காலை வேளையில் ஒரு பெண்மணி பரபரப்புடன் வந்தாள். எங்களது மனநல நிலையம் காவல்நிலையத்தில் அமைந்திருந்தது. குறிப்பாகப் பெண்களுக்கு, மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் வன்முறைக்காக. புகார்களில் மனநலம், குடும்ப நலம் சார்ந்த ஏதேனும் கண்டறிந்தால் போலீசார் சம்பந்தப்பட்டோரை எங்களிடம் அனுப்பி வைப்பார்கள். நாங்கள் காவல்துறையினருக்கு அளித்த மனநலம், உளவியல் பயிற்சியைப் பின்பற்றித் தான் காவல்துறையினர் அந்த பெண்மணியிடம் எங்களை அணுகப் பரிந்துரை செய்தார்கள்.
அன்று வருவோரைப் பார்ப்பது என்னுடைய பொறுப்பு. வந்ததுமே அவள் தன்னை பெயரைச் சொல்லி, நிலைமையை அவசரமாக விவரித்தாள் . அவள் ஐம்பது வயதுள்ள ஸ்வஜிதா, கணவன் கிரி பெரிய துணி வியாபாரி, வீட்டை நிர்வாகம் செய்வதுடன் அவ்வப்போது கணவருக்கு உதவி செய்பவள். வாரா வாரம் லேடீஸ் க்ளப் விரும்பிப் போவாளாம். மகன் சந்தோஷ், வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான்.
மகள் சசி. எட்டு மாதத்திற்கு முன் கல்யாணம் ஆனது. அவள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து, ஒரு மல்டி நேஷனல் நிர்வாகத்தில் இளம் வயதிலேயே டீம் லீடாக இருந்தாள். நல்ல சம்பளம். அவளுடைய கணவர் கிருஷ்ணா எம்.டெக் செய்து அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலையிலிருந்தார். அவருடைய பெற்றோர்கள் அவர்களுடன் இருந்தார்கள்.
ஸ்வஜிதா, தான் வந்தது தன் மகள் சசியின் மாமியார், மாமனார் பற்றிப் புகார் கொடுக்கத் தான் என்றாள். புகார் தருவதில் மிக உறுதியாக இருந்தாள். காவல்துறையினர் அவள் தவிப்பைப் புரிந்து கொண்டு, அவள் மனநிலையை அடையாளம் கண்டு எங்களிடம் அனுப்பி வைத்தனர்.
இந்த மாதிரியான தருணங்களில் எங்களுக்கும் காவல்துறை மீதான மதிப்பு கூடியது. அவர்களுடன் கைகோர்த்து வேலை செய்யும் வாய்ப்பு மேம்பட, பயிற்சிகளை எவ்வாறு விஸ்தாரமாக்குவது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவியது.
சசியின் மாமியார,-மாமனார் அவளைத் துன்புறுத்துகிறார்கள் என்பது ஸ்வஜிதாவின் முறையீடு. காவல்துறை அவர்கள் இருவரையும் “குடும்ப வன்முறை” என்ற அடிப்படையில் கைது செய்ய வேண்டும் என்றாள். லேடீஸ் க்ளபில் நடத்திய ஆய்வில் “குடும்ப வன்முறை” சட்டதிட்டங்களைப் பற்றிக் கேட்டு, தன்னுடைய தோழி ஊக்குவித்தாள் என்றாள்.’ சசிக்கு நேரும் கொடுமையை யாரும் பொருட்படுத்தவில்லை’ என்றாள்.
“சசியின் பாதுகாப்பு என்னுடைய பொறுப்பு. எனக்கு அனுபவமும் அதிகம். அதுமட்டுமல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும். அதனால்தான் இங்கே வந்தேன்” என விளக்கினாள் ஸ்வஜிதா
சசி பரிதாப நிலையில் இருப்பதால் தான் வந்திருப்பதாகக் கூறினாள். சசியை அந்த வீட்டில் வெகு காலையிலேயே எழுப்பி விடுகிறார்கள், சீக்கிரமே தூங்க வற்புறுத்துகிறார்கள், அவர்களே சாப்பிடும் பதார்த்தங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் எனப் பல குற்றச் சாட்டுகள். ஸ்வஜிதாவை பொறுத்த வரை தன் மகளின் சுதந்திரம் பறிக்கப் படுகிறது என்று முறையிட்டாள். இந்த நிலையில் சசி கர்ப்பிணியாக இருப்பது அவளுக்கு வேதனை அளித்தது என்றாள். இந்நேரத்தில் குழந்தை தேவையா என்றது அவளுடைய கவலையானது. சசியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாகக் கூறினாள். கணவன் கிருஷ்ணாவிடம் மகளுக்கு ஓய்வு தேவை என்று சொன்னாள். அவன் ஒப்புக் கொண்டு விட்டான்.
ஏன் இப்படிச் செய்தாள் என்று விளக்கினாள். கல்யாணம் ஆனதிலிருந்து இவர்கள் வீட்டிற்கு எப்போது சசி வந்தாலும் படக்கென்று போய் தூங்கி விடுவாள். கேட்டால் ரெஸ்ட் எடுப்பதாகக் கூறுவாளாம். எந்த நேரம் வந்தாலும் ஏதோ இது வரை உணவைச் சாப்பிடாத மாதிரி அள்ளிச் சாப்பிடுவாளாம். ஆச்சரியமாகவும் அருவறுப்பாகவும் இருப்பதை ஸ்வஜிதா உணர்ந்தாள். இவை சந்தேகத்தின் வேர் ஆனது.
அவர்கள் சசி வீட்டிற்குப் போனால், சசிதான் காப்பி போட்டு, பதார்த்தங்களைப் பரிமாறி, எடுத்துக் கொண்டு போவதைக் கவனித்தாள். எல்லா வேலைகளையும் சசி மட்டுமே செய்கிறாள் என்று தோன்றியது.
கிருஷ்ணா மாப்பிள்ளை ஆயிற்றே, அவனிடம் கேட்கத் தயங்கினாள். சசியின் மெலிந்த சரீரத்தைப் பார்த்து ஸ்வஜிதா மூன்று நான்கு மாதங்கள் ஆனதும் கிருஷ்ணாவைக் கேட்டாள். எல்லாம் சரியாக இருப்பதாகக் கூறினான். மறைக்கிறார்கள் என ஸ்வஜிதா மனதில் தோன்றியது. கொடுமைப் படுத்துகிறார்கள் எனத் தீர்மானம் உறுதியானது.
இதனால் சசிக்கு வேதனை எந்த அளவிற்கு என்பதைக் கணிக்க அவளிடம் பேசினால் தான் தெரிய வரும் என்பதால் ஸ்வஜிதாவிடம் சசியை அழைத்து வரச் சொன்னேன். இந்த பரிந்துரையைத் துளிகூட அவள் எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கே அவர்கள் கைது செய்யப் படுவார்கள், சசி சுதந்திரம் பெற்று விடுவாள் என நினைத்ததாகக் கூறினாள்.
செயல்முறை விளக்கினேன். ஸ்வஜிதா மறுநாளே சசியை அழைத்து வந்தாள்.
சசி அணிந்த வாசனைத்திரவியம் மென்மையாகக் காற்றில் கலந்து அவள் வரும்முன் வந்தது. புத்துணர்ச்சி ததும்பிய பெண்ணாகத் தென்பட்டாள். கோட்டா புடவையை நன்றாக உடுத்தி இருந்தாள். நெற்றியில் சிறியதாக ஒரு பொட்டு, கழுத்தில் மெலிதான சங்கிலி, ஒரு கையில் விலை உயர்ந்த கை கடிகாரம், இன்னொரு கைகளில் புடவை வண்ணத்தில் ஒரு டஜன் வளையல்கள் கலகலவென ஒலித்தன. காலில் மெட்டி இல்லை.
அறைக்கு வந்து, அமர்ந்ததும் ஸ்வஜிதா தன் மகளிடம் “சொல்லு, எல்லாம் சொல்லு, அவங்கள சிறைக்கு அனுப்பி விடலாம்” என்றாள். சசி அவள் கையை அழுத்தி, “கூல் மா” என்றாள். சசி மன்னிப்பு கேட்டபடி விவரித்தாள், அம்மாவின் கட்டாயத்தில் வந்தாள் என்று.
ஜாதகம் பார்த்து கல்யாணம் நிச்சயம் செய்யப் பட்டது. சசி முழு மனதுடன் கல்யாணம் செய்து கொண்டதை வலியுறுத்திக் கூறினாள்.
கிருஷ்ணா மூத்தவன் என்பதால் பெற்றோர் அவர்களுடன் இருப்பார்கள் என முன்கூட்டியே அவன் அவளுடைய அபிப்பிராயம் கேட்டுக் கொண்டான். சசி இதை ஆமோதித்து, சம்மதம் தெரிவித்தாகச் சொன்னாள்.
கிருஷ்ணாவிற்கு அமைதியான சுபாவம். பொறுமை காப்பவன். பாசத்தைச் செயலில் காட்டுவான், வார்த்தைகளால் அல்ல. அவனுடன் அவனுடைய பெற்றோர் சந்தோஷமாக இருந்தார்கள்.
கல்யாணம் ஆனதும் சசியின் உற்சாகம், கலகலப்பு புதிதாக இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்தது. வெடுக்கென்று சொல்லுவதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். பழக்க வழக்கங்கள் மாறுபட்டு இருந்தது.
கல்யாணம் ஆன புதிதில் சசி ஸ்வஜிதாவிடம் புலம்பித் தள்ளினாள். காலை ஆறு மணிக்கு எழுந்து சசி வாசலைப் பெருக்கி கோலம் போட, மாமியார், குளித்து, காப்பி டிகாக்ஷன் தயார் செய்வாள். மற்றவர்கள் எழுந்து வருவதற்குள் விளக்கை ஏற்றி, பாலை நைவேத்தியம் செய்து, காப்பி போடுவார். காலையில் எல்லோரும் கூடி, ஒன்றாகக் காப்பி பருகுவது வழக்கம்.
அம்மா வீட்டில், சசி ஏழரை மணிக்கு எழுந்து கொள்வது பழக்கம். கையில் காப்பி வந்துவிடும், அதன் பிறகு வேலைக்குப் புறப்படுவதில் இருப்பாள். வீட்டிற்குத் திரும்பியதும் டிவி பார்த்துக் கொண்டு சாப்பிட்ட பிறகே குளிப்பது எல்லாம். ஸ்வஜிதா எல்லா வேலைகளையும் செய்து கொள்வாள். சசியை எதுவும் செய்ய விடமாட்டாள்.
கல்யாணம் ஆனதிலிருந்து காலை சிற்றுண்டி தயாரிப்பது சசி. பரபரக்கச் செய்து விடுவாள். கிருஷ்ணாவிற்குப் பரிமாறி, தானும் சாப்பிட்டு, அவனுடன் வேலைக்குச் செல்வாள். இதன் நடுவில் தினம்தோறும் காலையில், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று விசாரிக்க அம்மா மணி அடித்தது போல், ஏழே முக்காலுக்குத் தொலைப்பேசியில் அழைப்பாள். சசி வேலைகளை முடிப்பதில் கவனமாக இருப்பதால் அவசரமாகப் பதில் கொடுத்து விட்டு வைப்பது ஸ்வஜிதாவிற்கு எரிச்சல் ஊட்டியது. அம்மா புரிந்து கொள்வாள் என நினைத்து விட்டாள் சசி.
எப்போது அவள் சசியிடம் பேச முயன்றாலும் வேலை செய்வதாகச் சொல்வாள். அப்படி என்றால் அவளை வேலை வாங்குகிறார்கள், தொந்தரவு தருகிறார்கள் என்று ஸ்வஜிதா எண்ணினாள். ஒவ்வொரு முறையும் சசி இவர்களைப் பார்க்க வருகையில் ஸ்வஜிதா கேட்பது, “ஒத்தாசை உண்டா?” கேள்விக்கு, சசி “ஆமாம்” என்றாலும், அப்போது ஏன் தொலைப்பேசியில் பேச அவகாசம் இல்லை? “சாப்பாடு போடுகிறார்களா?” என்ற கேள்விகளுக்கு, சசி “போம்மா” என்று பதில் அளிப்பாள்.
முதல் பல ஸெஷன்கள் சசியிடம் கலந்துரையாடினேன். அவள் தனக்கு நேர்வது வன்முறையா என விளக்கம் பெற விரும்பினாள். குறிப்பாகத் தன்னை அம்மா எதற்காக ஓய்வு எடுக்க வீட்டிற்கு அழைத்து வந்தாள், மற்றும் கிருஷ்ணாவிடம் பேசுவதைத் தடுக்கிறாள் என்று குழம்பினாள்.
பல கேள்விகள்-பதில்களின் மத்தியில் அவளைப் பட்டியல் இடப் பரிந்துரைத்தேன். இங்கே/அங்கே என்ன வேலை, ஏன்/எதற்காக என எழுதி வருவதற்குச் சொன்னேன். செய்தாள். ஸ்வஜிதாவிடமும் தான் செய்வதை அதே போலப் பட்டியல் தயார் செய்யச் சொன்னேன். அம்மா-மகளைக் கூட வைத்தே பகிரச் சொன்னேன். பல கேள்விகள் கேட்டேன். பதில்களைப் பகிர, தான் இங்கே செய்வதைத் தான் அங்கே மகள் செய்கிறாள் என்று உணர்ந்து, ஸ்வஜிதாவிற்கு தன் சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்திருக்கும் என எண்ணினேன். ஆனால் மறுத்தாள் அவள். ஸ்விஜிதாவோடு தனியாக செஷன்கள்ஆரம்பிக்க முடிவெடுத்தேன். பிறகு வருவதாகச் சொல்லிச் சென்று விட்டாள்.
சசி தயக்கத்துடன், அம்மா இவ்வாறு செய்ததில் ஒன்றிரண்டு குழப்பியதாகவும், தெளிவு பெற விரும்புவதாகவும் கூறினாள். தனது சிந்தனை தெளிவுடன் இருந்தாலும் மனதில் சஞ்சலம் நிலவுகின்றது. அதைச் சரிசெய்ய விரும்பினாள். மற்றும் தன் மாமியாரைப் புரிந்து கொள்ள அவர்களுடன் ஸெஷன் கேட்டாள்.
சசியின் மாமியாரை ஸெஷன்களுக்கு அழைத்தேன். இவர் இருவரின் மத்தியில் புரிதலும் பாசமும் இருந்தது. இருந்தும் ஒரு திரை மறைத்தது. கல்யாணம் ஆன புதுசு அதனாலா?
மாமியாரை தன் கல்யாணம் ஆன காலத்தைப் பற்றிய சில தருணங்களை விவரிக்கப் பரிந்துரைத்தேன். வெளிப்படையாகப் பகிர்ந்தாள். பல கேள்விகள், விளக்கங்களுக்குப் பின்னர் சசி புரிந்து கொண்டாள் – கல்யாணம் ஆன பின்பு சூழல் மாறுகிறது. அதனால் மாற்றங்கள் இருக்கும். குடும்பத்தின்
பழக்க-வழக்கங்கள், கோட்பாடுகள் எனப் பல இருக்கும். இவற்றை என்னவென்று கவனித்து, நாளடைவில் பழகிக் கொள்வதில் சுதந்திரம் குறைவதில்லை. குடும்பத்துடன் இணைய முடியும் என்று அறிந்தாள்.
சசி வீட்டில் அவர்களது தினசரி வேலையைப் பற்றி மாமியாரை விளக்கம் அளிக்கச் சொன்னேன். விளக்கங்கள் அளித்தாள். பூஜை அறையில் நான்கு சாலிகிராமம் இருப்பதால், அன்றாடம் ஸ்நானம் செய்து, பால் நைவேத்யம் செய்த பிறகே காப்பி அருந்த வேண்டும். அதனால் தான் சீக்கிரமே எழுந்து, வாசலில் கோலம் போடுவது. சீக்கிரமே தூங்கச் சொல்வது, இதை விளக்கியதாகச் சொன்னாள். வெட்கத்துடன் சசி ஒப்புக்கொண்டாள்.
அம்மா துருவித் துருவிக் கேட்பதால் அவளிடம் விஷயங்களைத் தெளிவு படுத்தவில்லை என்றாள். உதாரணத்திற்கு, மாமியார் தனக்குச் செய்யும் பல ஒத்தாசைகளைச் சொல்லவில்லை. இதனால் நேர்ந்த விளைவையும் சசி புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அதே போல, அம்மா வீட்டுக்குப் போனதும், முன் போலவே தான் எதுவும் செய்யாமல் இருப்பது, அவர்களுக்குத் தவறான தகவலைத் தெரிவித்ததை அறிந்து கொண்டாள். வன்முறையாக ஸ்வஜிதா நினைத்தாள்.
மாமியார் அவர்களின் மன திட்டம் பலவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டாள். கிருஷ்ணா-சசி பொறுப்பேற்க வேண்டும், தங்களுக்குப் பிறகு எல்லா பொறுப்புகள் அவர்களுடையது என்று. இவ்வாறு மூன்று ஸெஷன்களிலேயே சசி-மாமியார் உறவு மேலும் நெருக்கமாக ஆனது. சசி அம்மாவுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
ஸ்விஜிதா முழுமனதோடு ஒப்புக்கொள்ளவில்லை. அப்பா கிரி இவை நடக்கையில் வெளிநாடு சென்றிருந்தார். எதுவும் தெரியவில்லை. சசி முடிவெடுத்து, தன் கணவர் வீட்டிற்குச் சென்றாள்.
இது ஸ்வஜிதாவை மிகவும் உலுக்கியது. அவர்களின் வீட்டில் அவளைச் சந்தித்தேன். அழுகை மல்கி இருந்தாள். அவளுடைய இந்தப் பல்வேறு சஞ்சலங்களைப் பற்றி ஸெஷன்களில் உரையாடி, தன்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு, அவள் இதற்கெல்லாம் விளக்கம் பெற முயலலாம் எனப் பரிந்துரைத்தேன். ஸ்வஜிதாவோ காவல்நிலையம் வருவது தனக்குத் தலைக் குனிவு என்றாள். இந்த எண்ணத்தைத் தாண்டி வெல்வது அவள் கையில் உண்டு என அவளுடைய தைரியத்தை நினைவூட்டினேன். தானாக
எங்களிடம் வந்தது, சசியை வர வைத்தது. வாய்ப்புத் தர முடிவு செய்தாள்.
சசியின் முடிவு அவளுடையது. சசி முடிவெடுத்த காரணி, சூழல் வேறு. ஒவ்வொருவரின் முடிவுகள் அவரவர் நிலைமையைப் பொறுத்திருக்கும். மற்றோர் முடிவைத் தாழ்வாக எடை போடுவதில் அர்த்தம் இல்லை என்று விவாதித்தோம்.
இதையே மையமாக வைத்து மேலும் ஸ்வஜிதாவுடன் ஸெஷன்கள் தொடங்கியது. அவளுக்கு வன்முறை பற்றி அவர்களின் வாழ்வின் உதாரணங்களைக் கொண்டே விளக்கம் தந்தேன். அப்போது தான் அவளுக்குப் புரிந்தது, தான் சசியைப் பொய் சொல்லி அவர்கள் வீட்டிலிருந்து அழைத்து வந்தது, கிருஷ்ணாவிடம் பேசத் தடுத்தது, இதெல்லாம் வன்முறை சாயல் கொண்டது என்று
இதிலிருந்து ஸ்விஜிதா உணர ஆரம்பித்தாள், தனக்குக் கடந்த காலத்தில் நடந்த அனைத்தும் வைத்து, அவ்வாறு சசிக்கும் நேர்கிறது என்ற அச்சத்தில் பல முடிவுகளைச் செய்தாள் என்று. அவள் வளர்ந்தது தாய் தந்தை அக்காவுடன். கல்யாணம் கூட்டுக் குடும்பத்தில். பலபேர், அதிகமான பொறுப்பு, வேலைகள். சசிக்கும் அதேபோல.
தன்னுடைய சசியை வேலை வாங்காமல் செல்லமாக வளர்த்தாள்,. அங்கே எதற்காக வேலை செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பினாள்.
ஆனால் சசி வேலை செய்வதில் “என் வீடு, அதில் செய்கிறேன்” என்று நிதர்சனமாகச் சிந்தித்தாளே தவிர எந்த குறையும் பார்க்கவில்லை. இதை
ஸ்விஜிதாவிற்குப் புரிந்த பின்பே, தனக்குக் குற்ற உணர்வு வராமல் இருக்கவே மாமியார் வீட்டைக் குற்றம் கூறினோம் என்று புரிய வந்தது.
அம்மா-மகள் தங்களது உறவை இன்னும் சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்று ஆராய்ந்தோம். ஸ்விஜிதா எப்பொழுதும் “அவர்கள் என்ன செய்தார்கள்?” , “சொன்னார்கள்” என்று நுணுக்கமாக அலசிப் பார்க்காமல் இருப்பதில் நன்மை என்பதை சசி பகிர்ந்த பின்னர் உணர்ந்தாள். ஒப்பிட்டுப் பார்த்தால், சங்கடம் விளையும் என்பதைப் புரிந்து கொண்டாள்.
ஸ்விஜிதாவை பாராட்ட வேண்டும். இவ்வாறு தன்னுடைய சிந்தனை, உணர்வு, செயல்பாட்டைப் புரிந்து கொள்ள, அவற்றை மாற்றி அமைக்கத் தைரியம் தேவை. ஸ்விஜிதா determination என்ற கோலுடன் மேலும் முன்னேற முடிவு எடுத்தாள்.
*****************************************************