“சேட்ஜி உங்க கடனை எப்ப, எப்படித் திருப்பித் தரப் போறேனோ தெரியலையே’’
“ பிராமணாரே, இதெல்லாம் கடனல்ல, தானம்“
இல்லை சேட்ஜி, நானாகக் கேட்டுப் பெற்ற தொகையையாவது திருப்பித் தராவிட்டால் கடனாளியாகத்தான் இறப்பேன்“
இந்தப் பிராமணருக்கும், எல்லோரிடமும் வட்டியோடு கடனை திருப்பி வசூலிக்கிற சேட்டுக்கும் நட்பு உண்டானதே ஒரு சுவாரஸ்யம் தான். குலம் தழைக்கவும், பணம் பாதுகாக்கவும் பிள்ளை வரம் வேண்டி சேட்ஜி கோயிலுக்கு வரவும், பிள்ளைகளின் கஷ்டத்தைத் துடைக்கவும் அதற்குத் தேவையான பணத்தைப் பெறவும் பிராமணர் அதே கோயிலில் மணி அடிக்க கை நீட்டவும், அங்கே 2 கரங்கள் பிணைந்தன. இணைந்த கரங்களுக்குத்தான் எத்தனை எத்தனை எணணப் பரிமாற்றங்கள்!
ஜாதியில், தொழிலில் எதிரும் புதிரும் உள்ளவர்கள் நட்பில் அருகருகே உள்ளது அனைவர்க்கும் ஆச்சர்யத்தைத் தரும் விஷயமாகும்! ஆனால் யார் என்ன பேசுவார்கள் என்ற நினைப்பின்றி இவர்கள் இருவரும் என்ன பேசுவார்களோ! இந்த நட்பு பேச்சில் மட்டுமல்ல, சேட்ஜியின் செயல்களிலும் பிரதிபலிக்கும். தனக்கு குழந்தையைத் தராத ஆண்டவனை எண்ணி நிந்திக்கமல் பிராமணரின் குழந்தைகளுக்கு செய்வதைத் தன் பாக்கியமாகக் கருதினார்.
“வீட்டில் இன்று கணபதி ஹோமம், இந்தாருங்கள் வேஷ்டி, துண்டு, பலகாரம்’’ என்று ஒரு நாள்.
“கன்யாதானம் பண்ணினாள் சேட்டானி. இந்தாருங்கள் குழந்தைகளுக்குத் துணி’’ என்று மற்றொரு நாள்.
“இன்று புது கணக்குத் துவக்கம். ளுறநநவள இந்தாரும்’’ என்று மற்றொரு நாள்.
பிராமணருக்குப் புரியாமல் இல்லை. தன் வறுமை நிலைமையை மனத்தில் வைத்துத் தான் சேட்ஜி இப்படி தானம் பண்ணுகிறார் என்று. ஆனால் மறுக்கத்தான் முடியவில்லை. மனம் புழுங்கிக் கொண்டிருந்தார்.
பிராமணரின் மனைவியும் செட்டும் குடித்தனமுமாக இருந்தாலும் 4 பெண் குழந்தைகளின் தாயல்லவா அவள்? பெண் குழந்தைகளாகட்டும் தங்கச் சிலைகள், கை வேலை வண்ணங்களில் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். காகிதத் தேர், ஜரிகைப்பூ, புடவை லேஸ் என்று சிறிது சம்பாதித்து விடும்.
வேற்றூருக்குச் சென்றிருந்த சேட்ஜி வந்தவுடன் விசாரித்தது பிராமணரைத் தான். குளித்து உண்டு விட்டு அவரைப் பார்க்க கிளம்பினார். அப்போது பிராமணர் ஏதோ படங்களை வெட்டி சரிபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.
” என்ன படங்கள் இதெல்லாம்?’’.
” ஒன்றுமில்லை’’ என்று அவைகளை ஒதுக்கி வைத்தார்.
சேட்ஜியா சும்மா விடுவார்!
கூரிய கண்கள் தான் அவற்றைக் கவளித்து விட்டனவே! மெதுவே அந்தப் படங்களைப் பிடுங்கிப் பார்த்தார். கொடைக்கானல் லேக் ஏரி, ஊட்டி பூக்கண்காட்சி. முதுமலைக் காட்டில் யானைக் கூட்டம், வண்டலூர் ஜீவில் 2 சிங்கங்கள். அப்பப்பா! இயற்கைக் காட்சிகள் கொள்ள அழகு!
சின்னப்பையன் போல் வெட்கப்பட்ட பிராமணர் “”””புத்தங்கள், பேப்பர்கள் இவைகளிலிருந்து அவ்வப்போது வெட்டி எடுத்து வைத்துள்ளேன். அப்பப்ப எடுத்துப் பார்த்துக் கொள்வேன். சுற்றுலா போய்விட்டு வந்த நினைவும் தெம்புமாக இருக்கும்’’ என்றார்.
பிராமணர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். “”””என்ன ஓய்! கையிலே பணத்தை வைத்துக் கொண்டு எனக்குத் தரமாட்டேன் என்கிறீரே!’’
பிராமணர் திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார். “”””ஐயா! பணம் எங்கே? உங்களுக்கில்லாததா! என் வீட்டிலேயே என் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லையே! என்று புலம்பினார்.
“நான் சொல்வது இந்த கலைப்படங்களைத்தான். என்னங்காணும் இவைகளை ஓர் ஆல்பமாக தயாரித்து விற்றால் பணம் கிடைக்குமல்லவா!’’
“என்னதிது! இதை ஓர் ஆல்பமாக செய்ய 50 ரூபாய் தான் ஆகும். ஆனால் இதைப் போய் யார் வாங்குவார்கள்?’’
“இப்பொழுதுதானே நீர் சொன்னீர், இதைப் பார்த்தால் இந்த இடங்களுக்கு போய் வந்த நிறைவு என்று, ஆகவே யாராவது வாங்கமாட்டார்களா! என்னைப் போல் இந்த இடங்களுக்குப் போய் பார்க்க நேரம் இல்லாதவர்கள் யாராவது இதை வாங்குவார்களே!’’
சேட்ஜி சொல்லச் சொல்ல பிராமணருக்கும் ஓர் ஆசை, ஆவல். “”””நிஜம்தானே, நிஜம்தானே’’ என்று 2 முறை கேட்டு கண்களை மூடிக்கொண்டார். மனத்தில் ஆல்பம் விரிந்தது.
“வழவழப்பான நீர்வீழ்ச்சையை அட்டைப்படமாக போடவும்; படங்களை இடவாரியாகவோ அல்லது காட்சி வரிசையாகவோ வைக்கவும். போட்டி போட்டுக் கொண்டு யாரும் வாங்கிக் கொள்ளாவிட்டால் என்னைக் கேளும்.’’
மனிதனுக்கு நம்பிக்கைதான் பிரதானம். நம்பிக்கை விதைத்து விட்டால் போதும் ஆசை என்ற எருவுடன் சேர்ந்து மரம் வளர்ந்து விடும். பிராமணருக்குத் தோன்றியது ஏன் இதை செய்யக்கூடாது என்று. கதவுக்குப் பின் நின்றிருந்த பிராமணரின் மனைவி வெற்றிலைத் தட்டை அவர்கள் முன் வைத்து விட்டு “”””உங்கள் நண்பர் சொல்வதைத் தான் கேளுங்களேன். நம் தரித்திரம் விடியாதா என்று பார்ப்போம்’’ என்றாள்.
“இல்லை இல்லை முதலில் கடன் நிவிர்த்தி. அப்புறம் தான் எல்லாம்’’ என்றார் பிராமணர். பணம் கையில் கிடைத்த மாதிரி.
ஆல்பம் தயாரிக்க உதவின சேட்ஜி அதை அட்வர்டைஸ் பண்ணவும் உதவினார். நிஜமாகவே ஆல்பத்தைப் பார்க்க பிராமணருக்கே இது நாம் சேகரித்த படங்கள் தானா ஒன்று ஒரே ஆர்ச்சர்யம்!.
ஐந்து நாட்கள் கூட செல்லவில்லை. ஒரு கடிதம்-
“ஐயா தங்களது விண்ணப்பம் கண்டேன். எனக்கு எல்லா இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்க்க ஆசை. ஆனால் வேலை மிகுதியால் முடியவில்லை. நீங்கள் கொடுத்துள்ள ஆல்பத்தின் விவரத்தைப் பார்க்கையில் என் மனோபாவம் ஓரளவாவது பூர்த்தியாகும் என்று தோன்றுகிறது. விலையைக் குறிப்பிட்டு ஆல்பத்தை அனுப்பி வைத்தால் பணத்தை அனுப்புகிறேன்’’ என்று.
பிராமணருக்கு ஏக சந்தோஷம். பணம் கிடைக்கப் போகிறதே என்றல்ல. பல நாட்பட்ட கடனை அடைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதே என்று. சேட்ஜியிடம் ஓடினார். சேட்டிற்கும் மகிழ்ச்சி. ஆல்பத்தை அனுப்ப ஏற்பாடு செய்தார். இதுக்கான செலவும் கடனுடன் சேர்க்கப்பட்டது. ரூபாய் 500 என்று அறுதியிட்டு ஆல்பத்தை கடைசி முறையாகப் புரட்டிவிட்டு தபாலில் அனுப்பினார். ஐந்தாவது நாளே பணம் வந்தது. அதிலிருந்து ஒரு பைசா கூட தொடாமல் அப்படியே சேட்டிடம் கொண்டுபோய் கொடுத்து தழுதழுதார்.
“சேட் ஒரு வழியாக நாள் பட்ட கடனை அடைத்துவிட்டேன். என் ஆத்மா சாந்தியடையும்’’ என்றார்.
சில நாட்கள் கழித்து சேட் படுத்த படுக்கையானார். தினமும் அவரைப் போய்ப்பார்த்து பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது பிராமணரின் வழக்கம். சேட்டானியின் துக்கத்திற்கு அளவேயில்லை. பர்த்தாவைத் தவிர வேறு யாரையும் பாராதவள் இப்ப பிராமணர் எதிரில் நின்று கொண்டு சேட்ஜியைப் பற்றி விசாரிக்கிறாள்.
சேட்ஜியின் நலனுக்காக ஹோமம் செய அதை முன்னிட்டு இந்த நேரத்திலேயும் அரிசியும் பருப்பும் பிராமணர் வீட்டிற்கு அனுப்பினார் பிராமணர்.
ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த பொழுதே சேட்டின் கண்கள் சொருகுவதைக் கண்டார். சேட்டானி கேவிக் கொண்டே கங்காஜலத் தீர்த்தத்தை எடுத்து தந்தாள். பிராமணர் அதை அவரது வாயருகில் கொண்டு சென்று தலையைப் பிடித்துத் தூக்கினார். மடியில் இருத்தி கங்கா ஜலம்விட்ட பிறகு மெதுவே தலையணையில் தலையை வைக்க கை எதிலேயோ இடறியது. தலையணையை சரி செய்ய தூக்கிய கண்கள் குளமாயின. அங்கே அவர் கண்டது அதே ஆல்பம் தான்!