ரா கி ரங்கராஜன் மொழிபெயர்த்த ”The Right Kind of House” என்ற சிறுகதையை சில மாதங்களுக்கு முன் படித்தேன். சிறுகதை படித்த பின் அதனுடைய குறும்படத்தையும் தேடி பார்த்தேன். சிறுகதையை திரைக்கு கொண்டு வரும் போது என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்களை கவனிக்க முடிந்தது.
நன்றி: சுஜாதா தேசிகன்
அந்தக் கதை சுருக்கமாக இங்கே…
ஊருக்குள் நுழையும் வாட்டர் பெரி என்பவர், அங்கே வீடு ஒன்று விற்பனைக்கு என்ற பலகையை பார்த்துவிட்டு அந்த ஊர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அதை பற்றி விசாரிக்கிறார். வீட்டின் உரிமையாளர் ஒரு வயதான பெண்; ஐந்து வருஷம் முன்பு பையனைப் பறிகொடுத்தவர்; கடந்த ஐந்து வருஷமாக அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை. அல்லது வந்தவர்கள் அதன் விலையைப் பார்த்துவிட்டு வாங்காமல் சென்றுவிட்டார்கள்; வெறும் 10,000 டாலர் பெறுமான வீட்டை அந்தப் பெண் ஐந்து மடங்கு அதிக விலை சொல்லுகிறார் போன்ற தகவல்களை அந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருப்பவர் சொல்லுகிறார்.
“நான் வேண்டும் என்றால் அந்த பெண்மணியிடம் பேசிப் பார்க்கிறேன்” என்று வாட்டர் பெரி கிளம்புகிறார். அந்தப் பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறார். ”பேரம் பேசுவதாக இருந்தால் நீங்கள் போகலாம்” என்று அந்தப் பெண்மணி கராராகப் பேசுகிறார். வாட்டர் பெரி “சரி நீங்கள் சொல்லும் விலைக்கே அந்த வீட்டை வாங்கிக்கொள்ளுகிறேன்” என்கிறார். ”நிஜமாகவா ?” என்று கேட்டுவிட்டு அவருக்கு லெமன் ஜூஸ் தருகிறார் அந்தப் பெண்மணி. பிறகு ”இந்த வீட்டைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்கு சொல்ல வேண்டும்” என்கிறாள்.
தன்னுடைய குடும்பம் பற்றிய தகவல்களைச் சொல்லுகிறார். தன் கடைசிப் பையன் சில வருடங்களுக்கு இறந்துவிட்டான் என்கிறார். “எப்படி?” என்று வாட்டர் பெரி கேட்க, ஒரு நாள் ராத்திரி தன் மகன் ஒரு கருப்புப் பையுடன் வந்தான். அந்த பையில் என்ன இருக்கிறது என்று சரியாகச் சொல்லவில்லை. சில வாரங்கள் இங்கே இருக்க போவதாகவும் சொன்னான்; பிறகு அவன் தன் வேலை போய்விட்டதாகவும் அந்தப் பெண்மணி சொல்லுகிறார்.
சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் ராத்திரி அவன் அறையில் பேச்சுக் குரல், சண்டை, சாமான்கள் உருளும் சத்தம் கேட்டு அங்கே தான் போன போது தன் மகன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தான் என்றும். சுட்டவன் ஜன்னல் வழியாகத் தப்பிவிட்டான் என்றும் சொல்லுகிறார்.
இவள் மகனுக்கு ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்பு இருக்கிறது என்று போலீஸ் சொல்லித் தெரியவருகிறது. பங்கு போடுவதில் ஏதோ பிரச்சனையில் இவன் சுடப்பட்டான் என்றும் தெரியவருகிறது. ”சுட்டுவிட்டு போனவனைக் கண்டுபிடித்தீர்களா?” என்று வாட்டர் பெரி கேட்க, அதற்கு அந்த பெண் ”இல்லை. அதனால் தான் இந்த வீட்டை ஏகப்பட்ட விலைக்கு விளம்பரம் செய்தேன். ”நிச்சயம் கொலை செய்தவன். என் மகன் இந்த வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு போக வருவான் என்ற நம்பிக்கையில் இவ்வளவு நாள் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருந்தேன்” என்கிறாள்.
வாட்டர் பெரி லெமன் ஜூஸை கீழே வைத்த போது கண்கள் இருண்டது. “லெமன் ஜூஸ் கொஞ்சம் கசக்கிறது” என்றார்.
ஹிட்ச்காக் தயாரித்த அந்தக் குறும்படத்தைப் பார்த்து ரசியுங்கள் !