விஷ்வகர்மாவிற்கு ஸந்த்யாவின் நிலைமை புரிய ஆரம்பித்துவிட்டது. சூரியதேவனின் வெப்ப சக்தியைத் தாங்கும் தன்மை அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவரிடம் இருந்த ஒரே மருந்து காந்தசிகித்சைதான். ஆனால் முதன்முறை ஏற்பட்ட அனுபவத்திற்குப் பிறகு சூரியதேவன் அதற்குச் சம்மதிக்க மாட்டான் என்று நம்பினார். வேறு என்ன வழி? அப்படியே விட்டுவிட்டால் ஸந்த்யா உருக்குலைந்து அழிவது உறுதி. அதனால் சூரியதேவன் காலில் விழுந்தாலாவது சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
அதற்கான முயற்சியை அப்பொழுதே துவங்கினார். தன் மனைவியிடம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படிக் கூறிவிட்டு அவசரம் அவசரமாக விடைபெற்றுச் சென்ற மும்மூர்த்திகளைத் தொடர்ந்தார். சூரியமண்டலத்திலிருந்து அவர்கள் மூவரும் புறப்படுவதற்கு முன் அவர்களை அடைந்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.
விஷ்வகர்மா மகா ருத்ர பிரும்மனைப் படைக்கச் செய்த முயற்சிகளைப் பற்றி மும்மூர்த்திகளுக்கும் நன்கு அறிந்திருந்தார்கள். விஷ்வகர்மாவின் இந்த செயல்கள் எல்லாம் சிறுபிள்ளையின் செய்கையைப் போல் இருந்ததால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அதனால் அவர்கள் சிறு புன்னகையுடனே விஷ்வகர்மாவைப் பார்த்தனர்.
சிவபெருமான் ஒன்றும் அறியாதவர் போல ” எழுந்திரியுங்கள் தேவசிற்பியாரே! உங்களுக்கு என்ன குறை? ஏன் இப்படிக் கலங்கிய முகத்துடன் ஓடி வருகிறீர்கள் ? என்று வினவினார்.
” என்னுடைய பிழையைத் தேவரீர் அனைவரும் பொறுத்து என் மகள் ஸந்த்யாவைக் காத்தருள வேண்டும்” என்று கண்களில் நீர்மல்கக் கூறினார்.
பிரம்மரும் ” புரிகிறது விஷ்வகர்மா, சூரியனின் வெப்பச் சலனத்தைத் தாங்க முடியாமல் தவிக்கும் உன் பெண்ணின் துயரைத் தீர்க்கும் வழி உங்களுக்கே நன்கு தெரியுமே? ஏற்கனவே ஒருமுறை செய்தும் முடித்தீர்களே? அதை மீண்டும் செய்யவேண்டியதுதானே?” என்றார்.
” நான் செய்த மாபெரும் பிழையினால் சூரியதேவன் மறுபடியும் அந்த சாணை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். அதை விட்டால் எனக்கு வெரு உபாதையும் தெரியவில்லை” என்றார் விஷ்வகர்மா.
“கவலையை விடுங்கள் தேவசிற்பியாரே! என்று கூறிய பிரும்மர், ” உங்களுக்கு உதவுவது எங்கள் கடமை. தற்சமயம் மகாவிஷ்ணுவிற்கும் பரமேஷ்வரருக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் தேவைப்படுகிறது. அதைச் செய்யும் பொறுப்பைத் தேவசிற்பியான உங்களிடம் விட்டுவிடுகிறோம். அந்த சக்தி ஆயுதங்களின் மூலக்கூறுகள் சூரியனுடைய பிரகாசத் துகள்கள் தான் என்பதை நீங்களே உணர்வீர்கள். அந்த ஆயுதங்கள் மிக அவசரமாகத் தேவை என்று நாங்களே சூரியனிடம் சொல்கிறோம். பிறகு அவன் தானாகவே வந்து உங்களிடம் அந்த சாணை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்வான். “
” ஆஹா! தங்கள் கருணையே கருணை! ஆனால் அந்த சிகிச்சையில் கிடைக்கும் சூரிய துகள்களிலிருந்து மூன்று ஆயுதங்கள் செய்யலாம். சிவபெருமானுக்குத் திரிசூலம் ஒன்று வடிவமைத்துத் தருகிறேன்.
அதைப்போல் பலமான சுதர்ஷனச் சக்கர ஆயுதத்தை விஷ்ணு பகவானுக்காக உருவாக்கித் தருகிறேன். மூன்றாவதாக, படைக்கும் கடவுளான உங்களுக்குப் பயங்கர அஸ்திரம் ஒன்று செய்து தரட்டுமா? ” என்று விஷ்வகர்மா தன் தொழில் கர்வம் மேலோங்க வினவினார்.
ஆனால் பிரும்மரோ , ” தேவசிற்பி! எனக்கென்று ஏற்கனவே பிரும்மாஸ்திரமும், பிரும்மதண்டமும், பிரும்மாஷிரா என்ற மூன்று ஆயுதங்கள் உள்ளன. பிரும்மாஸ்திரம் உலகத்தில் எதையும் அழிக்கவல்லது. ஆனால் அதைப்பெறுபவன் வெறும் திறமைசாலியாக மட்டும் இருந்தால் போதாது. எது அநீதி எது அக்கிரமம் என்று உணர்ந்து அந்த அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் தகுதி உடையவனாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களும் சிலசமயங்களில் தவறுதலாகப் பிரயோகம் செய்துவிட்டால் அப்போது பிரும்மாஸ்திரத்தை அடக்க உதவுவதே பிரும்மதண்டம். பிரும்மாஷிரா பிரும்மாசஸ்திரத்தைவிட நான்கு மடங்கு பலம் வாய்ந்தது. அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி எந்த அஸ்திரத்துக்கும் கிடையாது. எங்கள் மூவரில் ஒருவர்தான் அதைத் தடுக்கமுடியும். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நீங்கள் திரிசூலத்தையும் சுதர்ஷனச் சக்கரத்தையும் படையுங்கள்! பாக்கியிருக்கும் துகள்களை வைத்து முடியுமானால் நமது குபேரருக்கு ஒரு புஷ்பக விமானம் செய்து கொடுங்கள்! பல வகைகளில் தேவ உலகத்திற்கு உதவும் அவருக்கு நம் அன்புப் பரிசிலாக இதை அளிக்கலாமே? ” என்றார்.
சிவபிரானும், மகாவிஷ்ணுவும் புன்முறுவலுடன் பிரும்மர் கூறியதை அப்படியே ஒப்புக்கொண்டனர்.
விஷ்வகர்மாவும் மனமகிழ்ந்து ” அப்படியே செய்து முடிக்கிறேன் மகாபிரபு! ” என்று கூறி புறப்படத் தயாரானார்.
“சற்றுப்பொறுங்கள், முதலில் நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் புதிய ஆயுதங்கள் உருவாக்குவதால் சூரியனுடைய வீரியம் குறையும். உங்கள் மகள் அவனுடன் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அது ஸந்த்யா பிறப்பிலிருந்தே ஏற்பட்டுள்ளது. அதை மாற்ற நீங்கள் முயன்றதும் எங்களுக்குத் தெரியும். ஆகவே ஸந்த்யாவை விதிப்படி வாழ விடுங்கள்! விதியை மீறினால் பல வக்கிரங்களுக்கு ஆளாக நேரிடும். இந்த சிகித்சையை உங்கள் அரண்மனையில் செய்யலாகாது. சூரியதேவனின் இருப்பிடத்திலேயே செய்யவேண்டும். இந்த முயற்சிதான் இரண்டாவதும் இறுதியானதும் கூட. மூன்றாவது தடவை முயன்றால் அந்த இடத்திலேயே உங்கள் மீது என் பிருமாஷிரா பாயும். நன்கு புரிந்துகொண்டு செயலாற்றுங்கள்! ” என்று எச்சரித்து அனுப்பினார் பிரும்மர்.
விஷ்வகர்மாவும் மூவரையும் வணங்கி விடை பெற்றார்.
மகாவிஷ்ணுவின் முகத்தில் பூத்த புன்முறுவல் பெருஞ்சிரிப்பாக மாறியது. ” என்ன பிரும்மரே! சூரியகுடும்பத்தில் இன்னும் என்னென்ன குழப்பங்கள் உண்டாக்கப் போகின்றீர்கள்? ” என்று நகைப்புக்கிடையே வினவினார்.
பரமேஸ்வனும் சிரித்துக்கொண்டே ” எனக்குச் சமமான ஒரு ஈஸ்வரனை உருவாக்க பிரும்மர் செய்யும் முயற்சிகளுக்கு என் பாராட்டுதல்கள்” என்றார்.
இதெல்லாம் அறியாத விஷ்வகர்மா ‘ இந்த மட்டில் தனது பெண்ணிற்கு விமோசனம் கிடைத்ததே ‘என்று எண்ணி அதைச் செயலாற்ற விரைந்தார்.
(தொடரும்)
இரண்டாம் பாகம்
சாலமன் பாப்பையா கூறினார்:
வீட்டுலே சொல்லிக்கிட்டு வந்தேன்னு லியோனியே சொல்லிகிட்டார். அதுமட்டுமா அழிதல்தான் நாட்டுக்குத் தேவை என்று ஆணி அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிருக்கிறார். புரட்யூசர்கள் கோடி கோடியா போட்டு பணத்தை அழிக்கலேன்னா படம் இவ்வளவு சூப்பரா வருமா?
அதுமட்டுமா என்னமா தத்துவ முத்திரைகளைப் போட்டுத் தாக்கினார் –
கோழியை அழிச்சாதான் குருமா பண்ணமுடியும்
நேற்று என்ற ஒன்று இன்று அழிந்தால் தான் நாளை என்ற ஒன்று பிறக்கும்
தின்ற சோறு கழிவாய் அழிந்தால்தான் புதுச்சோறு திண்ணமுடியும்
அட அட! இதுக்கு மேலே பேசறதுக்கு என்னய்யா இருக்கு ? ஆக்கல் அழித்தல் ரெண்டும் தானே முக்கியம் கன்ஸ்ட்ரக்ஷன் பார் டிஸ்ட்ரக்ஷன், டிஸ்ட்ரக்ஷன் பார் கன்ஸ்ட்ரக்ஷன். நடுவிலே என்ன காத்தல் ? பாரதி பாஸ்கரும் லியோனியும் தொவை தொவைன்னு தொவச்சப்புறம் ராஜா என்ன பேசி கிழிக்கப்போறார்? காத்தல் என்ற நொண்டிக்குதிரைக்கு முட்டுக்கொடுப்பாரா இல்லை புதுசா எதாவது சரக்கு வச்சிருக்காரா பாப்போம்.. வாங்க ராஜா !
நடுவர் அவர்களே! பாரதி பாஸ்கர் அம்மாவும் லியோனியும் தொவச்சுப் போட்ட துணிக்கு நான் இப்போ அயர்ன் பண்ண வந்திருக்கேன். அதாவது காவந்து பண்ண வந்திருக்கேன்.
அப்புறம் காத்தல் தொழில் செய்பவனுக்கு நொண்டிக்குதிரை சண்டிக்குதிரை கிண்டிக்குதிரை அப்படின்னு எந்தவித வித்தியாசமும் கிடையாது. எல்லாத்தையும் ஒரே மாதிரி காப்பாத்தவேண்டியது தான் அவரோட வேலை. அப்பத்தான் ஜாக்பாட்டில ஜெயிக்கமுடியும்.
என்னோட கருத்துக்களைச் சொல்லி வாதத்தைத் தொடங்கறதுக்கு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் இந்த விவாத மேடைக்கு வந்த விதத்தைப் பத்தி சொன்னாங்களே! அதில எனக்கு ஒரு சேதியை உங்க கூட பகிர்ந்துக்க ஆசைப்படறேன். பாரதியம்மா ஆக்கல் தான் பெரிசுன்னு நக்கலடிச்சு வேற யாரும் ஆணியப் புடுங்கவேண்டாம் அப்படின்னு டயலாக் வேற அடிச்சாங்க. இவ்வளவு தைரியசாலி அம்மா இங்கே வர்ரதுக்கு பயந்தாங்க . புரட்சித்தலைவி அம்மா அப்படின்னு ஏதோ சால்ஜாப்பு சொல்லிட்டு போனாங்க. ! லியோனி என்னாடான்னா தனக்கே ஒப்பாரி கேட்டுட்டு வந்தேன்னு பயந்துகிட்டே சொன்னார். உண்மையில் என்ன நடந்ததுன்னா ரெண்டு பேருக்குமே இங்கே வர பயம். நாந்தான் இவங்க ரெண்டுபேரையும் காப்பாத்துறேன்னு சொன்னதினால வந்தாங்க. இப்ப சொல்லுங்க! என்னோட காத்தல் இல்லேன்னா இந்த ஆக்கலும் அழித்தலும் விக்கலும் வாந்தியும் எடுத்துகிட்டு இருப்பாங்களே தவிர விவாத மேடைக்கு வந்திருக்கவே மாட்டாங்க!
அப்புறம் ஒரு குழந்தைய உண்டாக்குறது கஷ்டமா அழிக்கிறது கஷ்டமா இல்லே காப்பாத்துறது கஷ்டமா?
சாலமன் பாப்பையா குறுக்கிட்டு ” எனக்கு இப்போ மூணுமே கடினம்தான்.”
நடுவர் அவர்களே ! நான் பொதுவா சொல்றேன் ! அண்ணன் விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லட்டுமா? நம்ம நாட்டிலே ஒரு நிமிஷத்தில 34 பிறப்பும் 10 இறப்பும் நடக்குது. ஒரு மணி நேரத்தில இந்த எண்ணிக்கை 2062, 603 ஆக இருக்குது. ஒரு மணியில 49481 , 14475 ஆகுது. ஒரு நாளில 15 லட்சம் பேரு பொறக்கிராங்க.4 லட்சம் பேரு மண்டையைப் போடறாங்க. ஆனா இந்தியாவில இருக்கற ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா? 135 கோடிக்கு மேல. இந்த 135 கோடி மக்களைக் காப்பாதுறது -அதாவது காத்தல் எவ்வளவு கஷ்டமுன்னு உங்களுக்குத் தெரியுதோ இல்லையோ நம்ம மந்திரிகளுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும் .கஷ்டத்தை விடுங்க! எவ்வளவு முக்கியம் அது?
நாட்டை விடுங்க ! வீட்டுக்கு வாங்க! கல்யாணம் பண்ணின பத்தாம் மாசத்தில நாம ஒரு உருப்படியை ஆக்கிப்பிடறோம்.
சாலமன் பாப்பையா குறுக்கிடு, ” என்னவோ நிமிஷக் கணக்கெல்லாம் சொன்னிங்க! பத்து மாசம் வரைக்கும் காத்திருக்கணுமா? “
ஐயோ, நடுவர் அவர்களே! அதிலெல்லாம் மாத்தம் கிடையாது. அந்தக் குழந்தைக்கு பர்த் சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா இல்லே பின்னாடி வயாசாகி டெத் சர்திபிகேட் வாங்கிறது முக்கியமா ? இல்லே இதெல்லாம் விட நடுவிலே டிகிரி சர்ட்டிபிகேட் மற்றும் ஆயிரக்காணக்கான சர்ட்டிபிகேட் வாங்கிறது முக்கியமா? நல்ல பையன், நல்ல பொண்ணு, நல்ல மாணவன் , நல்ல படிப்பாளி, நல்ல விளையாட்டு வீரன், நல்ல பேச்சாளி, நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல அப்பா, நல்ல அம்மா, நல்ல மாமியார் ( இது ரொம்ப கஷ்டம்) , நல்ல மருமகள் ( இது அதைவிடக் கஷ்டம்) நல்ல தொழிலாளி, நல்ல முதலாளி, நல்ல தாத்தா நல்ல பாட்டி ,நல்ல நண்பன், நல்ல மனிதன் இப்படி ஆயிரக்கணக்கான சட்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கு. இதுதானே முக்கியம். இப்படி சர்ட்டிபிகேட் வாங்க வைக்கறது தான் காத்தல் தொழிலின் மகத்துவம்.
ஆக்கறது ஈசி, அழிக்கிறது அதைவிட ஈசி. ஆனா வைச்சு காவந்து பண்ணறது ரொம்ப ரொம்ப கஷ்டம் மட்டுமில்ல முக்கியமும் கூட.
கல்யாண சமாசாரத்துக்கு வாங்க. தாலி கட்டறது ஒரு சில நிமிஷத்தில முடிஞ்சுடும். அய்யரோ, சர்ச்சோ, நிக்காஹோ, ரிஜிஸ்டர் ஆபீஸ் எதுவானாலும் சரி. அதே மாதிரி டிவோர்ஸ் வாங்கிறதும் ஒரு சில மாசங்களில வாங்கிடலாம். கோர்ட், தலாக் அப்படின்னு சில அமைப்புகள் இருக்கு. ஆனா புருஷனும் பொண்டாட்டியுமா வருஷக் கணக்கில வாழறது எவ்வளவு கஷ்டம்னு எல்லா புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் மட்டும்தான் தெரியும். ஆனா அதுதான் மனித குலத்துக்கே தேவையான ஒண்ணு. வைச்சுக் காப்பாத்தணும்.
சோத்துபாட்டுக்கே வருவோம். சோத்தை ஆக்கி வச்சுப்புட்டா போதுமா? அது திங்கிறவரை பத்திரமா பாதுக்காக்க வேண்டாமா? சரியாப் பாதுகாக்கலேன்னா புழு பூச்சி வந்து அரசாங்கம் சீல் வைக்கிற மாதிரி ஆயிடாதா?
சன் டிவியில எத்தனை சீரியல் பாத்திருப்பீங்க? மெகா சீரியல்! அதுல வர்ற முதல் எபிசோடு ஆக்கல் கடைசி எபிசோடு அழித்தல் இரண்டுக்கும் நடுவில வருதே தொள்ளாயிரத்து சொச்சம் எபிசோட் அதுதான் அந்த சீரியலையும் டி ஆர் பி ரேதிங்கையும் காப்பாத்துது.
இந்த விவாத மேடை நடக்கிறதே சன் குடும்பத்தினர் ஊரிலதான். அதாவது எமபுரிப்பட்டணம். சன்னோட சன் ஊர். அதாவது சூரியதேவனுடைய மகன் எமன் அவர்களின் ஊர். பெரியவரின் மகன் எமதர்மராஜாவும் மகள் எமியும் இங்கே வந்திருக்காங்க. எங்க ஊர் பாஷையில எமன் தான் தளபதி. அவர் சகோதரி கனிவாக மொழிகிறவர் என்பது பார்த்தாலே தெரிகிறது. எமன் அவர்கள் தர்மராஜன். அழித்தல் தொழிலைச் செய்பவர் தான். ஆனால் இன்றைய பேச்சைக் கேட்டபிறகு நிச்சயம் காத்தல் அணிக்குத்தான் ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
சாலமன் பாப்பையா எழுந்தார். “இப்போ தீர்ப்பு சொல்லவேண்டிய வேளை வந்திடுச்சு. வழக்கமான பாணியில் இல்லாம வேற மாதிரி தீர்ப்பு சொல்லலாம்னு இருக்கேன். அதுக்கு உங்க ஆதரவு வேணும் ” என்று சொல்லி புதிய முறை என்ன என்பதை விளக்கினார்.
கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். “இது நடக்க முடியாத செயல்” என்று நாரதர் சத்தமாகவும் கூறினார்.
சபையில் கொந்தளிப்பு உருவாகும் போல இருந்தது.
மும்மூர்த்திகளும் திகைத்தனர்.
(தொடரும்)