முன்கதை…..
வருடம் கிபி 1011. சைனாவின் தலைநகரமான பேஜிங்கில் ஷேங்க்ஸான் சக்ரவர்த்தியைக் காண வந்திருந்த, கடல் கடந்துவணிகம் செய்யும் தலைவர், தென் இந்திய சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழனின் பரிசுப் பொருட்களையும் ஓலைகளையும் சமர்ப்பிக்கிறார். முதல் ஓலை சைனாவின் கலாச்சார தூதுவன் வாங்மெங் 1001ம் வருடம்ராஜராஜசோழனை சந்தித்தபோது எழுதியது. அதைச் சபை அதிகாரி ஒருவர் படிக்க எல்லோரும் ஆவலுடன்கேட்கின்றனர். அதில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் கட்டப்போகும் பெருவுடையார் ஆலயத்திற்குப் பணி செய்யும் அத்துணைபேரையும், சைன கலா நிகழ்ச்சிகள் மூலம், மகிழ்வித்து உற்சாகப்படுத்த வாங்மெங் ஒப்புக் கொள்ளுகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயம் முதல் தளம் நிறைவு பெற்று இரண்டாம் தள வேலைகள்தொடங்கியிருக்கின்றன. ஒரு நாள் வாங்மெங் நார்த்தாமலை நிகழ்ச்சிகளை முடித்துத் திரும்பும்போது தற்செயலாக மாபெரும் சதிச்செயல் ஒன்றைப்பற்றித் தெரிந்து கொள்ளுகிறார். தஞ்சாவூருக்கு வடக்கேயுள்ள 10000 வேலி நெல்கதிர்களை தீக்கிரையாக்கும் நோக்கத்தையும் ராஜராஜனைக் கொலை செய்யும் திட்டத்தையும் பகைவர்கள் பேசுவதை ஒளிந்திருந்து கேட்டு அறிகிறார். தஞ்சையை அடைந்து திருமந்திர ஓலை நாயகம் கிருஷ்னன் ராமனிடம் நடந்தவற்றைக் கூறுகிறார்.
தீக்கு இரையாக்கும் சதியை முறியடிக்க அவர் பொறுப்பேற்கச் சக்ரவர்த்தியைக் காக்கும் பணியை வாங்மெங் ஏற்கிறார். வாங்மெங் ஓலை முடிவடைகிறது. கிருஷ்னன் ராமன் ஓலையை அதிகாரி தொடர்ந்து படிக்கிறார். பயிர்கள் காக்கப்படுகின்றன. அரசரைக் காக்குங்கால் வாங்மெங் தன் உயிரைக்கொடுத்து ராஜராஜனைக் காக்கிறார். வாங்மெங்கின் நல்லடக்கம் சீன கலாச்சாரத்தைப் பின்பற்றி நடக்கிறது. அதிகாரி கிருஷ்னன் ராமன் ஓலையை மேலும் தொடர்ந்து படிக்கிறார்.
வாங்மெங் சிலை இரண்டாவது தளத்தில் பொருத்த ஏற்பாடாகிறது. கிருஷ்ணன் ராமன் ஓலை முடிந்து வருடம் 1010ல்ராஜராஜனால் எழுதப்பட்ட ஓலையை அதிகாரி படிக்கிறார். அதில் கோவில் கட்டி முடிந்ததையும் அதில் வாங்மெங் சிலைபொருத்தப்பட்டதையும் குறிப்பிட்டு வாங்மெங் தியாகத்தையும் பாராட்டி ஷேங்க்ஸானை விருந்தினராகச் சோழநாட்டிற்கு அழைக்கிறார். ஷேங்க்ஸான் ராஜராஜன் அனுப்பிய காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டு அதற்கு ஒப்புதல் அளிக்கிறார்.
வருடம் 1014. மறக்கமுடியாத அந்த நாள். ராஜராஜன் ஏதோ ஒரு இனந்தெரியாத மன உளைச்சலினால் தவிக்கிறார். கோவிலுக்குச் செல்லுகிறார். அங்கு அதற்கு விடை, வாங்மெங்பற்றிக் கல்வெட்டுகளில் பதிக்காமல் விட்டுப்போனது தெரியவருகிறது. ஈசனை வணங்குங்கால் இதைப்பற்றி மற்றவருக்குத் தெரிவிப்பதற்குமுன் மாரடைப்பினால் இறக்கிறார். நாளடைவில் வாங்மெங் சிலை விவரம் ஒருவருக்கும் தெரியாமல் கேள்விக்குறியாகிவிடுகிறது.
இவ்வரலாற்றை எழுதிய நான் அச்சிலையின் பின் உள்ள ஆதாரம் எனக்கு எப்படிக் கிடைத்தது என்ற உண்மையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சிறு வயதிலிருந்தே அச்சிலையின் மர்மத்தை அறிய என் மனதில் உதயமான வித்து இப்போது ஒரு வெறியாய் உருவெடுத்திருக்கிறது. அன்றொருநாள் தஞ்சை கோவிலுக்குச் செல்லும்போது என் உயிரைப் பணயம் வைத்து ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றினேன். கோவிலுள் சென்று சிலையை ஆராயத் தொடங்கினேன்.
இனி……
பெரியவர் சொன்ன வரலாறு
கோவிலை நோக்கி நடந்தேன். உள் சென்று விமானத்தைச் சுற்றி வலம்வந்து வடக்குப் பக்கம் வந்தடைந்தேன்.
தஞ்சையை சோழருக்குப் பின் ஆண்ட முக்கியமாக நாயக்கர்கள், மராத்தியர்கள் கோவிலின் பிரகாரத்தைச் சுற்றிலும் சிறு ஆலயங்கள் எழுப்பிப் பெரிய கோவிலின் அழகுக்கு மெருகேற்றியிருந்தார்கள். கோவிலைச் சுற்றிலும் மதிள்கள். அதைஒட்டி 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய நடைபாதை மண்டபம் கட்டப்பட்டிருந்தது. அதில் வடக்குப் பிரகாரத்தில் ஒரு விளிம்பில் உட்கார்ந்துகொண்டேன். அந்த இடத்திற்கு எதிரில் சண்டிகேஸ்வரர் கோவிலின் பின் பகுதி, வலப்பக்கம் முருகன் கோவில், அதன் முன் கருவூரார் ஜீவ சமாதியும் தென்பட்டன. முக்கியமாக மர்மநபர் சிலையை பைனாகுலர் மூலம் பார்ப்பதற்கு ஏற்றதாகவும் அமைந்திருந்தது. ஷோல்டர் பேகிலிருந்து பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்தி மர்மநபர் சிலையில் நிலைத்து ஆராயத் தொடங்கினேன்.
என் மனதில் தற்போதைய மர்மநபர் சிலை, அதற்குமுன் இருந்த வேறு சிலையை அகற்றி, அந்த இடத்தில் மெருகேற்றியவர்களால் பொருத்தப்பட்டிருக்கலாமோ என்ற எண்ணம் உதயமானது. கோவில் கற்கள் ‘Ball And Socket’ முறைப்படி ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கட்டப்பட்டிருந்ததை நான் அறிவேன். ஒரு கல்லையும் அகற்றவும்முடியாது அதை மாற்றி வேறு வடிவம் செதுக்கவும் இயலாது. எனவே அதற்குச் சாத்தியமே இல்லை என்று அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன்.
தொப்பியணிந்த அந்த உருவத்தைத் துருவித்துருவிப் பார்த்ததில் அவர் ஏன் ஒரு சீனராக இருக்கக்கூடாது என்ற எண்ணம் என் மனதில் உதிக்க ஆரம்பித்தது. அவர் அணிந்திருக்கும் ஆடை ஐரோப்பியர்கள் அணியும் பாணி அல்ல என்றும், சீனர்கள் அணியும் வழக்கமான ஆபரணம்தான் என்றும் தெரிகிறது. சீனர்களின் அடையாளமான தொங்குமீசை இல்லையே என்ற ஒரு குழப்பம். வெவ்வேறு பகுதிகளில் வாழும் சீனர்களுக்கு அந்த அடையாளம் ஒருவிதிவிலக்காக இருக்கலாம் என்று எண்ணினேன். கடைசியில் மர்ம நபரின் தொப்பி பல பகுதிகளில் வாழும் சீனர்களின்பலவிதமான தொப்பிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்றும் என் எண்ண அலைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தன.
மாலை நேரம்.
சிலையை நோக்குவதிலும் சிந்தனை அலைகளை வெவ்வேறு திசைகளில் திருப்புவதிலுமாக நேரம் சென்றுகொண்டிருந்தது. அதைக் கண்டுபிடிக்கும் என் ஆர்வம் மேலுக்குமேல் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஏதாவது ஒரு காரணம் இருந்தே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக என் சிந்தனைகளைத் தொடர்ந்தேன்.
என்னை யாரோ உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் இடையிடையே தோன்றிக் கொண்டிருந்ததை முதலில் நான் பொருட்படுத்தவில்லை. கடைசியாகப் பார்த்துவிடுவது என்று சுற்றுமுற்றும் கண்ணோட்டம் விட்டேன். ஒரு பெரியவர் கருவூரார் சன்னதிக்கு அருகாமையில் நின்றுகொண்டு என்னையே உற்றுப் பார்த்தவண்ணமிருந்தார்.
‘இவர் என்னை உற்று நோக்குவதன் காரணம் என்ன?’ என நானும் அவரை நோக்கினேன். இருவர் கண்களும் சந்தித்தன. அந்தச்சேர்க்கையினால் எனக்கு ஒரு இனந்தெரியாத ஆனந்த மகிழ்ச்சி ஏற்பட்டதை அறிந்தேன்.
பெரியவர் என்னருகில் மெதுவாக வந்தார். அவரது கால்களை அவரின் விசித்திரமான காவியாடை மறைத்திருந்தது. அவர் வருகையில் ஏதோஒரு வித்தியாசம். நடந்து வந்ததாகத் தெரியவில்லை. மிதந்து வந்தது போல் தோன்றியது. அவரை ஏறெடுத்துப் பார்த்தேன். முகத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த மீசை தாடி. தலையில் ஜடாமுடி. சடைகள் தோளின் இருபுறமும். கழுத்தில் பெரிய உத்திராக்ஷத்தால் கோர்த்த மாலை. நெற்றியில் பட்டையான விபூதி. நடுவில் ஒரு வட்ட வடிவமான குங்குமப் பொட்டு. காவியினால் போர்த்தப்பட்ட உடல். என்னை அறியாமலே எழுந்தேன். என் உடலைத் தாழ்த்திக் குனிந்து, கைகளைத் தரையில் இருத்தி அவரை வணங்கினேன்.
‘நீ இன்று உன் உயிரைப் பணயம் வைத்து எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கிறாய். அதை நான் பார்த்தேன். நீ ஒரு எழுத்தாளன். அந்த மர்மமனிதராகக் கருதப்படும் சிலையைத் தற்சமயம் ஆராய்ந்து மர்மத்தைஉடைக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறாய். அவர் ஒரு சீனராக இருக்கலாம் என்றுகூட நினைக்கிறாய்’ என்று அந்தப் பெரியவர் கூறினார்.
நான் அதிசயத்தில் வாயடைத்துப் போனேன். என்னைப்பற்றியும், நான் நினைப்பதைப்பற்றியும் அவருக்கு எப்படித் தெரிந்தன? “பெரியவரே! தாங்கள் யார்? உங்களிடம் ஒரு தெய்வ சக்தி இருப்பதை உணர்கிறேன். தயவு செய்து என் ஐயத்தைப் போக்கவும்” என்று பக்தியுடன் வினவினேன்.
அதற்கான விடை ஒரு சன்னமான சிரிப்பு மூலம் அவரிடமிருந்து வந்தது.
‘உன்னைப்போலவே இங்கு ஒருவர் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால் அவர் தன் உயிரைக் கொடுத்து ஒரு மாபெரும் தியாகியாகினார். அது இருக்கட்டும்! உன் ஆராய்ச்சிக்கான விடையை உன்னாலும் வேறு எவராலும் அறிந்துகொள்ள முடியாத நிலைமை. அந்த நிலைமையைப் போக்கி உனக்கு விளக்கி எடுத்துரைக்க என் ஒருவனால் மட்டுமே இயலும். இன்று உன் வீரச்செயலால் என் மனம் நெகிழ்ந்தது. அதற்காகவே உன்னிடம் அதைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இங்கேஅமர்ந்து கொள்’ என்று உத்தரவிட்டு மண்டப விளிம்பில் அமர்ந்தார்.
அவரை அடி பணிந்தேன். அவருக்குப் பக்கத்தில் தரையிலிருந்து மண்டபத்தில் ஏறக் கட்டப்பட்டிருந்த படியில் பெரியவரின் கீழே அமர்ந்தேன்.
பெரியவர் சொன்னதை அப்படியே உங்கள்முன் வைத்துள்ளேன்.
பெரியவர் மேலே தொடர்ந்தார்.
‘இப்போது தெரிந்ததா வாங்மெங்கின் தியாகம் எப்படி மறக்கப்பட்டது ’ என்று சொல்லி நிறுத்தி, ‘மேலும் அவர் ஒரு சீனராக இருக்கலாம் என்ற உன் கணிப்பு சரியாகிவிட்டது பார்த்தாயா? அவர் முதலில் கூம்புவடிவில் இருக்கும் உயரமான தொப்பியைத்தான் அணிந்திருந்தார். இப்போது அப்படி இல்லை. ஏன் என்று உன்னால் கூறமுடியுமா?’ என்று கேள்வியை எழுப்பினார். உடனே நான் ‘உலகம் சுற்றும் வாங்மெங் மேலை நாடுகளின் பாணியைப் பார்த்து அதில் தனக்கு உவந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்’ என்று பதிலளித்தேன்.
‘சபாஷ்! சரியான ஊகம்! சரித்திர ஆராய்ச்சியில் உனக்கு நிறைந்த பக்குவம். தொடர்ந்து செய்’ என்று சொல்லி நிறுத்தினார்.
ஷேங்க்ஸான் நட்பு ஒப்புதல் அளித்தபின், ஏன் மன்னர் ராஜராஜன் மறைவுக்கு முன் அவரின் விருந்தாளியாகத் தஞ்சைக்கு வருகை தரவில்லை? இந்த என் சந்தேகத்தை தெளிவு படுத்தவும்’ என்று சித்தரை வேண்டினேன்.
‘ஷேங்க்ஸான் காங்க் ஜோவை முறியடித்தார். கொரியேவ் படை பயந்து ஓடியது. ஷேங்க்ஸான் உடன்படிக்கை நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். மீண்டும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. அடுத்த பத்து ஆண்டுகள் படைதிரட்டுதல், முற்றுகை ஆயத்தம், எல்லைகளைப் பலப்படுத்துதல், பாதுகாப்பு முதலியவற்றில் ஷேங்க்ஸான் முனைந்திருந்தார். மூன்று முறைகள் படையெடுத்தும் பயனில்லை. கடைசியாக க்விஜு போரில் இருவருக்கும் வெற்றிதோல்வியில்லாமல் முடிவடையவே இருவரும் ‘அமைதி ஒப்பந்தம்’ செய்துகொண்டனர். இந்தச் சூழ்நிலையில் அந்த நட்புஉடன்படிக்கையை அவரால் பூர்த்தி செய்ய இயலவில்லை’.
தகுந்த விடை கிடைத்ததில் திக்கு முக்காடிப் போன நான் ‘வாங்மெங் சிலையின் மர்மத்தை உலகிற்கு எடுத்துரைக்கஎன்னைத் தேர்ந்தெடுத்து உணர்த்தினீர்களே. அதற்கு உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்? பெரியவரே, தாங்கள் யார்?’ என்று அவர் கால்களிலே விழுந்தேன். மறுபடியும் அவர் வாயிலிருந்து ஒரு மர்மச் சிரிப்பு உதயமாயிற்று. கைகளைக் கூப்பியவாறே எழுந்தேன். எதிரில் அவரைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். கருவூரார் சன்னதிப் பக்கம் அவர் போய்க்கொண்டிருந்ததை – இல்லை மிதந்து சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். சன்னதிக்குள் சென்று பார்வையிலிருந்து மறைந்தார்.
இருட்டத் தொடங்கியிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனித நடமாட்டம் இல்லை. கருவூரார் ஜீவ சமாதிக்கு ஓடினேன். அது வெறிச்சோடிக் கிடந்தது. உள்ளே அவரைக் காணோம்.
திடுதிடுப்பென்று துக்கிவாரிப் போட்டது. கையில் பைனாகுலருடன் சிலையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்ததையறிந்தேன். அப்படியே கண்ணயர்ந்திருக்க வேண்டும். நடந்தது என்ன கனவா அல்லது நிஜமா என்று தெரியாமல் தவித்தேன். பெரியவரைச் சந்தித்தது, சிலையின் ரகசியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டது, கருவூரார் ஜீவசமாதியில் மறைந்தது எல்லாம் என் மனதின் கண்முன்னே பவனி வந்தன. எப்படியிருப்பினும் சிலையின் மர்மத்திற்கான விடைஇப்படி ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்!
(முற்றிற்று)