குண்டலகேசியின்  கதை-8 – தில்லை வேந்தன்

குண்டலகேசி கதை | Gundalakesi story - YouTube                            

முன்கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

மகிழ்ச்சியான மணவாழ்க்கையில், ஒருநாள் ஊடலின் போது அவனைத் ‘திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்…..

 

கவிக் கூற்று

நெருப்புத் துளியோர் காடெரிக்கும்;
நெஞ்சின் சினமோ வீடெரிக்கும்;
விருப்பை வெறுப்பாய் மாற்றுபவை
வீண்சொல் மற்றும் இன்னாச்சொல்.
வரப்பு வேண்டும் வயலுக்கு,
வரம்பு வேண்டும் வார்த்தைக்கு.
திருப்பு முனையாய் ஓருசொல்லே
திகழும் உலக வாழ்க்கைக்கு.

 

சினம் கொண்ட காளன் அமைதி காத்தல்

அடிப்பட்ட வேங்கையென ஆனான் காளன்,
ஆனாலும் பூனையைப்போல் அமைதி காத்தான்.
வெடிப்பட்ட நிலம்ஊரை விழுங்கும் அன்றோ?
வெறுப்புற்ற மலைப்பாம்பின் பசியும் நன்றோ?
கடிப்பதற்கு மிகத்துடிக்கும் கருநா கத்தைக்
கையினிலே எடுத்தேந்திக் கொஞ்ச லாமோ?
படிப்பதனால் பத்திரைக்குப் பயனென்? வாழ்வின்
பான்மையினை அறியாளாய் இருந்தாள் அந்தோ!

நீறு பூத்த நெருப்பானான்
நெஞ்சம் முழுதும் வெறுப்பானான்
சீறும் அரவாய்ப் பழிதீர்த்துத்
தீமை புரியக் காத்திருந்தான்
தேறும் அறநூல் ஓராதான்
சிறுமை நெறியும் மாறாதான்
கூறும் இனிய மொழிநம்பிக்
கோதை நல்லாள் வாழ்ந்திருந்தாள்.

 

காளனின் வஞ்சகப் பேச்சு

உன்மனம் மகிழ வேண்டும்
உன்முகம் மலர வேண்டும்
நன்முறை நமது வாழ்வு
நடந்திட வேண்டும் என்று,
வன்முறை விரும்பும் காளன்
வஞ்சக வாயி னாலே
இன்மொழி பலவும் பேச
ஏந்திழை நம்பி விட்டாள்

 

ஆங்கோர் உயர்ந்த நெடுவரைமேல்
அருளைப் பொழியும் குலதெய்வம்
பாங்காய்க் கோயில் கொண்டுளதால்
படையல் இட்டுப் பணிந்திடவே
ஓங்கும் அன்பு மீதூற
உவந்து நாமும் செல்வோமே
தீங்கு நம்மை அணுகாமல்
தெய்வம் காக்கும் எந்நாளும்!

( நெடுவரை — பெரிய மலை)

விடுத லையும் உற்றேனே
விரும்பும் உன்னைப் பெற்றேனே
கெடுதல் யாவும் அற்றேனே
கிடைத்தற் கரிய நற்றேனே!
நெடுநல் வாழ்வு மற்றிங்கு
நிலைக்கச் செய்த தெய்வத்தை,
வடுநல் விழியாள் உன்னுடனே
வணங்கச் செல்லல் முறையன்றோ?

( வடுநல் விழி — மாவடு போன்ற கண்,)

பொன்னுடனே மணியாவும் பதித்துச் செய்த
பொலிநகைகள் அனைத்தையும்நீ அணிந்து கொண்டு
மின்னொன்று பெண்ணென்று வடிவம் பூண்டு
விண்ணிறங்கி மண்மிசைதான் வந்த தென்று
முன்நின்று பிறர்வியக்க வருவாய், அங்கு
மூவுலகும் அறியாத ‘முத்தி’ கிட்டும்!
கன்னெஞ்சன் வஞ்சத்தைக் காணாப் பேதை
களிப்புடனே உடன்செல்ல ஒருப்பட் டாளே!

(தொடரும்)

                                                     

6 responses to “குண்டலகேசியின்  கதை-8 – தில்லை வேந்தன்

  1. புகழ் வார்த்தைகளே இல்லை மிக மிக நன்று அடுத்த இதழுக்கு காத்திருக்கிறேன்

    Like

    • வார்த்தைகளை வரமாய்க் கொண்டு
      வடித்ததிந்த பாக்கள் யாவும்
      நேர்த்தியான கதையைச் செப்பும்
      நிகரில்லாப் புலவர் நீரே
      காரிகையின் ஒற்றை வார்த்தை
      கடுஞ்சொல்லாய்ப் போன தென்று
      நேர்ந்தனையைச் சொன்ன பாங்கு
      நிலத்தார்க்குப் பாடம் அன்றோ!

      அருமை அண்ணா!

      Like

  2. வரப்பு வேண்டும் வயலுக்கு
    வரம்பு வேண்டும் வார்த்தைக்கு
    ஆகா!! என்னே அற்புதமான வரிகள்!!
    நயமான சொல்லாற்றல்!!
    அற்புதம்! அமர்க்களம்!!
    வாழ்க! வளர்க!!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.