*லூயிஸ் க்ளூக்கின் மழைக் கவிதை
(2020 ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் இவர். காப்புரிமை அவர் பெயரில் இருக்கிறது. அறிமுகம் செய்வதற்காக மட்டும் இங்கே மொழி பெயர்த்துத் தரப் படுகிறது. – பானுமதி ந)
தனிமை
இருள் சூழ்ந்திருக்கிறது இன்று
மழையினூடே மலைகள் தெரியவில்லை
மழையின் ஒலி மட்டும் கேட்கிறது
அது வாழ்க்கையை பூமிக்குள் பதுக்கி விட்டது
குளிரையும் துணையாக அழைத்து வந்துள்ளது
விண்மீன்களும், நிலவும் இன்றிரவு இருக்காது
காற்று இரவில் எழுந்தது. காலை முழுதும்
கோதுமை வயல்களை ஓங்கி அடித்தது
முற்பகலில் அது ஓய்ந்தது
வறண்ட நிலத்தை நனைத்துப் பின்
பெரு வெள்ளமென புயல் அடித்தது
பூமி இல்லாமல் போய்விட்டது.
இருண்ட ஜன்னல்களில் ஒளிரும் மழையைத் தவிர
பார்ப்பதற்கு ஏதுமில்லை எதுவும் இயங்காத
ஓய்வு கொள்ளும் இடம் இது
மொழியும், நுண்பார்வையுமற்ற
இருட்டில் வாழும் விலங்குகள் போல்
நாம் முன்னர் என்னவாக இருந்தோமோ
அதற்கே திரும்பி விட்டோம்.
நான் உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு
அத்தாட்சி இல்லை.
முடிவற்ற மழை மட்டும்.