நாட்டின் பாராளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர்
நம் சென்னையில் மேலடுக்குச் சுழற்சிப் பெரு மழை
என் இல்லத்திலும் இடியுடன் கூடிய கன மழை
நான் தயாரானேன்
‘இந்த நேரத்தில் எங்கே ‘ இடி முழங்கியது
நான் இடிதாங்கி பதில் அளிக்கவில்லை
இந்த மழையில் அழைத்தது யார் ?
நான் தலை வாரிக் கொண்டேன்
நான் சொன்னால் கேட்கக் கூடாது என்று குதர்க்கம். அப்படித்தானே ?
‘ஆம்’ என்று சொல்ல எத்தனை வினாடிகள் பிடிக்கும்.
எங்கே போகிறேன் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?
சட்டை செய்யாமல் சட்டை போட்டுக்கொண்டேன்
ஜன்னலுக்கு வெளியேயும் இடி மின்னல் மழை
கொட்டும் மழையில் கூப்பிட்டவர் யார் என்று சொல்லிவிட்டுப் போகலாமே ?
நான் முக்கியமில்லை; யார் முக்கியம்
மடிக்கணிணியை எடுத்துக் கொண்டேன்.
கடைசி முறையாகக் கேட்கிறேன். வருந்தி அழைத்தது யார் ? சொல்வீர்களா மாட்டீர்களா?
நந்தி வழி மறிப்பது போல இருந்தது.
என் மௌனம் கலைய இது கடைசி வைக்கோல் !
சொன்னேன்
இருவரும் சிரித்துவிட்டோம்.
ஜன்னலுக்கு வெளியே இன்னும் மழை பெய்கிறது.