நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இட்லி மகிமை ஏப்ரல் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தோசை ஒரு தொடர்கதை மே மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அடைந்திடு சீசேம் ஜூன் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
ரசமாயம் ஜூலை மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
போளி புராணம் ஆகஸ்ட் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அன்னை கைமணக் குறள்கள் செப்டம்பர் மாதம் 2௦18 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
கலந்த சாதக் கவிதை அக்டோபர் மாதம் 2018 குவிகம் மின்னிதழில் வெளியிடப்பட்டுள்ளது
கூட்டுக்களி கொண்டாட்டம் !
தாயிட்ட கூட்டைச் சுவைத்தபின்னும் தரணியிலே
சேயினுக்கு வேறெதுவும் சுவைக்குமோ என்றவனை
நீயிட்ட கூட்டால் குழைத்து விட்டாய் – சுவையால்
கவியெழுத என்னைத் தூண்டி விட்டாய் !
எழுபிறப்பும் எடுத்து வந்ததுவே இதற்கெனவே
அன்னை உணவாலே உணர்ந்து கொண்டேன் !
உன்கையால் உண்ட உணவாலே – இன்னும்
இருக்கும் போதே இன்பம் இனிது கண்டேன் !
அடிமுதல் காணாத அண்ணாமலையானும்
கண்டானா உன்கூட்டின் அடிமுடியை ?
எழுகறிகாய் சேர்த்த இனிய சுவையினிலே
கண்டானா சிதம்பர இரகசியத்தை ?
ஆனந்தக் களியாட்டம் ஆடுதற்கு
என்ன உண்டான் என நானும் நினைத்திருந்தேன் –
அன்னை போல் உன்னைப்போல் உமையாளும் உணவளித்தால்
களியாட்டம் ஏன்தான் அவன் போட மாட்டான் ?
சாப்பாட்டு இராமன் என சபையோர் பலரும்
சாடுவது எனக்கு கேட்கிறது !
சுவைத்துப் பார்; முதலில் சுவைத்தால் தானே
சுவர்க்க வாசல் திறக்க வழி வாய்க்கிறது !
போயும் போயும் இந்தக் கூட்டினுக்கா
இந்த ஒரு பாட்டம் எனக் கேட்பவர்கள் –
கூட்டையும் களியையும் காட்டி விட்டால்
கூட்டுப் புழுவாய் ஆவீர்கள் !
ஆதலின் உலகோரே , விழித்தெழுங்கள் !
கூட்டுக்களி தின்று களித்திடுங்கள் !
உண்ணும் உணவிலும் ஒவ்வொரு பொருளிலும்
உள்ள சுவையை உணர்ந்திடுங்கள் !
புலன்களுக்கப்பாலே உள்ள சுவை தெரிய
புலன் தரும் சுவைகளைப் பெற்றிடுங்கள் !
பொருள்களின் பின்னால் புலப்படும் அருளை
மெய்யறிவாலே சுவைத்திடுங்கள் !