பள்ளி முதல்வருக்கு தன் பிறந்த நாள் வந்தாலே சங்கடம் தான். ஒவ்வொரு ஆசிரியரும் போட்டிப் போட்டுக் கொண்டு விலை மிகுந்த பொருட்களை வாங்கி, பரிசு அளித்து, கேக் வெட்டி, அமர்க்களப் படுத்தி விடுவார்கள்.
ஆளுக்கு ஆள், இப்படியே… ஏதோ எதிர்பார்ப்பு. ரசிக்க முடியவில்லை.
இதற்கு நேர் மாறகப் பள்ளியின் ஸ்பான்சர்ஷிப் தேவதையும் உண்டு!
“மேடம், மன்னிக்கவும்”. வெளியே ஸ்பான்சர்ஷிப் தேவதையின் குரல்.
“மிஸ்? உள்ளே வரலாமா?” அமைதியற்ற நிலையிலிருந்து திரும்பிப் பார்த்தார். அந்த சிறுமியைப் பார்த்ததுமே மனநிலை மாறியது. மாய வித்தைதான்!
“என் வகுப்பு அறையைக் கொஞ்சம் திறந்து தருவீர்களா?”
பள்ளி முதல்வருக்கு இது பரிச்சயமான வேண்டுகோள். அதே வேண்டுகோள், வருடத்தில் மூன்று நான்கு முறை. எப்பவும் போல!
வகுப்பின் அறையைத் திறந்தார். வெகு கவனிப்புடன் அந்த சிறு கைகள் தன்னிடம் இருந்த பையின் உள்ளே கையை விட்டு, ஒவ்வொன்றாகத் தானே கையால் செய்த காகித பொம்மைகளை எடுத்து, அதன் மேல் இருந்த பெயர் பார்த்து, அதன் இடத்தில் வைத்து வந்தாள். கடுகு அளவும் கர்வமோ, பாசாங்கோ இல்லை.
ஆசிரியர் தன்னை மறந்து மகிழ்ந்தாள். ஸ்பான்சர்ஷிப்பில், யாருடைய ஆதரவிலோ படிக்கும் இந்த இளநெஞ்சுக்கு எத்தனை பெரிய உள்ளம்! இன்றைக்கு எந்த விசேஷமும் இல்லை. இது ஒரு “ஜஸ்ட் லைக் தட்” பகிர்தல்.
ஆசிரியருக்கு இவளுடைய பெற்றோரைப் பற்றித் தெரியும். வறுமையில் இருப்பவர்கள். எனினும், அக்கம் பக்கம் பசியில் வாடுவோருக்குக் கஞ்சி, கூழ், சோறு என்று ஏதோ போடுவதுண்டு. அங்கே தான் இவள் கற்றுக் கொண்டாளோ?
இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில், சிறுமி பொருட்களை வைத்து விட்டு, ஆசிரியருக்கு நன்றி கூறி சென்று விட்டாள். இருவருக்கும் இந்த தருணம் மிகவும் பிடிக்கும். உள்ளுக்குள் அவ்வளவு பரவசம்!
பள்ளி மணி அடித்தது. பிள்ளைகள் எல்லோரும் இறை வணக்கம் செய்து விட்டு வகுப்பிற்கு வந்தனர்.
இந்த மூன்றாம் வகுப்பின் ஒவ்வொரு பிள்ளையும் தன் இடம் வந்தவுடன், அங்கே தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஆச்சரியத்தைக் கண்டனர். வண்ண வண்ணமான காகித பொம்மையைப் பார்த்து “ஆ”, “ஏ”, “ஓ” என்று ஒரே கூச்சல்!
வகுப்பு ஆசிரியர் சிறுமியைப் பார்த்து சமிக்ஞை செய்து கேட்டாள் “உனக்கு?” என்று. குழந்தையின் கண் மின்னியது. வகுப்பைச் சுற்றிப்ப் பார்த்து, அவர்கள் சந்தோஷத்தை உள் வாங்கியவள், “இதோ இவர்களின் சந்தோஷமே போதும்” என்பது போல் காட்சி அளித்தாள். தன்னுடைய “மௌனமான இன்பம்!”
அன்று முழு தினமும் பள்ளி முதல்வருக்கும் இவளைப் பற்றிய நினைவே.
வீடு வந்தாள். அவள் குழந்தை ஓடி வந்து பெருமையாக, “அம்மா, இதோ உனக்கு”. கடையில் வாங்கிய அழகாக கிஃப்ட் ராப் செய்யப் பட்ட விலை உயர்ந்த அன்பளிப்பு!