கால் தலையில் வலியில்லை
காய்ச்சல் எதுவும் எனக்கில்லை
சளியோ கபமோ இலையெனினும்
இரத்தக் கொதிப்பு சரியெனினும்
ஏதோ சங்கடம் எனத் தோன்ற
மருத்துவரிடம் நான் சென்றேன்
நாடி பிடித்து அவர் பார்த்தார்
ஓய்வு பெற்ற பலருக்கும்
நோய் இது பொதுவாய் வருமென்றார்
கடந்த கால ஏக்கமென
கூறப்படும் இந்நோய்க்கு
அரிய மருந்து ஒன்றுண்டு
என்றே அவர் பரிந்துரைத்த
நியமங்களையே கடைப் பிடித்து
நற்பலனை நான் கண்டதினால்
யாவரும் அவற்றால் பயன் அடைய
இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்!
ஆண்டில் மூன்று நான்கு முறை
பழைய நண்பர் பலர் சேர்ந்து
பதிந்த நினைவுகள் அசை போட்டு
பகிர்ந்து உண்டு கதை அடித்து
பொருள் காணாது பல பேசி
உள்ளம் உறுத்தா வசை பாடி
கேலிகள் செய்து வாய் சிரித்து
சிலமணி நேரம் செலவழிக்க
பறந்து போகும் மன ஏக்கம்
புத்துணர்ச்சி கண்டிடவும்
முதுமை குறைந்த வாழ்விற்கும்
இஃதோர் அரிய செயல்முறையே!