’அப்படியானால் ஒரு ரகசியம் சொல்கிறேன்.அதை யாரிடமும் சொல்ல
மாட்டேன் என்று சபரிமலை கடவுள் மேல் அல்லது கொடுங்காளூர் பகவதி மேல் சத்தியம் செய்ய வேண்டும்.”
“சபரிமலைகடவுள், கொடுங்காளூரம்மன் மேல சத்தியம் நான் யாரிடமும்..” ஜானகியம்மா மிக ஆர்வமாக இருந்தார்.”
அப்புறம்.. நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.” என்று மெதுவாகச் சொன்னேன்.
“ஒரு கதையா!கடவுளே,என்ன இது ,..வெறும் கவிதை மட்டுமில்லை, கதை
களும் கூட ..கொண்டு வா.. பார்க்கிறேன்..”
என் பார்வையில் ,ஜானகியம்மா நல்ல வாசிப்பாளி.’வாய்மை’,குழந்தைகள்
நலன்’,’ அரசனிடம் பக்தி’ என்று சில கட்டுரைகளை ஆசிரியர்கள் கூட்டத்தில் எழுதிப் படித்திருக்கிறார்.ஈஸ்வர பிள்ளை ஐயாவின் நடை போல அவரது எழுதுக்களிருக்கும். ..எப்படியானாலும் அவர் வாசிப்பாளி.
என் கதையைப் படித்து விட்டுப் புகழ்ந்தார். ” பத்திரிக்கைகளுக்கு அனுப்பு.
கதா பத்திரிகை ஆசிரியர் என் மாமா மனைவியின் ,மாமாவின் மகன். நீ
அதற்குக் கண்டிப்பாக அனுப்பு .”
எனக்குள் ஒரு நடுக்கத்தையுணர்ந்தேன்.’ஆனால் ஜானகியம்மா,என் பெயர்! ஐயோ,ஜனங்கள் என்ன சொல்வார்கள்?நான்தான் இதை எழுதினேன் என்று நம்மிருவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். நீங்கள் சத்தியம் செய்தால் இந்தக் கதையை எடுத்துக் கொண்டு போகலாம்.”
ஜானகியம்மா சந்தோஷமாக அதை எடுத்துக்கொண்டு போனார்.
கதா வார இதழில் ’ மோகினி ’என்ற பெயரில் அது பிரசுரமானது. அவர் ஓர் அழகான
பெயரைக் கண்டுபிடித்துக் கொடுத்ததற்காக மகிழ்ந்தேன்; என் பெற்றோரைவிட அவருக்கு நன்றியுடையவளாக உணர்ந்தேன். மோகினி—அந்தப் பெயரைப் பார்த்த அளவிலேயே மனிதர்கள் படிப்பார்கள்.
கதா வார இதழ் ஆசிரியர் மோகினிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு ஜானகியம்மா திரும்ப என்னிடம் வந்தார். மோகினியின் கலைத் திறத்தை வானளாவப் புகழ்ந்த ஆறு பக்கக் கடிதம்;கதையின்
சில குறைகளைச் சொல்லி,கதாசிரியர் இன்னும் அதிகம் எழுதவேண்டி, படைப்புகளை கதாவிற்கு அனுப்பக் கோரி….
நான் எத்தனை தடவை அந்தக் கடிதத்தைப் படித்தேன் என்று சொல்லப்போவதில்லை.உன் முதல்கதை பிரசுரம் குறித்த பாராட்டுக் கடிதத்தை-எத்தனை முறை படித்திருப்பாய்?அந்த இரவில் தூங்கியிருக்க முடியாது.
கடைசியில், நான் பெரிய ஆள் !அப்படி நினைக்கும் போதே கிடைக்கும் பெருமை! இவை மட்டும்தான் இலக்கிய வாழ்வின் மகிழ்வுகள் என்பது உண்மை. நாம் இங்கே நிறுத்தியாக வேண்டும்.ஆனால் நீயும், நானும் அதைச் செய்ய மாட்டோம்.. உண்மையான எழுத்தாளனின் உண்மை வரலாறென்பது அதன்பின்தான் ஆரம்பிக்கிறது.
நான் நிறையக் கதைகள் எழுதினேன்.எனக்குத் தெரிய வந்ததெல்லாம் கதைகளானது.என் அறிவு எவ்வளவு விசாலமானது என்று கேட்காதே.ஒரு சிறியகுளத்திலிருந்து பார்த்தாலும் கடலின் நடுவிலிருந்து பார்த்தாலும், தொடுவானம் ஒன்றுதான், அதனதன் இடங்களிலிருந்து. மோகினியின் புகழ் நாளும் வளர்ந்தது.
பாராட்டுக்களிலும்,வாழ்த்துக்களிலும் அவள் மூழ்கியிருந்தாள் அந்த நாட்களில் எங்களுடைய சிறிய தபால்அலுவலகத்திலிருந்து ஜானகியம்மாவின் வீட்டிற்கு மட்டுமே கடிதங்கள், பத்திரிக்கைகள் வரும்.
ஒரு நாள் மாலையில் வேகமாக வந்த ஜானகியம்மா ”சகோதரியே, சிக்கல் வரும் போலிருக்கிறது,கதா ஆசிரியர் புகைப்படம் கேட்கிறார்,அது பத்திரிக்கை அதிக அளவு விற்க உதவும்” என்று.
சரி.இப்போது என்ன செய்வது என்று நினைத்தேன். புகைப்படம் என்னிடமில்லை, இருந்திருந்தாலும் ,கொடுத்திருக்க மாட்டேன். மோகினி—மயக்கும் அந்த பெயருக்கேற்ற புகைப்படமிருக்க வேண்டும்..
’.ஜானகியம்மே..!உங்களிடம் அழகாக இருக்கிற, பிரசுரம் செய்தால் கோபித்துக் கொள்ளாத யாருடைய புகைப்படமாவது இருக்கிறதா?’என்று கேட்டேன். அவர் யோசித்தார்.
’என் பெட்டியில் சில பழைய படங்களிருக்கின்றன. என் சகோதரனுக்கு பெண் பார்த்தபோது வந்த படங்கள்.ஒன்று பொருத்தமாக இருக்கும்,அழகான குண்டு முகம்.சுருட்டை முடி.உதடுகளில் குறும்புப் புன்னகை.அந்தக் கண்களைப் பார்க்கும் ஒருவர் அவளைப் பெண் கவிதாயினி என்றே நினைப்பார்—என் சகோதரன் அவளைப் பார்க்க அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தான். அந்தத் திருமணம் நடக்கும் என்று எல்லோரும் நம்பியிருந்தோம்.. ஆனால் அவளைப் பார்த்த பின்புதான் உண்மை தெரிந்தது!.. ஒல்லியான கருப்பான பெண்.எப்படி அவ்வளவு அழகான புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் எடுத்தார்?…வீட்டிற்கு வந்து புகைப்படத்தைத் தூக்கியெறிந்தான். அதை நான் எடுத்து வைத்துக் கொண்டேன்.அந்தப் பெண் அழகில்லை. ஆனால் படம் அழகு. யாருக்கும் தெரியப் போவதில்லை.
அந்தச் சிக்கல் தீர்ந்தது.மோகினியின் படம் பத்திரிக்கையில் வந்த போது என்னவெல்லாம் அமளி ! அவளுடைய வார்த்தைகளைப் போல தோற்றமும் மயக்கம் தருவதாக இருந்தது என்றனர் ஜனங்கள். அந்த வார இதழ் மட்டும் ஆயிரம் பிரதிகள் அதிகம் விற்றதாக ஆசிரியர் சொன்னார். ஒரு பிரபல கவிஞர் அதைப் பற்றிக் கவிதையும் எழுதி விட்டார். அவருடைய ஓவிய நண்பர்களில் ஒருவர் ஓவியமாகவே வரைந்து விட்டார்.அந்தப் படத்தின் பெயர் ’கவனமோகினி—கவிதை மோகினி.அது ஒரு கண் காட்சி யில் முதல்பரிசும் பெற்றது…அந்தப் படம் குறித்துக் கதைகளும், கவிதைகளும் வெளியாயின.
ஜானகியம்மா கொடுத்த புகைப்படத்தின்ஒரு பிரதி என் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஓர் உற்சாகம்.
மோகினி —அது என்னைத் தவிர யார் ?
நான் மோகினி,நான் மோகினி’ என்று வெளியே போய் சத்தமாகக் கத்தவேண்டும் என்று விரும்பினேன்.ஏனெனில் அந்தப் படம் என் கதையோடு வந்ததால் நான் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தேகம் கூடப்படத் தொடங்கிவிட்டேன்.
மோகினியைப் பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் வேண்டும் என்று ஜானகியம்மாவுக்கு கடிதங்கள் வருவதாகச் சொன்னார்.பல கதைகள்..வடக்கில் ஒரு பெரிய அதிகாரி,எம்.ஏ .படித்தவர்,திருமணமானவர், ஆகாதவரென்றெல்லாம்.. சில இளைஞர்கள் அவளைப் பார்த்துப் பேசியிருக்கின்றனர். ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர் அவள் தன்னைக் காதலித்ததாக..எளிய ஆத்மாக்கள்..எளிய ஆத்மாக்கள்.. அவர்களுக்கு மட்டும் அவளைப் பார்க்க வாய்ப்பு கிடைத்திருந்தால்.. வெகு நேரம் நான் சிரித்தேன். ஜானகியம்மாவும்தான்.
மோகினியின் புகழ் வளர,எனக்குச் சிக்கல்கள் அதிகமாயின.வீட்டு வேலையில் நாள் முழுவதும் கழிந்தது.பொதுவாக யாருக்கும் தெரியாமல் நான்நள்ளிரவில்தான் எழுதுவேன்.ஜானகியம்மா கேட்கும் போதெல்லாம் கதை கொடுத்து விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.
என் கண்களில் குழி விழுந்தது. நான் மெலிந்து கொண்டேயிருந்தேன்.ஆனால் மோகினியின் கதைகள் பிரசுரமாகிக் கொண்டேயிருந்தன. கதைக்காக இல்லை.பெயரைக் காப்பாற்றுவதற்கு. அவர்களுக்கு அது போதும். உடல்நலக் குறைவு கதைகளைப் பாதித்ததா?..இருக்கலாம். இல்லாவிட்டால் வாசகர்கள் கதைகள் சுவையற்றுப் போனதை எப்படியுணர்வார்கள்?
என்னைப் போன்றவர்களுக்கு இலக்கிய வாழ்வு ஏற்றதல்ல என்பதுதான் உண்மை .விருப்பப்படி உலகின் எல்லா இடங்களுக்கும் போவது, இரவும்
பகலும் நெடுஞ்சாலைகளிலும்,குறுக்கு வழிகளிலும் பயணிப்பது,பலவித அனுபவங்களை எதிர்கொள்வது போன்ற விஷயங்கள். முன்பு, பாத்திரங்கள் தானாக வந்து மனக்கதவைத் தட்டியதால் எழுத முடிந்த காலம். கதைக்கருவை வேட்டையாடி எழுதும் காலம் இப்போது! ஒருவருக்கு எப்போதும் கொடுமையான உயிரினம் கிடைக்கலாம்..விஷ ஜந்துக்கள்,, அருகாமையில் போகவே ஒருவருக்கு பயம். பிறகென்ன செய்வது்? சிலகாலம் மட்டுமே நிலைக்கும் விந்தை பெயரும்,புகழும் !அதன் பிறகு வாசகர்கள் எழுத்தின் ஆழத்தைத் கிளறுவார்கள் அங்கு எதுவும் இல்லையெனில்… அல்லது ஏதாவது இருந்தால்…இரண்டும் அபாயகரமானவை.
மோகினியின் கதைகளில் விஷயமேயில்லை என்று விமர்சனப் பேச்சு வரத்தொடங்கியது.நம் விமர்சகர்கள் எப்போதும் கதைகளை நோக்கி தங்களது அம்புகளை எறியாமல்,அதன் மேல் அல்லது கீழிருக்கும் பெயரைப் பார்த்து எறிவார்கள்…அந்த மோகினிக்கு கதை எப்படி எழுத வேண்டுமென்று கூடத் தெரியாது,அவள் பழமைவாதி,அவளுக்கு வேட்கையில்..நம்மைப் பற்றி எழுத என்ன தைரியம்’ ஒரு பள்ளியாசிரியர் பல்லைக் கடித்தார். இன்னொரு சிறந்த விமர்சகர் ’பெண்கள் பெண்கள்தான். காகம் குளித்தால் கொக்காகுமோ ?”என்றார்.
மோகினி அவள் பெயர் கூட அற்பமானதுதான். பெயருக்காகவும், உருவத்திற்காகவும் அவளைப் புகழ்ந்த பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட அவளை ஏளனம் செய்தனர்.
என் நம்பிக்கைக்குரிய ஜானகியம்மா – மோகினியைப் படைத்தவர்–ஒரு
முறை சொன்னார்; என்னால் இனிமேல் இதைச் செய்ய முடியாது.நான்தான் இப்படி எழுதுகிறேன் என்று பலர் நினைக்கிறார்கள்.நான் இல்லை என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள் .இனிமேல் உண்மையைச் சொல்லப்போகிறேன்.மதிப்பான ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டும் “
நான் பதில் சொல்லவில்லை.அவர் உண்மையைச் சொல்லி விடுவார். என்ன உண்மை?நான் மோகினி,அவருடைய எல்லாத் தவறுகளும் என்னுடையவை என்றெல்லாம்.மோகினியின் புகழ் உச்சத்தில் இருக்கும் போது அவர் ஏன் அதைச் செய்யவில்லை?காதலுடன் இளைஞர் கூட்டம் அவரை மோகினி என்று தவறாக நினைத்துச் சுற்றி நின்றபோது அவர் ஏன்சொல்லவில்லை?மோகினியின் நிழலைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை ஓர் எழுத்தாளராகக் காட்டி கணவனைப் பெற்ற போது ஏன் சொல்லவில்லை?
ஜானகியம்மா உண்மையைச் சொன்னாரா என்றெனக்குத் தெரியாது. சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. கவிதைகளையும்,கதைகளையும் எழுதிய—இந்த நாட்டுப்புறப் பெண் –இவள்தான் பிரபலமான மோகினி …என்பதை யாரும் நம்பமாட்டார்கள். ஜானகியம்மாவையோ அல்லது அப்படிச் சொல்பவர்களையோ நம்பமாட்டார்கள்.
நான் பூஜித்த, மோகினியின் படம் இன்னமும் என் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு முறை அந்தப் படத்தைப் பார்த்தேன். பழையதான அந்தப் படத்தில் கருமையான சுருள்முடி நரைக்கத் தொடங்கியது போலிருந்தது. ஒரு புறத்தில் முகத்தின் நிறம் மங்கியிருந்தது.நீல பட்டுப் புடவை துறவுக்கான காவியாகத் தெரிந்தது. முகத்தில் வடுக்களும், புள்ளிகளும்.மோகினி உலகையே வெறுத்தவள் மாதிரித் தெரிந்தாள்.அது பார்க்கப் பொறுக்காத காட்சி.நான்கு பக்கங்களிலும் சுற்றிப் பார்த்து யாருமில்லாததை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு,படத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டேன்…இது என் உண்மையான உருவமெனில்..இது உண்மையான பெயரெனில். மோகினி தொலைந்து போனாள்.உணர்வுகளின் வெற்று நாடகம். எல்லாப் பெயர்களும் ,உருவங்களும் உணர்வுகளின் நாடகம்தான். அதற்கப்பால் உண்மையில்லையா?.. ரகசியமெனினும் கூட தொலைந்து போய் விடக்கூடாதா?
அந்த கேள்விக்கான விடை இன்னமும் எழுதப்படவில்லை.
சினேகிதியே !நான் எழுதுகிறேனா என்று கேட்காதே.மோகினி போய்விட்டாள். அவளுடன் வந்தவை அவளுடன் மறைந்து விட்டன.ஆனால் ஒரு புதிய பெயர் இலக்கிய உலகில் உதித்திருக்கிறது. அந்தக் கதைகள் மோகினியின் கதைகளை விட எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் ஜனங்கள். நீ என்ன நினைக்கிறாய்?..எதுவாக இருப்பினும்,எனக்குக் கவலையில்லை. எப்படிப் போனாலும் எனக்கு வருத்தமில்லை…ஆனாலும்…
அன்புடன்
முகமறியா சிநேகிதி.
———————–
நவீன மலையாள இலக்கியத்தின் முதல் பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படும் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் படைப்புக்கள் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டவை. ’அக்னிசாட்சி ’நாவலுக்காக சாகித்ய
அகாதெமி விருது பெற்றவர்.
எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர் போன்ற புறவய பொதுப் பணிகளைச் செய்ய பெண்கள் போராட வேண்டியிருந்ததான நிலையை ஆழமான விமர்சனமாக கதை முன்வைக்கிறது.