“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
-
பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
-
அம்மா அப்பா ! – ஜூலை 2020
-
ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
-
இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
-
எனது நாடு – செப்டம்பர் 2020
-
காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
-
செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
-
மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
-
நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
-
அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
-
எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
-
பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
ஜன கண மண !
ஜன கண மண என்றாலே
எழுந்து நிற்பேன் நான் !
எழுந்து நின்று நானும் சேர்ந்து
கூடப் பாடிடுவேன் !
ஜன கண மண என்பதே
எம் தேசிய கீதம் !
இந்தியாவை ஒன்று சேர்க்கும்
இனிய சங்கீதம் !
ஜன கண மண என்று சொன்னால்
வீரம் பொங்குமே !
நாடி நரம்பு எல்லாம் எனக்கு
சிலிர்த்திடும் எங்குமே !
ஆங்கிலேயர் எமை ஆண்ட
இருண்டது அந்நாள் !
எங்கள் நாடும் அடிமையாக
இருந்தது அந்நாள் !
காந்தி பின்னே அணி வகுத்து
சுதந்திரம் பெற்றோம் !
வீரர் பலர் ரத்தம் சிந்தி
விடுதலை பெற்றோம் !
இமயம் முதல் குமரி வரை
எங்கள் நாடே !
வங்கம் முதல் பெங்களூரும்
எங்கள் வீடே !
எங்கள் நாட்டை என்றும் நாங்கள்
போற்றியே காப்போம் !
ஜன கண மண ! ஜன கண மண !
பாடி நிற்போமே !
ஊருக்குப் போகலாமா ?
அடுத்த விடுமுறைக்கு
எந்த ஊர் போகலாம் ?
எத்தனையோ ஊர்களிலே
எத்தனையோ உறவெனக்கு !
மதுரை பெரியம்மா எனக்கு
மல்லிகைப் பூ கொடுத்தாங்க !
மயிலாப்பூர் பாட்டி எனக்கு
மைசூர் பாக் கொடுத்தாங்க !
திருநெல்வேலி தாத்தா எனக்கு
தட்டை முறுக்கு கொடுத்தாங்க !
பங்களூர் பாட்டி எனக்கு
சட்டை தைத்துக் கொடுத்தாங்க !
வேலூர் சித்தி என்னை
வெளியே கூட்டி செல்வாங்க !
பங்களூர் பெரியப்பா எனக்கு
பன் பிஸ்கட் தந்தாங்க !
திருச்சி போனா அத்தை வீட்டில்
திகட்டும் போளி தருவாங்க !
திண்டுக்கல்லு மாமா வீட்டில்
தினுசு தினுசா தருவாங்க !
எனக்குன்னு உறவு முறை
எத்தனையோ உண்டுங்க !
உங்களையும் கூட்டிப் போறேன் !
கூட நீங்கள் வந்திடலாம் !