ரோலெக்ஸ் வாட்ச் – புத்தக விமர்சனம் அழகியசிங்கர்

Routemybook - Buy Rolex Watch [ரோலக்ஸ் வாட்ச்] by Saravanan Chandhiran  [சரவணன் சந்திரன்] Online at Lowest Price in India

இன்று வாசித்த புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் என்ற புத்தகம்.  இந்த நாவல் பல சம்பவங்களின் கோர்வை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

இந்தச் சம்பவங்கள் வரம்பு மீறியவை.  ஆனால் இந்த நாவலைப் படிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது.  இந்த நாவலில் வருகிற கதாநாயகன் பெயர் என்ன என்று தெரியவில்லை.  அவர் தானே முன்வந்து சொல்வதுதான் இந்த நாவல்.  நாவல் முழுவதும் ஒருவர் பேசுவதுபோல் ஆரம்பிக்கிறது.  இந்த நாவலில் கதா மாந்தர்கள் தப்பாக நடக்கிறார்கள்.  அடிக்கடி குடிக்கிறார்கள்.  பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்கிறார்கள். கதையில் ஒரு ஒழுங்கு என்று எதிர்பார்ப்போம்.  அந்த ஒழுங்கை இந்த நாவல் கட்டுடைக்கிறது.

சந்திரன் என்ற நண்பனுடன் ஏற்பட்ட நட்பைச் சுற்றி இந்த நாவல் வட்டமிடுகிறது.

சுந்தர் அண்ணா என்பவர், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத இந்த நாவலின் கதாநாயகனைப் பார்த்து, ஒரு மோசமான கண்டம் ஒன்று இப்போது உன் அமைப்பு படி உருவாகி இருக்கிறது.  அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டால் அதற்கடுத்து சக்ரவர்த்திக்கு நிகரானவனாக மாறிப் போவாய்ý என்கிறார்.

“என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழி நடத்துகின்றன.  என்னுடைய செயல்கள்தான் எல்லாவற்றுக்கும்  காரணம்,” என்கிறான் கதைசொல்லி.

சந்திரன் காதலிதான் மாதங்கி.  அவளைப் பற்றி ஒரு இடத்தில் கதைசொல்லி இப்படிக் கூறுகிறான். மாதங்கிதான் என் சிநேகிதி, அம்மா எல்லாம் என்று. கல்லூரி காலத்திலிருந்து கதைசொல்லியின் உணவு உடை சமாச்சாரங்கள் எல்லாம் மாதங்கி கவனித்துக் கொண்டிருக்கிறாள்.  சந்திரன்தான் அதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறான்.

இந்த நாவல் கல்லூரியில் படிப்பதில் சுழன்று வருகிறது. இளங்கலை படிப்போடு கதைசொல்லி தன் படிப்பை முடித்து விடுகிறான்.  மாதங்கி, சந்திரன் எல்லாம் முதுகலை படிப்பிற்குத் தயாராகிறார்கள்.  இவர்களுடைய இன்னொரு கல்லூரி நண்பர்கள்தான் கதைசொல்லியின் நண்பர்களாக மாறுகிறார்கள்.

இங்கே திவ்யா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் கதா ஆசிரியர்.  சந்திரனுடன்  படித்த தோழிதான் திவ்யா.  திவ்யாவிற்கும் கதைசொல்லிக்குமான உறவு ஒரு சாதாரண புள்ளியிலிருந்து ஆரம்பமாகிறது.

ஒரு ரெஸ்ட் ரூமில் திவ்யாவுடன் கதைசொல்லிக்கு இப்படி ஒரு அறிமுகம் நடக்கிறது.  ‘இயல்பாக நெருங்கி வந்து என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.  கை ஜோதிடம் பார்ப்பதுபோல என் உள்ளங்கைகளை அவளது விரல்களால் வருடிவிட்டாள்.  அவள் நெருங்கி வந்து என்னை மார்போடு ஒட்டி அணைத்து, என் உதட்டருகே அவளது உதடுகளைக் கொண்டுவந்து முத்தமிட்டுக் கொள்ளலாமா? என்றாள்.  நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தபோது அவள் என் உதடுகளைக் கவ்வினாள்.  நான் அவளது உடலெங்கும் என்னுடைய  கைகளைக் கௌரவமாக நகர்த்தினேன்.’

சந்திரனும் கதைசொல்லியும் அடிக்கடி பேசிக்கொள்ள மாட்டார்கள்.  அவர்களிடம் ஒரு நிழல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.  திவ்யாவுடன் கதைசொல்லி பழகுவது சந்திரனுக்குத் தெரியாது,  அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால்.

“உன் மாய உலகம் ஒருநாள் உன்னை அடித்து வெளியே துரத்தும்,” என்கிறான் சந்திரன் ஒருநாள். அவனுடைய வீட்டில் பணம் இருந்தாலும் விடாப்பிடியாக அதை உதறிவிட்டு வாழ்கிறவன்.

கதைசொல்லி கோபத்துடன், “உன்னுடைய வாழ்க்கை உனக்கு இப்படிச் சிந்திக்கச் சொல்லித் தந்திருக்கிறது.  என்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய நியாய தர்மங்களுக்கு வேலையே இல்லை,” என்கிறான் கதைசொல்லி.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சந்திரனும் கதைசொல்லியும் சந்தித்துக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சந்திரன் தவிர்த்துவிட்டான்.

கதைசொல்லியின் வறுமையைப் பற்றி இந்த நாவலில் பல இடங்களில் வெளிப்படுகிறது.  இந்த இடத்தில் ஒரு குறிப்பு வருகிறது. படிக்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது.

‘கல்லூரியில் என்னை சந்திரன் முதன்முறையாகப் பார்த்தபோது என்னிடம் இரண்டு சட்டைகள், ஒரு பேண்ட் மட்டுமே இருந்தன. துவைத்து மாறி மாறிப் போட்டுக்கொள்வேன்.  என்னுடைய வகுப்பிலிருந்த பெண்பிள்ளைகள் கூட இதுபற்றி பலமுறை என்னிடம் விசாரித்திருக்கிறார்கள்.  நான் அவர்களிடம் காந்தியைப் பற்றிச் சொல்லித் தப்பித்துக் கொள்வேன். காந்தி எளிமையாக இருக்கச்  சொன்னது மனதளவில் என்னைக் கவர்ந்துவிட்டது என்றும் அதனால்தான் விடாப்பிடியாக இந்தப் பழக்கத்தை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்,’ என்று எல்லோரிடமும் தன் ஏழ்மையை மறைக்கச் சொல்லிக்கொண்டிருப்பான் கதைசொல்லி.

திவ்யா கதைசொல்லியைவிட இரண்டு வயது மூத்தவள்.  திருமணம் ஆனவள்.  கதைசொல்லியுடன் அவள் நெருங்கிப் பழகும்போது நல்ல மூடில் இருந்தால், சிலசமயம் மச்சான் என்பாள், சிலசமயம் பேபி என்பாள்.

இந் நாவலில் ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒவ்வொரு கதை வருகிறது.  கதைசொல்லியைத் தெடார்புப்படுத்திதான்.  12வது அத்தியாயத்தில் பாண்டியை அறிமுகப்படுத்துகிறார்.  இது தொடர்பாக எதாவது கதை இருக்கும்.  ரசித்துப் படிக்க முடியும்.

பதிமூன்றாவது அத்தியாயத்தில் பரசுராமன் என்கிற பிஆர்ரை அறிமுகப்படுத்துகிறார்.  அவருடன் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தைக் கதைசொல்லி விவரிக்கிறார்.  அதேபோல் விக்னேஷ் என்ற சினிமா நடிகனைப் பற்றி தகவல்களைக் கொடுக்கிறார்.  சந்திரனின் தாய் மாமாவைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.  தாய் மாமன் சந்திரனை விடக் கதைசொல்லியுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.

இந்த நாவலில் அங்கங்கே பல நிஜமாக நடந்த சம்பவங்களைப் புனைவாக மாற்றி எழுதியிருக்கிறார்.  ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவரின் ஹெலிகாப்டர் மரணம், ஒரு நடிகையைக்  குளிக்கும்போது நிர்வாணமாகப் படம் எடுத்ததைப் பற்றி, போலி சித்த மருத்துவர்களைப் பற்றியும் வருகிறது. அதிகார மட்டத்திலிருக்கும் விஸ்வநாதனை யாரோ கொலை செய்து தஞ்சாவூரில் உள்ள கால்வாயொன்றில் போட்டுவிட்டார்கள். அவர் அதிகார மட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.  அடவடியான காரியங்களுக்கு அந்தக பகுதியில் அறியப்பட்டவர்.  இந்தக் கொலைக்கான துப்பும் கிடைத்து விடுகிறது.  இது ஒரு அத்தியாயம் முழுக்க வருகிறது.

ரோலக்ஸ் வாட்ச்சைப் பற்றிக் குறிப்புகள் 27வது அத்தியாயத்தில்  வருகிறது.  ரோலக்ஸ் வாட்ச் மாத்திரம் டுப்ளிக்கேட் கிடைக்காது.  அதற்குக் காரணம் தொழில் சாம்ராஜ்யத்தில் உள்ள ஒரு தொழில் தர்மம்.

இந்த வாட்ச்சை விற்று வருகிற இலாபத்தில் தான தரும காரியங்கள் பலவற்றைச் செய்து வருகிறது இந்த நிறுவனம்.

மேரியட்டில் அறையெடுத்து திவ்யாவை வரச் சொல்லி அழைக்கிறான் கதைசொல்லி.  அங்கே அவர்கள் இருவரின் லீலைகள் தொடர்கின்றன.  நாம  பிரிஞ்சுரலாமா? என்று கேட்கிறான் கதைசொல்லி.  அவளும் சரி என்கிறாள்.  எப்படி இந்த உறவு தற்செயலாக ஆரம்பித்ததோ அதேபோல் பிரிவும் ஏற்பட்டுள்ளது என்று முடிகிறது கதை.

சந்திரனுக்கு பெல்ஸி பால்ஸி நோய்.  ஒவ்வொரு வருடமும் ஐம்பதாயிரம் அமெரிக்கர்களுக்கு இந்த நோய் வருமாம். முகத்தில் ஒரு பக்கம் மட்டும் இழுத்துக்கொண்டு விடுமாம்.  இதற்கு எந்த மருந்தும் கிடையாதாம்.  தானாகவே சரியாகப் போக வேண்டும்.  முகத்தில் பயிற்சிகள் செய்து வரவேண்டும்.  கதைசொல்லி உருகுகிறான்.  தனக்கு வரக்கூடாதா? ஏன் சந்திரனுக்கு வந்தது என்று.  திவ்யாவுடன் ஏற்பட்ட உறவு துண்டித்துப்போனது பற்றி சந்திரனிடம் சொல்லவேண்டும். சுந்தர் அண்ணாவைப் பார்த்து தற்செயலானவன் என்று சொல்ல வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி.

156 பக்கங்கள் கொண்ட இந்த நாவல்  ஆரம்பித்திலிருந்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை.  விறுவிறுவென்று போகிறது.  இன்னும் இவருடைய மற்ற நாவல்களையும் படிக்க வேண்டும்.

 

 

One response to “ரோலெக்ஸ் வாட்ச் – புத்தக விமர்சனம் அழகியசிங்கர்

  1. சாரு நிவேதிதா கதைகளை ஆபாசம், அபத்தம் என்று  திட்டும் கூட்டம்,  இது போன்ற முட்டாள்தனமான கதைகளை இலக்கியம் என்று கொண்டாடும்.  அதற்கு உங்களைப் போன்ற விமர்சகர்கள் வழிவகை செய்கிறார்கள். 

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.