
மனிதத் தன்மை – மனிதர்களுக்கு முக்கியமாக இருக்க வேண்டியதாகக் கருதப்படும் அன்பு, இரக்கம் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் தன்மை (Humanity).
மனித நேயம் – சமூக ரீதியில் சகமனிதன் மீது கொள்ளும் அன்பு, மதிப்பு போன்றவை (Humanism).
‘மனிதம்’ என்னும் சொல் இப்போது பரவலாக எல்லோராலும் பேசப்படுகின்றது – இது மனிதத் தன்மை, மனித நேயம் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகத் தோன்றுகின்றது. மனிதனிடம் இருக்க வேண்டிய கருணை, காருண்யம், நன்றியறிதல், அன்பு எல்லாம் கலந்த ஒப்பற்ற குணம் “மனிதம்”!
எங்கள் ஃப்ளாட் இரண்டாவது மாடியில் – மின்தூக்கி (லிஃப்ட்) கிடையாது. எங்களுக்கும் வயதாகும் என்றோ, வீட்டிற்கு வயதானவர்கள் வந்தால் சிரமப்படுவார்களே என்றெல்லாம் யோசிக்காமல் வாங்கிய ஃப்ளாட்!
கொரோனாவினால் ஊரடங்கு – வீட்டிற்கு வேண்டிய மளிகை, காய்கறி ஆன்லைனில் கேட்டிருந்தோம். காலை எட்டு மணி அளவில் வீட்டின் அழைப்புமணியை அடித்த, சிவப்பு யூனிஃபார்ம் மனிதருக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். மூச்சு வாங்க நின்றிருந்தவர் காலுக்குக் கீழே மூன்று பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் மளிகை சாமான்கள், கறிகாய்கள். உடன் வந்த மற்றொருவர் -இருபத்தைந்து வயதிருக்கலாம் – கீழ்ப் படியில் நின்றுகொண்டு சிறிது குறைவாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார். ‘மாஸ்க்’ கின் பின்னே, முகத்தின் சிரிப்போ, வருத்தமோ, கோபமோ தெரியவில்லை.
உள்ளிருந்து வந்த என் மனைவிக்கு சிறிது ஆச்சரியமாகவும், சந்தேகமாகவும் இருந்தது. “நான் ஆர்டர் செய்தவை மிகக் குறைவானவைதானே. மூன்று கூடைக்கு இருக்க வாய்ப்பே இல்லையே” என்று சொன்னார். கையிலிருந்த பில்லையும், கூடையில் ஒட்டியிருந்த நம்பரையும் பார்த்து, தலையில் கை வைத்துக் கொண்டார் சிவப்பு யூனிஃபார்ம்.
“சாரி மேடம், மாற்றி எடுத்து வந்து விட்டேன்” என்றபடி, மீண்டும் மூன்று கூடைகளையும் சுமந்து கொண்டு கீழே இருந்த வேனுக்குச் சென்றார். எங்கள் கூடையை – ஒரு கையில் தூக்கி வரக் கூடிய சின்னக் கூடை – கொண்டு வந்தார். சரி பார்த்து வாங்கிக் கொண்டோம்.
வாட்ச்மேன் ஊருக்குப் போய்விட்டார். வேறு யாரும் உதவி செய்ய இல்லை. இது போல் எத்தனை வீடுகளோ, உயரங்களோ – மனது கேட்கவில்லை.
“காபி, மோர் ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்றாள் மனைவி.
“இல்லீங்க மேடம், வேண்டாம். ரொம்ப நன்றிங்க மேடம்”.
மனதில் இருந்த நிறைவு, மாஸ்க்கையும் மீறி முகத்தில் தெரிந்தது ! கையில் எங்கள் மன மகிழ்ச்சிக்காக ஒரு சிறு அன்பளிப்பு! இப்படி அவ்வப்போது வீட்டிற்குக் கொரியர் கொண்டுவரும் பெரியவர், சிரித்தபடி வரும் போஸ்ட்மேன், ‘நல்லா இருக்கீங்களா?’ என்று வரும் கார்ப்பொரேஷன் பெண் சிப்பந்தி இவர்களுக்கும் இந்த உபசாரம் உண்டு!)
இந்த வெய்யலில், நின்று கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் காவல்துறை போலீஸ்காரர்கள் நிலையும் பரிதாபமானது. சிலர் போகிற வழியில் மோர் பேக்கெட்டுகளை வாங்கிக் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். என் உறவினர் ஒருவரும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். கிண்டி, அடையார், திருவான்மியூர் “போலீஸ் பீட்” களில் இருந்த காவலர்களுக்கு, ஆவின் லஸ்ஸியும், பால்கோவாவும் கொடுத்ததாகச் சொன்னார். மனிதநேயம் மிக்கது இந்தச் செயல் என்பேன் நான். ‘போலீஸ்காரர்கள் நம் நண்பர்கள்’ என்று பள்ளிக்கூட நாட்களில் சொல்லிக்கொடுப்பார்கள் – இன்றும் நான் நம்புகிறேன்.
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சாலை வாழ் மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதையும், சில சாயிபாபா கோயில்களில் உணவுப் பொட்டலங்கள் – அன்னதானம் – தருவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. “மனிதம்” இன்னும் மரிக்கவில்லை என்பதற்கான அடையாளங்கள் இவை!
கனடாவிலிருக்கும் பேரன், விடியோ காலில் தன் தோட்டத்தில் பல இடங்களில் சின்ன, சின்ன ப்ளாஸ்டிக் கிண்னிகளை வைத்துத் தண்ணீர், சிறு பழங்கள், கடலை என தினமும் வைப்பதைக் காட்டினான். இதெல்லாம் “Bird feeder” தாத்தா என்றான். ஐந்து வயதுச் சிறுவனின் ‘மனிதம்’ இது – பிற உயிர்களிடம் காட்டும் அன்பும், பரிவும்!
“நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த அதியன்” – (சிறுபாணாற்றுப்படையில் நல்லூர் நத்தத்தனார்).
முட்செடிகளுக்கிடையில் ஒரு நெல்லி மரம். அதில் ஒற்றைக் ‘கருநெல்லி’ – அந்த அரிய நெல்லிக்கனியை உண்பவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வர். கையில் கனியை வைத்துக்கொண்டு, ஒளவையைத் தேடுகிறான் அதியமான். “நீங்கள் இந்த நெல்லிக் கனியை உண்ண வேண்டும்” என்று மட்டும் சொல்லி, கொடுக்க, அன்பில் நெகிழ்ந்து உண்கிறாள் தமிழ்ப் பாட்டி! பின்னர் அதியமான் அந்த அதிசயக் கனியைப் பற்றிச் சொல்கிறான்: “நீங்கள் நெடுநாள் வாழ்ந்து, என் போன்றோருக்கு அறவுரை வழங்கி நல்ல முறையில் கோலோச்சிட வழிகாட்ட வேண்டும். அதனால் நீங்கள் உண்பதுதான் சாலச் சிறந்தது”. அதியமான் காட்டும் ‘மனிதம்’ தன்னலம் பாரா நட்பு; அன்பு; பொதுநலம் கருதி பெரியோருக்குக் காட்டும் மரியாதை!
“அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை “ – வள்ளலார் காட்டும் ‘மனிதம்’ வித்தியாசமானது. “அப்பா, நான் வேண்டுதல்கேட்டு அருள்புரிதல் வேண்டும். ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” – எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டும் இரக்க குணம்! “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்கிறார் அவர். (இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை ‘அருட்பா’ என்னும் ஆல்பத்தில் திரு சஞ்சை சுப்ரமண்யம் அவர்கள் பாடியுள்ளார்கள் – அவசியம் கேட்டு இன்புறல் வேண்டும்!)
இயற்கை வளம் கொஞ்சும் பறம்பு மலை அரசன் வேள்பாரி. வீரன், தான தருமங்களில் ஈடில்லாதவன்! “பருவம் தவறாமல் பெய்யும் மாரியைப் போல் கொடை திறம் வாய்ந்தவன் பாரி” என்கிறார் கபிலர்! ஆழிக்காற்றிலே செடிகள், மரங்கள் ஏதுமில்லா சமவெளி – தப்பிய சிறு செடியைப் போல, அங்கும் இங்கும் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் முல்லைக் கொடி. “என்னைக் காக்க மாட்டீர்களா?” என்று கேட்பது போல இருக்கிறது. பாரியின் ‘மனிதம்’ முல்லைக் கொடிக்கும் வாழ்வளிப்பதில் இருக்கிறது! தன் தேரை அருகே நிறுத்தி, முல்லைக் கொடியை அதன் மேல் படரவிடுகிறான்! நடந்தே அரண்மனை செல்கிறான். “தன் பயன் கருதாமல், மற்றவர் துயர் போக்குவதே இறை செயல்” – ”மனிதம்” – என்றெண்ணி வாழ்ந்தவன் பாரி.
“மனதுள் மனிதம் கண்விழிக்கும் தருணங்கள்” – சமீபத்தில் நண்பர் லேனா தமிழ்வாணன் வழங்கிய அழகான நூல். 52 எழுத்தாளர்கள், தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, ‘மனிதம்’ ததும்பும் தருணங்களைச் சிறு கட்டுரைகளாக, சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார்கள். தொகுப்பு: கார்த்திகா ராஜ்குமார் / திருச்சி சையது. (ரூபி புக்ஸ், 4, ராமு குட்டி லே அவுட், கவுண்டம்பாளையம், கோவை – 641 030.). லேனா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, கே.பாக்யராஜ், ரவிபிரகாஷ், ராசி அழகப்பன் போன்ற பிரபலங்களுடன், முகநூல் படைப்பாளிகளும் உண்டு! நட்பு, அன்பு, எதிர்பாரா உதவி, மத நல்லிணக்கம் போன்ற பல நல்ல பண்புகளை – மனிதம் – வெளிப்படுத்தும் ஆத்மார்த்தமான நிகழ்வுகள். வாசிக்கலாம்!
அசோக் நகர் 12ஆம் அவென்யூவில் மின் தூக்கி இல்லாத நான்கு மாடிக் குடியிருப்புகள் இன்றும் உண்டு. நாற்பதாண்டுக்கு முன்பு கட்டியது. அப்போதெல்லாம் ஸ்கூட்டர் என்பதே குடியிருப்பில் ஒன்றிரண்டு பேரிடம்தான் இருக்கும். பார்க்கிங் என்பதும் இருக்காது. குடிவந்தவர்களுக்கும் வாலிபவயது. முதுமை ஏற ஏறத்தானே கஷ்டம் புரிகிறது!
முதலில் நமது குடும்பத்து மூத்த உறுப்பினரிடம் மனிதத்தை அறிவிக்கவேண்டும். பிறகு வெளியுலகம் செல்லலாம். சிறப்பான கருத்துக்களைக் கொண்ட கட்டுரை.
LikeLike
உண்மைதான் சார். மிக்க நன்றி!
LikeLike