என்ன தலைப்பு இது என்று யோசிக்கிறீர்களா! வாங்க கதைக்குள் இல்லை இல்லை நிஜத்திற்குள் போகலாம்.
எனக்கு ஆஸ்திக்கு ஒரு பையனும், ஆசைக்கு ஒரு பெண்ணும். பையன் தான் ஆஸ்தி, வேறு ஆஸ்தி நாஸ்தி. இருவருக்குமே நாய் வளர்ப்பதில் சிறு வயதிலிருந்தே ஆசை. ஆனால் அபார்ட்மெண்டில் இது கொஞ்சம் கஷ்டம். மேலும் நான் மூன்றை ஏற்கனவே வளர்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்ன நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் சொன்னது என் இரு செல்வங்களையும் அவர்களைப் பெற்றவரைப் பற்றியும் தான். மேலும் நான் ஆபீஸ், வீடு என்று இருந்ததால் இன்னொன்றுக்கு ஏது நேரம்? அதாங்க நாய்க்குத்தான்.
என் பையன் அவன் கல்யாணத்திற்குப்பிறகு இந்த ஆசையை வந்தவளிடம் சொன்ன போது அவளும் ‘ஒண்ணு நான், இல்லை நாய்’ என்றாள். அவள் அதற்குக் கூறிய காரணங்கள் நியாயமானது தான். என் பையன் வேலை அப்படி. எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுவார்கள். பெண்டாடியோட வாக்கிங் போகவே நேரம் இல்லை. இதில் எங்கேயிருந்து நாயுடன். அந்த வேலையும் அவள் தலையிலேதான் விழும். பிறகு என் முறை. ‘ம்ஹூம், என்னைப் பார்க்காதீர்கள். பத்து பேருக்கு வேண்டுமானாலும் ஒண்டியாக சமைக்கிறேன், இந்த நாய் பேய் எல்லாம் என்னால் முடியாது’ என்று தைரியமாக சொல்லி விட்டேன். அவ்வளவு தான் கதை முடிந்து விட்டது என்று நாங்கள் இருவரும் அதாங்க மாமியாரும் மாட்டுப்பெண்ணும் சந்தோஷப்பட்டோம். இதில் ரொம்ப ஒற்றுமை. ஆனால் விதி வலியது, இல்லை இல்லை கொடியது.
என பையன் ஆபீஸ் கேட் கிட்ட ஒரு நாய் ஐந்து அல்லது ஆறு குட்டிகளைப் போட்டது. பாவம் எல்லாக்குட்டிகளும் காரில் அடி பட்டு பரலோகம் சென்றன. இரண்டு குட்டிகளைத் தவிர. என் பையன் முதலில் ஒரு குட்டியைப் பார்த்துப் பாவப்பட்டு கனி கொண்டு வந்துள்ளேன் என்று தருமர் சொல்லி திரௌபதியைக் கொண்டு வந்த மாதிரி இடுப்பில் காய்கறியைத் தூக்கி வர மாதிரி தூக்கி வந்தான். எங்களுக்கும் பாவமாக இருந்தது. தாயுள்ளம். ஆனால் கடைசியில் நான் தாங்க பாவம். அதுதான் கதையே. இன்னொரு குட்டி அடுத்த நாள் இறந்து விட்டது அதை நான் கவனிக்கவில்லை என்று என் பையன் சொன்னான்.
நாய் ஓகே. முதலில் அது எங்கே என்று தேட வேண்டி வரும். பயந்து கதவுக்குப் பின்னால், கட்டிலுக்கு அடியில் என்று ஒளிந்து கொண்டிருக்கும். இப்போ அதுக்குப் பயந்து நான் தான் ஒளிந்து கொள்கிறேன். என் பேரனுடன் அழகாக விளையாடும். என் பையன் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் ஓடி வரும். கொஞ்சம் பயந்த சுவாபம். பூனையைக் கண்டால் முன் சென்று பின்னேறும். மனித குணம் ஒன்று உண்டு. நாங்கள் கொடுக்கும் சப்பாத்தியைத் தொடாமல் அடுத்த வீட்டு காய்ந்த ரொட்டியை ருசித்து சாப்பிடும். ஆரஞ்சு ஆப்பிள் தர்பூசணி என இராஜ வாழ்க்கைதான். நானும் என் மாட்டுப்பெண்ணும் அருந்தும் ஆப்பிள் வெள்ளரி ஜூசை அது சாப்பிடும் அழகே அழகு. நாயைத் தொடாமலே நான் இதையெல்லாம் ரசிப்பேன்.
ஒரு தடவை என் பையன், மாட்டுப்பெண், பேரன் மூன்று பேரும் மூன்று நாட்கள் என்னையும் நாயையும் விட்டு விட்டு வெளியூர் சென்றனர். நானும் நாயுமடி எதிரும் புதிருமடி என்று முதலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஓகே நாம் இருவர் நமக்கு மூன்று நாட்கள் என்று தீர்மானம் ஆயிற்று.
என குழந்தை என்னை விட்டுப் பிரிந்து இருந்தாலும் இருப்பான் இவன் இருக்க மாட்டான். அது எப்பிடித்தான் தெரியுமோ! நான் என் அறைக்குள் சென்றால் பத்து நிமிடம் பார்ப்பான். எனக்கு கொடுக்கும் நேரம் அவ்வளவுதான். அதற்குப் பிறகு கதவைத் தட்டுவான். என்னால் நம்பவே முடியலை. எப்படி அவன் நேரம் பார்க்கிறான் என்று! இதுவாவது பரவா யில்லை. இராத்திரி பகல் எப்படித் தெரியும்! இராத்திரி என் அறையில் போனாலே விட மாட்டான். இதை விட ஆச்சரியம்! சரியாக இரவில் மூன்று மணிக்கு எழுந்து என்னைக் கூப்பிடுவான். வெளியில் போக. பிசாசு கூட பயப்படும் இரவில் தைரியமாக இவனுடன் வெளியில் சிறிது நேரம் உட்கார்ந்து கொள்வேன். அப்பப்பா! இனி யாராவது ‘நாயே’ என்று திட்டினால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நாய்க்குள்ள அறிவு நம்மிடம் உள்ளதா என்று. என் குணம் அறிந்து என்னைத் தொடாமலே என மனதில் உட்கார்ந்து விட்டான். என் பெண்ணிடம் நேற்று பேசிய இருபது நிமிடத்தில் பதினைந்து நிமிடம் இவனைப் பற்றித்தான் என்றால் அவள் ஆச்சர்யப்பட்டுப்போனாள்!
அந்த மூன்று நாட்கள் மூன்று யுகமாகக் கழிந்தாலும் மூன்று முத்தான நாட்களாக இப்பொழுது பார்க்கிறேன். ‘நாயே நன்றியுள்ள நீயே! நலம் பட வாழியவே!’