித்து ஆன்ஸரை
எழுதவைக்குது.. இதுதான் நடக்குது…’
‘அப்போ கடவுளை தியானிக்கவேண்டாம்னு சொல்றியா?’
‘நோ… நோ.. அப்படி நான் சொல்லலே.. கடவுளை
ஆராதனைபண்ணு.. ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்..’
என்றார் ஒரு அறிஞர்.. ‘தட்டுங்கள் திறக்கப்படும்.. கேளுங்கள்
கொடுக்கப்படும்’ என்றார் ஏசுபிரான். இந்த தியானமும், ஆராதனையும், வேண்டுதலும் உன்னுடைய தன்னம்பிக்கையை
மெருகூட்ட.. அதிகமாக்க…’
‘டேய், தப்பா நெனச்சுக்காதே.. நாம ரெண்டுபேரும்தான்
எக்ஸாம் எழுதினோம்.. நான் தினமும் பூஜையெல்லாம் பண்ணினேன்.. நீ மெதுவாக எழுந்து குளித்து ஒரு நிமிடம் ஸ்வாமி
படம்முன் நின்று கண்ணைமூடி வேண்டிக்கொண்டதோடு சரி..
உனக்கு அந்தக் கடவுள் என்னைவிட ஐந்துமார்க் அதிகம்
கொடுத்திருக்காரே.. என்னை அந்த முருகன் கவுத்துப்புட்டாரே..
என்ன அநியாயம் இது..?’
கடகடவென்று சிரித்தான் முகுந்தன். ‘டேய், இது
தியானடைம் வெச்சு செய்யறதில்லே… உண்மையைச் சொல்லணும்னா நீ ‘டூ ஆர் டை’ ங்கற மனப்பான்மையிலே ‘எப்படியும்
இந்த எக்ஸாம்லே ஸ்கோர் பண்ணித்தானாகணும்னு’ இருந்ததாலே
உன் மனசுலே எப்பவும் ஒரு பயமும், ஜெயிப்போமான்னு
சந்தேகமும் இருந்துட்டே இருந்தது. உன் மனதை அமைதிப்படுத்த அதிக நேரம் தியானமும், துதிபாடலும் தேவைப்பட்டது.
பட், ஐ வாஸ் டேகிங் இட் ஈஸி.. போய் எழுதுவோம்..’கிடைத்தால்
ஹாப்பி’ங்கற மனநிலையிலே இருந்தேன். அதனாலே என்
மனம் எப்பவும் அமைதியாவே இருந்தது. இப்போ இந்த
டெஸ்டிலே ·பெயிலாயிருந்தாலும் கவலைப்பட்டிருக்கமாட்டேன்
மனம் அமைதியாகவும், உடம்பு நலமாகவும் இருந்ததாலே நான்
படிச்சதெல்லாம் ஞாபகம் இருந்தது. நல்லா எழுத முடிந்தது.
ஆனா ஜுரவேகத்துலே இருந்த உன் உடம்பு ஒத்துழைக்கலே..
நீ படிச்சதுகூட எல்லாம் ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியலே.
ஒண்ணு கவனிச்சியா.. ஆத்திகர்களுக்குத்தான் ஜெயித்துத்தான்
ஆகணும்னு ஒரு வெறியும், ஜெயிப்போமா என்ற பயமும்
அதிகம் இருக்கு. அதனாலே அவர்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள அதிக பூஜைகளும், ஆராதனைகளும்
தேவைப்படுது. நாத்திகர்களுக்கோ, ‘ஜெயித்தால் சரி.. ஜெயிக்காவிட்டால் மறுபடியும் முயற்சிப்போம்’ என்ற மனப்பான்மை
அதிகம். அதனால் அமைதியாக, தன்னம்பிக்கையோடு, கடும்
உழைப்போடு முயற்சி செய்கிறார்கள். சில நேரம் ஜெயிக்கி-
றார்கள். சில நேரம் தோற்கிறார்கள்.. தோல்வியில் சோர்ந்து
போவது இல்லை. மறுபடியும் முயற்சிக்கிறார்கள். தட் ஈஸ் இட்..
ஸோ ஸிம்பிள்…’
‘ஸோ இப்ப என்னடா பண்ணறது..?’
‘நத்திங்… சூடா ஒரு கப் காபி குடித்துவிட்டு, அந்த
ரூமுக்குள்போய் ஒரு அரைமணி நேரம் அந்த பிள்ளையாரையும், முருகனையும் உன் ஆதங்கமும், ஆத்திரமும் தீர திட்டித்
தீர்த்துவிடு. அவர்கள் நம் தந்தைமார்கள். தப்பாக நினைக்க
மாட்டார்கள். உன் மனது அமைதிப்படும். பின் குளித்துவிட்டு
வார்மாக உடை அணிந்துகொண்டு உன் பூஜையைப்பண்ணு.
வரப்போற அந்தக் கம்பனி இன்டர்வியூவிற்கு பிரிபேர் பண்ணஆரம்பி.. நீ வாங்கின மார்க் குறைஞ்ச மார்க் கிடையாது. என்ன நீ எக்ஸ்பெக்ட் பண்ணின அளவு வரலே அவ்வளவுதான்.. அதை இன்டர்வியூ மார்க்லே சரிக்கட்டிடலாம்…ஸோ எபவ் ஆல் நல்லதையே நினை.. பாஸிடிவாஇரு.. உன் உழைப்பின் மேல் – தன்னம்பிக்கை மேல் – நம்பிக்கை வை. கமான் சியர் அப்.. நானும் இன்டர்வியூவிற்குப் ப்ரிபேர்பண்ண ஆரம்பிக்கிறேன்..’ என்று டேபிள் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் முகுந்தன்.
அந்த அறையை நோக்கி நடந்தான் சரவணன் – கடவுளை
நன்றாகத் திட்டித்தீர்க்க.