கொழுக்கட்டையில் ஆரம்பித்து தயிர் சாதத்துடன் அம்மாவின் கை உணவு முடிவடைகிறது.
அடுத்த மாதத்திலிருந்து சதுர்புஜன் அவர்களின் புதிய கவிதைத்தொடர் வர இருக்கிறது.
என்ன அது?
கொஞ்சம் பொறுத்திருப்போம்
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
- கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
- இட்லி மகிமை – ஏப்ரல் 2018
- தோசை ஒரு தொடர்கதை – மே 2018
- அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
- ரசமாயம் – ஜூலை 2018
- போளி புராணம் – ஆகஸ்ட் 2018
- அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
- கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018
- கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
- சேவை செய்வோம் – டிசம்பர் 2018
- பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
- பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
- வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
- பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
- ஊறுகாய் உற்சாகம் – மே 2019
- பூரி ப்ரேயர் – ஜூன் 2019
- இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
- வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
- வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
- சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019
- அவியல் அகவல் நவம்பர் 2019
- சாம்பார் சக்தி டிசம்பர் 2019
- உப்புமா உண்மைகள் ஜனவரி 2020
- சீடை, தட்டை, முறுக்கு பிப்ரவரி 2020
- துவையல் பெருமை மார்ச் 2020
- பொடியின் பெருமை ஏப்ரல் 2020
- கீரை மகத்துவம் மே 2020
- தயிர் சாதப் பெருமை !
எந்த ஊர் சென்றாலும் வீடே சொர்க்கம் !
எங்கே போனாலும் உடன் திரும்பத் தோணும் !
வித விதமாய் பல ருசியாய் சாப்பிட்டாலும்
ஈடில்லா உணவென்றால் தயிர் சாதம் தான் !
பகட்டெல்லாம் பல நாள் நான் பாராட்டினேன் !
பலபேரும் சொன்னதற்கு தலையாட்டினேன் !
உலகத்து உணவெல்லாம் ஒப்பு நோக்கினும்
ஈடில்லா உணவென்றால் தயிர் சாதம் தான் !
எந்த விதம் தொடங்கினாலும் முடிவு ஒன்றுதான் !
ஆடி அடங்கும்போது தேவை அமைதி தான் !
நாளுக்கொரு புதிய சுவை அனுபவித்த பின்
இறுதியில் சேரும் இடம் தயிர் சாதம் தான் !
தயிரும் பாலும் விட்டு நன்றாய் பிசைய வேணுமே !
விரை விரையாய் இல்லாமல் மசிய வேணுமே !
சுவைக்கு சற்று கல்லுப்பை அனுமதிக்கலாம் !
ஊறுகாயை தொட்டு தொட்டு அனுபவிக்கலாம் !
மாவடு தொட்டுக் கொண்டால் மதி மயங்குமே !
மோர் மிளகாய் என்று சொன்னால் முறுக்கேறுமே !
ஆவக்காய் சேர்த்தடித்தால் ஆஹா சொர்க்கமே !
எலுமிச்சை என்றாலும் நன்றாய் சேருமே !
தட்டில் சாதம் குறையக் குறைய இன்பம் ஏறுமே !
உண்ட உணவில் திருப்தி நிலை உருவாகுமே !
எத்தனை முறை உண்டாலும் அதே ஆனந்தம்
அம்மா கை தயிர் சாதம் பரமானந்தம் !