ஆதித்தன்
கி பி 870 – 907.
ஒரு அரசன் தன் வம்சத்தைத் துவக்கிவைத்தால்- அவனது வாரிசு அதைக் காப்பாற்றி வளர்க்கவேண்டும். அதன் பிறகு அவன் சந்ததியர் முனைப்போடு அந்த வம்சப்புகழை மேலும் வளர்க்கவேண்டும். குப்தர்கள் அதற்கு ஒரு நேர் உதாரணம். ஹர்ஷர்கள் அதற்கு எதிர் உதாரணம். இப்பொழுது நம் சோழர் கதையும் அந்த வளர்பிறைப்பாதையில் செல்கிறது.
ஆதித்தன் என்று சொன்னால் திருப்பியம்புரம் சண்டை உடனடியாக நமக்கு நினைவுக்கு வரும். அதைப்பற்றி மீண்டும் எழுதினால் வாசகர்கள் நம்மை முறைப்பார்கள். அறைத்த மாவை எத்தனை முறை தான் அறைப்பது? ஆகவே ஒன்றிரண்டு வரிகளில் அதை முடித்து விடலாம்.
திருப்பியம்புரம் போரில் பல்லவன்-சோழன் கூட்டணி பாண்டியக் கூட்டணியை வென்றது. அதன் பெரும் பயனை ஆதித்தன் அடைந்தான். சோழ நாட்டு எல்லைகள் விரிந்தன. ஆஹா.. எப்படி ரத்தினச்சுருக்கமாக சொல்லிவிட்டோம்!
வென்ற ஆதித்தன் – கொங்கு நாட்டின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். ‘கொங்கு நாட்டுத் தங்கம்’ என்பார்கள். உண்மையிலேயே அந்நாளில் கொங்கு நாட்டில் தங்கம் மலிந்திருந்தது. அங்கிருந்து பொன் கொணர்ந்து தில்லை சிற்றம்பலமுகட்டைப் பொன்னால் வேய்ந்தான்.
வெற்றியின் சின்னமாகவும் மற்றும் சிவபக்தியாலும் காவேரிக்கரையின் இருபுறமும் 108 சிவாலயங்கள் கட்டினான். தஞ்சாவூர் அய்யம்பேட்டை அருகில் அவன் பெயரால் – ‘இராஜகேசரி சதுர்வேதி மங்கலம்’ என்றொரு ஊர் இருந்தது. அது ராஜகிரி என்ற பெயருடன் இன்றும் உள்ளது.
கங்க நாட்டு அரசனுடன் நல்ல நட்புடன் இருந்தான். சேர நாட்டு மன்னன் ஸ்தானு ரவியுடனுடனும் நல்ல நட்புடனிருந்தான். இந்த நட்புக் கூட்டணி அவனது பிற்கால வெற்றிக்கு உதவியது. அதை இப்பொழுது பார்ப்போம்.
கி பி 903:
ஆதித்தன் அரியணை ஏறி 32 வருடம் ஆயிற்று.
தமிழகத்தில் ஆதித்தன் சக்தி பெருகுவது அபராஜிதனுக்குப் பொறுக்கவில்லை.
தனக்குக் கீழ் இருந்த இதய சோழச்சிற்றரசு ‘கப்பம்’ கட்டுவதை நிறுத்திவிட்டது.
கேட்டால்.. ‘வானம் பொழிகிறது..பூமி விளைகிறது.. இதில் உனக்கென்ன கப்பம்’ என்ற வீர வசனம் வேறு பதிலாக வருகிறது.
பொறுமினான்.
ஆதித்தனும் ‘இந்த பல்லவன் ஆளும் வரை சோழ நாடு பழைய பெருமை அடையாது. இதை அழிக்கவேண்டும்’ என்று மனதில் உறுதி கொண்டான்.
‘ஒன்று அழிந்தால் தான் மற்றொன்று வளரும்’ – என்றெண்ணினான்.
வெற்றி என்பது ஒரு போதை.
வெல்ல வெல்ல தோள்கள் தினவெடுக்கும்.
ஆதித்தனுக்கு அது எடுத்தது.
ஒரு நாள் நண்பன் – இன்று அவன் எதிரி.
பகை மேகங்கள் தமிழ் நாட்டு வானில் கருக்கத்தொடங்கியது.
அது பல்லவனுக்கும் சோழனுக்கும் இடையே மைய்யம் கொண்டது.
போர்!
இந்தப் போர் பற்றி ஆழ்ந்த விளக்கங்களை சரித்திரம் நமக்குத் தரவில்லை.
ஆனால் அது எப்படி முடிந்தது என்பது பற்றி திட்டமாக சொல்கிறது.
ஆதித்தனின் சோழப்படை வலுவடைந்திருந்தது.
ஆயினும் எந்தப்படை வலுவானது என்பது அறிய முடியாததாக இருந்தது.
அபராஜிதன் யானை மேல் ஏறி போரிட்டு வந்தான்.
ஆதித்தன் அந்த யானை மேல் பாய்ந்து அபராஜிதனைக் கொன்றான்.
அத்தருணம் தமிழகச்சரித்திரத்தில் ஒரு பெரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
பல நூற்றாண்டு ஆண்டு காஞ்சியை ஆண்டு – கற்கோயில்கள் செய்து- புகழ் பெற்ற பல்லவ வமிசம் அன்றுடன் தமிழகத்தில் மறைந்து போனது. அத்துடன் பழைய சோழர்கள் புதிய சோழர்களாக மறுமலர்ச்சி கொண்டு சாம்ராஜ்யம் தொடங்கும் நாள் அது. தொண்டை நாடு மெல்ல ஆதித்தன் வசமானது. சரித்திரம் அவனை ‘தொண்டைநாடு பாவின இராசகேசரிவர்மன்’ என்றழைத்தது.
ஆதித்தன் வீரத்தை போர்க்களத்தில் பார்த்தோம். அவனது ஆதிக்கம் அந்தப்புரத்திலும் விரிந்தது. நீங்கள் நினைக்கலாம் – போர் பற்றியே சதா எண்ணம் கொண்ட மன்னன் எப்படி பல ராணிகளை வச்சு ‘மெயின்டய்ன்’ பண்ண முடியும் என்று. ஆதித்தன் அதையும் செய்தான்!
ராணிகள் இரண்டு: இளங்கோ பிச்சி, வாயிரி அக்கண் (திரிபுவன மாதேவியார்).
‘இளங்கோ பிச்சி’ இராட்டிரக்கூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் மகள். இவளே ஆதித்தனின் மூத்த மனைவி. இவளுக்குப் பிறந்தவன் ‘கன்னர தேவன்’.
சின்ன வீடு பட்டியல்:
நங்கை சட்டப்பெருமானார், தென்னவன் மாதேவியார், செம்பியன் தேவியார் என்னும் குலமாணிக்க நம்பிராட்டியார், அழிசி கட்டடிகள்.
அவனது அந்தப்புரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.
அந்த உத்தமபுத்திரன் “யாரடி நீ மோகினி” என்று பாடிக்களிப்பது நாம் மனக்கண்ணில் விரிகிறது . அது சரி.. மற்றவர் அந்தப்புர அந்தரங்களை நாம் ஏன் பார்க்க வேண்டும்.
தொடர்வோம்.
கி பி 907: தொண்டைமானுர்.
இன்றைய ஆந்திராவிலிருக்கும் காளஹஸ்தி!
யுவராஜா பாராந்தகனுடன் ஆதித்தன் அங்கு கோவில் கட்டத்திட்டமிட்டிருந்தான். வயது முதிர்ந்திருந்தான்.
‘பாராந்தகா! சிவன் சித்தம் தானோ- சோழர்கள் ராஜ்யம் இன்று வளர்ந்திருக்கிறது. பாண்டியர்கள் சாமர்த்தியசாலிகள். அவர்களை வெல்லலாம் – ஆனால் அழிக்க முடியாது. ஆகவே நீயும் உன் சந்ததியினரும் அவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். சோழர்களின் எதிர்காலம் உன் கையில்” – என்றான்.
ஆதித்தன் இறந்தான்.
பராந்தகன் ஆதித்தனுக்கு எரியூட்டினான். ஆதித்தனுடைய பள்ளிப்படையை அங்கு எழுப்பினான். அவனது சாம்பலின் மேல் ஆதித்தியேஸ்வர ஆலயம் (கோதண்டராமேஸ்வர ஆலயம்) என்ற சிவன் கோவில் கட்டப்பட்டது. சரித்திரம் அவனை ‘தொண்டைமானரூர் துஞ்சின உடையார்’ என்று எழுதியது.
விஜயாலயன் கோடு போட்டான்.
அந்தக் கோட்டில் ஆதித்தன் இராஜபாட்டை போட்டான்.
அதில் அடுத்த சந்ததியர் வெற்றி நடை போட்டனர்.
அந்தக் கதைகளைக் காணுமுன்..
ஆதித்தன் ஒரு காரியம் செய்திருந்தான்.
அது சரித்திரத்தின் பாடங்களை சரியாகக் கவனியாதது.
அவன் நல்லது என்று எண்ணி மகிழ்ந்து செய்த செயல் அவனை அடுத்து வந்த மன்னனைப் பாதித்தது.
அது பற்றி விரைவில் விரிவாகக் காணலாம்.